Pages

அரசியல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 31, 2024

கேரளாவில் வறுமை ஒழிப்பு எப்படி சாத்தியமானது?

 


அ.பாக்கியம்

இந்தியாவில் வறுமையில் வாழக்கூடிய மக்கள் மிக மிக குறைவாக உள்ள மாநிலம் கேரள மாநிலம் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இது பற்றி அவுட்லுக் பத்திரிக்கை ஆகஸ்ட் 6 2023 எழுதிய விரிவான ஆய்வு கட்டுரை கவனத்தில் எடுக்க வேண்டியது.
கடந்த நாற்பதாண்டு கால கொள்கை முடிவுகள், விடாப்பிடியான அமுலாக்கம், அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கேரளா இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்களில் பட்டியலில் இல்லை. அதேபோன்று அதிகதொழிற்சாலைகள் உள்ள 10 மாநிலங்களின் பட்டியலில் கேரளா இல்லை. 7796 தொழிற்சாலை களுடன் 12 வது இடத்தில் தான் உள்ளது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் பங்கு அடிப்படையில்  கேரளா முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. இது அகில இந்திய சராசரியை விட அதிகமாகும். கல்வி அறிவு, சுகாதாரம், வாழ்க்கை தரம் போன்ற சமூக வளர்ச்சியின் பல குறியீடுகளில் கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்ட பன்முக வறுமை குறியீட்டு அளவின்படி (multi dimension poverty index) அடிப்படையில் 0.55 சதவீதத்துடன் மிகக் குறைந்த ஏழைகளைக் கொண்ட மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. இந்தியாவிலேயே ஏழ்மை இல்லாத மாவட்டமாக எர்ணாகுளம் மாவட்டம் 2022 ஆம் ஆண்டு உருவெடுத்தது. ஏற்கனவே கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பூஜ்ஜியம் சதவீதம் வறுமையைக் கொண்ட மாவட்டமாக உருவெடுத்தது. இந்தியாவிலேயே இந்த மாவட்டங்கள் வறுமை ஒழித்த மாவட்டங்களாக மாறியது.

இந்த ஆய்வுகள் ஊட்டச்சத்து, பள்ளி படிப்பு ஆண்டுகள், குழந்தை இறப்பு, இளம் பருவத்தினரின் இறப்பு, தாய் வழி ஆரோக்கியம், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், சொந்த வீடு, சொத்துக்கள், மற்றும் வங்கி கணக்கு போன்ற 12 குறியீட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி அதிக அளவு இல்லாத ஒரு மாநிலத்தில் சமூக வளர்ச்சியின் அனைத்து குறியீடுகளிலும் குறிப்பாக மனித வளர்ச்சி மற்றும் சமூக பாதுகாப்பில் இந்தியாவிலேயே வலுவான அடித்தளத்தை கேரளா நிறுவியுள்ளது. நிலசீர்திருத்தங்கள, அனைவருக்குமான பள்ளிக்கல்வி, ஜனநாயக பரவலாக்கம், சுகாதார பாதுகாப்பு, போன்ற முயற்சிகள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினரை உயர்த்துவதில் முன்னணி பங்காற்றி உள்ளத. அதாவது பொது விநியோகமுறை பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை வழங்கி உள்ளது அடிப்படையான. கேரளாவில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் மூலம் சுமார் 65 லட்சம் பேர் உதவிகளை பெறுகிறார்கள். இது கேரளாவின் பசியை போக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. பொருளாதார பாதிப்புகளையும் நிவர்த்தி செய்கிறது.

அதிகாரப்பூர்வமான அறிக்கையின் படி 1973-74 கேரளாவில் வறுமையின் அளவு 59.79 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 54. 88 சதவீதத்தை விட அதிமாக இருந்தது. ஆனால் 2011-12 ஆம் ஆண்டுகளில் கேரளாவின் முழுமையான வறுமை 11 சதவீதமாக குறைந்தது. இதே காலத்தில் தேசிய சராசரி 29.5%. தற்போதைய நிதி ஆயோக் அறிக்கை படி இந்தியாவின் ஏழ்மை மக்களின்0.55 சதவீதத்துடன் மிகக் குறைந்த வறுமையுள்ள மாநிலமாக கேரளா மாறியதற்கு 40 ஆண்டு காலம் தொடர்ச்சியாக எடுத்த கொள்கை முடிவுகளில் அமலாக்கம் இந்த வெற்றியை ஈட்டி தந்துள்ளது.

சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வு(NHFS) அறிக்கைப்படி நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் குழந்தை இறப்பு ஒற்றை இலக்கமாக கேரள மாநிலத்தில் உள்ளது. அதாவது ஆயிரம் பிறப்புகளுக்கு 6 இறப்பு என்ற நிலைமையில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் கேரளாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் இந்தியாவிலேயே முதல் தரவரிசைகளைப் பெற்ற சுகாதார நிலையங்களாக உள்ளது என்று தேசிய சுகாதார இயக்கம் சான்றிதழ் அளித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு பட்டியலின்படி இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல் 12 ஆரம்ப சுகாதார மையங்கள் கேரளாவை சேர்ந்தவை.

இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஆயிரத்து 1996-ம் ஆண்டு மக்கள் திட்டமிடல் திட்டத்தை கேரளா அறிமுகப்படுத்தியது. இது எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக அமலாகியது. அதாவது கேரளாவில் திட்டமிடல் பரவலாக்கப்பட்டது, திறமையான வளமான நிர்வாக அமைப்புகளையும் உருவாக்கியது, பஞ்சாயத்து ராஜ் மற்றும் மக்கள் திட்டமிடல் செயல்படுத்தல் போன்ற முடிவுகள் அமுதானது, புரட்சிகரமான மாற்றங்களை அடித்தளத்தில் கொண்டு வந்தது.

திட்ட நிதியில் 40% பஞ்சாயத்துகளுக்கு மாற்றி அடிமட்ட திட்டமிடலுக்கு கேரளா வழிகாட்டியாக அமைந்தது. மாநில அரசாங்கத்திடம் இருந்த பல அதிகாரங்கள் குறிப்பாக மருத்துவ மனைகள், பள்ளிகள், விவசாயத் துறைகள் நிர்வாகம், உட்பட பல அதிகாரங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டன. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது.

இதைவிட அதிகமாக குறிப்பிடப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சம் சிறந்த முறையில் பயனுள்ள நிதி பரவலாக்க முறை உருவாக்கப்பட்டது. மாநில அரசின் வரிகளில் ஒரு பங்கும், மானியங்களில் ஒரு பங்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது. மாநில நிதி ஆணையங்களின் பரிந்துரையின் அடிப்படையில் செலவினங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

 இந்தியாவிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது. பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலமாக கேரளா இருக்கிறது. பதிவு செய்யப்பட்டுள்ள அறிக்கையின் படி 2021-22 ல இடைநிற்றல் விகிதம் தொடக்க கல்வியில் 0.02 சதவிகிதம், உயர்நிலைப் பள்ளிகளில் 0.05, மேல்நிலைப் பள்ளியில் 0.03 என்ற அளவில் உள்ளது. இது தேசிய சராசரியான 4.13 சதவீதத்தை விட மிக மிக குறைவு. உயர்நிலைப் பள்ளியில் இடைநிற்றல் தேசிய சராசர 17.06 சதவீதமாக இருக்கிற பொழுது கேரளாவில் இது 0.05 சதவீதமாக உள்ளது. பட்டியலின சாதியான எஸ்சி மற்றும் எஸ் டி பிரிவுகளில் இடைநிற்றல் 0.04 மற்றும் 0.03 சதவீதத்துடன் நாட்டிலேயே மிகக் குறைவாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளுக்கு பதிலாக அரசு பள்ளிகளை மக்கள் விரும்பி மாணவர்களை சேர்த்து வருவது புதிய போக்காக உள்ளது. இதற்கு காரணம் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், நவீன மயமாக்கப்பட்ட ஆய்வகங்கள், நூலக வசதிகள், கல்வியின் தரம் ஆகியவை பெற்றோர்களையும் மாணவர்களையும் அதிகமாக கவர்ந்துள்ளது. கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 144 உயர்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு வந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவலை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான அதிகாரம் மற்றும் செயல்பாட்டு வெளிகள் விரிவடைந்துள்ளது. வறுமையை ஒழிப்பதற்காக 1997 இல் கேரளா அரசால் குடும்பஸ்ரீ என்ற தனித்துவமான பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது இதில் 4.5 மில்லியன் பெண்கள் உறுப்பினராக உள்ளனர். இந்தத் திட்டம் மூன்று அடுக்கு கட்டமைப்புடன் செயல்படுகிறது. மிகக் குறைந்த வருமான பிரிவினருக்கான குழு, நடுத்தர பகுதி மேம்பாட்டு சங்கங்கள்,  அடுத்து சமூக மேம்பாட்டுச் சங்கங்கள் என்ற முறையில் செயல்படுகிறது. இது உள்ளூர் உள்ளாட்சி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் இந்த குடும்பஸ்ரீ அமைப்பில 2,94,436 கீழ்நிலைக் குழுக்கள், 19,489 நடுத்தர குழுக்கள், 1064 சமூக மேம்பாட்டு குழுக்கள் என மொத்தம் 45,85,677 பெண்கள் உறுப்பினராக உள்ளனர். குடும்பத்திற்கு ஒரு உறுப்பினர் என்ற முறையில் இந்த குழு பராமரிக்கப்படுகிறது.

கேரளாவில் குடும்பஸ்ரீ பெண்களால் 26,448 மேற்பட்ட குறுந்தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு திட்டங்களில் சுமார் 5 லட்சம் உறுப்பினர்கள் கூட்டாகவும், தனியாகவும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமூக சமையல் அறைகள், வீட்டிலேயே கடைகள் நடத்துவது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் நடத்துவது, ஹெல்த் கலப்புகளை நடத்துவது, வண்டிகளில் உணவுகள் தயாரித்து விற்பது, வீட்டு விடுதிகள் நடத்துவது, திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொழில்சார் பயிற்சிகள் என பல துறைகளில் ஈடுபட்டுள்ளனர். நோய் தடுப்பு சிகிச்சை, சமூக ஆலோசனை, பாலின பயிற்சி, குழந்தைகளுக்கான சுகாதாரத் திட்டங்களை நடத்துகிறார்கள். கேரளாவின் வறுமை ஒழிப்பில் குடும்பஸ்ரீ அமைப்பின் செயல்பாடு முக்கிய பங்காற்றி வருகிறது.

பினராய் விஜயன் தலைமையிலான அரசு 2021 ஆம் ஆண்டில் மீண்டும் பதவி ஏற்ற உடன் தீவிர வறுமை ஒழிப்பை அறிவித்தது. அறிவித்தது மட்டுமல்ல உணவு, பாதுகாப்பான தங்கும் இடம், அடிப்படை வருமானம், சுகாதாரம்  ஆகிய நான்கு வசதிகள் பெறாத மக்களை கண்டறிந்து அவர்களுக்கு முதல் கட்டமாக இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து அமலாக்கப்பட்டது. ஒரு வருடத்தில் கணக்கெடுக்கப்பட்டு 103 099 தனி நபர்களைக் கொண்ட 64 006 குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்வது கண்டறியப்பட்டது. இவர்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் இந்த வெற்றிகளின் கூடவே தனித்துவமான சில சவால்களையும் சந்தித்து வருகிறது. ஒழிக்கப்பட்ட தொற்று நோய்கள் மீண்டும் வருவது சிக்கன்குனியா, டெங்கு, மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற தொற்று நோய்கள் அடிக்கடி வருவதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு களையப்பட வேண்டியதையும், தொற்று நோய் அல்லாத இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்கள் அதிகமாவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மிகப்பெரும் சவாலான பணியாக அரசின் முன்னால் உள்ளது.

கேரளாவின் இந்த வளர்ச்சிக்கு இடதுசாரிகளின் ஆட்சியும் செயல்பாடும் அவர்களின் திறமையும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஜனநாயக செயல்பாடுகள், அறிவியல் விழிப்புணர்வு, அதிகாரம் பரவலாக்கப்படுதல், நிதி பரவலாக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளில் இடதுசாரிகள் அதிகாரத்தில் இருந்த பொழுதும், இல்லாத பொழுதும் கவனம் செலுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாகவே அந்த மாநிலத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அ.பாக்கியம்

(அவுட்லுக் என்ற இதழில் வெளிவந்த கட்டுரையை தளுவி எழுதப்பட்டது)

வியாழன், ஆகஸ்ட் 03, 2023

மக்கள் டிவி முடித்து வைக்கப்பட்ட வழக்கும் 85 தோழர்களும்:

             இரு நாட்களுக்கு முன்பாக தோழர் டி கே சண்முகம் மக்கள் டிவி வழக்கு முடித்து வைத்தது பற்றி முகநூலில் செய்தி வெளியிட்டு இருந்தார். மாநிலத் தலைவர்கள் கே பாலகிருஷ்ணன், ப.செல்வசிங் மற்றும் அப்போதைய மாவட்ட செயலாளர் டி கே சண்முகம்,க. பீமராவ் உட்பட 85 தோழர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்று தெரிவித்து இருந்தார். இது பாராட்டுக்குரியது. தோழர் ஊரா வரதராசன் பற்றியும் போராட்டத்தின் சாரத்தையும் அதில் சிறப்பாக எழுதியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருந்த நான்கு தோழர்களை தவிர மற்ற 81 தோழர்களை பற்றி இந்தப் பதிவில் குறிப்பிட விரும்புகிறேன். அந்த 81 தோழர்களில் மூத்த தோழர்கள் உட்பட பல பொறுப்புகளில் தலைவர்களாக இருந்தவர்கள் தற்போது தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்து பதிவிடுகிறேன். சுமார் 16 நாட்கள் சிறையிலும் நிபந்தனை ஜாமீனிலும் இருந்தவர்கள் தங்களது வருமானத்தை இழந்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் இருந்தார்கள். அவர்களைப் பற்றியும் பதிவிடுவது தேவையாக இருக்கிறது.



நுங்கம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் திருமண மண்டபத்தில் வைத்திருந்து
இரவு 8 மணிக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன்னால் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறைக்கு அனுப்பி வைக்கும் பொழுது இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது. புழல் சிறைக்கு சென்ற பொழுது அங்கு இடமில்லை என்று ஒரு மணி நேரம் காக்க வைத்து 12 மணிக்கு புறப்பட்டு மூன்று மணிக்கு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டோம்.  அப்போதைய வேலூர் மாவட்ட செயலாளராக  இருந்த தோழர் நாராயணன் தலைமையில் செயற்குழு தோழர்கள் சிறை வாசலில் காத்திருந்து தேவையான சில உதவிகளை செய்து சிறைக்குள் அனுப்பி வைத்தார்கள். தென் சென்னையிலிருந்து 58 தோழர்களும் வடசென்னையில் இருந்து 25 தோழர்களும் மாநில தலைவர்கள் இருவரும் இதில் அடங்குவார்கள்.

அனைத்து தோழர்களும் ஒரே நீளமான அறையில் அடைக்கப்பட்டோம். வாய்ப்புள்ள நேரங்களில் அரசியல் உரைகள் சில தலைப்புகளில் பேசப்பட்டது. தென் சென்னை நமச்சிவாயபுரம் அண்ணாமலை தோழர்களுக்கு யோகா பயிற்சியை நடத்தினார். 15 நாள் காவல் என்றாலும் எட்டு நாட்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.85  தோழர்களும் திருச்சியில் தங்கி  புதூர் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் கிடைத்தது. சிறைச்சாலையில் கட்சியின் தோழர்கள், உறவினர்கள், தென்சென்னை வட சென்னையிலிருந்து தினசரி வந்தார்கள். அதே நேரத்தில் வேலூர் மாவட்ட கட்சி தோழர்கள் தினசரி வந்து செல்வது தேவையான உதவிகளையும் செய்து கொண்டு இருந்தார்கள். 8 நாட்களுக்குப் பிறகு விடுதலை பெற்று பகல் 12 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து வெளியில் வந்த பொழுது வேலூர் தோழர்கள் கூடி நின்று வரவேற்றனர். அவர்களிடையில் தோழர் கே பாலகிருஷ்ணன் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன் பிறகு அவரவர் சென்னைக்கு திரும்பி இரவோடு இரவாக திருச்சிக்கு புறப்பட்டு சென்று அடுத்த நாள் கையெழுத்து போடும் பணியை துவக்கினோம். திருச்சி மாவட்ட தோழர்கள் மாநில குழு உறுப்பினர் தோழர் ஸ்ரீதர் தலைமையில்  85 தோழர்களையும் தங்க வைப்பது,உணவு ஏற்பாடுகளை செய்வது, கையெழுத்து போடுவதற்கான ஏற்பாடுகளை செய்வது என அனைத்து பணிகளையும் இன்முகத்துடன் செய்து முடித்தனர். தினசரி கையெழுத்து போடுவது நடந்து கொண்டிருந்த பொழுது வழக்கறிஞர்கள் 8வது நாள் நீதிமன்றத்தில் வாதாடி நிபந்தனை ஜாமினை தளர்த்தி உத்தரவு வாங்கிய பிறகு சென்னைக்கு திரும்பினோம். திருச்சியில் இருந்த பொழுது சில கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பது உட்பட நடைபெற்றது. மொத்தமாக 16 நாட்கள் 85 தோழர்களில் கூட்டு வாழ்க்கை பெரும் அனுபவத்தை கொடுத்தது. வியாபாரம் நடத்தியவர்கள், சுய தொழில் செய்தவர்கள் முறைசாரா தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் சிறைக்கு வந்து விட்டார்கள். இந்த நாட்களில் அவர்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தோழர்கள் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சிறையில் இருந்தார்கள். சிறையில் இருந்த தோழர்களின் வீடுகளுக்கு சென்று கட்சித் தோழர்கள் விவரங்களை எடுத்துச் சொன்னார்கள். பலரும் போராட்ட களத்தில் நடக்கும் என்ற உணர்வுடன் ஏற்றுக் கொண்டனர். இயக்கத்தோடு அதிகம் தொடர்புள்ளதாக ஒரு சில வீடுகளில் கடுமையாக எதிர்வினை ஆற்றினார்கள். ஆகவே தான் அந்த 85 தோழர்களையும் மாவட்டம் முழுவதும் அறிமுகம் இல்லாவிட்டாலும் அடிமட்ட தோழர்களின் கடைக்கால் பணிகளால் கட்டிடம் உயர்ந்து நிற்கிறது என்பதின் புரிதலோடு இந்த பெயர்களை இங்கு பதிவிடுகிறேன். அவர்களில் பெரும்பாலோர் இன்றைக்கும் கட்சியின் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள்.

வட சென்னையில் டி கே சண்முகத்துடன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த, தற்போது மாநில குழு உறுப்பினராக இருக்கக்கூடிய  எம்.ராமகிருஷ்ணன், மற்றும் ஒன்றுபட்ட மாதவரம் பெரம்பூர் பகுதி குழுவின்  செயலாளராகவும்,மாவட்ட குழு உறுப்பினராகவும்  பணியாற்றிய தோழர் அரிகிருஷ்ணன், கொளத்தூர் பகுதி செயலாளராக பிற்காலத்தில் பணியாற்றிய தோழர் கோடீஸ்வரன், பெரம்பூர் பகுதி செயலாளராக பணியாற்றி தற்போது, மாவட்ட குழு உறுப்பினராகவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவராகவும் இருக்கக்கூடிய தோழர்.M.ராஜ்குமார், வியாபாரிகள் சங்கத் தலைவர் ப.தேவராஜ் , நம்மாழ்வார் பேட்டை ஓவியர், போக்குவரத்து தொழிலாளி கொளத்தூர் பகுதி செயலாளராக பணியாற்றிய தோழர். மதிவாணன் , இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக பணியாற்றிய தோழர் எம்.என். குமார், சாலையோர கடை வியாபாரி வியாசர்பாடி அரி என்கிற அறிவழகன், கொசப்பேட்டை சுப்பிரமணி, வீ. கே. கிருஷ்ணமூர்த்தி, ஓட்டேரி அங்காளன், எஸ் எஸ் புரம் எஸ்.சுரேஷ், கலைச்செல்வன்,புரசைவாக்கம் ஜி கார்த்திக், வி ராமச்சந்திரன், திருவிக நகர் ரமேஷ் முகப்பேர் வே. டி குமார், கே பி பார்க் இ.அன்பு, ஆர். ஆறுமுகம், கே.முருகன், கொடுங்கையூர் பகுதி மூத்த தோழர் சேது, மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றிய கே.விஜய் பி அண்ட் சி தொழிற்சாலையில் ஊழியர் சங்க தலைவராக பணியாற்றிய தோழர்.லோகையா என வட சென்னை சேர்ந்த 25 தோழர்களும போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்று விடுதலையானார்கள்.

தென் சென்னையிலிருந்து தோழர்கள் க. பீம்ராவ், அ.  பாக்கியம், தென் சென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றிய தோழர் நந்தகோபால், தென் சென்னையில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து பணியாற்றிய  மூத்த தோழர்கள் எஸ். குமாரதாசன்,  ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திருவான்மியூர் பகுதி செயலாளராகவும் மாவட்ட குழு உறுப்பினராகவும் பணியாற்றிய தோழர் டி. ராமன் போன்ற தோழர்களும், தற்போது  மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய தோழர் எஸ்.குமார் எஸ்.லெனின் மாவட்ட குழு உறுப்பினராக இருக்கின்ற, டி நகர் பகுதி செயலாளர் பணியாற்றிய தோழர் M.ரங்கசாமி, மாவட்ட குழு உறுப்பினராகவும் டி நகர் பகுதி செயலாளர் இருக்கக்கூடிய இ.மூர்த்தி மாவட்ட குழு உறுப்பினராக இருக்கக்கூடிய என். தாமோதரன், அரிகிருஷ்ணன், அன்றைய தினம் மாவட்ட செயற்குழுவில் இருந்து பணியாற்றிய தோழர் க.மாதவ் மற்றும் தற்பொழுது மத்திய சென்னை மாவட்ட செயற்குழுவில் இருக்கக்கூடிய தோழர் முருகேஷ், உட்பட்ட தோழர்களும், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளராகவும் மாவட்ட குழு உறுப்பினராகவும் பணியாற்றிய தோழர். அம்பிகாபதி, ஆட்டோ சங்கத் தலைவர் ஹரி நாராயணன் ஆட்டோ ஓட்டுநர் E.ராமன், நமச்சிவாயபுரம் அண்ணாமலை, பருவா நகர் ஆட்டோ தொழிலாளி மோகனரங்கம், எம்.முரளி புஷ்பா நகர் எம்.மணிகண்டன் போன்ற ஆயிரம் விளக்கு பகுதி தோழர்களும், பல்லாவரம் பகுதியிலி ருந்து அனகாபுத்தூர் விஸ்வநாதன்,  பாலன, மாதவன், குரோம்பேட்டை போக்குவரத்து தொழிலாளி ரவிக்குமார், சிட்லபாக்கம் வி. சீனிவாசன், பொழிச்சலூர் எம் கோபால், பழைய பல்லாவரம் பி செல்வராஜ், குளத்து மாநகர் சிவா , அனகை பகுதி செயலாளராகவும் மாவட்ட குழு உறுப்பினராகவும் பணியாற்றிய மறைந்த தோழர் பி. குமார் ஆகியோர்களும், மதுரவாயில் பகுதியிலி ருந்து ராமாபுரம் பாலசுப்பிரமணியன், ஏ.முருகன் பி. சரவணன் ஜி.ரவிச்சந்திரன் ஜி.கே.யுவராஜ் ஆலப்பாக்கம் P. V. ராஜேந்திரன்,போரூர் எம் ராஜா, நெற்குன்றம் ம.வை.ரகுபதி, ஏ.முருகன் எஸ்.பழனி என்.சேட், போரூர் பகுதி செயலாளராக இருந்து மறைந்த தோழர் இளையராஜா போன்றவர்களும், அண்ணா நகர் பகுதியில் தோழர் லெனின் தாஸ், இ பழனி மா.உதயகுமார் ஓசாங்குளத்தை சேர்ந்த ஆர் குமார் எல்.உசேன், விருகம்பாக்கம் பகுதியிலி ருந்து சௌந்தர பாண்டியன், மூத்த தோழர் பன்னீர்செல்வம், சிவலிங்கபுரம் ஜி.ரவி குப்புசாமி, தி.நகர் பகுதியிலிருந்து ஆட்டோ தொழிலாளி நந்தகுமார், ஈவீஆர். ரமேஷ், மு.இளங்கோவன் மயிலை பகுதியிலிருந்து பகுதி குழு உறுப்பினராக பணியாற்றி தற்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகியாக இருக்கும் பி.ஆர்.முரளி சேப்பாக்கம்  பகுதியிலிருந்து ஆசை தம்பி உட்பட தோழர்கள் சிறைச்சாலையிலும் நிபந்தனை ஜாமினிலும் வேலூர் மற்றும் திருச்சியில் இருந்தனர்.

இந்தப் போராட்டம் இரண்டு மாவட்ட குழுக்களாலும் உடனடியாக அறைகூவல் விடப்பட்டு நடத்தப்பட்ட போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பிறகும் தோழர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட பொழுது எந்தவித தயக்கமும் இல்லாமல் சிறைச்சாலைக்கு வந்தனர். சிறைக்குள்ளேயும் எந்த சோர்வுமின்றி சுறுசுறுப்பான முறையில் சிறையினுடைய பல்வேறு விஷயங்களை கேட்டு அறிந்து தெரிந்து கொள்ள வாய்ப்பை பயன்படுத்தினர். அத்துடன் பல்வேறு அரசியல் கேள்விகளை வந்திருந்த தலைவர்களிடம் நெருக்கமாக விவாதிப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தினர்.

இந்தப் போராட்டம் காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்ட ஒரு போராட்டமாக இல்லை என்பதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மீது தொடுக்கப்பட்ட தொடர் அவதூறுகளை எதித்த போராட்டம் என்ற வகையிலும் 16 முதல் 20 நாட்கள் வரை தங்களது சொந்த தொழிலை விடுத்து,  சிறை சென்றார்கள் என்பதாலும் இந்தத் தோழர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டி உள்ளது. பல நேரங்களில் தலைமை தோழர்களின் பெயர்களோடு மற்றும் பலர் என்று முடிக்கப்பட்டு விடுகிறது. இது போன்ற எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்று உள்ளது. அவற்றையெல்லாம் தொடர்புடைய தோழர்கள் பதிவு செய்வது என்பது அடிமட்ட தோழர்களின் அர்ப்பணிப்புகளை அங்கீகரிப்பதாக மாறும். தலைவர்களின் தியாகங்களில் ஆரம்பித்து அனைத்தும் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.
அ.பாக்கியம்
03.08.23



வியாழன், ஜூலை 13, 2023

மணிப்பூர் கலவரம்: வகுப்புவாத அரசியலின் விரிவாக்கம்

 அ.பாக்கியம்



இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலம் மே 3 தேதியிலிருந்து  கலவரத்தீயில் கருகிக் கொண்டிருக்கிறது. வளமை நிறைந்த பள்ளத்தாக்கும், பசுமை நிறைந்த காடுகளும் கலவர தீ ஜுவாலைகளால் தங்களது நிறத்தை இழந்துவிட்டன. மாநிலத்தை ஆட்சி செய்யும்  பிரேன்சிங் தலைமையிலான பாஜதான்  இதற்கு காரணம் என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இதற்கு முன்பும்  இனக்குழுக்களுக்கு இடையே மோதல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோதல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தற்போதைய மோதல்,  ஆட்சியில் இருப்பவர்களின் வாக்குவங்கி அரசியலுக்காக  உருவாக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு மாநிலம். இம்பால் அதன் தலைநகரம். வடக்கே நாகாலாந்து, தெற்கில் மிசோரம், மேற்கில் அசாம், கிழக்கே மியான்மர் நாட்டின் சாகாயிங் பிராந்தியத்தை எல்லையாக கொண்டு அமைந்திருக்கிறது. சுமார் 8,621 சதுரமைல் பரப்பளவு உள்ளது. 1926 முதல் பிரிட்டிஷ் பர்மாவின் பக்கோக்கு மலைப்பகுதி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது

1949 அக்டோபர் 15ம் தேதி மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. மணிப்பூரின் மகாராஜா போதச்சந்திரா ஷில்லாங்கிற்கு வரவழைக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டார். 1956 ல்  யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. 1971ல் வடகிழக்கு பகுதிகள் மறு சீரமைப்பு சட்டம் மூலமாக முழு அளவிலான மாநிலமாக உருவாக்கப்பட்டது. 2011ல் மக்கள் தொகை சுமார் 28 லட்சம். இதில் 57 சதவீத மக்கள் பள்ளத்தாக்கு (சமவெளி) மாவட்டங்களிலும் 43 சதவீதம் மலை மாவட்டங்களிலும் வாழ்கிறார்கள்.

 சமவெளி பகுதியில் மெய்தி மொழி பேசும் மக்களும் மலைப்பகுதியில் நாகா, குக்கி, ஜோமி என 35 அங்கீகரிக்கப்பட்ட  இனக் குழுக்கள் வாழ்கின்றார்கள். சமவெளியில் வாழக்கூடிய மெய்தி  மொழி பேசும் மக்கள் இந்துக்களாகவும் சிறுபகுதி பங்கல்கள் என்று அழைக்கக்கூடிய இஸ்லாமியர்களாகவும் உள்ளனர். பழங்குடி மக்களில் பெரும்பகுதியினர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள்.

மணிப்பூரில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 19 தொகுதிகள் பழங்குடியின பிரிவுக்கும் ஒரு தொகுதி தாழ்த்தப்பட்ட பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜ 37, அதன் கூட்டணி கட்சி 17 இடங்களையும் கைப்பற்றி ஆளுங்கட்சியாக இருக்கிறது. காங்கிரஸ் 5, ஜனதா தளம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

மெய்தி இன மக்கள் கடந்த 2012 ம் ஆண்டு முதல் தங்களை பழங்குடி இனபட்டியலில் சேர்க்க மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கில் ஏப்ரல் 20ம் தேதி, தீர்ப்பளித்த நீதிபதி முரளிதரன் (இவர் தமிழகத்தில் இருந்து சென்றவர்), மெய்தி சமூகத்தை அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டார். இது பழங்குடி மக்களுக்கு அச்சத்தை உருவாக்கியது.  ஏப்ரல்28 அன்று முதலமைச்சர் பிரேன்சிங், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைக்க இருந்தார். 

நிகழ்ச்சிக்கு முதல் நாள் 27ஆம் தேதி, அந்த உடற்பயிற்சி கூடம் போராட்டக்காரர்களால் கொளுத்தப் பட்டது. இதையடுத்து முதல்வரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உடனடியாக எட்டு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) சார்பாக பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு நடத்த அழைப்பு விடுத்தது. மே 3ம் தேதி அன்று சுராச்சந்துபூர் மாவட்டத்தில்  பழங்குடி மாணவர்களின் பேரணியில் 60,000அதிகமானோர் கலந்து கொண்டனர். பேரணியை தொடர்ந்து கலவரங்களும் வெடிக்க ஆரம்பித்தது.

இம்பாலில் இருந்த 500க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டது. 27க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. 45 ஆயிரம் பேர்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். வன்முறை தொடர்கிறது. 10,000 ராணுவ வீரர்கள் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.  அரசியல் சட்டப் பிரிவு 355-ஐ அமல்படுத்தி  மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒன்றிய அரசு கையில் எடுத்துக் கொண்டது. மே 26 ஆம் தேதி வரை இணையதள முடக்கம் நீட்டிக்கப்பட்டது.  இதற்கிடையில் பாஜவை சேர்ந்த எட்டு எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களும், பழங்குடி மக்களுக்கான தனி நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். வன்முறையை அரசு மவுனமாக ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார்கள்.

மணிப்பூரில் ஏற்கனவே நடந்து வந்த பழங்குடி இன மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் 2008ம் ஆண்டு சமாதான உடன்படிக் கையின்படி முடிவுக்கு வந்தது.  அரசு பழங்குடி இன மக்கள் மீது ஆயுத தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தியது. கடந்த மார்ச் மாதத்தில் அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்தப் பகுதியில் கஞ்சா பயிரிடுவதை ஒழிக்கிறோம் என்ற பெயராலும், மியான்மரில் இருந்து வந்து குடியேறியவர்களை விரட்டுகிறோம் என்ற பெயராலும்,  குக்கி, ஜோமி    பழங்குடிமக்களை வாழ்விடங்களிலிருந்து  விரட்டியது. இது பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது. இந்த பின்னணியில்  உயர் நீதிமன்ற தீர்ப்பு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்தது.

பழங்குடி மக்கள் ஏன் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்? மாநிலத்தில் 83 சதவீதம் கரடு முரடான மலைப் பகுதியில் 42 சதவீதம் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். 17 சதவீதம் உள்ள சமவெளி நிலப்பரப்பில் 50 சதவீதம் மெய்தி இன மக்கள் வாழ்கிறார்கள். பொருளாதார ரீதியிலான செழிப்பும் அரசியல் ரீதியிலான செல்வாக்கும் உடையவர்களாக மெய்தி மக்கள் உள்ளார்கள். மணிப்பூர் சட்டமன்றத்தில் 40 பொது தொகுதிகளிலும் மெய்தி இனத்தவர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பழங்குடி மக்கள் 42 சதவீதம் இருந்தாலும் சட்டமன் றத்தில் அனைத்து பழங்குடியினருக்கும் சேர்ந்து 20 இடங்கள் (33%)  மட்டுமே கிடைக்கின்றன. 

நீதிமன்ற தீர்ப்பின்படி  மெய்திகளுக்கு இடஓதுக்கீடு கொடுத்தால் பழங்குடி மக்கள் தங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்படும் என அஞ்சுகின்றனர். அவர்களுக்கு(மெய்தி இன மக்கள்) எஸ்சி, ஓபிசி, ஈடபிள்யுஎஸ் பிரிவுகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழங்குடி மக்களாகிய தங்களுக்கு இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். மலைப்பகுதி நிலங்களை வாங்கும் உரிமை மெய்தி இனத்தினருக்கு கிடைத்தால், பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். மாநிலத்தின் புவியியல் பகுதியில் 83 சதவீதம் பழங்குடியினப் பகுதிகள். ஆனால் மாநில அரசின் பட்ஜெட், மேம்பாட்டுப் பணிகளில் பெரும்பாலானவை மெய்தி ஆதிக்கம் செலுத்தும் இம்பால் பள்ளத்தாக்கிற்கு ஓதுக்கப்படுகிறது.

மெய்தி  மக்கள் ஏன் இந்த இட ஒதுக்கீட்டை கேட்கிறார்கள்?  மூதாதை யர்களின் நிலம், பாரம்பரியம், கலாச்சாரம் பாதுகாக்க எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும். சுருங்கி வரும் இம்பால் பள்ளத்தாக்கில் பழங்குடிகள் நிலம் வாங்க முடியும் . மலைப்பகுதியில் மெய்தி மக்கள் வாங்க முடியாது. வெளிநாட்டினர் மலைகளில் குடியேறி வருகின்றனர். எங்களின் மக்கள் தொகை சுருங்கி வருகிறது  என்று அவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

மாநிலத்தில் உள்ள பாஜ அரசு  பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராகவும், மெய்திஇன மக்கள் இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாகவும் பகிரங்கமாக செயல்படுகிறது. மெய்திகள் தங்கள் அரசியல் செல்வாக்கின் மூலம் பழங்குடி மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

மணிப்பூர் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில் அரசு மேல் முறையீடு செய்யவில்லை. இந்த தீர்ப்பை பழங்குடி தலைவர் தின்காங்லுங் காங்க்மாய் கடுமையாக விமர்சனம் செய்தார். பழங்குடி மாணவர் அமைப்பு தலைவரும் விமர்சித்தார். இதையடுத்து உயர் நீதிமன்றம், இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து அவர்களை கோர்ட்டில் ஆஜராக்க  வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்தப் பின்னணியில் பழங்குடி தலைவர் தின்காங்லுங் காங்க்மாய், மாணவ அமைப்பு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவர்களின் மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், தங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யவும் கோரியிருந்தனர். மேலும், ஆளும் கட்சி ஆதரவுடன் பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது, தேவாலயங்கள் உட்பட பழங்குடி மக்களின் அனைத்து வழிபாட்டுத் தலங்க ளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட்,  ‘‘எந்த மாநில அரசுக்கும் அல்லது எந்த நீதிமன்றத்திற்கும் யார் யார் பழங்குடி மக்கள் என்று சேர்ப்பது சம்பந்தமான உத்தரவை அளிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு ஏற்கனவே தீர்ப்பு சொல்லியுள்ளது என்பதை சுட்டிக் காண்பித்து உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு தவறானது’ என்று கூறியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மாநில அரசும், ஒன்றிய அரசும் பழங்குடி மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணம் என்னவென்றால், வழக்கு தொடுத்த பழங்குடி தலைவர் தின்காங்லுங் காங்க்மாயை வழக்கை திரும்பபெற வைத்தனர். இந்த வழக்கை பழங்குடி மாணவர் அமைப்பு தலைவர்  பட்டின்தாங் லூபெங் (Poatinthang Lupheng) நடத்துகிறார். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி உயர் நீதிமன்ற  தீர்ப்பு குறித்து அனைவருடன் பேசலாம் என்று தெரிவித்துள்ளது அப்பட்டமான இந்துத்துவா அரசியலாகும்.

1965 ஆம் ஆண்டு பழங்குடி மக்களை அடையாளம் காண்பதற்கு லோகூர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி ஐந்து அளவுகோல்களை பரிந்து ரைத்தது. பழமையான பண்புகள், தனித்துவமான கலாச்சாரம், புவியியல் தனிமைப்படுத்துதல், சமூகத்துடன் பெரிய அளவில் தொடர்பு கொள்வதில் கூச்சம், பின்தங்கிய நிலைமை, ஆகிய ஐந்தையும் அளவுகோலாக முன்வைத்தது. இந்த ஐந்தும் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு உட்பட்ட மெய்தி மக்களுக்கு பொருந்தாது.

2002-2004  வரை பூரியா கமிஷன்  அமைக்கப்பட்டு அரசியல் சட்டம் 5 வது அட்டவணையில்  பழங்குடியினரின் நிலம்,காடுகள், சுகாதாரம், கல்வி, பஞ்சாயத்துகளின் வேலை மற்றும் பழங்குடியின பெண்களின் நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தி பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பரிந்துரை செய்தது. மேலும் பழங்குடியின சமூகங்கள் தொடர்பான 5 முக்கியமான பிரச்சினைகளை ஆய்வு செய்ய பேராசிரியர் விர்ஜினியஸ் க்ஸாக்ஸாவின் தலைமையில் 2013ல் உயர்நிலைக் குழு (HLC) அமைக்கப்பட்டது (1) வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, (2) கல்வி, (3) சுகாதாரம், (4) விருப்பமில்லாத இடப்பெயர்வு மற்றும் இடம்பெயர்வு, (5) சட்ட மற்றும் அரசியலமைப்பு விஷயங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மணிப்பூர் மக்களின் வாழ்வை, பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய முறையில் ஊடுருவலை தடுக்க, எல்லைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு, அண்டை நாடுகளுடன் பொருளாதார, ராஜதந்திர உறவை வலுப்படுத்துவது, அமைதியை நிலைநாட்ட உள்ளூர் கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, ஆயுதப்படை சட்டத்தை ரத்து செய்வது, பாதுகாப்பு படையினரின் அதிகார அத்துமீறல்களை தடுப்பது,  உரிமை மற்றும் சொந்தம் என்ற உணர்வை தூண்டுவதற்கு முடிவெடுக்கும் இடத்தில் பிராந்திய மக்களின் பங்களிப்பை அரசாங்கம் அதிகப்படுத்த வேண்டும் போன்ற எண்ணற்ற ஆலோசனைகளை பாஜ தலைமையிலான மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தனது குறுகிய அரசியல் அதிகாரத் திற்காக வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக வகுப்புவாத திட்டமிடலை செயல்படுத்தி உள்ளது.

வடகிழக்கு மாநிலத்தில் நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் மலைப் பிரதேசங்களில் தனிமைப்பட்டு வாழ்கிற சூழலில் பாஜ மேற்கொள்ளும் இந்துத்துவ அரசியல் இந்திய ஒற்றுமையை சீர்குலைப்பதோடு மிகப் பெரும் பாதிப்பையும் உருவாக்கும்.

அ.பாக்கியம்

25.05.23 எழுதியது ஆஸ்திரேயாவிலிருந்து வெளிவரும் எதிரொலி  பத்திரிக்கையில்  ஜின் இதழில் வெளிவந்தது

 

 

புதன், ஜூலை 12, 2023

காலிஸ்தான்: இந்து ராஷ்டிராவின் எதிர் வினையா?

 

அ.பாக்கியம்.


கடந்த பிப்ரவரி 17ம் தேதி (17-02-23) பஞ்சாபில் உள்ள அஜ்னலா காவல் நிலையம், அம்ரித் பால் சிங் என்பவரின் தலைமையில் ஆயுதம் தாங்கியவர்களால் முற்றுகையிடப்பட்டது. போலீசாருடன் நடந்த கடும்மோதலுக்குபின், தன் உதவியாளர் லவ்பிரீத்தை காவல் நிலையத்திலிருந்து அம்ரித்பால் சிங் மீட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் பஞ்சாப் கொதி நிலைக்குச் சென்றது. அம்ரித் பால் சிங் யார்? எனக் கேள்வி எழுந்தது. மீடியா வெளிச்சம் அம்ரித் பால் சிங் மீது விழுந்தது.

யார் இந்த அம்ரித் பால் சிங் (30)? வாரிஸ் பஞ்சாப் டே (பஞ்சாபின் வாரிசுகள்) என்ற அமைப்பின் தலைவர்தான் அவர். இந்த அமைப்பை உருவாக்கியவர் பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து. டெல்லியில் மோடி அரசுக்கு எதிராக 2020ல் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவர். 2021ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த மதக்கொடி ஏற்றிய நிகழ்வில் பங்கேற்றார். இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறது என்று சிபிஐ குற்றம்சாட்டி கைதுசெய்தது. 2 மாத சிறைவாசத்துக்குப்பின் வெளியில் வந்த தீப் சித்து, 2021 செப்டம்பரில் வாரிஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பை ஆரம்பித்தார். பிந்திரன் வாலேயை நான் பயங்கரவாதியாக கருதவில்லை என்று கூறிய இவர்,  காலிஸ்தான் ஆதரவாளராக இருந்த சிம்ரஞ்சித் சிங் மானுக்காக நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பணியாற்றினார்.  எதிர்பாராதவிதமாக தீப் சித்து ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில்தான், துபாயில் வேலை பார்த்துவிட்டு 2022ல் திரும்பிய அம்ரித் பால் சிங், வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக, பிந்திரன்வாலேயின் சொந்த ஊரான ரோட் கிராமத்தில், அவர்கள் வழக்கப்படி தலைப்பாகை கட்டி முடி சூட்டிக் கொண்டார். அப்போது காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் முழங்கப்பட்டன.

பிந்திரன் வாலேதான் என் உந்து சக்தி என்று  அறிவித்த அவர்,  பிந்தரன் வாலேயைப் போலவே வெள்ளை அங்கி, நீல நிற தலைப்பாகை, நீளமான வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வலம் வந்தார். பஞ்சாபின் பொருளாதார, கலாச்சார நெருக்கடி, சீக்கிய மதத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து போன்ற பிரச்சாரங்களை முன்னிறுத்தி இளைஞர்களை கவர்ந்தார். மத போதகர் என்ற முறையில் கிராமம், கிராமமாகச் சென்று போதை பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து இளைஞர்களை வசீகரித்தார்.

காலிஸ்தான் இயக்கத்தை வளரவிட மாட்டோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். இந்துத்துவவாதிகளுக்கு இந்துராஷ்டிரம் அமைக்க ஆசை இருக்கும்போது சீக்கியர்களுக்கு காலிஸ்தான் அமைக்க ஆசை இருக்காதா? வன்முறை இல்லாமல் எதையும் நிறுவ முடியாது. ஆயுதங்களை மகிமைப்படுத்துவது குற்றமல்ல. சீக்கிய மதத்திலும் பஞ்சாபின் கலாச்சாரத்திலும் இது பொதிந்து உள்ளது. சீக்கிய மதத்தை தனிமதமாக அங்கீகரிக்காத இந்திய அரசியலமைப்பு சட்டத்தை என்னால் ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். அவருக்கு பரவலாக இளைஞர்களின் ஆதரவு கிடைத்தது. இதுபோன்ற இயக்கத்திற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கிடைப்பதற்கு காரணம் நவ தாராளமய காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்தான் என்பதை மறுக்க முடியாது.

பஞ்சாப்  இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் உணவுக் கூடை என்று அழைக்கப்பட்டது. பசுமைப் புரட்சி காலத்தில் 1967ஆம் ஆண்டு விவசாயிகளுடைய வருமானம் 70% அதிகரித்தது. 1974 ஆம் ஆண்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு பஞ்சாபின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்தியாவின் நிலப்பரப்பில் 1.53 % உள்ள பஞ்சாப் கோதுமை உற்பத்தியில் 17 %  நெல் உற்பத்தியில் 12 % பால் உற்பத்தியில் 10% பங்களித்து வருகிறது. இவைதான் பஞ்சாப் முதன்மை மாநிலமாக இருந்ததற்கு அடிப்படை காரணம்.             

ஆனால், 1980ஆம் ஆண்டுகளுக்குப்பிறகு பஞ்சாப் நெருக்கடிகளை சந்திக்க துவங்கியது. குறிப்பாக நவதாராளமயக் கொள்கை 92ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொழுது அதன் முதல் பலிகடாவாக பஞ்சாப் மாறியது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 1980-ல் முதல் மாநிலமாக இருந்த பஞ்சாப்,  2020-ல் 16-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. தற்போது மாநிலத்தின் கடன் சுமை ஒட்டுமொத்த ஜிடிபி உற்பத்தியில் 50 சதவீதத்தை கடந்து உள்ளது.

நவ தாராளமயம் விவசாயத்தை வணிகமயமாக்கி சந்தைப் படுத்தலை நோக்கி தள்ளியது. 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை கடன் கொடுத்ததை மாற்றி 3 லட்சம் வரை கடன் கொடுக்க வங்கிகள் தங்களது விதிகளை தளர்த்தினார்கள். சந்தைப்படுத்தலின் விளைவாக இடைத்தரகர்கள் இதில் மேலாதிக்கம் செலுத்தினர். இடுபொருள்களின் விலை ஏற்றமும், விளைப் பொருட்களின் விலைசரிவும் விவசாயிகளை கடன் சுமைக்கு ஆளாக்கியது. கடன் சுமையால் 2000-2018 இடைப்பட்ட காலத்தில் 9 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நவதாராள மயத்திற்கு பிறகு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தற்கொலைகள் சுமார் 20,000 என்று அதிகாரப்பூர்வமாகவே கணக்கிடப் பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலையில் 88% கடன் சுமையால் நடந்தது.

கால்வாய் பாசனம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. வணிகமய விவசாயத்தின் உந்துதலாலும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடைத்ததால்  14 லட்சம் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு அதலபாதாளத்திற்கு சென்றவிட்டது. பஞ்ச(ஐந்து) நதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலம் வறட்சியை நோக்கி தள்ளப்படுகிறது.

விவசாய நிலம் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி தனது வளத்தை இழந்தது. நிலத்தின் வளம் இழப்பால் விவசாயத்திற்காக காடுகள் அழிக்கப்பட்டு 33 சதவீதம் இருக்க வேண்டிய இடத்தில் 6 சதவீதம் மட்டுமே காடுகள் இருக்கிறது.

வேலையின்மை அதிகரிப்பு, இயந்திர மயமாக்கல், பூச்சிக் கொல்லி, பணப்பயிர் அறிமுகம், வணிகமயம் என அனைத்தும்  சேர்ந்து விவசாயத்தை அழித்து பஞ்சாபை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

விவசாய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மாறாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நிர்வாக சீர்கேட்டிலும் லஞ்ச ஊழல் போன்றவற்றிலும் ஈடுபட்டு நிலைமையை மேலும் சீரழித்தனர். நவ தாராளமயத்தில் உருவான புதிய பணக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

மக்களின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக அகாலி தள கட்சி பாஜவுடன் கூட்டு சேர்ந்து மாநிலத்தை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியதால் மக்களிடமிருந்து தனிமைப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியோ மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அக்கறை காட்டாமல் இருந்தது. இதனால் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை தேர்வு செய்தார்கள். ஆம் ஆத்மி அரசின் ஓராண்டு கால செயல்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கிராமப்புற விவசாயிகள் தங்களின் பிரச்சனைகளை தீர்க்க அதிக உணர்வு திறன் கொண்ட அரசியல் அமைப்பை எதிர்பார்க்கிறார்கள். அரசியல் வெற்றிடம் மாற்றை தேடுகிற பொழுது இளைஞர்கள் அம்ரித் பால் சிங் பின்னால் அணி திரளுகின்றனர். இந்த வெற்றிடத்தில் இருந்து தீவிரவாத சிந்தனைக்கு ஆதரவான போக்குகள் தென்படுகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மான், தன் எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் சங்ரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் காலிஸ்தான் ஆதரவாளராக இருந்த, சிம்ரஞ்சித் சிங் மான் வெற்றி பெற்றார். மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த இவர், அதன் பிறகு நடந்த எம்பி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்றால் பஞ்சாப் அரசியல் போக்கின் தன்மையை புரிந்து கொள்ளலாம்.

இந்த அரசியல் நெருக்கடியின் உண்மையான காரணங்களை புரிந்து கொள்ளாமல் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆம் ஆத்மி அரசை குறை சொல்வதும், பஞ்சாபில் நிலவும் சூழ்நிலைகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போன்றவற்றை மட்டுமே காரணமாக சொல்லுவது பிரச்சனைகளை தீர்க்க விரும்பாத நோக்கமாக உள்ளது.

பஞ்சாபின் சமூக நெருக்கடியும் இந்த விளைவுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. 1980-90ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில், டெல்லியில் சீக்கிய படுகொலைகள் ஏற்படுத்திய ஆறாத தழும்புகள், ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு பிறகு நடந்த அத்துமீறல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. சீக்கிய மத அமைப்புகள் பிளவுண்டு கிடப்பதால், ஆளுகிறவர்கள் அதை பயன்படுத்துகிறார்கள். பாஜக எழுப்பும் இந்தி இந்து இந்தியா என்ற ஆக்ரோஷமான கோஷங்களால் சீக்கியர்களை இந்து மதத்தில் இணைத்துக் கொள்வார்கள் என் அச்சம் மேலோங்கி வருகிறது.

பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியரான மஞ்சித் சிங்" மீண்டும் சீக்கிய தீவிரவாதத்திற்கான அரசியல் வெளி உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தீவிர சீக்கிய சித்தாந்த வாதிகள் இளைஞர்களிடையே உள்ள வெற்றிடத்தை நிரப்ப விரும்புகிறார்கள். அதில் ஒன்றுதான் வாரிஸ் பஞ்சாப் டே" என்கிறார்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று உரிமை கோரும் பொழுது காலிஸ்தான் இயக்கத்தை மட்டும் கட்டுப்படுத்துவது, சீக்கிய மதத்தை தனி மதமாக அங்கீகரிக்காமல் இருப்பதை எப்படி ஏற்க முடியும். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்துத்துவப் பெரும்பான்மை அரசு முஸ்லிம்களை அடித்துக் கொல்கிறது; கிறிஸ்தவர்களை தனிமைப்படுத்துகிறது. நாடாளுமன்றமே மதகோஷங்களால் நிரம்பி வழிகிறது. இந்துராஷ்டரா போன்ற கோரிக்கைகளை அமல்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்து இந்தி இந்தியா என்ற இந்துத்துவவாதிகளின் ஆக்ரோஷம், காலிஸ்தான் வேண்டும் என்ற எதிர் கோரிக்கையை தூண்டி விட்டுள்ளது. இந்துத்துவ வாதிகள் இந்துராஷ்டிரத்தை கோரினால் சீக்கியர்கள் காலிஸ்தானை தேடுவதில் என்ன தவறு என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

பஞ்சாப் தீவிரத்தன்மை கொண்ட அரசியலில் நிரந்தர தொடர்பு கொண்டு இருந்தாலும் அவற்றை பெரும்பாலான மக்கள் விரும்ப வில்லை. வெகுஜன இயக்கங்கள் தான் பஞ்சாபின் மாற்றங்களில் அடித்தளமாக இருக்கிறது. குறிப்பாக 1958- 59 இல் பஞ்சாப் அரசுக்கு எதிராக நடத்திய வரி எதிர்ப்பு இயக்கம், 2020 ஆம் ஆண்டுகளில் துவங்கிய விவசாயிகளின் போராட்டம் என வெகு மக்களின் இயக்கம் தான் பஞ்சாபின் போக்குகளை தீர்மானித்து உள்ளது.

இன்றைய தினம் காலிஸ்தானை அர்த்தப்படுத்துவது பஞ்சாபின் பொருளாதார அரசியல் சமூக நெருக்கடிகளும் அதனால் எழக்கூடிய மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளும் தான். இவை வெகுஜன இயக்கங்களால் தீர்க்கப்பட வேண்டியவை. இதற்கான அரசியல் தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.

இந்த நெருக்கடிகளை நீடிக்கச் செய்வதில் ஆளும் கார்ப்பரேட் இந்துத்துவா சக்திகள் விரும்புகிறது. "ஏகம்" உருவாக்க இந்து ராஷ்ட்ரா என்ற கோரிக்கையை முன்வைக்கும் இந்துத்துவவாதிகளுக்கு மாற்றாக காலிஸ்தான், சீக்கிஸ்தான் போன்ற கோரிக்கைகள் எழத்தான் செய்யும். இவ்வாறு பிளவுபடுவதை  ஆளுகிறவர்களும் விரும்புகிறார்கள். மக்களை மோதவிட்டு அரசியல் செய்வதுதான் அவர்களின் வாடிக்கை.

அ.பாக்கியம்.

25.06.23 எழுதியது. ஆஸ்திரேயாவிலிருந்து வெளிவரும் எதிரொலி  பத்திரிக்கையில் மே இதழில் வெளிவந்தது

 

 

 

 

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...