அ.பாக்கியம்
இப்படி
ஒரு கேள்வியை எழுப்புகிற பொழுதே சீனா கால்பந்து போட்டியின் மைதானத்திற்கு வெளியே
அனைத்துமாக இருந்தது என்பதும் அடங்கி இருக்கிறது. உலக கோப்பை
கால்பந்து போட்டி உலகத்தில் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியாக
இருந்தாலும் சரி, தற்போது அமெரிக்கா,
கனடா, மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்தும் கால்பந்து
போட்டியானாலும் சரி மைதானத்திற்கு வெளியே உள்ள அனைத்து இடங்களிலும், அனைத்து பொருட்களிலும், சீனா தான் இருக்கிறது
என்பது உலகறிந்த விஷயம். கத்தாரில் 2022 ல் நடைபெற்ற
போட்டியின் போது மற்ற அனைத்து பொருட்களையும் தயாரித்து கொடுத்த சீனா, கால்பந்து போட்டியின் மைதானத்திற்கு தேவையான அதாவது பல மைதானங்கள் ஒளிருவதற்கு லட்சக்கணக்கான சூரிய
மின்சக்தி பேனல்களை நிறுவி மின்சாரத்தை முழுமையாக
அளித்தது. வேற எந்த நாடுகளும் குறுகிய காலத்தில் செய்ய
முடியாத ஒரு விஷயத்தை சீனா செய்து முடித்தது.
தற்போது
நடைபெறக்கூடிய 2026 ஆம் ஆண்டுக்கான உலக கால்பந்து போட்டிகளில் 16
பிரதான விளம்பரதாரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் நான்கு
பெரிய விளம்பர நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தது. ஆடுகளத்தை சுற்றி இருக்கக்கூடிய
விளம்பரங்கள் பெரும்பாலும் சீனத் தொழில்நுட்பங்களாலும், சீன
நிறுவனத்தாலும் உருவாக்கப்பட்டது. சீனாவின் லெனோவா நிறுவனம் உலகக் கோப்பை
போட்டியில் முதன்மையான அதிகாரப்பூர்வமான தொழில்நுட்ப கூட்டாளராக இருக்கிறது. மூன்று நாடுகளில் உள்ள ஒவ்வொரு மைதானத்திலும் செயற்கை நுண்ணறிவு
அடிப்படையில், ஆடுகளத்தில் ஆப்சைடு (off-side) கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப அமைப்புகளை சீன நிறுவனம் வழங்கி வருகிறது.
ஹைசென்ஸ் என்ற சீன நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது முறையாக விளம்பரதாரராக
இருக்கிறது. இந்த முறை மிக முக்கியமாக வார் (VAR)அமைப்புகளுக்கான
காட்சி உபகரணங்களை தொழில்நுட்பத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது.
இதற்கும் மேலே, ஜெஜியாங்கி மாகாணத்தில் உள்ள யிவூ
நகரம், குவாங் டாங்,
ஷான்டாங் ஆகிய இடங்களில் இருந்து
உலகக் கோப்பை போட்டியின் போது பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களிலும் 70 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களை இவர்கதான் உற்பத்தி செய்து அனுப்பி
வைக்கிறார்கள். அதாவது
சால்வைகள், ஜெர்சிகள்,
நினைவுப்பொருட்கள், ரசிகர்களின் வணிகப் பொருட்கள், போட்டியில் பயன்படுத்தப்படும் சிப்கள் பொருத்தப்பட்ட பந்துகள், என சீனாவில் இருந்து அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றை
அனைத்தையும் கடந்து தொடக்க விழாவில் சீனாவை சேர்ந்த பாப் மார்ட் நிறுவனத்தின் labubu
பொம்மை கலாச்சார குறியீடுகளாகவும் இடம்பெற்றுள்ளன. உலகக் கோப்பையின்
பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் சீனா தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக
உருவெடுத்துள்ளது.
மைதானத்திற்கு
உள்ளே சீனாவின் தேசிய கால்பந்தாட்ட அணி இல்லை என்றாலும் மா
நிங் (Ma Ning) தலைமையிலான நடுவர் குழு போட்டியை நிர்வகிக்கிறது. மா நிங் உலகக்
கோப்பையில் சீனாவைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். மா நிங் நேர்மைக்காக,
கண்டிப்பான நடுநிலைமைக்கான செயல்பாட்டுக்கான புகழ்பெற்றவர். இயல்பாகவோ அல்லது வளப்பினாலோ கார்டு மாஸ்டர்
என்ற பெயரை பெற்றுள்ளார். விதிகளை தீவிரமாக அமல்படுத்துவதால்
அவரை அனைவரும் வரவேற்கின்றனர். 2024 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை
இறுதிப் போட்டியை நடுவராக இருந்து சிறப்பாக நடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த உலகக் கோப்பையில் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பங்கேற்கிறார்.
எனவே
ஆடப்படுகிற பந்தில் இருந்து பவுல்களை
கண்டுபிடிக்கிற தொழில்நுட்பங்கள் முதல் நடுவர் வரை வழங்குகின்ற சீனா
ஏன் கால்பந்தாட்ட அணியாக உள்ளே செல்ல முடியவில்லை. அல்லது தகுதி போட்டியில் ஏன்
வெற்றி பெற முடியவில்லை என்பது கேள்வியாக எழத்தான் செய்யும். சீனா 2002 இல் முதல் முறையாக உலக கோப்பையில் பங்கேற்று விளையாடியது. அதன் பிறகு தகுதி பெற தவறிவிட்டது. முதல் முறையாக
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இணைந்து
நடத்தும் இந்தப் போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து
48 ஆக உயர்ந்த போதிலும் சீனா தகுதி பெறவில்லை. சீனா கால்பந்தாட்டத்திற்கு இதுவே மிகவும் வேதனையான எதார்த்தமான காலமாகும். 2026 ம் ஆண்டு தகுதிச் சுற்றில் மூன்றாவது சுற்று
வரை முன்னேறி பிறகு வெளியேறிவிட்டது.
கால்பந்து
என்பது ஒரு அடித்தள செயல்பாடு என்றும் அது இயல்பாக வளர அனுமதிக்கப்பட்டால் மட்டுமே
செழிக்கும் என்றும் லியான் ஹே ஸாபோ என்ற சீன செய்தி நிறுவனத்தின் இணை ஆசிரியர்
குறிப்பிடுகின்றார். சீனாவின் விளையாட்டு துறை தடகளத்திலும், நீச்சல் பேட்மிட்டன், இன்னும் பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் அரசின் மையப்படுத்தப்பட்ட
உதவியுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் கால்பந்தாட்டத்திற்கு தனித்துவமான பயிற்சிகள் அதற்கு ஏற்ற உதவிகளும்
தேவை . மேற்கண்ட விமர்சனம் நியாயமானதாகும். ஆனால் இதையே முன்
வைத்து தி எக்கனாமிஸ்ட் என்ற பத்திரிக்கை, கால்பந்தில் சீனா ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி
இருக்கிறது. இந்த கட்டுரையில் அவர் சீன ஆட்சி முறைகளோடு பொருத்தி, சீனா ஒரு சர்வாதிகார நாடு என்ற அம்சத்தை நிரூபிக்க பார்க்கிறார். தி எக்கனாமிஸ்ட் என்ற பத்திரிக்கை உலகம் அறிந்த முதலாளித்தத்தின்
முட்டு என்பதை அனைவரும் அறிவார்கள். இக்கட்டுரையில் கீழ்கண்டவாறு
எழுதுகிறார்.
உண்மையான
பிரச்சினை என்னவென்றால்,
சீனாவில் கால்பந்து அரசு அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் அது இலக்குகள், முழக்கங்கள் மற்றும்
அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களுடன் கூடிய ஒரு அரசியல் திட்டமாக மாறியுள்ளது. —
மார்க் டிரேயர், தி எகனாமிஸ்ட் இதழில் எழுதும் ஒரு
விளையாட்டு நிபுணர்.
மார்க்
டிரேயர், வாதிடுபோல் அரசு அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பல நாடுகள்
கால்பந்தாட்டத்தின் தகுதிச் சுற்றின் முதல் சுற்றுக்கு கூட
வர முடியவில்லை. குறிப்பாக இந்தியா லீக் ஆட்டம் முடித்து முதல் தகுதி சுற்று
ஆட்டத்திலேயே வெளியேறி வருகின்றது. எனவே ஒரு கால்பந்தாட்ட அணியை வைத்து திறமையான
எழுத்துக்கள் மூலம் சீனாவை சர்வாதிகார அமைப்பு என்பதை நிலை நிறுத்துகிறார்.
