Pages

புதன், செப்டம்பர் 24, 2025

39 திபெத் தலாய்லாமாவின் நிழல் முகத்தின் நிஜ அடையாளம்

 



 

அ.பாக்கியம்

 

முகத்தில் புன்னகை.பேச்சில் சமாதானம். உடையில் துறவியின் தோற்றம். மொத்தத்தில் சாந்த சொரூபம். இதுதான் தலாய்லாமாவின் பிம்பம். அவர்களது ஆதரவாளர்களும், அவரை பயன்படுத்தும் ஆதிக்க அரசியல் சக்திகளும் இந்த பிம்பத்தை உலகம் முழுவதும் கட்டமைத்து தங்களது கெட்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறார்கள். தலாய்லாமாவின் உண்மை வரலாறுகளை அறிந்து கொண்டால் இந்த பிம்பங்கள் அனைத்தும் தவிடு பொடியாகி தகர்ந்து விடும்.

ஒரு துறவியின் அடிப்படை அம்சமே வன்முறையை முற்றிலும் எதிர்ப்பதும்,உலகத்தில் வன்முறை நடந்தால் அந்த சம்பவங்களை எதிர்ப்பதும், அமைதியான வழியில் அவற்றை சமூகத்தில் இருந்து அகற்றுவதும் தான் ஆகப்பெரும் பணியாகும். தலாய்லாமாவும் அப்படித்தான் செய்வதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் வன்முறைக்கு எதிராக எடுத்த சபதங்கள் அனைத்தும் ஒருதலை பட்சமானது மட்டுமல்ல பொய்யானதும் கூட என்று உறுதியாகக் கூற முடியும்.

அவர் நீண்ட காலமாக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ விடமிருந்து சம்பளம் வாங்கும் பட்டியலில் இருந்தார். நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசுக்கு கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. இவைகள் தவிர தலாய்லாமாவிற்கு என்று தனியாக 1,80,000 டாலர் சம்பளமாக கொடுத்தது அமெரிக்கா. இன்று இந்தத் தொகையின் மதிப்பு 1 கோடியே 53 லட்சம் ஆகும். இந்தத் தொகையை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவில்லை என்று அவரது அலுவலகம் அறிவித்தது. அவர் அந்த நிதியை எதற்குப் பயன்படுத்தினார் தெரியுமா? சீன அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடக்கூடிய கொரில்லாக்களுக்கான ஆயுதப் பயிற்சிகளுக்காக அந்த நிதி பயன்படுத்தப்பட்டது. இந்த செயல்பாடானது வன்முறைக்கு எதிராக அவரது சபதத்தில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அகிம்சை ஆதரவாளர் என்ற பொய் பிம்பம்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் சுடுகாடாக மாற்றி வருகிறது. குண்டு மலைகளைப் பொழிந்து குழந்தைகளையும் கொன்று குவிக்கிறது. பட்டினி சாவுகள் காசா முழுவதும் கவ்விப் பிடித்துள்ளது. உலகத்தின் மனசாட்சியை உலுக்கி கொண்டிருக்கும் இந்த கொடூர செயல் தலாய்லாமாவின் மனசாட்சியின் கதவுகளை தட்டவில்லையா என்ற கேள்வி எழுகிறது. கிறிஸ்துவ மதத்தின் தலைமை பீடமாக இருக்கக்கூடிய வாடிகனில் இருந்து மறைந்த போப் பிரான்சிஸ் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்ரேல் காசாவை தாக்கிய பொழுது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் காசா மீது நடத்துவது ஒரு இனப்படுகொலையா என்பதை உலகம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார். இதற்கு முன்பே 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் காசாவின் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை பயங்கரவாதம் என்று போப் பிரான்சிஸ் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். ஆனால் சமாதானத்திற்காக அமெரிக்காவின் ஆசிர்வாதத்துடன் நோபல் பரிசை பெற்ற தலாய்லாமாவிற்கு இதுவெல்லாம் வன்முறையாகவோ மனித குல அழிவாகவோ அவருக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருப்பதை அறியாதவர் போலதான் இன்றைக்கும் அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

1950 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை வியட்நாமில் உக்கிரமான போர் நடைபெற்றது. பிரஞ்சுப் படைகளும் அமெரிக்க படைகளும் வியட்நாம் மக்கள் மீது கந்தகக் குண்டுகளை வீசினார்கள். இந்த போரில் வியட்நாமில் 20 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் வரை மடிந்து போனார்கள். லட்சக்கணக்கான கம்போடியர்களும், லாவோடியர்களும் அமெரிக்க வல்லரசுகளின் இந்த வன்முறை தாக்குதலால் உயிரிழந்தார்கள். வியட்நாம் யுத்தத்தை எதிர்த்து உலகின் மூலைமுடுக்கெல்லாம் மக்கள் கொதித்து எழுந்தார்கள். அமெரிக்காவில் பொதுமக்கள் வீதிகள் தோறும் வியட்நாமை தாக்காதே என்று பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். இந்த யுத்தத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான பௌத்தர்கள் போராட்டங்களில் பங்கு பெற்றார்கள்.

வியட்னாமில் அமெரிக்காவுக்கு எதிராக பௌத்தர்கள் களத்தில் இறங்கி உயிரை மாய்த்துக்கொண்டு போராடினார்கள். கம்யூனிஸ்டுகளும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும் வேறுபாடுகள் இன்றி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமர்புரிந்தனர். ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக உலகமே எழுப்பிய உரத்த குரல் தலாய்லாமாவின் காதுகளுக்கு எட்டவில்லை. இந்தப் போர் எதிர்ப்பில் அவர் பங்கு கொள்ளவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. இதற்கு மாறாக அமெரிக்காவின் யுத்தத்தை ஆதரித்து நின்றார் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.

1980 ஆம் ஆண்டுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தது. நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்பட்ட ஈராக் என்ற தேசத்தை சுவடுகள் தெரியாமல் சாம்பல் ஆக்கியது. லிபியா என்ற நாட்டை தனது லாபவெறிக்காக வேட்டையாடி மக்களை சாகடித்தது. இந்தக் காலங்கள் முழுவதும் மேற்கண்ட நாடுகளில் அமெரிக்கா பொதுமக்களை கொன்று குவித்து அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதித்தது. ஆனால் நோபல் பரிசு நாயகனான தலாய்லாமா இதைப் பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிட்டது இல்லை. ஒரு சிறு கண் அசைவில் கண்டிப்புகளை கூட செய்யவில்லை என்றால் இவர் வன்முறையை எதிர்க்கிறாரா ஆதரிக்கிறாரா என்று தான் கேள்வி எழுகிறது.

தற்பொழுது இந்திய அரசு தலாய்லாமாவிற்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது. இதன் சூத்திரதாரியாக இருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது தலாய்லாமா பற்றி குறிப்பிட்டதை நாம் கவனிக்க வேண்டும். 2010 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஜம்மு காஷ்மீர் காவல் துறையும், இந்திய துணை ராணுவப் படைகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 வயது சிறுவன் உட்பட 117 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 2010 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தான் இந்தப் போராட்டங்கள் ஓரளவிற்கு தணிந்தது. அமித்ஷா அப்பொழுது குஜராத்தில் அமைச்சராக இருந்தார். காஷ்மீரின் இந்த படுகொலையை தலாய்லாமா ஒரு போதும் கண்டிக்கவில்லை என்று அமித்ஷா வருத்தப்பட்டுக் கொண்டார்.

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பௌத்தர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். மியான்மரில் இருந்து விரட்டப்பட்டார்கள். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய செய்தியாக இது மாறியது. இவருடன் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி மீதும் கடுமையான விமர்சனமும் இக்காலத்தில் எழுந்தது. ஆனால் சமாதான தூதுவர் தலாய்லாமா மியான்மர் அரசை கண்டிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை கூட தெரிவிக்கவில்லை. எனவே தலாய்லாமா வன்முறை எதிர்க்கக் கூடியவர் என கட்டமைக்கப்பட்ட பிம்பம் இங்கே அம்பலப்பட்டுள்ளது.

திபெத்திய பௌத்தர்கள் எதிர்க்கும் தலாய்லாமா

தலாய்லாமா தான் ஒட்டு மொத்த பௌத்தத்துக்குமே தலைவர் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவர் திபெத்தில் இருக்கக்கூடிய திபெத்திய பௌத்தத்தின் நான்கு பிரிவுகளில் ஒரு பிரிவான துல்கு பிரிவின் தலைவர் ஆவார்.

இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை தலாய்லாமா நடத்தி வருகிறார். மதத் தலைவரும் அவரே. இந்த அரசின் தலைவரும் அவரே. 2011 ஆம் ஆண்டு அவர் அரசு தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும், அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் அறிவித்தார். ஆனால் அதற்குப் பிறகுதான் அரசியலில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார் என்பதை அனைவரும் அறிவார்கள். அரசு பதவிக்காக முதல் முதலாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் நாடு கடத்தப்பட்ட அரசின் ஒட்டுமொத்த திபெத்திய வாக்காளர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களையும் சேர்த்து 89,000 மட்டுமே. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 49,000 வாக்குகள் பதிவாகியன. இந்த 49 ஆயிரம் வாக்குகளில் 55 சதவீதம் வாக்குகளை பெற்று அதாவது 27 ஆயிரம் வாக்குகள் பெற்று லோக்சங்க் சாங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதான் இந்தியாவில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாடுகளால் ஆதரிக்கக் கூடிய நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் நிலை. புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்காவில் வளர்ந்தவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தலைவரும் அமெரிக்காவில் வளர்ந்தவர். குறிப்பாக வெளிநாட்டில் வாழக்கூடிய திபெத்தியர்கள் இந்தியாவை தளமாக கொண்டு செயல்படக்கூடிய விவேத்தீர்கள் தான் அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

தலாய்லாமாவை எதிர்த்து திபெத்திய பௌத்தர்களின் பல பிரிவுகள் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். தலாய்லாமா மத சுதந்திரத்தை நசுக்குகிறார் என்றும், ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்றும் இந்த பிரிவுகள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். சுதந்திர ஊடகங்கள் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொள்ளக் கூடிய இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஊடகங்கள் தலாய்லாமாவிற்கு எதிராக நடைபெறக்கூடிய இந்தப் போராட்டங்கள் எதையும் சிறு செய்தியாக கூட வெளியிடுவது இல்லை. அவர்கள் தலாய்லாமாவிற்கு சேவகம் செய்வதன் மூலம் ஏகாதிபத்திய நலனை பாதுகாக்க கூடிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவிற்கு எதிராக ஒரு சிறிய செய்தி கிடைத்தாலும் அதனை தேசிய சர்வதேச செய்தியாக மாற்றி விடக் கூடியவர்கள். ராய்ட்டர்ஸ், ஏபி, ஏ எஃப், கார்டியன் போன்ற முன்னணி பத்திரிகைகளும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். தலாய்லாமாவிற்காக பிரச்சாரம் செய்வதற்கு சர்வதேச பிரச்சார அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதற்கான நிதிகளையும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் வழங்கி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலாய்லாமாவிற்கு எதிரான இயக்கம்

திபெத்திய பௌத்தத்தின் மிக முக்கிய பிரிவான டோர்ஜோ ஷூக்டன் என்ற பிரிவு தலாய்லாமாவை எதிர்த்து இயக்கங்களை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பைலகுப்பேயில் உள்ள ஷான் காண்டன் மடாலயமும், செர்ப்போம் துறவிகளின் பல்கலைக்கழகமும் இந்த பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களும் உலகம் முழுவதும் தலாய்லாமாவிற்கு எதிரான பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பகுதிக்கு தலாய்லாமா சென்ற பொழுது இந்த பிரிவினர் அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். 2014 ஆம் ஆண்டு தலாய்லாமா சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டிசி, ஓஸ்லோ, ரோட்டர்டேம், பிரான்ஸ் போன்ற இடங்களுக்கு சென்றார். ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் அவருக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார்கள்.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி இங்கிலாந்தில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற அப்சர்வர் என்ற பத்திரிக்கை தலாய்லாமாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடியவர்களை தீவிரவாத அமைப்பினர் என்று முத்திரை குத்தியது. இங்கு போராட்டம் நடத்திய பௌத்தர்கள், புதிய கடம்ப பாரம்பரியம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து டோர்ஜோ ஷூக்டன் பிரிவினரும் கலந்து கொண்டனர். அப்சர்வரின் பொய் செய்தியை எதிர்த்து இந்த இரு பிரிவினரும் தங்கள் அமைப்புகளுக்கு களங்கம் விளைவித்ததாக பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.

