Pages

புதன், செப்டம்பர் 17, 2025

கைத்தட்டி கொண்டே இருக்கிறேன் ........

 



அ. பாக்கியம்

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வெளியிட்ட ஒரு நினைவு மலரில் வாலிபர் சங்கத்தின்  முன்னத்தி ஏர்களிடம் வாழ்த்துச் செய்தி பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த வாழ்த்து செய்திகளில் நான் படித்தது என்றும் நினைவில் நின்றது மட்டுமல்ல சில இடங்களில் தொடர்ந்து பயன்படுத்திய வார்த்தைகளும் ஆகும். முன்னத்தி ஏரில் ஒருவர்  நான் மைதானத்தில் ஓடி முடித்து விட்டேன் தற்பொழுது அடுத்த தலைமுறை ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து கேலரியில் அமர்ந்து கொண்டு கைதட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தைகளில் அவரது வாழ்த்து செய்தி முடித்திருந்தார். தோழர் அகத்தியலிங்கம் பொறுப்பில் இருந்த பொழுது நான் உட்பட அவருடன் மையப் பணிகளில் இருந்த காலத்தில் இந்த நினைவு மலரை அவரின் முன்முயற்சியால் சிறப்பாக வெளியிடப்பட்டது. அந்த மலரில் பலரின் கருத்துக்களோடு மேற்கண்ட வரிகளை எழுதி இருந்தவர் கே வி எஸ் என்று அன்புடன் அழைக்கக்கூடிய கே வி எஸ் இந்துராஜ் ஆகும்.

திருச்சி மாவட்டத்தின் கட்சித் தலைவர்களின் ஒருவராக திகழ்ந்தவர் மட்டுமல்ல தொடர்ந்து சாத்தியமான அளவு இயங்கிக் கொண்டும் இருக்கிறார்.

 நேற்றைய தினம்(14.09.25)  திருச்சியின்  புறநகர் மாவட்ட பயிற்சி முகாமில் அவரை சந்தித்து பேசியது இதமான நிகழ்வாக அமைந்தது. நான் திருச்சிக்கு வாலிபர் சங்க வேலைகளுக்காக தொடர்ந்து வந்த பொழுதெல்லாம் மாவட்ட அலுவலகத்தில் கலகலப்பான ஒரு மனிதராக இருந்தவர் தோழர் கே வி எஸ் ஆவார்.

அவர் இல்லை என்றால் வெற்றிடத்துடன் திரும்புவதான ஒரு மெல்லிய உணர்வு ஏற்படும். அனைத்தையும் மிக சாதாரணமாக செய்வது மட்டுமல்ல அவருடைய பேச்சுக்களும் அவ்வாறே அமைந்திருக்கும். இளைஞர்கள் கட்சிக்குள் வந்த பொழுது அவர் திருச்சி மாநகர் கட்சியின் செயலாளராக இருந்தார். பல இளைஞர்களை எதிர்கொண்டார். இளைஞர்களின் கிண்டல் கேலிகளை புன்னகையுடன் கடந்து செல்வார். சில நேரங்களில் நான் அவரை சந்திக்கிற பொழுது பாக்கியம் இந்த பயலுகளை சொல்லிவை ரொம்பத்தான் பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று செல்லமாக கடிந்து கொள்வதும் பதிலுக்கு பல இளைஞர்கள் அவரை நகைச்சுவையுடன் பேசுவதும் நெருக்கத்தை உருவாக்குவதாக இருந்தது. இன்று 73 வயதை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். வாய்ப்புள்ள போது நிகழ்ச்சிகளில் அனைத்திலும் பங்கு பெறுகிறார். அந்த மாவட்ட குழுவும் அவரையும் இதர மூத்த தோழர்களையும் அரவணைப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரோடு சிறிது நேரம் உரையாடினேன்.

திருச்சி மாநகரில் 21 ஆண்டுகள் கட்சியின் இடைக்கமட்டி செயலாளராக பணியாற்றி இருக்கிறார். 1981ம் ஆண்டு முதல் கட்சியின் மாவட்ட குழுவிலும், 1985 முதல் 2022 ஆண்டு வரை மாவட்ட செயற்குழுவிலும் இருந்து பணியாற்றிருக்கிறார்.

தோழர் பி ஆர் சி என்று அன்புடன் அழைக்கக்கூடிய பி இராமச்சந்திரன் அவர்கள் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் செயலாளராக அதாவது புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் திருச்சி புறநகர் திருச்சி மாநகர் இவை அனைத்தும் ஒன்றாக இருந்த பொழுது அதன் செயலாளராக பணியாற்றிய காலத்தில் தோழர் கே வி எஸ் அவர்களை  இயக்கத்தில் ஈடுபடுத்தியதை  நினைவு கூர்ந்தார்.

திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே தோழர் பி ஆர் சி மாவட்ட அளவில் 1972 ஆம் ஆண்டுகளில் ஒன்பது பேர் கொண்ட ஒரு அமைப்புக்குழுவை உருவாக்கினார் அதில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டார்.

 தோழர் பி ஆர் சி வாலிபர் அமைப்பை கட்டுவதற்கு திருச்சியில்  விதை போட்டவர் என்பது மட்டுமல்ல அதை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றினார். என்னைப் போன்றவர்கள் வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநில பணிகளில் இயங்கத் துவங்கிய பொழுது அதன் பொறுப்பாளராக இருந்து வழிகாட்டியவர் தோழர். பி ஆர் சி.இதன் தொடர்ச்சியாக தான் 1974 ஆம் ஆண்டு தோழர் பிஆர்சி போன்றவர்களின் முன் முயற்சியால் முதல் ஜனநாயக வாலிபர் சங்கம் மாநாடு திருச்சி முனிசிபல் மண்டபத்தில் நடைபெற்றது என்றும் இந்த மாநாட்டில் தோழர்கள் ஆர். உமாநாத், தணிகைச் செல்வன், தஞ்சை மணியரசன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் முத்துக்கிருஷ்ணன் தலைவராகவும், தோழர் வி பரமேஸ்வரன் செயலாளராகவும், தோழர் கே வி எஸ்  துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதை நெகிழ்வோடு தெரிவித்தார்.

இந்த ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி #இளைஞர் முழக்கம் என்ற பத்திரிக்கை வெளியிடப்பட்டது.முதல் இதழை தோழர் பிஆர்சி பெற்றுக் கொண்டார். இந்த பத்திரிக்கையை வெளிமாநிலத்தில் இருந்த தமிழ் இளைஞர்கள் உட்பட வாங்கினார்கள்.  பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவாக தோழர் முத்துகிருஷ்ணன், பரமேஸ்வரன், ஜெகதீசன் மற்றும் நான் உட்பட ஆசிரியர் குழுவில் இருந்தேன் என்றும்,  எனக்கு பாசறை செய்திகள் என்று ஒரு பிரிவை ஒதுக்கி அது தொடர்பாக தொடர்ந்து எழுதி வந்தேன் என்பதையும் மன நிறைவோடு கே வி எஸ் அவர்கள் குறிப்பிடு கிறார்கள்.

தோழர்.ஜெகதீசன் தனது வருமானத்தை முழுவதும் கட்சிக்காகவும், வாலிபர் இயக்கத்திற்காகவும் செலவழித்தார் என்பதை நினைவு கூர்ந்தார் .சங்கம் ஆரம்பித்த காலத்தில் மிகப்பெரிய நெருக்கடியான அரசியல் சூழல் இருந்தது என்றும் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அதனைத் தொடர்ந்து,  அவசர கால நிலை பிரகடனம் என்று நீடித்தது. பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த இயலவில்லை என்பதையும் தெரிவித்தார்

1977 ஆம் ஆண்டு சோசலிச வாலிபர் முன்னணி கோவை மாவட்டம் இடிகரையில் அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக்குழு ஒன்பது பேர்களில் கே வி எஸ்  ஒருவராக இருந்துள்ளது மட்டுமல்ல அவசர நிலை காலத்தில் பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மாவட்டத்திற்கு வாலிபர் சங்கத்திற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றியதையும் தெரிவித்தார். அதன் பிறகு நடைபெற்ற மாநாட்டில் வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினராக பணியாற்றியதை கவனப்படுத்தினார்.

கட்சியில் உறுப்பினரான பிறகு திருச்சி வட்டாரக் குழு என்று அமைக்கப்பட்டு அதன் செயலாளராக தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் பணியாற்றி இருக்கிறார். இது எனக்கு புது செய்தியாக தான் இருந்தது. இவர்கள் எல்லாம் கட்சியின் அடிமட்டு அமைப்புகளில் பொறுப்புகளில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிகிற பொழுது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது.  இவ்வாறு அடித்தள அனுபவம் அற்ற முறையில் வளர்வது இயக்கத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதையும் எனது அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அதன் பிறகு கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப திருச்சி வட்டாரக்குழு இரண்டாக பிரிக்கப்பட்டு திருவரும்பூர் பகுதி,பெல் தொழிற்சாலை, பொன்மலை, ரயில்வே போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வட்டாரக் குழுவிற்கு தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் கிடைக்கும் செயலாளராக தொடர்ந்து செயல்பட்டு இருக்கிறார். திருச்சி மாநகரப் பகுதியை ஒட்டிய வட்டாரக் குழுவிற்கு தோழர்.கஸ்தூரி ரங்கன் அவர்கள் இடைக்கமிட்டி செயலாளர்களாக செயல்பட்டு உள்ளார். இந்த கமிட்டியிலும் தோழர் கே வி எஸ் அவர்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

83 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இடைக்கம்டி செயலாளராக பொறுப்பேற்று 21 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.

திருச்சி எரிசாராய தொழிற்சாலையில் 1966 ஆம் ஆண்டு ஒரு தொழிலாளியாக பணியில் சேர்ந்து பணியாற்றினார் என்றும் 1969 ஆம் ஆண்டு சங்கம் அமைத்து அதன் பிறகு சங்கத்தை பலப்படுத்திய பணிகளிலும் , 1973 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம் 28 நாட்கள் நடைபெற்று அன்றைக்கு இருந்த அரசு வேலை நிறுத்தத்தை உடைத்து பழி வாங்கியது. அதன் பிறகு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட வரலாற்று எடுத்துரைத்தார்.

1973 ஆம் ஆண்டு முதல் தோழர் பி ஆர் சி அவர்கள் கே வி எஸ் அவர்களை முழு நேர ஊழியராக கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து, அவசரநிலை காலம், ரயில்வே வேலை நிறுத்தங்கள், 77 ஆம் ஆண்டு தேர்தல், 80 ஆம் ஆண்டு தேர்தல  என்று தொடர் பணிகளின் காரணமாக  உடனடியாக முழு நேர ஊழியராக வர இயலவில்லை.

 தோழர் பி ஆர் சி 1980 ஆம் ஆண்டு அவரை ஒரு நேர ஊழியராக கொண்டு வந்ததை நெகிழுடன் குறிப்பிடுகிறார். அத்துடன் கம்பெனி வேலையும் விட்டுவிட்டார்.

தோழர் பி ஆர் சி யை தொடர்ந்து தோழர்.கே. வரதராஜன் தன்னை எவ்வாறு வழிநடத்தினார் என்பதையும் அரசியல் படுத்தினார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

திருச்சி சுமை பணி தொழிலாளர் சங்கப் போராட்டத்தில் ஆறு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்ததை குறிப்பிட்டார்.

தோழர்.கே வரதராஜன் பொறுப்புகளில் இருக்கிற பொழுது திருச்சியில் நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய அரசியல் தலைமை குழு உறுப்பினர்களில் தோழர் பிரமோத் தாஸ் குப்தா தவிர அனைத்து அரசியல் தலைமை குழு உறுப்பினர்களும் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்ததுடன் இந்த கூட்டங்கள் முழுவதும் கட்சி என்னை தலைமை ஏற்க வைத்தது என்பதை மிகப் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். குறிப்பாக அவசர நிலை காலத்தில் தோழர் பி ஆர் அவர்களின் பொதுக்கூட்டத்தை குறிப்பாக சுட்டிக்காட்டினார்.

தோழர் பிஆர்சி மீதும் தோழர் கே வி மீதம் அளவு கடந்த மரியாதையுடன் தனது ஆசானாகவும் நினைவு கூறுகிறார். தோழர் கே வரதராஜன் கொரோனா இல்லையென்றாலும்  கொரோனா காலத்தில் மரணம் அடைந்தார். மரணம் அடைந்து அவருடைய பூத உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொழுது அந்த பூத உடலுடன் அவரது மகன் மருமகள் பேரன் ஆகியோர் வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் தயங்கிய பொழுது உடல்நிலை சரியில்லை என்றாலும் கொரோனா அச்சம் இருந்த சூழ்நிலையிலும் அந்த வாகனத்தில் அனைத்தையும் மீறி ஏறிச் சென்று  பூத உடலை சிதையில் எரிக்கும் வரை இருந்து விட்டு வந்தேன் என்று அந்த தலைவரின் இறுதி நிகழ்வை குறிப்பிடுகிற பொழுது சற்றே உணர்ச்சி வசப்பட்டார்.

தோழர் கே வி எஸ் அவர்கள் தேர்தல் காலத்திலும் கே ஜி எஃப் உட்பட பல இடங்களுக்கு சென்று சென்று பணியாற்றியிருக்கிறார். மாநாடுகளில் சமையல் பொறுப்பில் ஆரம்பித்து பல பொறுப்புக்களை நிறைவேற்றி இருக்கிறார்.

என்னை போன்றவர்கள் அலுவலகத்திற்கு வருகிற பொழுது அவரின் நெருக்கமான, உரிமையான, அரவணைப்பு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருந்தது. நேற்று நான் அவரை சந்தித்து பொழுது அதே உணர்வு என்னை ஆட்கொண்டது.

இந்த உணர்வை வெளிப்படுத்துவதற்காக தான் இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன். இதமான சந்திப்பும் உரையாடலில் புதிய உணர்வுகளுடன் அங்கிருந்து புறப்பட்டேன்

அ. பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமத்துவ சமுதாயம் நோக்கி

  தோமஸ் பிக்கெட்டி எழுதிய சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில் , புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவ...