அ.பாக்கியம்
தோழர் செந்தில்குமார் அவர்கள்
பேசுகிற பொழுது தோழர்.அசோகன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா என்பது பல ஜாம்பவான்களின் பணி
நிறைவு பாராட்டு விழா போன்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என்று பேசினார். மிகப் பொருத்தமான
வார்த்தைகள் இவை. அதே நேரத்தில் தோழர் செந்தில் குறிப்பிட்ட
ஜாம்பவான்கள் அனைவரும் போக்குவரத்து சங்கத்தை உருவாக்கியவர்கள். அதன் பல பொறுப்புகளை வகித்தவர்கள். தோழர் அசோகன்
சங்கத்தில் நிர்வாகியாக பொறுப்பு வகித்தவர் அல்ல. பல
நிர்வாகிகளை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார். தொழிலாளர்களின் இதயங்களில், அவர்களின் குடும்ப வாழ்வில், தோழர்களின் அன்றாட
நிகழ்வில் அவரின் செயல்பாடுகள் எண்ணற்ற தொழிலாளர்களை இயக்கத்தின் பக்கம் ஈர்த்தது. நமக்காக என்றும், எப்பொழுதும் இயங்கிட தோழர் அசோகன்
இருக்கிறார் என்ற நம்பிக்கை தொழிலாளர்களின் உள்ளங்களில் குடியிருந்தது. எனவேதான்
அவரின் பணி நிறைவு விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
தோரணக் கொடி ஒட்டுவது, கொடிகள்
கட்டுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது,
வாயிற் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், பாடல், நடிப்பு, இசைக்கருவி
வாசிப்பு, பறையடித்தல், வகுப்பு
எடுப்பது, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, மாற்றுக் கட்சி சங்க நிர்வாகிகளுடன் லாபகமாக பழகுவது என்ற பன்முகத்தன்மையின் அடையாளமாக
அவருடைய பணி அமைந்திருந்தது. இந்தப்பண்புகளை கொண்டவர்கள் அரிதாக இருப்பார்கள்.
இதுபோன்றவர்கள் இயக்கத்திற்கு கிடைப்பது பெரும் சொத்தாகும்.
1987ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சென்னைக்கு வந்து மாம்பலத்தில் இருந்த கட்சி
அலுவலகத்தில் தங்கியிருந்து பிழைப்பை தேடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு சீமாத்தம்மன் நகரில் தோழர்.பாலசுந்தரம் அரவணைப்பில் அவருடைய
ஆதரவுடன் அவரது வீட்டில் குடியிருந்து, அவரின் முன்
பயிற்சியால் 1995ஆம் ஆண்டு மாநகர போக்குவரத்தில் ஓட்டுநராக
இணைந்தார்.
1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்
மூன்றாவது அகில இந்திய மாநாடு நடைபெற்ற பொழுது, அதன்
பிரச்சாரத்திற்காக பல கலை குழுக்கள் உருவானது. அவற்றில் ஒன்றாக சப்தம் கலைக்குழு
உருவானது. அந்தக் கலைக்குழு மூலம் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை
பிரச்சாரம் செய்ததில் அசோகன் முக்கிய பங்காற்றினார்.
பாடினார், நடித்தார், இசைக்கருவிகளை
வாசித்தார் என்று பல வேஷம் கட்டினார்.
1992 ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14 வது அகில
இந்திய காங்கிரஸ் வடபழனியில் விஜய் சேஷ மஹால் ராணி மகாலில் நடந்தது. இதற்கான
கலைக்குழு பிரச்சாரத்தையும் மாதக்கணக்கில் விடுமுறை எடுத்து பிரச்சாரம் செய்தார்.
1995 ஆம் ஆண்டு
போக்குவரத்தில் ஓட்டுநராக இணைந்த பிறகு 31 ஆண்டுகள் பணி
செய்து 6க்கும் மேற்பட்ட முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏழு
முறைக்கு மேற்பட்ட இடமாற்றம் செய்யப்பட்டார். ஒவ்வொரு இடம்மாற்றம் நடக்கிறபோது
அவர் செல்லக்கூடிய இடத்தில் இயக்கம் இல்லையென்றால் உருவாகும்இ இருந்தால் வலுப்பெறும்.
போக்குவரத்து அரங்கப் போராட்டத்தின் போது சென்னை மத்திய சிறையில் 17 நாட்கள்
தொழிலாளர்களுடன் அடைக்கப்பட்டார். சிறையில்
தொழிலாளர் மத்தியில் உற்சாகமாக இயங்கினார்.
போக்குவரத்து துறையில் சேர்ந்த
பிறகு வி.பி,சிந்தன் பெயரில் கலைக்குழு
ஆரம்பித்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகவும் தொடர்ந்து மாநிலம்
முழுவதும் பிரச்சாரங்களை நடத்தினார். விடுமுறைகள் எடுத்து இந்தப் பணியினை செய்து
கொண்டு இருந்தார்.
சென்னை வடபழனி பத்மராம் திருமண
மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநில மாநாடு
நடைபெற்ற பொழுது உணவுக் குழுவிற்கு பொறுப்பாக இருந்து விதவிதமான கிராமத்து உணவுகளை
அறிமுகப்படுத்தினார். அசோகன், சைதேஜே இருவரும் இணைந்து பண
ஓலையில் கூழ் குடிப்பது, கருவாடு
தொக்கு வைத்துக் கொடுப்பது, மாட்டுக்கறி சமையல் என்று பல
வகைகளில் இந்த மாநாடு மரபார்ந்த மக்கள் உணவை வழங்கியதில் இவர்களின் பங்கு
முக்கியமானது. ஆனந்த் டெல்டும்படே அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பொழுது மகாராஷ்டிராவில் நாங்கள் பொது
நிகழ்வில் மாட்டுக்கறி வழங்குவது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று என்று
தெரிவித்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் என்று பெயர்
மாற்றப்பட்டது. தோழர் அசோகன் தமுஎகச வின் மாவட்ட நிர்வாகியாக இருந்து பல ஆண்டுகள்
செயல்பட்டவர். இப்பொழுதும் இருக்கிறார்.
போக்குவரத்து அரங்கம், கலைக்குழு, தமுஎகச , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல
தளங்களில் பணியாற்றினாலும் தனது சொந்த ஊரான கூழமந்தல்
பகுதியில் நண்பர்கள் அனைவரும் இணைந்து திருவள்ளுவர் வளர் தமிழ் மன்றம்
அமைத்து அந்தப் பகுதியில் மக்கள் மேம்பாட்டிற்கும் அறிவுத்துறை மேம்பாட்டிற்கும்
தொடர்ந்து பணியாற்றுவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். வருடம் தோறும்
நிகழ்வுகளை நடத்துவார்கள், 15,000 மேற்பட்ட
புத்தகங்களை கொண்ட நூலகத்தை நடத்தி வருகிறார்கள். இந்த பணியில் அசோகனின் பங்கு
முக்கியமானது மட்டுமல்ல இன்றும் தொடர்கிறது.
தோழர் அசோகன் அவரது இணையர்
வழக்கறிஞர் காரல்மொழி, மகள் ஜானகி, மகன் மணிபாரதி அனைவருமே இயக்கத்திலும், போராட்ட களத்திலும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள்.
குடும்பத்தை ஜனநாயகரீதியில் நடத்துவதில் கவனம் செலுத்தக்கூடியவர்.
தோழர்.அசோகனிடம் இருக்கக்கூடிய
முக்கிய பண்புகளில் ஒன்று இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் எது
பொருந்தவில்லையோ அதை கேள்விக்குள்ளா க்குவதில் தயக்கம் இன்றி
செய்வார். அதனால் எந்த இழப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்வார்.
அவரது ஓய்வு கால பணிகள் மேலும் உழைப்பாளி
வர்க்கத்தின் உயர்வுக்காக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது. காரணம்
களத்தையும் தோழர்களையும் என்றுமே துணையாக கொண்டு செயல்படுவதின் வெளிப்பாடு இதை
உறுதிப்படுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக