Pages

வெள்ளி, செப்டம்பர் 11, 2026

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

 

அ.பாக்கியம்

காரல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் மனித சமுதாய வரலாற்று வளர்ச்சியின் விதிகளை கண்டறிந்தனர். மனித குல வரலாற்று வளர்ச்சிப் போக்கில், தேசம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உருவான, அதாவது முதலாளித்து சகாப்தத்தில் உருவான ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு மாற்றங்களுக்கு உட்பட்டது. குறிப்பாக தேசம் என்ற அமைப்பு பொருளாதார அரசியல் மற்றும் கலாச்சார காரணிகளின் ஒருங்கிணைப்பால் உருவான ஒரு சமூக வரலாற்று நிகழ்வு ஆகும்.

புராதன காலத்தில் தேசங்கள் என்று உலகில் எங்கும் இல்லை. பண்டைய கிரேக்கம், எகிப்து, சீனா, இந்தியா இவையெல்லாம் ஒரு நாகரிகங்களாக இருந்தனவே தவிர தேசங்களாக இல்லை. கட்டிடக்கலை, இலக்கியம், கலை என வியத்தகு பல அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அவை தேசங்களாக இருந்ததில்லை. உலகில் எந்த தேசமும் பழமையானவை அல்ல. அவை 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் அதாவது முதலாளித்து சமூக அமைப்பின் உருவாக்கமாகும். தேச அரசு (நேஷன் ஸ்டேட்) என்பது இக்காலத்தில் உருவானதுதான்.

கடந்த காலத்தில் மாபெரும் அரசுகளும், சாம்ராஜ்யங்களும் இருந்தனவே அவையும் தேசமாகாத என்ற கேள்வி எழலாம். மௌரியர்கள், முகலாயர்கள், தில்லி சுல்தான்கள், விஜயநகர அரசர்கள், மராத்தியர்கள் இவை அனைத்தும் மிகப்பெரிய அரசை கொண்டு இருந்தாலும் அவை சாம்ராஜ்யங்களாக மட்டுமே இருந்தன. வெவ்வேறு பகுதிகளை படை பலத்தைக் கொண்டு மட்டுமே கப்பம் வசூலித்து ஒருங்கிணைக்கப்பட்டவை ஆகும். தேசம் என்பது அவ்வாறு இணைக்கப்பட முடியாதவை.

தேசத்தின் உண்மைகளும் பொய்களும்

பார்த்தா சாட்டர்ஜி தேசத்தின் உண்மைகளும் பொய்களும் என்ற தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவாதிக்கிறார். “அசோகரும், அக்பரும் நல்ல அரசர்களாய் இருந்திருக்கலாம். மக்கள் அந்த அரசர்களின் கீழ் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றே கூட வைத்துக்கொள்வோம். ஆனாலும் அசோகரின் சாம்ராஜ்யமோ, அக்பரின் சாம்ராஜ்யமோ வெகுஜன இறையாண்மையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அக்காலத்தில் அதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மக்கள் அரசனுக்கு ஆட்பட்டவர்கள். இறையாண்மை என்பது அரசனைச் சார்ந்தது என்றே கருதினார்கள.

வெகுஜன இறையாண்மை என்பது ஒரு நவீனக் கருத்தாக்கம். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் உருவாகி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவுக்குப் பரவிபிறகு இருபதாம் நூற்றாண்டில் ஆசியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் பரவியது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும்.

பிரஞ்சு புரட்சியாளர்கள் 1789 ஆம் ஆண்டு தேசத்தின் பிரதிநிதிகளாகத் தங்களைக் கருதி, நாட்டை ஆள்பவர்கள் பொதுமக்களாக இருக்க வேண்டுமேயன்றி அரசனோ, பிரபுக்களோ அல்ல என்று குரலெழுப்பினார்கள். அரசனின் தலையை அவர்கள் வெட்டினார்கள். ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வட அமெரிக்காவிலும்தென்னமெரிக்காவிலும் பிரிட்டிஷ், ஸ்பானிய காலனிகளில் வாழ்ந்த மக்கள், தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைத் தேசங்கள் என்று பிரகடனம் செய்து காலனிய ஆட்சிக்கு எதிராகக் குரலெழுப்பி அத்தேசங்களை மக்கள் குடியரசுகளாக அறிவித்தார்கள். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டு நெடுகவும் வெவ்வேறு இன மக்கள் தங்களை ஒரு தேசமாகப் பிரகடனம் செய்து, அவர்களுக்கென தனி அரசுக்கு உரிமை கோரினார்கள். வெகுஜன இறையாண்மையைக் கோராமல் தேசம் என்பது சாத்தியமில்லை. ஆதலால், எல்லாத் தேசங்களும் நவீனமானவையே.” (பக்கம் 23)

ஒரு தேசம் உருவாவதற்கு முன்பு இருந்த நிலைமைகள் எவ்வாறு மாற்றம் அடைந்தன என்பதையும் காரல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் ஆய்வு மூலம் அறிந்து கொண்டு விளக்கினார்கள். மார்க்சிய விஞ்ஞான கோட்பாட்டின் அடிப்படையில் சமூகத்தில் இருக்கின்ற உற்பத்தி சக்திகளின் முன்னேற்றம் தான் அதாவது, உழைப்பு, கருவிகள், தொழில்நுட்பங்கள், மனிதனின் திறமைகள், அறிவியல் அறிவு, போன்றவைதான் ஒரு இனத்தின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், அதன் மறை விற்கும் அடிப்படை காரணியாக அமைகிறது என்பதை விளக்கினார்கள். இவற்றை மார்க்சிசத்தின் வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகு முறையில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

சமூக அமைப்பின் அடித்தளம்

ஒரு சமூக அமைப்பின் அடித்தளம் என்பது உற்பத்தி சக்திகள் தான். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கும், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இயற்கையுடன் இடையீடு செய்கிறார்கள். இந்த இடையீட்டின் போது பயன்படுத்தப்படும் கருவிகள், தொழில்நுட்பங்கள், உற்பத்தி திறன்கள் ஆகியவைதான் உற்பத்தி சக்திகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இதன் மூலம் உற்பத்தியில் ஈடுபடுகிற பொழுது மக்கள் எவ்வாறு உற்பத்தி செய்கிறார்கள் என்பதுதான் உற்பத்தி உறவுகள் ஆகும் என்பதையும், இந்த உற்பத்தி உறவுகள்தான் அவர்களின் சமூக, அரசியல், கலாச்சார, அமைப்புகளையும் தீர்மானிக்கிறது என்பது நிரூபிக்கப்படுகிறது.

எனவே உற்பத்தி சக்திகளின் மாற்றம்தான் சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆரம்ப காலத்தில் அல்லது பழங்குடி சமூகத்தில் உற்பத்தி சக்திகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தன. வேட்டையாடுதல், மீன்பிடித்தல், அல்லது ஆரம்ப கட்ட விவசாயம் என்ற வகையில்தான் இயற்கையுடனான மக்களின் தலையீடு இருந்தது. அதிலும் ஒரு சிறிய பகுதிகளில்தான் இந்த செயல்பாடு அமைந்தது. இதன் காரணமாக அந்த மக்கள் இரத்த உறவு அடிப்படையில் வாழ்ந்தனர். இது ஒரு இனக்குழு செயல்பாட்டுக்கான வரையறையாக இருந்தது.

தொடர்ந்து மனித தலையீடுகள் மூலம் உற்பத்தி சக்திகள் அதாவது கருவிகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் திறன்கள் முன்னேறும் பொழுது இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் இரும்பு கருவிகள், உழவு செய்யும் முறைகள், கால்நடை வளர்ப்பு போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டது. இதன் மூலம் உபரி உற்பத்தி பொருட்கள் தோன்றியது. இதனால் ஆரம்பத்தில் உடமை வேறுபாடுகள் இம்மக்களிடையே உருவாகி, காலப்போக்கில் வர்க்கங்கள் தோன்றியது. இவைதான் வர்க்க சமுதாயமாக மாறுவதற்கான அடிப்படையாகும். சில அல்லது பல பழங்குடி இனங்கள் ஒன்றிணைந்து பெரிய இனக்குழுக்களாக மாறினார்கள். பின்னர் அது ஒரு நாடாகவும் மாறியது. ஒரு இனக் குழு உருவாவதற்கும், ஒரு நாடு உருவாவதற்கும் உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந்த கட்டத்தின் விளைவாகும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

உற்பத்தி சக்தி வளர்ச்சியும் உறவுகளில் மாற்றமும்

உற்பத்தி சக்திகள் வளர்ச்சியின் காரணமாக அவை இனங்களுக்கு இடையிலான உறவுகளையும் மாற்றி விடுகின்றன. முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் நீராவி இயந்திரம், மின்சாரம், உலகளாவிய வர்த்தகம் போன்ற உற்பத்தி சக்தியின் வளர்ச்சி பல்வேறு இனங்களை ஒன்றிணைத்து தேசிய சந்தைகளை உருவாக்கியது. அதே நேரத்தில் மற்றொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். இதே உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் வெவ்வேறு இனங்களுக்கு இடையில் போட்டியையும், சில சமயங்களில் மோதல்களையும், காலனி ஆதிக்கம், அதற்கான போர்களையும் உருவாக்கியது. உற்பத்தி சக்திகள் இந்த வளர்ச்சியின் காரணமாக அடுத்த நிலைக்கு முன்னேறின. இனங்களின் எல்லைகளையும் அவற்றின் ஒருங்கிணைப்பு அல்லது பிரிவினை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக மாறியது. இது தான் தேசம் உருவானதற்கான முதலாளித்துவ காலமாக அமைந்தது.

மார்க்ஸும் ஏங்கெல்சும், மாற்றத்திற்கு உட்பட்டது என்பதை வரலாற்று வளர்ச்சி விதிகளின்படி விளக்கினார்கள். உற்பத்தி சக்திகள் மிக உயர்ந்த கட்டத்தை அடையும்போது (தானியங்கி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எல்லையற்ற ஆற்றல், மற்றும் உலகளாவிய தொடர்பு போன்றவை), மனிதகுலத்தின் பொருளாதாரத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இதன் காரணமாக உடைமை மற்றும் வர்க்க வேறுபாடுகள் பொருளற்றுப் போகும். உற்பத்தி மற்றும் விநியோகம் உலகளாவிய அளவில் ஒருங்கிணைக்கப்படும். மக்கள் ஒரு குறிப்பிட்ட தேசத்தின் எல்லைக்குள் மட்டும் வாழாமல், உலக குடிமக்களாக (cosmopolitans) செயல்படுவார்கள்.

தேசிய எல்லைகளும், இன வேறுபாடுகளும் முக்கியத்துவத்தை இழந்து, “உலக மக்கள்” (world nation) ஒன்றின் பகுதியாக மாறுவார்கள். இந்த கட்டத்தில்தான், உற்பத்தி சக்திகளின் முன்னேற்றம், தேசம் இருந்த சமூக-பொருளாதார அடித்தளத்தையே அழித்துவிடும். எனவே, உற்பத்தி சக்திகளின் முன்னேற்றம் என்பது இனத்தைப் பிறப்பிப்பது, வளர்ப்பது, மாற்றுவது, மற்றும் இறுதியில் அழிப்பது ஆகிய அனைத்திற்கும் தீர்க்கமான இயக்க சக்தியாக அமைகிறது.

உற்பத்தி சக்திகள் குறைவாக இருந்தபோது இனங்கள் உருவாகின. அவை வளர்ந்தபோது இனங்கள் ஒன்றோடொன்று மோதி, கலந்து, பெரிய தேசங்களாக உருவெடுத்தன. அவை உச்சக்கட்டத்தை அடையும்போது, மனிதகுலத்தின் பிரிவுகள் (வர்க்கம், தேசம்) தானாகவே மறைந்து, ஒரு பொதுவான மனித சமூகம் உருவாகும். இதுவே மார்க்ஸின் “இன வளர்ச்சியில் உற்பத்தி சக்திகளின் தீர்க்கமான பங்கு” பற்றிய விளக்கமாகும்.

இது ஒரு நீண்டகால வரலாற்று செயல்முறையாகும். இது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களின் மூலம் நிகழும். தற்போதைய உலகமயமாக்கல் போக்கு இந்த கோட்பாட்டிற்கு சில நடைமுறை ஆதாரங்களை வழங்குகிறது. ஆனால் இது மிகவும் சிக்கலான மற்றும் நீண்டகால செயல்முறையாகும். மேற்கண்ட அனைத்தும் மார்க்சியத்தால் கூறப்படுகிற ஆருடம் அல்ல. வரலாற்று வளர்ச்சி விதிகளின்படி மனித குலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற பொழுது ஏற்படுகின்ற மாற்றத்தை விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருக்கிற ஒரு கோட்பாடு. இந்த வளர்ச்சி விதிகளின்படி தான் முதலாளித்து சகாப்தத்தில் எதிர்கொள்ளக்கூடிய தேசிய இன பிரச்சனைகளை மார்க்சியம் எதிர்கொண்டது.

எங்கெல்ஸின் கூற்றுப்படி, “உண்மையான சர்வதேசியவாதம் அவசியமாக ஒரு தனித்துவமான தேசிய அமைப்பின் அடிப்படையில் அமைய வேண்டும்”. ஒரு நாடு மற்ற நாடுகளை அடிமைப்படுத்தும் போது, அது அந்த நாட்டின் மக்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பது அவர்களின் கருத்து. “மற்ற நாடுகளை நாம் சங்கிலியால் பிணைத்துள்ள அதே சங்கிலிகள், நமது புதிய, எதிர்பாராத சுதந்திரத்தையும் பிணைக்கும்” என்று எங்கெல்ஸ் எச்சரித்தார். (‘Marx and Engels on Ireland’ (Progress Publishers, Moscow 1971) மற்றும் ‘The General Council of the First International. 1871-1872’) எனவே தேசம் என்பது தோன்றி மறைவதில்லை. வரலாற்றின் அதற்கான இருப்பையும், ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேசியவாதம் தேசிய அமைப்பின் அடிப்படையிலிருந்து ஏற்படும் முன்னேற்றமாகும்.

மார்க்ஸ்,எங்கல்ஸ் சந்தித்த தேசிய இனப்பபிரச்சனைகள்

இன இயக்கம், இன விடுதலை இயக்கம் குறித்த மார்க்சிய சிந்தனைகள் எப்பொழுதும் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் இருந்து முன்வைக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையும் இந்த அணுகு முறையில் கணக்கில் எடுக்கப்படுகின்றது. அதே நேரத்தில் ஒருபுறம், மேற்கத்திய உலகத்தின் காலனி நாடுகளை கொள்ளையடிப்பதற்கு இன அடக்குமுறைகளை கையாளுவதை மார்க்சியம் கடுமையாக எதிர்ப்பதுடன், காலணித்துவ மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கான முழு ஆதரவையும் வழங்கி வருகிறது. மறுபுறம் முதலாளித்துவத்தை பலவீனப்படுத்துவதும் பாட்டாளி வர்க்கத்தின் சக்திகளை வலுப்படுத்தக்கூடிய அணுகுமுறைகளையும் கையாண்டார்கள். போலந்து மற்றும் அயர்லாந்து அணுகுமுறைகளை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

போலந்தின் சுதந்திரம் என்பது ஜனநாயகத்திற்கும், தொழிலாளர் இயக்கத்திற்குமான ஒரு அவசியம் என்று மார்க்ஸ், எங்கல்ஸ் கருதினார்கள். ஏனென்றால், போலந்தை அடக்கியாளும் ரஷ்ய பேரரசு, ஐரோப்பாவில் எதேச்சதிகாரத்தின் (absolutism) முக்கிய தூணாகவும், புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் சக்தியாகவும் இருந்தது. எனவே, “போலந்தின் சுதந்திரமே ஐரோப்பாவில் ஜனநாயகத்தின் நிலைக்கான முதல் நிபந்தனை” என்று எங்கெல்ஸ் வாதிட்டார். ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதன் மூலமே, ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் முக்கிய எதிரிகளில் ஒன்றான ரஷ்ய சாரிசத்தை (Tsarism) பலவீனப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்பினர்.

எங்கெல்ஸின் இந்த நிலைப்பாடு, போலந்தின் சுதந்திரத்தை ஐரோப்பிய ஜனநாயகத்திற்கான முதல் நிபந்தனையாகக் கருதியது பல படைப்புகளிலும் கட்டுரைகளிலும் இந்த நிலைபாடுகள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. 1848-49 ஆம் ஆண்டுகளில் “நியூ ரைனிஷ் செய்தித்தாளில்” (Neue Rheinische Zeitung) எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைத் தொடர்களில் இவை அதிமாக காணப்படுகிறது.

போலந்தை அடக்கியாண்டதில் பிரஷியாவின் பங்கும் இருந்தது. மார்க்ஸ், எங்கல்ஸ் பிரஷியா (Prussia) தலைமையிலான ஜெர்மன் ஒருங்கிணைப்பை வரவேற்றனர். ஏனென்றால், ஒரு ஒருங்கிணைந்த ஜெர்மன் தேசம், பிரிவினைவாத நிலைமையைவிட முதலாளித்துவத்தை வேகமாக வளர்க்கும். அதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கையும் பலத்தையும் அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும், இந்த ஒருங்கிணைப்பு “மேலிருந்து” (பிரஷிய இராணுவத்தின் மூலம்) நடந்ததால், அது ஜெர்மனியில் ஆளும் வர்க்கங்களின் (Junkers-ஜங்கர்கள்) அதிகாரத்தையும் வலுப்படுத்தியது என்பதையும் அவர்கள் விமர்சித்தனர். குறிப்பாக, “பிராங்பேர்ட் சட்டமன்றத்தில் போலந்து விவாதம்” (The Frankfurt Assembly Debates the Polish Question) என்ற தொடர் கட்டுரைகளில், ஒரு ஜனநாயக, ஒருங்கிணைந்த ஜெர்மனி சாத்தியமாக வேண்டுமென்றால், ஒரு ஜனநாயக, சுதந்திரமான, ஒருங்கிணைந்த போலந்து இருப்பது அவசியம் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் வாதிட்டதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்தக் கருத்துகளுக்கு மிகவும் நேரடியான மற்றும் முழுமையான மூலமாக “The Role of Force in History” மற்றும் “Neue Rheinische Zeitung” கட்டுரைகளையே குறிப்பிடலாம். “ஜனநாயக போலந்தை நிறுவுவதே ஜனநாயக ஜெர்மனியை நிறுவுவதற்கான முதல் நிபந்தனையாகும்”. போலந்து விவகாரத்தில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் அணுகுமுறை என்பது தேசிய இனப்பிரச்சனையின் அடிப்படைக் கருவூலமாகக் கருதப்படுகிறது.

அயர்லாந்து விடுதலை ஆங்கிலப் பாட்டாளி வர்க்கத்திற்கான பாடம்

ஒரு தேசத்தை ஒடுக்கும் மற்றொரு தேசம், தன் சொந்தச் சுதந்திரத்திற்கான சங்கிலியையே உருவாக்கிக் கொள்கிறது” என்ற கொள்கை மார்க்சின் அயர்லாந்து பற்றிய பார்வையில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. ஆரம்பத்தில், ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியே அயர்லாந்தை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுவிக்கும் என்று மார்க்ஸ் நம்பினார். ஆழ்ந்த ஆய்வுக்குப் பின், அயர்லாந்தில் இருந்து ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கம் விடுபடும் வரை, அது எந்த முக்கியமான முன்னேற்றத்தையும் அடைய முடியாது எனும் முடிவுக்கு வந்தார். அதாவது, பிரிட்டனில் சமூக மாற்றத்திற்கான உத்தி அயர்லாந்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்று கருதினார். இது அயர்லாந்து மீதான பரிவு காரணமாக மட்டுமல்ல, ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கத்தின் நேரடி நலனுக்காகவும் அவசியம் என்று வாதிட்டார்.

ஆங்கிலேய முதலாளித்துவம் அயர்லாந்தை அடிமைப்படுத்தியதில், ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கம் ஒத்துழைத்தால் (அல்லது அதை எதிர்க்கத் தவறினால்), அது முதலாளித்துவத்திற்கு சாதகமாக அமையும். ஏனென்றால், அயர்லாந்தின் சுரண்டல் மூலம் கிடைக்கும் இலாபம் ஆங்கில முதலாளிகளுக்கு செல்கிறது.

இந்த ஒடுக்குமுறை ஆங்கில தொழிலாளர்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையே “பிளவு” ஏற்படுத்துகிறது. அதாவது, பொதுவான எதிரி முதலாளித்துவம் என்பதை மறைத்து, தொழிலாளர்கள் தங்கள் விடுதலைக்காக போராடுவதற்குப் பதிலாக, இன அல்லது தேசிய உணர்வுகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

அயர்லாந்தை ஒடுக்குவதில் பங்கேற்பதன் மூலம், ஆங்கில தொழிலாளர்கள் தாங்களும் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்வதில் தோல்வியடைகின்றனர். இது அவர்களின் வர்க்க உணர்வை பலவீனப்படுத்தி, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒற்றுமையான போராட்டத்தை தடுக்கிறது.

எனவே, ஆங்கில தொழிலாளர்கள் அயர்லாந்தின் விடுதலைக்கு ஆதரவளிக்காவிட்டால், அவர்களால் தங்கள் சொந்த விடுதலையையும் அடைய முடியாது. ஏனென்றால், இரு போராட்டங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

1869 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று லுட்விக் குஜெல்மனுக்கு எழுதிய கடிதத்திலும், டிசம்பர் 10 அன்று எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்திலும் இந்தப் புதிய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியுள்ளார். இந்தக் கருத்தை ஆங்கிலேய தொழிலாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பிய மார்க்ஸ், சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பொதுக் குழுவில் இது குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்தார்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் காலத்தில் தேசிய இனப் பிரச்சனைக்கான அவர்களின் அணுகுமுறையை பேரரசுகளை பலவீனப்படுத்தும் எந்த தேசிய விடுதலை இயக்கமும் (போலந்து, அயர்லாந்து) ஆதரிக்கப்பட்டது. தேசிய பிரச்சனை எப்போதும் வர்க்கப் பிரச்சனைக்கு கீழ்ப்படுத்தப்பட்டது. இறுதி இலக்கு தேசிய அரசுகள் அல்ல. மாறாக, ஒரு சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சிதான் என்ற நிலைபாட்டிலிருந்து பார்த்தனர்.

 

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...