Pages

சனி, ஜனவரி 31, 2026

நவ பாசிச சக்திகளின் வேர்களில் வென்னீராக... நூல் அறிமுகம்:


“மதம் என்பது மனிதனின் அடிப்படை உண்மை அல்ல; மதம் ஒரு மனித படைப்பு. மதம் ஒரு பொய் என்று மட்டுமே கூறி, அதனை அகற்ற முடியாது. மக்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, மதம் தேவையில்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவதன்மூலம் தான் அதை அகற்ற முடியும்”. (32)

இப்படித்தான்... “சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்” என்கிற அ.பாக்கியம் எழுதிய நூல் விரிகிறது. மொத்தம் பத்தொன்பது தலைப்புகளில் பாமரனும் படிப்பதற்கு இலகுவாக வெளிவந்துள்ளது. அதற்காக எட்டுக்கும் மேற்பட்ட நூல்கள், இருபத்தெட்டுக்கும் மேற்பட்ட வலைதள இணைப்பு களின் கட்டுரைகள் ஆகியவற்றை ஆதாரமாக்கப்பட்டு, சுமார் நூற்றம்பது பக்கங்களில் நம்மை பிரமிக்க வைத்துள்ளார்.

சீனா என்றாலே... பாம்பு, பல்லி, தவளை தின்பவர்கள்; புற்றீசல்போல் மக்கள் தொகை கொண்டவர்கள்; அதொரு சர்வாதிகார... இரும்புத்திரைக் கொண்ட நாடு; ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களுக்கு மரணம் நிச்சயம்; சுட்டு தள்ளிவிடுவார்கள்; எந்த சுதந்திரமும் கிடையாது என்றெல்லாம் வாய்கிழிய பிரச்சாரம் செய்யப்பட்ட காலம் ஒன்று உண்டு. அதெல்லாம் எவ்வளவு பெரிய கட்டுக்கதை என்பதையும், மனித சுதந்திரமும் முதல் மத சுதந்திரம் வரை எப்படியெல்லாம் ஜனநாயக புரட்சிக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் கட்டி அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற தலைப்புகளை வாசித்து கடக்கிறபோது மெய்சிலிர்த்து போகிறது.

அதுபோலத்தான் 5000 ஆண்டு பழமைமிக்க நாகரீகம் சீன நாகரீகம் என்பதை ஐநூறு லிட்டர் பாலை அரைலிட்டர் பாலாக சுண்டவைத்து பரிமாறினால், எப்படி இருக்குமோ, அதுபோல் ஜனநாயக புரட்சிக்கு முன்பான கால கட்டத்தில் மனிதமும் மதமும் எப்படி சீனத்தை ஆண்டது என்பதை மிக அற்புதமாக அவருக்கே உரிய பாணியில் விவரிக்கிறார். நம்மை அப்படியே அந்த லோகத்திற்கு அழைத்து செல்கிறார் என்றால்... பாருங்களே..!

“இன்றைய சீனாவில் பெரும்பான்மையான மக்கள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றக்கூடியவர்களல்ல. மத நம்பிக்கை அற்றவர்கள் 52.2 விழுக்காடு. முன்னோர்கள் மற்றும் நாட்டுப்புற நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் (கம்பியூசியவாதிகள்) 21.9 விழுக்காடு. பௌத்தம் நம்பிக்கையாளர்கள் 18.2 விழுக்காடு. தாவோயிசவாதிகள் 3 விழுக்காடு. புரோட்டஸ்டன்ட் 3.8 கோடி. கத்தேலிக்கர்கள் 60 லட்சம். இஸ்லாமியர்கள் 2.5 கோடி. ஒப்பீட்டளவில் பௌத்தம் மிகப்பெரிய மதம்” என்கிறது இந்நூல்.

சீனத்தில் முளைவிட்ட தத்துவங்களாக... கன்பியூசியம், மென்சியம், தாவோயிசம், மோஷிசம், சட்டவாதம் இருந்துள்ளது. இவைகளே மக்களை ஆட்கொண்ட வாழ்வியல் தத்துவங்களாக இருந்திருக்கிறது. இவைகளை பிற்காலத்தில் பற்பல காலகட்டங்களில் பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம் எல்லாம் உட்கொள்ள போராடி உள்ளன என்பதை இந்த நூலில் காணமுடிகிறது. ஆம், இவற்றை ஏறக்குறைய நூறுப்பக்கங்களிலேயே அப்படியே பிரித்து மேய்ந்துவிடுகிறது இந்நூல்.

அடுத்து ஒரு அறுபது பக்கங்களில், மதம் என்கிற யானைகளிடமிருந்து சீன மக்களை மீட்பது எப்படி என்கிற போராட்டத்திலேயே பெரும்பகுதி செலவளிக்கப்பட்டதையும், நால்வர் அணியின் தவறான புரட்சியால் ஏற்பட்ட ரணங்களை ஆற்றுப்படுத்துவதிலுமே பெரும்பகுதி காலம் ஆயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தொன்பதுக்குப் பிறகு ஓடியிருக்கிறது என்கிறதைக் கடக்கிறபோது கனந்த இதயம், அதிலிருந்து குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றப்பட்டது என்கிற பகுதியை கடக்கிடபோது கனந்த இதயம் மகிழ்ந்தது.

ஆம், 52 விழுக்காட்டுக்குமேல் மதத்தை நம்பாதவர்கள் இன்று சீனத்தில் இருக்கிறார்கள் என்றால், அதென்ன அவ்வளவு சாதாரண விடயமா? சரித்திர சாதனை அல்லவா? நல்லவேளையாக அங்கு இங்கு இருப்பதைப்போன்ற ‘சாதி’ சனியன்கள் தோன்றவில்லை. அது இருந்திருந்தால்... என்னவாகி இருக்கும் சீனம் என நினைத்துப் பார்க்கிறது மனசு..! ஆதிபூர்வீக தத்துவங்கள் என்ன சொல்கிறதென பார்ப்போமா?

கன்பியூசியம்: சீன மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளின்மீது அதன் கோட்பாடு அமைந்திருந்ததனால், மக்கள் அதை விரும்பினார்கள் (56).

மென்சியம்: கன்பியூசியம் கட்டுமானத்தில் இரக்கம், அவமானம், மரியாதை, ஒப்புதல் அல்லது மறுப்பு இவை நான்கும் அடிப்படையாக கொண்டு கட்டப்படுவதாகும். (62).

தாவோயிசம்: கன்பியூசியத்திற்கு முன்பே இது பிறந்திருந்தாலும், கன்பியூசியத்திடமிருந்த மூதாதையர்களின் வழிப்பாட்டு முறைகளுக்கு மாறாக மாற்று தத்துவங்களை இது போதித்தது. (67).

தாவோயிசம் பற்றி நூலாசிரியர் கூறுகிறார்... “கன்பியூசியம் மனித இயற்கையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது. தாவோயிசம் இதற்கு நேர்மாறாக செயல்பட்டு, இதன் கோட்பாடுகள் மத விஷயமாக உருப்பெற்று, பிற்காலத்தில் மதமாகவே மாறியது” (71).

மோஹிசம்: மேற்காணும் இசங்களுக்கு சவால்விடும் இசமாக இது இருந்து உள்ளது. நூலாசிரியர் பதிவு செய்கிறார்... “ஒரு மனிதன் பட்டினியாக இருந்தால், அவனுக்கு சோறு போடு; அவன் குளிரில் அவஸ்தைப்பட்டால் போர்வை கொடு; நோயால் பாதிக்கப்பட்டால், சிகிச்சை செய்; செத்துப்போனால் குழிதோண்டி புதைத்துவிடு”.

சட்டவாதம்: கன்பியூசியம், மென்சியம், தாவோசியம் போன்ற தத்துவங்கள் மக்கள் தங்கள் ஆட்சியாளரின் நல்லொழுக்கத்தை அங்கீகரிப்பதன் மூலமாக சமூக நல்லிணக்கத்தை உறுதிபடுத்த முடியும் என்று நம்பினார்கள். ஆனால் சட்டவாதம்... இது சாத்தியமில்லை என்றது. வலுவான அரசு கட்டுப்பாடும், அதிகாரத்திற்கு முழுமையான கீழ்படிதலும் மூலமாகத்தான் நாடு வளரும் என்றது (80).

சீனத்தை பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம் எல்லாம் எப்படி உட்கொண்டன என்பதை நான்கு அத்தியாயங்களில் விரிவாக பேசுகிறார். கடைசி எட்டு அத்தியாயங்களில் புதிய ஜனநாயக புரட்சியால் நிகழ்ந்த பிரமிக்கத்தக்க மாற்றங்களை, அல்லது வளர்ச்சிகளை விளக்குகிறார். நால்வர் அணியால், கலாச்சாரப் புரட்சியால் நேர்ந்த கேடுகளைக் கடந்து, சீனத்தை வளர்ச்சி மேடுகளாக்கி, சோசலிச சீனமாக சாதித்ததை நூலாசிரியர் பதிவிடுகிறார்... “முதியவர்களும், இளைஞர்களும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கணிச்சமாக குறைந்து இருக்கிறது. அது 2012ல் 53 விழுக்காடாக இருந்தது. 2018ல் 45 விழுக்காடாக விழுந்தது. 2021ல் 35 விழுக்காடாக வீழ்ந்தது. இளைஞர்கள் மத்தியில் இது மிகமிக குறைவாக இருக்கிறது” (152).

பண்டை கால வரலாறுகளை ஆய்வதற்கு பொறுமை தேவை. எந்தளவுக்கு வேண்டுமென்றால், இந்நூலாசிரியர் ஏ.பாக்கியம் அளவிற்கு வேண்டும் என்பேன். காரணம்... சீனம் மற்றும் திபெத் தொடர்பாக தொடர்ந்து வலைதளங்களில் எழுதிவரும் தொடர்களைக்கூட முழுமையாக படிப்பதற்கு சலிப்பு தட்டியிருக்கிறது எனக்கு. ஆனால், சலிப்பு என்றால், அது எங்கே விற்கிறது என்கிற அளவிற்கு இந்நூல் படிப்போரைத் தட்டியெழுப்புகிறது. பண்டைய வரலாறுகளை எழுதுகிறபோது, தரவுகள் மிகமுக்கியம். தரவுகளை மூட்டைகளாக அடுக்கினால், வாசிப்பு அறுந்துவிடும். அத்தகைய ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த நூலாசிரியர் அவற்றை அளவோடு படையலிட்டுள்ளார். பாராட்டுக்கள்.

சீன சோசலிசத்தில் மதங்களும், வழிபாடுகளும் என்று நூலின் பெயர் இருந்தாலும், சீன தேசத்தில் மதங்களும், வழிபாடுகளும் என்பதுதான் இந்நூலை ஆக்கிரமித்துள்ளது.  அது அவசியமும்கூட.

நூல் வடிவமைப்பு சிறப்பாக வந்துள்ளது. காற்றின் தீரா பக்கங்களைத் தந்த தூவல் கிரியேஷன்ஸ் மெச்சத்தக்கதே. அட்டைப்படம் அமைப்பு அருமை. தமிழ்கூறும் நல்லுலகுக்கு மேலும் ஒரு அரிய கொடை இந்நூல். மாவோ நெடும்பயணம் படித்திருக்கிறேன். சீனப்பெரும் சுவர் படத்தில் பார்த்திருக்கிறேன். சீனர்களின் நெடும் வாழ்க்கையை கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. அந்த குறையை இந்நூல் போக்கிவிட்டது.

ஐயாயிரமாண்டு பழமை வாய்ந்த சீனம் இன்று எப்படி உலகையே உற்றுப் பார்க்க வைக்கிறது? இத்தகைய பழமையான நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி சோசலிச பாதையை தேர்ந்தெடுத்தனர் என்பதை இவ்விதமாக நூலாசிரியர் பார்க்கிறார் போல... “சீன நாகரீகம் பெரும் புராணங்கள், இதிகாசங்கள் அடிப்படையிலான வழிப்பாடு, உயிரினங்கள் உள்பட அனைத்தையும் ஆக்கியதும், இயக்குவதும் முழு முதல் கடவுள் என்ற கோட்பாடுகளுக்கு உட்பட்டோ சீனாவில் வழிப்பாட்டு முறைகள் இல்லை”.

“ஒரே நேரத்தில் உண்மையான துன்பத்தின் வெளிப்பாடாகவும், உண்மையான துன்பத்திற்கு எதிரானப் போராட்டமாகவும் மதம் இருக்கிறது” என்கிற காரல்மார்க்ஸ் வார்த்தைகளில் துவங்கி, “எங்கள் கடவுள் சீன தேசத்தின் வெகு மக்களேத் தவிர வேறு யாரும் இல்லை” என்கிற மாவோ வார்த்தைகளோடு நிறைவடைகிறது.

நிறைவடைவது நூல் மட்டுமல்ல, இந்நூலை நுகரும் வாசிப்போரின் மனமும்தான். ஆம், நுகர்ந்து பாருங்கள் தெரியும். இந்நூல் சோசலிச விரும்பிகளுக்கு மட்டுமல்ல, இந்திய தேசத்தில் மக்கள் ஒற்றுமையை பேணிட விழைவோர், நவ பாசிசத்தை வேரறுக்க விரும்புவோர் யாவருக்கும் ஓர் கையேடு. ஆம், இந்திய நவ பாசிச சக்திகளின் வேர்களில் வென்னீரிட்டு வென்றிட இந்நூல் உரமிடுகிறது என்றால் மிகையல்ல!   

-பி.தங்கவேலு, 30.01.2026.

நூல் கிடைக்கும் இடம்

சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்

ஆசிரியர். அ.பாக்கியம்

விலை 250.

தூவல்கிரியேஷன்ஸ் தமிழ்மார்க்ஸ் பவுண்டேஷன்

Gpay 94863 44333

சிந்தன் புக்ஸ்

327 /1 திவான் சாஹிப் கார்டன்

டிடிகே சாலை, ராயப்பேட்டை

சென்னை 600 014

செல் பேசி: 9445123164

வடசென்னை வாசி புத்தக நிலையம்

எண்:9, G.R. சாலை

பழைய வண்ணாரப்பேட்டை

சென்னை-21

செல் பேசி: 8508698507

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவ பாசிச சக்திகளின் வேர்களில் வென்னீராக... நூல் அறிமுகம்:

“மதம் என்பது மனிதனின் அடிப்படை உண்மை அல்ல; மதம் ஒரு மனித படைப்பு. மதம் ஒரு பொய் என்று மட்டுமே கூறி, அதனை அகற்ற முடியாது. மக்களைத் துன்பத்த...