அப்சர்வர் பத்திரிக்கை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத் தினார்கள். அந்தப் பத்திரிக்கை உள்விவிசாரணை குழுவை அமைத்து அதற்கான பதிலை அளித்தது.தலாய் லாமாவின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தினால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதா? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர்.

இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தலாய்லாமா பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். பாசாங்குத்தனம் செய்யக்கூடாது என்ற வாசகங்களை போராட்டங்களின் போது எழுதி வைத்து போராட்டம் நடத்தினர். “பொய்யான தலாய்லாமாவே, போலியான தலாய்லாமாவே” “எங்கள் மத சுதந்திரத்தை கொடுங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பினார்கள். உலகில் உள்ள கடம்ப மற்றும் ஷூக்டன் பாரம்பரிய நடைமுறைக்கு தவாய்லாமா பிரிவினர் தடை விதித்ததை எதிர்த்து இவர்கள் போராடி வருகிறார்கள். இந்தப் பிரிவினர் மீது தாக்குதலையும் நடத்துவதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக புதிய கடம்ப பிரிவு நசுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தங்களது மத நம்பிக்கையை கைவிட வேண்டும், தலாய்லாமாவின் நம்பிக்கைக்குள் வரவேண்டும் என்று நிர்பந்தப்படுத்துகிறார்கள். இது மட்டுமல்ல இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், லடாக், சிக்கிம், பூட்டான் போன்ற இடங்களில் இருக்கக்கூடிய ரிம் போச்சு பிரிவை சேர்ந்த திபெத்தியர்கள் தலாய்லாமாவை புறக்கணித்து வருகிறார்கள். தலாய்லாமாவை இந்த மதப் பிரிவை சேர்ந்தவர்கள் பார்க்கக்கூடாது என்ற முடிவோடு எதிர்க்கிறார்கள்.

தலாய்லாமா அவருக்கு எதிரான திபெத்திய பௌத்தத்திற்குள் கடுமையான எதிர்ப்புகளும் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளது. இதை இந்தியா உட்பட சில நாடுகளின் புலனாய்வு பிரிவுகள் எச்சரித்தன. இதனால் தலாய்லாமா மிக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் டச்சு, சிலி நாடுகளுக்கு சென்ற பொழுது அதற்கான பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்தார்கள். அமெரிக்கா உட்பட சில நாடுகள் இந்த எதிர்ப்பிற்கு பின்னால் சீனா இருக்குமா என்ற ஆய்வினை நடத்தி அவ்வாறு இல்லை என்றும் முடிவுக்கு வந்தார்கள். தலாய்லாமாவின் நடவடிக்கைகள் இந்த எதிர்ப்பிற்கு காரணமாக அமைகிறது. மத சுதந்திரத்தைப் பற்றி பேசும் தலாய்லாமா தனது மதத்தில் இருக்கக்கூடிய இதர பல பிரிவுகளை நசுக்கி வருவதை இதன் மூலம் அறிய முடியும்.

துறவியின் பரிவாரங்களில் உறவினர்கள்

சாதாரணமாக அரசியலில் வாரிசுகளை நியமிப்பது அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்திய, தமிழக அரசியல் சூழல் இதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டு. ஆனால் துறவிகளையும் இந்த வாரிசு அரசியலும் அதிகார கைப்பற்றலும் விட்டு வைக்கவில்லை. தலாய்லாமாவும் தனக்கு கிடைத்த நாடு கடத்தப்பட்ட அரசாங்கப் பதவிகளை தனது உறவினர்களுக்கு தாரை வார்ப்பதில் மூழ்கிக் கிடக்கிறார். அவர் பல்வேறு வழிகளில் இதை மூடி மறைத்தாலும் அம்பலத்துக்கு வந்து விடுகின்றது.

நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு பெயர் கசாக் ஆகும். அமைச்சரவையில் மொத்தம் உள்ள ஆறு அமைச்சர்களில் மூன்று அமைச்சர்கள் தலாய்லாமாவின் நெருங்கிய உறவினர்களாக இருந்தனர். இவரது மூத்த சகோதரர் கியாலோ தோண்டப் பல ஆண்டுகள் தலாய்லாமா தலைமையிலான திபெத்திய அரசிற்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அவரது மைத்துனி ஒருவர் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் திட்டமிடல் குழு உறுப்பினராகவும், சுகாதாரத் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். ஒரு தங்கை சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சராக இருந்தார். அந்த தங்கையின் கணவர் தகவல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் தலைவராக பணியாற்றினார்.

இவர்கள் இருவரின் மகள் நாடுகடத்தப்பட்ட திபெத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தலாய்லாமாவின் மற்றொரு தம்பி தலாய்லாமாவின் தனியார் அலுவலகத்தில் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். இவருடைய மனைவியும் கல்வி அமைச்சராக செயல்பட்டார். மைத்துனரின் மனைவி வடக்கு ஐரோப்பாவதற்கான திபெத்திய நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும், சர்வதேச உறவுகளின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இந்தப் பதவிகள் அனைத்தும் தலாய்லாமாவின் குடும்பத்தினர் அபகரித்து வைத்திருப்பதற்கான அடிப்படை காரணம் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் சார்பாக சேகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கான இடமாக இருப்பதால் இவர்கள் உறவினர்களாக தீபத்திய அரசை பிடித்துக் கொள்கிறார்கள். துறவியின் வன்முறையை கடந்து உறவினர்களின் ஒட்டுமொத்த உறைவிடமாக நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கம் மாற்றப்பட்டுவிட்டது.

அசைவ பிரியரின் சைவ வேடம்

தலாய்லாமா உலகளவில் நன்கு அறியப்பட்டவராக இருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு என்று பலரும் கூறுகின்றார்கள். உதாரணமாக அவர் சைவ உணவை உண்ணக்கூடியவர் என்று உலகம் முழுவதும் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலைமை வேறானது. அவர் அசைவ உணவை சாப்பிடக்கூடியவர் என்பதுதான் உண்மை. இந்த உண்மை வெளிவந்த பிறகு தலாய்லாமாவால் மறைக்க முடியவில்லை. எனவே அதற்கான மருத்துவ காரணங்களை முன் வைத்தார். தனக்கு எபடைட்டஸ் கிருமி உள்ளதாகவும், இந்த கிருமியின் மூலம் கல்லீரல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சையை பெற்று வருகிறேன். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இறைச்சி உணவை உண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது ஒரு அப்பட்டமான சமாளிப்பாகும். பல மருத்துவர்களும் கல்லீரல் பிரச்சனைக்கு இறைச்சி சாப்பிடுவது அவசியமானது அல்ல என்றும், அது தவிர்க்கப்பட வேண்டியது என்றும் கருத்தை தெரிவித்தார்கள். ஆனால் தலாய்லாமா சைவம் சாப்பிடக்கூடியவர் மட்டுமல்ல அசைவத்தையும் வெளுத்துக்கட்டுவார் என்பது தான் உண்மையாகும்.

இந்திய மக்கள் தலாய்லாமாவின் நிழல் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வன்முறை, உறவினருக்கு சலுகை, இறைச்சி உணவு என அனைத்து விதமான செயல்களையும் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒருவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அவரின் நிஜ முகம்.

அ.பாக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

39 திபெத் தலாய்லாமாவின் நிழல் முகத்தின் நிஜ அடையாளம்

    அ.பாக்கியம்   முகத்தில் புன்னகை.பேச்சில் சமாதானம். உடையில் துறவியின் தோற்றம். மொத்தத்தில் சாந்த சொரூபம். இதுதான் தலாய்லாமாவின் ப...