Pages

புதன், செப்டம்பர் 17, 2025

38 திபெத்: தலாய்லாமாவும் சாம்பவி எனும் ஆந்திர குழந்தையும்

 


அ.பாக்கியம்

தலாய்லாமா திபெத்திய பௌத்த மரபுகளின் மையமானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் திபெத்திய வஜ்ரயான பௌத்தத்தில் உள்ள மறுபிறவி சடங்கு என்ற மிக மோசமான அடையாளத்தை கடைபிடிக்க கூடியவராகவும் அவர் திகழ்கிறார். எந்தக் காலத்திலும் இதை விட்டொழிக்க மறுத்து அரசியலுக்கு பயன்படுத்துகிறார்.

உலகில் வேறு எந்த பௌத்த மதப் பிரிவுகளிலும் இந்த நடைமுறை இல்லை. திபெத்திய பௌத்தத்தில் தலாய்லாமா மறுபிறவி என்ற மூடநம்பிக்கை சடங்குகளுக்கு குழந்தைகளை பலிகடாவாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இதற்காகத்தான் திபெத்திய பௌத்தத்திற்கு அதிக குழந்தைகள் தேவைப்படுகிறார்கள். மறுபிறவி குழந்தைகளாக தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்கள் மடாலயங்களில் தங்கவைத்து வளர்க்கப்படுகிறார்கள். சிறு வயதில் இருந்தே மதம் தொடர்பான அனைத்து விதமான சடங்குகளுக்கும் இந்த குழந்தைகள் உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் அக்குழந்தைகளின் பருவ காலத்தில் இருக்கக்கூடிய சுயத்தன்மை பறிக்கப்படுவதுடன் குழந்தைகளின் பருவங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் நசுக்கப்படுகின்றன.

சீனாவின் மதச்சுதந்திர பாதுகாப்பு மற்றும் வழிபாட்டு முறைகளின்படி சிறுவர்களை அதாவது 18 வயது வரை எந்த மதத்தின் கருத்துக்களுக்கும், சடங்குகளுக்கும் உட்படுத்த கூடாது. எந்த மத கருத்துக்களையும் திணிக்க கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. இருப்பினும் திபெத்திய தன்மைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு மறுபிறவி விஷயத்தில் நெகிழ்வாக நடந்து கொள்கிறது. குழந்தைகளை மறுபிறவியாக அறிவிப்பதை அதிகபட்சமாக தடுத்து வருகிறது.

இதே காலத்தில் தலாய்லாமாவும், திபெத்திய பௌத்தமும் குழந்தைகளை மத விஷயங்களுக்காக பயன்படுத்தி வருவதை சர்வதேச அளவில் பல அமைப்புகளும் மக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திபெத்தில் உள்ள குழந்தைகளை மத கட்டுப்பாடுகள் உள்ள கல்வி முறைகளில் தான் பயில வேண்டும் என்று தலாய்லாமாக்கள் வலியுறுத்துகிறார்கள். சீன அரசாங்கம் விடுதிகளுடன்கூடிய பள்ளிகளை உருவாக்கி தொலைதூரங்களிலிருந்து வரக்கூடிய குழந்தைகளுக்கு நவீன வசதிகளுடன் கல்வியை சொல்லிக் கொடுக்கிறது. இந்த முறையை தலாய்லாமாகடுமையாக எதிர்க்கிறார் என்றால் குழந்தைகள் மீதான அவரின் நோக்கம் தெளிவாகப் புரியும்.

நாக்கை உறிஞ்சும் கலாச்சாரமா?

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தர்மசாலாவில் அந்தப் பகுதியில் உள்ள பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான M3M நிறுவனம் பொது நிகழ்ச்சியை தலாய்லாமா பங்கெடுக்கக்கூடிய வகையில் நடத்தியது. அப்பொழுது அவரிடம் வந்த ஒரு சிறுவனுக்கு முத்தம் கொடுத்த பிறகு தனது நாக்கை உறிஞ்ச வேண்டும் என்று கேட்டது மட்டுமல்ல, சிறுவனது நாக்கை தானும் உறிஞ்ச வேண்டும் என கேட்டுள்ளார். இது ஒரு வீடியோவாக வெளிவந்து மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை குழந்தைகளின் மீது உடல் ரீதியான தாக்குதல் என விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால் தலாய்லாமாவும் அவரது அலுவலகமும் ஆரம்பத்தில் அந்த சம்பவத்தை நியாயப்படுத்தி ஆதரவாக பேசினார்கள். ஒருவரது நாக்கை நீட்டுவது மரியாதை அல்லது உடன்பாட்டின் அறிகுறி. இது பெரும்பாலும் திபெத்திய பாரம்பரிய கலாச்சாரத்தில் வாழ்த்தாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்கள். மேற்கத்திய பார்வையில் இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்கள். இன்றைய நாட்களில் உணர்ச்சிகள் மற்றும் பழக்கவழக்கங்களின் வெளிப்பாடு என்று உருவாகி அனைத்தும் மேற்கத்திய மையமாகப்பட்டுள்ளதால் இது போன்றவற்றை தவறாக சித்தரிக்கிறார்கள் என்று தலாய்லாமாவின் ஆதரவாளர் எழுதினார். இது ஒரு அப்பாவித்தனமான விளையாட்டுத்தனமான கேலி என்று விளக்கம்  அளித்தார்கள்

ஆனால் குழந்தை உரிமைகளுக்கான அமைப்புகள் இந்த செயலை வன்மையாக கண்டித்தன. அனைத்து வகையான குழந்தை துஷ்பிரயோகங்களையும் கண்டிப்பதாக பல அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன. சிலர் இதை திபெத்திய கலாச்சாரம் என்று விளக்கம் கூறினாலும் தலாய்லாமாவின் இந்த வீடியோ நிச்சயமாக எந்த கலாச்சார வெளிப்பாடுகளாகவும் அமையவில்லை என்று குழந்தை உரிமை அமைப்புகள் அறிவித்தன. குழந்தைகளின் உடலில் தன்னாட்சி மற்றும் கலாச்சார உணர்திறன்கள் குறித்த அதிக விழிப்புணர்வு தேவை என்பதை இது போன்ற நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுவதாக கூறி அந்த நிகழ்ச்சியின் அகோரத்தையும் அம்பலப்படுத்தினார்கள். கலாச்சாரம் அல்லது மத நடைமுறைகளை விட குழந்தைகளின் நலன்கள் தான் எப்போதும் முன்னுரிமை பெற வேண்டும் என்பதை குழந்தை உரிமை பாதுகாப்பு ஆர்வலர்கள் அதிக அக்கறையுடன் பேசினார்கள்.

இறுதியாக தலாய்லாமாவும் அவருடைய அலுவலகமும், அந்த சிறுவனுக்கு வார்த்தைகளால் ஏற்படுத்திய காயத்திற்காகவும், சிறுவனிடமும், அவரது குடும்பத்திடமும், உலகெங்கிலும் உள்ள அவரது பல நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று தலாய்லாமா வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

தலாய்லாமா அரசியல் சர்ச்சைக்கு மட்டுமல்ல இது போன்ற பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகிறவர் தான். 2019 ஆம் ஆண்டு பிபிசி நிறுவனத்தில் கருத்து தெரிவித்த பொழுது ஒரு பெண் தலாய்லாமாவாக தனது வாரிசாக வந்தால் அவர் மிகவும் கவர்ச்சிகரமானவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு அணைத்து தரப்பிலும் எதிர்புகள் எழுந்த பிறகு மன்னிப்பு கேட்டார். குழந்தைகளிடையே கருணையையும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் போன்ற மதிப்புகளையும்  ஊக்குவிக்கவே நான் குழந்தைகளை நாடுகிறேன் என்று அவர் தெரிவித்தாலும் திபெத்திய பௌத்தத்தின் பாரம்பரிய நடைமுறைகளில் மறுபிறவி என்ற பெயரால் அவர் ஈடுபடுவது மேற்கண்ட செயலை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இவரின் இந்த செயல்பாடுகளால் குழந்தைகளின் தன்னாட்சி உடலாட்சி பாதிக்கப்படுகிறது என்ற பரவலான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

மறுபிறவிக்காக அவர் பல்வேறு விதமான வித்தைகளை செய்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பெயின் நாட்டில் இருந்து வாசல் டோரஸ் என்ற குழந்தையை மறுபிறவி அடையாளமாக கண்டுபிடித்து திபெத்தின் மடத்திற்கு கொண்டு வந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குழந்தை மடத்திலிருந்து தப்பித்து ஓடி விட்டது. மடத்தில் வாழ்ந்த என் வாழ்க்கை அனைத்தும் பொய்யானது நான் தலாய்லாமா அல்ல என்று அந்த குழந்தை அறிவித்துவிட்டு மீண்டும் தன் பெற்றோரிடம் சேர்ந்து விட்டது. குழந்தைகள் மூலம் மூடநம்பிக்கைகளையும் திபெத்திய பௌத்தத்தின் மூலம் நிலப்பிரபுத்துவ மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருவதற்கு மற்றொரு சான்று இந்தியாவில் நடந்துள்ளது.

எதிர்ப்பால் வீழ்ந்த மறுபிறவி அரசியல்

ஆந்திர பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் நந்தியால் பகுதிக்கு அருகாமையில் சூரிய நந்தி என்ற இடம் உள்ளது. இங்கு ஆறு வயது சிறுமி சாம்பவி என்பவளை தனது மறுபிறவி என்று தலாய்லாமாவால் அடையாளம் காணப்பட்டார். இது நடந்தது 2009 ஆம் ஆண்டு துவக்கத்தில். இந்த சிறுமி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவிற்கு சென்று தலாய்லாமாவுடன் மதச் சடங்குகளில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தையின் பெற்றோர்கள் வீடியோக்களை எடுத்து சாம்பவிக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளும், தீர்க்கதரிசன சக்திகளும் இருக்கின்றன என்று பிரச்சாரம் செய்தார்கள். பல வீடியோக்களை வெளியிட்டார்கள். சாம்பவி திபெத்துக்கு மயக்கத்தில் பயணிப்பதாகவும், டெலிபதி மூலம் தலாய்லாமாவுடன் தொடர்பு கொள்வதாகவும் வதந்திகளை பரப்பினார்கள். இந்த சிறுமி அதுவரை அறியாத தமிழிலும் தெலுங்கிலும் சரளமாக பேசுவதாக சரடு விட்டார்கள். இதன் தொடர்ச்சியாக அந்த சிறுமி ஒரு கோவிலில் தங்க வைக்கப்பட்டு அந்த இடம் குடிசைகள் வேய்ந்த ஆசிரமமாக மாற்றப்பட்டது. அந்த சிறுமியின் முன் பக்தர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் காட்சிகள் பரபரப்பாக காணொளியில் அரங்கேற்றப்பட்டது. நாடு முழுவதும் செய்திகள் பரவியது.

சிறுமி சாம்பவியின் தீர்க்க தரிசனத்திற்காக கீழ்க்கண்ட விஷயங்களை சொல்ல வைக்கப்பட்டாள். 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வீர பிரம்மேந்திர சுவாமி அவர்களின் கணிப்பின்படி வீர போக வசந்த ராயலு 2012 ஆம் ஆண்டு அவதரிப்பார் அவர் நாத்திகர்களின் இதயங்களையும் கண்களையும் கிழித்து எரிவார் என்று தீர்க்கதரிசனம் கூறினார். மக்களில் ஒரு பகுதி இதை நம்பினார்கள் ஆனால் அவர்களை விட அதிகமாக ரியல் எஸ்டேட் மற்றும் வணிகர்கள் சிறுமியை தெய்வமாக மாற்றி தங்கள் கருவூலத்திற்கான வருமானத்தை அதிகப்படுத்தி கொண்டார்கள்.

ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆசிரமத்தை சுற்றி நிலங்களை வாங்கி போட்டார்கள். வேக வேகமாக ஹெலிகாப்டர் தளம் கட்டப்பட்டது. சூரிய நந்தி என்ற அந்த பகுதிக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டது. அந்தக் கோயிலை சுற்றி இருக்கக்கூடிய நிலத்தை எல்லாம் சிறுமியின் பெற்றோர்கள் ஆக்கிரமித்தார்கள். பக்தர்களுக்கு என்று போடப்பட்ட குடிசைகளில் குளுகுளு ஏசி அறைகளாக மாற்றினார்கள். பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து தலாய்லாமா மூலம் வரவழைக்கப்பட்டவர்கள் சென்ற பிறவியில் தலாய்லாமாவுடன் விளையாடியவர்கள் என்று ஆவணப் படங்களை எடுத்து பரப்பினார்கள்.

தீர்க்கதரிசனம் அடுத்த கட்டத்திற்கு நேரடி அரசியலை நோக்கி சென்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆச்சாரியா நாகார்ஜுனாவை சந்தித்ததாகவும், அவர் மூலம் திபெத்திற்கு சுதந்திரத்திற்காகத தான்  தான் பிறந்ததாகவும், 2012 ஆம் ஆண்டுக்குள் திபெத் சுதந்திரம் அடைந்து விடும் என்றும், 2016 ஆம் ஆண்டு சீனா ஒரு ஜனநாயக நாடாக மாறும் என்றும் சாம்பவி தீர்க்க தரிசனம் என்ற பெயரால் அரசியல் பேச வைக்கப்பட்டார்.

இதை சாதாரணமாக சொல்லவில்லை “நோய்வாய்ப்பட்டிருந்த தலாய்லாமாவை குணப்படுத்திய சாம்பவி சொன்னார்” என்று பிரச்சாரம் செய்தார்கள். இந்த செய்தி சாம்பவி குடும்பத்தைச் சார்ந்தவர்கள், வணிகர்களைக் கடந்து தலாய்லாமாவிற்கு மிகப்பெரும் ஆன்மீக அரசியல் தேவையாக இருந்தது. எனவே சாம்பவி சம்பவத்தை மிகப்பெரிய அதிசய நிகழ்ச்சியாக தலாய்லாமா கட்டமைத்தார்.

மூடநம்பிக்கைக்கு எதிரான வழக்கு

இந்த நடவடிக்கைகள் மக்களை கடுமையாக பாதித்து இருந்தது. இதனால் ஆந்திராவில் இருந்த மனித உரிமை போராளிகள் இந்த மூடநம்பிக்கை தடுக்க வேண்டும் என்றும் குழந்தையின் மீதான மோசமான கட்டுப்பாடற்ற பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதும், மனரீதியான துஷ்பிரயோகத்திலிருந்து குழந்தையை காப்பாற்றவும், பாதிக்கப்படக்கூடிய குழந்தையின் மத மற்றும் அரசியல் சுரண்டலை தடுக்கவும், அவசர தலையீடு கோரி வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த வழக்கை ஆந்திராவில் இருந்த மனித உரிமை போராளிகள் மற்றும் அறிவுஜீவிகள், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களில் கூட்டமைப்பின் தலைவர் நாயக், ஜனவிக்னனா வேதிகா, குழந்தை உரிமைகள் குழுக்கள், ஹைதராபாத் பகுத்தறிவாளர் மன்றம், இந்திய தீவிர மனிதநேய சங்கம் போன்ற அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்திருந்தார்கள். வழக்குத் தொடுப்பது மட்டுமல்ல மக்களிடம் பிரச்சாரத்தையும் துவக்கி இருந்தார்கள்.

 

இந்தப் பின்னணியில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி 75 வயதான தலாய்லாமா ஆறு வயது நிரம்பிய சிறுமி தனது மறுபிறவி சாம்பவிக்காக கூட்டுப் பிரார்த்தனை நடத்துவதற்கும் மத சொற்பொழிவு நடத்துவதற்கும் ஹைதராபாத் வந்து சேர்ந்தார். இதே காலத்தில் ஹைதராபாத்தில் வழக்கு தொடுத்த அமைப்பினர்கள் குழந்தை கோயிலில் இருக்க வேண்டுமா? பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியுடன் வலுவான பிரச்சாரம் செய்ததினால் மக்கள் விழிப்படைந்தனர். அறிவிஜீவிகளும், மனித உரிமை போராளிகளும் பொது தளத்திற்கு வந்தனர். தங்களது பிரச்சாரத்தில் இவை எல்லாம் தலாய்லாமாவின் திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவதை அம்பலப்படுத்தினார்கள். இயற்கையாகவே தலாய்லாமாவின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டதினால் அங்கிருந்து தலாய்லாமா பின் வாங்கினார்.

தீர்ப்புகள் அடுத்தடுத்து வழங்கப்பட்டன. முதலில் குழந்தையின் பெற்றோர்களைப் பற்றி விசாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டது. சிறுமியின் உண்மையான தாய் இறந்துவிட்டார் என்பதே அப்போது தான் தெரிய வந்தது. சிறுமியின் தந்தையின் இரண்டாவது மனைவி இந்த குழந்தையை தெய்வக் குழந்தை என்று இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வந்ததையும் அறிய முடிந்தது. குழந்தையின் தாய் பொய் சொன்னதாகவும் குழந்தை சுரண்டப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்கள்.

குழந்தை அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்குச் செல்ல வேண்டும், குழந்தையை ஒரு தெய்வமாக சித்தரிக்க முடியாது, மேலும் குழந்தைக்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக நம்ப வைக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைக்கு தனியார் பள்ளியில் கல்வி வழங்குகிறோம் என்று கேட்டார்கள். அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், குழந்தை பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்று பெற்றோர்கள் கூறுவதை ஏற்க முடியாது என்றார். தீர்ப்பு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது

குழந்தை இருக்க வேண்டிய இடம் கல்வி நிலையம் தான்

குழந்தை சாம்பவி இயற்கைக்கு அப்பாற்பட்டவர் என்று அவருடைய வழக்கமான இயல்பான உள்ளார்ந்த குழந்தை பருவ உரிமைகளை பறிக்க தாய் திருமதி உஷாராணிக்கு உரிமை இல்லை என்றும், இயற்கை சூழலில் இருந்து குழந்தையை தனிமைப்படுத்தி தெய்வீக சக்திகளை கொண்ட ஒரு நபர் என்றும் பக்தர்களை ஈர்க்கும் ஒரு இடத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஒரு துறவியை போல் நடந்து கொள்ளக் கூடாது என்றும், குழந்தை சாம்பவியின் மென்மையான மனதில் எந்த மாயத் தோற்றத்தையும் உருவாக்க கூடாது என்று அக்குழந்தையில் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் உத்தரவிடப்பட்டது. குழந்தையின் பெற்றோர்களும் குழந்தையும் தங்கள் விருப்பப்படி எந்த மதத்தை பின்பற்றவும் உரிமை உடையவர்கள் என்பதையும் மனித உரிமை ஆணையம் தெளிவுபடுத்தியது. அதே நேரத்தில் குழந்தை ஒரு தெய்வீக சக்தி என்று மற்றவர்களை நம்ப வைக்க கூடாது என்று கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு சாம்பவியின் உரிமைகளுக்கு கிடைத்த வெற்றி தான் என்றாலும் இது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான தீர்ப்பாகும். சிறுமியின் பெற்றோர்களும் இந்த தீர்ப்பை மீற முடியாது என்று நீதிபதி கூறினார். குழந்தைகளின் உரிமைகளை உயர்த்தி பிடிக்கும் அனைவருக்கும் இது ஒரு வெற்றியாக கருதப்பட்டது. இலவச கட்டாய கல்வி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் உத்தரவு இது, இந்தச் சட்டத்தின் படிதான் குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்று சாம்பவியின் பெற்றோர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குழந்தையை ஆசிரமத்திலேயே தங்க வைத்து ஆசிரியர்களை வைத்து கல்வி போதிக்கிறோம் என்று சொன்னதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. மனுதாரர்கள் சார்பில் குழந்தைக்கு எதார்த்தத்தை மீண்டும் கொண்டுவர உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

ஹைதராபாத்தில் இருந்து பின் வாங்கிய பிறகு தலாய்லாமா சாம்பவி விவகாரம் குறித்து வாய் திறக்காமல் இருந்தார். பொதுவாக சீனாவை வெறுப்பவர்கள் தலாய்லாமாவை விருப்பத்துடன் அணுகுவார்கள். ஆனால் அவரது ஆபத்தான, அதே நேரத்தில் முட்டாள்தனமான செயல்களைப் பற்றி அறியக்கூடியவர்கள் அவரை விரும்ப மாட்டார்கள். அவர் குழந்தைகளை மத நடவடிக்கில் ஈடுபடுத்துவதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு ஒரு அரிய வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். அவரின் இந்த செயல்கள் தடுக்கப்படவில்லை என்றால் அவர் மீண்டும் ஒரு குழந்தையை இவ்வாறு பலிகடாவாக மாற்றுவதற்கு தயங்க மாட்டார் என்றும் கருத்துக்கள் மேலோங்கியது.

 

தலாய்லாமாவின் இந்த நடவடிக்கைகளை உயர்மட்ட ஊடகங்கள் அம்பலப்படுத்த தயங்கிய ஒரு பயங்கரமான சூழலில், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி ஆந்திரப்பிரதேச மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகள், முற்போக்காளர்கள் அம்பலப்படுத்தினார்கள். அவர்களுக்குத் தான் நோபல் பரிசு வழங்க வேண்டும். நோபல் பரிசை பெறக்கூடிய வரும், கொடுக்கக் கூடியவர்களும் ஆதிக்க செல்வாக்கில் இருப்பதினால் இங்கே விருதுகள் இடம் மாறி போய்க் கொண்டிருக்கின்றன.

தலாய்லாமா தன்னுடைய தவறுகளை திருத்திக் கொள்வதற்கான முயற்சியில் இறங்கவில்லை. குழந்தைகளின் உடலாட்சி. தன்னாட்சி உரிமைகளை விட அவரின் திபெத்திய அதிகாரம், நிலப்பிரப்புத்துவ உடமையாளரின் வர்க்க உணர்வும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவகம் மட்டும் தான் முக்கியமாக தெரிகிறது. எனவே மறுபிறவி என்ற குழந்தைகளை வதைக்கும் செயலை தனது அரசியலுக்காக முன்னிறுத்துகிறார். சீன சோசலிசம் இதை வென்றெடுக்கும்.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமத்துவ சமுதாயம் நோக்கி

  தோமஸ் பிக்கெட்டி எழுதிய சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில் , புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவ...