Pages

வியாழன், ஜனவரி 15, 2026

55 மாற்றம் கண்ட இன வர்த்தக மாநாடுகள்

 

அ.பாக்கியம்

இன வர்த்தக மாநாடு என்பது மாறுபட்ட மாநாடாகும். கடைநிலை மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான துல்லியமான முறையில் திட்டமிடக்கூடியவை இம்மாநாடுகள். இன வர்த்தகத்தில் சீன மக்கள் விடுதலை இராணுவம், சீன கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதல் அடிப்படையில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முடித்திருந்தது. அவ்வாறு ஆரம்பத்தில் அமலாக்கியவற்றில் உள்ள நடைமுறை பிரச்சனைகளை விவாதிப்பதற்காக பிரதேச அளவில் சிறுபான்மை இன மக்கள் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாடுகளை நடத்தினார்கள். இந்த மாநாடுகளில் பங்கேற்ற இனச் சிறுபான்மை மக்கள் வர்த்தகம் பற்றி விவாதித்தார்கள். இன வர்த்தக நடவடிக்கையில் 1950 ஆம் ஆண்டு முக்கியத்துவம் நிறைந்த ஆண்டாக கருதப்படுகிறது. இன வர்த்தகத்தின் வளர்ச்சியை சிறப்பாக வழிநடத்தும் வகையில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட உடனேயே உள்ளூர் அரசாங்கங்களுக்கான விதிமுறைகளையும் நடவடிக்கை களையும் தெளிவாக வரையறுத்தது.

ஜனவரி 1 1950ஆம் ஆண்டு கிங்காய் மாகாண மக்கள் அரசாங்கம் நிறுவப்பட்ட உடன், முதல் நடவடிக்கையாக அம்மாகாணத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களின் வணிகத்திற்காக பெல்லோஷிப் அசோசியேசன் உடனடியாக கூட்டப்பட்டது. இந்த அசோசியேஷன் மூலம் கால்நடை மேய்ப்பர்கள் வாழும் பகுதிகளில் இன வர்த்தகத்தின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஜிகாங் மாகாணம் இன வர்த்தக கொள்கைகளை அமலாக்குவதற்கான நடைமுறைகளை விவாதித்தது.

இதற்காக அதே ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு வர்த்தக மாநாட்டை நடத்தினார்கள்.  இனச் சிறுபான்மை பகுதியில் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவற்றை சாகடிக்க சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதாவது கால்நடைகளை கொல்ல (உணவுக்காக ) வேண்டும் என்றால் அதற்கு    வரிக் கட்ட வேண்டும். இந்த விதி இருந்தாலும் தங்களின் பண்டிகைகாலத்தில் கால்நடைகளை சாகடிப்பதற்காக போடப்படும் வரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.குறிப்பாக 3 முக்கிய இஸ்லாமிய பண்டிகளின் போது இஸ்லாமியர்கள் உண்ணக்கூடிய கால்நடைகளுக்கும் செம்மறி ஆடுகளுக்கும் உணவுக்காக கொல்லும் பொழுது அவற்றுக்கு வரி விலக்கை அளித்தார்கள்.

1950 டிசம்பர் 10 அன்று சீன வர்த்தக அமைச்சகம் இனச்சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பெரிய நிர்வாகப் பகுதிகளாக இருக்கக்கூடிய ஆறு பகுதிகளை தேர்வு செய்து பிராந்திய வர்த்தக அமைச்சர்கள் மற்றும் தொழில் முறை நிறுவன மேலாளர்களின் கூட்டுக் கூட்டத்தை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் எல்லையோர மாகாணங்களில் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களின் தொகுப்பை உடனடியாக நிறுவ வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். மிகப்பெரிய மாநிலமாக இருந்த குவாங்சி மாகாணத்தில் இனக்குழுக்களின் கொள்முதலுக்கான முன்னுரிமை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் வர்த்தகத்தை எளிதாக்குவதற்காகவும் இடைத்தரகர்களின் சுரண்டலை ஒழிக்கவும் அரசு நேரடியாக இன வர்த்தக தொடர்பான விற்பனையாளர்களின் நியமித்தது. இதேபோன்று சிறுபான்மை பகுதி மக்கள் தயாரிக்க கூடிய பாரம்பரிய பொருட்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் பொருத்தமான விலையில் அவர்களின் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான அலுவலகங்களை அமைத்தனர். இவை உடனடியாக சாத்தியப்படாத இடங்களில் கூட்டுறவு சங்கங்களை ஏற்பாடு செய்தார்கள். தொலைதூரத்தில் உள்ள இனக்குழுக்களை சகோதர இன குழுக்கள் என்று அழைத்தார்கள். இதே பகுதியில் இருந்த பெரும்பான்மையான ஹான் இனக்குழு வர்த்தகர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை.

ஆரம்ப முன்னேற்றம்: விலையின் விதிகள்

1951 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று சீன அரசின் வர்த்தக அமைச்சகம் உள்நாட்டு வர்த்தக துறையின் பிரிவின் கீழ் வேறு எங்கும் இல்லாத இன வர்த்தக பிரிவை புதிதாக அமைத்தது. இந்த அமைச்சகத் துறையின் சார்பில் ஆகஸ்ட் 5 முதல் 9 வரை வடமேற்கு வர்த்தகப் பணியகம் சார்பில் ஐந்து வடமேற்கு மாகாணங்களிலும் இன சிறுபான்மை வர்த்தக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இந்த மாநாட்டில் இன சிறுபான்மை வர்த்தகத்திற்கான பல வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டது.

1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள இன சிறுபான்மை பகுதிகளில் குறிப்பாக அரசு நடத்தும் வர்த்தக அமைப்புகளில் சில துவக்கட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இக்காலத்தில் அரசின் சார்பில் 750 வர்த்தக நிறுவனங்களை அமைத்தனர். அது மட்டுமல்ல ஏராளமான நடமாடும் வர்த்தக அமைப்புகளை உருவாக்கி சிறுபான்மை மக்கள் வாழும்  கடை கோடி வரை வர்த்தகத்தை கொண்டு சென்றனர். அரசு நடத்தும் வர்த்தக நிறுவனங்களில் சில்லறை விற்பனை நிலையங்களும், கொள்முதல் நிலையங்களும் பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் அடங்கும்.

சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் அரசு நியாயமான விலைக் கொள்கைகளை அமலாக்கியது. இன சிறுபான்மை மக்கள் அவர்கள் தயாரித்து கொடுக்கும் பொருட்களுக்கு அரசு பொருத்தமான விலை கொடுத்து வாங்கியது. அதே நேரத்தில் இன சிறுபான்மை மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் குறைத்து கொடுக்கப்பட்டது. இந்த பரிமாற்றங்களின் மூலம் இன சிறுபான்மை மக்களின் வாங்கும் திறன் கணிசமாக உயர்ந்தது.

இதனால் இன சிறுபான்மை பகுதிகளில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இந்த விலைக் கொள்கை பெரும் பங்களிப்பை செய்தது. மக்கள் வெறும் தத்துவத்தை நம்பி வர மாட்டார்கள் அந்த தத்துவத்தை அமலாக்க கூடிய முறைகளில் இருந்து தான் அதை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். மேற்கண்ட செயலின் விளைவாக இன சிறுபான்மையினர் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் தீவிரமான ஆதரவாளர்களாக மாறினார்கள்.

1950 ஆம் ஆண்டு குவாங்சி மாகாணத்தில் வூஜோ மாவட்டத்தில் மக்களின் விளைப்பொருட்களை கொள்ளையர்கள் அபகரித்து செல்வார்கள். இவற்றை தடுப்பதற்கான மக்கள் விடுதலை ராணுவம் இந்தப் பகுதிகளில் கொள்முதல் மற்றும் வர்த்தகப்பணி குழுக்களை அமைத்தது. இதன் மூலம் ராணுவம் இங்குள்ள யாவ் இன மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக கடலை எண்ணெய், துணிகள், நூல்கண்டுகள், உப்பு, ஆகியவற்றை ஆயிரக்கணக்கான கிலோக்கள் எடுத்துச் சென்றனர். இம்மக்கள் வாழக்கூடிய பகுதியில் உப்பு கிடைக்காததால் அவர்கள் அன்சிலோஸ்டோமியாசிஸால் (Ancylostomiasis ) என்ற நோயால் பாதிக்கப்பட்டனர். ராணுவம் இதை கொண்டுசென்றதால் அவர்கள் உப்பிற்காக மலைகளில் இருந்து இறங்கி அலைய வேண்டிய தேவை குறைந்தது.

அவர்களுக்கு அடிப்படையான பொருட்களை எடுத்துச் சென்றது மட்டுமல்ல அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களையும் அவர்களுக்கு நியாயமான வருமானம் கிடைக்கக்கூடிய முறையில் உருவாக்கப்பட்ட வணிக குழுக்கள் கொள்முதல் செய்தது. குறிப்பாக 45 மில்லியன் யுவான்களுக்கு மேல் மதிப்புள்ள பன்றிகளையும், ஒன்பது மில்லியன் யுவான்களுக்கு மேல் மதிப்புள்ள உலர்ந்த காளான்களையும், குளிர்கால காளான்களையும் வாங்கினார்கள். இந்தச் செயல் யாவ் இன மக்களின் வாழ்வை மாற்றியது மட்டுமல்ல சீன அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

இதற்கு மேலும் இன வர்த்தக குழுக்களும், மக்கள் விடுதலை படையும் மலைகளின் உட்பகுதிக்கு சென்று மக்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களையும் வாங்கி வந்தனர். நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் அழிந்து போவதும், கொள்ளையர்கள் அபகரித்துச் செல்வதும் என்ற நிலையிலிருந்து மாறி அதே பூர்வீக பொருட்களின் உற்பத்திகள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவி இருப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணம் என்று பெருமிதம் கொண்டனர்.

உரக்கப் பேசப்பட்ட குறைபாடுகள்

இவ்வாறு அமலாக்கக் கூடிய முடிவுகளில் இருக்கக்கூடிய கணிசமான சிக்கல்களை களைவதற்கான மாநாடுகள் நடத்தப்பட்டது. தென்மேற்கு சீன பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் கீழ்க்கண்ட பலவீனங்களை கண்டறிந்தார்கள். தென்மேற்கு பிரதிநிதிகள் மூன்று முக்கிய பலவீனங்களை வலியுறுத்தினார்கள்.

குறிப்பிட்ட பணிகளுக்குள்ளேயே மூழ்கி இருப்பது உள்ளூர் நிலைமைகளுக்கு தேவையான பொதுப்பணி பின்தங்குகிறது.

பொருளாதார வளர்ச்சியில் இன வர்த்தகத்தின் பங்கு பற்றிய தெளிவற்ற பார்வை பலரிடம் நீடிக்கிறது.

இன வர்த்தகத்திற்கும் பிற பணிகளுக்கும் இடையிலான போதுமான ஒத்துழைப்பு இல்லை என்று கண்டறிந்தார்கள்.

தென்மேற்கு சீனாவைப்போல் தென் மத்திய சீனாவின் பிரதிநிதிகள் கீழ்க்கண்ட அம்சங்களை குறைபாடுகளாக கண்டுபிடித்து ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.

இன சிறுபான்மையினர் பகுதிகளில் வர்த்தகத்தை மேம்படுத்துவதில் ஒட்டுமொத்த பிராந்திய பொருளாதார வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இனச் சிறுபான்மை பகுதிகளில் வர்த்தக சேவைகளுக்கு பொருத்தமான நிதியை ஏற்பாடு செய்வதும், குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தொழில்முறை மேலாண்மையை ஏற்றுக் கொண்டும் செயல்பட வேண்டும்.

இன சிறுபான்மை வர்த்தகத்தில் நடைபெறும் மோசடி மற்றும் அதிகப்படியான சுரண்டலை நிறுத்துவதற்கு தொழில் மற்றும் வணிக நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டும்.

பெரும்பான்மை ஹான் வணிகர்களுக்கு எதிரான நிலைகள் ஒரு சார்பாக உருவாவதை தடுக்க வேண்டும்.

கண்காட்சிகள் கூட்டங்கள் பேரணிகள் போன்றவற்றின் மூலம் முதன்மை சந்தைகளை நிறுவுவதும் அவற்றை அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்க வேண்டும்.

இன சிறுபான்மை பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்துவதும், இன மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதும், கலாச்சாரத்தை பரிமாறி கொள்வதும் வேகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்கள்.

வடமேற்கு சீனாவின் பிரதிநிதிகள் ஒன்பது பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான பரிந்துரைகளை உருவாக்கினார்கள்.

பூர்வீக மக்கள் தயாரிக்கும் பொருட்களின் விலைகளும் விற்பனைகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியார் துறை உறவுகள் மேம்படுத்துதல், சந்தை மேலாண்மையை தரப்படுத்த வேண்டும்.

எடைகள் அளவீடுகள் வளங்கள் மற்றும் தேவைகளை சரி செய்ய வேண்டும். போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

அரசு நடத்தும் நிறுவனங்களின் இயக்க முறைகளை மேம்படுத்துவது சிறுபான்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பது இனக்குழு உறுப்பினர்களால் கூட்டுறவுகளை நிர்வகிப்பது போன்ற மிக முக்கியமான கருத்துக்களை முன் வைத்தார்கள்.

மேற்கண்ட 3 பிராந்திய மாநாடுகளிலும் இன வர்த்தகம் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளைப் பற்றி மட்டும் விவாதிக்கவில்லை. அதற்கு மேலும் போக்குவரத்து, விலை தீர்மானம், பொருட்களை வழங்கும் முறைகள், மக்களின் தேவைகள், பணியாளர்களுக்கான பயிற்சி போன்ற அடிப்படையான தேவைகளில் ஆலோசனைகளும் முன்மொழிக்கப்பட்டன.

யதார்த்தத்திலிருந்து முன்னேறுவது.

மேற்கண்ட ஆலோசனைகள் விவாதங்கள் அதன் மூலம் கிடைத்த தரவுகள் மேலும் இன சிறுபான்மையினரின் வர்த்தகத்திற்கான அடித்தளத்தை அதிகமாக்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து வேலைகளிலும் யதார்த்தத்தில் இருந்து முன்னேற வேண்டும் என்று தீர்மானித்தது. நிர்வாகத்தில் துவங்கி மக்களின் வாழ்வாதார வரையிலான பணிகள் ஒவ்வொன்றும் அந்தந்த பிராந்தியத்தின் அல்லது அந்த இனக்குழுவின் நிலைமைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரே மாதிரியான முடிவுகளும் அமலாக்கமும் பயன்தராது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

இன சிறுபான்மையினரின் விருப்பங்கள் தேவைகளைப் பற்றிய விரிவான புரிதல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தேசிய கட்டுமான நடவடிக்கைகளில் இன சிறுபான்மை மக்களை பங்கேற்பதற்கான செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்.

பிரம்மாண்டமான கொண்டாட்டங்களில் அவர்களை பங்கேற்க வைப்பதும், பிற நகரங்களுக்கு செல்லுவதற்கும் இன சிறுபான்மை பிரதிநிதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இன சிறுபான்மையினர் வாழக்கூடிய பகுதிகளை பார்வையிடு வதற்கும், அவர்களின் பணிகளை பாராட்டுவதற்கும், குறைகளை அறிந்து கொள்வதற்கும் அரசின் தலைவர்களை இனக்குழுக்கள் வாழக்கூடிய பகுதிகளில் பங்கேற்க வைக்க கூடிய செயல்களை செய்ய வேண்டும்.

தேசிய தினக் கொண்டாட்டத்தில் இனக்குழுக்களின் பிரதிநிதிகளை அவசியம் கலந்து கொள்ள வைப்பது.

இவை அனைத்தும் தேசிய கட்டுமான நடவடிக்கைகளில் இனச் சிறுபான்மையினரின் பங்களிப்பை உறுதி செய்யும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்த அமலாக்கியது.இதன் தொடர்ச்சியாக இன சிறுபான்மையர் பகுதியில் சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாடுகள் குறித்த தொழில் முறை மாநாடுகள் மூன்று முறை நடத்தப்பட்டது.

தேசிய மாநாடுகளை நோக்கி

உள்ளூர் மட்டத்திலும் பிராந்திய அளவிலும் இன வர்த்தகம் தொடர்பாக விரிவான சந்திப்புகளையும் அனுபவங்களையும் புதிய ஆலோசனைகளையும் உருவாக்கி அமலாக்கி வந்த சூழலில் அடுத்த கட்டமாக இன வர்த்தகத்திற்கான தேசிய மாநாட்டை நோக்கி அந்த கொள்கை நகர்த்தப்பட்டது.

1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் 31 ஆம் தேதி வரை முதல் தேசிய இன வர்த்தக மாநாடு சீனத் தலைநர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 149 பேர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாநாடு 15 நாட்கள் நடைபெற்று பல முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் உள்மங்கோலியா தன்னாட்சிப் பகுதி, மத்திய அரசாங்கத்தின்  கீழ் உள்ள வட சீனாவில் உள்ள மாகாணங்கள், ஹூய், திபெத், உய்குர்,  மியாவோ, யாவோ, ஜுவாங்கு, லி, டோங் இனக்குழுக்களும்  அரசாங்கத்தின் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இன வர்த்தகத்தின் வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் விவாதிப்பதற்கும், பரிமாறிக் கொள்வதற்கும், பணியாளர்கள் குறித்தும் வணிகப் பிரச்சனைகள் குறித்தும் பகுப்பாய்வு செய்யவும், இந்த மாநாடு நடைபெறுகிறது என்று வர்த்தக துணை அமைச்சர் ஷா கியான்லி பேசினார். இனக் கொள்கை குறித்த அறிக்கையை மத்திய இன விவகார ஆணையத்தின் துணை இயக்குனர் லியூ கேபிங் சமர்ப்பித்தார். மற்றொரு துணை அமைச்சர் நாடு முழுவதும் 1951 ஆம் ஆண்டில் அரசு நடத்தும் இன வர்த்தக குழுக்களின் நிலைமைகளை பற்றி அறிக்கையை வழங்கினார்.

தேசம் முழுவதும் இருக்கக்கூடிய இன சிறுபான்மையினர் மக்கள் தொகை அடிப்படையில் குறைவாக இருந்தாலும் அவர்களின் அனைத்து உரிமைகளையும் மேம்படுத்துவதற்கான பணிகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீன மக்கள் குடியரசு மிகக் கவனத்தோடும் விடாப்பிடியான தொடர்ச்சியுடன் செயல்பட்டார்கள். மாநாட்டின் முன் வைக்கப்பட்ட அறிக்கைகள் மீது இனச் சிறுபான்மை பகுதி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் ஏற்படுகிற பிரச்சனைகள், தேவைகளை குறித்தும் விவாதித்தார்கள். மாநாடு நடைபெறக்கூடிய காலத்திலேயே இன சிறுபான்மையினர் முன்வைத்த தேவைகளை அமலாக்கம் செய்வதற்காக வன மீட்பு, விவசாயம், போக்குவரத்து, அஞ்சல், மற்றும் தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் வரிவிதிப்பு போன்ற துறைகள் விவாதித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையை மாநாட்டிலே வழங்கினார்கள். 15 நாள் மாநாட்டிற்காக தேவையை இப்போது புரிந்துகொள்ள முடியும். இதற்கான முக்கியத்துவம் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அதிகமாக கொடுக்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக  நாட்டின் துணை பிரதமர், இன சிறுபான்மை வர்த்தகத்தின் முக்கிய பங்காற்றியவர் சென் யுன் கலந்து கொண்டார்.

இன சிறுபான்மை பகுதிகளில் இன வர்த்தகம் நல்ல பலன் அளித்துள்ளது என்றும் சகோதர இனக்குழுக்கள் என்று அழைக்கப்படுகிற எல்லைப்புற இனக்குழுக்களால் நன்கு வரவேற்கப்பட்டுள்ளன என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். இன வர்த்தகத்தில் உள்ள சிக்கல்கள் படிப்படியாக உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 15 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு அரசு நடத்தும் வர்த்தகத்தின் வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் மேலும் தெளிவாக முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் பயனாக அமைந்தது. பல முக்கிய பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு இந்த மாநாடு உதவிகரமாக அமைந்தது.

1952, 1955 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது மூன்றாவது நான்காவது இன சிறுபான்மையினர் வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதே காலத்தில் பிராந்திய அளவிலான இன வர்த்தகக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. முந்தைய மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமலாக்குவது மேம்படுத்துவது என்ற முறையில் இன வளர்ச்சியின் நிலைமைகளை மதிப்பீடு செய்தனர்.

1957-க்கு பிறகு தேசிய சூழ்நிலைகள் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இன வர்த்தகத்திற்கான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன வர்த்தக மாநாடுகள் தேசிய அளவில் நடைபெறவில்லை. ஐந்தாவது தேசிய இன வர்த்தக வேலை மாநாடு மீண்டும் அக்டோபர் 20 1962 ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. இவற்றில் முக்கிய கொள்கைகளையும் தேவையான அமைப்புகளையும் உருவாவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில் இனச் சிறுபான்மையின் பகுதிகளை பொதுப்பகுதிகள், மேய்ச்சல் நிலப் பகுதிகள், தொலைதூர மலைப் பகுதிகள் என்று மூன்றாவது பிரித்தார்கள். இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப நிர்வாக அமைப்புகளை உருவாக்கி அமலாக்கினார்கள்.

இன வர்த்தக நிறுவனங்களில் 80% நிதி அரசும் 20% வங்கிகள் மூலமும் அளிக்கப்படும். இவற்றின் மூலம் கிடைக்கின்ற லாபத்தை இந்த நிறுவனங்கள் உடனடியாக திரும்ப செலுத்த வேண்டியது இல்லை. அவற்றை இன வர்த்தக வளர்ச்சி ஏற்படுவதற்கான நிதி ஆதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அமலாக்கினார்கள். இவை இன சிறுபான்மையினர் பகுதியில் வர்த்தகம் வளரும் வரை அனுமதிக்கப்பட்டது. விலைக் கொள்கையில் தரம் என்ற பெயரால் விலையை சகட்டுமேனிக்கு உயர்த்துவது தடை செய்யப்பட்டது.

இந்த மாநாடுகளில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கியமான முடிவு இன வர்த்தக பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை உயர்மட்ட பொறுப்புகளுக்கு உயர்த்துவதாகும். இதற்காக கற்பித்தல், கற்றல் நடைமுறைகளை மேம்படுத்தினார்கள். வணிகக் கேடர் பள்ளிகள் நீண்டகால, குறுகிய கால பயிற்சிகளை துவக்கினார்கள். இந்தப் பயிற்சியின் மூலம் ஹான் பேரின வாதத்தையும் உள்ளூர் பேரினவாதத்தையும் முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இன சிறுபான்மையினர் வர்த்தக பிரதிநிதிகள் தேசிய உணர்வோடு இணைப்பதற்கான தேசிய பணி மாநாடு நடத்தப்பட்டது. நியமனங்களை பொறுத்தவரை இனச் சிறுபான்மை மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் 70 முதல் 80 சதவிகித இன சிறுபான்மை சார்ந்த அதிகாரிகளையும், இன சிறுபான்மை மக்கள் குறைவாக இருக்கக்கூடிய இடத்தில் 40 முதல் 50 சதவீத அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும் என்ற முடிவை அமல்படுத்தினார்கள். மேலும் தன்னாட்சிப் பகுதி மாகாணம் மாவட்டத்தில் நடத்தப்படும் ஒவ்வொரு இன வர்த்தக நிறுவனத்திலும் மேலாளர், துணைத் தலைவர் போன்றவற்றை நிர்வகிக்க இனச்சிறுபாமையினரை நியமிக்க வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் குடியரசும் இனச் சிறுபான்மையினரை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான மிகப் பிரம்மாண்டமான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சி கடைபிடித்த இனக் கொள்கை என்பது உண்மையிலேயே புரட்சிகரமானது மட்டுமல்ல இதற்கு முன்பு வேறு எங்கும் கடைபிடிக்காத சீனப் பண்புகளுடன் கூடிய கொள்கையாகும். உலகம் முழுவதும் உள்ள இனச் சிறுபான்மையினரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் சீனாவின் இன சிறுபான்மையினர் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதை உலகம் மறுக்க முடியாது.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

55 மாற்றம் கண்ட இன வர்த்தக மாநாடுகள்

  அ.பாக்கியம் இன வர்த்தக மாநாடு என்பது மாறுபட்ட மாநாடாகும். கடைநிலை மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான துல்லியமான முறையில் திட்டம...