எம்.ஏ.பேபி,
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.
பாசிசம் இப்போதும் நம்மைச்சுற்றி உள்ளது. சில நேரம் சாதாரண பிரச்சனைகளில் யாராவது முன்வந்து “நான் வதைமுகாம் (ஓஷிட்ஸ்) மீண்டும் திறக்க விரும்புகிறேன், இத்தாலியின் சதுக்கங்களில் கருப்பு உடை அணி வகுப்பை மீண்டும் நடத்த நான் விழைகிறேன். என்று கூறியிருந்தால் நமக்கு மிக எளிதாகி இருக்கும்.
ஆனால், வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. பாசிசம் மிகவும் குற்றமற்ற வேடங்களில் திரும்பி வரலாம். நமது கடமை, அதனை வெளிப்படுத்துவதும் அதன் புதிய வடிவங்களை அனைத்து நாட்களிலும் உலகின் அனைத்து பகுதிகளிலும் சுட்டிக்காட்டுவதுமாகும்.
- இம்பர்ட்டே இக்கோ
இம்பர்ட்டே இக்கோவின் பாசிசம் குறித்தான முன்னறிவிப்பு சமகால அரசியலுக்கான ஒரு சுட்டிக்காட்டலாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் நவ பாசிச நடவடிக்கை தலைதூக்குவதை காணலாம். சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு கட்சி தயாரித்துள்ள நகல் அரசியல் தீர்மானம் நவபாசிஸம் குறித்து மிகவும் முக்கியமான முன்னறிவிப்பை அளித்தது இந்த பின்னணியில்தான்.
ஆனால், இதில் தவறான விளக்கமளிக்கும் முயற்சிகளும் பெரிய அளவில் நடந்து வருகின்றன. இப்போது கிளாசிக்கல் பாசிசம் குறித்தும் அதன் நவீன வடிவத்தைக்குறித்துமான நமது புரிதல்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியதாக உள்ளது.
தீவிர தேசியவாதத்தை ஒரு கருவியாக கொண்டு, இடதுசாரி அரசியலை எதிர்கொள்ள 1920 களில் முசோலினிதான் பாசிஸம் என்கிற அரசியல் திட்டத்தை தொடங்கி வைத்தார். மிக கடுமையான பொருளாதார சிக்கலின் பின்னணியில் (பாஞ்சாத்துவ) முதலாளித்துவம் தோல்வியைத் தழுவியிருந்தது.
இதே காலத்தில், 1920 களின் இறுதியில் ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிஸ்ட் அரசியல் பிறந்ததும் அது உலக வரலாற்றிலேயை மிகப்பெரிய அரசியல் துயரங்களுக்கு வழிவகுத்ததுமாகும். தீவிர தேசிய வாதத்துக்கு இணையாக இன பாகுபாட்டை பரவலாக்கி ஹிட்லர் தனது பாசிஸ்ட் அரசியலை நகர்த்தினார். பாசிஸத்தைக் குறித்தான தனது ஆய்வில், டிமிட்ரோ சரியாகவே மதிப்பீடு செய்துள்ளார். நயவஞ்சகமாக சமூக அடிமைத்தனத்தின் திரைமறைவில் “தங்களது வாழ்வாதார வாய்ப்புகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட குட்டி பூர்ஷ்வா பகுதியினர் மற்றும் தொழிலாளி வர்க்கத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சில பகுதியினரின் ஆதரவைப்பெற, பாசிஸத்தால் சாத்தியமானது…. ஒவ்வொரு நாட்டிலும் அதன் வரலாறு, சமூக, பொருளாதார சூழ்நிலைகளுக்கும் தேசிய சிறப்புகளுக்கும் சர்வதேச பதவிகளுக்கும் சாதகமாக பாசிஸத்தின் வளர்ச்சியும் பாசிஸ்ட் எதேச்சதிகாரமும் தனக்கே உரித்தான முறையில் வடிவம் கொள்கிறது”. கிளாசிக்கல் பாசிசத்தை மதிப்பீடு செய்யும் அதேவேளையில், அதன் பன்முக வடிவத்தை டிமித்ரோவ் சுட்டிக்காட்டுகிறார்.
பாசிஸத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி என்கிற புகழ்பெற்ற கட்டுரையின் முன்னுரையில், இ.எம்.எஸ்.சுட்டிக்காட்டும் கீழ்காணும் பகுதி முக்கியமானதாகும்: “உலக பாசிஸத்தின் முக்கியத்துவமும் அதன் வளர்ச்சிக்கு காரணமான உலக அரசியல் சூழ்நிலைகளும் அதேபோன்று இன்றும் நிலைகொள்ளாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது பாசிஸத்துக்கு வழங்கும் முன்னுரிமை அடிப்படையில் இன்றைய ஏதேனும் ஒரு அரசாங்கத்தையோ, அரசியல் கட்சியையோ மதிப்பீடு செய்ய முற்படுவது பொருத்தமற்றதாக இருக்கும்”.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:“
பாசிஸ தன்மைகொண்ட ராஸ்ட்டிரிய சுயம் சேவக் சங்கம் வழிகாட்டுவதாலும் ஆளுமை வகிப்பதாலும் பாஜக சாதாரண முதலாளித்துவ கட்சியல்ல. பாஜக அதிகாரத்தில் இருக்கும்போது, ஆட்சி அதிகாரத்திலும் அரசமைப்பு நிறுவன கருவிகளிலும் தலையிட ஆர்எஸ்எஸ்-ஆல் சாத்தியமாகிறது….. அரசமைப்பு சாசனத்தின் மதச்சார்பின்மை அடித்தளத்தைப் பொறுத்தவரை அதில் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
22 ஆவது அகில இந்திய கட்சி மாநாட்டின் (ஏப்ரல் 2018) அரசியல் தீர்மானம், நரேந்திர மோடி ஆட்சியை இவ்வாறு மதிப்பீடு செய்தது: “
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதற்கு மேற்கொள்ளும் தந்திரமான முயற்சிகள் நமது நாட்டின் மதச்சார்பற்ற அரசியல் சட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்; தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான வன்முறைகள் பாசிஸ தன்மை கொண்ட நடவடிக்கைகளின் தொடக்கமாகும்; அமெரிக்காவுடனான கொள்கை அளவிலான கூட்டையும் வலுப்படுத்தி அதன் இளைய பங்காளியாக செயல்படுவதும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு கடிவாளமிட்டு அரசமைப்பு சாசன நிறுவனங்களையும் ஜனநாயக உரிமைகளைப் பறித்தும் எதேச்சாதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது”.
ஒரு பாசிஸ அமைப்பான ஆர்எஸ்எஸ் ஹிட்லரின் ஜெர்மனியில் இருந்து ஊக்கம் பெற்று செயல்படுவது கவலையளிப்பதாகும். முசோலினியை நேரடியாக சந்தித்து பாசிஸ்ட் வன்முறை பயிற்சியும் வழிமுறையும் கற்ற டாக்டர் மூஞ்சேயின் செல்வாக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி முறைகளில் காணலாம். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் ஆன நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பொறுப்பேற்றதோடு பாசிஸ ஆட்சி முறைக்கு இந்தியா மாறிவிட்டதா என்பதை நமது தீவிரமான துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகும். பாசிஸ குணம் படைத்த ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் மோடி அரசு இந்தியாவில் ஒரு பாசிஸ ஆட்சியை வெளிப்படையாக நிறுவுவதை நோக்கி நகர்வதற்கான சாத்தியப்பாடு கடும் அச்சுறுத்தலாக நீடிக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய நிலை என சிபிஎம் தெரிவிக்கிறது. அதை தடுக்க வகுப்புவாத – பாசிஸ எதிர்ப்பு சக்திகளின் விரிவான ஒத்துழைப்பை சாத்தியமான தளங்களில் உருவாக்கவேண்டும் எனவும் நகல் அரசியல் தீர்மானம் வலியுறுத்தி கூறுகிறது.
24 ஆம் அகில இந்திய கட்சி மாநாட்டுக்கு முன்னோடியாக கட்சி முழுமையும் விவாதித்து மாநாட்டில் முன்வைத்து உரிய திருத்தங்களுடன் அங்கீகரிக்க வேண்டிய நகல் அரசியல் தீர்மானத்தில் ‘நவ பாசிஸம்’ என்னும் புதிய வரையறுப்பு மத்தியக்குழு விவாதித்து அங்கீகரித்து அரசியல் தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இதன் மூலம் புரிந்துகொள்வது என்னவென்றால், மேலும் தெளிவுபடுத்த வேண்டும் என கொல்கத்தாவில் ஜனவரி மாதம் கூடிய மத்தியக்குழு கூட்டம் சுட்டிக்காட்டியபடி அரசியல் தலைமைக்குழு ஒரு குறிப்பை தயாரித்து அனைத்து மாநிலக்குழுக்களுக்கும் அனுப்பியது. வாசகர்களின் மிதமான அரசியல் உணர்வுகளை தட்டியெழுப்ப ஒரு ரகசிய ஆவணத்தை தாங்கள் கைப்பற்றி வெளியிடுகிறோம் என்று ஒரு ஊடகம் இதுதொடர்பான செய்தியை வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் அச்சிடும் ‘சிந்தா’ வார இதழ் முழுமையான நகல் அரசியல் தீர்மானத்தோடு நவபாசிஸம் குறித்தான அரசியல் தலைமைக்குழுவின் குறிப்பையும் அச்சிட்டு வெளியிட்ட நிலையில்தான் இந்த செய்தி வந்தது.
அரசியல் தலைமைக்குழு தயாரித்து வெளியிட்ட குறிப்பு நவபாசிஸத்தை இவ்வாறு விவரிக்கிறது: நவபாசிஸம் என்பதன் பொருள் என்ன? ‘நவம்’ என்பதன் பொருள் புதியது என்றோ ஏதேனும் பழையதன் சமகால வடிவம் என்பதோ ஆகும். ஐரோப்பாவில் முதல் மற்றும் இரண்டாவது உலப்போர்களுக்கு மத்தியில், முசோலினியின் இத்தாலியைப் போலவோ ஹிட்லரின் ஜெர்மனியைப்போலவோ வளர்ந்து வந்த கிளாசிக்கல் பாசிஸத்தில் இருந்து வேறுபடுத்தவே நவபாசிஸம் என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உலக முதலாளித்துவ நெருக்கடி 1929 முதல் 1933 வரை நீடித்த பெரும் பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச்சென்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்தன. முதலாவது உலகப்போரும் இரண்டாவது உலகப்போரும் ஏகாதிபத்திய முரண்பாடுகளின் விளைவாகும். அதிகாரத்தைக் கைப்பற்றியபின் பாசிஸ சக்திகள் முதலாளித்துவ ஜனநாயகத்தை கைவிட்டதோடு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக போரைப் பயன்படுத்தி ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும் செய்தன. இந்த நாடுகளில் ஏகபோக மூலதனம் பாசிஸ்ட்டுகளை முழுமையாக ஆதரித்தது. நெருக்கடியைக் கடக்க மிகத்தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏகபோக முதலாளிகள் பாசிஸ சக்திகளை தூண்டினர்.
நவபாசிஸத்தின் சில கூறுகள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காணப்பட்ட பாசிஸத்தைப்போன்றதுதான்.
வரலாற்றுப்பூர்வமான தவறுகள் மற்றும் அநீதிகளின் விளைவு என வரையறுக்கப்படும் உணர்வுகளின் அடிப்படையில் உருவாகும் தீவிர தேசியவாதம், வகுப்புவாதம், மதவாதம், இனவாதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிறுபான்மையினத்தை குற்றவாளியாக பார்ப்பது, தீவிர வலதுசாரி நவபாசிஸ சக்திகளுக்கும் கட்சிகளுக்கும் பெரும் பூர்சுவாக்கள் அளிக்கும் ஆதரவு போன்றவை முந்தையது போன்றதே. இந்தியாவில் நவபாசிஸத்தை அடையாளப்படுத்துவது ஆர்எஸ்எஸும், இந்துத்துவ அடிப்படைவாதமும் ஆகும்.
இவை பாசிஸ குணம் படைத்தவை என நமது கட்சித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அவர்களால் முடிகிறது. இந்துத்துவா அடிப்படைவாதம், புதிய தாராளமய நெருக்கடி, பெருமுதலாளிகளின் விருப்பத்திற்கு இணங்க எதேச்சதிகாரத்தை திணித்தல் போன்றவை நவபாசிஸத்தின் துவக்க வடிவமாகும்.
பாஜக – ஆர்எஸ்எஸின் கீழ் செயல்படும் இன்றைய அரசு இயந்திரம் ‘நவபாசிஸத்தின் போக்குகளை வெளிப்படுத்தும்’ ஆட்சி என நாம் குறிப்பிட்டுள்ளோம். அதேநேரத்தில் இந்தியாவில் இப்போதே ஒரு பாசிஸ ஆட்சிமுறை முழுமையான வடிவில் வந்துவிட்டது என்பது, நுணுக்கமான விளக்கத்திற்கு பொருத்தமற்றது.
பரவலான ஒடுக்குமுறைகள் ஊடங்கள் மீதும், எதிர்ப்பு போராடங்கள் மற்றும் மாற்றுக்கருத்துகள் மீதும் நடக்கிறது என்பது சரியே. ஆனால், ஹிட்லரும் முசோலினியும் எதிர் குரல்களை ஒரேயடியாக வெளிப்படையாக ஒடுக்கவும், ராணுவ பொது நிர்வாகம், நீதி நியாய செயல்பாடு போன்ற ஆட்சி அதிகார அமைப்புகளை முற்று முழுமையாக கைப்பற்றியதுபோன்ற நிலை இப்போதும் இந்தியாவில் வடிவம் பெறவில்லை. ஆனால் அதை நோக்கிய நகர்வுகளைக் காண முடிகிறது. அவசரநிலை காலத்தின் தீவிர அடக்குமுறையையும் பாசிஸம் என சிபிஎம் குறிப்பிடவில்லை. அதுபோலவே 1972 முதல் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் நடந்த கொடிய அடக்குமுறையையும் படுகொலைகளையும் தேர்தல் முறைகேடுகளையும் அரை பாசிஸ ஆட்சி என்றே சிபிஎம் மதிப்பீடு செய்தது.
பொதுசமூகத்தில் இன்றும் ஜனநாயக முறையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடிகிறது. சரியாக அனைத்து சக்திகளையும் அணிதிரட்டினால் ஜனநாயக முறையிலான வழிகளில் தோற்கடிக்ககூடியதே நவபாசிஸத்தின் இந்திய பதிப்பு என்கிற உண்மை நிலையை சிபிஎம் சுட்டிக்காட்டுகிறது. மோடி ஆட்சி நவபாசிஸ போக்குகளை வெளிப்படுத்துகிறது என சிபிஎம் முடிவுக்கு வருவது, அது முன்வைக்கும் பாசிஸ அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடாமலும், நிலவரங்களை பயத்தை ஏற்படுத்தும் வகையில் மிகைப்படுத்திக் காட்டாமல் இருப்பதுமாகும். நோயை சரியாக அறிந்துகொள்வது என்பது அதை குணப்படுத்தும் நடவடிக்கையில் முக்கியமான கட்டம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படிச் செய்தால் மட்டுமே இந்திய சமூகத்தில் இன்று மேலோங்கி வந்துள்ள பாசிஸ அச்சுறுத்தலை முழுமையாக புரிந்துகொள்ளவும் அதற்கு எதிரான கலாச்சார – அரசியல் போராட்டங்களில் அதிக அளவில் மக்களையும் அரசியல் அமைப்புகளையும் அணிதிரட்ட முடியும்.
- மார்ச் 14 சிந்தா மலையாள வார இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்
தோழர் Murugesan Chella
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக