முகமது அலி
அலி அவர்களை உலகம் குத்துச்சண்டை வீரராகத்தான் பார்த்திருக்கிறது.ஆனால் அவர் ஒரு சமூக போராளி. அமெரிக்காவின் நிறவெறியை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் களமாடியவர். உதவும் மனது படைத்தவர். சிறந்த மனிதநேயம் கொண்டவர். குத்துச்சண்டை வளையத்திற்குள் மட்டுமல்ல. சமூக வெளியிலும் அவருடைய ஒவ்வொரு "பன்ஞ்"சும் நிறவெறிக்கு எதிராக இருந்திருக்கிறது.
முகமது அலி ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். அலியின் மூதாந்தையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமையாக கொண்டுவரப்பட்டவர்கள். "தி ரூட்ஸ்" நாவல் படித்தவர்களுக்கு தெரியும். அலிக்கு படிப்பில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. அதனால் குத்துச்சண்டையே வாழ்க்கையாகிவிட்டது. தனது 12 வயதில் துவங்கிய பயணம் 65 வயதில் தான் முடிந்தது. சுமார் 35 ஆண்டுகள் உலக குத்துச்சண்டை போட்டிகளில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர்.
குத்துச்சண்டை கருப்பின மக்கள் மத்தியில் தான் உருவானது. குத்துச்சண்டைக்கு இயல்பாகவே உடல் வலிமையும்,மன வலிமையும் தேவை. அதற்கு பொருத்தமானவர்களாக கருப்பின மக்கள் இருந்தனர். கருப்பின இளைஞர்களின் விருப்ப தேர்வாக குத்துச்சண்டை இருந்தது.
குத்துச்சண்டை போட்டியில் முகமது அலியின் வரவு புயல் போல் இருந்தது. கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் வெற்றி. தனது 18 வது வயதில் இத்தாலியில் 1960 ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம். பதக்கம் வென்று அமெரிக்கவிற்கு பெருமை சேர்த்துவிட்டதாக நினைத்த அலி தங்கபதக்கத்தோடு அமெரிக்கா திரும்புகிறார். மகிழ்வோடு கழுத்தில் மாட்டிய தங்கபதக்கத்தை கூட கழட்டமால் இரவு முழுவதும் தூங்கியும்,தூங்காமலும் இருந்ததாக கூறுகிறார்.
ஆனால் அமெரிக்காவில் நிறவெறி கொடூரமாக அரங்கேறி கொண்டிருந்த நேரம். அது அலியையும் விட்டு வைக்கவில்லை. தங்கபதக்கத்தை வென்ற மகிழ்வோடு தனது நண்பரோடு ஓட்டலுக்கு உணவருந்த செல்கிறார். அலி கருப்பர் என்பதால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கோபத்தோடு அருகில் ஓடிக்கொண்டிருந்த ஓகியோ ஆற்றில் தங்கபதக்கத்தை கழட்டி வீசி விட்டார். இந்த சம்பவம் அலியை நிறவெறிக்கு எதிராக போராட தூண்டியது.அமெரிக்கா அனைவருக்குமானதல்ல அது நிறவெறியர்களின் கூடாரமாக இருப்பதை புரிந்து கொண்டார்.
நிறவெறிக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் மால்கம் எக்ஸ்,இஸ்லாம் தேசம் என்ற அமைப்பின் தலைவர் எலிஜா முகமது ஆகியோரின் நட்பு அலியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்து வந்தவர்களை வெள்ளை எஜமானர்கள் அடிமைகளாக வைத்துக் கொண்டனர்.வெள்ளை எஜமானர்களின் பெயர்களே அடிமைகளுக்கும் வைக்கப்பட்டது.காஷியஸ் கிளே என்பது வெள்ளை எஜமானரின் பெயர்.
கிறித்துவ மதம் நிறவெறி கொள்கையை ஆதரித்ததால் அதிலிருந்து வெளியேற அலி முடிவு செய்தார். பெயர் என்பது ஒருவரின் அடையாளம். அதில் இன,மொழி,நிறம்,வட்டாரம், பாராபட்சம்,பாகுபாடு என அனைத்தும் இருக்கிறது. மதம் ஒரு தீர்வாக இல்லாவிட்டாலும் இஸ்லாம் மதத்தை தழுவி வெள்ளை எஜமானனின் பெயரை துறந்து முகமது அலியாக மாறுகிறார்.
முகமது அலி நினைத்திருந்தால் ஒரு உல்லாச வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக தன்னை அர்பணித்துக் கொண்டார். குத்துச்சண்டை களத்தை நிறவெறிக்கு எதிரான களமாக வடிவமைத்துக் கொண்டார்.
1965 களில் அமெரிக்கா வியட்நாம் மீது போர் தொடுத்திருத்தது. 18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் சேர வேண்டும் வியட்நாமுக்கு எதிராக போராட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது. அலியும் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் வியட்நாமுக்கு எதிராக போரிட முடியாது என தெரிவித்துவிட்டார். எனது பழுப்பு இன சகோகதர்களுக்கு எதிராக போரிட முடியாது என உறுதியோடு நின்றார். அலி மீது தடைவிதிக்கப்பட்டு தண்டனையும் அளிக்கப்பட்டது. அதே போல கியூபாவிற்கு எதிராக பொருளாதார தடையை அமெரிக்க விதித்திருந்த நிலையில் தடையை மீறி 5 லட்சம் டாலர் நிதியுதவியை அலி அளித்தார்.
ஆப்பிரிக்க கண்டத்திற்கு சென்ற அலி அங்கே இருந்த நிலையை பார்த்து ஆப்பிரிக்கா ஒரு இருண்ட கண்டம் என்ற அமெரிக்காவின் பிரச்சாரம் எவ்வளவு பொய்யானது என்பதை தெரிந்து கொண்டார்.உலகம் முழுவதும் குறிப்பாக ரஷ்யா,இந்தியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1980 ல் இந்தியா வந்த அலி, இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர்,கலைஞர் கருணாநிதி ஆகியோரை சந்தித்திருக்கிறார். சென்ற இடமெல்லாம் மக்களின் அன்பையும்,ஆதரவையும் பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவில் நிறவெறி என்றால் இந்தியாவில் சாதி வெறி.1865 ல் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான சட்டம் இயற்றியிருந்தாலும் நூற்றாண்டுகளை கடந்தும் நிறவெறி இன்றும் அரங்கேறி கொண்டிருக்கிறது. இந்தியாவில் தீண்டாமையும்,சாதிய பாகுபாடும் குற்றம் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் சாதி வெறி இன்றும் நிலவுகிறது.
குத்துச்சண்டை வளையத்தில் "நானே மகத்தானவன்" என்று முகமது அலி முழக்கமிடுவார். அதையே நூலின் தலைப்பாக வைத்துள்ளார் நூலாசிரியர் அ. பாக்கியம். நூலாசிரியர் மார்க்கசிய சமூக செயற்பாட்டாளர். அரசியல் கட்டுரையாளர். மார்க்கசிய கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
ஒரு சிறந்த புத்தகம் என்பது வாசித்தவுடன் கிளர்சியை உருவாக்குவதாக இருக்க வேண்டும். "நானே மகத்தானவன்" என்ற நூல் முகமது அலியின் நிறவெறிக்கு எதிரான அரசியல் களத்தை பதிவு செய்திருக்கிறது. முதல் நூறு பக்கம் ஜெட் வேகத்தில் இருக்கிறது. அடுத்த நூறு பக்கம் சிந்திக்க தூண்டுகிறது.
நிறவெறி,சாதிவெறி, மதவெறிக்கு எதிராக போராடுபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
"நானே மகத்தானவன்"
அ.பாக்கியம்.
விலை ரூ.300,
வெளியீடு: தூவல் கிரியேஷன்ஸ்.
ஆர்.தர்மலிங்கம், சேலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக