Pages

செவ்வாய், மார்ச் 11, 2025

10.மதமும் மாற்றுச் சிந்தனைகளும்



மோஹித்யிசம்: கன்பியூசியத்திற்கு முதல் சவால்

மோஹித்யிசம் என்ற தத்துவ போக்கு சீனாவில் மிகவும் பிரபலமான தத்துவமாகும். மோஹி என்பவர் இந்த தத்துவத்தின் தலை மகனாக இருந்தார். கன்பூசியஸ் காலத்திற்கும் மென்சியஸ் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது பொதுக்காலத்திற்கு முன்பு (கிமு) 470 முதல் (கிமு) 391 வரை வாழ்ந்தவர். 79 வயது வரை வாழ்ந்துள்ளார். கன்பூசிய அறிஞர் மென்சியஸ் மோஹித்யிசம் மற்றும் யாங் ஜூ தத்துவமான ஹெடோனிஸம் (இன்பியல்) தத்துவத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். கன்பியூஸியம் மீது முதல் முதலான தத்துவ ரீதியிலான தாக்குதலை தொடுத்த பெருமை  மோஹியைச் சாரும். சீனாவின் முதல் தத்துவ ஞானி என்ற பட்டத்திற்கு தகுதியானவர் கன்பியூசியஸ் அல்லர்; மோஹிதான் என்று வலுவான வாதத்தை வரலாறு முன்வைக்கிறது. . மோஹியின் சிந்தனை பள்ளிகள் அதிகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பள்ளிகளாகவும் இருந்தது.

பொதுக்காலத்திற்கு முன்பு(கிமு) 213 இல் கின் வம்ச பேரரசர் ஷி  ஹூ வாங்டி ஆட்சிக்கு வந்த பொழுது சட்டவாதம் என்ற கோட்பாடு கடைபிடிக்கப்பட்டது. சட்ட வாதத்தை பற்றிய புத்தகங்களை தவிர 100 சிந்தனை பள்ளிகளில் இருந்து அனைத்து புத்தகங்களையும் எரிக்க உத்தரவிட்டார். புத்தகங்களை எரித்தலும், அறிஞர்களை புதைத்தலும் இக்காலத்தில் நடந்தது. இதில் அதிகமான அளவு மோஹியின் புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மென்சியசும் மற்றவர்கள் மோஹியை எதிர்த்து  எழுதிய புத்தகங்களில் இருந்துதான்  மோஹியின் தத்துவங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இவரின்  ஒரு பகுதி புத்தகங்கள் மன்னனிடமிருந்து  மக்களால் மறைக்கப்பட்டது. இவருடைய தத்துவங்களை இதன் முலம் அறிந்து கொள்ள முடிகிறது

மோஹி கைவினைக் கலைஞர். சாங் மாநிலத்தில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். நீதிமன்றங்களில் அதிகாரிகளாக பணியாற்ற விரும்புவோருக்கு ஒரு பள்ளியை நடத்தி உள்ளார். கைவினைப் பொருட்களை உருவாக்குவதில் திறமையானவர். கோட்டை கட்டுவதில் வல்லவர் என்பதால் பல ஆட்சியாளர்கள் இவரை அழைத்து ஆலோசனை நடத்தினர். கன்பியூசியம் கொண்டாட்டங்களுக்கும், சடங்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இவை சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தையும், உற்பத்தி திறனையும் கடுமையாக பாதிக்கிறது என்றும், கன்பியூசியத்தை எதிர்த்தார். இவர் தனது வாழ்நாளிலேயே அதிக சீடர்களைக் கொண்டிருந்தார். இவருடைய ஆதரவாளர்கள் பெரும்பாலும் கைவினை கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களாக இருந்தனர். இவர்கள், மோஹியின் தத்துவம் மற்றும் எழுத்துக்களை படிப்பதற்கு தொழில்நுட்ப அடிப்படையில் ஒழுங்காக அமைத்து கொடுத்தனர்.

தங்களது பெற்றோர்களிடமும், குடும்பத்தினரிடமும் அதிக விசுவாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கன்பூசியஸ் கூறியதற்கு மாறாக குடும்பத்தில் மட்டும் இல்லை உலகத்தில் உள்ள எல்லா மக்களிடத்திலும் ஒரே மாதிரியான விசுவாசம் வைக்க வேண்டும் என்று மோஹி வலியுறுத்தினார். ஒரு மனிதன் பட்டினியாக இருந்தால் அவனுக்கு சோறு போடு; அவன் குளிரோடு அவஸ்தைபட்டால் போர்வையை கொடு; நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை செய்; செத்துப் போனால் குழி தோண்டி புதைத்து விடு. இதுதான் அவரின் உபதேசம். சடங்குகளில் காலத்தையும் பணத்தையும் செலவழிப்பதை கடுமையாக கண்டித்தார். ஒரு அரசன் பணத்தை வீணடித்து மக்களை ஏமாற்றி சடங்கு நடத்துவதைவிட மக்களை கொன்று விடுவதே நல்லது என்று அரசனின் ஊதாரி தனத்தை கடுமையாக சாடினார். இவர் ஒரு நடைமுறைவாதியாக இருந்தார். யுத்தத்தை கடுமையாக எதிர்த்தார். பேரழிவை ஏற்படுத்துகிற ஆயுதங்கள் சுக்கு நூறாகி விடுகிறது. குதிரைகள் மரணமடைகின்றன. கொலைகளின் அலையால் படை முழுவதும் நாசமாகிறது. லாபம் நஷ்டம் என்ன என்று தெரியாமலேயே யுத்தம் முடிந்து விடுகிறது. இந்த பேரழிவு யுத்தம் மக்களுக்கு எதிரானது என்று முழங்கினார். பிற்காலத்திற்கு சீனாவிற்கு வந்த கிறிஸ்தவ மத போதகர்கள் . மோஹியின் தத்துவத்தால் அதிகம் ஈர்க்கப்பட்டார்கள்.

மோஹியும் அவரது சீடர்களும்தான் சீனாவில் தத்துவ தர்க்கவியலை தொடங்கினார்கள். பண்டைய கிரேக்கத்தில் சாக்ரடீசை போலவே புற உலகில் உள்ள தார்மீக நிலைகளுக்கான முறைகளில் தேடலும், வெளிப்படையான கருத்துக்களை தெரிவிப்பதும், இறுக்கமாக பகுத்தறிவு வாதங்களை வழங்குவதிலும் ஈடுபட்ட முதல் பாரம்பரியம் சீனாவில் மோஹி பள்ளியின் பாரம்பரியமே. அதிநவீன சொற்பொருட்கள் கோட்பாடு, அறிவியல் விளைவு வாத நெறிமுறைகள், ஒப்புமையுடன் கூடிய பகுத்தறிவு கோட்பாடு ஆகியவற்றை உருவாக்கி, வடிவியல், இயக்கவியல், ஒளிஇயல், பொருளாதாரம் போன்ற துறைகளில் விசாரணைகளை மேற்கொண்டார்கள். அதாவது தர்க்கவியல் மூலமாக தத்துவத்தை முன்னெடுத்த முதன்மையானவர்கள்.

சீனாவில் தாவோயிசம் கன்பூசியத்திலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும் அதைவிட புற உலகு எதார்த்தத்தோடு அதிகமான முறைகளில் மோஹியிசம் சீன தத்துவ உலகத்திற்கு பெரும்பங்களித்து உள்ளது.

சட்டவாதம்: நடைமுறைக்கான சித்தாந்தம்.

சட்ட வாதம் என்பது பண்டைய சீன தத்துவ பள்ளிகளில் ஒன்று. இது சட்டங்கள் மூலமாக சமூகத்தை நிர்வகிப்பதையும், சீர்படுத்தவும், கடுமையான நிர்வாகம், பொருளாதார ஒழுங்குமுறை மூலம் அரசின் செழிப்பை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது.

வலுவான ராணுவப் படைகள், செழிப்பான பொருளாதாரம், நல்ல ஒழுக்கமும், நடத்டிதையும் கொண்ட மக்கள் தொகை ஆகியவற்றின் மூலமாகவே ஒரு தேசத்தை உருவாக்க முடியும் என்பது சட்டவாத தத்துவத்தின் அடிப்படையாகும். சமத்துவம், சீர்திருத்தம் போன்றவைகளை ஆதரிக்கக் கூடிய அதே நேரத்தில் கடுமையான சட்ட அமலாக்கும் போன்ற கொள்கைகளை முன்னிறுத்துகிறது. சட்ட வாத சித்தாந்தம் ஒரு விரிவான நடைமுறை அமைப்பை செயல்படுத்த முயற்சிக்கிறது. இதில் தனி நபர்கள் சட்டத்தை பின்பற்றுவதும், சட்ட சமூக வளர்வதற்கு பங்களிப்பு செய்வதற்கும் ஊக்கங்களை உருவாக்குகிறது. சட்டத்தை மீறுவோர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அவர்கள் சமூகத்தில் எந்த பொறுப்பில் இருந்தாலும் ( மன்னனைத் தவிர)  தண்டனையிலிருந்து தப்பிக்க கூடாது என்று வலியுறுத்துகிறது.

மனித நடத்தையின் எதார்த்தங்களுக்கு ஏற்ப அரசியல் நிறுவனங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் இயல்பாகவே சுயநலவாதிகள் குறுகிய பார்வை கொண்டவர்கள் என்றும் சட்டவாதிகள் நம்பினார்கள். கன்பியூஸியம், மென்சியம், தாவோயிசம் போன்ற தத்துவங்கள் மக்கள் தங்கள் ஆட்சியாளரின் நல்லொழுக்கத்தை அங்கீகரிப்பதன் மூலமாக சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும் என்று நம்பினார்கள், ஆனால் சட்டவாதம் வலுவான அரசு கட்டுப்பாடு, அதிகாரத்திற்கு முழுமையாக கீழ்ப்படிதல் ஆகியவற்றின் மூலமாகத்தான் நாடு வளரும் என்று சட்டவாதிகள் நம்பினார்கள். சட்டத்தை கடைபிடிக்காதவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் சட்டத்தை கடைபிடிப்பவர்களுக்கு வெகுமதிகளும் வழங்குவதன் மூலமாக அரசாங்கத்தை சிறப்பாக நடத்த முடியும் என்று நம்பினார்கள்.

கன்பியூஸியம், தாவோயிசம், மோஹிசம் ஆகியவை போல் அல்லாமல் சட்ட வாதத்திற்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனர்களின் பெயர்களை  கூற முடியாது. வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் (பொதுக்காலத்திற்கு முன்பு (கிமு)  770-403), போரிடும் நாடுகளின் காலங்களில் (பொதுக்காலத்திற்கு முன்பு (கிமு)403-221) சட்ட வாதிகள் தங்களது பள்ளிகளை மேம்படுத்தினார்கள். பல்வேறு விதமான அரசியல் கோட்பாட்டாளர்களும், சீர்திருத்தவாதிகளும் பல பிரதேசங்களில் சட்டக் கருத்துக்களை ஒழுங்கமைத்து செயல்படுத்தி சட்ட வாதத்தை வலுப்படுத்தினார்கள். ஹான் பைசி (கிமு 280-233) லீ சி (கிமு 284-208) ஆகிய இருவரும் சட்ட வாதத்தின் புகழ்பெற்ற தத்துவ ஞானிகள். இவர்கள் மற்ற தத்துவ பள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள்.

சட்டவாதிகளின் முறைகள், கொள்கைகள், வெற்றிகள், கோட்பாடுகள், ஆவணங்கள், அனைத்தும் அவர்கள் எழுதிய கட்டுரைகளில் பதிவு செய்யப்பட்டன. இந்த பதிவுகள் சீன கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான தத்துவ பள்ளியாக பாதுகாக்கப்பட்டு வரலாற்றில் சில இறையாண்மவாதிகளால் அரசியல் சித்தாந்தமாக கடைபிடிக்கப்பட்டது. ஹான் பைசி, லீ சி ஆகிய இருவரின் கோட்பாட்டின் ஆதரவுடன் கின் வம்ச அரசர் சீனாவின் ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தார். (கிமு 221-207). இந்த மன்னரின் பெயர் கின் ஷி ஹுவாங் ஆகும். இந்த கின் வம்சத்தின் மேலாதிக்க தத்துவமாக சட்டவாதம் உருவானது. அமைச்சர்கள் அனைவரும் சிறந்த சட்ட வல்லுநர்களாகவும், நாடு தழுவிய அளவில் செயல்படுத்தக்கூடிய சட்ட சித்தாந்தங்களை மட்டுமே அறிஜீவிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. சட்டவாதம் இவரின் ஆட்சி காலத்தில் கொடூரமாக அமுல்படுத்தப்பட்டதால் அரசுக்கு எதிரான கழகங்கள் வெடித்து கிளம்பியது. இதன் விளைவாக ஹான் வம்சம் அதிகாரத்திற்கு (கிமு 202 முதல் கிபி -220) வந்தது. இவர்கள் சட்ட வாதத்தை புறம்தள்ளி கன்பியூசியனிச சித்தாந்தத்தை அரச சித்தாந்தமாக மாற்றினார்கள். ஆனால் சட்ட வாதத்தின் ஒரு வடிவம் எப்போதும் கன்பூசியனிசத்துடன் இணைந்து துணை நிர்வாக கோட்பாடாக பயன்படுத்தப்பட்டது.

இவை தவிர யாங் சூ கடைபிடித்த ஹெடோயிசம் (யாங்கிசம்), அதாவது இன்பவியல் தத்துவம் போன்ற ஏராளமான பள்ளிகள், தத்துவ மரபுகள் தோன்றி விவாதக் களத்தில் இருந்தன. சீனாவின் மதம் மற்றும் தத்துவ மரபுகளில் அடுத்த பாய்ச்சலாக பௌத்தத்தின் வருகை அமைந்தது.

சீனத்தில் பௌத்தம் - அறிவுத்தேடலின் விளைவு

கிறிஸ்துவ மதம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பே பௌத்தம் ஆசியாவின் முக்கிய நாடுகள் அனைத்திலும் பரவி விட்டது. பொதுக்காலத்தின் முதலாம் நூற்றாண்டில் பட்டுப்பாதைகள் எனப்படும் வர்த்தக பாதைகள் வழியாக மத்திய ஆசியாவுக்கும் சீனாவுக்குமான வணிக உறவுகள் மிக வேகமாக வளர்ந்தது. இந்தப் பாதையின் வழியாகத்தான் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பௌத்தம் பரவ ஆரம்பித்தது. சீனாவில் ஹான் வம்ச காலத்தில் மிங் என்ற பேரரசர் வணிகர்கள் மூலமாக புத்தரைப் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்து அந்த கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டார்.

இந்தியாவிலிருந்து தர்மரக்சர், காசியப்ப மாதங்கர் போன்ற பிரபலமான பௌத்த ஞானிகளை சீனாவிற்கு வரவழைத்து பௌத்த நூல்களை சீன மொழியில் மொழிபெயர்க்கச் செய்தார். இவர்கள் மொழிபெயர்த்தவைதான் சீனத்தில் உருவான முதல் பௌத்த நூல்களாகும். இந்தியாவில் குஷானர்கள் ஆட்சி செய்த பொழுது மத்திய ஆசியாவிலும் அவருடைய ஆட்சியின் நீட்சி இருந்தது. எனவே சீனாவுடனான தொடர்பு நீடித்தது. இவர்கள் காலத்தில் தான் லோக சீமா என்ற பௌத்த ஞானி, மூலமாக பௌத்தத்தின் மகாயான பிரிவு சீனாவிற்கு அறிமுகமானது. பொதுக்காலம் இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் பௌத்தம் மிக வேகமாக பரவியது. அக்காலத்தில் சீனா சிதறுண்டு இருந்தது. இவற்றை ஒருங்கிணைக்க கூடிய ஒரு பணியில் பௌத்தமும் முக்கிய பங்காற்றியது. குஷான பேரரசு காலத்தில் சீனாவுடன் இருந்த தொடர்பின் காரணமாக பல பௌத்த அறிஞர்கள் சீனாவுக்கு சென்றனர். பொதுக்காலத்தின் நான்காம் நூற்றாண்டில் குமார ஜீவர் என்ற பௌத்த ஞானி மூலம் பல முக்கிய பௌத்த நூல்கள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

பொதுக்காலத்தின் மூன்றாம் நூற்றாண்டில் ஹான் பேரரசு சிதைந்த பிறகு சீனாவில் பெருங்குழப்பம் நீடித்த பொழுது கன்பியூஸியம், தாவோயிசம் இரண்டும் பலவீனம் அடைந்தது. இக்காலத்தில் சீனாவில் பௌத்தத்தின் பரவல் தீவிரம் அடைந்தது. இந்த தீவிரத்தின் விளைவாக சீனாவில் இருந்து பல அறிஞர்கள் இந்தியாவிற்கு வந்து பௌத்தத்தை அறிந்து சென்றதுடன் பல நூல்களையும் மொழி பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பாஹியான் (399-412), சுவான்சாங்  (629–645), ஐ சிங் ( 671–695), ஹைச்சோ  (723–727),  மர்பா லோட்சாவா (11 ஆம் நூற்றாண்டு). இவர், இந்தியாவிற்கு பல பயணங்களை மேற்கொண்ட திபெத்திய மொழிபெயர்ப்பாளர்.

இவர்களில் குறிப்பிட்ட சொல்ல வேண்டியவர் யுவான் சுவாங் ஆவார். 17 ஆண்டுகள் இந்தியாவின் பெரும்பகுதிகளுக்கு பயணம் செய்தவர். இவர் இந்தியாவிற்கு வந்த பொழுது காஞ்சியில் பௌத்தம் செழித்து இருந்தது. ஐந்தாம் நூற்றாண்டிலேயே போதிதர்மர் சீனாவிற்கு சென்று மகாயானத்தின் ஒரு பிரிவான ஷான் பௌத்தத்தை நிறுவினார். அந்த அளவு புகழ் படைத்த காஞ்சிக்கு யுவான் சுவாங் விஜயம் செய்தார். இவர் கொலம்பஸ், வாஸ்கோடகாமா, கேப்டன் குக்  போன்று நாடு பிடிப்பதற்கான பயணத்தை மேற்கொள்ளாமல், அறிவையும் ஞானத்தையும் தேடி பல்லாயிரம் மைல்கள் தனியே பயணம் செய்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். கழுதைகள், ஒட்டகங்கள், மட்டக்குதிரைகள், கால்நடையாக காடு, மேடு, பாலைவனம் என்று 20000 மைல்கள் கடந்து வந்தார்.

நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்கி படித்து மகாயான பௌத்த சாரங்களை முழுவதும் அறிந்தார். 17 ஆண்டுகளுக்கு பிறகு இவர் திரும்பி செல்கிற பொழுது இவருடன் 20 குதிரைகளில் 657 தொகுதிகளாகப்பட்ட 520 பௌத்த பிரதிகள் ஏற்றிச்சொல்லப்பட்டன. அவற்றில் 224 தொகுதிகள் பௌத்த சூத்திரங்கள் 192 தொகுதிகள் தர்க்க சாஸ்திரங்கள். சீனாவில் இந்த சேகரிப்புகள் மூலம் அறிவாலயம் ஒன்றை துவக்கி மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.  யுவான் சுவாங் மட்டும் தனிநபராக 74 புத்தகங்களின் 1335 அத்தியாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவரின் பயண குறிப்புகள் மூலமாக இந்தியாவின் சாதிய முறைகளையும் அறிந்து கொள்ள முடியும். பௌத்தம் சீனத்தில் பரவியதற்கு இரு பக்கம் இருந்த அறிவைத் தேடிய யாத்திரிகர்கள் பங்கு அடிப்படையானது.

சீனாவில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் நூற்றாண்டில் இருந்து சீன கலாச்சாரம் மற்றும் வரலாறு தத்துவம் ஆகியவற்றில் பௌத்தம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செலுத்தி உள்ளது. பௌத்தம் தனியாக வளரவில்லை, கன்பியூஸியம், தாவோயிசம் போன்ற சீன மரபுகளுடன் கலந்து சீனா, பௌத்தத்தின் தனித்துவமான வடிவமாக வளர்ச்சி பெற்றது. பொதுக்காலத்தின் எட்டாம் நூற்றாண்டுகளில் பெரும் செல்வத்தில் திளைத்துக் கொண்டிருந்த பௌத்த மடாலயங்கள் மீது மன்னர்கள் தாக்குதல் நடத்தி தடைகளை உருவாக்கினர். காலப்போக்கில் பௌத்தம் செல்வாக்கு இழந்தது. அதே நேரத்தில் பொதுக்காலம் 1280ல் மங்கோலிய யுவான் வம்சம் ஆட்சிக்கு வந்த பிறகு திபெத்திய மரபான லாமாயிஸ பௌத்தம் அரச மதமாக மாறிய பொழுது மீண்டும் வளரத் தொடங்கியது. தற்போது சீனாவில் ஐந்து விதமான பௌத்த சிந்தனை பள்ளிகள் உள்ளன.

கிறிஸ்தவம், இஸ்லாம் மதம் போன்ற பெரும்தெய்வ வழிபாடுகள் சீன மரபுகளில் இல்லை. மத அமைப்புகளும், தேவதூதர்களின் பிரதிநிதிகளாக கட்டமைக்கப் படவில்லை. சமூக மரபுகளாக எழுந்து வந்த நெறிமுறைகளுக்கு பிற்காலத்தில் கோவில்களும் உருவாகின. கன்பியூசியஸ், லாவோட்சு, புத்தர் யாரும் கடவுளைப் பற்றி பேசவில்லை. ஆனால் அவர்களின் கருத்துக்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் உருவாகின. இருபதாம் நூற்றாண்டுகள் மத்தியகாலம் வரை இந்த மூன்று நெறிமுறைகளும் சீன மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்தது. புரட்சிக்கு பிந்திய காலத்தில் நிலைமை தலைகீழாக மாறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

14. மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் என்ன?

சீன வரலாற்றில் மாற்றங்களின் மகுடமாக 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த புதிய ஜனநாயக புரட்சி அமைந்தது. புரட்சி, வெறும் வ...