Pages

வியாழன், பிப்ரவரி 19, 2026

60 இனக்கல்வியும் மத மரபும்


அ.பாக்கியம்

இன்றைய உலகில் கல்வியானது மக்களின் வாழ்வில் ஒரு அத்தியாவசியமான அங்கமாக மாறிவிட்டது. கல்வி ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது. மனிதர்களுக்கு கல்வி வெறுமனே ஒரு ஆன்மீக உரிமைகள் என்ற நிலைமையில் இருந்து, சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு சட்டபூர்வமான உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளைப் பற்றிய உலகளாவிய பிரகடனத்தில் 26 ஆவது பிரிவு கல்வியைப் பற்றி குறிப்பாக சொல்லி இருக்கிறது. கல்வியானது மனித ஆளுமையின் முழுமையான வளர்ச்சிக்கும் மனித உரிமைகளுக்கும் அடிப்படையான சுதந்திரங்களுக்கும் மரியாதையை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்க வேண்டும் என்று கல்வி எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்க எவ்வாறு இருக்க வேண்டுமென எடுத்துச் சொல்லி இருக்கிறது.

ஆனால் இன்றைய உலகில், கல்வி வணிகமயத்தின் உச்சத்தை எட்டியுள்ளது. பணம் இல்லாதவர்கள் சிறந்த கல்வியை பெற முடியாது என்ற நிலைமை உலகை ஆட்சி செய்கிறது. மறுபுறத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கக்கூடிய சிறுபான்மை தேசிய இனங்கள் அல்லது மதச் சிறுபான்மையினர் அல்லது மொழிச் சிறுபான்மையினர் கல்வி தளத்தில் கணிசமான அளவு புறக்கணிக்கப்படுகின்றனர். உலகம் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து துறை வளர்ச்சியால் சுருங்கி வருகிறது. ஆனால் உலக மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்து செல்கிறது. வறுமையில் வாடுபவர்கள் வசதியாக வாழ்பவர்களுக்கு இடையிலான இடைவெளி மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியாக மாறிக் கொண்டிருக்கிறது.

2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகளவில் 73 – 77 கோடி வரையிலான வயது வந்தவர்களுக்கு படிக்கவும் தெரியாது எழுதவும் தெரியாது. மேலும் 200 கோடி மக்களுக்கு ஒரு வாக்கியத்தை முழுமையாக படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள். தற்போது கல்வி பெற முடியாதவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2.2 சதவீதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில்தான் கல்வி அறிவை பெற்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கல்வி பெறுவதற்கான சட்டபூர்வமான உரிமைகளை பெற முடியாத மக்கள் கணிசமான அளவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சீன எழுத்தறிவின் அளவுகோல்….

உலகில் மக்கள் தொகையில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் மிகப்பெரிய நாடாக சீனா விளங்குகிறது . 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைப் போன்று பல காலனித்துவ நாடுகள் சந்தித்த அனைத்து விதமான கொடுமைகளையும் சீனாவும் சந்தித்தது. சீனாவில் அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட்டிருப்பது அசாதாரண சாதனையாகும். இதே காலத்தில் விடுதலை அடைந்த பல நாடுகளில் முதலாளித்துவ கொள்கைகள் கோலோச்சியதால் கல்வி அறிவின் நிலைமைகள் பின்தங்கி இருந்தது. சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்குமான கல்வியை சாத்தியப்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு சீனாவின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி வயது வந்தவர்களுக்கான அதாவது 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் எழுத்தறிவு விகிதம் 97.33 சதவிகிதமாகும். இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் எழுத்தறிவு சதவீதம் 76 சதவிகிதமாகும். சீன நாட்டில் 2.67 சதவிகிதம் எழுத்தறிவு பெற முடியாத நிலைமை நீடிப்பதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருக்கிறது. புரட்சிக்கு முந்திய காலத்திலும், புரட்சி முடிந்த ஆரம்ப கட்டத்திலும் சீனாவில் கட்டாய கல்வி முறை அமலாக்கத்தில் இல்லை. எனவே இக்காலத்தில் பலர் கல்வி கற்பதற்கு செல்லவில்லை. குறிப்பாக பெண்கள் அதிகம் கல்விச்சாலைக்கு செல்லாதவர்களாக இருந்தார்கள். தற்போது சீனாவில் கல்வி அறிவு இல்லாதவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். சீனாவில் கட்டாய கல்வி முறை கொண்டு வந்த பிறகு அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு உட்பட்ட குடிமக்களில் 99 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள். 15 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் மத்தியில் எழுத்தறிவின் விகிதம் 99.9 சதவிகிதமாக இருக்கிறது. இந்த இளையோர்கள் முழுமையான கல்வியை பெறுவதற்கு மிகவும் அடிப்படை காரணமாக இருப்பது ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி முறையை சீன அரசாங்கம் சட்டமாக கொண்டு வந்தது. இதன் மூலம் அனைவரும் கல்வி அறிவை பெற்றார்கள்.

 

சீனாவின் 14 ஆவது ஐந்து ஆண்டு திட்டத்தில் (2021-2025) கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இருக்கக்கூடிய எழுத்தறி வின்மையை முற்றிலும் ஒழிப்பதன் மூலம் வயது வந்தோருக்கான எழுத்தறிவு விகிதத்தை 100% மாற்றுவது என்றும் இலக்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு சீனாவின் எழுத்தறிவு விகிதம் 99 சதவீதம் வரை இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். தரவுகள் சில ஆண்டுகளில் வெளியிடப்படும். சீனாவில் எழுத்தறிவு என்பதற்கான அளவுகோல் 1500 முதல் 2000 வரை உள்ள பொதுவான சீன எழுத்துக்களை படிக்கவும் எழுதவும் உள்ள திறனை எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற அளவுகோலுக்கு உட்படுகிறார்கள். இது ஒரு செயல்பாட்டுக்கான எழுத்தறிவு அளவுகோலாகும். சீனாவின் பொதுவான கல்வி அளவிலிருந்து இனச் சிறுபான்மை மக்களின் கல்வி முறைகள் மாறுபட்டதாக இருந்தது மட்டுமல்ல, அவற்றை வெற்றி கொள்வதும் மிகப்பெரும் சவாலாக அமைந்தது.

சீனா பெரும்பாலும் ஒற்றைத் தன்மை கொண்ட சமூகமாகவே வெளி உலகத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. சீன மக்கள் தொகையில் 91 சதவீதம் பேர் ஒரே கலாச்சாரத்தை (கன்பியூசியம்) பின்பற்றுவர் களாகவும் ஒரே மொழியை (மாண்டரின்) பேசுகின்றவர்களாகவும் இருப்பதினால் ஒற்றைத் தன்மை கொண்ட சமூகம் என பார்க்கப்படுகிறது. ஆனால் இது உண்மை அல்ல. சீன சமூகம் வரலாற்று ரீதியாக பன்முக இனச் சமூகங்களை கொண்டதாகும். சுமார் 12 முதல் 13 கோடி வரை உள்ள இனச் சிறுபான்மை மக்கள் 9 சதவீதம் வரை உள்ளனர். இவர்களில் 55 இனச் சிறுபான்மையினர் உள்ளார்கள். சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 64 சதவிகித நிலப்பரப்பில் இவர்கள் வாழ்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் சீனா தன்னை பல்வேறு கலாச்சாரங் களையும் இனங்களையும் கொண்ட ஒருங்கிணைந்த பல இனநாடு (பல்லினநாடு) என்று பிரகடனப்படுத்தி உள்ளது. உலகில் சில நாடுகள் பல்வேறு மொழி கலாச்சார இனங்களைக் கொண்டிருந்தாலும், ஓரளவு பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இனத்தால் அல்லது மதத்தின் பெயரால் ஒற்றைத் தன்மை கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காக அடக்குமுறைகளையும் கையாளு கின்றனர். ஆனால் சோசலிச கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சீனா ஒன்பது சதவீதம் இருக்கக்கூடிய இனச் சிறுபான்மையினர்களை உள்ளடக்கிய பல இன நாடு என்று தன்னை அழைத்துக் கொள்வது மட்டுமல்ல அனைத்து இனப் பகுதிகளுக்கும் சமத்துவமான உரிமைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த வரலாற்று பின்னணியின் அடிப்படையில் தான் சீனாவில் இனச் சிறுபான்மையினருக்கான கல்வியை கடின முயற்சி எடுத்து கற்பித்து வருகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் இனச் சிறுபான்மையினர் இருந்தாலும் அவர்களுக்கான கல்வி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் சவாலான பிரச்சனையாக உள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது இனச் சிறுபான்மையினரின் இனங்களுக்கு மத்தியில் சமூக சமத்துவம், சமூக இயக்கம், பரந்த அளவில் தேசிய அடையாளம் போன்ற உணர்வுகள் அழுத்தமாகவும் நெருக்கமான தொடர்புகளையும் கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு கல்வி வழங்கினால் தொழிலாளர்கள் சந்தையில் தங்கள் தொழில் முறை திறன்களை மேம்படுத்திக் கொள்வதும், பரந்த சமூகத்தில் தங்கள் குழு அடையாளத்தையும் அரசியல் நிலைபாடுகளையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள் என்ற அச்சம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

எனவே ஒரு குறிப்பிட்ட தேச உணர்வை உருவாக்குதல், தேசபக்தி உருவாக்குதல், தேச ஒற்றுமையை பேணுவது ஆகிய ஒட்டுமொத்தமான இலக்குகளுக்கு இவற்றின் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம். இவற்றை எதிர்கொள்ள முடியாத இடத்தில் சிறுபான்மை மக்கள் மீது அடக்குமுறைகளோ அல்லது கல்வி ரீதியான புறக்கணிப்பு களோ மேலோங்கி வருகிறது. இதுதான் பல முதலாளித்துவ நாடுகளில் காணக்கூடிய நிகழ்வாக அமைந்திருக்கிறது. இதே பிரச்சனைகள் சீனாவிலும் இருந்தது. கல்விக்கான பணிகளை ஆரம்பிக்கிற பொழுது இந்த இடர்பாடுகளை எதிர்கொண்டனர். சீனா சீன தேசம் என்ற தேசிய உணர்வை வளர்ப்பது என்பதைவிட இனச் சிறுபான்மை மக்களுக்கு கல்வி போற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த சோசலிச பாதையை நோக்கி முன்னேறுவதற்கான ஒரு அடித்தளமாக இந்த இனச் சிறுபான்மையின ருக்கான கல்வி அமையும் என்று கருதினார்கள். ஒரு சோசலிச சமூகம் நோக்கிய பயணத்தின் தொடர்ச்சியாகதான் சிறுபான்மை மக்களுக்கான கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்ட அனுபவத்தை பெற்றார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் இன்றும் சீனாவைப் போன்ற ஒரு வெற்றி சாத்தியப் படாததாக இருக்கிறது.

1949க்கு முந்தைய கல்வி….

மார்க்சியம் என்பது சூனியத்திலிருந்து உருவானதில்லை. அதே போன்று சோசலிச சமூகம் என்பது அதற்கு முந்தைய சமூகத்தை வெட்டி துண்டாகி விட்டு உருவாக்கப்படக்கூடிய சமூகமல்ல. கடந்த கால சமுதாயத்தின் ஒரு தொடர்ச்சியாக தான் சோசலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டி இருக்கிறது. கடந்த கால சமூகத்தின் தகுதி வாய்ந்தவைகளை தக்கவைத்து கொண்டு, தகுதியற்றவைகளை அழித்து ஒழிப்பது தான் சோசலிச பயணத்திற்கு அடிப்படையானது என்பதை அனைத்து மார்க்சியங்களும் அறிவார்கள். இந்த வகையில் தான் மார்க்சியத்தின் வரலாற்றியல் பொருள் முதல்வாத அடிப்படையில் 1949 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலகின் பல நாடுகளை விட சீனாவில் நிலப்பிரபுத்துவ காலத்திலேயே கல்வி முறைகள் மாறுபட்டு இருந்தது. பொது ஆண்டுகளுக்கு முன்பு (2070-1600) சியா வம்ச ஆட்சி காலத்திலேயே பள்ளிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அடுத்தடுத்து வந்த வம்ச ஆட்சிகளும் கல்விக்கான தலையீடுகளை தொடர்ந்து செய்துள்ளார்கள். வம்ச ஆட்சி காலத்திலேயே சீனாவில் மிகவும் பிரசித்தி பெற்றது கல்வியில் நடத்தப்பட்ட தேர்வு முறைகள் ஆகும். குறிப்பாக ஆட்சி பணி தேர்வு முறை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா உட்பட பல நாடுகளில் வாரிசு அடிப்படையில் தேர்வுகள் நடந்த பொழுது சீனாவில் தகுதியின் அடிப்படையில் நடத்தப்பட்டது. கன்பூசியம் அடிப்படையில்தான் பாடத்திட்டங்களும் தேர்வு முறைக ளும் இருந்தது.

இப்படி பல விஷயங்களை குறிப்பிட்டுச் சொன்னாலும் இவை அனைத்தும் சீனாவில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கான நடவடிக் கையாக அமையவில்லை. ஹான் இன சீனர்கள் மத்தியில் தான் இந்த கல்வி அறிவு வளர்ந்து இருந்தது.

1949க்கு முன்பு இனச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்த பகுதிகள் சமூக ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் மிகவும் பின்தங்கி இருந்தன. பல்வேறு பகுதிகளில் நிலபிரபுக்களின்கீழ் அடிமைகளாகவும், பண்ணை அடிமைகளாகவும் மக்கள் இருந்தார்கள். இந்த நிலையில் அன்றாட நிகழ்வுகளை மரங்களில் குறியிடுவதன் மூலமும், சில கயிறுகளை கட்டி வைப்பதன் மூலமாகவே தங்களது கணக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தார்கள். பெரும்பகுதி மக்களிடம் நவீன கல்வி முறைகள் எதுவும் இல்லை.

1950 ஆம் ஆண்டுகளில் புரட்சி முடிந்த அடுத்த ஆண்டு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உயர்நிலை கல்வி கற்கும் மாணவர்களில் 0.9 சதவீதம், இடைநிலைப் பள்ளி மாணவர்களில் 0.4 சதவிகிதம், தொடக்கப்பள்ளி மாணவர்களில் 0.2 சதவீதம் என்ற அளவில்தான் இனச் சிறுபான்மை மாணவர்கள் இருந்தார்கள். திபெத் பிராந்தியத்தில் பள்ளி சேர்க்கை விகிதம் 2 சதவீதம் மட்டுமே இருந்தது. இந்த இரண்டு சதவீதத்திலும் உயர்குடி வகுப்பைச் சேர்த்த மாணவர்களும் நிலப்பிரபுக்களும் இடம் பெற்றிருந்தார்கள். 1930 மற்றும் 40 ஆம் ஆண்டுகளில் சீனாவில் இருந்த 55 இனச் சிறுபான்மையினரில் 22 இன சிறுபான்மை குழுக்களின் கல்வி அறிவின்மை என்பது 95% க்கு அதிகமாகவே இருந்தது. 1950 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் ஒரு பொதுவான அம்சம் ஒட்டுமொத்த இன சிறுபான்மை யினர்கள் 80 சதவீதம் பேர் கல்வியறி இல்லாதவர்களாக இருந்தார்கள். சிறுபான்மை பகுதிமக்கள் வாழ்ந்த இடங்களில் மதம் கல்வியின் மீது பெரும் மேலாதிக்கும் செய்தது. அதே நேரத்தில் கடினம் முயற்சி எடுத்து தீர்வு காண வேண்டிய பிரச்சனையாக ஆட்சியாளர்களுக்கு இருந்தது.

வலுவான மத மரபில் சிறுபான்மையினர்…

பொதுவாக ஹான் சீனர்களின் கலாச்சாரம் உறுதியாக மதசார்பற்றது. அவற்றின் கல்வி முறைகள் வரலாற்று ரீதியாக கன்பியூசியத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இது ஒரு மதசார்பற்ற சித்தாந்தம் ஆகும். இது ஒட்டுமொத்தமாக மதசார்பற்ற வழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான மிக முக்கியமான வழிமுறையாக கன்பியூசிய தேர்வு முறைகள் இருந்தது. எனவே மத விஷயங்களில் கன்பியூசியம் கூடுதல் அக்கறை செலுத்தவில்லை. இக்காலத்தில் பௌத்தமும் தாவோயிச பாதிரிமார்களும் பெயரளவிற்கு பள்ளிகளையும் நடத்தினார்கள். பொதுவாக கல்வி முறையில் கூடுதல் பங்களிப்பு இல்லை என்று கூறலாம். ஹான் சீனர்கள் வாழக்கூடிய பகுதியில் மதம் சமூகத்தில் செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும், சமூக ஒழுக்கத்தை அமுல்படுத்துவதற்கு எந்த ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரமும் இல்லாமல் இருந்தது. இருந்த மத அமைப்புகளும் முக்கியமாக மதசார்பற்ற நெறிமுறைகளுக்கும், மதிப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலைமை நீடித்தது. இதற்கு கன்பியூசியம் அடிப்படை காரணமாகும். சிறுபான்மை பகுதிகளில் குறிப்பாக கொரிய இனச் சிறுபான்மை மக்களிடம் இந்த மதசார்பற்ற தன்மை.

சீனாவில் இருந்த பெரும்பாலான இனச் சிறுபான்மையினருக்கு ஒரு வலுவான மத மரபு இருந்தது. மதம் அவர்களின் கலாச்சாரங்களில் ஊடுருவி, அவர்களின் சித்தாந்தங்கள், வாழ்க்கை முறைகள், மற்றும் சமூக நடத்தைகளை வடிவமைப்பதில் ஒரு ஆழமான பங்கை வகித்துள்ளது. இன சிறுபான்மையினர் இடையே மத நம்பிக்கைக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் இருந்த பல்வேறு இனக்குழுக்கள் நாம் அறிய முடியும். சீனாவில் இருந்த இன சிறுபான்மையினரின் முக்கிய மதங்களாக இஸ்லாம், பௌத்தம், லாமயிசம் போன்றவைகள் இருந்தன. ஹுய் இனத்தவர்களுக்கு இஸ்லாம் முக்கிய அடையாளமாக இருந்தது.

ஹுய், உய்குர், கசாக், கிர்கிஸ், டாடர், உஸ்பெக், தாஜிக், டோங்சியாங், சலார் மற்றும் போனன் குழுக்களின் உறுப்பினர்கள் இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள். திபெத்திய, மங்கோலிய, யுகூர் மற்றும் து குழுக்கள் லாமாயிசத்தைப் பின்பற்றுபவர்கள். டாய், புலாங் மற்றும் பெங்லாங் இனத்தவர்கள் ஹீனயானா பௌத்தத்தை பின்பற்றுபவர்கள். ஓரோகென், டௌர் மற்றும் எவென்கி ஆகியோரால் ஷாமனிசம் (ஆவிகளுடன் தொடர்பு) பின்பற்றப்படுகிறது. ட்ரங், நு, வா, ஜிங்போ மற்றும் காவ்ஷான் இனத்தவர்கள் பலதெய்வ வழிபாடு மற்றும் டோட்டெமிசம் (இதில் மக்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட விலங்கு, தாவரம் அல்லது இயற்கை பொருளுடன் நெருங்கிய, புனிதமான உறவு) மற்றும் மூதாதையர் வழிபாட்டைப் பின்பற்றுகிறார்கள். கொரியர்கள், மியாவோ, லாஹு மற்றும் யி ஆகியோரிடையே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களின் ஒரு சிறிய குழுவைக் காணலாம்.

குடும்பத்திற்கு வெளியே ஒரு ஒழுங்கு அமைக்கப்பட்ட மதக்கல்வியை கொடுப்பதற்கு மடாலயங்கள் பாரம்பரியமாக வடிவமாக இருந்து வருகிறது. அரசு உருவாக்குகிற மதசார்பற்ற பள்ளிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவும் இந்த மடாலயங்களின் பள்ளிகள் இருந்தன. அரசு சிறுபான்மை மொழிகளை விட சிறுபான்மை மதங்களைப் பற்றிய சவால்களை அதிகம் சந்திக்க வேண்டி இருந்தது. அரசு ஆரம்பித்த பள்ளிகளின் வருகைக்காக நிதி பங்களிப்பை செய்தது மட்டுமல்ல குடும்பங்களின் ஆதரவை பெறுவதற்காகவும் மடாலயங்களின் கட்டுப்பாடுகளுடன் போட்டியிட வேண்டியது இருந்தது.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

60 இனக்கல்வியும் மத மரபும்

அ.பாக்கியம் இன்றைய உலகில் கல்வியானது மக்களின் வாழ்வில் ஒரு அத்தியாவசியமான அங்கமாக மாறிவிட்டது. கல்வி ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியையும் முன...