அ.பாக்கியம்
காரல்
மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் தேசிய இனப் பிரச்சனைகள் முதலாளித்துவம் மற்றும்
ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியுடன் தேசிய உணர்வுகளும் தானாகவே மங்கி வீழ்ந்துவிடும்
என்றும், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை முன்னுக்கு வரும் என்றும்
நம்பினார்கள். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தேசிய இன பிரச்சனை ஒரு துணைப்
பிரச்சனையாக (secondary) பார்க்கப்பட்டது. தேசியவாதம் ஒரு
வரலாற்று சக்தியாக குறையும் என்ற செவ்வியல் பார்வை இருந்தது என்பதை குறைத்து
மதிப்பிட முடியாது. இந்த கண்ணோட்டத்தில் தான் தேசியவாதம் முதலாளித்துவ
எழுச்சியுடன் பிணைக்கப்பட்ட ஒரு நிகழ்வாக கருதப்பட்டது. அது சந்தைகளை ஒன்றிணைத்து
அரசு அதிகாரத்தை வலுப்படுத்த உதவியது என்பது உண்மைதான்.
ஆனால்
இறுதியில் அதை உருவாக்கிய முறைமையுடன் மறைந்து விடும் என்றும் கருதப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்” பாட்டாளிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள்” (Proletarians and Communists) என்ற பகுதியில் (Communist Manifesto) பாட்டாளி
வர்க்க ஒற்றுமை “தேசிய பிரிவினைகளையும் பகைமைகளையும்” மறையச் செய்யும் என்று
வாதிட்டது. “தேசிய வேறுபாடுகளும், மக்களிடையேயான பகைமைகளும்,
ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் மறைந்து வருகின்றன… பாட்டாளி
வர்க்கத்தின் ஆதிக்கம் அவற்றை இன்னும் வேகமாக மறையச் செய்யும்.” என்று மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது. இவை ஒரு சிக்கலான நீண்டகால நிகழ்வு என்பதை ஏற்கனவே காரல்
மார்க்ஸுசும் பிரெட்ரிக் எங்கெல்சும் கணித்திருந்தார்கள்.
இருபதாம்
நூற்றாண்டின் வரலாற்று அனுபவம் தேசிய வாதத்திற்கான காலத்தின் தேவையை நீட்டித்தது.
தேசியவாதம் ஒரு மீள்தன்மை மற்றும் திரட்டும் சக்தியை கொண்டுள்ளது என்பதை
உறுதிப்படுத்தியது. குறிப்பாக முதல் உலகப்போர் தேசியவாதத்தின் முக்கியமான
திருப்புமுனையாக அமைந்தது. பாட்டாளி வர்க்கம் பெரும்பாலும் அவர்கள் சார்ந்து
இருந்த தத்தமது தேசிய அரசுகளின் பின்னால் திரண்டு நின்று யுத்தத்தை ஆதரிக்கும்
நிலை ஏற்பட்டது. சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமை மேலோங்கும் என்ற நம்பிக்கை
இருந்த காலத்தில், இந்த நிகழ்வு புதிய அணுகுமுறைகளுக்கான சிந்தனைகளை முன்வைத்தது. இந்தப்
பின்னணியில்தான் தோழர் லெனின் அவர்களும், ஜோசப் ஸ்டாலின்
அவர்களும் தேசிய இனப் பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள்.
லெனினும் ஸ்டாலினும் தேசிய
இனப் பிரச்சனைகளும்
லெனினும்
ஸ்டாலினும் காரல் மார்க்ஸ் பிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரின் தேசிய இன கோட்பாட்டை
அடிப்படையாகக் கொண்டு அவற்றை இருபதாம் நூற்றாண்டின் ரஷ்ய பேரரசு மற்றும் சோவியத்
ஒன்றியத்தின் பன்முக இன சூழலுக்கு (multi
ethnic context) ஏற்ப பொருத்தினார்கள். சோவியத் புரட்சி காலத்தில்
தேசிய இனப் பிரச்சனை என்பது மையப் பிரச்சினையாக உருவெடுத்தது. பல நாடுகளில்
விடுதலைப் போராட்டங்கள் காலனித்துவத்தை எதிர்த்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற
நாடுகள் பூர்வ குடி மக்களை நாகரீகம் மற்றவர்கள் என்ற முறையில் வேட்டையாடினார்கள்.
இந்த காலகட்டத்தில் சோவியத் புரட்சி காலத்தில் உருவான தேசிய இனப் பிரச்சனைகளை
லெனினும் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியும் நடைமுறை அடிப்படையிலும், நிர்வாக அடிப்படையிலும் தீர்வுகாண முயன்றனர். தந்திரோஉபாய அடிப்படையில்
அனுகினார்கள் என்றாலும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான்
அமைந்தது.
விளாதிமிர்
லெனின், ஜோசப்
ஸ்டாலின் ஆகிய இருவர்களின் பங்களிப்பை முக்கியமான நான்கு புள்ளிகளில் புரிந்து
கொள்ளலாம்:
1 தேசிய சுயநிர்ணய
உரிமை (Right to Self-Determination)- மிக முக்கியமான
பங்களிப்பு ஆகும். அனைத்து தேசங்களுக்கும் உரிமை வழங்குவது. பிரிந்து செல்லும்
உரிமை (right to secession) உட்பட, அனைத்து
தேசங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று லெனின் அறிவித்தார். இது மிகவும்
தீவிரமான ஒரு நிலைப்பாடு. ஏனென்றால், ரஷ்ய பேரரசில் ஏராளமான
ஒடுக்கப்பட்ட இனக்குழுக்கள் இருந்தன. பேரரசில் பல இனக்குழுக்கள் ஒடுக்கப்பட்ட
போதிலும், சில குழுக்கள் குறிப்பாக கடுமையான கொள்கைகளை
எதிர்கொண்டன.
யூதர்கள்
மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்கள். 1914-ல், ரஷ்ய
தொழிலாளர் கட்சி, யூதர்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும்
நீக்கக் கோரி சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. 1914 வரை
யூதர்கள் வாழ்விடம், தொழில், கல்வி
போன்ற அனைத்திலும் கட்டுப்பாடுகளை சந்தித்தனர் வோல்கா பகுதி, கிரிமியா, காக்கேசியா, மத்திய
ஆசியா போன்ற பகுதிகளைச் சேர்ந்த தாதர்கள், பாஷ்கிர்கள் போன்ற
முஸ்லீம் இனக்குழுக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர். போலந்து, பின்லாந்து, உக்ரைன், ஜார்ஜியா
போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அரசியல்
அடையாளங்களைப் பேணுவதில் சவால்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக
அலெக்சாண்டர் III
(1881-1894) ஆட்சியில், அனைத்து
இனக்குழுக்களுக்கும் ரஷ்ய மொழி மற்றும் பழக்கவழக்கங்களை கட்டாயமாக்கும் கொள்கை
கடுமையாக்கப்பட்டது. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என
அனைத்திலும் ரஷ்ய மொழி கட்டாயமாக்கப் பட்டது. “அன்னிய இனத்தவர்” பேரரசின் முழு
குடிமக்களாக கருதப்படவில்லை. அவர்களுக்கு தனி சட்டங்கள், கடமைகள்,
மற்றும் வரம்புகள் இருந்தன. 1860களின்
சீர்திருத்தங்களுக்குப் பின்னரும், புதிதாக இணைக்கப்பட்ட
பகுதிகளில் வாழ்ந்த இனக்குழுக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவில்லை.
லெனின்
அறிவித்த தேசிய சுய நிர்ணய உரிமை என்பது பேரரசின் ஒடுக்கு முறைக்கு எதிரான அணி
திரட்டல் மட்டுமல்ல “சுதந்திரமானவர்களின் தன்னார்வ ஒன்றியத்தை” (voluntary union of free nations) உருவாக்குவதே லெனினின் இலக்காக இருந்தது. அதாவது, பிரிந்து
செல்லும் உரிமை இருப்பதால், மக்கள் தானாக முன்வந்து
ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இது. இது மார்க்சியத்தின் “ஒடுக்கப்படுபவை இணைதல்”
(unification of the oppressed) என்ற கொள்கைக்கு
ஒத்திருந்தது.
2. தேசியப் பிரச்சனையை
“வர்க்கப் பிரச்சனையின்” ஒரு பகுதியாக மாற்றும் பணியினை மிகவும் சிறப்பான முறையில்
லெனின் செய்தா. முதலாம் உலகப் போர் மற்றும் 1917 புரட்சியின்
பின்னணியில், லெனின் இதை ஒரு புதிய மட்டத்திற்கு
உயர்த்தினார். தேசியப் பிரச்சனை இனி ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சனை மட்டுமல்ல.
அது உலக முதலாளித்துவத்திற்கு (ஏகாதிபத்தியத்திற்கும்) எதிரான பாட்டாளி
வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஏகாதிபத்திய நாடுகள்
தங்கள் காலனிகளைச் சுரண்டுவது, தேசிய இனப் பிரச்சனைக்கு
முதலாளித்துவமே காரணம் என்பதை நிரூபித்தது. தேசிய விடுதலை இயக்கங்கள் (எ.கா.,
இந்தியா, சீனா, மத்திய
கிழக்கு) இனி ஒரு “முதலாளித்துவ ஜனநாயக” பிரச்சனையாக இல்லாமல், உலக சோசலிசப் புரட்சியின் ஒரு அங்கமாக பார்க்கப்பட்டன. இந்தக்
கண்ணோட்டம்தான் பின்னாளில் சோவியத் ஒன்றியம் காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களுக்கு
ஆதரவு அளிக்க வழிகோலியது.
3. தேசிய கலாச்சார
தன்னாட்சி (National Cultural Autonomy) – ‘தன்னாட்சி’
மற்றும் ‘கூட்டமைப்பு’ அமைத்தல். புரட்சி வெற்றிபெற்ற பிறகு லெனின் தலைமையிலான
அரசு சோவியத் நாட்டின் இனப் பன்முகத் தன்மையை நிர்வகிக்க, நிர்வாக
அமைப்புகளை ஏற்படுத்தனார்கள். இவை அனைத்தும் அந்த மக்களின் சுயநிர்ணய உரிமைகளை
பாதுகாக்கும வகையிலேயே முன்னெடுக்கப்பட்டது. இரண்டு நிலைகளை உருவாக்கினார்கள்.
ஒன்று பிராந்திய தன்னாட்சி முறைகள். மற்றொன்று கூட்டமைப்பு முறைகளாகும்.
பிராந்திய
தன்னாட்சி (Territorial
Autonomy) ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் பெரும்பான்மையாக
உள்ள இனத்திற்கு (உ.தா., உக்ரைன், ஜார்ஜியா)
தங்கள் மொழி, கலாச்சாரம், உள்ளூர் அரசு
ஆகியவற்றில் சுயாட்சி வழங்கப்பட்டது. கூட்டமைப்பு (Federation) இவை அனைத்தும் ஒரு கூட்டமைப்பாக (சோவியத் ஒன்றியம்) இணைக்கப்பட்டன. இதில்
ஒவ்வொரு குடியரசிற்கும் (Republic) பிரிந்து செல்லும் உரிமை
இருந்தது.
இந்த
அமைப்பின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எடுத்துக் கொண்டால், 20 தன்னாட்சி
சோவியத் சோசலிசக் குடியரசுகள் (ASSR) இருந்தன. மொத்தத்தில்,
சோவியத் யூனியனில் 53 தேசிய-அரசு அமைப்புகள் (national-state
entities) இருந்தன, அவை 15 யூனியன் குடியரசுகள் மற்றும் 20 தன்னாட்சி
குடியரசுகள்(ASSR), 8 தன்னாட்சி மாகாணங்கள் (Autonomous
Oblasts) 10 தன்னாட்சி வட்டாரங்கள் (Autonomous Okrugs) , உள்ளடக்கியிருந்தன. யூத தன்னாட்சி மாகாணம் (Jewish Autonomous
Oblast) கபரோவ்ஸ்க் பிரதேசத்தின் கீழும் இருந்தது
4. “தேசியம்” குறித்த ஸ்டாலினின் வரையறை – மிகவும் பிரபலமான கோட்பாட்டு
பங்களிப்பாக அமைந்திருந்தது. 1913 இல் ஸ்டாலின் எழுதிய
“மார்க்சியமும் தேசியக் கேள்விகளும் ” (Marxism and the National Question)
என்ற நூல் இந்தத் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அவர்
தேசியத்திற்கு (nation) ஒரு புதிய, உறுதியான
வரையறையை வழங்கினார்.
“தேசியம் என்பது ஒரு வரலாற்று ரீதியாக உருவான, நிலையான
மக்கள் கூட்டம். இது ஒரு பொதுவான மொழி, ஒரு பொதுவான பிரதேசம்,
ஒரு பொதுவான பொருளாதார வாழ்க்கை, மற்றும்
கலாச்சாரத்தில் வெளிப்படும் ஒரு பொதுவான மனோபாவ ஆகிய நான்கு பண்புகளைக் கொண்டது.”
இந்த வரையறை பின்னாளில் உலகெங்கிலும் உள்ள மார்க்சிஸ்டுகளால் பின்பற்றப்பட்டது.
இது தேசியத்தை ஒரு புறநிலை, அளவிடக்கூடிய (objective,
measurable) விஷயமாக மாற்றியது, அதாவது உணர்வு
அல்லது விருப்பத்தை மட்டும் சார்ந்து இல்லாதது.
மார்க்சியத்தின் மிகப்பெரிய
சோதனைக் களம்
லெனினும்
ஸ்டாலினும் மார்க்சிய தேசியக் கோட்பாட்டை கோட்பாட்டு ரீதியில் பல படிகள்
முன்னேற்றினர். குறிப்பாக லெனின்,
தேசிய ஒடுக்குமுறையை மையப் பிரச்சனையாக உயர்த்தி, அதற்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்தார். கீழ்கண்ட
எழுத்துக்களில் இவற்றை லெனின் ஆழமாக விவாதித்து உள்ளார்.
1914 ஆம் ஆண்டு பிப்ரவரியில் “தேசங்களின் சுயநிர்ணய உரிமை” (The Right
of Nations to Self-Determination) குறித்த இந்தக் கட்டுரையில்,
சுயநிர்ணய உரிமையை பற்றி விரிவான முறையில் எடுத்துரைக் கிறார். 1915 ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் “அமைதி பற்றிய கேள்வி” (The
Question of Peace) குறித்த கட்டுரையில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற பெரும் அதிகாரங்களின் உள்ள
சோசலிஸ்டுகள், தாங்ள் அரசு ஆக்கிரமித்துள்ள நாடுகளுக்கு
சுதந்திரம் அல்லது விடுதலை கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதம் “சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் சுருக்கம்” (The
Discussion on Self-Determination Summed Up) குறித்து எழுதும்போது
ஆதிக்க தேசத்தின் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட நாடுகள்
பிரிந்து செல்வதற்கான சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும் என்று இதில்
வலியுறுத்தப்படுகிறது.
சோவியத் வெற்றியும்
முரண்பாடுகளும்
இந்த
இனக் கொள்கை, “தேசிய வடிவத்தில், சோசலிச உள்ளடக்கத்தில்” (national
in form, socialist in content) என்ற புகழ்பெற்ற முழக்கத்தால்
வழிநடத்தப்பட்டது. இதன் முதன்மை நோக்கம், இனப்
பன்முகத்தன்மையை ஒரு நிர்வாக அமைப்பாகப் பயன்படுத்தி, வெவ்வேறு
இனக் குழுக்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலம் அவர்களை சோவியத் அமைப்புடன்
இணைப்பதும், பிரிவினைவாத உணர்வுகளைக் குறைப்பதுமாகும்.
பேரரசுக் காலத்தில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக அரசியல்
ரீதியிலான ஆதரவை நல்கியது இந்த மக்கள் சோவியத் ஆட்சியை நிலைநிறுத்த பேராதரவு
கொடுத்தனர்.
சோவியத்
இனக் கொள்கை சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அதில் பல உள்ளார்ந்த முரண்பாடுகள்
இருந்தன. இவையே பின்னர் ஒன்றியத்தின் சிதைவிற்கு வழிவகுத்த முக்கியக் காரணிகளாக
அமைந்தன. அரசியலமைப்பு சமத்துவத்தையும், இறையாண் மையையும்,
பிரிந்து செல்லும் உரிமையையும் வழங்கியிருந்தாலும், நடைமுறையில் ஆட்சி அதிகாரம் முழுமையாக மாஸ்கோவில் குவிக்கப்பட்டிருந்தது.
பல முடிவுகள் மேலிருந்து திணிக்கப்பட்டன. இது, தன்னாட்சி
என்பது “நிறுவன ரீதியிலானதாக” (institutionalized) இருந்தாலும்,
“உள்ளடக்கத்தில்” (content) காலியாக இருந்த
ஒரு நிலையை உருவாக்கியது.
முறையான
படிநிலை தன்னாட்சி என்பது ASSR
(தன்னாட்சி குடியரசு), தன்னாட்சி மாகாணங்கள்,
மற்றும் தன்னாட்சி மாவட்டங்கள் என்று பல நிலைகளில்
பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு இடையே பெரும் அதிகார வேறுபாடுகள் இருந்தன.
உண்மையான சமத்துவம் அரிதாகவே இருந்தது.
இன
அடையாளத்தை வலுப்படுத்துதல் என்பது முரண்பாடாக, இன அடிப்படையிலான நிர்வாக அலகுகளை
உருவாக்கியதே, இன அடையாள உணர்வை (ethnic identity) வலுப்படுத்தியது. காலப்போக்கில், இந்த அலகுகளே
தேசியவாத இயக்கங்களுக்கான அடித்தளமாக மாறின. 1991-ல் சோவியத்
ஒன்றியம் கலைக்கப்பட்டபோது, இதே அலகுகள்தான் 15 புதிய சுதந்திர நாடுகளின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தன.
சோவியத்
ஒன்றியத்தின் இனக் கொள்கையின் மிகப்பெரிய முரண்பாடு இதுதான். இன அடையாளத்தை
இறுதியில் அழிக்கும் நோக்கத்திற்காகவே,
அதை நிறுவனமயமாக்கி வலுப்படுத்தியது. இது, தேசியங்களை
ஒருங்கிணைப்பதற்கு பதிலாக, அவற்றின் பிரிவினைக்கான
விதைகளையும் விதைத்தது.
ஆனால், ஸ்டாலினின் நடைமுறை
இந்தக் கோட்பாடுகளுக்கும் சோவியத்தின் பேரரசுவாத நலன்களுக்கும் இடையிலான இடைவெளியை
வெளிப்படுத்தியது. இந்த அனுபவம்தான், பின்னர் மாவோ சே துங்
முதல் வியட்நாம் மற்றும் கியூபா வரையிலான பல மார்க்சிஸ்டுகளுக்கு ஒரு பாடமாக
அமைந்தது – அதாவது, தேசியப் பிரச்சனை என்பது “தந்திரோபாயமான”
(tactical) விஷயம் மட்டுமல்ல அது “மூலோபாயமான” (strategic)
ஒரு பிரச்சனை, அதை கவனமாகவும் ஜனநாயக
முறையிலும் கையாளவேண்டும் என்பதை இது உணர்த்தியது. அ.பாக்கியம்
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக