Pages

திங்கள், மார்ச் 03, 2025

9.கன்பியூசிய விண்ணக இணைப்பும் தாவோயிச தத்துவமும்

 





மென்சியஸ்: கன்பியூசியத்தின் விண்ணக இணைப் பாளர்.

கன்பூசியஸ் மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகு பொதுக்காலத்திற்கு முன்பு (கிமு) 371 ல் மென்சியஸ் பிறந்தார். கன்பூசியஸ்சிற்கும் மென்சியசுக்கு இளமைக்கால ஒற்றுமைகள் சில உள்ளது. இருவரும் அடுத்தடுத்த ஊர்களை சேர்ந்தவர்கள். இவரும் இளமைக் காலத்தில் தன் தந்தையை இழந்தார். தன் தாயுடன் வறுமையில் வாடினார். இருந்தாலும் தனது மகனுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்று தாயார் விரும்பி முயற்சிகளை மேற்கொண்டார். மென்சியஸ், கன்பூசியசின் பேரன் ஜிசி யின் மாணவரிடம் கல்வி பயின்றார் என்ற வரலாற்றுப் பதிவு உள்ளது. எனவே இவர் கன்பூசியஸ் சித்தாந்தங்களை மேலும் எளிமைப்படுத்தி, விரிவுபடுத்தினார் என்று கூறலாம். சில காலங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். மென்சியசின் எழுத்துக்கள் ஏழு பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியும் தனித்தனி தலைப்புகளை கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. இவர் சோவ் வம்ச ஆட்சி காலத்தில் இரண்டாம் பாதியில் வாழ்ந்தார். இக்காலம் பெரிய சமூக அறிவுசார் எழுச்சியின் காலமாகும். மென்சியஸ் இரண்டாவது ஞானி என்று (கன்பியூசியஸ் முதல் ஞானி) மக்களால் அழைக்கப்பட்டார். இவர் கன்பூசியஸ் அறிஞர் என்றே அழைக்கப்படுகிறார்

மென்சியசை ஒரு பொது அறிவுஜீவி என்று அழைப்பார்கள். வெளியுறவுக் கொள்கை முதல் பொதுப் பணிகளின் முறைகள் வரை அனைத்திலும் அவர் ஆலோசனை வழங்கினார் என்று வரலாறு பதிவு செய்துள்ளது. வரிக்கொள்கை பற்றிய அவரது விரிவான எழுத்துக்கள் அவரின் பொது அறிவை வெளிப்படுத்துகிறது. மென்சியஸ் மிகவும் செல்வாக்கு மிக்க ஒருவர். நான்கு நெறிமுறைகளை அவர் அழுத்தமாக போதித்தார். இது கருணை, நீதி, உரிமை, ஞானம் என்பதாகும். ஒவ்வொன்றும் ஒரு சிறப்பியல்புக்கு உட்பட்டது என்று தெரிவித்தார். கருணை என்பது இரக்க உணர்வு, நீதி என்பது வெறுப்பு உணர்வு, உரிமை என்பது மரியாதை உணர்வு, ஞானம் என்பது ஒப்புதல் மற்றும் மறுப்பு உணர்வு என்று வகைப்படுத்தினார்.

தியான்மிங்: அரசியல் கருத்தாக்கம்

சோவ் வம்ச வீழ்ச்சியை தடுத்து நிறுத்த அதன் நிறுவனர்கள் இந்த ஆட்சி சொர்க்கத்தால், அல்லது கடவுளால் (தியான்) தீர்ப்பளிக்கப்பட்ட (மிங்) ஆட்சி என்று முயற்சி செய்தார்கள். தியான்மிங் என்றால் விண்ணக தீர்ப்பு என்று அர்த்தம். கன்பூசியஸ் தியன் குறித்து பேசி இருக்கிறார். ஆனால் அவற்றை ஒரு அரசியல் கருத்தாக மாற்றியவர் மென்சியஸ். இதற்கு இயற்கை அல்லது விதி என்றும் பொருள் கொள்கிறார்கள். பேரரசு, பிரதேச அரசு, உள்ளூர் அரசு இவை அனைத்தும் அதிகாரம் படைத்த அரசுகளாக நீடிப்பதற்கு தார்மீக காரணமாக இருப்பது தியான் வழி நடப்பது தான் என்று போதிக்கப்பட்டது. எந்த ஒரு அரசும் தனது கடமைகளில் இருந்து தவறினால் அது தியான்மிங் அதாவது விண்ணகத்தின் ஆதரவை இழந்து விடும். தியான்மிங் வாய் திறந்து பேசுவதில்லை. தனது செயல்பாடுகள் மூலமாக நிலைமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் என்று மென்சியஸ் போதித்தார்.          

ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பற்றி மென்சியஸ் இன்னும் விரிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். அவரது கூற்றுப்படி ஆட்சியாளர்கள் மக்களின் நலனை இரண்டு விஷயங்களில் வழங்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதார நிலைமைகளையும், அவர்களின் மேம்பாட்டுக்காக கல்வி மற்றும் தார்மீக வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும் என்றார். பொது மக்களுக்கான பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய திட்டவட்டமான ஆலோசனைகளை வகுத்தளித்தார். மிகக் குறைவான வரிகள், சுதந்திரமான வர்த்தகம், இயற்கை வளங்களை பாதுகாத்தல், வயதானவர்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள், செல்வத்தை சமமாக பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றையும் ஆதரித்தார். மக்களுக்கு நிலையான வாழ்வாதாரம் இருக்கும்போது மட்டுமே அவர்களுக்கு நிலையான இதயம் இருக்கும் என்பது அவரது அடிப்படை நம்பிக்கையாகும்.

அரசர்கள் சூழ்ச்சிகள் மற்றும் பலவந்தம் ஆகியவற்றை கைவிட்டு தார்மீக சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். விண்ணகத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மக்களுக்கான ஆட்சியை செய்ய வேண்டும். ஒரு தேசத்தில் மக்கள் நலன் முக்கியமான உறுப்பாகவும், நிலம் மற்றும் தானியங்கள் அடுத்ததாகவும் ஆட்சி அதிகாரம் குறைந்த அளவில் இருக்க வேண்டும் என்றும் அசாதாரண தைரியத்துடனும் அறிவித்தார்.

கலகங்களும் ரகசியசங்கங்களும்

சீன வரலாற்றில் கலகங்கள் மூலமாக எண்ணற்ற ஆட்சிகள் வீழ்ச்சி அடைந்தன. தூக்கி எறியப்பட்டன. சாங், சின், ஹான், ஸ்வய், யுவான் என பல பேரரசுகள் இதில் அடங்கும். இன்னும் பல பேரரசுகள் கலகங்களால் பலவீனப்பட்டன. கலகம் என்பது சீன கலாச்சாரத்தின் எதிர்ப்புணர்வின் வடிவமாக இருந்து வருகிறது. ரகசிய சங்கங்கள் இதற்காக செயல்பட்டு உள்ளன. தனித்தனி குழுக்கள் வழிபாட்டு அடையாளங்களுடன் பேரரசுக்கு எதிராக அணி திரண்டுள்ளது.

கலகக்காரர்களை ஒழிப்பதற்கு பேரரசுகள் கொடூரமான தண்டனைகளை அடக்குமுறைகளை கையாண்டார்கள். ஒருவர் கலகக்காரன் என்று தெரிந்தால் அவன் தலையை வெட்டுவது வரலாற்றில் சாதாரணமான நடவடிக்கை. சீனாவில் அதிகார வர்க்கம் இதையெல்லாம் கடந்து கலகக்காரனின் தலையோடு மட்டும் நிற்காமல், அந்த குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களின் தலையையும் வெட்டுவார்கள். கலகம் செய்பவனின் அனைத்து உறவினர்களும் சிரச்சேதம் செய்யப்படுவார்கள். அவ்வாறு கொல்லப்பட்ட ஆண்கள் தவிர அனைத்து பெண்களும் அரசின் அடிமைகளாக ஆக்கப்படுவார்கள். இது போன்ற படு பயங்கரமான தண்டனைகள் அரங்கேறிய பொழுதும் கலகங்களும், ரகசிய சங்கங்களும் ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் உருவாகிக் கொண்டே இருந்தது. இவ்வாறு ஆட்சிகள் வீழ்ச்சியடைவதற்கும், கலகங்கள் உருவாவதற்கும்  காரணம் விண்ணகத்தின் தீர்ப்பை கடைபிடிக்காததுதான் என்பதை மென்சியஸ் மீண்டும் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தினார். இது போன்ற கலகங்கள் ரகசிய சங்கங்கள் ஆகியவற்றுக்கான அரசியல் காரணத்தையும், தத்துவார்த்த பின் புலத்தையும் மென்சியஸ் எடுத்துரைத்தார்.

மென்சியஸ் கன்பியூசத்தை வளர்த்தது மட்டுமல்ல கன்பியூசியத்திற்கு எதிராக மோயித் மற்றும் யங் சூ என்ற ஞானிகளிடமிருந்து கோட்பாடு ரீதியான தாக்குதல் உருவானது. இவற்றில் இருந்தும் கன்பியூசியத்தை பாதுகாப்பதற்கு மென்சியஸ் முயற்சி செய்தார்.

கன்பியூசியஸ், மென்சியஸ் ஆகிய இருவரின் கோட்பாடுகளை ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான அளவு பயன்படுத்தி கொண்டார்கள். மக்களை அதிகாரத்திற்கு அடிபணிய வைக்க வலியுறுத்தும் கருத்துக்களை மட்டுமே ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். மன்னர்கள் நன்னெறிகள் மூலம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை புறக்கணித்து விடுவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு அறம் அடிப்படையானது என்று மென்சியசின் போதனைகள் புறம் தள்ளப்பட்டன. விண்ணகத்தின் தீர்ப்பை மென்சியஸ் அதிகமாகவே வலியுறுத்திப் பேசினார். இதன் விளைவாக அடுத்தடுத்து வந்த ஆட்சி மாற்றங்களை மக்கள் குறிப்பிடுகிற பொழுது தியான்மிங் அதாவது விண்ணகத்தின் தீர்ப்பை இழந்து விட்டார்கள் என்றே கூறினார்கள்.

கன்பூசியஸ் கோட்பாட்டையும் மென்சியஸ் கோட்பாட்டையும் ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக வளைப்பது போல் தாவோயிசத்தையும் மோயிசத்தையும் அவ்வளவு எளிதாக வளைக்க முடியவில்லை. அவை ஆட்சியாளர்களுக்கு சவால் விட்டது.

தாவோயிசம் பரம்பொருளை நோக்கி

கன்பூசியமும், மென்சியமும் அரசு அதிகாரம், குடும்ப அதிகாரம், சடங்குகள் ஆகியவற்றை முன்வைத்து சித்தாந்தங்களை போதித்தது. இதற்கு மாற்றாக, காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதிய நெறிமுறைகள் தோன்றின. அவற்றில் குறிப்பிடத்தக்கது தாவோயிசம், மோஹித்யிசம், ஹெடோனிசம், சட்டவாதம் போன்றவைகளாகும்.

லாவோ-ட்சு ஒரு சீன தத்துவஞானி ஆவார். அவர் தாவோயிசத்தின் தத்துவ அமைப்பை நிறுவியவர்.  இது சீன தத்துவ-மத இலக்கியத்தின் ஒரு உன்னதமானதாகக் கருதப்படுகிறது. இன்று சீனாவில் அங்கீகரிக்கப்பட்ட மதங்களில் இதுவும் ஒன்றாகும். இவர் கன்பியூசியத்திற்கு முற்பட்டவர் அல்லது சமகாலத்தவர் என்றும், பொதுக்காலத்திற்கு முன்பு (கி.மு) 604ல் சீனாவின் தென்பகுதியில் உள்ள ‘சூ’  என்ற கிராமத்தில் பிறந்தார்.

அங்குள்ள புத்தக சாலையில் பணியாற்றினார். இதன் மூலம் அவரின் அறிவுக்கும் ஆராய்ச்சி செய்வதற்குமான வாய்ப்பு கிடைத்தது. இக்காலங்களில் இவர் தனது புகழ்பெற்ற தாவோயிசம் என்ற கருத்துக்களை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். கன்பூசியத்திற்கு முன்பாகவே தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதுவரை இருந்த மூதாதையர்களின் வழிபாட்டு முறைகளுக்கு மாறாக மாற்றுத் தத்துவங்களை போதிக்க ஆரம்பித்தார்.

லாவோ-ட்சு எழுதியவற்றை 5000 சீன வரிவடிவ எழுத்துக்களுக்குள் அடக்கி விடலாம். எனினும் வேறு எந்த தத்துவத்திற்கும் இல்லாத அளவு இந்த தாவோயிசம் ஆங்கிலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை கண்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் பல்வேறு முறையில் அர்த்தப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. சீனாவின் தத்துவ வலிமையின் எடுத்துக்காட்டாக தாவோயிசம் அக்காலத்தில் அமைந்திருந்தது.

இவரது தத்துவம் பரம்பொருளை அடைவதற்கான ஒரு மார்க்கமாகவே போதிக்கிறது. பரம்பொருள் என்பது மகத்தானது. அதைக் காண முடியாது. கேட்க முடியாது. அதற்கு பெயரும் இல்லை. அதற்கு உருவமும் இல்லை. ஆனால் எங்கும் வியாபித்து இருக்கிறது. எல்லா பொருட்களும் அதனையே கண்களாகவும் உயிர்களாகவும் கொண்டிருக்கின்றன. எல்லா உயிர்களையும் நேசிக்கிறது. ஆனால் எதையும் தன்னுடையது என்று சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. இந்த உண்மையை அறிந்து கொண்டு அதன்படி எவன் வாழ்க்கை நடத்துகிறானோ அவனுக்கு பகைமை இல்லை. போராட்டம் இல்லை. உலகச் சூழலில் அகப்பட்டுக் கொள்ள மாட்டான் என்று வலியுறுத்துகிறது. கன்பியூசியம் சடங்குகளை அடிப்படையாக மாற்றியது; தாவோயிசம், சடங்குகள் செய்வது மூலமாக கடவுளை அடைய முடியாது என்று பிரச்சாரம் செய்தது.

இன்னும் வேறு வார்த்தைகளில் கூறப்போனால், தாவோயிசம் இயற்கையான உலகளாவிய சக்தியை அங்கீகரிப்பதன் மூலம் செயலற்ற தன்மையில் உள்ளது என்று வலியுறுத்துகிறார். இந்த இயற்கையான சக்தியின் முயற்சி இல்லாமல் நீர் பாய்கிறது. தண்ணீரைப் போலவே முயற்சி இல்லாமல் விரும்பும் இடத்திற்கு செல்கிறது. மேலும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. நல்லொழுக்கம் உள்ளவராக இருக்க ஒருவர் தாவோவை பின்பற்றி செயலற்ற நிலையில் இருக்க வேண்டும். மனிதனால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் ஒருவரை நல்லொழுக்கம் உள்ளவராக மாற்ற முடியாது, நல்ல நடத்தை, உள் அமைதி, மற்றவர்களுடன் பச்சாதாபம் கொள்ள முடியாது. காரணம் அவை இயற்கையுடன் ஒத்துப் போவது இல்லை.

தாவோயிசத்தின்படி எல்லா மனிதர்களும் இயற்கையாகவே நல்லவர்கள். ஆனால் அநீதியான சட்டம், சமூகத்தில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதால் அந்த நல்ல மனிதர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.  லாவோ-ட்சு மற்றும் அவரது சீடர்களும் செயல்படுவதை விட செயலற்று இருப்பதை வலியுறுத்தினார்கள். செயலற்று என்றால் வலிந்து செயல்படாமல் இருப்பதை அதிகம் வலியுறுத்தினார்கள். அதற்காக செயல்படாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. இயற்கை தன் போக்கில் போய்க்கொண்டிருக்கிற பொழுது அதை இடைமறித்து செயல்பட்டால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை வலியுறுத்துகிறது. போர்களின் காலத்தில் செயல்பட்ட 100 பள்ளிகளில் தாவோயிச பள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்தன என்று வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

ஆட்சியிலும், குடும்பத்திலும் கன்பியூசியம் திட்டவட்டமான பல விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் தாவோயிசம் அவ்வாறு அறிவிக்கவில்லை. தாவோயிசம் தத்துவார்த்த தன்மைகளை அதிகம் தாங்கி இருந்தது. அரசர்கள் இயற்கையின் இயல்பான போக்குக்கு எதிரானவர் என்ற முறையில் இவருடைய தத்துவங்கள் இருந்தன. எனவே அரசர்கள், தங்களது அதிகார பசிக்கும், சதி வேலைகளுக்கும் தாவோயிசம் ஒத்து வராது என்று ஒதுக்கி தள்ளினார்கள். ஆனால் மக்களிடம் இருந்த வரவேற்பை புறக்கணிக்க முடியாமல் லாவோ-ட்சுவை கடவுளாக மாற்றி விட்டார்கள். டாங் வம்சம் ஆட்சி காலத்தில் (பொதுக்காலம் கிபி 618-907) தாவோயிசத்தை அரசு தத்துவமாக ஏற்றுக்கொண்டது. லாவோ-ட்சு வை பல தெய்வங்களில் ஒரு தெய்வமாக மாற்றியது. தாவோயிசம் இன்றைய காலகட்டத்தில் ஒரு தத்துவமாகவும், ஒரு மதமாகவும் திகழ்ந்து வருகிறது.

கன்பியூஸியம் மற்றும் மென்சியம் உருவாக்கிய அரசியல், குடும்ப கோட்பாடுகளிலிருந்து தாவோயிசம் முற்றிலும் வேறுபட்ட தத்துவார்த்த தளத்தில் செயல்பட்டது. இதிலிருந்து மேலும் வேறுபட்ட முறையில் மோஹித்யிசம் உருவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

14. மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் என்ன?

சீன வரலாற்றில் மாற்றங்களின் மகுடமாக 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த புதிய ஜனநாயக புரட்சி அமைந்தது. புரட்சி, வெறும் வ...