Pages

வியாழன், ஜனவரி 08, 2026

54 இன வர்த்தகமும் வளர்ச்சிக் கொள்கையும்

 

அ.பாக்கியம்

சீனாவில் கடந்த 75 ஆண்டுகளில் இன சிறுபான்மை மக்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். மிகச்சிறிய இனக்குழுக்கள் உட்பட சீனா என்ற நீரோட்டத்தில் இணைந்து செயல்படக்கூடிய அளவிற்கு அவர்களின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கான அடித்தளம் 1949 ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெற்றவுடன் மா சே துங் தலைமையில் உருவாக்கப்பட்ட சீன மக்கள் குடியரசால் போடப்பட்டது. சீன நாட்டின் மக்கள் தொகையில் இனச் சிறுபான்மை மக்கள் எண்ணிக்கை மட்டும் 12.5 கோடி ஆகும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதம் சிறுபான்மை மக்கள் இருந்தாலும் தேசத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் 64 சதவீத நிலப்பரப்பில் இவர்கள் வாழ்கிறார்கள். சீனா 14 நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்துள்ளது. பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் இன சிறுபான்மையினர் வாழ்கின்றார்கள். இவர்களின் வாழ்விடம் சமவெளி பகுதிகளை விட மலைகளும், பள்ளத்தாக்குகளும், காடுகளும், ஆற்றுப்படுகைகளும் நிறைந்த சிக்கலான பூகோள அமைப்பை கொண்டிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 1949 ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெறுவதற்கு முன்பு இன சிறுபான்மையினர் மன்னர் ஆட்சி காலத்தில் மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். இன ஒடுக்குமுறை தலைதூக்கி இருந்தது.

புரட்சியை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய காலத்திலேயே இன சிறுபான்மையினருடைய பிரச்சனையை சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொண்டு அதற்கான தீர்வுகளைப் பற்றி சிந்தித்தார்கள். எனவே புரட்சி நடைபெற்றவுடன் சிறுபான்மை மக்களுக்கான கொள்கைகளை உருவாக்கினார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட கொள்கைகளில் இன வர்த்தகம் என்ற கொள்கை மிக முக்கியமான வடிவமாக அமலாக்கப்பட்டது. “இன சிறுபான்மையினரின் பங்கேற்பு இல்லாமல் நமது நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சி அடையாது” என்று மாசேதுங் கூறினார். சீன தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் இன சிறுபான்மையினரின் முன்னேற்றம் அவசிய தேவையாக இருந்தது. விடுதலைக்கு முன்பு இந்த பகுதியில் நசிந்து போயிருந்த வர்த்தகத்தை வளர்ப்பதற்கான கடுமையான முயற்சிகளை சீன மக்கள் குடியரசு மேற்கொண்டது. இதற்காக இன வர்த்தகக் கொள்கை என்ற கொள்கையை உருவாக்கினார்கள்.

இன வணிகம் என்றால் என்ன?

சீனாவில் இன வர்த்தகம் என்பது அங்குள்ள இன சிறுபான்மையினரின் பகுதிகளில் அல்லது இன சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்படும் முக்கிய வர்த்தக நடவடிக்கையாகும். அதாவது இன சிறுபான்மையினரை குறி வைத்து ஏற்பாடு செய்யப்படுகின்ற வணிக வடிவம். சிறப்பு கூறுகள் உடன் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கை இன சிறுபான்மை பகுதிகளில் நுகர்வு பொருட்களின் உற்பத்தியையும் விநியோகத்தையும் உத்தரவாதப்படுத்தியது. இந்தக் கொள்கையால் இன சிறுபான்மை மக்களின் வருமானம் அதிகமானது மட்டுமல்ல, தேசிய கட்டுமானத்தை இன சிறுபான்மை மக்கள் ஆதரிப்பதற்கான அடித்தளத்தையும் உருவாக்கியது. இயற்கையாக இருந்த இனப் பிரிவினை போக்குகளையும் சீன விரோத சக்திகள் இனப்பகையை தூண்டிவிட்டதை நீக்குவதற்கும் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் இந்த இன வர்த்தக பரிமாற்றங்கள் பெருமளவு உதவி செய்தது. புதிதாக உருவாக்கப்பட்ட சீன மக்கள் குடியரசில் சிறுபான்மை மக்களைப் பற்றிய அடையாளத்தை ஒட்டுமொத்த சீனாவும் அறிந்து கொள்வதற்கான ஒரு வடிவமாக இன வர்த்தக வடிவம் அமைந்தது.

சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட உடன் இன சிறுபான்மையினர் வாழ்ந்த பகுதிகளில் நிர்வாக அமைப்புகள் இல்லாத சூழலை மாற்றி புதிய நிர்வாகத்தை கட்டி எழுப்புவது, அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுப்பது, கலாச்சாரம், கல்வி, சுகாதார பராமரிப்பு, பொருளாதார, வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சீன மக்கள் குடியரசு உறுதி ஏற்றுக் கொண்டது. இவற்றில் பிரதான அம்சமாக பொருளாதாரப் பணி இருக்க வேண்டும். அந்த பொருளாதாரப் பணியின் முக்கிய அங்கமாக இன வர்த்தகம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். மக்களை மையமாகக் கொண்ட நிர்வாக தத்துவத்தையும், வளர்ச்சியை ஏற்படுத்தும் வாழ்வாதார தத்துவத்தையும் உள்ளடக்கிய அரசியல் பணியை போலவே இந்த இன வர்த்தகத்தையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நிர்வாக தத்துவமாக ஏற்றுக்கொண்டது.

ஆரம்ப காலகட்டத்தில் சீன மக்கள் குடியரசிற்கு இன வர்த்தகம் குறித்த போதுமான தரவுகள் கிடைக்கவில்லை. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதற்கு முன்னதாக நடைபெற்ற சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (CPPCC) மக்கள் அரசாங்கம் அனைத்து இன சிறுபான்மையினரின் மக்களுக்கும் அரசியல் பொருளாதார கலாச்சார மற்றும் கல்வி வளர்ச்சியில் ஆதரவு அளிப்பதே மாநாட்டின் பொதுத்திட்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. அப்போது இருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்கம் இன சிறுபான்மையினரின் பல்வேறு சேவைகளில் கவனம் செலுத்துவதே நிலையான நிலைப்பாடாக இருந்து வருகிறது. இருப்பினும் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கான தரவுகள் மேலும் அதிகமாக தேவைப்படுவதை அறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். இன வர்த்தகம் குறித்த தரவுகளை சேகரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தார்கள். வரலாற்று ரீதியாக இன வர்த்தகத்தின் பங்கு என்ன என்பதை ஆய்வு செய்தனர். மிக வெகு தொலைவில், மலைகளின் உச்சிகளில் வாழக்கூடிய இன சிறுபான்மையினர் பகுதிகளுக்கு எவ்வாறு வர்த்தகம் நடைபெற்றது என்பதை பற்றியும் தரவுகளை சேகரித்தார்கள்.

வாங் வென்சாங் எழுதிய இன வர்த்தக அறிமுகம் , யாங் கிங்சென் எழுதிய இன வர்த்தகம், ஹுவாங் குவாங் சூ தொகுத்த சமகால சீனாவில் இனப் பணி, வுசியாவோடாவோ எழுதிய சீன மக்கள் குடியரசின் ஆரம்ப நாட்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இனப் பணி குறித்த ஆராய்ச்சி , லின் வீ ரன் எழுதிய உள் மங்கோலியாவில் இரண்டு தசாப்த கால இன வர்த்தகம் (1946–1965) , டாங் செங் கென் மற்றும் சென் பாவோஷெங் ஆகியோரால் தொகுக்கப்பட்ட கன்சுவில் இன வர்த்தக வரைவு வரலாறு, ம மு சியாங்லின் எழுதிய ஜின்ஜியாங்கில் இனப் பணி போன்ற வரலாற்று ரீதியான புத்தகங்களையும் ஆய்வுகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தி புதிய திட்டங்களை உருவாக்கினார்கள்.

இன வர்த்தகத்தின் இடர்பாடுகள்

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட காலத்தில் அதன் பொருளாதாரத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. 1949 ஆம் ஆண்டில் தொழில்துறை உற்பத்தி சரிபாதியாக குறைந்தது. விவசாய உற்பத்தி 1937 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதே காலத்தில் 1937 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரைக்கும் பணவீக்கம் 140 மடங்கு அதிகமாகியது. இக்காலத்தில் ஷாங்கே ஷேக் தலைமையிலான காமிங்டாங் ஆட்சியும், ஜப்பானிய படையெடுப்பும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

சமதளத்தில் இருந்தவர்களைவிட இன சிறுபான்மையினர் பெரும்பாலும் பீடபூமிகளிலும் மலைப்பகுதிகளிலும் கடுமையான இயற்கை இடர்பாடுகள் நிறைந்த பகுதிகளில் பெரும் நெருக்கடிகளை சந்தித்தார்கள். சமூக ரீதியில் பின்தங்கிய நிலைமை, வறுமை, போக்குவரத்து வசதியின்மை, இதனால் வர்த்தகம் வளர்ச்சி அடையாத நிலை, சந்தை இல்லாத சூழலில், பண்டமாற்று முறையில் இவர்கள் வாழ்ந்ததால் நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றார்கள். ஒருங்கிணைந்த நாணயம் இல்லை என்பதால் பொருட்களின் பரிமாற்றம் தடை ஏற்பட்டது. இதனால் உணவு பற்றாக்குறை உருவாகி பட்டினிச்சாவை எதிர்கொண்டனர்.

இதே போன்ற நிலைமை தென் மத்திய சீனாவிலும் உருவாகியது. இக்காலத்தில் தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள திபேத், ஹைனன் போன்ற பகுதிகள் செம்படைகளால் விடுவிக்காத சூழலில் ஷாங்கே ஷேக் காமிங்டாங் கட்சியினரின் சுரண்டலும், கொள்ளையர்களின் செயல்களாலும் இப்பகுதி சூறையாடப்பட்டது. இதே காலத்தில் இந்தப் பகுதியில் வெளிநாட்டு சக்திகள் நேரடியாகவோ ரகசியமாகவோ தலையிட்டு குழப்பங்களையும் கலவரங்களையும் ஏற்படுத்தினார்கள். இதனால் சமூக பொருளாதார நிலைமைகளும் தேசத்தின் ஸ்திரத்தன்மையும் கடுமையாக பாதித்தது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டாலும் இன சிறுபான்மையர் பகுதியில் ஏற்பட்ட நெருக்கடிகளால் புதிய சீனா எழுந்து நிற்க முடியுமா? முடியாதா? என்று சந்தேகம் அனைத்து மட்டத்திலும் உருவானது.

பல்வேறு காரணங்களால் இனச் சிறுபான்மையினரின் மக்கள் தொகை குறைவாக இருந்தது. இவர்கள் மத்தியில் பொருளாதார வளர்ச்சியும் கலாச்சார மேம்பாடும் மிகவும் பின்தங்கி இருந்தது. தொழிலாளர்கள், ஊழியர்கள், அறிவுஜீவிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தனர். இதனால் இனச் சிறுபான்மையர் பகுதியை முன்னேற்ற வேண்டும் என்றால் அரசின் உதவியும் பெரும்பான்மையான மக்களின் ஆதரவும் இல்லையென்றால் இவற்றை செய்ய முடியாது என்று கட்சி தலைமை முடிவுக்கு வந்தது. இந்த நெருக்கடியான நிலைமைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு மாசேதுங், லியூ ஷாவோகீ, சௌ என் லாய் , சென் யூன் ஆகிய தலைவர்கள் இன சிறுபான்மையினரின் அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சார சேவைகளை வளர்ப்பதற்கு பெரும் உதவிகள் தேவை என்பதற்கான திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

விரிவான அளவிலும் முழுமையான கண்ணோட்டத்திலும் இனச் சிறுபான்மையினர் தங்களது பொருளாதாரங்களை வளர்க்க உதவுவது என்பது அவர்களுக்கான தேவை மட்டுமல்ல தேசிய கட்டுமானத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற முறையில் செயல்பட்டார்கள். இனச் சிறுபான்மையினர் வாழ்கின்ற பகுதி வளங்கள் நிறைந்தது மட்டுமல்ல பரந்த பகுதியாகவும் உள்ளது என்றும் எனவே இனச் சிறுபான்மையினரின் ஈடுபாடு இன்றி நமது தேசிய பொருளாதாரம் வளர்ச்சி அடையாது என மாசேதுங் தெரிவித்தார். இன சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு ஊக்குவிப்பது, இன சமத்துவம், இன ஒற்றுமையை அடைவதற்கு மட்டும் அல்லாமல் சீன மக்கள் குடியரசில் தேசிய கட்டுமானத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுவதற்கான மிகவும் அவசியமான தேவை என்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மாசேதுங்கும் மேற்கண்ட முயற்சிகளை திடமான முறையில் மட்டுமல்ல சீனப் பண்புகளுக்கு ஏற்ற வகையில் அமல்படுத்தினார்கள். இதன் மூலமாக தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இனச் சிறுபான்மை பகுதிகளின் இயற்கை வளங்கள் பெரும் பங்கை கொண்டுள்ளது என்பதை நடைமுறை நிரூபித்து காட்டியது.

இனச் சிறுபான்மை பகுதிகளில் சேவைகளின் உருவாக்கம்

மேலே விவாதிக்கப்பட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் முழு நாட்டின் விடுதலையுடன் இனச் சிறுபான்மை பகுதிகளில் பல்வேறு பணிகள் துவக்கப்பட்டன. இவற்றில் சீன மக்கள் குடியரசு துவக்கத்தில் எடுத்த பொருளாதார கட்டுமானங்களும் குறிப்பாக இன வர்த்தக நடவடிக்கையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் துணை பிரதமராகவும் முதல் ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய வருமான சென்-யுன் இன வர்த்தகத்தை பலப்படுத்துவதிலும் விரிவு படுத்துவதிலும் மிக முக்கிய பங்காற்றி இருக்கிறார் என வரலாறு பதிவு செய்துள்ளது. இனச் சிறுபான்மை பகுதிகளில் வர்த்தகத்துக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் மையப் புள்ளியாக செயல்பட்டு உள்ளார். வர்த்தக நிறுவனங்களை அரசு நடத்துவதற்கும் அவற்றை பலப்படுத்துவதற்கும் விநியோகத்தையும் சந்தைப்படுத்தும் செயல்களையும் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக செய்ய வைத்தார்.

இதே காலத்தில் இவர் தனியார் வர்த்தகங்களை ஊக்கப்படுத் துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். உருவாக்கப்பட்ட சந்தைகளில் இந்நியாயமான விலை முறைகளை அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களை குறிப்பாக இனச் சிறுபான்மையினரை பரந்த சந்தைகளுடன் இணைத்து விநியோகத்தையும் நுகர்வையும் அதிகப் படுத்தினார்கள். இன சிறுபான்மை அதிகாரிகளுக்கு பொருளாதாரப் பணிகளை மேம்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கக்கூடிய முக்கியமான அடித்தளத்தை சென் யூன் உருவாக்கினார்.

நவீன சீனாவில் சீர்திருத்தத்தின் சிற்பியாக விளங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைவர் டெங் ஷியோ பிங் 1949 முதல் 52 ஆம் ஆண்டு வரை தென்மேற்கு சீனாவின் பணியகத் தலைவராக செயல்பட்டார். அப்பொழுது இந்தப் பகுதியில் ஏழு கோடி மக்கள் தொகைக்கான கட்சிக்கு தலைமை தாங்கினார். சீனாவின் உள்நாட்டு போருக்கு பிறகு புரட்சிகரமான திட்டங்களை அமல்படுத்தியது மட்டுமல்ல பெரும் சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி கண்டார். இனச் சிறுபான்மையினரின் பொருளாதார வளர்ச்சியில் இவர்காலத்தில் இந்தப் பகுதியில் முக்கியமான அடித்தளம் போடப்பட்டது.

முதலாவதாக இன சிறுபான்மை பகுதிகள் பேரழிவுகளாலும் பஞ்சம் போன்றவற்றாலும் பாதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு முழுமையான உதவி செய்ய வேண்டும். அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளில் உற்பத்திகள் தடைபடும். தடைபட்ட உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இரண்டாவதாக உற்பத்தி வழிமுறைகளை மேம்படுத்துவது, வாழ்க்கை சாதனங்களின் விநியோகத்தையும் உள்ளூர் பொருட்களை மக்கள் வாங்குவதற்கான முறைகளையும் உறுதி செய்து விட்டால் இன சிறுபான்மை பகுதியில் வர்த்தகத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கான உத்திகளை அமல்படுத்தினார். இனச் சிறுபான்மை யினரின் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்துவதற்கு இன வர்த்தகம் மிக முக்கியமானது. எனவே பொருளாதாரப் பணிகளில் மிக மையமான அம்சமாக இன வர்த்தகம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இன வர்த்தகத்தில் இடைநிலை சுரண்டல் அடுக்குகளை தடுக்க வேண்டும்.

இதனால் மக்கள் சிறிய இழப்புகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் இந்த வழிமுறைகள் மூலமாக அவர்களின் பொருளாதாரம் செழித்து வாழ்க்கை மேம்படும் என்பதில் டெங் ஷியோ பிங் உறுதியாக இருந்து அமல்படுத்தினார். இதேபோன்று இனச் சிறுபான்மையினர் அதிகம் வாழ்ந்த வடமேற்கு பகுதிகளுக்கு தலைமை தாங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைவர்கள் ஒருவரான ஜி ஜோங்சன், இனச் சிறுபான்மையினரின் பகுதிகளில் வர்த்தகத்தை மேம்படுத்துவதும் சுகாதாரத்தை ஏற்படுத்துவதும் கட்சியின் மிக முக்கியமான வெகுஜன பணியும் அரசியல் பணியும் ஆகும் என்று வலியுறுத்தினார். எல்லைப்புறங்களில் வாழ்ந்த இனப் பகுதிகளில் வர்த்தகத்தை வளர்க்க அனைத்து சாத்தியமான சக்திகளையும் அணி திரட்டினார்.

இன சிறுபான்மை மக்களிடம் ராணுவ பணிகள்

யுன்னான் மாகாணம் பிப்ரவரி 24 1950 ஆம் ஆண்டு மக்கள் விடுதலைப் படையால் விடுவிக்கப்பட்டது. அடுத்த மாதமே யுன்னான் மாகாண அரசின் மூலமாக இன வர்த்தக கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சீன மக்கள் விடுதலை ராணுவமும், உருவாக்கப்பட்ட இனப் பணி குழுவும் சேர்ந்து அந்த மாநிலத்தின் விடுதலை பெறாத எல்லைப் புற இனப் பகுதிகளுக்கு சென்றனர். அங்கு அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை கடுமையாக இருந்தது. எனவே வழக்கம் போல் மக்கள் விடுதலை ராணுவம் அந்தப் பகுதிகளுக்குள் சென்ற பொழுது உப்பு, பருத்தி, நூல், துணி வகைகள், தீப்பெட்டி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அன்றாட பொருட்களை எடுத்துச் சென்றார்கள். இங்கு கொள்ளையர்களின் ஆதிக்கம் இருந்ததால் ராணுவம் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு குதிரைகளை பயன்படுத்தினார்கள்.

ராணுவம் எங்கு சென்றாலும் வர்த்தக குழுக்களையும் கடைகளையும் உடனடியாக அமைத்து விடும். அது இங்கேயும் நடைபெற்றது. யுன்னானின் பல்வேறு பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் அதிகாரங்கள் நிறுவப்பட்டது மட்டுமல்ல, பொதுமக்களுக்கு கொள்முதல் மற்றும் விற்பனை சேவைகள் வழங்க முக்கிய நகரங்களில் வர்த்தக கிளைகளையும் உருவாக்கியது. வர்த்தக பிரிவின் அமைப்புகளையும் உருவாக்கினார்கள்.

    1949 செப்டம்பர் மாதம் சீன மக்கள் விடுதலை ராணுவம் கிங்காய் மாகாணத்திற்குள் சென்று அப்பகுதியை விடுவித்து அங்கும் வணிகத்திற்காக ஒரு அமைப்பை உருவாக்கி கடைகளையும் ஏற்படுத்தினார்கள். இந்த மாகாணத்தில் கோலாக் என்ற பகுதி சமூக ரீதியாக மிகவும் சிக்கலான பகுதியாக இருந்தது மட்டுமல்ல கிங்காய் மாகாணத்தில் செம்படையால் விடுவிக்கப்படாத கடைசி பகுதியாகவும் இருந்தது. அவற்றை வெற்றி கொள்வதற்கு முன்பாக பிப்ரவரி 1952 இல் கோலாக் பகுதிக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழுவையும் வடமேற்கு ராணுவ அரசியல் குழுவையும் நிறுவினார்கள். இந்த இரண்டு அமைப்பும் கிங்காய் மாகாணத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்பட்டு ஆகஸ்ட் 1952 ஆண்டு அமைதியான முறையில் கோலாக் பகுதியை விடுதலை செய்தனர்.

1952 மற்றும் 53 ஆம் ஆண்டுகளில் கோலார் பகுதியில் இருந்த கட்சி மற்றும் செம்படையின் பிரதான பணியாக கொள்ளையர்கள் ஒழித்துக் கட்டுவது, ஒழுங்கை பராமரிப்பது, புதிய பணியாளர்களை பயிற்றுவிப்பது, உயர்மட்ட அமைப்புகளை ஒன்றிணைப்பது போன்றவை சவாலாக முன்வந்த பிரச்சனைகளை தீர்த்தார்கள். இதன் பிறகு 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிங்காய் மாகாண வர்த்தக நிறுவனத்தின் கோலாக் கிளை உருவாக்கப்பட்டது. இங்கிருந்த 290 பழங்குடியினரில் 210 பேரை ஐந்து இன வர்த்தக பணியின் துணைக் குழுக்காக அமைத்தனர்.

அங்கு பாதிக்கப்பட்டு இருந்த விவசாயம் உட்பட உற்பத்திகளை மீண்டும் தொடங்கிடவும் அவற்றை மேம்படுத்திடவும் ஆதரவளித்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி இன சமத்துவம் ஒற்றுமை குறித்த கொள்கைகளை மக்கள் வரவேற்றனர். இந்தப் பகுதிகளில் 11,145 ஏழைகளுக்கு அதாவது சுமார் 3,175 வீடுகளுக்கு தேநீர் உற்பத்தி கருவிகள், ஆடைகள் மற்றும் அடிப்படையான உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்கினார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நடவடிக்கைகள் இந்த பிராந்தியங்களில் சுயாட்சியை அமைப்பதற்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கியது.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

54 இன வர்த்தகமும் வளர்ச்சிக் கொள்கையும்

  அ.பாக்கியம் சீனாவில் கடந்த 75 ஆண்டுகளில் இன சிறுபான்மை மக்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். மிகச்சிறிய இனக்குழுக்கள் உட...