உண்மையில்
சீன செய்தி ஆசிரியர் குறிப்பிட்டது போல், கால்பந்து என்பது இதர விளையாட்டுத்துறையான தடகளம்,
நீச்சல், பேட்மிட்டன் போன்ற பல வகையான விளையாட்டுகளில்
அரசின் மையப்படுத்தப்பட்ட திட்ட உதவிகளும் மேற்பார்வைகளும் தனித்துவமான
பயிற்சிகளும் இருக்கிறது. ஆனால் கால்பந்து விஷயத்தில் அப்படி இருக்க முடியாது
என்பதையும் ஒரு அடித்தள செயல்பாடுகளில் இருந்து வரக்கூடியதாக இருக்க வேண்டும்
என்பதையும் கடந்த காலத்தில் முழுமையாக உள்வாங்காத பலகீனம் சீன கால்பந்தாட்ட
முறைகளில் இருந்தது. அதே போன்று குழப்பமான லீக் நிர்வாக முறைகள் காணப்பட்டது. 2010 ஆம் ஆண்டிலிருந்து மணிப்பால் கால்பந்து (Money ball football) என்கிற வகையில் செயல்பட்டார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால் குறைந்த
நிதி வளங்களை கொண்டு, குறைந்த மதிப்பிடப்பட்ட வீரர்களை
கண்டுபிடித்து அவர்களின் திறமையை வளர்த்து போட்டி தன்மை உள்ள அணிகளை உருவாக்குவது
என்பதாகும். இந்த முயற்சிகள் சீனாவில் வெற்றி பெறாமல் சிதைவுக்கு உட்பட்டன.
பள்ளியில் உருவாக்கப்பட்ட கால்பந்தாட்ட திட்டங்களும் தொழில்முறை கால்பந்தாட்ட
அமைப்பில் தடம் பதிக்க இயலாத சூழ்நிலைகளும் இருந்தன. இதில் அரசின் கொள்கை
பிரச்சினைகளும் அடங்கி இருக்கிறது.
சீன
நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் மேலிருந்து
கீழான திட்டமிடல் சீனாவிற்கு நன்கு பயனை தந்துள்ளது. இதேபோன்று மீண்டும் மீண்டும்
பயிற்சி செய்வதன் மூலமும் மையப்படுத்தப்பட்ட பயிற்சி முறைகள் மூலமும் வெற்றிகளை
உருவாக்க முடிவதால் தனிநபர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் சீனா சிறந்து விளங்குகிறது.
இதிலிருந்து மாறுபட்ட முறையில் இருக்கக்கூடிய கால்பந்து விளையாட்டானது
சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுதல், கணிக்க முடியாத தன்மை மற்றும் ஆழமான அடித்தளம் ஆகியவற்றை சார்ந்து உள்ளது. ஒரு வெற்றிகரமான கால்பந்து கலாச்சாரம் என்பது பொதுவாக உள்ளூர்
சார்ந்ததாகவும், இயல்பானதாகவும் இருக்கும் என்றும் அது
குழந்தைகள் முறை சாராமல் விளையாடுவதையும், தனித்தன்மையுடன்
கூடிய சமூக பரிணாம வளர்ச்சியும் கால்பந்தாட்ட முறைகள் சார்ந்திருக்கும் என்பதை
சீனாவின் புதிய காலகட்ட விளையாட்டு துறை புரிந்து கொண்டிருக்கிறது.
தற்போதைய
அதிபர் ஷி ஜின்பிங் நீண்ட காலமாகவே கால்பந்தாட்டத்தின் தீவிர ரசிகராக இருந்து
வருகிறார் 2011 ஆம் ஆண்டில் அப்போது அவர் துணை அதிபராக இருந்தார். அவர் துணை அதிபராக
இருந்த பொழுது, கால்பந்தாட்டம் குறித்து மூன்று ஆலோசனைகளை
வெளிப்படுத்தினார். உலக கோப்பைக்கு தகுதி பெறுவது. உலகக்கோப்பை போட்டியை சீனாவில்
நடக்குவது. அடுத்ததாக உலக கோப்பையை வெல்வது என்ற இலக்கை முன்வைத்தார். இவரின்
விருப்பத்தின்படியே எடுத்துக் கொண்டாலும் FIFA வின் தற்போதைய
சுழற்சி முறையின்கீழ் சீனா ஒரு உலக கோப்பையை நடத்தக்கூடிய வாய்ப்பை 2042 ஆம் ஆண்டு வரலாம் என்ற நிலை உள்ளது. 2030 ம் ஆண்டு போட்டி ஸ்பெயின்,போர்ச்சுகல்,மொராக்கோ
நாடுகளில் நடைபெற உள்ளது. உலக கோப்பை போட்டி ஆரம்பித்து 100ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு
தலா ஒரு தொடக்கப்போட்டி உருகுவே, அர்ஜென்டைனா,பராகுவே நாடுகளில் நடைபெறும். முன்று
கண்டத்தில் 6 நாடுகளில் இப்போட்டை நடைபெறுகிறது.2034 ஆண்டு சவுதி அரேபியாவில் நடக்கும்.
எனவே 2042ம் ஆண்டு போட்டிகள் சீனாவில் நடத்துவதற்கு வாய்ப்புகள்
அதிகம் இருந்தாலும் மற்ற இரண்டு இலக்குகளையும் சென்றடைவதற்கான முயற்சிகளையும் எடுத்து
வருகிறார்கள் அதில் வெற்றி பெறுவார்களா? இல்லையா? என்பதை
காலம்தான் முடிவு செய்யும்.
புதிய
நிலைமை என்னவென்றால், அடிமட்ட ஆற்றலை உள்ளடக்கிய ஒரு வகை கால்பந்து முறைகள் சீனாவில் உள்ளூர்
மட்டத்தில் வேகமாக உருவாக தொடங்கி உள்ளது. குய்ஜோவின் “கிராம
சூப்பர் லீக்குகள்” மற்றும் ஜியாங்சுவின் “சு சூப்பர் லீக்” போன்ற அடிமட்ட
லீக்குகள் நடந்து வருகின்றது. இவை புத்துணர்ச்சியூட்டுவதாகத்
தெரிகின்றன. அவை உள்ளூர் மக்களால் இயக்கப்படுவதாலும்,
குறைந்த நுழைவுத் தடைகள் மற்றும் இலகுவான நிர்வாகக்
கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதாலும், அதிக உணர்ச்சிபூர்வமான
மதிப்பையும் பரந்த மக்களைச் சென்றடை தலையும் கொண்டுள்ளன. சில
போட்டிகள் தொழில்முறைப் போட்டிகளை விட அதிக பரபரப்பைக் கூட்டுவதாக இருக்கின்றன.
இந்தப்
போட்டிகள் தேசிய அணி அமைப்பையோ அல்லது உயர்மட்ட அகடமிகளையோ சார்ந்திருக்காமல், அடிமட்ட, உள்ளூர் மற்றும் சுயமாக ஒருங்கிணைக்கப்பட்ட
முயற்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. அவை தொழில்முறைப் போட்டிகள் அல்ல.,
ஆனால் கால்பந்தாட்டத்திற்கு இன்றியமையாத ஒரு கூறான தன்னிச்சையான
பங்கேற்பைக் கொண்டுள்ளன. குறிப்பாக, கிராமப்புற சூப்பர்
லீக்குகளில் பகல்நேர வேலை செய்யும் கால்பந்து வீரர்களே இடம்பெறுகின்றனர். அங்கு அதிக சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டார்கள் யாரும் இல்லை. மேலும் பார்வையாளர்கள் காண்பது என்னவென்றால், "அடுத்த
கிராமத்தைச் சேர்ந்த வாங், பக்கத்து குக்கிராமத்தைச் சேர்ந்த
லீயை எதிர்த்துப் போட்டியிடுகிறார்" என்ற முறையில் திறன்மிகு வீர ர்களை
முன்வைத்து மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
அடிமட்ட
கால்பந்தின் இந்த எழுச்சி,
காலப்போக்கில் ஒரு அமைப்பு சார்ந்த போட்டித்தன்மையாக மாறி, சீனாவை ஒரு கால்பந்து வல்லரசாக உருவெடுக்க உதவுமா என்பதை காலம்தான்
சொல்லும். ஆனால் வல்லுநர்கள் பரிந்துரைக்கும் அடிப்படை
தர்க்கத்திற்குப் இது பொருந்துகிறது. சக்திவாய்ந்த கால்பந்து
அணி உருவாக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். கால்பந்து,
திட்டமிடலை அல்ல, பங்கேற்பையே தொடக்கப்
புள்ளியாகக் கொண்டு இயல்பாக வளர வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் அதிகமாகி உள்ளது.
உலகளவில்
பிரம்மாண்டமான வடிவமைப்பில் மிகவும் கைதேர்ந்த நாடுகளில் ஒன்றாக சீனா இருக்கிறது. ஆனால் கால்பந்து
என்பது திட்டமிட முடியாத ஒரு விஷயமாகும். அதன் மிகப்பெரிய வசீகரம் அதன் கணிக்க
முடியாத தன்மையில்தான் அடங்கியுள்ளது. இதனால்தான், சிறந்த
கால்பந்து நாடுகள் அனுபவத்தில், அதன்
இலக்குகளிலிருந்து உருவாவதைவிட, பெரும்பாலும் கால்பந்து
தெருக்களிலிருந்தும், சமூகங்களிலிருந்துமே உருவாகின்றன. இதற்கு ஆப்பிரிக்கநாட்டு பலவீர ர்களையும், பிரேசில் நாட்டு
பலவீரர்களையும் ஏராளமாக குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக