இரவும் பகலும் உரசும் அந்திப் பொழுதில்,
கள்ளக்குறிச்சியில் தமுஎகச அமைப்பின் சார்பில் மாதம் தோறும் 20 ஆம் தேதி ஒரு வாசிப்பு வட்ட நிகழ்வை நடத்தி வருகிறார்கள்.
இந்த மாதம் 21ஆம் தேதி நான் எழுதிய "நானே மகத்தானவன்'" என்ற புத்தகத்தை வாசிப்பும் விவாதமும் என்ற முறையில் நடத்தினார்கள்.
அறிவார்ந்த பேராசிரியர்களும், களமும் ஞானம் நிறைந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் என பலரும் கூடுதலாகவே கலந்து கொண்டனர்.
புத்தகத்தைப் பற்றி அவர்கள் முன்வைத்த பல்வேறு விதமான கோணங்களை மிக மகிழ்வோடு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
நான் எழுதுகிற பொழுது புரிந்து கொண்டதை விட வெளியீட்டு விழாவில் சான்றோர்கள் பேசியதில் புரிதல் அதிகமாகியது.
21 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கூடுகையில் இன்னும் கூடுதலாக பல்வேறு பரிணாமங்களை என்னால் காண முடிந்தது. ஒரு புத்தகத்தை எழுதியவருக்கு இதை விட மன நிறைவான, மகிழ்வான தருணம் அமையாது.
நிகழ்வின் துவக்கமாக பள்ளிச் சிறுமி புத்தகத்தைப் பற்றிய ஒரு குறிப்பு எழுதி வாசித்தது சிறப்பாக இருந்தது.
புத்தகத்தில் சரி பாதி படித்திருக்கிறேன் அவ்வாறு படிக்கிற பொழுது நான் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன். மீண்டு வருவதற்கு சற்று கடினமாகத்தான் இருந்தது. இந்த நூலாசிரியரின் வேலைநாள் புத்தகத்தையும் படித்து பிரமிப்படைந்தேன் என்று முதலில் பேசிய நண்பர் தெரிவித்தார். ஏழு தலைமுறை என்ற புத்தகத்தின் தொடர்ச்சியாகவே நான் இதை பார்க்கிறேன் என்றார்.
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தையே நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சுதந்திர தேவி முகத்தை மூடிக் கொண்டு இருப்பதன் அர்த்தம் என்ன என்று கேள்வியோடு அட்டையை மீண்டும் மீண்டும் உற்று நோக்கி அதன் பிறகு புத்தகத்திற்குள் சென்றேன் என்றார். நானும் மேசையில் இருந்த புத்தகத்தின் அட்டையை அவரின் அழுத்தமான வார்த்தைகளில் இருந்து மீண்டும் உற்று நோக்கினேன் புதிய உணர்வுகள் என்னை தீண்டியது.
அடுத்ததாக பேசிய ஆசிரியை இந்த தலைப்பே முதலில் எனக்கு கேள்வியாக இருந்தது. நானே மகத்தானவன் என்று தானே அறிவித்துக் கொள்வது எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்வியோடு , ஒரு குத்துச்சண்டை விளையாட்டைப் பற்றிய புத்தகம் தான் என்று முதலில் நினைத்தேன் இந்த இரண்டு கேள்விகளோடு உள்ளே நுழைந்த பொழுது கேள்விகளுக்கு விளக்கமும் கிடைத்தது, குத்துச்சண்டை தானே என்பதற்கு விடையாக பெரும் போராட்டம் கண் முன் காட்சியளித்தது என்றார்.
முகமது அலி என்ற பெயர் வர காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டதோடு அந்தப் பெயரை வெள்ளை நிற வெறியர்கள் ஏற்க மறுத்ததையும் அதை ஏற்க வைப்பதற்கான முகமது அலியின் முயற்சிகளும் உணர்ச்சி பொங்க இருந்தது என்றார்
மற்றொரு ஆசிரியை பேசுகிற பொழுது இந்த புத்தகத்தை படித்த பிறகு முகமது அலி என்ற அந்த ஆளுமை தனக்கான சுதந்திரத்தை எல்லா வகையிலும் தானே தீர்மானித்துக் கொண்டான் என்பதை உறுதியாக உணர முடிந்தது என்று உரைத்ததோடு எனது மகனுடன் இந்த புத்தகத்தைப் பற்றி கூட்டாக உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்த பொழுது எனக்கு மட்டுமல்ல கலந்து கொண்ட அனைவருக்கும் இது மகிழ்ச்சியாக இருந்தது.
பேராசிரியர் பேசுகிற பொழுது ஜாக் ஜான்சன் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற கலவரங்களின் ஊர் பெயர்களாக வருகிறதே என்று கருதுகிற பொழுது கடைசியாக இது தகவல்கள் அல்ல இனவெறிக்கு எதிரான அரசியலை பதிய வைப்பதற்கான தரவுகள் என்பதை உணர முடிந்தது.
இந்தியாவில் தனிமனித அறிவிற்கு முக்கியத்துவம் இல்லை. சாதி மதம் என்ற பெயராலேயே அடையாளப்படுத்துகிறார்கள். அமெரிக்காவுடன் இந்த அம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றார்.
மதமாற்றம் விடுதலைக்கான ஒரு வழியா என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான வரலாற்று ரீதியாகவும் பதில்களை ஆசிரியர் கொடுத்துள்ளார். ஆனால் முகமது அலியின் மதமாற்றம் ஒரு எதிர்ப்பின் அடையாளமாக கருப்பின மக்களின் போராட்டத்தில் உந்து சக்தியாக இருந்தது என்பதை வலிமையாக பதிய வைக்கப்பட்டுள்ளது. அங்கே அந்த மதமாற்றத்தின் தாக்கம் இந்தியாவில் அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவியதோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன் என்றார்
ஜிம் க்ரோ சட்டங்கள் மனு சட்டத்தைப் போன்று இருப்பதை சரியான ஒப்பீட்டில் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு கதாபாத்திரத்தின் பெயரையே சட்டத்திற்கு சூட்டி இருக்கிறார்கள் என்று சொன்னால் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதும் ஒரு நிறவெறி அரசியலால் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கருத்துப் பரிமாற்றத்தில் ரோசா பார்க், எம்எட்டி , அமெரிக்க கம்யூனிஸ்ட்கள் நிறவெறிக்கு எதிரான போராட்டம், மார்ட்டின் லூதர் கிங் போன்ற பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்து பேசினார்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆசிரியை அவர்கள் பேசுகிற பொழுது அமெரிக்காவின் கருப்பின போராட்டங்கள் சம்பந்தமாக சில புத்தகங்களை படித்திருந்தாலும் அவை கருப்பின மக்கள் மீது ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது ஆனால் இந்த நானே மகத்தானவன் என்ற புத்தகம் கருப்பின மக்களின் எதிர் வினைகளை, போராட்ட அலைகளை உயர்த்தி பிடிப்பதாக இருக்கிறது என்று முத்தாய்ப்பான கருத்தை முன் வைத்தார்.
இன்னும் பலரும் பல அரிய கருத்துக்களையும் கேள்விகளையும் முன் வைத்து விளக்கினார்கள் ஒரு சில பங்கேற்பாளர்கள் இந்த விவாதத்தை கேட்டவுடன் முழுமையாக படித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தையும் குறிப்பிட்டார்கள்.
எனது ஏற்புரையில் என்னை எழுத்தாளர் என்று குறிப்பிடுகிற பொழுது கூச்சமாக
இருக்கிறது என்பதையும், களப்பணியில் கிடைத்த
அனுபவத்திலிருந்து தொடர் வாசிப்பில் இருக்கிற அனுபவத்தில் இருந்தும் சில
எழுத்துக்களை நான் முன்வைத்து உள்ளேன். நான் புத்தகம் எழுதும் பொழுது கிடைத்த
பார்வையை விட இந்த கூடுகை மூலமாக எனது அறிவு விசாலம் அடைந்திருக்கிறது அதற்காக
உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பங்கேற்பாளர்களின் பார்வையில் புத்தகத்தை அலசியமுறையில் அகமகிழ்ந்து நன்றியை உரித்தாக்கினேன்.
நிறைவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில உதவி செயலாளர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், களப்பணியாளரும் தீவிரவாசிப்பாளருமான தோழர் ஆனந்தன் அவர்கள் நிறைவுறையாற்றினார். இது போன்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி கலந்துரையாடல் செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைத்து இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடப்பதற்கு அடித்தளம் இட்டவர். மாவட்டத்தின் இளைஞர்களையும் மற்றவர்களையும் வாசிக்க வைப்பதில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பங்கேற்பாளர்கள் தோழர் ஆனந்தனை எங்களின் வழிகாட்டி என்று பெருமிதம் அடைகிறார்கள். அவரின் நிறைவான சில கருத்துக்கள் செறிவான முறையில் இருந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட
தமுஏகச வாசிப்பு வட்டம் மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன் விடை பெற்றோம்.
அ.பாக்கியம்
22.09.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக