1949ஆம் ஆண்டு மாசேதுங் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி புதிய ஜனநாயக
புரட்சியை நடத்தி வெற்றிக்கொடி நாட்டியது. ஐரோப்பிய தத்துவம் என்று அழைக்கப்பட்ட
மார்க்சியம் ஆசிய கண்டத்தில் உலகமே அதிரும் வகையில் ஆட்சி பீடத்தில் அரங்கேறியது.
அதுவரை இருந்த அரை-நிலப்பிரபுத்துவ அரை-காலனித்துவ சமூக அமைப்பை புரட்டிப் போட்டு சீன
மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. புரட்சிக்கு முன்பே சீனாவில் பாரம்பரிய மதங்களில்
காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் உருவாகிக் கொண்டு இருந்தது.
அந்நிய
மண்ணிலிருந்து சீனாவிற்கு வந்த கிறிஸ்துவ மதம், சுய புதுப்பித்தல் என்ற முறைகளை
அவரவர் மத அமைப்புக்குள்ளேயே நடத்த ஆரம்பித்தனர். கம்யூனிஸ்டுகள் தலைமையிலான புரட்சி வெற்றி பெற்ற பிறகும் சீன மதங்களில்
சுய புதுப்பித்தலுக்கான இயக்கம் மாறுபட்ட முறையில் புதிய வேகம் எடுத்தது. இதற்கான
அடித்தளத்தை புதிய அரசு உருவாக்கிக் கொடுத்தது.
சீனாவில் இருக்கக்கூடிய சில மத அமைப்புகள் வெளிநாட்டு கலாச்சார
ஏகாதிபத்தியங்களுடனும்,
சில மதங்கள் நிலப்பிரபுத்துவ முறைகளுடனும்,
மூடநம்பிக்கைகளின் வலைகளிலும் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது
என்பதை உரத்த குரலில் பேசஆரம்பித்தனர். இதன் காரணமாக சுய புதுப்பித்தலை அந்தந்த
மதங்களுக்குள் முன்னெடுத்தவர்கள் தயக்கமின்றி தங்கள் பாதைகளில் பயணப்பட்டார்கள்.
மூன்று
சுயங்கள்
ஏனான் மாகாணத்தில் உள்ள லூயோ பாங் என்ற பிரதேசத்தில்
இருந்த புராட்டஸ்டண்ட் மதப் பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் ஆலயங்களை தாங்களே
நடத்திக் கொள்ளக்கூடிய சுயாதீன நிர்வாகங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற
கோரிக்கைகளை முன்னெடுத்தனர். மத அமைப்புகளும் ஆலயங்களும் உள்ளூர் மக்களால்
நிர்வகிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
சீனா
விடுதலை பெற்ற பிறகும் ஏகாதிபத்திய சக்திகள் சீனாவை ஆக்கிரமிப்பு செய்ய பல
முயற்சிகளை செய்தது. அதற்கு கிறிஸ்துவ மதத்தை பயன்படுத்தியது. ஷாங்காய்
மாகாணத்தில் அங்கிருந்து மத விசுவாசிகள் சீனாவிற்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்யும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கு உதவி செய்யக்கூடிய மத வியாபாரிகளை
உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இப்படி போராட்டம்
நடத்தியவர்கள் தேசபக்த சுயாதீன மத அமைப்புகள் தேவை என்ற முறையிலும், தேவாலயங்களை சுயாதீன அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தினார்கள்.
வூ
யாவோ சோங்
என்பவர் புகழ்பெற்ற பிராட்டஸ்டண்ட் மதகுரு ஆவார். இவர் புரட்சி நடை பெறுவதற்கு
முன்பே சுய நிர்வாகம், சுய ஆதரவு, சுய பிரச்சாரம் என்ற மூன்று தேசபக்த
கோட்பாட்டின் அடிப்படையில் புராட்டஸ்டண்ட் தேவாலயங்கள் அமைய வேண்டும் என்று
வலியுறுத்தினார். இதற்காக மூன்று தேசபக்த இயக்க குழு
என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தினார். இவரது தலைமையில் நாடு முழுவதும் உள்ள
தேவாலயங்களுக்கு மத குருக்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு தேவாலய மக்களுடன்
உரையாடி அந்தக் கருத்துக்களை அரசிடம் கொண்டு சென்றனர். 1950
ஆம் ஆண்டு சீனாவின் பிரதமராக பொறுப்பு வகித்த புகழ்பெற்ற தலைவர் சௌ என் லாய் அவர்களை
நேரில் சந்தித்து உரையாடல் நடத்தினார்கள்.
மூன்று
சுயாதீன கொள்கைகளைப் பற்றி பிரதமரிடம் எடுத்துச் சொன்ன பொழுது அவர் அந்தக்
கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்கான ஆதரவை தெரிவித்தார். சீனாவில் உள்ள கிறிஸ்தவ
தேவாலயங்களை ஏகாதிபத்தியங்களின் எச்சங்களிலிருந்தும், செல்வாக்கிலிருந்தும்
விடுவிக்க வேண்டும் என்றார். இதன் மூலம் மதங்கள் ஆரோக்கியமான
வளர்ச்சி அடையவும் மதத்தின் அசல் நிறத்தை மீட்டெடுக்க முடியும் என்று கூறினார்.
1950 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிராட்டஸ்டண்ட் மத விசுவாசிகள் புதிய இயக்கத்தை
தொடங்கினார்கள். புதிய சீனாவை கட்டி எழுப்புவதில் சீன கிறிஸ்துவ மக்களுக்கான வழி
என்ற தலைப்பில் கடிதத்தை தயாரித்து சீனா முழுவதிலும் இருந்த புராட்டஸ்டண்ட் மத
விசுவாசிகளிடம் கையெழுத்தை வாங்கினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் விசுவாசிகள் இந்த கடிதத்தில் கையெழுத்துப் போட்டனர். சீனாவில் அன்றைய
காலகட்டத்தில் இருந்த புராட்டஸ்டண்ட் மத
விசுவாசிகளில் இந்த எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு ஆகும். இந்தக் கடித
இயக்கத்தின் மூலம் மூன்று சுயங்கள் என்ற தேசபக்த இயக்கம் நாடு முழுவதும் பிரபலம்
அடைந்தது. இந்த நிகழ்வை மதகுரு வூ யாவோ சோங் சீன
கிறிஸ்துவத்தின் மறுபிறப்பு என்று விவரித்தார்.
கத்தோலிக்க
திருச்சபையில் வாங் லியாங் சுவோ என்ற பாதிரியார் சிச்சுவான் மாகாணத்தில்
புகழ்பெற்று இருந்தார். இவர் தனது பத்தாவது வயதிலேயே குரு பட்டம் பெறுவதற்காக
கத்தோலிக்க மதத்தில் இணைந்தார். புராட்டஸ்டண்ட் மதத்தை விட இறுக்கமான முறையில்
இருந்த கத்தோலிக்க மதத்திற்குள் மூன்று சுயங்கள் என்ற இயக்கத்தை நடத்த
ஆரம்பித்தார். அதற்கான பிரகடனங்களையும் அறிவித்தார். சீன கத்தோலிக்க திருச்சபையில்
அதுவரை வேறு எங்கும் இவ்வாறு நடைபெறவில்லை. இவர் எடுத்த முயற்சிதான் முதல் முயற்சி என்று வரலாறு பதிவு செய்துள்ளது.
1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தியான்ஜின் பகுதியில் உள்ள
கத்தோலிக்க விசுவாசிகள் மூன்று சுயங்கள் என்ற தேச பக்தி இயக்கத்தை வலுவாக
நடத்துவதற்காக ஒரு தயாரிப்பு குழுவை அமைத்தனர். 1957 ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சீனாவில் இருந்த கத்தோலிக்க திருச்சபை கூட்டங்களை 40 நாட்களுக்கு மேலாக நடத்தி தேசபக்த நிர்வாகத்தின் கீழ் தேவாலயங்களை கொண்டு
வருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்து நிறைவேற்றவும் செய்தனர்.
சீர்திருத்தத்தின்
சவாலாக திபெத்திய பௌத்தம்
திபெத்திய
பௌத்தம் அங்கு இருந்த தெய்வீக ராஜ்ஜியம் என்ற பெயரில் நிலப்பிரபுத்துவ அமைப்பில்
கட்டுண்டு கிடந்தது. இனக்குழுக்களையும் மத நம்பிக்கையாளர்களையும் நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு
தங்குதடையின்றி பயன்படுத்தி வந்தார்கள். இதை எதிர்த்து திபெத்திய மத
அமைப்புக்குள்ளேயே ஜனநாயக சீர்திருத்தத்திற்கான குரல் எழும்பியது. புதிய அரசும்
இணைந்து எடுத்த சீர்திருத்த முயற்சிகள் திபெத்திய பௌத்தத்தை
ஜனநாயகப் படுத்தியது. பௌத்த மடாலயங்கள் நீதிமன்றங்களுக்கு
சமமான தீர்ப்பாயங்களை நடத்தினார்கள். மத அடிப்படையில் தண்டனைகள் வழங்குவதும், சிறைகளில் அடைப்பதும் மடாலயங்கள் பெயரால் நிலப்பிரபுத்துவ உடமையாளர்கள்
செய்து வந்தார்கள். ஜனநாயக சீர்திருத்த இயக்கம் அரசு ஆதரவுடன் இவற்றை
ஒழித்தார்கள்.
திபெத்தியப் பகுதிகளில் இருந்த எண்ணற்ற பழங்குடிகளின் சமூகத்தில் அதன் தலைவர்களை
நியமிப்பதையும், அந்தப் பகுதியின் மதகுருமார்களை
நியமிப்பதையும் மடாலயங்கள் தங்கள் அதிகாரங்களாக வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த
முறை ஜனநாயக சீர்திருத்த இயக்கங்களால் ஒழிக்கப்பட்டது. மடாலயங்களில் ஆயுதங்களை
தங்கு தடையின்றி வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டது. மடாலயங்கள் சிவில்
வழக்குகளில் தலையிடுவது, குடிமக்களின் திருமண
சுதந்திரங்களில் தலையிடுவது, பெண்களுக்கு எதிரான ஒடுக்கு
முறைகளை கையாள்வது, கல்வி முறைகளில் மடாலயங்கள் தலையிடுவது
போன்றவை அனைத்தும் ஒழிக்கப்பட்டன. குறிப்பாக நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையின்
சிறப்பு உரிமைகள் மூலமாக அனுபவித்த அனைத்தும் ஒழிக்கப்படுவதற்கு திபெத்திய பௌத்த
மதத்தில் நடத்திய ஜனநாயக சீர்திருத்த இயக்கம் வழி வகுத்தது. மடாலயங்கள் நடத்திய வட்டி தொழில், இலவச உழைப்பு
முறை மற்றும் பிற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டன. இதேபோன்று
இஸ்லாம் மதத்தில் இருந்த நிலப்பிரபுத்துவ சொத்துடமை சலுகைகள்
மதத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை முழுவதுமாக அகற்றினார்கள்.
திபெத்திய
பௌத்தத்தில் நடைபெற்ற ஜனநாயக சீர்திருத்த இயக்கம் என்பது சீன மக்கள் குடியரசும்,
கம்யூனிஸ்டுகளும் மதத்தின் மீதும், அதை நம்புகிற மக்களையும்
எப்படி அணுகுகிறார்கள் என்பதற்கான ஒரு உதாரணமாக திகழ்கிறது. மேற்கண்ட
சீர்திருத்தங்கள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையான முறையிலும், அமைதியான முறையிலும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும்
நடத்தப்பட்டது என்பதையும், அதை நடத்துவதை மிகப் பொறுமையான
முறையில் காலஅவகாசம் எடுத்து இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை சீன வரலாறு
பதிவு செய்துள்ளது.
திபெத்திய
பகுதியில் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்கிற பொழுது இனத்தையும், மதத்தையும்
ஒன்றாக இணைத்து மக்களை சீர்திருத்தங்களுக்கு எதிராக நிறுத்தக்கூடிய வேலைகளை
உள்ளூர் நிலப்பிரபுத்துவ சக்திகள் முயற்சி செய்தார்கள். சீர்திருத்தத்தினை மேற்கொண்ட மதவிசுவாசிகளும்,
அரசும் இனம் வேறு, மதம் வேறு என்பதை எடுத்துரைத்தார்கள். ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ மடாலயங்கள் இனக்குழுக்களை
மதத்தின் பெயரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு சுரண்டுவதை
அம்பலப்படுத்தினார்கள். மிகவும் நிதானமாக தலையிட்டு இந்த செயலை செய்தார்கள்.
இனக்குழுக்களுக்கான வழிபாட்டு முறைகள், நம்பிக்கை ஆகியவற்றை
மடாலயங்களுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை புரியவைத்து இந்த
சீர்திருத்தத்தை முன்னெடுத்தனர்.
மேலும்
மத நம்பிக்கைக்கும், மத அமைப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை மக்களிடம் தெளிவு பெற
எடுத்துரைத்தார்கள். மத நம்பிக்கை என்பது சிந்தனை சார்ந்த ஒன்று. மத அமைப்பு
என்பது சமூக அமைப்பின் ஒரு அம்சமாகும். இந்த அமைப்பு நிலப்பிரபுத்துவ இயல்புகளை
தன்னகத்தே உள்ளடக்கி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்கள். எனவே மத
நம்பிக்கையும், மத அமைப்புகளையும் வேறுபடுத்தி படிப்படியாக
சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதிபட
இருந்து செயல்பட்டனர். சீனாவில் புரட்சி நடந்து ஆறு ஆண்டுகள்வரை திபெத்திய பௌத்த மடாலயங்களில் எவ்விதமான தலையீடுகளும் செய்யவில்லை. நிலைமைகளை
உன்னிப்பாக கவனித்து ஆய்வுகளுக்கு உட்படுத்தி அந்த ஆய்வின் அடிப்படையில் தலையீடு
செய்தனர்.
1959 ஆம் ஆண்டு திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான உயர்மட்ட
குழுக்கள் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளை சீர்திருத்தங்களுக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ உறவுகளை பாதுகாப்பதற்காகவும் நடத்தினார்கள். இந்த
காலகட்டத்தில்தான் கிளர்ச்சிகளை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கையில்
மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் சீர்திருத்தங்களையும் அமல்படுத்துவதற்கான
கொள்கைகளை உருவாக்கி அமலாக்கம் செய்தனர். கிளர்ச்சியில் ஈடுபடாத சாதாரண மத
விசுவாசிகள் இந்த சீர்திருத்தங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று
கட்டாயப்படுத்தவில்லை. அதற்கு மாறாக உள்ளூர் அளவிலான மடாலயங்கள் ஜனநாயக ரீதியிலான
நிர்வாக குழுக்களை அமைத்துக் கொள்வதற்கும், அந்த நிர்வாக
குழு ஜனநாயக ரீதியான முறையில் தேர்ந்தெடுப்பதற்குமான விதிகளை உருவாக்கிக்
கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள். திபெத்திய நிலப்பிரபுத்துவ மத அமைப்பு
முறையின் மிருகத்தனமான பிடியில் சிக்கி இருந்த பௌத்த மத நம்பிக்கையாளர்களை சீனக்
கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் ஜனநாயக சீர்திருத்தவாதிகளை இணைத்து விவேகமான முறையில் மாற்றங்களை
ஏற்படுத்தியது.
மறுபுறத்தில்
சீனாவில் ஹான்-சீனபௌத்தத்திலும், தாவோயிசத்திலும்
மத சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த மடாலயங்களில் மத நம்பிக்கை கொண்ட
விசுவாசிகள் அங்கீகரிக்கப்பட்டனர். மடாலயங்கள் நிர்வகிக்கக்கூடிய சொத்துக்கள்
போன்றவற்றில் கடைபிடிக்கப்பட்ட ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ கூறுகள் முழுவதுமாக
அகற்றும் பணியை செய்து முடித்தனர். அதேபோன்று இந்த மடாலயங்களில் மத குருமார்களின்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய வகைகளில் பல்வேறு பழக்க வழக்கங்கள்
கடைபிடிக்கப்பட்டன. இதற்கான விதிமுறைகளும் ஒழிக்கப்பட்டது. கோயில்களிலும்
மடாலயங்களிலும் பரவலாக பின்பற்றப்பட்ட தீங்கு விளைவிக்கக் கூடிய மூடநம்பிக்கைகளை
பரப்பக்கூடிய நிகழ்வுகள் தடை செய்யப்பட்டன.
சீனாவில்
நடைபெற்று முடிந்த புதிய ஜனநாயக புரட்சி மத அமைப்புகளை சந்திப்பதில் பெரும்
சவால்களை மேற்கொண்டது. பாரம்பரிய மதங்கள்,
திபெத்திய பௌத்தம், அந்நிய மதங்கள் என
இவைகளின் தன்மைக்கு ஏற்ப தலையீடுகளை செய்தனர். பொதுவாக மத நம்பிக்கைகளுக்கும், மத அமைப்புகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றி சரியான முறையில் மதிப்பீடு
செய்து தலையீட்டுக்கான வழிகளை கண்டுபிடித்தார்கள். இந்த
தலையீடுகளுக்கு மத விசுவாசிகளிடமிருந்த அல்லது மத குருக்களிடமிருந்த ஜனநாயக சீர்திருத்த முயற்சிகளையும் உரிய முறையில் இணைத்துக்
கொண்டார்கள்.
இந்த
சீர்திருத்த முறையில் ஒரு வடிவமாக அரசு மத விவகாரங்களுக்கான ஒரு துறையை
ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மூன்று சுய தேசபக்த கொள்கைகளை ஆதரித்து
செயல்படவைத்தது. 1953ஆம் ஆண்டு பௌத்தம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கான குழு 1954 ஆம் ஆண்டு புராட்டஸ்டண்ட்
மதத்திற்கான குழு 1957 ஆம் ஆண்டு தாவோயிசம், கத்தோலிக்க மதம் ஆகியவற்றையும் சேர்த்து ஐந்து மதங்களை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் தேசபக்த மத சங்கங்கள் உருவாக்கப்பட்டன.
மீட்டெடுக்கப்பட்ட
அசல் நிறம்
சீன
கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அமைந்த சீன மக்கள் குடியரசு மத அமைப்பில் ஜனநாயக
சீர்திருத்த இயக்கங்களின் மூலமாக மிக முக்கிய அம்சங்களை செய்து முடித்தது. நிலப்பிரபுத்துவ
ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைகளுக்கும், சுரண்டலின் சிறப்பு உரிமைகளையும், மக்கள்மீது
ஆட்சியாளர்கள் திணித்த மனரீதியிலான அடிமைத்தனத்தையும்,
அகற்றியது. மறுபுறம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கங்களின் குப்பைகளை நிராகரித்தது
கலாச்சார மட்டத்தில் சீர்திருத்த நெறிமுறைகள் மீதான முக்கியத்துவத்தை
வலியுறுத்தியும் செயல்பட்டது. இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கன்பியூசியம்
தொடர்பான அணுகுமுறைகள்.
சீனாவில்
கன்பியூசியம் என்பது ஒரு மதமாக இல்லை. அதே நேரத்தில் வாழ்க்கை நெறிமுறையாக அது
அங்கீகரிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. கன்பூசியத்தில் உள்ள அதிகார
கட்டமைப்புகள், அதிகார வர்க்கம் தொடர்பான விஷயங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி புறம்
தள்ளியது. மறுபுறத்தில் கன்பியூசியம் வலியுறுத்திய ஒவ்வொரு நபரின் பொறுப்பாக
நாட்டுப்பற்று, குடும்ப பொறுப்பு, சுய
பண்பாடு ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் நல்லொழுக்கங்கள்
மீதான அதன் பாரம்பரியத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது.
மேலும்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது இந்த சீர்திருத்தங்கள் தேவாலய நிர்வாகத்தில் புதிய
சுதந்திரத்தை கொடுத்தது. சீன மதங்கள் ஏகாதிபத்தியத்தின் ஒரு இணைப்பாக இருந்ததையும் முன்னாள் ஆளும்
வர்க்கத்தின் கருவியாக இருந்ததும் நீக்கப்பட்டது. அன்றைய பிரதமர்
சௌ என் லாய் குறிப்பிட்டது போல்
மதங்கள் அவற்றின் அசல் நிறத்திற்கு மீட்டெடுக்கப்பட்டன.
மதங்கள் அவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளையும், மத
நிறுவனங்கள் அவற்றிற்கு உண்டான சடங்குகள் தொடர்பான சாதாரண நடவடிக்கைகளையும் சுயமாக
மேற்கொள்வதற்கான திறனையும் இந்த சீர்திருத்தங்கள் மூலமாக பெற்றன.
இந்த
சீர்திருத்தங்களை தொடர்ந்து நடத்திய பிறகுதான் சீன மக்கள் குடியரசு சீனாவின் மத
அமைப்புகளும் இனிமேல் எந்த வெளிநாட்டு ஆதிக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும்
உட்பட்டதாக இருக்காது என்று அறிவித்தது. பொது ஒழுங்கை சீர்குலைக்கவும், குடிமக்களின்
ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய முறையிலும், மதத்தை யாரும்
பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அரசின் கல்வி
முறைகளை சிதைக்கக் கூடிய வகையில் மத அமைப்புகளின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது
என்றும் தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேற்கண்ட இரண்டு கூற்றுக்களையும்
உள்ளடக்கி தான் சீனாவில் மத நம்பிக்கை சுதந்திரம் என்ற கொள்கையுடன்
சேர்த்து சீன அரசியல் அமைப்பு பிரிவு 36 எழுதப்பட்டது.
நாத்திகத்தை
முன் வைக்கும் ஒரு கட்சி அதன் ஆட்சியில் மத நம்பிக்கை சுதந்திரம் என்ற அம்சங்களை
எப்படி அனுமதிக்க முடியும் என்ற கேள்விகள் எழுவது இயற்கைதான். இதற்கான விளக்கங்களை
அடுத்து காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக