Pages

புதன், செப்டம்பர் 10, 2025

37 திபெத் தலாய்லாமாவின் மறுபிறவி அரசியல்

 

அ.பாக்கியம்

2025 ஜூலை 2 அன்று தர்மசாலாவில் உள்ள தலாய்லாமாவின் மடாலய நூலக கட்டிடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட துறவிகள் அரக்குநிற அங்கிகளில் கூடியிருந்தார்கள். உலகம் முழுவதும் இருந்து பத்திரிக்கையாளர்கள் வருகை தந்திருந்தனர். ஹாலிவுட் நட்சத்திரம் ரிச்சர்ட் கியர் கூட இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் 14 ஆவது தலாய்லாமாவின் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. அந்த காணொளி காட்சியில் தனது மரணத்திற்குப் பிறகு தனக்கு ஒரு வாரிசு இருப்பார் என்றும், தலாய்லாமாவின் நிறுவனம் தனது மரணத்துக்கு பிறகும் தொடரும் என்றும், எனது எதிர்கால மறுபிறவியை அங்கீகரிக்கும் முழு அதிகாரம் தி காண்டன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என்று அறிவித்தார். தி காண்டன் ஃபோட்ராங் அமைப்பானது 1642 இல் 5 ஆவது தலாய் லாமாவால் நிறுவப்பட்ட அமைப்பு ஆகும். தற்போது இது சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளில் தலையிடுவதற்கு வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அதில் பிரகடனம் செய்தார். தனது மறுபிறவி வாரிசு சுதந்திர உலகில் பிறப்பார் என்று கூறினார்.

மேற்கண்ட அறிவிப்பு வந்தவுடன் அமெரிக்கா அதில் தலையிட்டது. அதாவது சீனா இதில் தலையிடக்கூடாது என்று சுடச்சுட அறிக்கையை வெளியிட்டது. சீனாவிடமிருந்து அறிக்கை வரும் முன்பே அமெரிக்கா இதை அறிவித்துவிட்டது. இந்தியாவின் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ் வும் இது தலாய்லாமாவுக்கான உரிமை என்று அறிவித்தார். தலாய்லாமா தனது சொந்த நோக்கங்களுக்காக பாரம்பரியமான பல விஷயங்களை மீறுகிறார் என்று சீன அரசாங்கம் அறிவித்தது. தலாய்லாமாவின் மறுபிறவி முறையை, ஏற்கனவே நிர்வகித்து வரும் பாரம்பரிய சடங்குகள், வரலாற்று மரபுகள், சட்ட அடிப்படைகள், தர்மத்தின் வழி நின்று நடப்பது, திபெத்திய பௌத்தத்தின் சாதாரண விசுவாசிகளின் கருத்துக்களை புறந்தள்ளுவது போன்ற அனைத்தையும் தலாய்லாமா மீறுகிறார் என்று சீன அரசு அறிவித்து விட்டது. மேலே குறிப்பிட்ட மரபுகளின் அடிப்படையில் தலாய்லாமா தேர்வு செய்யப்பட்ட பிறகு சீன அரசிடம் ஒப்புதல் வாங்குவது சட்ட மற்றும் வரலாற்று ரீதியான கடமையாகும்.

மறுபிறவியை தேடும் சடங்குகளின் வளர்ச்சி

பல பௌத்த வழிபாட்டு முறைகள் மறுபிறவி என்ற கருத்தையே ஏற்கவில்லை, ஏனெனில் அது உண்மையான பௌத்தத்துடன் சிறிதும் தொடர்புடையது அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். , பௌத்தம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது: ஹீனயானம், மகாயானம் மற்றும் வஜ்ராயனா. தந்திரம், மந்திரம் மற்றும் சடங்கு சார்ந்த வஜ்ராயனாவில் மேலும் நான்கு பிரிவுகள் உள்ளன, மேலும் தலாய்லாமா இந்த நான்கில் கெலுக்பா பிரிவு ஒன்றின் தலைவராக உள்ளார். ஒரு பிரிவை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

முதன்முதலாக மறுபிறவி பற்றிய கருத்துக்கள் உருவான பொழுது இத்தனை சடங்கு முறைகள் இல்லை. காலப்போக்கில் மதத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான தேடுதல் சடங்குகளை அதிகரித்துக் கொண்டே சென்று மிகப்பெரும் வடிவமாக மாற்றி விட்டார்கள். மறுபிறவியை தேடுகிற பொழுது சகுனங்கள் பார்ப்பது,வாழும் புத்தரின் அதாவது தலாய்லாமாவின் விருப்பங்கள், மூத்த புத்த துறவிகள் கடவுளிடம் கலந்தாலோசிப்பது, புத்ததுறவிகளின் கனவுகளில் தோன்றும் நிகழ்வுகள் என பல சடங்குகளை நடத்தி குழந்தைகளை தேர்வு செய்கிறார்கள். இவ்வாறு அடையாளம் காணப்படுகிற குழந்தைகளை வாழும் புத்தரின் மறைவுக்குப் பிறகு மறைந்தவரின் பொருட்களை கொடுத்து அடையாளம் காட்டச் சொல்கிறார்கள். அடையாளம் காட்டினால் அந்தக் குழந்தைகள் அனைத்தும் மறு பிறவி குழந்தைகள் என்று தேர்வு செய்யப்பட்டு அடுத்து அவர்களை கண்கானிக்கும் வளையத்துக்குள் கொண்டு வருகிறார்கள். இவை அனைத்தும் நடப்பதற்கு சாத்தியமோ இல்லையோ ஒரு சடங்காக கடைபிடிக் கப்பட்டு தங்களுக்கு பொருத்தமானவர்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.

தற்போது இந்தியாவில் இருக்கக்கூடிய 14 ஆவது தலாய்லாமா ஜூலை 6 1935 ஆம் ஆண்டு கிங்காய் மாகாணத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் லாமோ தோண்டப் ஆகும். தனது இரண்டு வயதில் 13 வது தலாய்லாமாவின் அவதாரமாக அடையாளம் காணப்பட்டார். 1940 ஆம் ஆண்டு தலாய்லாமாவாக பட்டம் சூட்டப்பட்டார். டென்சின் கியாட்சோ என்ற புனிதப்பெயரை சூட்டிக்கொண்டார். இது விஞ்ஞானத்துக்கு புறம்பாக இருந்தாலும் மத சடங்காக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

துறவிகள் லாமாக்களாக மாறிய கதை

திபெத்திய பௌத்த மதத்தில் மறுபிறவி முறைகள் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக ஆரம்பித்தது. காலப்போக்கில் இந்த சடங்கு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கவும், உழைக்கும் மக்களை மூடநம்பிக்கையில் வைத்து சுரண்டுவதற்கும் பயன்படுத்தப்படும் வாரிசு முறைகள் புதிய வகையில் திபெத்திய பௌத்தம் கடைபிடித்தது. மறுபிறவி வாரிசு மகத்தானது என்ற மாயக்கருத்தை மக்களிடம் பரப்புவதற்கு எத்தனை சடங்குகளை கடைபிடிக்க முடியுமோ அத்தனையும் உருவாக்கினார்கள்.

1334 ஆம் ஆண்டில் யுவான் வம்சத்தில் (1271-1368) பேரரசர் ஷுன், ரங்ஜங் டோர்ஜோ என்பவருக்கு வாழும் புத்தர் என்று பட்டம் வழங்கினார். இவர்தான் திபெத்திய பௌத்தத்தில் முதல் வாழும் புத்தர் என்று இவர் அறியப்பட்டார். இவருக்கு அனைத்து நிகழ்வுகளின் இயல்பின் வெறுமையை முழுமையாகப் புரிந்துகொண்ட புத்தர், அதாவது அனைத்தையும் அறிந்தவர் என்ற பட்டத்தையும் சூட்டினார். அதுவரை ஒரு நாட்டுப்புற சடங்காக இருந்த வாரிசு நியமனம் அரசின் அதிகாரப்பூர்வமான வடிவமாக மாறியது. இதன் தொடர்ச்சிதான் அடுத்த வாரிசை தேர்வு செய்ய மறுபிறவி என்ற சடங்கு வளர்வதற்கு காரணம். இவை தலாய்லாமாக்கலால் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை மன்னர்களால் மதத் தலைவர்களுக்கு சூட்டப்பட்ட பட்டம் என்பதை வரலாற்று பதிவுகள் வெளிப்படுத்துகிறது.

1578 ஆம் ஆண்டு மங்கோலிய ஆட்சியாளர் அல்தான்கான் திபெத்திய பௌத்தத்தில் கெலுக்பிரிவின் தலைவராக இருந்த சோனம் கியாட்சோவுக்கு தலாய்-யின்-கான் அதாவது மங்கோலிய மொழியில் ஞானக்கடல் என்ற பொருள் தரக்கூடிய பட்டத்தை வழங்கினார். அதே நேரத்தில் தலாய் லாமா வஜ்ரா என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இதற்கு அனைத்தும் அறிந்த புனிதர் என்று பொருள். முதன்முதலாக தலாய்லாமா என்ற வார்த்தை இங்கிருந்துதான் திபெத்திய பௌத்த மதத்தில் தொடங்குகிறது. இதன் மூலம் சோனம் கியாட்சோ ஒரு ஆன்மீகத் தலைவராக மாறுகிறார். அது மட்டுமல்ல இவர் மூன்றாவது தலாய்லாமா(ஞானக்கடல்) என்ற பட்டத்தை பெறுகிறார். இதற்கு முன் வாழும் புத்தராக இருந்த இருவரையும் முதல் மற்றும் இரண்டாம் தலாய்லாமாக்கள் அதாவது அனைத்தும் அறிந்த ஞானக்கடல் என்று பொருள்படக்கூடிய முறையில் மங்கோலிய அரசு அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு பட்டம் வழங்கியது. தலாய்லாமா மறுபிறவி பரம்பரை அமைப்பு என்பது மூன்றாவது தலாய்லாமாவான சோனம் கியாட்சோ காலத்திலிருந்து தொடங்குகிறது.

நான்காவது தலாய்லாமாவாக மங்கோலிய மன்னன் அல்தான் கானின் கொள்ளுப்பேரன் யோன் டென்‌ கியாட்சோ தேர்ந்தெடுக்கப்படுகிறார். திபெத் தின் லாசா நகரிலிருந்து ஒரு குழு 1592 இல் மங்கோலியாவிற்கு சென்று அன்றைய மங்கோலிய மன்னர் ஒப்புதலை பெற்றபிறகு 1603 ராயகன் மடாலயத்தில் தலாய்லாமா பட்டமளிப்பு விழா இவருக்கு நடந்தது. பேரரசரின் ஒப்புதல் இல்லாமல் அரசவம்சத்தின் பேரனுக்கு கூட மதத் தலைவர் பட்டம் வழங்கப்படாது.

ஐந்தாவது தலாய்லாமா ந்காவாங் லோப்சாங் க்யாட்சோ 1622 ஆம் ஆண்டு ராயகன் மடாலயத்தில் தலாய்லாமாவாக பதவியேற்றார். ஐந்தாவது தலாய்லாமாவிற்கு போட்டி இருந்தது. முன்று பேரில் இவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை பிற்காலத்தில் குயிங்வம்ச அரசால் விதியாக மாற்றப்பட்டது. 1653 ஆம் ஆண்டில், ஐந்தாவது தலாய் லாமா, ந்காவாங் லோப்சாங் கியாட்சோ, கிங் வம்சத்தின் ஷுன்ஷி பேரரசரைச் சந்திக்க பெய்ஜிங்கிற்கு அழைக்கப்பட்டார். கிங் வம்ச அரசாங்கம் அவருக்கு “மேற்கத்திய சொர்க்கத்தின்(சீனாவின் மேற்குபகுதி) மகத்தான தன்னம்பிக்கை புத்த மதத்தின் மேற்பார்வையாளர் தலாய்லாமா” என்ற பட்டத்தை வழங்கியது மட்டுமல்ல அவருக்கு ஒரு தங்கச் சான்றிதழையும் தங்க முத்திரையையும் வழங்கியது.

இதனால், “தலாய்லாமா” அதிகாரப்பூர்வமாக இந்த மறுபிறவி முறையின் பிரத்தியேக பட்டமாக மாறியத. மேலும் திபெத்தின் மதத் துறையில் அவரது அந்தஸ்து மத்திய அரசாங்கத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. அப்போதிருந்து, அடுத்தடுத்த ஒவ்வொரு தலாய்லாமாவும் மறுபிறவிக்குப் பிறகு மத்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுவது வழக்க மாகிவிட்டது.

தங்கக் கலசத்தின் வருகை

ஆறாவது தலாய்லாமாவை தேர்வு செய்வது மேலும் சிக்கலாகியது. மடத்தின் அதிகாரமும், சொத்துக்களும், பட்டங்களும் கிடைத்த பிறகு போட்டி இல்லாமல் இருக்குமா? ஊழல் தலைவிரித்தாடியது.இதனால் தலாய்லாமா பதவிக்கு பலரும் தேர்வு செய்யப்பட்ட பிறகு யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. உள்ளூர் அரசாங்கமும், கெலுக் பிரிவு மதக்குழுவும் சேர்ந்து பேரரசிடம் மூன்று பெயர்களை பரிந்துரைத்தது. சாங்யாங் கயாட்சோ,யேஷே கயாட்சோ,கெல்சாங் கயாட்சோ ஆகியோரை பரிந்துரைத்தனர்.

இவர்களை அடுத்தடுத்த தலாய் லாமாவாக அரசு அங்கீகரித்தது. 1757 ஆம் ஆண்டு கெல்சாங் கயாட்சோ காலமானார். 1762 ஆம் ஆண்டு கிங் வம்ச அரசாங்கத்தின் ஒப்புதல் உடன் ஜம்பல் கியாட்சோ பொட்டாலா அரண்மனையில் தலாய்லாமாவாக பதவி ஏற்றுக் கொண்டார். யார் ஆறாவது ஏழாவது என்ற எண்ணிக்கை குழப்பம் நீடித்துக் கொண்டே இருந்தது. 1781 ஆம் ஆண்டு குயிங் மன்னர் கியான்லாங் ஜம்பல் கயாட்சசோவை எட்டாவது தலாய்லாமாவாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இறந்துபோன சாங்யாங் கயாட்சோவை ஏழாவது தலாய்லாமாவாக, யேஷே கயாட்சோவை ஆறாவது தலாய்லாமாகவும் அங்கீகரித்தார்.

ஒரே நேரத்தில் இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே தலாய்லாமா என்ற பட்டத்தை நிர்வகிப்பது, நியமிப்பது தனிப்பட்ட ஒருவர் அல்ல. பேரரசின் அதிகாரமாக இருந்தது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

1793 ஆம் ஆண்டு குயிங் பேரரசின் மன்னர் கியான்லாங் மறுபிறவி வாரிசை தேர்ந்தெடுப்பதில் பெரும் குழப்பம் உருவாவதை அறிந்து கொண்டு தலாய்லாமா மற்றும் பஞ்சன்லாமாக்களை தேர்வு செய்வதற்காக குலுக்கள் முறைகளை கொண்டு வந்தார். இதன்படி ஒரு தங்க கலசம் பேரரசால் வழங்கப்பட்டது. அந்த கலசத்தில் தந்தத்தில் பெயர்களை எழுதிப் போட்டு குலுக்கள் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். 1793 ஆம் ஆண்டு முதல் தலாய்லாமா குலுக்கள் மூலம்தான் தேர்வு செய்யப்பட்டார்கள். 13 மற்றும் 14 ஆவது தலாய்லாமாக்கள் அரசிடமிருந்து விதிவிலக்கு பெற்று தேர்வு செய்யப்பட்டார்கள்.

லோமோ தோண்டப் தலாய்லாமாவாக மாறினார்

13 ஆவது தலாய்லாமாவின் மறைவுக்குப் பிறகு உள்ளூர் பிராந்திய அரசாங்கம் பாரம்பரிய மத சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளின்படி 14 ஆவது தலாய்லாமாவை தேடுவதும் அடையாளம் காணக்கூடிய முயற்சிகளை மேற்கொண்டது. 13 ஆவது தலாய்லாமா இறக்கும்போது வடகிழக்கு நோக்கி இருந்தார் என்ற அடையாளங்களின் அடிப்படையிலும், மூத்த துறவிகள் கடவுளுடன் பேசியதாலும், ஒரு தேடல் குழு கிங்காய் மாகாணத்தின் மறுபிறவியாக வந்துள்ள லோமோ தோண்டப்பை கண்டுபிடித்தனர். 1940 ஆம் ஆண்டு சீனாவில் மத்திய ஆட்சியாக இருந்த ஷியாங்கை ஷேக் அரசாங்கம் கிங்காயைச் சேர்ந்த லோமோ தோண்டப்ஆழ்ந்த இரக்கமும் குறிப்பிடத்தக்க ஆன்மீக அடையாளங்களும் கொண்டவர். 13 ஆவது தலாய்காமாவின் மறுபிறவி இவர்தான் என்று முடிவெடுத்தனர். அப்போது இருந்த அரசு திபெத்தியர்களின் மதத் தலைமையை தனது கைக்குள் வைத்துக் கொள்வதற்காக விதிவிலக்கு கொடுத்து தலாய்லாமாவை அங்கீகரித்தது. 1940 பிப்ரவரி 22 ஆம் தேதி 14 ஆவது தலாய்லாமாவின் பட்டமளிப்பு விழா பொட்டாலா அரண்மனையில் நடைபெற்றது. இவரின் பதவியேற்பு விழாவில் தேசிய அரசு, மற்றும் திபெத்தின் உள்ளூர் அரசின் அனுமதியுடன் தான் நடைபெற்றது. மங்கோலிய மற்றும் திபெத்திய விவகார ஆணையத்தின் தலைவரும், தேசியவாத அரசாங்கத்தின் சிறப்பு பிரதிநிதியுமான வு சோங்சின், ரீஜண்ட் ரெட்டிங் ஹுடுக்டுவுடன் விழாவில் கலந்து கொண்டு இணைந்து தலைமை தாங்கினார். இப்போது யாருக்கும் உரிமை இல்லை என்று மறுக்கும் தலாய்லாமாவே கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வரும் முன்பே தேசிய அரசு மற்றும் உள்ளூர் அரசாங்கத்தால் பதவி பிரமாணம் செய்யப்பட்டு வைத்தார் என்பதை மறந்து விடுகிறார்.

வாழும் புத்தர்களின் மறுபிறவி என்பது எந்த வகையிலும் மதத்தின் உள்விவகாரம் மட்டுமல்ல. 14 ஆவது தலாய் லாமாவால் கூறப்படும் “தனித்துவமான முன்னரே தீர்மானிக்கப்பட்ட பிணைப்பு” மட்டுமல்ல. மாறாக, அது தேசிய இறையாண்மை, அரசாங்க அதிகாரம், மதக் கொள்கைகள் மற்றும் மதத்தை பின்பற்றும் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது

சட்டத்தின்படி தான் சகலமும் நடந்தது

வாழும் புத்தர் மறுபிறவி அமைப்பின் உருவாக்கம் மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அமைப்பின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், மறுபிறவி எடுத்த வாரிசை அங்கீகரிப்பதற்கான இறுதி அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது. தேசிய இறையாண்மை மற்றும் அரசாங்க அதிகாரத்தின் கண்ணோட்டத்தில், செல்வாக்கு மிக்க வாழும் புத்தர்களின் மறுபிறவிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் மற்றும் ஒப்புதலளிக்கும் முறையைப் பயன்படுத்துகிறது.

இது ஜிசாங் (திபெத்) போன்ற பிராந்தியங்களின் மீது அரசின் இறையாண்மையையும், மறுபிறவிகளை அங்கீகரிப்பதில் அதன் அதிகாரபூர்வமான பங்கையும் பிரதிபலிக்கிறது. அரசு மதத்தைவிட உயர்ந்தது. அரசியல் அதிகாரம் மத அதிகாரத்தைவிட முன்னுரிமை பெறுகிறது. மேலும் மதத்தைப் பின்பற்றுபவர்கள் முதன்மையாக குடிமக்கள் என்ற கொள்கையை இது உள்ளடக்கியது. மதங்கள் அரசின் ஆதரவுடன் மேலோங்கும் என்ற கொள்கையையும் இது பிரதிபலிக்கிறது.

வாழும் புத்தர்களின் வாரிசு முறைகள் சட்டத்தை பின்பற்றி நடக்க வேண்டும். மத விவகாரங்களை சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்பது உலகின் பல பகுதிகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்வகிப்பது அரசு நலன்களுக்கும் பொதுமக்கள் நலன்களுக்கும் உகந்ததாகும். சீனாவில் இருந்த குயிங் அரசாங்கம் திபெத்தில் சிறந்த அரசாங்க நிர்வாகத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களை உருவாக்கியது. இதற்கு 29 பிரிவு கட்டளை என்று பெயர். இதன் அடிப்படையிலேயே தலாய்லாமாவிற்கு சில உரிமைகள் கொடுக்கப்பட்டது.

மேலும் புதிய தலாய்லாமாவை தேர்வு செய்வதற்கு தங்க கலசத்தில் சீட்டுகளை எடுப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. தேசிய அரசும், உள்ளூர் அரசும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விதிகளையும் உருவாக்கி அறிவித்தார்கள். 2007 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம் மறுபிறவி வாரிசு உரிமை குறித்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாழும் புத்தர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே அவ்வாறு தேர்வு செய்யப்படக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய உள்ளூர் அரசாங்கத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற விதிகளையும் உருவாக்கியது. கத்தோலிக்க கிறிஸ்துவ பிஷப்களை நியமிக்க வாட்டிக்கன் முடிவெடுத்தாலும் சீன அரசிடம் அனுமதிபெற வேண்டும். சீனாவில் உள்ள தேசபக்த கத்தோலிக்க சபை பிஷப்களுக்கான பெயர்களை வாடிகனுக்கு பரிந்துரைக்கும். மக்கள் சீன குடியரசு நிறுவப்பட்ட பிறகு ஏற்பட்டது. தலாய்லாமா மறுபிறவி நியமனம் 700 ஆண்டுகள் பழமையானது என்பதை கவனிக்க வேண்டும்.

தனி நபரா பௌத்த தர்மமா?

பௌத்தம் எப்போதும் தனி நபர்களை அல்ல, தர்மத்தின் கொள்கைகளை பின்பற்றுவதை ஆதரித்து வருகிறது. இதற்கு வாழும் புத்தர்களின் மறுபிறவி வாரிசு தேர்வு விதிவிலக்கு அல்ல. இந்த தர்மத்தை தலாய்லாமா அப்பட்டமாக மீறுகிறார். எனவே மறுபிறவியை உறுதிப்படுத்தும் போது புத்தருக்கு முன்பாக தங்க கலசத்திலிருந்து சீட்டு எடுப்பதும், புத்தரின் இரக்கமுள்ள ஆசிர்வாதங்களையும், ஞானமான உறுதியை நம்புவதும் மிகவும் புனிதமான பாரபட்சமற்ற முறையாக கருதப்படுகிறது. தங்க கலசத்தில் இருந்து சீட்டு எடுப்பது தர்மத்தின் மூலம் அது புத்தரின் முடிவு என்ற கோட்பாட்டை மக்கள் நம்புகிறார்கள். அவற்றை தனி நபர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தக் கூடாது என்பதுதான் விதி ஆகும். பெரும்பாலான திபெத்திய பௌத்த விசுவாசிகள் சீனாவில் குறிப்பாக திபெத்திய பௌத்தம் பின்பற்றப்படும் பகுதிகளுக்குள் வசிக்கின்றனர். எனவே சீனாவுக்குள் மட்டுமே மறுபிறவி எடுக்க முடியும். அதாவது வாரிசை நியமிக்க முடியும்.

 

சீன எல்லைக்கு வெளியே மறுபிறவியைத் தேடுவது பாரம்பரிய மத சடங்குகளிலிருந்து விலகிச்செல்லக்கூடியதாகும். மேலும் திபெத்திய பௌத்தத்தை பின்பற்றுபவர்களின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. மிக முக்கியமாக, திபெத்திய பௌத்தத்தை பின்பற்றுபவர்களின் பக்தி, சடங்குகளின், புனிதத்தன்மையின், நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக, திபெத்தில் உள்ள லாமோ லாட்சோ ஏரியில் புனித வழிபாடு என்பது மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தங்க கலசத்தில் சீட்டு எடுக்கும் விழா “புத்தரின் தீர்ப்பு” என்ற கொள்கையுடன் ஒத்துப்போகிறது. இது தனிமனித (ஆதிக்கத்தை) கையாளுதலைத் தடுக்கிறது.

மேலும் சீட்டு எடுக்கும் விழா ஜோகாங் கோவிலில் உள்ள சாக்யமுனி புத்தரின் சிலைக்கு முன் நடைபெறவேண்டும். தலாய்லாமா குறிப்பிடுவது போல் திபெத்திற்கு வெளியே பிறப்பவர்தான் அடுத்த மறுபிறவி இதைஎல்லாம் எவ்வாறு கடைபிடிப்பார்.

தலாய்லாமாவின் மறுபிறவி அரசியலை அமெரிக்காவும் மேற்கத்திய ஊடகங்களும் சீனாவிற்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். சீனாவின் வளர்ச்சி ஏகாதிபத்திய நாடுகளுக்கு மிகப்பெரும் சவாலாக மாறிவரும் சூழலில் அதை சீர்குலைப்பதற்கான அமெரிக்காவில் பல திட்டங்களில் ஒன்றுதான் திபெத்திய பிரச்சனை. எனவே மத சுதந்திரம் என்ற அடிப்படையில் தலாய்லாமாவை இதற்கு பயன்படுத்துகின்றனர். தலாய்லாமா உண்மையான சுயாட்சி என்ற கோரிக்கையை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டார். சீனாவில் ஏற்படும் மாற்றங்கள் தலாய்லாமா அரசியலை பின்னுக்கு தள்ளி விட்டது. ஏகாதிபத்திய வல்லூறுகளின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதற்கு மேலாக குழந்தைகளை இவ்வாறு வாரிசு என்ற பெயரால் பயன்படுத்துவது இயற்கை நியதிகளுக்கு விரோதமானது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமத்துவ சமுதாயம் நோக்கி

  தோமஸ் பிக்கெட்டி எழுதிய சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில் , புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவ...