சீனாவில் மதங்களின் தோற்றமும் வளர்ச்சியும் மாறுபட்ட சூழலில் நடந்தேறியது. தனித்துவ அம்சங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. எகிப்து, பாபிலோனியா,சீனா, இந்தியா என உலகின் நான்கு முக்கிய பண்டைய நாகரிகங்களில் எந்த அந்நிய கலாச்சாரத்தாலும் குறுக்கீடு செய்யப்படாத ஒரே நாகரிகமாக சீன நாகரிகம் நீண்ட காலம் தொடர்ந்து இருந்தது. இதன் காரணமாக இங்கு உருவான மதங்களிலும் சில குறிப்பிடத்தக்க காரணிகள் மாறுபட்டு இருந்தன.
சீன நிலப்பிரபுத்துவம், ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ இயல்புகளை கொண்டிருந்தது. இந்த நிலப்பிரபுத்துவ முறை நீண்ட காலம் நீடித்தது. ஆணாதிக்க நிலப்பிரபுத்துவசித்தாந்தங்கள் சமூகத்திலும் அரசியலிலும் மேலாதிக்கம் செலுத்தி வந்தது. வம்ச மன்னர்களின் ஆட்சியை தெய்வீக அனுமதி பெற்ற ஆட்சி என்று அறிவித்துக் கொள்வதற்கு சீனாவில் உருவான மதங்களை பயன்படுத்திக் கொண்டனர்.சமூக உறவுகளில் சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் பாதுகாப்பதற்கு இந்த மத சித்தாந்தங்களை பெருமளவு நிலப்பரப்புத்துவ ஆட்சியாளர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.
பாரம்பரிய சிந்தனைகளின் நெறிமுறைகள்
இங்கு உருவான கன்பியூசியனிசம், தாவோயிசம்,மென்சியம் பிற்காலத்தில் பௌத்தம் என அனைத்து சிந்தனைகளும் சொர்க்கம் இருப்பதை ஏற்றுக் கொள்வது,மூதாதையர்களை வழிபடுவது, நாட்டை ஆளும் மன்னனை மதிக்க வேண்டும் என்ற போதனைகளை பிரதானமாக வலியுறுத்தி செயல்படுத்தி வந்தன. தற்போதைய உலகத்தை பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் பகுத்தறிவுடன் தம்மை தகவமைத்து கொள்வதற்கும் அவ்வப்போது சில கூறுகளைவலியுறுத்தி வந்தன.
சீனாவில் உருவான பாரம்பரிய மதங்கள் தேசபக்தியையும் நாட்டின் நலனையும் முதன்மைப்படுத்துவதை தங்களது போதனைகளில் ஒன்றாக கடைபிடித்தன. சீன மதங்களில் சடங்குகளும், பழமைவாத பழக்க வழக்கங்களும் நீடித்து இருந்ததற்கு தேசபக்தி,நாட்டுநலன் என்பதை முன்னிறுத்தியதும் காரணமாகஇருந்தது. சீனாவின் கலாச்சார பாரம்பரியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மதிப்பது வரலாற்றில் ஒரு வழக்கமாக இருந்துள்ளது. சீன வரலாறு முழுவதும் மத நம்பிக்கையாளர்களுக்கும் நம்பிக்கையற்றவர்களுக்கும் இடையிலும், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த விசுவாசிகளுக்கு இடையிலும் ஒரு இணக்கமான சூழல் நீடித்தது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் என்பது உலகின் இதர பகுதிகளில் நடந்தது போல் பெரும் மோதல்களாக நடக்கவில்லை.
இடைக்கால ஐரோப்பாவின் வரலாற்றில் சிலுவைப் போர்கள், சீர்திருத்த காலத்தில் புராட்டஸ்டண்ட் பிரிவினருக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான மிக நீண்ட மிருகத்தனமான மோதல்கள் நடைபெற்றது. இந்தியாவில் வைதீக மதங்களுக்கும் அவைதீக மதங்களுக்கும் ஏற்பட்ட மோதல்கள், குறிப்பாக வேத மதங்கள் சமண, பௌத்த, உலகாயுத பகுதியினர் மீது நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களும், சைவம், வைணவம் என்று பல்வேறு மதப் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற மோதல்களைப் போன்று சீன மதத்தின் வளர்ச்சி காலத்தில் நடைபெறவில்லை. சீனாவில் ஆட்சி செய்த வம்ச ஆட்சியாளர்கள் மதங்கள் விஷயத்தில் ஒரு தளர்வான கொள்கையை கடைபிடித்தனர். பல நேரங்களில் மதங்களை சமமாக நடத்துதல் என்ற கொள்கைகளையும் பின்பற்றினார்கள். மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு அம்சம் சீனாவில் உருவான பாரம்பரியமான தாவோயிசம், கன்பியூசியனிசம், மென்சியம் போன்ற மதங்கள் தேவதூதர்களின் போதனைகள் என்ற வடிவில் அல்லாமல் உலக வாழ்வின் ஒழுக்க நெறிகளை,கடமைகளை முன்னிறுத்தின. எனவே சீனாவில் மதங்களின் இடத்தை பாரம்பரிய சிந்தனைகளின் நெறிமுறைகள் பூர்த்தி செய்தன என்று பல வரலாற்று அறிஞர்கள் வலுவான முறையில் பதிவு செய்திருக்கிறார்கள்.
அந்நிய மரபுகளை உள்வாங்குதல்
சீனாவின் பாரம்பரியமான மதங்கள் தங்கள் நாட்டில் உருவான மத சித்தாந்தங்களை கடந்து அந்நிய கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொள்கிற திறனையும் தன்னகத்தே கொண்டிருந்தது. அந்நிய மண்ணிலிருந்து சீனாவிற்குள் வரும் மதங்களை அவை காலூன்றுவதற்கு முன்பு சீனத்தன்மையை மதித்து அதற்கு ஏற்றவாறு மாற வேண்டும் என்ற சூழல் சீனாவில் இருந்தது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு பௌத்தம் சீனாவிற்குள் நுழைய ஆரம்பித்தது. 19வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் கிறிஸ்துவ மதம் சீனாவிற்குள் காலடி எடுத்து வைத்தது. இரண்டும் அந்நிய மண்ணிலிருந்து சீனாவிற்கு வந்தவை. ஆனால் பௌத்தம் சீனாவின் ஒழுங்கமைக்கப்பட்ட பெருமதமாக மாறியது. பௌத்தம் முதலில் சீனாவிற்குள் பரவிய பொழுது பணக்காரர்களையும் அதிகாரமிக்கவர்களையும் தங்கள் சங்கங்களில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்தார்கள். அதாவது பௌத்தத்தின் ஆரம்பகால பாரம்பரியத்தை பின்பற்றினார்கள். சீனாவிலோ நிலைமைகள் வேறு விதமாக இருந்தது. ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைகள் பௌத்தத்தை வளர விட வில்லை. மூதாதையர்களை வணங்குவது, சடங்குகளை நடத்தும் விதிமுறைகளை கடைபிடிப்பது, மன்னர்களின் அதிகார கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்வது போன்ற பாரம்பரிய சீனத்தின் கலாச்சார அம்சங்களை ஏற்றுக்கொண்ட பிறகுதான் அந்த மதம் சீனாவிற்குள் வேகமாக பரவியது. அவ்வப்போது ஆட்சியாளர்களால் அரச மதமாகவும் அறிவிக்கப்பட்டது.
19வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் சீனாவிற்குள் மேற்கத்திய சமூகத்தின் கலாச்சாரத்தை ஊடுருவ செய்ததில் கிறிஸ்துவ மதம் மிகமுக்கியப் பங்காற்றியது. கிறிஸ்துவ மதத்தின் இந்த முயற்சிகள் எளிதாக நடந்து விடவில்லை.பல நேரங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. குயிங்வம்ச பேரரசராக இருந்த காங்சியின் ஆட்சிக் காலத்தில் சீனாவில் நுழைந்த கிறிஸ்துவ மதத்திற்குள் பெரும் சர்ச்சை கிளம்பியது. சீனாவின் தன்மைக்கேற்ப கன்பியூசியம் மற்றும் மூதாதையர்களை வணங்கும் முறைகளை கத்தோலிக்கர்கள் அமலாக்க ஆரம்பித்தனர். அப்போதைய போப், கன்பூசிய முறைகளை ஏற்பதும், மூதாதையர்களை வணங்குவதையும் கத்தோலிக்கர்கள் செய்யக்கூடாது என்று தடை விதித்தார்.இதன் எதிரொலியாக அங்கு கிறிஸ்துவ மதம் நீண்ட காலங்களாக செல்வாக்கு பெற முடியாமல் போனது.
திபெத்திய பகுதியில் பரவிய பௌத்தம் அங்கு இருந்த நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்துடன் இணைந்து கொண்டு மிருகத்தனமான தெய்வீக ராஜ்ஜியம் என்ற பெயரில்நடைபெற்ற ஆட்சிக்கு ஆதரவாக இருந்தது. இஸ்லாம் மதம் வடமேற்கு சீனாவில் பரவ ஆரம்பித்தது. இஸ்லாம் மதத்திற்கு பல விசுவாசிகள் உருவானார்கள். இங்கு மென்ஹூவான்என்ற அமைப்பு முறை இருந்தது. இந்த அமைப்பு நிலப்பிரபுத்துவ சொத்துடைமை குணாம்சங்களைக் கொண்டது. இதில் இருப்பவர்கள் தலைமை பொறுப்பிற்கு வாரிசு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதிகாரங்களையும் பதவிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். இதைத் தான்மென்ஹூவான் முறை என்று அழைத்தனர். எனவே இந்தப் பகுதியில் உருவான இஸ்லாமியர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உடமைகள் மீது முழுமையான அதிகாரத்தை இங்கு உருவான இமாம்கள் தங்கள் கைவசம் எடுத்துக்கொண்டனர். நிலப்பிரபுத்துவ சொத்துடைமை வர்க்கத்தின் நேரடி நலன்களை பாதுகாக்க கூடியதாக நெகிழ்வுத் தன்மையில்லாமல் திபெத்தில் பௌத்தமும்,வடமேற்கு சீனாவில் உள்ள இஸ்லாமும் இருந்தது.
பீரங்கியில் பறந்த யேசு கிறிஸ்து :
19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து சீனா மேற்கத்திய நாடுகளின் ஊடுருவல்களுக்கும்,ஆக்கிரமிப்புகளுக்கும் ஆளானது. இந்த ஆக்கிரமிப்பு சீன சமூகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அதுவரை ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பாக இருந்தசீனா, அரை-நிலப்பிரபுத்துவ, அரை-காலனித்துவ சமூகமாகமாறியது. அரை காலனித்துவம் என்பது சீனா முழுமைக்கும் அல்லாமல் ஒரு பகுதி பிரதேசங்களை, சிறப்பு அதிகாரங்களை உள்ளடக்கி செயல்படுவதாகும். இதன்காரணமாக சீனாவில் இருந்த மதங்கள் அந்நிய தன்மையை பெறத் தொடங்கின. அதுவரை இல்லாத பெருமளவுஆக்கிரமிப்புகளை சீன மக்கள் தேசிய அவமானமாக கருதினர். இதுவரை இல்லாத சவால்களை எதிர்கொண்டசீன மக்கள் தங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை யோசித்தனர். மேற்கத்திய ஆக்கிரமிப்பு மற்றும் கலாச்சார திணிப்பு காரணமாக பாரம்பரிய பூர்வீக கலாச்சாரங்களுக்கு இடையிலான மோதலும் தீவிரமடைந்தது. இந்தத் தருணத்தில் பாரம்பரிய சீன மதங்கள் உயிர் வாழ்வதற்கு போராடியது.
புராட்டஸ்டண்ட் மதமும், கத்தோலிக்க மதமும் சீனாவிற்குள் பெரிய அளவில் ஊடுருவின. நற்செய்திகளின் வார்த்தைகளை பேச வேண்டியவர்கள் தன்னைப்போல் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்று போதிக்க வேண்டிய இருமதங்களும் ஆக்கிரமிப்பாளர்களின் கருவியாக மாறின. சீனாவின் புகழ்பெற்ற கல்வியாளர்,எழுத்தாளர், அரசியல்வாதி ஜியாங்க் மெங்களின்,‘‘பகவான் புத்தர் ஒரு வெள்ளை யானையின் முதுகில் சவாரி செய்து சீனாவிற்கு வந்தார்.ஆனால் இயேசு கிறிஸ்துவோ பீரங்கி குண்டுகளில் பறந்து வந்தார்’’ என்று எழுதினார். மேற்கத்தியநாடுகளால் திணிக்கப்பட்ட அபினி யுத்தத்தில் சீனா தோல்விஅடைந்தது. தோல்வியடைந்த சீனாவை பல ஒப்பந்தங்களில்கையெழுத்திட வைத்தனர். இந்த ஒப்ந்தம் மூலமாக பலமிஷினரிகள் பெரும் பயனடைந்தனர். உண்மையில் சில மிஷனரிகள் அபினி வர்த்தகத்தில் ஈடுபடவும், நிலங்கள்உட்பட சொத்துக்களை கொள்ளையடிக்கவும் செய்தன.வெளிநாடுகளில் இருந்து வந்த மிஷினரிகள் மீது பொதுமக்கள் வழக்கு தொடுத்தால் சீன நீதிமன்ற அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறி விடுவிக்கப்பட்டனர். இந்த இரு மத மிஷினரிகளும்கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டார்கள். இதனால் சீனாவில் உள்ளூர் மக்களின் கோபமும் விரக்தியும் அதிகரித்து,இறுதியில் கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது. இக்காலத்தில் மத வழக்குகள் அதிகமாகியது. 600க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1920 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு தேவாலயங்களுக்கு சீனாவில் எதிர்ப்புகடுமையாக இருந்தது. குறிப்பாக சீனாவின் அறிவு ஜீவிகள் மத்தியில் இந்த எதிர்ப்பு வலுவாக உருவானது.ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் கூட்டணி என்ற பெயரிலும், கல்வி உரிமையை மீட்டெடுக்கும் இயக்கம் என்ற பெயரிலும்பல அமைப்புகள் போரட்டத்தில் இறங்கின.
பழைய சீனாவில் நிலப்பிரபுத்துவ நிலஉரிமையாளர்கள் வர்க்கம், எஸ்டேட் உரிமையாளர்கள் வர்க்கம்,பிற்போக்குத்தனமான போர்வீரர்கள், அதிகாரத்துவ முதலாளித்து வர்க்கம் ஆகியவர்கள் பௌத்தம், தாவோயிசம்,இஸ்லாத்தின் தலைமையை கட்டுப்படுத்தினார்கள்.
மறுபுறத்தில் புராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்க மத அமைப்புகளையும், தேவாலயங்களையும் அன்னிய காலனித்துவ சக்திகளும், ஏகாதிபத்திய சக்திகளும் கட்டுப்படுத்தின. இதற்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்கள் புதிய வடிவங்களில் உருவானது.
சீர்திருத்தங்களுக்கான சீற்றம்
1898 ஆம் ஆண்டு சீனாவின் தேசிய அவமானங்களானஅந்நிய ஆக்கிரமிப்புகளையும், குயிங் வம்ச ஆட்சியின்இயலாமையையும் எதிர்த்து, சீர்திருத்த இயக்கம் எழுச்சி பெற்றது. இதற்கு சீர்திருத்தத்தின் 100 நாட்கள் என்று பெயர். ஒருபுறம் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை நிறுவ வேண்டும் என்ற போராட்டம் நடைபெற்றது. ஆட்சியில் இருந்த குயிங் அரசாங்கம் இதை நிராகரித்து, பழமைவாத சீர்திருத்தவாதிகள் குழுவை அமைத்தது. இந்தக் குழுவால் வெளியிடப்பட்ட கற்றலுக்கான அறிவுரை என்ற புகழ்பெற்ற படைப்பு சீனாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை கைவிடாமல் மேற்கத்திய பாணியில் உள்ள தொழில் மயமாக்கலையும் வளர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
முற்போக்கான அறிவு ஜீவிகளிடமிருந்து ஆணாதிக்க நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் வெடித்தது. மன்னர்களின் தெய்வீக உரிமை என்று ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கப்பட்டதை மறுத்து புதிய கருத்துக்களை விதைத்தனர். பழைய தேர்வு முறைகள் நீக்கப்பட்டு, தேசிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் புதிய முறையில் நிறுவப்பட்டது. மேற்கத்திய தொழில், மருத்துவம், அறிவியல்,வணிகம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் அறிவொளிப் பெற்ற மத போதனைகளும் அடங்கும். சீனாவின் பாரம்பரிய மதங்களை பகுப்பாய்வு செய்து சீர்திருத்தத்துக்கான அறைகூவலை இந்த படித்தஅறிவுஜீகள் இயக்கம் முன்வைத்தது. சீனாவை தேசிய அழிவிலிருந்து காப்பாற்ற சீர்திருத்தம் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்து இருந்தார்கள். பௌத்த குருக்கள் பலபேர் தேசிய மீட்சியையும், தாவோயிஸ்ட் பாதிரியார்கள் தேசிய மீட்சிக்கான பிரசங்கத்தையும் தொடர்ந்து செய்தனர்.ஜப்பானிய படையெடுப்பு சீனாவின் மீது நடந்த பொழுது முஸ்லிம் படை பிரிவினரின் வீர தீர செயல்கள் சீனாவின் தேசிய எழுச்சிக்கான பகுதியாக அமைந்தது. மேற்கண்ட செயல்கள் சீன தேசபக்தியின் பிரதிபலிப்புகளாக அமைந்தன.
சீனமயமாக்கலின் துவக்கம்
இதே காலத்தில் சீன மதங்களின் அந்நிய தன்மைக்கு எதிரான சவால்கள் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் மதங்களின் உள்ளே இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. இந்த இருமதப் பிரிவின் அறிவொளிப்பெற்ற நபர்களிடமிருந்து சீனமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 1919 ஆம் ஆண்டு மே 4 இயக்கத்தின் போது தியான்ஜின்,ஷாங்காய் மற்றும் சில நகரங்களில் இருந்த சீனாவின் தேசபக்த மதகுருமார்கள், மிஷினரி பள்ளிகளின் மாணவர்கள், மற்றும் குறிப்பிடத்தக்க விசுவாசிகள் சீன கத்தோலிக்க திருச்சபையின் காலனித்துவ கட்டமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்று எதிர்ப்புக் குரலை முன்னெடுத்தார்கள்.
சீனாவில் சிறந்த அறிஞராகவும், கல்வியாளராகவும்,அதே நேரத்தில் சீன சேசு சபை பாதிரியாராகவும் இருந்த மா சியாங் போவு உட்பட அவரைப் போன்ற மற்றவர்களும் சீன ஆயர்களை மறைமாவட்ட விவகாரங்களுக்கு தலைமை தாங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர். போப்தலையீட்டை எதிர்த்தனர். அதே நேரத்தில் செமினரி கல்வியில் அதாவது இறையியல் வழிபாட்டு முறைகளை போதிக்கும் பாடத்திட்டத்தில் சீன கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் போக்குகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தனர். அத்துடன் நிற்கவில்லை சீன திருச்சபையில் சீனமயமாக்கல் நடவடிக்கைகளை வாடிகன் தலைமை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
புராட்டஸ்டண்ட் தேவாலயங்கள் உள்ளூர் மயமாக்கல் இயக்கத்தை தீவிரமாக தொடங்கியது. சீனாவில் இருக்கும் புராட்டஸ்டண்ட் மதத்தினர் தங்கள் பொறுப்பை ஏற்கவும்,மறுபுறம் உள்ளார்ந்த கிழக்கத்திய கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். இதனால் தேவாலயத்தை வெளிநாட்டினர் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்க முடிந்தது. 1903ஆம் ஆண்டு ஷாங்காயிலிருந்த புராட்டஸ்டண்ட் மதப் பிரிவினர் சுய நிர்வாகம், சுய ஆதரவு, சுய பிரச்சாரம் என்ற முறையில் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.தேவாலயங்களில் வெளிநாட்டினர் கட்டுப்பாட்டில்இருப்பதை எதிர்த்தனர். வெளிநாட்டினர் கட்டுப்பாட்டில்இருக்கும் தேவாலயங்களில் தங்களை உட்படுத்திக் கொள்ளக் கூடாது என்று முன்மொழிந்தார்கள். நாட்டிற்கும்,திருச்சபைக்கும், சக கிறிஸ்துவர்களுக்கும் உரியமரியாதையை விரும்புகிறோம் என தேசபக்த உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.
கத்தோலிக்க திருச்சபையை சீனமயமாக்குதல் ஒருபுறம் நடந்தது. புராட்டஸ்டண்ட் திருச்சபையை உள்ளூர் மயமாக்கல் மறுபுறம் நடந்தது. இந்த முயற்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமான சீனாவின் புறச்சூழ்நிலையில் ஒரு சிறிய தாக்கத்தை மட்டும்தான் ஏற்படுத்தின. காலனித்துவ இணைப்புகளாக கருதிய வெளிநாட்டு மதங்கள் மீதான வெறுப்பை சீன மக்கள் ஆழமாக கொண்டிருந்தனர்.
சீனாவின் மதங்களில் மாபெரும் மாற்றங்களை காலம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. முழு சமூகத்தையும் புரட்டிப் போடும், பூமியே அதிர வைக்கும் ஒரு மாற்றத்தின் மூலம் தான் இது நடந்தேறியது. அந்த மாற்றத்தை 1949ஆம் ஆண்டுசீன கம்யூனிஸ்ட் கட்சி மாவோ தலைமையில் நடத்திக் காட்டியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக