அ . பாக்கியம்
கோலார் தங்க வயல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தியாகிகளின் படத்திறப்பு நிகழ்வும்
பொதுக்கூட்டமும் 31.08.24. அன்று கில்பர்சன் பகுதியில்
நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டது உணர்ச்சிகரமாக
அமைந்தது.
2001 ஆம் ஆண்டு கோலார் தங்க வயல் சுரங்கப் பணிகளை ஒன்றிய அரசு மூடிவிட்டது. 145
ஆண்டு வரலாறுகளைக் கொண்ட தங்க சுரங்கம் இதுவாகும். 1880 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் என்ற
கம்பெனி சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை மைசூர் அரசிடம் பெற்று பணிகளை
ஆரம்பித்தது.
மிகக் கடினமான
முயற்சிகளுக்குப் பிறகு இந்த சுரங்கப் பணிகள் தங்கம் எடுக்கும் நிலைக்கு சென்றது.
ஒன்றுமில்லாத இடத்தில் அன்றைய வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டங்களில் இருந்து
உழைப்பாளி மக்கள், குறிப்பாக தலித் மக்கள் இடம்பெயர்ந்து
பணிகளுக்கு சென்றனர். இந்த உழைப்பாளிகள் கொடூரமான முறையில் சுரண்டப்பட்டார்கள்.
முதல் 20 ஆண்டுகள்
தட்டினால் தங்கம் என்பது போல் வெட்டிய இடங்களில் எல்லாம் தங்கம் கிடைத்தது.
பிரிட்டிஷார் மட்டும் 800 டன் தங்கத்தை கோலார் தங்க
வயதிலிருந்து வயலில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர். 145 ஆண்டுகளில்
8 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்க விபத்துகளில்
இறந்துள்ளனர் 4000 க்கும் மேற்பட்ட பிணங்கள் மீட்கப்பட
முடியாத நிலைமைக்கு சென்று விட்டது.
1930 ஆம் ஆண்டு
சுரண்டலின் கொடுமை தாங்க முடியாமல் உழைப்பாளி மக்கள் தன்னெழுச்சியான வேலை
நிறுத்தங்களை செய்தனர். 28 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை
நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தங்கள் கடுமையாக அடக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ராமமூர்த்தி இ எம் எஸ் போன்றவர்கள் கே ஜி எஃப்
பகுதிக்கு தொழிலாளர்களுக்கு சங்கம் அமைத்திட பலரை அனுப்பி வைத்தனர். வி எம்
கோவிந்தன், கே எஸ் வாசன், டி எஸ் மணி போன்றவர்கள் இந்த
வரிசையில் அடங்குவார்கள். 1946 ஆம் ஆண்டு தொழிற்சங்கம்
அமைத்ததற்காக கே எஸ் வாசன் தாக்கப்பட்டார் வேலை நிறுத்தம் நடைபெற்றது. மைசூர்
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆறு தோழர்கள் பலியாளர்கள்.
1951 ஆம் ஆண்டு வரை
கம்யூனிஸ்ட் தலைவர்கள் கேஜிஎப் பகுதிக்கு நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர் ஆனால் 1952
ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோழர் கே எஸ் வாசன் சட்டமன்ற
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1957ஆம் ஆண்டு
தோழர் நரசிம்மன் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும் 1962
ஆம் ஆண்டு தோழர் ராஜகோபால் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு தோழர் டி எஸ் மணி
சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி
பெறக் கூடிய அளவிற்கு மக்கள் தலைவர்களாக இவர்கள் வாழ்ந்தார்கள். மக்களுடன் உண்டு
உறங்கி போராட்டத்தில் இரண்டர கலந்து மக்களிடமிருந்து பிரிக்க முடியாத மாபெரும்
சக்தியாக இந்த தலைவர்களுடைய செயல்பாடு இருந்தது.
தோழர்கள் ராமமூர்த்தி , பி.டி.ரணதேவ்,
உமாநாத், ரமணி, விபி
சிந்தன் போன்ற வர்க்கத் தலைவர்களின் வருகைகள் மூலம் கேஜிஎப் பாட்டாளி வர்க்கம்
மேலும் பலமடைந்தது. தங்கம் செய்யாத வேலையை சங்கம் செய்யும் என்பார்கள். தங்க வயலாக
இருந்தாலும் சங்கம் வைப்பதற்கு மஞ்சள் நிற தங்கத்தை விட தொழிலாளர்களின் செந்நிற
ரத்தங்கள் தான் அதிகமாக சிந்தப்பட்டுள்ளது.
இன்றைய கோரிக்கைகள்
கடந்த 25 ஆண்டுகளாக
கேஜிஎப் சுரங்கம் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்
பறிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மூடுவதற்கு தெரிவித்த காரணங்கள் மிகவும்
வேடிக்கையானது. தங்கம் கிடைப்பது அரிதாகி விட்டது.தங்கத்தின் விலை 3000 ரூபாய் தான் போதுமான விலை இல்லை என்று மூடிவிட்டார்கள்.
1956 ஆம் ஆண்டு வரை
பிரிட்டிஷ் கம்பெனி இதை நடத்தியது. கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தால் 1956 ஆம் ஆண்டு மைசூர் அரசு இந்த சுரங்கத்தை அரசுடைமை ஆக்கியது. 1972 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டு கீழ் கொண்டு வந்து. இந்த
கம்பெனியின் பெயரை பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் என்று மாற்றியது. இதன்
தொடர்ச்சியாகத்தான் நஷ்டக் கணக்கு கூறி மூடிவிட்டார்கள். நடந்த வழக்குகள்
அனைத்தும் தவறான நிர்வாகத்தால் இந்த தங்க சுரங்கம் மூடப்பட்டது என்று தீர்ப்புகள்
வந்தது.
சுரங்க மூடப்பட்ட பொழுது 3500 தொழிலாளர்கள்
பணியாற்றினார்கள். மொத்தம் 12 ஆயிரம் ஏக்கரில் இந்த சுரங்கம்
அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஏக்கரில் பன்னிரண்டாயிரம்
குடும்பங்கள் வரை குடியிருக்கிறார்கள்.150 ஆண்டுகளாக
வாழ்ந்தது மட்டுமல்ல இவர்கள் வியர்வையிலும் உதிரத்திலும் உயிரிழப்பிலும் உயர்ந்து
நிற்பது தான் கேஜிஎப் என்ற உலகறிந்த நகரம்.
இந்த மக்களுக்கு வாழ்விடத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நீண்ட
நாள் கோரிக்கை அமலாகவில்லை. தேர்தல் வருகிற போது காங்கிரஸ் பாஜக மதசார்பற்ற ஜனதா
தளம் மாறி மாறி வாக்குறுதிகளை கொடுத்து விட்டு வாக்குகளை வக்கணையாக வாங்கிச்
சென்று விடுகிறார்கள். இப்பொழுது 1500 குடும்பங்களுக்கு
மட்டும் பொசிஷன் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாயிரம்
குடும்பங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று தான் மார்க்சிஸ்ட் கட்சி
வலியுறுத்துகிறது.
இந்தப் பகுதியில் இருந்து
சுமார் 30,000 மக்கள் வரை பெங்களூர் நகரத்திற்கு வேலைக்கு செல்கிறார்கள். காலை 4.30
மணி முதல் ரயிலில் பயணங்கள் தொடங்குகிறது. இரண்டு மணி நேர பயணம்.
பெங்களூரில் இருந்து வேலை இடத்திற்கு ஒரு மணி நேர பயணம் என சென்று வர ஆறு மணி
நேரம் செலவழிக்கக்கூடிய அவல நிலை நீடிக்கிறது. வீட்டு
வேலை , சிறு வியாபாரம் , சிறு கடைகள்,
துப்புரவு தொழிலாளர்கள், கட்டிடத்
தொழிலாளர்கள், கார்பென்ட்டர்கள், தகவல்
தொழில்நுட்ப தொழிலாளர்கள் என பெரும் கூட்டமே பெங்களூரை நோக்கி படையெடுத்துச்
செல்கிறது . குறைந்த கூலிக்கு உழைக்கக்கூடிய மக்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு வேலைவாய்ப்பு
வழங்குவதற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்குறுதிகளாக மட்டும்
மக்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.வாக்குறுதி கொடுத்தவர்கள் மறந்து விட்டு, சுரண்டும்
வர்க்க போதையில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இம்மக்களுக்கு
வேலை கொடுப்பதற்காக பி இ எம் எல் தொழிற்சாலையின் உபரி நிலத்தை (சுமார் 900 ஏக்கர்) எடுத்தனர் அதற்குப் பிறகு
எதுவும் நடைபெறவில்லை.
சுரங்கங்களை ஒட்டி
இருக்கக்கூடிய ஒர்க் ஷாப் செயலற்று கிடக்கிறது. இந்த ஒர்க் ஷாப்களில்
சுரங்கங்களுக்கு தேவையான எந்திரங்களை தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்களை
தயாரிப்பதன் மூலம் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியும்.
தங்கம் எடுத்த
சுரங்கத்திலிருந்து தங்கத்தை எடுப்பது பழைய கால தொழில்நுட்ப முறையாகும். அவ்வாறு
எடுக்கப்பட்ட மண்களிலிருந்து தங்கம் எடுத்தது போக இதர மண்கள் மலை போல்
குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சைனைட் மண் என்று பெயர். இதன் அளவை கேட்டால் சற்று
அதிர்ச்சியாக தான் இருக்கும். 33 மில்லியன் டன் அதாவது 3 கோடியே 30 லட்சம் டன் உள்ளது. நவீன தொழில்நுட் பத்தை
பயன்படுத்தி இந்த மண்ணில் இருந்து ஒரு டன்னிற்கு 0.6 கிராம்
முதல் 0. 7 கிராம் வரை தங்கம் எடுக்க முடியும் என்று
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 25,000 கோடி
வரை தங்கம் எடுக்க வாய்ப்புள்ளதாக மதிப்பீடு செய்துள்ளனர்.
தங்க சுரங்கத்தை மீண்டும்
திறக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் அரசு காதில் போட்டுக்
கொள்ளவில்லை. தனியாருக்கு கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ஆனால்
அதையும் உரிய முறையில் செய்யவில்லை. திறந்தவெளி சுரங்கமாக தனியார்
இடம் கொடுத்துவிட அரசு முயற்சி செய்கிறது. இது
ஆபத்தானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து வருகிறது. இப்பொழுது
இருக்கிறபடியே சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தங்க சுரங்கத்தை நடத்த முடியும்.
நவீன தொழில்நுட்பம்
உதவியுடன் தங்கம் அதிகமாக எடுக்க முடியும் . தங்க சுரங்கம் மூடுகிற பொழுது
தங்கத்தின் விலை 3000 ரூபாய் என்று அரசு கூறியது இன்றோ ஒரு
பவுன் 76 ஆயிரம் ரூபாய். எனவே இது ஒரு லாபகரமான முயற்சியாக
இருக்கும். இந்தியாவில் கர்நாடகாவில் ரைச்சூர்
மாவட்டத்தில் hutti என்ற இடத்தில் மட்டும் தான்
தற்பொழுது தங்க சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
ஒன்றிய நரேந்திர மோடி அரசு
மக்களுக்கு வீடு கொடுப்பது, வேலை வழங்குவது, குவிந்து
கிடக்கும் மண் களிலிருந்து தங்கத்தை எடுப்பது, தங்க
சுரங்கத்தை மீண்டும் திறப்பது என்ற கோரிக்கைகளை முன் வைத்து தான் பொதுக்கூட்டமும்
தியாகிகளுக்கான படத்திறப்பும் நடந்தது.
தோழர்கள் வி எம் கோவிந்தன், கே எஸ்
வாசன் டி எஸ் மணி போன்ற தலைவர்களின் சுவர் ஓவிய படங்களுடன் , நீண்ட காலம் தொழிற்சங்க தலைவராகவும் பகுதி மக்களின் கவுன்சிலர் ஆகவும்
இருந்து மறைந்த தோழர் சௌரிராஜன் படமும் 1982 ஆம் ஆண்டு
எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஆரி யின் படமும் நான் கலந்து கொண்ட
நிகழ்வில் இணைத்து திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கேஜிஎப்
தாலுகா கமிட்டி செயலாளர், அந்தப் பகுதியின் கவுன்சிலர் தோழர் p.
தங்கராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மூத்த தோழர்கள் அர்ஜுனன்,
ஏ ஆர் பாபு, எஸ் டி ஆனந்தன், பி சீனிவாசன், டி சீனிவாசன், பி
ஆனந்தராஜ், கே கோவிந்தராஜ், இளைய
தோழர்கள் நிரேஷ் பாபு, தினேஷ்,
நிரூபன், விஜய் போன்றவர்களும் நிகழ்வில்
முன்னணி களத்தில் இருந்து சிறப்பித்தனர். தியாகிகளின் குடும்பத்திலிருந்து தோழர்
சவுரிதாஸ் அவர்களின் இணையர் ஆரோக்கிய மேரி, தோழர் டி எஸ் மணி
அவர்களின் இணையர் ஜெயதேவி, தோழர் ஆரி அவர்களின் இணையர் சலோமி
போன்றவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இருப்பிட உரிமையும்
வேலைவாய்ப்புக்குமான போராட்டத் தையும் தங்க சுரங்கத்தை மீண்டும் திறப்பதற்கான
போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கொண்டிருக் கிறது . அந்தப்
போராட்டப் பயணத்தின் ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்தது. தியாகிகளின் களப்பணிகள்
நம்மை களத்தை நோக்கி ஈர்க்கிறது.
அ . பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக