Pages

வியாழன், செப்டம்பர் 04, 2025

36 திபெத்:ஆர்.எஸ்.எஸ்–இன் பௌத்த ராஜதந்திரம்


அ.பாக்கியம்

இந்தியாவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகள் இந்து மதத்தை பயன்படுத்துகிறார்கள். தற்போது திபெத்திய பிரச்சனைக்கு அமெரிக்க சார்பு நிலை எடுப்பதற்காக பௌத்த ராஜதந்திரம் என்ற முறையில் மத அடிப்படையில் கொள்கை முடிவை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் பௌத்தத்தை ஒழித்துக் கட்டும் பணியை கொடூரமான முறையில் வைதீக மதங்கள் நிகழ்த்தி காட்டியது. பௌத்தத்தை அழித்தவர்கள் தற்பொழுது பௌத்தத்தின் ஆதரவாளர்கள் போல் காட்டிக் கொண்டு அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் செய்வதற்கு புறப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் சீனக் கொள்கை என்பது பஞ்சசீல கொள்கையின் அடிப்படையில் அமைந்தது”. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் சீனக் கொள்கையை ஏகாதிபத்திய சார்பு கொள்கையாக மாற்றினார். ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் சீனக் கொள்கை என்பது, பௌத்த மத ராஜதந்திரத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

சங்பரிவார சத்தங்கள்

சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவும், அவர்களின் விசுவாசியாக செயல்பட்டதை போன்று தற்பொழுது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இளைய பங்காளியாக செயல்படுவதற்கான திட்டம்தான் பௌத்த ராஜதந்திரமாகும். 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி ஒரு சீன கொள்கையை மறுபரிசீலனை செய்தல்∶ இந்தியாவிற்கான பொருளாதார மற்றும் அரசியல் விருப்பங்கள்∶ ஹாங்காங், திபெத், தைவான், ஜின்ஜியாங் என்ற தலைப்பில் ஒரு இணைய வழிக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் இந்திய உத்திகளை உருவாக்கக்கூடிய வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

இதில் பேசியவர்கள் சீன பகுப்பாய்வு மற்றும் உத்தி மையத்தின் தலைவர் ஜெயதேவா ரானடே, ஒருங்கிணைந்த தேசிய மன்றத்தின் பொதுச்செயலாளர் சேஷாத்ரி சாரி, விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் இயக்குனர் டாக்டர் அரவிந்த் குப்தா, ஸ்டார்ட் நியூஸ் குளோபல் மற்றும் பாரத் சக்தியின் ஆசிரியர் நிதின் கோகலே அமைதி மற்றும் மோதல் பற்றிய ஆய்வு அமைப்பின் மூத்த உறுப்பினர் அபிஜித் ஐயர் மித்ரா போன்றவர்கள் பேசினார்கள். இவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லது ஆர்எஸ் எஸ் சார்பு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள். எனவே ஆர்எஸ் எஸ் இந்த கருத்தரங்கை நடத்தியது என்று சொன்னால்  மிகையாகாது.

மேற்கண்ட கருத்தரங்கில் பேசியவர்கள் அனைவரும் இந்தியா  திபெத்தை மையமாக வைத்து அமெரிக்க சார்பு வெளியுறவு கொள்கைக்கு பாய்ந்து செல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள். திபெத் தனி நாடாக வேண்டும், தலாய்லாமாவுக்கு இந்தியாவின் அரசியல் வட்டாரங்களில் உயர்ந்த பதவியை வழங்க வேண்டும், இந்தியா தைவானுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஈடுபாடுகளை உடனடியாக அதிகப்படுத்த வேண்டும், ஹாங்காங்கில் நடைபெறுகின்ற ஜனநாயக இயக்கத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும், சீனாவுடனான முழு கொள்கைகளையும் முழுமையாக மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும் என்று அரவிந்த் குப்தா பேசினார். இவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். உடனடியாக செய்ய வேண்டுமா அல்லது படிப்படியாக அதை நோக்கி செல்ல வேண்டுமா என்று மட்டும் தான் இப்பொழுது நாம் முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மற்றொருவர் நிதின் கோகலே தலாய்லாமாவிற்கு மட்டுமல்ல நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்திற்கு ஊடகத்துறையிலும், கல்வியிலும், அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றார். தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பௌத்த மத கூட்டணியை அமைக்க வேண்டும். சீனத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகிற பொழுது அவர்களை எதிர்த்து போராட்டங்களை நடத்துவதற்கு திபெத்தியர்களுக்கு உதவி செய்வது பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும். சீனாவிற்கு மூன்று T மூலம் பிரச்சினைகளை உருவாக்க வேண்டும். தைவான்,திபெத், தியான்மேன் வர்த்தகம் ஆகிய மூன்றிலும் நாம் பிரச்சினையை உருவாக்கி சீனாவை மண்டியிட வைக்க வேண்டும் என்று வெறுப்பின் உச்சத்திலிருந்து நெருப்பை கக்கினார்.

மாணவர்களின் மனமாற்றமும் இடமாற்ற திட்டமும்

மற்றொருவர் ஜெயதேவ் ரானடே. இவர் முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் செயலாளர். சீனா ஹாங்காங் அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியாற்றிய பணியாற்றியவர். எனவே இவரின் கருத்துக்கள் மிக ஆபத்தான வையாக இருந்தது. முக்கிய மேடைகளில் தலாய் லாமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பல இந்திய அமைச்சர்கள் தலாய்லாமாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். தலாய் லாமாவின் வயது அதிகரித்து வருவதால் நாம் ஒரு நுட்பமான செயலுக்குச் செல்ல வேண்டும் என்று பேசினார். அது மட்டுமல்ல நமது மாணவர்கள் நிறைய பேர்கள் சீனாவிற்கு சென்று படிக்கிறார்கள். அந்த மாணவர்களில் பெரும்பாலும் திரும்பி வருகிற பொழுது சீனாவிற்கு ஆதரவான வெளிப்படையான சார்ப்புடைகளாக வருகிறார்கள். இது மாற்றப்பட வேண்டும்.

நாம் ஏன் மாணவர்களை சீனாவிற்கு அனுப்பாமல் தைவானுக்கு அனுப்பக் கூடாது? தைவானுக்கு செல்வதற்கு மாணவர்களுக்கான உதவித்தொகையை எவ்வாறு வழங்குவது என்று அரசு சிந்திக்க வேண்டும் என்றார். சீனாவை நேரடியாக பார்த்த மாணவர்கள் சீன மக்களின் அரசின் செயல்பாடுகளால் ஈர்க்கப்படுவதை ஆர்எஸ்எஸ் சிறுவர்களை மதவெறி  மூளை சலவை செய்வது போல் குற்றம் சாட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் பத்திரிக்கையான ஆர்கனைசரின் ஆசிரியராக இருந்த சேஷாத்திரி சாரி  சீன கொள்கையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார். ஜின்ஜியாங் பிரச்சனைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். அதாவது ஜின்ஜியாங்கில் இருக்கக்கூடிய உய்குர் இஸ்லாமிய அடிப்படை வாதிகளை சீனாவிற்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இதற்கான அர்த்தம். உய்குர் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகளும் சீனாவின் மீது தீவிரவாத தாக்குதலை நடத்தினால் அவற்றை இந்திய ஊடகங்கள் வெளியிடுவது இல்லை.

அந்த அளவிற்கு ஆர்எஸ்எஸ் இன் பத்திரிக்கை ஆசிரியருக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளை சாதகமாக சக்தியாக பார்க்கக்கூடிய சீன எதிர்ப்பு தலைக்கு ஏறி உள்ளது. இந்திய சீன பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பொழுது கூட ஆர்எஸ்எஸ் இன் ஆசிரியர் இது எனது தனிப்பட்ட கருத்து என்று வலியுறுத்தினார். அவர் தலாய்லாமாவிற்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும், பாகிஸ்தான் சீனா  வழித்தடம் அமைப்பதை சட்டவிரோதமானது என்று இந்தியா எதிர்க்க வேண்டும் என்றார்.

 

அமைதி மற்றும் மோதல் அமைப்பு என்ற பெயரால் செயல்படக்கூடிய ஐயர் மித்ரா சீனாவுக்கு தைவான், ஹாங்காங், மஞ்சூரியா, உள் மங்கோலியா உய்குர் என எண்ணற்ற பிரச்சினைகளை ரகசியமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதியது மட்டுமல்ல சீனாவுக்கு எதிராக வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை திசை திருப்ப வேண்டும் என்று மித்ரா பரிந்துரைத்தார். இதற்கு ஒரு படி மேலே சென்று அணிசேரா இயக்கத்தின் வெவ்வேறு பொறுப்புகளில் இருந்து இந்தியா விலகிச் சென்று அமெரிக்கா மற்றும்  ஜப்பானுடன் உறவு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏற்கனவே இந்திய அரசு இதை செய்து கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது.

2019 மார்ச் மாதம் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் மத்திய கலாச்சார துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா இருவரும் தலாய்லாமா இந்தியாவிற்கு வருகை தந்து 60 ஆண்டுகளை நிறைவடைவதை முன்னிட்டு தர்மசாலாவிற்கு சென்றனர். இந்தியாவில் உள்ள திபெத்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நாங்கள் பாராட்டுகிறோம். உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த ஆசை மறைந்து விடக்கூடாது. அது வரை இந்தியா உங்கள் வீடு, இந்தியா புத்தர், மகாத்மா காந்தி, தலாய்லாமாவின் நிலம் என்று பேசினார். இந்த இடத்தில் “தலாய்லாமாவின்” பெயரை திட்டமிட்டு ராம் மாதவ் இணைத்துள்ளார்.

பாசாங்குத்தனமான பௌத்த பற்று

இந்தியா பௌத்த மத ராஜதந்திரத்தை எவ்வாறு கடைபிடித்து வருகிறது என்பதை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதிய தனது கட்டுரையில் ரானடே விளக்கியுள்ளார். 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் உலகளாவிய புத்த சபை (gbc) என்ற அமைப்பு டெல்லியில் ஒரு மாநாட்டை நடத்தியது. தோராயமாக இதில் 900 பித்துருக்கள், உச்சப்பித்துக்கள், உயர் பதவியில் இருந்த துறவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முடிவாக சர்வதேச பௌத்த கூட்டமைப்பு (IPF) நிறுவப்பட்டது. உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு வேறு யாருடையதும் அல்ல ஆர்எஸ்எஸ் சார்புடையது. 2015 ஆம் ஆண்டு சர்வதேச பௌத்த கூட்டமைப்பு, விவேகானந்தர் சர்வதேச அறக்கட்டளை, டோக்கியோ அறக்கட்டளை ஆகியவை சேர்ந்து மோதல் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த மூன்று நாள் பௌத்த மற்றும் இந்து கூட்டு மாநாட்டை நடத்தினார்கள். இது உண்மையில் மோதல் தவிர்ப்பு அல்ல சீனாவுடனான மோதலை ஊக்விப்பதற்காகவே நடைபெற்ற மாநாடு ஆகும்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி நாடு கடத்தப்பட்ட திபெத் அரசின் தலைவர் லோப்சங் சங்கே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார். இந்தியாவும் திபெத்தும் ஒரே குடும்பம் என்று பகவத் கூறியதுடன், திபெத் பிரச்சினையை முன்னிலைப்படுத்த தனது ஆதரவை தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்தோ திபெத் உச்சி மாநாடு சங் பரிவாரத்தால் நடத்தப்பட்டது. இதில் நாடு கடத்தப்பட்ட அரசின் தலைவர் லோப்சங் சாங்கே தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார்.

இந்த மாநாட்டில் திபெத்திய சுதந்திரப் போராட்டம் என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அது வெற்றி பெறும். இந்தியா அந்த வரலாற்றின் இணை ஆசிரியராக இருக்கும் என்று பேசப்பட்டது. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 டெல்லியில் நடைபெற்ற திபெத் தேசிய மாநாட்டில் லோப்சங்  சங்கேவுடன் இணைந்து ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் கலந்து கொண்டார். சீனாவின் குண்டர் தனம் நீடிக்காது. திபெத் சுதந்திரமாக இருக்கும். தலாய்லாமா லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனைக்கு செல்வார் என்று கூறினார்.

இதற்கு முன்பு 2014 நவம்பர் 21 ஆம் தேதி அன்று டெல்லியில் நடந்த முதல் உலக இந்து மாநாட்டை தொடங்கி வைக்க தலாய்லாமா அழைக்கப்பட்டார். மோகன் பகவத் அசோக் சிங்காலுடன் கைகோர்த்தார் தலாயிலாமா. வர்ணாசிரம் தலைமை பீடங்களின் சங்கம்மாக காட்சி தந்தது.

இந்திய சீன எல்லை பிரச்சினையில் அருணாச்சல பிரதேசம் ஒரு முக்கிய பிரச்சினையாகும் இதில் திபெத்திய பௌத்தம் முக்கிய பங்கு வைக்கிறது அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய்லாமா இருப்பதினால் தலைவர்கள் மற்றும் துறவிகள் வந்து செல்கிறார்கள். இதனால் இந்தியா முக்கியத்துவம் அடைகிறது. இதை சீனா தனது பகுதி என்று கூறுகிறது என ஆதங்கப்பட்டுள்ளார் ரேனடே. சீனா தனது பகுதி என்று கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தலாய்லாமா என்ன சொல்கிறார் அருணாசலப்பிரதேசத்தில் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை நடத்தி வரக்கூடிய தலாய்லாமா 2008 வரை அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை. இந்தியாவிற்கு வந்து 50 ஆண்டுகள் போட்டி அரசாங்கத்தின் நடத்திய அவர் இதை ஒரு திபத்தின் பகுதி என்றும் ஒரு சீனாவின் பகுதி என்றும் கூறினார் என்பதை ரேனடே போன்ற வர்கள் மறந்து விடக்கூடாது. இது அவருக்கு தெரிந்ததுதான் ஆனால் இன்றைய சீன எதிர்ப்பு அமெரிக்க ஆதரவு இந்த உண்மைகளை மறைக்கச் சொல்கிறது.

உலக பௌத்த மன்றமும்  லும்பினி சர்ச்சையும்

உலக பௌத்த மன்றம் 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சீனாவின் ஹாங்சோ நகரத்தில் நடைபெற்றது. 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட காலத்தில் இருந்து சீனாவில் உலக பௌத்த மன்றம் கூடி வருகிறது 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற மேலே குறிப்பிட்ட மாநாடுதான் அதுவரை நடந்த மிகப்பெரிய சர்வதேச மாநாடு ஆகும். ஒரு இணக்கமான உலகம் தொடங்குகிறது என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடைபெற்றது. 37 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட துறவிகள், நிபுணர்கள், இந்த மன்றத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். 2004 ஆம் ஆண்டு சீனா, ஹாங்காங், மற்றும் தைவானை சேர்ந்த துறவிகள் இதை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆலோசனையின் அடிப்படையில் ஜப்பான் கொரிய குடியரசு போன்ற வட்டாரங்களில் இந்த பௌத்த மன்றம் விரிவு படுத்தப்பட்டது. தற்பொழுது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து உலக பௌத்தம் மன்றம் அமைப்பில் உள்ளனர். சீன அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் நல்கி வருகிறது.

இந்தியாவில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தலாய்லாமாவை மையமாக வைத்தும், அருணாச்சலப் பிரதேசம், லடாக், சிக்கிம் பகுதிகளில் இருக்கக்கூடிய புத்தமத பிரிவுகளை வைத்து உலக பௌத்த அமைப்பை உருவாக்கி மத அடிப்படையிலான அரசியலுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு மோடி பதவி ஏற்ற பிறகு இந்திய அரசாங்கம் புத்த மதத்தை அதன் இரு தரப்பு ராஜதந்திர முயற்சிகளின் ஒரு அங்கமாக மாற்றியது. எனவே ஜப்பானுடன் வெளி மங்கோலியாவுடனும் உறவுகளை மேம்படுத்தி புத்த மதத்தின் அடிப்படையில் சீனாவுக்கு எதிராக செயல்படுவதற்கான முயற்சிகளை செய்தனர்

ஆர்.எஸ்.எஸ்இன் பௌத்த ராஜதந்திரம் இந்தியாவைச் சுற்றி தான் வந்து கொண்டிருக்கிறது. தலாய்லாமாவை ஆசியாவிலும் மேற்கு நாடுகளிலும் பலரும் விரும்புவதில்லை. புத்த மதம் வலுவாக உள்ள மியான்மர், தென்கொரியா, வியட்நாம் உள்ளிட்ட ஆசியாவின் பல நாடுகள் தலாய்லாமாவின் வருகையை அனுமதிப்பதில்லை. மியான்மர், வியட்நாம் ஆகிய இரு நாடுகளும் தீவிர பௌத்த மதத்தைச் சேர்ந்தவை என்றாலும் தேரவாத மரபை பின்பற்றுகின்றன. மேலும் சீனாவின் உறவுகளை பலப்படுத்தி இருக்கின்றனர்.

சீனா 14வது தலாய்லாமாவை தனது கடைசி நாட்களை அவரது தாய் நாட்டில் கழிக்க வேண்டும். எனவே மீண்டும் வரவேண்டும் என்று சீனா அவரை அழைத்து வருகிறது. அனைத்து பௌத்தர்களும் கூட தலாய்லாமாவின் அரசியலுடன் உடன்படுவது இல்லை. தலாய்லாமா திரும்பி செல்வதாக இருந்தாலும்கூட அமெரிக்கா இந்தியா போன்றவை அவரின் மறு பிறவி அரசியலை முன்வைத்து திரும்பிச் செல்வதை விரும்பவில்லை.

புத்தரின் பிறப்பிடஙட லும்பினி நேபாளத்தில் உள்ளது. இந்த இடத்தை மேம்படுத்துவதற்காக சீனா 3 பில்லியன் டாலர் திட்டத்தை ஒதுக்கீடு செய்தது. பஞ்சன் லாமாவை துணைத் தலைவராகக் கொண்ட சீன பௌத்த சங்கம் லும்பினி திட்டத்தின் ஒருங்கிணைப்பை ஏற்கும் என்று அறிவித்தது. அமெரிக்கா நேபாளத்தை மையமாக வைத்து இந்தியாவையும் இணைத்து திபெத்திற்குள் கலவரத்தை உருவாக்க கூடும் என்று சீனா கவலை கொள்கிறது. ஏற்கனவே யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் மதத் போதகர்கள் அவதரித்த இடம் இரத்தவெள்ளத்தில் மிதக்கிறது.  எனவே இந்த அச்சம் நியாயமானதே. அதே நேரத்தில் நேபாளத்தின் வடக்கு  எல்லையில் கிட்டத்தட்ட 20,000 திபெத்தியர்கள் வாழ்கிறார்கள். இப்படி இருந்தும் தலாய்லாமா நேபாளத்திற்குள் வருவதை நேபாளம் விரும்பவில்லை. அவரும் செல்லமுடியவில்லை.

பௌத்தத்தை இழிவுபடுத்தியவர்கள்

புத்த மதத்தின் மீதும் பௌத்தத்தின் மீதும் பரிவு கொண்டுள்ளதாக காட்டுகின்ற அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உலக மக்களிடம் ஒன்றை மறைத்து விடுகிறார்கள். இந்த நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்க ஆதரவுடன் பிரெஞ்சு காலனித் வாதிகள் வியட்நாமில் உள்ள புத்த மடாலங்களை இழிவுபடுத்தி, சூறையாடினார்கள். கம்பூச்சியாவிலும் இதையேதாக் செய்தார்கள். வியட்நாமில் இருந்த ஏகாதிபத்தியவாதிகளை ஹோ சி மின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி தோற்கடித்து விரட்டியது. கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி வைத்த பௌத்தர்களும், வியட்நாமிய கத்தோலிக்கர்களும் சேர்ந்து களம்கண்டார்கள். கம்பூச்சியாவிலும் இதே போன்ற கூட்டணி வைத்து வெற்றி பெற்றார்கள். இப்போது சீனாவில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்டுகள் பௌத்த எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். வியட்நாம், கம்பூச்சியா, இந்தோ-சீனாவில் பௌத்த மடாலயங்களை இடித்து இழிவுபடுத்திய அமெரிக்க மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் பௌத்த புனித வாதிகள் என்று வேஷம் தரித்து வருகிறார்கள்.

தலாய்லாமாவை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டின் ஆதிக்க சக்திகள் பண்டமாக பார்க்கிறார்கள.தலாய்லாமா ஒரு புவிசார் மூலோபாய சொத்து என்று அழைக்கிறார்கள். தலாய்லாமா எண்பதாவது வயது எட்டிய பொழுது  அவர் ஒரு மூலோபாய சொத்து அதே நேரத்தில் சீனாவுடனான பிரச்சனையில் இந்திய செல்வாக்கின் உருவகம் என்று பிரம்ம செல்லாணி அவரை அழைத்தார்.தலாய்லாமா சீன எதிர்ப்பு லாபிகளால் பயன்படுத்தப் படுகிறார். அமெரிக்க ஆதரவு ஏகாதிபத்திய நாடுகளின் பெரும் உதவி இருந்த போதும் அவர் இந்தியாவில் நிறுவிய நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை உலகில் எந்த ஒரு நாடும் அங்கீகரிக்கவில்லை.

எப்போதும் போல் எல்லைகள்

சீனா இந்தியப் பகுதியைக் கைப்பற்றியதாக ஒரு கதையை முன்வைக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர்… இரு தரப்பினரும் எல்ஏசி( LAC) கோட்டிற்கு உட்பட்டு  இருக்கின்றனர்… இருவரும் அவரவர் நிலைகளை எடுத்துள்ளனர், ஆனால் அவர்களின் சொந்த LAC பகுதிக்குள் … சீனா எந்த இந்தியப் பகுதியையும் கைப்பற்றவில்லை என்று 2019 இல் இந்திய இராணுவத்திலிருந்து தன்னார்வ ஓய்வு பெற்ற கர்னல் எஸ்.டின்னி எழுதிய யுள்ளார்.

செயற்கைக்கோள்கள் பொய் சொல்லாது … இந்திய ராணுவம் காலத்தால் சோதிக்கப்பட்ட அறிக்கையிடல் அமைப்பைக் கொண்டுள்ளது… இந்தப் பகுதிகளில் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவுவதையோ அல்லது கைப்பற்றுவதையோ காட்டும் ஒரு படம் கூட இல்லை … சீனா LAC நெடுகிலும் உயரமான இடங்களை  கைப்பற்றியதாக செய்திகள்… இதுவும் உண்மைக்கு அப்பாற்பட்டது…

அவர்கள் LAC இலிருந்து வெகு தொலைவில் உள்ள தங்கள் நிலைகளைப் பாதுகாப்பதற்காக வரையறுக்கப்பட்ட பாதுகாப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளனர் … தரையில் உள்ள துருப்புக்களைப் பொறுத்தவரை … LAC பற்றிய புரிதல் அல்லது புரிதலில் எந்தப் பிரச்சினையும் இல்லை.. அவர்கள் LAC இன் தெளிவான மற்றும் தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வரைபடங்களுடன் செயல்படுகிறார்கள்… எனவே உண்மையை மறைப்பது என்ற கேள்வி எங்கே?எனவே லடாக்கில் தற்போதைய நெருக்கடியை மற்றொரு கார்கிலாக மாற்ற வேண்டாம் என்று அவர் முடித்தார்.

இந்திய பருந்துகள் சீனாவிற்கு எதிராக அமெரிக்க கழுகுகளுடன் கைகோர்க்கின்றன.  தலாய்லாமாவை முன்வைத்து நடத்ப்படும் விளையாட்டு  கடந்த 60 ஆண்டுகளில் தோல்வி அடைந்த பழைய விளையாட்டு ஆகும். இது இந்தியா மற்றும் அதன் மக்களின் நலங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான காரணத்தை பற்றி சிந்திப்பவர்கள் இந்த பௌத்த ராஜதந்திரம் சிக்கலை உருவாக்கும் என்று கூறுகிறார்கள். கடந்த 60 ஆண்டுகளில் தோல்வி அடைந்து இப்போது வெற்றி பெற முடியாது என்பதை அனுபவம் காட்டுகிறது.

இந்தியாவில் பௌத்த ராஜதந்திரம் என்ற திட்டங்களை உருவாக்கக் கூடியவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் குடியேறிய திபெத்தியர்கள் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். கிட்டத்தட்ட 40% திபெத்தியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக திபெத்தில் சீன அரசாங்கம் ஏற்படுத்திய பிரம்மாண்டமான வளர்ச்சி அவர்களை அங்கே ஈர்க்கிறது.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமத்துவ சமுதாயம் நோக்கி

  தோமஸ் பிக்கெட்டி எழுதிய சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில் , புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவ...