Pages

புதன், செப்டம்பர் 17, 2025

"நாம்_அறியாத_அலி முகமதலி"



பள்ளிப்பருவத்தில் இருந்தே விளையாட்டு என்றால் எனக்குக் பிடிக்காது; அதற்கான காரணம்... அதெல்லாம் நமக்கு எதற்கு? அதனால் என்ன பயன்? என்ற அறியாத பருவ மனநிலையில் இருந்து உருவானது எனலாம். விளையாட்டுகளைப் பொருத்தவரை இன்றும் அந்த மனநிலை தொடர்வது ஆச்சரியம் தரக்தக்கதாக இருக்கிறது.

அது கிரிக்கெட் முதல் அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும். இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் இந்தியா தோற்றுவிட்டால், எதோ நாட்டை அடமானம் வைத்து தோற்றமாதிரி ஒரு சித்திரம் கட்டப்படும் பாருங்க. அய்யய்யோ அது, இன்னும் விளையாட்டுகள்மீது வெறுப்பைத்தான் என்னுள் உண்டுபண்ணி இருக்கிறது.

சினிமா, டிவி வந்தப்பின் அவற்றை அதில் பார்க்கிறபோது, அது ஏற்படுத்தும் உணர்வு இருக்கிறதே... அது அதைவிட மோசம். அந்த மனநிலையை சிவகார்த்திகேயனின் "கனா" திரைப்படம் என்னுள் இருந்த வெறுப்பை கொஞ்சம் தணித்தது! அதிலும் குத்துச்சண்டையை பார்க்கும்போது முகமெல்லாம் உடைக்கப்பட்டு, ரத்தம் சிந்துவதைப் பார்த்தால், 'ச்சைய்...' என்று தோன்றும்!

அப்படித்தான் தோழர் ஏ.பாக்கியம் அவர்களின் 'நானே மகத்தானவன்' என்கிற நூலையும் "அவரென்ன குத்துச்சண்டை வீரர்; அவ்வளவுதானே. அதிலென்ன நமக்கு இருக்க போகுது; அவரது வாழ்க்கை வரலாறு இருக்கும்" என அசால்ட்டாக படிக்க துவங்கினேன்.

படித்து முடிக்கும்போதுதான் தெரிந்தது... மறைந்த மார்க்சீய நூலாசிரியர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள், 'நாம் அறியாத அம்பேத்கர்' என்ற நூலை கம்யூனிஸ்ட்கள் மத்தியில் அம்பேத்கரைப் பற்றிய மறுவாசிப்புக்கு, இட்டு சென்றாரோ... அதுபோல், "நாம் அறியாத அலியை... ஆம், முகமது அலியை 'நானே மகத்தானவன்' என நூலின் வாயிலாக கம்யூனிஸ்ட்களுக்கு மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக யாரெல்லாம் போராடுகிறார் களோ... அல்லது சமூக சமத்துவ விடுதலைக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ... அவர்களுக் கான மறுவாசிப்பிற்காகவும், அதையும் மார்க்சீய கோணத்தில் அரிய கொடையாக அரும்பாடுபட்டு வழங்கியிருப்பது, இந்த நூல் படித்து முடித்தப் பிறகுதான் தெரிந்தது...

ஆம், விளையாட்டையும் சமூக விடுதலைக்கான 'வெப்பனாக' (ஆயுதமாகப்) பயன்படுத்த முடியும் என்ற யதார்த்தத்தை இந்த நூல் எனக்கு புரிய வைத்தது என்றால்... அதுமிகையல்ல... எனக்கு மட்டுமா? படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை அள்ளித்தர தவறாது இந்நூல். ஆம், தமிழ்கூறும் நல்லுலகுக்கு இந்த நூல் அரிய, அறிய நல்கொடையே.

அமெரிக்கா என்றாலே... அதொரு ஏகாதிபத்திய நாடு; அதாவது உலகை சுரண்டி கொழுக்கிற நாடு; இப்படித்தான் பொதுப்புத்தியில் இருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால்... அது பணக்கார நாடு; அங்கு கக்கூஸ் கழுவும் வேலை செய்பவர்கள்கூட கோட், சூட் போட்டுக்கொண்டு, டை கட்டிக்கொண்டு, காரில்தான் வந்து இறங்கி, வேலை செய்துவிட்டு, திருப்பி காரில்தான் செல்வார்கள் என்று இந்தியா போன்ற நாடுகளில் பொதுபுத்தியில் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

சாதி கிடையாது; மதம் கிடையாது; இன ஒதுக்கல் கிடையாது; பாலினம் பாகுபாடு கிடையாது; இருந்தால் அமெரிக்கா மாதிரி இருக்கணும்; வாழ்ந்தால் அமெரிக்காவில் வாழணும் என்று இன்றும் டமாரம் அடிப்போர் உண்டு. ஆனால், அமெரிக்கா என்பது நிறவெறி, போர்வெறி, மதவெறி, பணவெறி என அத்தனை வெறிகளையும் கொண்ட நாடு என்பதை இந்த நூலில் அட்டகாசமாக முகமதுஅலி வாழ்க்கை ஊடே துள்ளல் நடையில் தூரிகையால் எழுதி உள்ளார் தோழர் பாக்கியம்.

இந்தியாவில் இந்துத்துவா சனாதன கோட்பாட்டை எப்படி தமது அறிவுகூர்மையால் அடித்து நொறுக்கி, அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார்

 அதுபோல் அமெரிக்காவில் அங்கிருந்த அன்றைய ஆளும் வர்க்கத்திற்கு நிறவெறி வாயிலாக உருவாக்கப்பட்ட, இன ஒதுக்கலை ஒழிக்க குத்துச்சண்டையை கேசியஸ் கிளே என்ற இயற்பெயர் கொண்ட முகமது அலி... களமாக கொண்டு களமாடி இஸ்லாத்தை இளமையிலேயே தழுவிட்டார்.

தமது 39 வயதிலேயே குத்துச்சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற உலக நாடுகள் எல்லாம் சென்று, எவ்விதம் தமது வாழ்க்கையை, கருப்பின மக்கள் விடுதலைக்கு அர்ப்பனித்துக் கொண்டார் என்பதை அணுஅணுவாக நுணுகி மிக நுட்பமாக படைத்துள்ளார் இந்நூலை பாக்கியம் அவர்கள். அதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நூலுக்குள் ஒன்றிரண்டு நுகர்வோமா... "குத்துச்சண்டை அரங்கில், வளையத்தில், வெள்ளை நிறவெறி வீரர்களின் முகத்தின்மீது விழும் ஒவ்வொரு 'பஞ்ச்'சும் (Punch), நிறவெறிக்கு எதிராக கருப்பின மக்கள் வெளிப்படையாக தங்கள் வலிமையும், மேன்மையும் காட்டுவதற்குக் குத்துச்சண்டை ஒரு களமாக அமைந்தது" (76-2).

என்றாலும் முகமதலிக்கு, "குத்துச்சண்டையைவிட இனவெறிக்கு எதிர்வினை ஆற்றக்கூடியது இஸ்லாம் மதம்தான்" (87-3) என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்; அதையே தழுவினார்.

ஆனால், வீட்டுக்கு ஒருவர் சோசலிச வியட்நாம்மீது அமெரிக்க படையெடுப்புக்கு ஆள்களை சேர்த்தபோது அதை ஏற்க மறுத்தார். "வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. ஆனால், நான் வியட்நாமியர்களுடன் சண்டையிட மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன்" (104-3) உறுதியாக இருந்தார்.

அதனால் அமெரிக்க அரசால் தரப்பட்ட நெருக்கடிகள் ஏராளம். அதை இன்முகத்துடனே எதிர்கொண்டார். ஒருபோதும் சமரசத்திற்குப் போகவில்லை. மேலும், அதற்கு எவ்விதம் பதிலடி கொடுத்தார் பாருங்கள்... "வியட்நாமியர்களோ, சீனர்களோ, ஜப்பானியர்களோ எனது எதிரிகள் அல்ல; எனது எதிரிகள் வெள்ளைநிற வெறியர்கள். எனது நாட்டில் என்னுடன் நிற்காத நீங்கள், நான் எங்காவது சென்று சண்டையிட வேண்டும் என்று மட்டும் விரும்புகிறீர்கள்" (104-4).

அன்றைய சூழலை அந்நாட்டின் பிரபல பத்திரிக்கை ஒன்று விவரிக்கிறது... "போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தங்கள் உயிரை நிச்சயம் இழப்போம் என்று தெரியாது; ஆனால், முகமது அலியோ புகழ் பறிப்பு, பண இழப்பு, சிறைக்குச் செல்வது உறுதி என்பன தெரிந்தும், அதை செய்தார் என்றால், அது தியாகத்தின் மற்றொரு நிலை" (111-1).

குத்துச்சண்டையைப்பற்றி பிற்காலத்தில் அவரே சிலாகிப்பதைப்பாருங்கள். என்றாலும் அவர் அடித்தால் அந்த அடி இடிபோல் இறங்குமாம். ஆம், அதைப்பற்றி நூலாசிரியர் கூறுகிறார்...

"தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியப்பிறகு, 1974ஆம் ஆண்டில் அவர், குத்துச்சண்டைக் களத்தில், வேகத்தைக் குறைத்து, ரோப்-ஏ-டோப் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதற்குமுன் முகம்மது அலியின் குத்துக்கள் தோராயமாக 1000 பவுண்டு சக்தி கொண்டது" (118-1).

ஒரு கட்டத்தில் சீனாவில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது, தமது குத்துச்சண்டை விளையாட்டு பழைய வீடியோ ஒன்றைப் பார்க்க கூறியபோது, அலி சொல்கிறார்..."அந்த நரகத்திற்குள் மீண்டும் நான் செல்ல விரும்பவில்லை" (147-1).

எளியோருக்கு கொடை வழங்குவதில் அவர் வள்ளல்தான். ஆனாலும் அதை எவ்வளவு தன்னடக்கமாக சொல்கிறார்..."ஒரு பிரச்சனை இருப்பதாக என்னிடம் கூறப்பட்டால் என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்" (172-2).

முகமது அலி அமெரிக்க கம்யூனிஸ்ட்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார். ஆனாலும், வர்க்க அடிப்படையில் மக்களைத் திரட்டுவதில் கம்யூனிஸ்ட்களோடு இணைந்து செயலாற்றுவதில் அவரின் ரோல் என்ன? என்பது வெற்றிடமாகத்தான் இருக்கிறது. இக்காலத்தில் கம்யூனிஸ்ட்களின் பணிகளைத் தனி அத்தியாயமாக தரப்பட்டிருப்பது சிறப்பு என்றாலும் அது நூலோடு ஒட்டவில்லை!

இங்கே மதம் மாறுவதால் சமூகம் சமநிலை அடையும் என்று அண்ணல் அம்பேத்கர் நினைத்தைப்போல, அங்கே அலியும் நினைத்துவிட்டார் போலும்!

எது எப்படியோ... கறுப்பின மக்களின் விடிவெள்ளியான முகமது அலி... உலக வரலாற்று பக்கங்களில் அழிக்கமுடியாத முத்திரைப் பதித்துள்ளார் என்பதை இந்த நூல் நன்கு படம் பிடித்து காட்டி உள்ளது எனலாம்.

நூலைப்பற்றியும், நூலாசிரியரைப் பற்றியும் அணிந்துரை எழுதிய புலவர் பா.வீரமணி வார்த்தைகளோடு நிறைவு செய்கிறேன்... "இப்படி எல்லோராலும் எழுதிவிட முடியாது. அரசியல் வித்தகம் வாய்ந்தவர்களால்தான் இப்படி எழுத முடியும். அந்த வித்தகம் வாய்ந்தவர்தான் தோழர் பாக்கியம். அந்த வித்தகத்தை நூலில் காணலாம். மொத்தத்தில் இந்த நூல் கருத்து களஞ்சியம்".

நூல் வடிவமைப்பு வாசிப்பைத் தடையின்றி கொண்டு செல்கிறது. அட்டைபடம் முதல் அச்சாக்கம் வரை அனைத்தும் அருமை! வெளியீட்டகத்திற்கு ஆயிரம் நன்றிகள்!

தான் வாழும் சமூகம் சமத்துவமடைய வேண்டுமென களமாடுவோர்கள் மட்டுமல்ல, சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டு அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்தான் "நானே மகத்தானவன்!"

தாரைப்பிதா... 16.09.2025.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமத்துவ சமுதாயம் நோக்கி

  தோமஸ் பிக்கெட்டி எழுதிய சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில் , புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவ...