Pages

சர்வதேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்வதேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 13, 2026

யாருக்கு வெற்றி?

 



அ. பாக்கியம் 

 

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெறுகிறார்கள் என்று கூறுகின்றவர்களின் கவனத்திற்கு..... ஈரான் சரணடைய போகிறது என்று டிரம்ப் பேசுகிறார்..... உண்மை என்ன?

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம்  என்று உள்நாட்டில் தலையிட்டார்கள். காமனியின் ஜனநாயக விரோத அடக்குமுறைகள் இருந்தாலும் யுத்தத்தை எதிர்க்க மக்கள் ஒன்றுபட்டு விட்டார்கள்.

காமனியை மாற்றி விடுவோம் என்றார்கள் புதிய காமணி ஈரானின் கொடியை உயர்த்தி பிடித்திருக்கிறார். காமினி படுகொலையால் மக்கள் ஒன்றுபட்டு இருப்பதாக தரவுகள் தெரிவிக்கிறது.

ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்து விடுவோம் என்றார்கள். அழிக்க முடியவில்லை.

மலைகளுக்கு அடியில் நிலத்தடி தளங்களில் இருந்த ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட  யுரேனியம் கைப்பற்ற வேண்டும் என்று சக்தி வாய்ந்த கமாண்டோக்களை இறக்கினார்கள் முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை.

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தை அடியோடு அழித்து விடுவோம் என்று இறங்கினார்கள். அதுவும் நடக்கவில்லை. அழித்து விட்டோம் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்த பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்டது என்று இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய வட்டாரங்களை ஒப்புக் கொண்டார்கள்.

பாரசீக வளைகுடாவில் இருக்கக்கூடிய அமெரிக்காவின் இராணுவ தளங்களை ஈரான் தாக்குவதற்கு அஞ்சி நடுங்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஈரான் அவற்றை தாக்கி மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல அமெரிக்காவின் வான் பாதுகாப்பு பூச்சாண்டியாக மாறிவிட்டது.

இந்த யுத்தத்தில் அமெரிக்கா தனது ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை யாரும் தாக்க முடியாது பாதுகாத்து வந்த ரேடார் அமைப்புகளை ஈரானின் தாக்குதலால் இழந்து விட்டது.

 

உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தக்கூடிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஈரானால் ஏற்படுத்த முடிந்துள்ளது.

இந்த யுத்தத்தின் மூலம் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா விதித்த எரிசக்தி தடைகள் நொறுக்கப்பட்டது. ரஷ்யா ஒரு நாளைக்கு 150 மில்லியன் டாலர் வரை கூடுதல் எண்ணெய் வருவாயை பெறுகிறது.

ஹார்மோஸ் நீரினையில் ரஷ்யா மற்றும் சீனாவின் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களையும் தடை செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக தேவையற்ற யுத்தத்தில் தங்களை இழுத்து விட்டதாக அரபு நாடுகள் கோபமடைந்துள்ளன.

ஈரான் என்பது இஸ்ரேலிய கோழைத்தனத்தால் அழிக்கப்பட்ட பாலஸ்தீனம் அல்ல, இஸ்ரேலால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் லெபனான் அல்ல, அமெரிக்க இஸ்ரேல் மற்றும் துருக்கிய ஆக்கிரமிப்பால் சிதைக்கப்பட்ட சிரியா அல்ல லிபியாவும் அல்ல, ஈராக்கும் அல்ல ஏன் நொடிப்பொழுதில் மடக்கி போட்ட வெனிசுலாவும் அல்ல, ஈரான் என்பது உடைக்க கடினமான ஒரு நாடு என்பதை நிரூபித்து வருகிறது. ஈரான் , ஸ்பெயின் ஜெர்மனி இத்தாலி ஆகிய நாடுகளின நிலப்பரப்புக்கு சமமான அளவைக் கொண்டது. ஒன்பது கோடி மக்கள் தொகை இருக்கிறார்கள். 60 லட்சம் பாலஸ்தீன மக்களை தாக்குவது போல் ஈரானை தாக்கி விட முடியாது. 40 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா விதித்த தடைகள் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்புடன் ஈரான் தன்னை பலப்படுத்திக் கொண்டது. தன் மீது தாக்குதல் நடத்தினால் பழிவாங்குவதற்கான திறனையும் வளர்த்துள்ளது.

ஈரான் ஒரு பண்டைய நாகரிகம் நிறைந்தது. அதன் மரபுகளை பற்றி பெருமைப்படும் ஒரு நாடு. அது ஒருபோதும் காலனியாக இருக்கவில்லை இருப்பினும் சில காலகட்டங்களில் வெளிநாட்டு சக்திகளால் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவால் அரை காலனி உறவுகளுக்கு உட்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் மீது ஈரானின் கடைசி படையெடுப்பு 18 ஆம் நூற்றாண்டில் தான் நடந்தது. இப்போதும் ஈரானியர்கள் யாரையும் தாக்கவில்லை அவ்வாறு செய்வதற்கு தயாராகவும் இல்லை. அவர்கள் பேச்சு வார்த்தையின் மூலமாக அமெரிக்காவுடன் தீர்வு காண முயன்ற போது முதுகில் குத்தப்பட்டனர்.

 

அ. பாக்கியம் 

வியாழன், மார்ச் 12, 2026

சீனா ஏன் ஈரானுக்கு உதவவில்லை?


அ.பாக்கியம்

இந்தக் கேள்விகள் பரவலாக வலைதளங்களிலும் பலரிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும். நானும் பல இடங்களில் செல்கிற பொழுது இந்த கேள்வியை பல தோழர்கள் கேட்கிறார்கள்.  பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் குதித்து இருப்பது போல் சீனாவும் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து இந்தக் கேள்விகள் எழுப்பப்படுகிறது. உண்மையில் அமெரிக்காவினுடைய நோக்கத்திற்காகத்தான் அல்லது அமெரிக்காவிற்கு ஆதரவாகத்தான் இஸ்ரேல் யுத்தம் நடத்துகிறது என்ற மிக முக்கியமான புரிதல் தேவைப்படுகிறது.

சீனாவும் ஈரானும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிக விரிவான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது 25 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் அனைத்து தகவல்களும் பொதுதளத்தில் கிடைக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவ ஒத்துழைப்பு என்ற அம்சமும் அடங்கும்.

சீனா உலகில் இன்று பெரிய சக்தியாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த உலகை அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறது. எனவே அமெரிக்கா போன்ற ஒரு ஆக்கிரமிப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அதே நேரத்தில் யுத்தம் தொடராமல் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளிலும் சீனா முன்னுரிமை அளிக்கிறது. இதனால் அமெரிக்கா இஸ்ரேலின் அத்துமீறல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் இல்லை. ஈரான் என்ற நாடு இன்று இஸ்ரேல், அமெரிக்கா என்ற பெரும் சக்திகளை எதிர்த்து நிற்கிறது என்றால் உலகளாவிய ராணுவ ஒப்பந்தங்களுக்கு உரிய சட்டத்தின் அடிப்படையில் சீனா உட்பட சில நாடுகள் செயல்படுவதன் வழியாகத்தான்.

ஈரான் நாட்டின் இந்த தாக்குப் பிடிக்கும் தாக்குதல்களில் சீன ஒப்பந்தமும் அடங்கி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்களின் தளங்களின் மீது இப்படிப்பட்ட தாக்குதல்களை இதுவரை சந்தித்தது இல்லை. இஸ்ரேலின் அனைத்து பெரிய சிறிய நகரங்களும் அதன் ராணுவ முகாம்களும் குறி வைத்து ஈரானால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் ஒரு விஷயத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது. இஸ்ரேல் மிகப்பெரிய உத்திகளைக் கொண்டிருக்கவும் இல்லை, இடம் சார்ந்த பாதுகாப்பையும் வலுவாக வைத்திருக்கவில்லை என்பது வெளிப்பட்டது. ஈரானின் இந்த தாக்குதல்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ தளபதி அலுவலகம், விமானப்படை கட்டளை தளங்கள், வணிக தளங்கள், ராணுவத்திற்கு உதவி செய்யும் தொழிற்சாலைகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

ஈரானின் இந்த எதிர் தாக்குதல் திடீரென்று நிகழவில்லை, நீண்ட காலமாக தயாரித்து வந்த ஒரு திட்டத்தின் வெளிப்பாடு. ஈரானின் உச்ச தலைவர், பாதுகாப்பு அமைச்சர், மற்றும் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டிருந்த நிலையிலும் இதுபோன்ற தாக்குதல்களை தொடர முடிகிறது என்றால் அதன் ராணுவ சக்தியை அறிந்து கொள்ள முடியும். இஸ்ரேலியர் ராணுவ தளவாடங்களையும் அமெரிக்க ராணுவ தளவாடங்களையும் தாக்கப்பட்டிருக்கிறது என்றால் இதன் உத்திகளை புரிந்து கொள்ள முடியும்.  ரஷ்யாவும் சீனாவும் ஒப்பந்த சரத்துகளின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஆதரவாக உதவி செய்கிறார்கள். அமெரிக்காவின் சட்ட விரோத தடைகளுக்கு எதிராக பொருளாதார ஆதரவை வழங்குவது, ஈரானின் ராணுவ தொழில்துறை உற்பத்திக்கு தொழில்நுட்ப பொருட்களையும் ஆதரவையும் வழங்குவது, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றிக் கொடுப்பது போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கும். இவை அனைத்தும் மற்ற நாடு தாக்குவதற்கு அல்ல ஈரான் தன் நாட்டை பாதுகாப்பதற்காக என்ற அடிப்படையில் சீனா ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கிறது

ஆக்கிரமிப்பின் அஸ்திவாரம் தான் அமெரிக்க ராணுவம்

அமெரிக்க ராணுவம் உலகம் முழுவதும் 860 க்கு மேற்பட்ட ராணுவ தளங்களையும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களையும் அமர்த்தி இருக்கிறது. உலகத்திலேயே அதிகமான அளவு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது அமெரிக்க ராணுவம்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க விசுவாசிகள், அமெரிக்க ரசிகர்கள் அல்லது ஜனநாயகம் பேசக்கூடிய கனவான்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சுருக்கமான பட்டியலை தருகிறேன் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்கா மற்ற நாடுகளில் தலையிட்ட நிகழ்வுகள் இங்கே கொடுக்கப்படுகிறது

 

ஈரான்: 1946 சீனா: 1946 - 1949 கிரீஸ்: 1947 - 1949இத்தாலி: 1948 பிலிப்பைன்ஸ்: 1948 – 1954 கொரியா: 1950 – 1953 ஈரான்: 1953 வியட்நாம்: 1954 குவாத்தமாலா: 1954 லெபனான்: 1958 பனாமா: 1958 ஹைட்டி: 1959 காங்கோ: 1960 வியட்நாம்: 1960 – 1964 கியூபா: 1961 கியூபா: 1962 லாவோஸ்: 1962 ஈக்வடார்: 1963 பனாமா: 1964 பிரேசில்: 1964 வியட்நாம்: 1965 – 1975 இந்தோனேசியா: 1965 காங்கோ: 1965 டொமினிகன் குடியரசு: 1965 லாவோஸ்: 1965 - 1973கானா: 1966 குவாத்தமாலா: 1966 – 1967 கம்போடியா: 1969 – 1975 லாவோஸ்: 1971 – 1973 சிலி: 1973 கம்போடியா: 1975 அங்கோலா: 1976 – 1992 ஈரான்: 1980 லிபியா: 1981 எல் சால்வடார்: 1981 – 1992 நிகரகுவா: 1981 – 1990 லெபனான்: 1982 – 1984 கிரெனடா: ​​1983 ஹோண்டுராஸ்: 1983 – 1989 ஈரான்: 1984 லிபியா: 1986 பொலிவியா: 1986 ஈரான்: 1987 – 1988 லிபியா: 1989 பிலிப்பைன்ஸ்: 1989 பனாமா: 1989 – 1990 லைபீரியா: 1990 ஈராக்: 1990 – 1991 ஈராக்: 1991 – 2003 ஹைட்டி: 1991 சோமாலியா: 1992 – 1994 யூகோஸ்லாவியா: 1992 – 1994 போஸ்னியா: 1993 – 1995 ஹைட்டி: 1994 – 1996 குரோஷியா: 1995 ஜயர் (காங்கோ): 1996 – 1997 லைபீரியா: 1997 சூடான்: 1998 ஆப்கானிஸ்தான்: 1998 ஈராக்: 1998 யூகோஸ்லாவியா: 1999 மாசிடோனியா: 2001 ஆப்கானிஸ்தான்: 2001ஈராக்: 2003 ஈராக்: 2003-தற்போது வரை ஹைட்டி: 2004 சிரியா: 2011-தற்போது வரை உக்ரைன்: 2014-தற்போது வரைவெனிசுலா: 2026 ஈரான்: 2026

சீன ராணுவமும் அதன் கட்டமைப்பும்

சீன மக்கள் விடுதலைப்படை தனது நாட்டு பாதுகாப்பை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட ராணுவம் ஆகும். அமெரிக்க ராணுவ வரலாறு என்பது ஆக்கிரமிப்புக்காகவே உருவாக்கப்பட்ட ராணுவம் ஆகும். இன்றைய சீனாவை சுற்றி 30க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை அமெரிக்கா அமைத்துள்ளது. அதாவது சீனாவை சுற்றி இருக்கக்கூடிய தீவுகளில் இந்த ராணுவ தளங்களை அமைத்துள்ளார்கள். இதற்கு தீவு சங்கிலி வலை அமைப்பு என்று பெயர். குறிப்பாக ஜப்பான் தென்கொரியா குவாம் பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட ராணுவ தளங்கள் சீனாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஆகும். சீனாவின் கடல் சார் செல்வாக்கை கட்டுப்படுத்த முதல் தீவு சங்கிலியாக ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள ராணுவம் செயல்படுகிறது. இரண்டாவது தீவு சங்கிலியாக குவாம், பலாவ் தீவுகள் இருக்கின்றது. இந்த தளங்கள் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தவும் சீனாவின் வளர்ச்சியை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 

சீன ராணுவம் அமெரிக்காவைப் போல் உலகை ஆக்கிரமிப்பதற்காக அல்லாமல் தனது நாட்டைச் சுற்றி இருக்கக்கூடிய அமெரிக்க படைகளை எதிர்கொள்வதற்கு தேவையான வலுவான வன் பொருட்களை சுற்றி அதன் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்காக  தனது இராணுவத்தை முழு சக்தியுடன், அமெரிக்கா உட்பட எந்த சக்தி தாக்கினாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான நவீன திறன்களுடன் சீன ராணுவம் தகவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானை தாக்குவதற்காக அமெரிக்கா அந்த பிராந்தியங்களில் தளங்களை அமைத்தது, தளவாட அமைப்புகளை உருவாக்கியது. வெடி மருந்து கிடங்குகள், எரிபொருள் கிடங்குகள், வான்வழி தாக்குதல் போன்ற திட்டங்களை அமெரிக்கா அமைத்துக் கொண்டது. இதே பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக சவுதி அரேபியா, ஜோர்டான், பஹரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஈராக்,சிரியா போன்றவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

இதை தடுக்க வேண்டும் என்றால் இதற்கு சமமான அளவில் பிராந்திய முழுவதும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். சீனா தன் நாட்டு மக்களை பட்டினியில் தள்ளி, உலகத்தை பதட்டமாக வைத்திருக்கும் ராணுவ போட்டிக்கு எப்பொழுதும் தயாராக இருந்தது இல்லை .சீனாவின் வெளியுறவு கொள்கை இப்படி உருவாக்கப்பட்டதல்ல.அமெரிக்காவை போல் சீனாவும் செய்யுமானால் ஒரு மோசமான நாடாகத்தான் இருக்க முடியும்.

அமெரிக்கா தற்பொழுது ரஷ்யா மீதும் சீனா மீதும் நேரடி போரை நடத்த முடியாது. எனவே தான் ஈரான் மீது தன்னுடைய நேரடி போரை நடத்திக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக அமெரிக்கா சீனாவைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சி நிலை கூட ராணுவ ரீதியிலான சதிகள் என்று முத்திரை குத்த தொடங்கியிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் போஸ்ட் ஒரு விரிவான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த செய்தியின் தலைப்பு அமெரிக்காவில் இருக்கக்கூடிய 19 ராணுவ தளங்களுக்கு அருகாமையில் சீனா சொந்தமாக விவசாய நிலங்களை வாங்கி குவிக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று எழுதியுள்ளார்கள். அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஹவாய் வரை உள்ள 19 இராணுவ தளங்களை அடையாளப்படுத்தி வரைபடங்களுடன் அந்தப் பத்திரிக்கை செய்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பல ராணுவ தளபதிகள் இது மூலோபாய இடங்களுக்கு அருகாமையில் இருப்பதால் ஆபத்தானது என்று இப்பொழுது அலறத் தொடங்கி இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத் திறன்கள், இயக்கங்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதற்காக சீனர்கள் இந்த விவசாய நிலத்தை பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்துவார்கள் என்று பிதற்றுகி றார்கள். சீனர்கள் அமெரிக்க சட்டத்துக்கு உட்பட்ட தான் இந்த விவசாய நிலங்களை வாங்குகிறார்கள். தைவானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் நகர்ந்தால் அவற்றை அறிந்து கொள்ள கூடிய அளவில் சீனாவின் இந்த நிலங்கள் பயன்படும் என்று தெரிவிக்கிறார்கள். நிலம் வாங்கியவர்கள் எல்லாம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

சீனர்கள் காற்றாலை பண்ணையாக நிலத்தை பயன்படுத்து கின்றனர், உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தரவுகளின் படி அமெரிக்க விவசாய நிலத்தில் சீன முதலீட்டாளர்கள் வாங்கி இருப்பது 3,49,442 ஏக்கர் மட்டுமே. அமெரிக்காவில் வெளிநாட்டுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் சீனர்களின் மொத்த பங்கு ஒரு சதவீதம் மட்டுமே. ஆனால் ஒட்டுமொத்த அமெரிக்காவையே வாங்கி விட்டதாக அலறுகின்றனர். முப்பதாயிரம் ஒற்றர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள், உழவு பலூன்களை பறக்க விடுகிறார்கள் அதிக பணம் கொடுத்து ராணுவ தளங்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களை வாங்குகிறார்கள் என்று சீனாவுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார்கள். சீன கம்யூனிஸ்டுகள் சோவியத்தில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் உலகப் பொருளாதார அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அரசியல் செல்வாக்கின் காரணமாக சோவியத் ஒன்றியத்தை விட இன்னும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று சீனாவை இலக்கு வைத்து தாக்குதலை கொடுத்திருந்தனர்.

எது எப்படியோ சோவியத் நாட்டின் அடிப்படையில் சீனா இல்லை என்பதையும் சீனாவின் உத்திகள் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவற்றை ஒழிக்க நினைக்கும் அமெரிக்காவை எதிர்த்த புதிய உத்திகள் மூலம் எதிர்கொள்வது என்பதை வெளிப்படுத்துகிறது. நான் மேலே குறிப்பிட்ட நிலப்பிரச்சனை ஒரு சிறு பகுதி மட்டும்தான். இன்னும் ஏராளமான செய்திகள் இதற்குள்ளே இருக்கிறது. எனவேதான் அமெரிக்காவின் இலக்கு சீனாவும் ரஷ்யாவும் என்பதை இந்த யுத்தத்தின் மூலமாக புரிந்து கொள்ள முடியும். சீனா ஹாங்காங் பகுதியை பிரிட்டனின் ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டும் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதற்கு கடைப்பிடித்த அதே உத்தியை சீனா மீண்டும் கடைப்பிடிக்கும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள் என்பது திட்டவட்டமானது.

ரஷ்யாவும் சீனாவும் முடிந்தவரை தங்களின் சொந்த திறன்களை மிக வேகமாக விரிவுபடுத்தி வருகிறார்கள். அமெரிக்கா உலகை எளிய வகையில் கபளீகரம் செய்து விடலாம் என்பதை தடுத்து வருகிறார்கள். இதற்கு உக்கரைன், தைவான் போன்ற நாடுகளை குறிப்பிட்டாலும் ஈரானின் எதிர் தாக்குதல் சாட்சியமாக இருக்கிறது.

எனவே சீனா வேடிக்கை பார்க்கிறது நேரடி யுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதெல்லாம் அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாகத்தான் சென்று முடியும் என்ற அம்சத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அ.பாக்கியம்

 

சனி, ஜனவரி 24, 2026

கிரீன்லாந்துக்கு சீனா அச்சுறுத்தலா?

 

2026 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனா மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை தடுக்க கிரீன்லாந்து கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் ட்ரம்ப் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். கிரீன்லாந்தை சுற்றி சீன மற்றும் ரஷ்ய கப்பல்கள் எல்லா இடங்களில் இருப்பதாக பிரச்சாரம் செய்கிறார் உண்மை என்ன? சீனாவால் கிரீன்லாந்துக்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா?

கிரீன்லாந்தில் தற்போது வரை சீனாவின் எந்த அதிகாரப்பூர்வமான நிறுவனங்களும் இல்லை. முதலீட்டு திட்டங்களும் இல்லை. குடியிருப்பு நிறுவனங்களும் இல்லை. கிரீன்லாந்தில் இருக்கின்ற கடல்உணவு நிறுவனங்களில் 30 சீனத் தொழிலாளர் மட்டுமே பணிபுரிகின்றனர். சீனாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு வர்த்தகத்தில் மட்டுமே உள்ளது. அதிலும் குறிப்பாக கடல் சார் பொருட்களின் வர்த்தகம் மட்டுமே ஆகும்.

2025 ஆம் ஆண்டில் சீனாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பீடு 429 மில்லியன் டாலர் ஆகும். இதில் கிரீன்லாந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்த தொகை 420 மில்லியன் டாலர். குறிப்பாக ஆர்டிக் இறால் , ஹாலிபட், காட், சாதாரண இறால் மற்றும் பிற கடல் உணவுகள் மட்டுமே இதில் அடங்கும். சீனாவில் இருந்து கிரீன்லாந்துக்கு சீனா ஏற்றுமதி செய்தது ஒன்பது மில்லியன் டாலர் மட்டுமே. இவற்றில் தினசரி மக்கள் நுகரும் பொருட்கள்தான்.

கிரீன்லாந்துக்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளும் அதிகம் இல்லை சீனாவில் இருந்து அங்கு சென்று சேர்வதும் எளிதல்ல. 2024 ஆம் ஆண்டில் சுமார் 3500 சீன சுற்றுப்பயணிகள் மட்டுமே கிரீன்லாந்துக்கு சென்றுள்ளனர்.

கிரீன்லாந்துக்கு அருகில் உள்ள கடல் முழுவதும் சீன கப்பல் இருக்கிறது என்று இது கிரீன்லாந்தை அச்சுறுத்துகிறது என்று அப்பட்டமான பொய்யை அமெரிக்கா பிரச்சாரம் செய்கிறது. ஜனவரி 16 அன்று கிரீன்லாந்தில் உள்ள டென்மார்க் கிரீன்லாந்து கூட்டுப் படையின் மேஜர் ஜெனரல் சோரன் ஆண்டர்சன் கிரீன்லாந்துக்கு அருகில் சீன கப்பலோ, ரஷ்ய கப்பல்களோ எதுவும் இல்லை என்று தெளிவுபட கூறினார். கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு தரவுகளும் கிரீன்லாந்துக்கு அருகில் சீன கப்பல்கள் எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்தியது. சீனாவில் இருந்து உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லாரஸ் லோக்கே ராஸ்மோசன் ஊடகங்களுக்கு பலமுறை தெளிவுபடுத்தி விட்டார். டென்மார்க்கின் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் தலைவர் ராஸ்மஸ் ஜார்லோவ் கிரீன்லாந்திருக்கு எதிரான சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து பெரிய அச்சுறுத்தல் என்ற கூற்று மாயையானது என்று விளக்கியுள்ளார்.

கொள்கை அளவிலும் உண்மையின் அடிப்படையிலும் சீனா கிரிலாந்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால் கிரின்லாந்தில் விமான நிலைய விரிவாக்கம், சுரங்க திட்டங்களில் சீன நிறுவனங்களின் பங்கேற்பை டேனிஷ் அரசாங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முழுமையாக தடுத்து விட்டது. மேலும் எதிர்காலத்தில் சீன முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பதற்கான முடிவுகளை எடுத்து அமலாக்கி வருகிறார்கள். இந்த உண்மையை மறைத்து அமெரிக்கா அப்பட்டமாக பொய்களை ஊதி வருகிறது.

ஆர்டிக் பிரதேசத்தில் அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மற்றும் மற்றும் ஐநா சாசனங்களை மீறி இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. சர்வதேச ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிக்க வேண்டும், ஆர்டிக் நாடுகளின் இறையாண்மை, அதன் உரிமைகளையும், அதிகார வரம்பையும், பழங்குடி பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தையும் சீனா என்றென்றைக்கும் மதிக்கும் என்று அந்த நாட்டின் ஆர்டிக் கொள்கையில் தெளிவுபட விளக்கி உள்ளது. அதையே நடைமுறைப்படுத்தி வருகிறது. இவை அனைத்தையும் அப்பட்டமாக மீறி வருவது அமெரிக்கா ஆகும்.

சீனாவின் பார்வையில் ஆர்ட்டிகின் எதிர்காலம் புவிசார் அரசியல் போட்டிக்கான போர்க்களமாக இருக்கக் கூடாது மாறாக காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்புக் கான பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

சீனா கிரீன்லாந்தை அச்சுறுத்துகிறது என்ற கூற்றுக்கள் பொய் பித்தலாட்டம் ஆகும்.

அ.பாக்கியம்

தகவல் ஆதாரம்.

குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் பெய் சி 22.01.26.

வியாழன், ஜூலை 10, 2025

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 5

 


இந்துத்துவா- சியோனிஸ்டுகள் இணையும் புள்ளி

இந்தியாவில் பாஜகவின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் ஆர்எஸ்எஸ் இன் நவபாசிச கூறுகளை அம்பலப்படுத்த கூடியவர்களை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல, வேட்டையாடுவதும் நடக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெய்வங்களை கையில் எடுத்துக் கொண்டு அந்தந்த ஊரில் இருக்கக்கூடிய மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை இந்து விரோதிகள் என்று சித்தரித்து, தங்களது இந்துத்துவா கொள்கைகளை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். இதேபோன்றுதான் இஸ்ரேலின் சியோனிஸ்டுகள் தங்களது சியோனிச கொள்கைகளை பாதுகாக்க அவர்களை விமர்சிப்பவர்களை யூதவிரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

மிகக் கொடுமையான விஷயம் ஒன்று அரங்கேறி இருந்தது. மே மாதம் 2024 இல். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டிற்கு கைது வாரண்ட்களை பிறப்பித்தது. அவ்வாறு பிறப்பித்த நீதிபதியை முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்த ஒருவர் நவீன காலத்தில் மிகப்பெரிய யூத எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்று அந்த நீதிபதியை வசைபாடினார். உலகம் முழுவதும் பொங்கி எழும் யூதவிரோத நெருப்பில் இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றுகிறார் என்றும் யூதர்களுக்கு எதிரான நாஜிகளின் இனச் சட்டங்களை அங்கீகரித்த ஜெர்மன் நீதிபதிகளுடன் அவரை ஒப்பிட்டு அவதூறு செய்தார். இஸ்ரேலின் பிரதமர் நெதயான்கு இஸ்ரேலிய கொள்கைகளை எந்த மேற்கத்திய தலைவர் விமர்சித்தாலும் அவர்களை யூத விரோதிகள் என்றும் இழிவானவர்கள் என்றும் சாடினார்.

காசா மக்களை இனப்படுகொலை செய்த பொழுது நெதயான்கு இனப்படுகொலையாளர் என்று விமர்சித்தவர்களுக்கு  நாங்கள் யூதர்களாக இருக்கிறோம் என்ற எளிய உண்மையின் காரணமாக எங்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டு என்றுநெதயான்கு திசைதிருப்பினார். இஸ்ரேலுக்கு எதிரான ஒவ்வொரு விமர்சனமும் யூத எதிர்ப்பு அல்ல, நீங்கள் அதை யூத எதிர்ப்பு வெறுப்பு என்று சொல்லும் தருணம் விமர்சனத்தின் நியாயத்தன்மைகளை நீக்கிவிட்டு மற்றவர்களை நசுக்குவதற்காக முயற்சிக்கிறீர்கள் என்று இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் டாம் செகவ் குற்றம் சாட்டுகிறார். அது மட்டும் அல்ல நெதயான்கு நீண்ட காலமாக யூத நெருக்கடிகளை தனது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சிக்கிறார்.

புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ஜெர்மி போவன் , பிரிட்டிஷ் நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லார்ட் சம்பசன் கூறியதை விளக்கியுள்ளார். இஸ்ரேலிய அதிபர் நெதயான்கு மற்றும் அவரது அமைச்சரவை பாலஸ்தீனத்தில் இருந்து அரபுமக்களை கொலை செய்வது மூலமாகவும், பட்டினி போடுவது மூலமாகவும் 100 சதவீதம் அப்புறப்படுத்துவது. மேலும் ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியை இடித்து விட்டு யூதர்களின் மூன்றாவது புனித கோவிலை கட்டுவது என்ற திட்டமும் வைத்திருக்கிறார்கள் என கூறுகிறார். யூதர்களின் புனித கோவில் பொஆமு 10  மற்றும் 6ம்  நூற்றாண்டு களுக்கு இடையில் சாலமன் கோயில் என்ற பெயரில் இருந்ததாக எபிரேய மொழியிலான பைபிளில் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் இல்லை. இரண்டாவதாக பொஆமு 516-ல் கோயில் கட்டப்பட்டது. இது யூதர்களின் இரண்டாவது கோயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் ஏரோது மன்னனால் மேம்படுத்தப்பட்டது. பொஆ 70களில் போரினால் இந்த கோயில் சிதளம் அடைந்தது. தற்போது அல் அக்சா என்ற மசூதி இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலம். 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அவற்றை இடித்துவிட்டு மூன்றாவது யூத கோயிலை கட்ட வேண்டும் என்ற திட்டம் தொடர்ந்து மேற்காசிய நாடுகளை பதட்டத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மசூதி இடிப்பு இந்துத்துவா வாதிகளுக்கும் சியோனிஸ்டிகளுக்கும் ஒத்த நிலைப்பா டாக இருக்கிறது.

ஐரோப்பிய உலகம்தான் ஹிட்லர் காலத்திலும், அதற்கு முன்பும்- பின்பும் யூதர்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தது. எந்த விதத்திலும் பாலஸ்தீனர்களும், அரேபியர்களும் அதை செய்யவில்லை. ஆனால் இஸ்ரேலிய தேசம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்த பொழுது ஐரோப்பாவில் ஒரு அங்குல இடத்தை கூட பரிந்துரைக்க மறுத்தது ஐரோப்பிய வலதுசாரி தலைமை.

மக்களின் எதிர்ப்பும் மகுடங்களின் தள்ளாட்டமும்

ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இஸ்ரேலை எதிர்த்து பிரம்மாண்டமான மக்கள் இயக்கங்கள் உருவாகி வருகிறது. நடந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் 18க்கு மேற்பட்ட தலைநகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இத்தாலியில் நவபாசிச மெலோனிஅரசாங்கத்தின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டை எதிர்த்து மூன்று லட்சம் மக்கள் ஜூன் மாதம் ரோம் நகரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மெலோனி அரசு இஸ்ரேல் காசாவில் தன்னுடைய ராணுவ நடவடிக்கை நிறுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனாலும் மக்கள் இந்த நடிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையான எதிர்ப்புக்கு வரவேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசின் லண்டன் மாநகரில் பல போராட்டங்களை காண முடிகிறது. பிரிட்டிஷ் அரசின் வெளியுறவு அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காசாவின் மோதலில் அரசாங்கத்தின் அணுகுமுறையை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் புறக்கணித்து வருவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், உலகளாவிய விதிமுறைகளை இஸ்ரேல் குழி தோண்டி புதைத்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். சின்னஞ்சிறிய நெதர்லாந்து நாட்டின் தலைநகரங்களில் மனித தலைகளால் மூடுகிற அளவிற்கு மக்கள் திரண்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதை வாபஸ் வாங்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் ஆட்டம் காண செய்துள்ளது

மே மாதம் 19 ஆம் தேதி மக்கள் எழுச்சியின் காரணமாக பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய மூன்று நாடுகளும் இஸ்ரேலின் மிக மோசமான செயல்களை கண்டித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டார்கள். இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை சகிக்க முடியாது என்று அவர்கள் விவரித்தார்கள். இது நீடித்தால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று வீராவேசத்துடன் மக்களுக்கு பயந்து அறிக்கை விட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவரும் காசாவில் இஸ்ரேல் செய்வது பேரழிவு என்றும் தங்கள் ஒப்பந்தத்தை ரத்துசெய்வது பற்றி  பரிசீலனை செய்து வருவதாகவும் அறிக்கை விட்டார். ஒப்பந்தங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை இஸ்ரேலின் ஆராய்ச்சி துறை, தொடர்பாகவும் கல்வித்துறை தொடர்பாகவும் இருக்கக்கூடிய ஒப்பந்தங்கள் ரத்து செய்வோம் என்றார்கள். மக்களின் எழுச்சியால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஸ்பெயின், அயர்லாந்து பாலஸ்தீன அரசு அங்கீகரித்தன. ஏற்கனவே நார்வே பாலஸ்தீனத்தை அங்கீகரித்து உள்ளது. வேறு வழி இல்லாமல் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் பொது தொலைக்காட்சியில் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் குறிக்கோள் என்னவென்று எனக்குப் புரியவில்லை என்ளும்  ஹமாஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்று இதை  நியாயப்படுத்த முடியாது என அறிக்கை விட்டார். உள்நாட்டில் மக்களின் எழுச்சி அலைகளை அதிகரித்து வந்ததால் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மூன்று நாடுகளும் ஜூன் 10ம் தேதி இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர்கள் இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் பாலஸ்தீனுக்கு எதிரான வன்முறை, பாலஸ்தீன உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல், குடியேறிகளின் வன்முறையை தூண்டுதல், யூத குடியேற்றங்களை விரிவுபடுத்தல் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் செய்ததால் அவர்கள் மீது தடை விதித்ததாக அறிவித்தன.

நிறைவாக.....

போரைப் போல் பெரிய லாபகரமான தொழில் மற்றொன்று மில்லை. அதன் கிளர்ச்சிகளை பரப்பும் ஊடகங்களுக்கு அமைதி கவர்ச்சியாக தெரிவதில்லை. அமைதி என்று எழுந்து நிற்கும் என்ற ஏக்கம் உலகத்தின் ஏக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.

போரின் லாபகரமான தொழிலுக்கு புனித இடங்கள் எல்லாம் ரத்தக் களரியாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் சரி வேறு சில இடங்களிலும் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜ்யத்தை துறந்து காட்டுக்குச் சென்ற ராமனுக்கு இடம் வேண்டுமென்று ஒரு பெரும் போரையும், லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும், ரத்தங்களையும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெருசலேம் என்றால் அமைதியான நகரம் என்று பொருள். இந்த நகரம் 1000 ஆண்டுகளாக அமைதியை கண்டதே இல்லை. 1096  ஆண்டு அப்போதைய  போப் இரண்டாம் அர்பன் புனித போருக்கு அழைப்பு விடுத்தார். போரில் என்ன புனிதம் இருக்கிறது என்று கேட்காதீர்கள். கிறிஸ்துவின் புனித நகரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்க வேண்டும் என்று சிலுவைபடையினருக்கு அறைகூவல் விடுத்தார். ஜெருசலேமை நோக்கி குருசேடர்கள்(சிலுவைபடை) புறப்பட்டார்கள். ஜெருசலேமில் இருந்த யூதர்களையும், இஸ்லாமியர்களையும் ரத்த வெள்ளத்தில் போப் அனுப்பி வைத்த குருசேடர்கள் (சிலுவைபடை) மூழ்கடித்தார்கள். இங்கிருந்த யூதர்களையும் முஸ்லிம்களையும் ஒழித்துக் கட்டினார்கள்.

ஜெருசலேமில் இருக்கும் மலையின் மீது முஸ்லிம்களுக்கு எல் குட்ஸ் என்ற புனித இடம், யூதர்களுக்கு அவர்களின் அரசன் தாவீது காலத்திலிருந்து இந்தமலை தலைநகரம். கிறிஸ்தவர்களுக்கு இயேசுபிரான் சிலுவை ஏறிய மலை இது. இவற்றை யாருக்கென்று பகிர்ந்து கொடுப்பது. பகிர்ந்து கொள்வதற்காக ஆயிரம் ஆண்டுகளாக எருசலேம் கண்ணீராலும் இரத்தத்தாலும் மிதந்து கொண்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கான நவீனரக ஆயுதம் தாங்கிய வீரர்களுக்கு மத்தியில் அமைதியை போதிக்க வந்தவர்கள்  உயிரும் உடலும் அற்றவர்களாக சிறைபட்டுக் கிடக்கிறார்கள்.

மோதிக் கொண்டிருப்பவர்கள் யார்? ஒரே பகுதியை சேர்ந்த மக்கள். யூதர்களின் புனித நூல் டோராவின் கதையும், பைபிளின் கதையும், குர்ஆனின் கதையும் ஒன்றாகத்தான் பயணித்திருக்கிறது. மூன்றும் மோசஸ் ஆபிரகாம் கதைகளை தான் சொல்கிறது. மோசஸ் மூசாவாகவும், டேவிட் தாவுத்தாகவும், சாலமன் சுலைமானாகவும், ஐசக் இஷாகாகவும் ஜேக்கப் யாக்கூப்பாகவும் மாறி இருக்கிறார்கள். விரிந்து பறந்த பாலஸ்தீனப் பகுதியில் ஒரு மக்களிடம் இருந்து தோன்றிய இந்த மதங்கள் நவீன உலகத்தில் நரவேட்டை ஆடக்கூடிய ஏகாதிபத்திய கொள்கைகளின் இரத்தம் படிந்த கைக்ளில் சிக்கிகொண்டுள்ளது.

யூதர்கள் நாஜிகளால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது உலகறிந்த வரலாறு. கொடுமைக்கு பலியான இனம் எழுந்து வலுவாக நிற்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த எழுச்சி மீண்டும் அப்படி ஒரு கொடுமையை எந்த இனத்திற்கும் ஏற்படக் கூடாது என்பதற்கான எழுச்சியாக இருந்தால் அது மனித சமூகத்திற்கும்  அவர்களது மதம் போதிக்கும் சமாதானத்திற்கு உதவி செய்வதாக இருக்கும். இனப்பகையின் நெருப்பில் வெந்துமடிந்த யூத மக்கள் மற்றொரு இனத்தை அதே வடிவத்தில் அழித்தொழிப்பது எழுச்சியின் அடையாளமாகாது அழிவுக்கு போடக்கூடிய அடித்தள மாகும்.

பாலஸ்தீன மண் என்றாவது ஒரு நாள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும்.

அ. பாக்கியம்

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 4

 


வதை முகாமிலிருந்து மரண முகாமிற்கு

பாலஸ்தீனத்தின் காசாமீது இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு வருடம் எட்டு மாதங்கள் முடிந்து விட்டது. சுமார் 55,000பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சமன்படுத்தப்பட்டு விட்டது. மோதல் துவங்கி முதல் ஐந்து மாதத்தில் 12,300 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இது உலகில் எந்தப் போர்களிலும் குறுகிய காலத்தில் இவ்வளவு குழந்தைகள் சாகடிக்கப்பட்டது இல்லை. 2025 ஜனவரி மாதம் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14,500 மேலும் 17000 குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டார்கள். குறைவான மக்கள் தொகை இருந்தாலும் உலகிலேயே அதிக மாற்றுத்திறனாளிகள் உள்ள பகுதியாக தற்போது காசா பகுதி மாறியுள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டு இருந்தது. தரைவழி, வான்வழி, கடல்வழி அனைத்தும் அடைக்கப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலையாக காசாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் துவங்கிய யுத்தத்தின் மூலமாக காசா ஒரு மரண முகமாக மாறி உள்ளது.

இவ்வளவு சிறிய முற்றுகையிடப்பட்ட பகுதியில் இவ்வளவு நீண்ட காலமாக ( காசாவில்) சிக்கித் தவிக்கும் மக்களை நான் பார்த்ததில்லை. கண்முடித்தனமான குண்டு வெடிப்புகளும், அவர்களுக்கு மறுக்கப்படுகிற சுகாதாரமும், பத்திரிகைகளை நடத்த விடாமல் தடுக்கக்கூடிய முறைகளும் மிகக் கொடூரமானது என்று மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜான் எக்லான்ட் குறிப்பிட்டுள்ளார். காசாவின் உள்கட்டமைப்பு, சுகாதார அமைப்பு, நகராட்சி அமைப்புகள், கல்வி நிலைய வலை அமைப்புகள், மசூதிகள், தேவாலயங்கள், சுருக்கமாக மனித வாழ்க்கையை ஒழுங்கமைத்த ஒவ்வொரு கட்டமைப்பையும் அழிப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளது என்று அரசியல் ஆர்வலர், பத்திரிக்கையாளர் அபெத் அபு சாதே குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் ஓர் இயந்திரம் காசாவையும் அதன் மக்களையும் தூசியாக அரைத்து அழித்து வருகிறது. உலகம் பார்வையாளராகவே காட்சி தருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை நிலை

2025 ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பொழுது, ஹமாசை முற்றிலும் அகற்றுவதுடன் இணைத்து அறைகூவல் விடுத்தது. இதன் மூலம் இஸ்ரேல் அந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை ஆதரித்தது. ஜெர்மனியும், நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் இல்லாத இங்கிலாந்தும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்த பொழுது, அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறியதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான மிகப்பெரும் பொருளாதார தடைகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா பற்றிய எந்த செய்தியையும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடுகளில் ஒளிபரப்ப கூடாது என்று தடைவிதித்தும், மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளனாக சித்தரித்தார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று ஈரானின் ஆதரவுடன் ஹமாஸ் இஸ்ரேலை அழிக்கத் துடிப்பது போல் ரஷ்யா உக்ரைனை வரைபடத்தில் இருந்து அழிக்க விரும்புவதாக பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

ஐரோப்பிய தலைவர்கள் ஹிட்லரின் ஹாலோகாஸ்ட் கொடுமைகளை புறம் தள்ளிவிட்டு அரேபியர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் ஒரு வெறுப்புணர்வை உருவாக்கக்கூடிய பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஹிட்லரின் ஹாலோகாஸ்டின்போது ஐரோப்பிய நாடு முழுவதும் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். குறிப்பாக ஜெர்மனியில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உலகம் மறக்க முடியாது, ஆனால் இன்று அந்த யூத மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு சியோனிஸ்டுகள் நடத்தக்கூடிய புவிசார் அரசியலுக்கு ஜெர்மனி அப்பட்டமான ஆதரவை தெரிவித்து வருகிறது. ஆயுதங்களை வழங்கி வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கிறது என்று முன்னாள் ஜெர்மனியினுடைய சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் கருத்து இதை வெளிப்படுத்தியது.  சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா உட்பட இஸ்ரேல் மீது வழக்கு தொடுத்த பொழுது ஜெர்மனி இஸ்ரேலை ஆதரித்தது

எனவே ஐரோப்பா ஒன்றியநாடுகள் யூதர்களுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதலை நடத்தியவர்கள். தற்பொழுது பாலஸ்தீனர்களை அழிப்பதற்கு, தங்களால் அழிக்கப்பட்டயூதர்களை  உயிர்த்தெழ வைக்கிறார்கள். பாலஸ்தீனமும் தீவிரவாதிகளை உருவாக்குகிறது என்று உரக்க கத்துகிறார்கள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள். தீவிரவாதிகளை தாலிபான் முதல் காலிஸ்தான் வரை மூளை முடுக்கெல்லாம் உற்பத்திசெய்தவர்கள் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும். 1930 ஆம் ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் சியோனிஸ்டுகள் தீவிரவாதிகளாக அழைக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதற்கு எதிராக போராடிய யூதர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமரான  பெகின் 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தீவிரவாதி என்று அறிவித்தது. பாலஸ்தீனத்தில் இருந்து கொண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இஸ்ரேலில் ஆரம்பிக்கப்பட்ட படையின் கமாண்டராக போராடினார். 1946 ஆம் ஆண்டு ஜெருசலேமில் ஆங்கிலேய ராணுவ முகாமை அதன் பிரதான அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்தார். அவரை சிறை பிடிப்பதற்கு உதவினால் 50 ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது. அதே பெகின் பிரிட்டிஸ் அரசின் நண்பர் ஆனது மட்டுமல்ல, அமைதிக்கான நோபல் பரிசையும் மேற்கத்திய நாடுகள் அவருக்கு வழங்கியது. இப்போது பாலஸ்தீன இயக்கத்தை தீவிரவாதிகள் என்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எதிர்ப்பு அச்சை அழிப்பது

இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு அச்சை அழிப்பது முக்கிய குறிக்கோளாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் கொண்டுள்ளன. ராணுவ சக்தியாக விளங்கும் ஈரானை அழித்து விடுவதும், ஆசிய கண்டத்திலிருந்து பாலஸ்தீனம் என்ற கடைசி மனிதனையும் துடைத்தெறிந்து எறிவது என்றும் இஸ்ரேலின் மெதன்யாகுவும், அமெரிக்காவின் ட்ரம்பும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள். இதற்கு யூதமக்களை தன்பக்கம் நிறுத்துவதற்கான முயற்சிகளில் சியோனிஸ்டுகள் ஈடுபட்டிருக் கிறார்கள். இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்களில், இஸ்ரேல் ரத்த வெள்ளத்தில் காசா மக்களை மூழ்கடிக்கும் எந்த செய்தியும், படங்களும் வெளியிடுவது இல்லை. அதற்கு மாறாக இஸ்ரேலியர்களுக்கு ஹமாஸ் அமைப்பு செய்கிற அட்டூழியங்கள் என்ற பெயரில் படங்களையும் மற்ற கதைகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் இருக்கக்கூடிய யூதர்களுக்கு தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஆழமான உணர்வை உருவாக்குகிறது. இதனால் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டின் அந்தஸ்து அதிகரித்து வருவதையும் அதன் நடத்தை குறித்த விமர்சனங்களை தவிர்த்து பெருமை கொள்கின்றனர். இஸ்ரேலின் சியோனிஸ்டுகள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

செவ்வாய், ஜூலை 08, 2025

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 3 -

முதல் பிரிவினைக்கான ஆலோசனைகள் :



தொடர்ச்சியாக ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லார்ட் ஃபீல் என்பவர் தலைமையில் ராயல் கமிஷன், பாலஸ்தீனத்தில், கலவரத்திற்கான காரணங்கள் குறித்து விசாரித்தது. ராயல் கமிஷன் முன்பு சாட்சியங்கள் சொல்வதற்கு அரேபியர்கள் வராதது மட்டுமல்ல, அந்தக் கமிஷனை  எதிர்த்து போராட்டங்களும் நடத்தினர். சுமார் 7 மாதம் வரை இந்த கமிஷன் பாலஸ்தீனத்தில் விசாரணை நடத்தியது.1937 ஆம் ஆண்டு ஜூலை மாதம் லார்ட் பீல் கமிஷன் அறிக்கையை வெளியிட்டது. கீழ்க்காணும் வகையில் அந்த அறிக்கையின் ஆலோசனைகள் அமைந்திருந்தன. 

யூதர்களும், அரேபியர்களும் சமரசமாக போக முடியாதது தான் பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்கு முக்கிய காரணம் ஆகும். இரண்டு தேசிய சக்திகள் இருக்கின்றன. இரண்டு சக்திகளும் தேசத்தை ஆள வேண்டும் என்று முயற்சிக்கின்றன. ஒவ்வொருவரும் தாங்களே தேசத்தை ஆள சரியானவர் என்று நினைக்கிறார்கள். 

இந்த இரண்டு சக்திகளையும் ஒன்றுபடுத்தி வைக்க கட்டளை அரசாங்கம் எடுத்த முயற்சிகள் பயன் அடையவில்லை. 

எனவே பாலஸ்தீனத்தை மூன்று கூறுகளாக பிரிக்க வேண்டும் என்று லார்ட் ஃபீல் அறிக்கை கொடுத்தார்.

மத்திய தரை கடலோரத்தில் சமதள பிரதேசம் யூதர்களின் நாடாக்கப்பட வேண்டும்.

 குன்றுகள், வனாந்தரங்கள், இவற்றுடன் துறைமுகம், சிறிது வெளிப்பிரதேசம் அரேபியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

ஜெருசலேம், பெத்தலஹேம் போன்ற புனித இடங்களை காப்பாற்றப்பட வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பிரிட்டன் அரசிடம் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவை தவிர முக்கிய துறைமுகங்கள் பிரிட்டன் வசத்தில் இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. 

யூதப் பகுதி என்று பிரித்ததில் சுமார் 2.25 லட்சம் அரேபியர்கள் இருந்தார்கள். அரேபிய பகுதி என்று அறிவிக்கப்பட்டதில் யூதர்கள் மிக மிக குறைவாக இருந்தனர். 

இந்த அறிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த சிபாரிசுகளை கவனத்தில் எடுத்து எல்லைகளை நிர்ணயிக்கிற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை யூதர்களுக்கு நிலங்களை விற்பது கட்டுப்படுத்தப்படும் என்றும் வருடத்தில் 8000 யூதர்கள்தான் பாலஸ்தீனத்தில் குடியேற வேண்டுமென்றும் பிரிட்டன் அரசு அறிக்கை வெளியிட்டது.

அரேபியர்கள் இந்த அறிக்கையை முழுமையாக நிராகரித்தனர்.

யூதர்களுக்கோ இந்த அறிக்கை மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. யூதர்களின் பல்வேறு பிரிவினர் இந்த அறிக்கையை பற்றி தனித்தனி கருத்துக்களை வைத்திருந்தனர்.

யூதர்களுக்கு மத்தியில் செயல்பட்ட தொழிற் கட்சியினர் பாலஸ்தீனம் முழுவதும் யூதர்களுக்கு சொந்தமாக வேண்டும்; யூதர்களின் குடிபுகும்  எண்ணிக்கையை குறைக்க கூடாது என்றனர். சியோனிச அமைப்பில் ஒரு பிரிவினர் நாட்டை பிரிக்க கூடாது. கட்டளை ஆட்சியின் கீழ் நாடு இருக்க வேண்டும் என்றனர்.

மற்றொரு பிரிவினர் பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷார் ஆதரவு எங்களுக்கு(யூதர்களுக்கு) இருக்கும் என்று உத்தரவாதம் கொடுத்தால் இந்த பிரிவினையை ஏற்பதாக அறிவித்தனர். இப்படி விதவிதமான கருத்துக்கள் வந்தாலும் 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தில் சூரியன் நகரத்தில் அகில உலக ஜியோனிச மாநாட்டை கூட்டி இந்த பிரிவினை சம்பந்தமாக முடிவெடுக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரிவினையை அப்படியே நிராகரிக்க விரும்பவில்லை.

 யூதர்களுக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்ட பிரதேசத்தை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்றும் இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிர்வாக சபைக்கு அதிகாரம் கொடுத்து இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

யூதர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட பகுதியில் அரேபியர்களுக்கு ஏராளமான ஆரஞ்சு பழத்தோட்டங்கள் இருக்கிறது. அவற்றை எல்லாம் யூதர்கள் பறித்துக் கொள்வார்கள். யூதர்களுக்கு மிக செழுமையான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் யூதர்கள்  தங்களை விரிவுபடுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்று அரேபியர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், தங்களுக்கு கடல் தொடர்பு இல்லாமல் போய்விடும் என்றும் அரேபியர்கள் கருதினர். பாலஸ்தீனத்தின் புனித தலங்களை பாதுகாப்பதாக பிரிட்டிஷார் சில பிரதேசங்களை எடுத்துக் கொள்வதையும் அரேபியர்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள். 

1937 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் சிரியாவில் உள்ள கிளவுடான் என்ற ஊரில் அரேபியர்களின் காங்கிரஸ் (மாநாடு) கூடியது. பாலஸ்தீனத்தில்  யூத குடியேற்றத்தை எதிர்த்தும், லார்ட் ஃபீல் கமிஷன் அறிக்கையை நிராகரித்தும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த இந்த மாநாட்டில் பல ரகசிய திட்டங்கள் தீட்டப்பட்டன. 

இதையடுத்து, அரேபியர்களால் உருவாக்கப்பட்டிருந்த பெரிய கமிட்டி என்ற அமைப்பை பிரிட்டிஷ் அரசு உடனடியாக கலைத்தது. அதன் தலைவர்களையும், முன்னணி உறுப்பினர்களையும் கைது செய்தது. கைதான அரேபியர்களை இந்து மகா சமுத்திரத்தில் உள்ள தீவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஜெருசலேமில் இருந்த முஸ்லிம் மதத்தலைவரை பதவியிலிருந்து நீக்கி, அவரிடம் இருந்த அனைத்து நிர்வாகத்தையும் பறித்துக் கொண்டு அவரை, லெபனானுக்கு நாடு கடத்தினார்கள். அரேபியர்கள் மீது பலவிதமான அடக்குமுறைகளை அரசு அதிகாரிகள் ஏவிவிட்டனர்.

 குறிப்பாக இக்காலத்தில் இந்தியாவில், கொல்கத்தாவில், போலீஸ் கமிஷனராக இருந்து வங்காளத்தில் இருந்த தீவிரவாத இயக்கங்களை அடக்கி ஒடுக்கியதாகப்  பெயர் பெற்ற சர் சார்லஸ் டெகார்டு சிறப்பு அதிகாரியாக பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்டார். அவர், சிரியாவிலிருந்து பாலஸ்தீன அரேபியர்களுக்கு ஆயுதம் கிடைக்கிறது என்றும் இதை தடுப்பதற்காக பாலஸ்தீனத்தின் வடக்கு எல்லையில் முள்வேலிகளை போடவேண்டும் என்று ஆலோசனை கொடுத்தார். அவருடைய ஆலோசனையின்படி வேலி போடப்பட்டது. 

இதற்கு ‘டெகார்டு சுவர்’ என்று பெயரிடப்பட்டது. மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டெகார்டு சுவரை உருவாக்கும் கான்ட்ராக்ட் யூதர்களின் சியோனிச தொழிலாளர் அமைப்புக்கு கொடுக்கப்பட்டது.

தொழிலாளர் அமைப்பு தனது வருவாய்க்காக இதை எடுத்து செய்தது. இது போன்ற நூற்றுக்கணக்கான கான்ட்ராக்ட்களை, கட்டளை அரசாங்கம் யூத ஸ்தாபனங்களுக்கு கொடுத்தது. அப்படி என்றால் யூதர்களுக்கு எந்த அளவுக்கு அரசு உதவி செய்ததை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், பிரிவினை விஷயத்தில் பிரிட்டிஷ் அரசு பின்வாங்கவில்லை. மேலும் ஒரு கமிஷனை நியமித்தது. 1938 ஆம் ஆண்டு வுட் ஹெட் இந்த கமிஷனுக்கு தலைமை தாங்கினார். அவரும் அறிக்கைகளை கொடுத்தார். பொதுவாக பாலஸ்தீன விஷயத்தில் அரேபியர்களின் எதிர்ப்பை சமாளிப்பதுதான் பிரதான அம்சமாக இருந்தது. பாலஸ்தீனத்தில் அரேபிய தலைவராக இருந்த மப்டி நாடு கடத்தப்பட்டதால்  கட்சியின் செல்வாக்கு குறைந்து விடும் என்றும், அரேபிய மிதவாத கட்சியினரை தங்கள் பக்கம் கொண்டு வந்து விடலாம் என்றும் பிரிட்டிஷார் நம்பினார்கள். 

இதற்காக அரபுக்களிடமிருந்த பல்வேறு கட்சிகளை ஒன்றுடன் ஒன்றை மோத விட்டது மட்டுமல்ல... அவர்கள் மத்தியில் குழப்பத்தினையும்  ஏற்படுத்தினார்கள். எண்ணற்ற அரேபியர்கள் பிரிட்டிஷாரின் இந்த போக்கை எதிர்த்ததனால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஒட்டுமொத்தமாக அரேபியர்களின் ஒரு சிறு பகுதி கூட பிரிட்டனின் இந்த பிரிவினையை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தப் பின்னணியில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமைந்த ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீனத்துக்கு உள்ளே இஸ்ரேலை உருவாக்குவது என்ற முறையில் ஒரு கமிஷனை அமைத்தார்கள்.

1947 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டிஷ் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழுவில் ஆஸ்திரேலியா, கனடா, செக்கோஸ்லோவேகியா, கௌதிமாலா, இந்தியா, ஈரான், நெதர்லாந்து,  பெரு,  ஸ்வீடன், உருகுவே, யுகோஸ்லோவேகியா ஆகிய 11 உறுப்பு நாடுகள் இருந்தன. இந்தக் குழுவில் இருந்த  7 உறுப்பினர்கள் இரு நாடாக பிரிப்பதற்கான ஆலோசனைகளை கொடுத்தனர். இந்தியா, ஈரான், யுகோஸ்லோவேகியா ஆகிய மூன்று நாடுகள் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தின. ஆஸ்திரேலியா நடுநிலை வகித்தது. 

இந்தக் குழுவின் பரிந்துரைப்படி 1947ம் ஆண்டு நவம்பர் 29 அன்று ஐ.நா. பொது சபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டு மொத்தம் இருந்த 58 நாடுகளில் 37 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. 9 நாடுகள் நடுநிலை வகித்தன.

1948 மே 14 அன்று சியோனிச அமைப்பு அதன் முக்கிய தலைவர் டேவிட் பென் குரியன், இஸ்ரேல் இன்று முதல் தனி நாடு என்று அறிவித்தார். அவர் அறிவித்த அன்றே அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ்.ட்ரூமன் இஸ்ரேல் அரசை அங்கீகரித்தார். 1949 மே 11 அன்று தான் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை அங்கீகரித்தது. 

ஐ.நா.சபையின் ஆலோசனைப்படி 43 சதவீதம் நிலம் அரபுகளுக் கும், 56 சதவீதம் நிலம் இஸ்ரேலுக்கும் ஒதுக்கப்பட்டது. ஒரு சதவீத நிலமான ஜெருசலேம் ஐ.நா. சபையின் கட்டுப்பாட்டில் 10 ஆண்டுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அரேபியர்கள் (பாலஸ்தீனர்கள்) இதை ஏற்க மறுத்தனர். இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட 56 சதவீத நிலப்பகுதியில் ஐந்தரை லட்சம் அரபுக்களும் நான்கு லட்சம் யூதர்களும் இருந்தார்கள். பாலஸ்தீனத்திற்கு ஒதுக்கப்பட்ட 43 சதவீத நிலப்பரப்பில் ஏழரை லட்சம் அரபுக்களும் ஒரு லட்சம் யூதர்களும் இருந்தார்கள். 

1948 மே 14ல் இஸ்ரேல் தனி நாடு என்று அறிவிக்கப்பட்ட உடனேயே இஸ்ரேல் தன் படைகள் மூலமாக பாலஸ்தீனர்கள் வாழும் கிராமங்கள்  மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள மக்களை வெளியேற்றினர். பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். இந்த காலகட்டத்தில் மட்டும் ஏழு லட்சம் அரேபியர்கள் தங்கள் நிலத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் வசிப்பிடங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. சரிபாதியாக இருந்த நிலப்பகுதியை இஸ்ரேல் படிப்படியாக ஆக்கிரமித்து இன்று 20,770 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. பாலஸ்தீனம் மேற்கு கரை மற்றும் காசா பகுதி என சுருக்கப்பட்டு 6020 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக மாறிவிட்டது. இந்த குறைவான நிலப்பகுதியில் பெரும்பாலான இடங்களை இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமித்து உள்ளன. 

அரபு நாடுகள் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்கவில்லை. 1948,1953,1967,1973 ஆகிய வருடங்களில் இஸ்ரேல்-அரபு யுத்தம் நடைபெற்றது. இஸ்ரேல், அமெரிக்க பிரிட்டிஷ் ஆதரவுடன் அரபு நாடுகளை வெற்றி கொண்டு பாலஸ்தீனத்தை மேலும் ஆக்கிரமித்தது.

பாலஸ்தீன விடுதலை அமைப்பு 

இதற்கிடையில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக 1957 ஆம் ஆண்டு யாசர் அராபத் அல்-ஃபதா என்ற கட்சி ஆரம்பித்தார். அதன் பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கம் - பி எல் ஓ (Palestine Liberation Organization -PLO) என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்கு தனியாக இராணுவ பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. 1973-74 இல் கூட்டப்பட்ட அனைத்து அரபு நாடுகள் பங்கேற்ற அரபு உச்சிமாநாட்டில், பாலஸ்தீன மக்களின் ஒரே சட்ட பூர்வமான பிரதிநிதியாக பி எல் ஓ அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது .

இதையடுத்து பி எல் ஓ அமைப்பு ஐ.நா. சபைக்கு பார்வையாளராக அழைக்கப்பட்டது. பி எல் ஓ வில் 13 க்கும் அதிகமான அமைப்புகள் உள்ளன. ஹமாஸ் இதன் உறுப்பினராக இல்லை. 

1987 ஆம் ஆண்டு யாசர் அராபத் தலைமையில் பி எல் ஓ அமைப்பு ‘‘இன்டிஃபாடா’’ என்ற இயக்கத்தை தொடங்கி 7 ஆண்டுகள் வரை இடைவிடாத கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதனால், எண்ணற்ற அழிவுகளும் உயிர் சேதங்களும் ஏற்பட்டாலும் போராட் டங்கள் ஓயவில்லை.

1988 ஆம் ஆண்டு யாசர் அராபத் பாலஸ்தீனத்தை தனி நாடு என்று அறிவித்தார். இதனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கடும் கோபம் கொண்டு யாசர் அராபத்தை மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளராக கலந்து கொள்ளக்கூடிய யாசர் அராபத்துக்கு விசா வழங்க  அமெரிக்கா  மறுத்துவிட்டது. இதனால் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தை ஜெனிவாவில் நடத்தி யாசர் அராபத்தை கலந்து கொள்ள வைத்தனர். 

1993 ஆம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள ஒஸ்லோ என்ற இடத்தில் இஸ்ரேல் பிரதமர் இட்சாக் மற்றும் பி எல் ஓ தலைவர்களில் ஒருவரான  முகமது அப்பாஸ் இடையே  பேச்சு வார்த்தை துவங்கி நடைபெற்று. கடைசியாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது ஓஸ்லோ ஒப்பந்தம் என்று அழைக்கப் படுகிறது. இதன்படி இஸ்ரேல்,  பாலஸ்தீனியர்களின் பிரதிநிதியாக பி எல் ஓ வை ஏற்றுக் கொண்டது. இந்த ஒப்பந்தம் பாலஸ்தீனிய சுய அரசாங்கத்தை மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் படிப்படியாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பாலஸ்தீன அதிகார சபை பாலஸ்தீன பகுதியில் நிறுவப்பட்டது. மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் பி எல் ஓ பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு, பி எல் ஓ, இஸ்ரேல் அரசை முதன்முறையாக அங்கீகரித்தது. ஆனாலும் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மீறியது. பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது.

ஓஸ்லோ ஒப்பந்தத்தை பாலஸ்தீன மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. குறிப்பாக ஹமாஸ் அமைப்பு இதை எதிர்த்ததோடு, தேர்தலில் வெற்றி பெற்று காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இஸ்ரேல் இந்த வெற்றியை  ஏற்கவில்லை. இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கும் பி எல் ஓ விற்கும் மோதலை உருவாக்கி குளிர்காய நினைத்தது. ஆனால் அதன் எண்ணம் பலிக்கவில்லை. 

ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய முறையில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. 

இந்தப் பின்னணியில் தான் ஹமாஸ் அமைப்பை அழித்தே தீர வேண்டும் என்ற கொலை வெறியுடன் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி காசா பகுதியை ‘சுடு’காடாக்கி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கு இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை. அரபு நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இஸ்ரேல் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகக் கொடூரமான அடியாளை தயார் செய்து ஏவிக் கொண்டிருக்கிறது

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-2

அ.பாக்கியம்


யூத தேசிய நிதியும் குடியேற்றமும்

1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் முதல் சர்வதேச யூதர்கள் மாநாடு நடத்தப்பட்டது, இந்த மாநாட்டில் ஐரோப்பாவை சேர்ந்த 204 யூதர்கள் பங்கு பெற்றனர். இந்த மாநாட்டில் நான்கு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியதுடன், சில செயல்திட்டங்களையும் உருவாக்கினார்கள். 


யூதர்கள் பாலஸ்தீன பகுதியில் குடியேறுவதற்காக யூத தேசிய நிதியை 1901 ஆம் ஆண்டு துவக்கினார்கள், இந்த நிதிக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் முழுமையான உதவிகளை செய்தார்கள். 1901ஆம் ஆண்டு முதல் குடியேற்ற முயற்சியை துவங்குவது என்ற முடிவும் எடுக்கப்பட்டது. 1905 ஆம் ஆண்டு யூத தேசிய நிதியிலிருந்து முதன் முதலாக பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கப்பட்டது. குறிப்பாக கலீலேயா கடலுக்கு அருகிலும், பென் ஷேமேன் சென்ற இடத்திலும் யூத சமூகங்களை விவசாய குடியிருப்புகளை நிறுவுவதற்கான நிலங்கள் வாங்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டு 900 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலம் நன்கொடையாக பெற்றார்கள். நிலத்தை வாங்குவது மட்டுமல்ல நவீன யூத நகரத்தை உருவாக்குவதற்குமான திட்டங்களையும் மேற்கொண்டார்கள். 


சியோனிஸ்டுகள் வாங்கிய நிலத்தை யூதர்களின் பொது சொத்து என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலத்தை குத்தகைக்கு விடலாம். ஆனால் விற்கக் கூடாது. அதே நேரத்தில் இந்த நிலத்தில் அரேபிய விவசாயிகள் வேலை செய்யக்கூடாது. ஏற்கனவே அரேபிய விவசாயிகள் வேலை செய்தால் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இதன் பிறகு யூத தேசிய நிதியை உலகம் முழுவதும் திரட்டி பல்வேறு அமைப்புகளை ஆரம்பித்து குறிப்பாக ஏழுக்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் சுமார் 906.80 சதுர கிலோமீட்டர் நிலங்களை வாங்கி குவித்தது. மேலே ஆரம்பிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டது.


இவ்வாறு நிலம் வாங்குகிற செயல்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிற பொழுது, 1914 ஆம் ஆண்டுகளில் முதல் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது. பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா நேச நாடுகளாகவும், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் அச்சு நாடுகளாகவும் யுத்த களத்தில் இறங்கினார்கள். துருக்கி நாட்டின் ஓடோமான் அரசு அச்சு நாடுகளை ஆதரித்தது. இக்காலத்தில் பாலஸ்தீன பகுதி முழுவதும் துருக்கியின் ஓட்டோமான் பேரரசிற்கு கீழே இருந்தது. பிரிட்டிஷார் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பாலஸ்தீனத்தில் இருந்த அரேபியர்களிடம் பிரிட்டிஷாருக்கு ஆதரவு கொடுத்தால் யுத்தம் முடிந்த பிறகு அரபு நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.


இதேபோன்று யூதர்கள் மத்தியிலும் யுத்த ஆதரவுக்கான பணிகளை மேற்கொண்டது பிரிட்டிஷ் அரசு. ஏற்கனவே சியோனிச ஆதரவுடன் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆர்தர் பால்போர் என்பவர் மூலம் நவம்பர் 9ஆம் தேதி ஒரு ஒப்பந்தத்தை வெளியிட்டது. ஒட்டாமான் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான குடியிருப்பு நிறுவப்பட வேண்டும் என்று தனது ஆதரவை தெரிவித்தது. இதை நிறுவுவதற்காக ஆர்தர் பால் போர் யூத சமூகத்தின் தலைவரான லார்ட் ரோத்சைல்ட் இடையே ஒரு ஒப்பந்தம் செய்தார்கள். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பே இல்லாத ஒரு பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒரு நாட்டை அமைத்துக் கொடுப்பது என்று பிரிட்டனில் இருந்த யூத இனத்தைச் சேர்ந்த யூத முதலாளி ரோத்சைல்டும், பிரிட்டன் நாட்டு வெளியூர் அமைச்சரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது வேடிக்கையானது. இந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது அனைத்தும் யூத தேசத்தை அமைப்பதற்கான கருத்துக்கள். ஒரு யூத முதலாளியின் மூலமாக வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் 

கீழ்க்கண்டவாறு தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது:

பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான ஒரு தேசிய இடம் கொடுக்கப்படுவதை அரசாங்கம் ஆதரிக்கும். இந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சாதகமான செயல்களை அரசு செய்ய வேண்டும். இதனால் தற்போது பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்கள் அல்லாத பிற சமூகத்தினுடைய குடியுரிமைகளோ, மத சம்பந்தமான உரிமைகளோ பாதிக்கப்படாது. அதே போன்று பிற நாடுகளில் யூதர்கள் அனுபவித்து வரும் உரிமைகளும், அரசியல் அந்தஸ்தும் பாதிக்கப்படாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது, இந்த அறிக்கை பாலஸ்தீனத்தில் யூதர்களின் உரிமையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது. 

இரண்டாவதாக உலகின் பல பாகங்களிலிருந்த யூதர்கள், பிரிட்டிஷாரின் யூதநாட்டை ஆதரித்ததினால் முதலாம் உலக யுத்தத்தில் நேச கட்சியின் சார்பாக பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்தார்கள். துருக்கி மற்றும்   பிரிட்ஷாருக்கும் நடைபெற்ற யுத்தத்தில் யூதர்கள் மட்டும் அடங்கிய ஒரு தனிப்படையை உருவாக்கி பிரிட்டிஷாருக்காக போர் புரிந்தார்கள். பிரிட்டிஷாரின் ஆதரவை இதனால் அதிகமாக்கி கொண்டார்கள். 

மூன்றாவதாக, பாலஸ்தீனத்தை தன்னுடைய செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதியாக வைத்திருக்க அதன் புவிசார் அமைப்பு காரணமாக இருந்தது. பாலஸ்தீனத்தின் பூகோள அமைப்பானது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களை இணைக்கும் இடத்தில் இருந்தது

முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் துரோக குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டன. சவுதி அரேபியாவிற்கும், ஏமன் நாட்டிற்கு மட்டும் விடுதலை அளிக்கப்பட்டது. லெபனான், மேற்கு சிரியா பகுதியை பிரான்ஸ் தனது கட்டுப்பாட்டிலும், பாலஸ்தீனத்தையும், இன்றைய இஸ்ரேல் உட்பட, ஈராக்கையும் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கட்டளை நாடுகள் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. இந்த முடிவிற்கு அன்றைய தினம் உருவாக்கப்பட்ட லீக் ஆஃப் நேஷன் நாடுகளின் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்தது.

முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு வெர்செய்ல்ஸ் உடன்படிக்கைபடி நேசநாடுகள் பல நாடுகளை பங்கு போட்டுக் கொண்டன. குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்ட நாடுகள் தவிர, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் கேமரூன், தாங்கா நிகா, பிரிட்டனுக்கும், தெற்கு கேமருன் கிழக்கு போகோலேண்ட் பிரான்சுக்கும், குவாந்தா பெல்ஜியத்திற்கும், தென்மேற்கு ஆப்பிரிக்காவை தென்னாப்பிரிக்காவும், மேற்கு ஸமோவா தீவை நியூசிலாந்தும், நவுரு தீவு ஆஸ்திரேலியாவும், நியூ கயானாவை ஆஸ்திரேலியாவும், மத்திய ரேகை வடக்கிலுள்ள தீவுகளை ஜப்பானும் பிடித்துக் கொண்டன.

1920 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி சான்றிமோ என்ற நகரத்தில் கூடிய சமாதான மாநாட்டில் சர்வதேச சங்கத்தின் மேற்படி 22 ஆவது சரத்தின் அடிப்படையில் பாலஸ்தீன நிர்வாகம் பிரிட்டன்வசம் ஒப்படைக்கப்பட்டதாக தீர்மானிக்கப்பட்டது. இதனை 24.7.1922 அன்று சர்வதேச சங்கம் அதாவது லீக் ஆஃப் நேஷன் உறுதி செய்தது. இந்த அதிகார பத்திரத்தில் 28 முக்கியமான ஷரத்துக்கள் இருக்கிறது. அவற்றில் உள்ள அம்சங்கள் பிரிட்டனின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை அமைப்பதற்கு ஏற்ற வகையில் கட்டளை அரசின் அரசியல் நிர்வாக, பொருளாதார நிலைமைகள் அமைக்கப்பட வேண்டும். யூதர்களின் இருப்பிடம் சம்பந்தமான விஷயங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறவும், அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவும் சியோனிச அமைப்பு யூதர்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் அமைப்பு என்று அங்கீகரிக்கப்படும். யூத நாட்டை உருவாக்குவதற்கு அனைத்து யூதர்களின் ஒப்புதலையும் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும். 

யூதர்கள் குடியேறுவதற்கான வசதிகளை செய்து கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் யூதர்கள் ஒன்று சேர்ந்து வசிப்பதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பாலஸ்தீனத்திலேயே நிரந்தரமாக வசிக்க விரும்புகிற யூதர்களுக்கு பாலஸ்தீனத்து குடியுரிமை பெற வசதிகள் செய்துதர வேண்டும். கம்பெனிகளை, தொழிற்சாலைகளை, நிறுவனங்களை, ஆரம்பிப் பதற்கு தேசத்தின் இயற்கை பொருள்களை பயன்படுத்திக் கொள்வதற்கும், சியோனிச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பாலஸ்தீனத்தின் நிர்வாகத்தை பிரிட்டன் ஏற்றுக்கொள்கிற பொழுது யூதர்களுக்கு ஏன் இவ்வளவு விசேஷமான சலுகைகள் காட்டப்பட வேண்டும் என்று கேட்கக்கூடும்.

உலக யுத்தம் முடிந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் பிரிட்டனை கதிகலங்க வைத்தது. குறிப்பாக உலக யுத்தம் முடிவில் சோவியத் புரட்சி, லெனின் தலைமையில் வெற்றி பெற்று உலகில் போராடக்கூடிய மக்களின் எழுச்சிகளுக்கு உந்துதலாக அமைந்தது. யூதர்களுக்கான ஒரு தேசத்தை அமைப்பதற்கு பிரிட்டிஷாருக்கு மூன்று காரணங்கள் அடிப்படையாக இருந்தது. 

ஒன்று, ரஷ்ய புரட்சியில் யூதர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. லெனின், ரஷ்யாவிலிருந்த கணிசமான யூதர்களை தொழிலாளி வர்க்கத்துடன் ஒன்றுபடுத்தி புரட்சியில் இணைப்பதில் மிக கவனமாக செயல்பட்டார். எனவே யூதர்கள் பொது உடமைக்கு ஆதரவாக சென்று விட்டால் அது மேற்காசிய நாடுகள் முழுவதும் பரவும் என்று பிரிட்டன் பீதியடைந்தது.

இரண்டாவதாக சூயஸ் கால்வாய் பொருளாதார வழிதடத்தின் அடிப்படையாக இருந்தது. அவற்றை பாதுகாப்பதற்கு தனக்கு சக்தி வாய்ந்த அதே நேரத்தில் நம்பிக்கையான ஒரு நாடு தேவைப்பட்டது. அது சியோனிச தேசமாகத் தான் இருக்கும் என்று பிரிட்டன் அரசு முடிவு செய்தது.

மூன்றாவதாக மேற்காசிய எண்ணெய் வளம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதற்கும் சியோனிச நாடு அவசியம் என்று சிந்தித்தனர். எனவே, யூதர்களுக்கான நாட்டை உருவாக்குவதில் தீவிரம் காட்டினார்கள்.

இதன் தொடர்ச்சியாக யூத செயலாண்மை அமைப்பு உருவாக்கப் பட்டது. 1920 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் குடியேற்ற அவசரச் சட்டத்தை பிறப்பித்து யூதர்களை பாலஸ்தீன பகுதியில் குடியேறுவதற்கான முழுமையான உதவிகளை செய்தார்கள்.

மூன்று வகை ஆக்கிரமிப்புகள்

மூன்றாவது வகையில், இந்த குடியேற்றங்களை நடத்துவது என்று சியோனிஸ்டுகளும், பிரிட்டிஷ் அரசும் முடிவு செய்வது. ஒன்று, பாலஸ்தீன பகுதிகளில் நிலங்களை வாங்குவது. இரண்டாவது கட்டாயமாக யூதர்களை குடியமர்த்துவது. மூன்றாவது, குடியேறிய பகுதிகளில் வன்முறை மூலமாக பாலஸ்தீனர்களை வெளியேற்றி தங்கள் பிரதேசத்தை விரிவுபடுத்திக் கொள்வது.

முதலாவதாக, நிலத்தை வாங்குவது மூலமாக 1926 ஆம் ஆண்டில் நாலு சதவீத நிலத்தையும் 1936 ஆம் ஆண்டில் ஐந்து சதவீத நிலத்தையும், 1945ஆம் ஆண்டில் 6 சதவீத நிலத்தையும் 1948ஆம் ஆண்டில் 8 புள்ளி 6 சதவீதம் நிலத்தையும் வாங்கி இருந்தார்கள். பாலஸ்தீனத்தில் வளமான பகுதிகளான விவசாயம் செய்யக்கூடிய பகுதி மற்றும் தோட்டங்கள் அமைக்கக்கூடிய பகுதிகளாகப் பார்த்து யூதர்கள் வாங்கி குவித்தார்கள். 1947ஆம் ஆண்டில் 4,31,500 ஏக்கர் நிலம் யூதர்கள் கைவசம் இருந்தது.

இரண்டாவதாக, குடியேற்றம் நடத்துவது என்று கட்டாயக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள். 1882 முதல் 1903 ஆம் ஆண்டு வரை பாலஸ்தீன பகுதியில் இருந்த யூத இன மக்களின் எண்ணிக்கை 24 ஆயிரம் மட்டுமே. கட்டாயக் குடியேற்றத்தின் மூலமாக 1904-1914 ஆம் ஆண்டுகளில் நாற்பதாயிரமாகவும், 1919-1923இல் 35,000 1924-28 ஆம் ஆண்டுகளில் 67,000, 1928-1939ஆம் ஆண்டுகளில் 2,50,000, 1940-1945 ஆம் ஆண்டுகளில் 6 லட்சம் யூதக்குடியேற்றங்கள் நடைபெற்றன. 

ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்த குடியேற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இங்கு மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வை குறிப்பிட வேண்டும். ஹிட்லர், ஜெர்மனியில் மிகக் கொடூரமான முறையில் யூதர்களை வேட்டையாடினார். விஷவாயு செலுத்தியும், தெருக்களில் சுட்டுத் தள்ளியும் யூதர்கள் கொல்லப்பட்டனர். மேலும், யூதர்கள் பலரை கொடுஞ்சிறைக்கு அனுப்பி வைத்தனர். யூதர்களை ஒட்டுமொத்தமாக அழித்து விட வேண்டும் என்ற கொடூர நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. 

அப்பொழுது யூத நாடு உருவாக வேண்டும் என்று களத்தில் இருந்த சியோனிஸ்டுகள் யாரும் இதை கண்டிக்கவில்லை. இதற்கு மாறாக. பாதிக்கக்கூடிய யூத மக்கள் தாங்கள் உருவாக்க உள்ள யூத நாட்டுக்கு வர வேண்டும் என்று விரும்பியதால் அவற்றுக்கு எதிராக அணி திரளவில்லை.

மூன்றாவதாக மிகப் பெரும் வன்முறைகளை நடத்தினார்கள். 1920 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் ஐந்து பேர் மரணம் அடைந்தார்கள். 1921 ஆம் ஆண்டு ஜாபா நகரத்தில் ஏற்பட்ட கலவரத்திலும், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டிலும் 95 பேர் கொல்லப்பட்டார்கள். 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். 1925 ஆம் ஆண்டு மிகப்பெரும் கலவரம், வன்முறைகள் நடைபெற்றன. 1929 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பயங்கர கலவரத்தில் நூற்றுக்கணக்கான அரேபியர்களும் யூதர்களும் இறந்தார்கள். 

எகிப்தில் இருந்து ராணுவத்தை வரவழைத்து பிரிட்டிஷ் அரசு, கலவரத்தை அடக்கியது. 1933 ஆம் ஆண்டு கடைசியில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து பெரும் கலகம் உருவானது. இதை அரேபியர்கள் நடத்தினார்கள். இக்காலத்தில் யூதர்கள் இஸ்ரேலில் குடியிருப்பது மிகப்பெரும் அளவில் நடந்ததனால் அச்சப்பட்ட அரேபியர்கள் இந்த கலவரத்தை தொடங்கினார்கள். கலவரங்கள் மற்றும் வன்முறை மூலமாக சியோனிஸ்ட்கள் தங்களுடைய பலத்தை அதிகப்படுத்தி கொண்டார்கள்.

இதே காலத்தில் சிரியாவிலும் லெபனானிலும் பிரான்சுக்கு எதிராக வலுவான போராட்டம் நடந்தது. ஒரு கட்டத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் பிரான்ஸ் நிர்வாகம் மேற்கண்ட இரு நாடுகளுக்கும் சுதந்திரம் அளிப்பதாக ஒப்புக்கொண்டது. 29.3.1937இல் சிரியா, லெபனான் பிரதேசங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 1939 ஆம் ஆண்டில், சிரியாவில் இருந்து பிரெஞ்சு நிர்வாகம் வெளியேறியது.

வியாழன், ஜூலை 03, 2025

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

 



1948 மே 14

சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பென் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதயமாகிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார். 19 ஆம் நூற்றாண்டு வரை உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற தேசம் இருக்கவில்லை. ஒரு தேசம் என்று வரையறுத்தால் தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருளாதார நடவடிக்கை, கலாச்சாரம், ஒரே மொழி, நிரந்தர வாழ்விடம் என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் மேற்கண்ட வரையறைக்குள் தொழிற்படாத ஒரு நாடாகத்தான் இஸ்ரேல் என்ற நாடு இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு தரவுகளின் படி 31 லட்சம் யூதர்கள் 102 நாடுகளில் இருந்து வந்தவர்கள். 51 மொழிகளை பேசக்கூடியவர்கள். உணவு, சமூக உறவு, மொழி, பண்பாடு, வரலாற்று இணைப்பு என விஷயங்களில் வேறுபட்டவர்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இஸ்ரேல் என்ற நாடு இயல்பாக உருவாகவில்லை என்பதுதான். அது ஏகாதிபத்திய சக்திகளால் சியோனிஸ்ட் கொள்கை உடையவர்களால் திணிக்கப்பட்டது. டேவிட் பென் குரியன் அறிவிக்கிற பொழுது, ‘‘இன்று முதல் எம்மக்கள் இஸ்ரேலியர்கள் என்று அழைக்கப்படுவார்கள்; எம்மதம் யூத மதம்’’ என்று கூறினார்.

தொன்மை வரலாறும் – புனைவுகளும்

மேற்காசிய பிரதேசங்களில் தொன்மைக் காலம் தொட்டு மனிதர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றைய நாடுகளின் பெயர்களையோ, இனக்குழுக்களின் பெயர்களையோ, தொன்மைக்கால மனிதர்கள் மீது திணிப்பது அறிவியல் பார்வை ஆகாது. வரலாறு நெடுகிலும் மனிதர்களிடையே இனகுழுக்கள் கலப்பு, பண்பாடு கலப்பு, மொழிகளின் கலப்பால் ஏற்பட்ட வளர்ச்சி என மனித குலங்கள் வளர்ந்து வந்திருக்கிறது. அவ்வாறுதான் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள யூதர்களாக இருந்தாலும் சரி, அரேபியர்களாக இருந்தாலும் சரி பல்வேறு இனக் குழுக்கலிருந்து பெருக்கமடைந்து காலப்போக்கில் வளர்ந்தவர்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. நெபால் என்பவர் நடத்திய டி.என்.ஏ  ஆய்வில் இஸ்ரேலியர்/பாலஸ்தீன அரேபியர்கள் மற்றும் யூதர்களிடையே கணிசமான மரபணு ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பதை கண்டறிய முடிந்தது. ஆனால் சியோனிஸ்டுகள் அறிவியல் ஆய்வு என்ற பெயரால் யூத இனம் தனி இனம்,தூய்மையானது என்று புனைவுகளை கட்டமைக்கின்றனர். இது போன்றுதான் முசோலினி இத்தாலிய இனத்தூய்மைவாதத்தை முன்வைத்தார்.

யூத மதத்தை தோற்றுவித்த ஆப்ரஹாம் பிறப்பதற்கு 46 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீனத்தில் முதலாவதாக குடியேறிய இனக்குழுக்கள் அமோரியர்கள், ஹராமியர்கள் ஆவார்கள். இந்த குடியேற்றம் பொது ஆண்டுக்கு முன்பு (கிமு) 3500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. பொஆமு (கிமு) 3000 ஆண்டுகளில் அரேபிய இனக்குழுவான கானானியர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள். பொஆமு (கிமு) 1800 ஆம் ஆண்டுகளில் மெசபடோமியாவின் உர் பகுதியிலிருந்து ஆபிரஹாம் தனது இனத்துடன் புறப்பட்டு ஜெருசலேம் வந்தார். அங்கிருந்த ஜப்பூசிய மன்னன் ஆபிரஹாம் இனத்தவர்களுக்கு இடமளித்தார். ஆபிரஹாம் மரணத்திற்கு பிறகு இவர்கள் எகிப்திற்கு சென்றனர். எகிப்தில் பாரோ மன்னர்களால் 400 ஆண்டுகளுக்கு மேல் அடிமைப் படுத்தப்பட்டார்கள்.

பொஆமு (கிமு) 1250 இல்லீரியா என்ற இடத்தைச் சேர்ந்த பிலிஸ் தினியர்கள் கானான் தெற்கு பகுதியை கைப்பற்றி பிலீஸ்தீனம் என்று பெயரிட்டனர். பிலிஸ்தினியர்களும், கானானில் இருந்த இனக்குழுவும் இணைந்து பாலஸ்தீன இனமாக உருவானது. எகிப்தில் 400 ஆண்டுகள் அடிமையாக இருந்த யூத இனத்தவர்கள் அதற்கு எதிராக கலகம் செய்து மோசஸ் என்பவர் தலைமையில் புறப்பட்டு 40 வருடம் பாலைவன வாழ்க்கையை மேற்கொண்டார்கள். மோசஸ் இறந்த பிறகு யூதர்களின் பனிரெண்டு இனக்குழுக்கள் இணைந்து ஜோஸ்வா தலைமையில் பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதியை கைப்பற்றினார்கள். இந்த மோதல்கள் 200 வருடங்களுக்கு மேல் நீடித்தது. இதன் பிறகு பொஆமு (கிமு) 932 வரை இந்தப் பகுதியை யூத இனக்குழுக்களின் அரசர் சாலமன் ஆட்சி செய்தார். அவர் இறந்த பிறகு  நிலைமை மாறியது.

பாலஸ்தீனப் பிரதேசத்தை ஒரு குறிப்பிட்ட இனமோ, பேரரசோ நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சி செய்ததாக பழங்கால வரலாறு இல்லை. பொஆமு 721இல் அசீரியர்கள் பாலஸ்தீனத்தை கைப்பற்றினார்கள். பொஆமு 587இல் பாபிலோனியர்கள் இப்பகுதியை வென்று யூதர்களை சிறைபிடித்து சென்றனர். பொஆமு 538 இல் பெர்சிய மன்னன் சைப்ரஸ் இப்பகுதியை கைப்பற்றி யூத பெண்களை மணந்து மீண்டும் யூதர்களை வரவழைத்தார். பொஆமு 332 இல் அலெக்சாண்டர் இப்பகுதியை கைப்பற்றினார். இவர் காசா பகுதியை கைப்பற்றுவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டார். அந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்தது. பொஆமு 63இல் ரோமப் படைத்தளபதி போம்பே பாலஸ்தீனத்தை கைப்பற்றினார்.

பொஆ (கிபி) 70 ரோம பேரரசர் டைடஸ் யூதர்களை ரோமுக்கு அடிமைகளாக கப்பல்களில் பிடித்து சென்றார். பொஆ(கி.பி.)135இல் ரோம தளபதி மீதமிருந்த யூதர்களை விரட்டி அடித்தார். ரோமானிய பேரரசர் கான்ஸ்டாண்டின் தி கிரேட் பொஆ (கிபி) 4ம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தை ரோமானிய பேரரசின் ஆதிக்க மதமாக மாற்றினார். அதன் தொடர்ச்சியாக அவர் கைப்பற்றி இருந்த மேற்காசிய பகுதியையும் பாலஸ்தீனம் உட்பட கிறிஸ்தவ மதம் திணிக்கப்பட்டது. யூதர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைகளால் வெளியேறினார்கள். கிபி 638 இல் கலீபாஉமர் பாலஸ்தீனத்தை வென்றார். 1099 ம் ஆண்டு ஐரோப்பிய சிலுவைப்படை பாலஸ்தீனத்தை கைப்பற்றியது. 1187ஆம் ஆண்டு மீண்டும் முஸ்லிம் படை பாலஸ்தீனத்தை கைப்பற்றி சலாவுதீன் ஆட்சி ஏற்பட்டது. 1229ம் ஆண்டு ஜெர்மன் சிலுவைப்படை ஜெருசலேமை கைப்பற்றியது. 1517 இல் துருக்கி ஓட்டோமான் பேரரசர் பாலஸ்தீனத்தை கைப்பற்றி 400 ஆண்டுகள் வைத்திருந்தார். 1917 இல் முதல் உலகப்போர் முடிவில் பாலஸ்தீன பகுதி இங்கிலாந்து மற்றும் பிரான்சின் கைவசம் வந்தது

சியோனிச சித்தாந்தம்        

சியோனிசம் என்பது 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் யூதர்களுக்கு மத்தியில் தோன்றியது. யூதர்களுக்கான இன கலாச்சார தேசியவாத இயக்கமாக இது முன்னெடுக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டுகளில் யுகோஸ்லாவாகிய நாட்டைச் சேர்ந்த யூதர் அல்கலே, 1861இல் ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த யூதர் ஹஸ் கனிஷர், 1862 இல் மோசஸ், 1882இல் ரஷ்யாவின் லியோ பென்ஸ் கார் போன்றவர்கள் சியோனிச சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்து வந்தனர். 1896 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த யூதர் தியோட ஹெர்செல் சியோனிச இயக்கத்தை அரசியல் படுத்தினார். யூதர்களுக்கு தனிநாடும், தனி அரசும் தேவை என்பதை பிரகடனமாக வெளியிட்டார். பிரிந்து கிடந்த யூதர்களை ஒன்று திரட்ட ஆரம்பித்தார். 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா உட்பட பல பகுதிகளில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களை பயன்படுத்தி சியோனிசம் என்ற அமைப்பையும் யூதர்களுக்கான தனிநாடு, தனிஅரசு என்ற கருத்தையும் நிலை நிறுத்தினார்.

சியோனிசம் உருவாக்கிட அதாவது யூத நாட்டை உருவாக்கிட முதலில் பல்வேறு இடங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. துருக்கி, கென்யா, உகாண்டா, சைப்ரஸ், சினாய், இத்தாலியின் திரிபோலி, மொசாம்பிக், காங்கோ போன்ற பிரதேசங்களில் ஒரு பகுதியை யூத நாடாக உருவாக்க திட்டமிட்டார்கள். இறுதியில் யூதர்கள் அதாவது சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை தேர்வு செய்தார்கள். காரணம் கடவுளுடன் இணைப்பதற்கான ஒரு சில வரிகளை விவிலிய நூலில் (பைபிள்) கண்டெடுத்தனர்.

விவிலிய நூல் பழைய ஏற்பாட்டின் படி அத்தியாயம் 15 பிரிவு 18 இல் நைல் நதிக்கும் ஜோர்டான் மேற்கு பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் ஆபிரஹாம் வழித்தோன்றல்களுக்கு கொடுக்கப்பட்டது என்ற வார்த்தைகளின் அடிப்படையில் இதற்கான கதைகள் உருவாக்கப்பட்டது. கிமு 1800 ஆம் ஆண்டுகள் மெசபடோமியா நகரம் கடவுள்களால் ஹீப்ரு இன மக்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும் ஆபிரஹாம் அங்கு தனது இனக்குழுக்களுடன் இடம்பெயர்ந்தார். அதன் பிறகு எகிப்து நாட்டின் கானான் பகுதிக்கு கால்நடைகள் மேய்ப்பதற்கான வாழ்க்கையை தொடங்கினார்கள். இக்காலத்தில் ஆபிரஹாம் இறந்தார். அவரின் உடலை ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் புதைத்தனர். ஆபிரஹாமின் இறப்புக்குப் பிறகு ஹீப்ரு இனக்குழுவினர் 400 வருடங்கள் எகிப்தில் அடிமையாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து கி.மு 1250 ஹீப்ருக்கள் மோசஸ் தலைமையில் தப்பிச்சென்று 40 ஆண்டுகள் வரை பாலைவன வாழ்க்கையை மேற்கொண்டனர். மோசஸ் இறந்த பிறகு ஜோஸ்வா இந்த இனக்குழுவிற்கு தலைமை தாங்கினார். ஹீப்ரு மன்னர்கள் டேவிட் மற்றும் சாலமன் புகழ்பெற்றவர்கள்.  சாலமன் மன்னர் சியோன் குன்றின் மீது யாகோவா கடவுளுக்கு கோவில் கட்டினார்.பொஆ 70 ஆம் ஆண்டு படை எடுப்பால் இக்கோவில் இடிக்கப்பட்டது. இப்பொழுதும் ஜெருசலேமின் யூத குடியிருப்புகளுக்கு கீழே பத்தடி ஆழத்தில் இந்த கோவிலுக்கான சுவர்கள் உள்ளது. இதைத்தான் யூதர்களின் அழுகைச்சுவர் என்று அ

அது மட்டுமல்ல சீயோன் மலை என்பது ஜெருசலேமில் உள்ளது. சீயோன் எபிரேய பைபிள்களில் பயன்படுத்தும் ஒரு சொல். எபிரேய மொழி பொஆமு முதலாம் நூற்றாண்டுவரை யூதர்கள் பயன்படுத்திய மொழியாகும. அதன் பிறகு வழக்கொழிந்துபோய்விட்டது.யூதர்கள் பாபிலோனியாவிற்கு நாடு கடத்தப்பட்ட காலத்திலிருந்து இந்த மலையை தங்களின் பூர்வீகமாக கருதி வருகின்றனர்.

யூதர்கள் ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் அரசு அமைப்பதற்கான தார்மீக உரிமை மட்டுமல்ல, வரலாற்று உரிமையும் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் சியோனிசத்தின் அடிப்படையாகும். யூதர்கள் அல்லாதவர்கள் மத்தியில் வாழ்ந்த யூதர்களிடம் ஊடுருவிய வேறு அடையாளங்களை சியோனிஸ்டுகள் அழிக்க முற்பட்டனர். யூத கலாச்சாரத்தில் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்டனர். சியோனிச உருவாக்கத்தோடு சேர்ந்து யூத இனக்குழு பழமையானது, அதுதான் பாலஸ்தீன பகுதியில் வாழ்ந்தது என்பதற்கான இன அறிவியலை கட்டமைக்க முயற்சி செய்தனர். இந்தக் கருத்து உருவாக்கம் யூத அடையாளத்திற்கான புதிய கட்டமைப்பை கொடுத்தது. இஸ்ரேலிய நிலத்திலிருந்து யூதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான இனவழிக் கதைகளையும் உருவாக்க முடிந்தது.

புதிதாக ஒரு இடத்தை கைப்பற்றுவதற்கான குடியேற்றத்தை நடத்துகிற பொழுது, உழைப்பை கைப்பற்றுதல் என்ற கோட்பாட்டை முன் வைத்தனர். பிரத்தியேகமாக யூத உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்ற கோட்பாடு பாலஸ்தீனத்தில் யூத நிலத்தை உத்திரவாதப்படுத்துவதற்கு உதவி செய்வது. 100 சதவீத யூத உழைப்பு என்ற பிரத்தியேகமான திட்டத்தையும், அதிக உற்பத்தி திறன் கொண்ட பொருளாதார அடிப்படையில் தூய்மையான யூத குடியேற்றத்தை உருவாக்க திட்டமிட்டனர். புலம்பெயர்ந்த யூதர்கள் பல நாடுகளில் இடைத்தரகர்களாகவும் தொழிலாளர்களாகவும் இருந்தனர். அவ்வாறு யூத நாட்டில் இல்லாமல், உருவாக்கப்படும் யூத நிலத்தில் தொழில், விவசாயம், சுரங்கம், போன்ற அடிப்படை துறைகளை வளர்ப்பது என்றும் இதற்கு யூத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்ற சியோனிச கருத்துக்கள் உருவாக்கப்பட்ட யூத குடியேற்றங்களில் கடைபிடிக்கப்பட்டது.

சியோனிஸ்ட்களின் முயற்சிகளுக்கு பிரிட்டன் பக்கபலமாக இருந்தது மட்டுமல்ல... பிரிட்டனுக்கும் யூதர்களுக்கான தனி நாட்டை அமைத்துக் கொடுப்பதற்கான அரசியல் தேவை இருந்தது. எனவே பிரிட்டன் 1840 ஆம் ஆண்டுகளில் இருந்து மேற்காசிய நாடுகளின் இயற்கை வளங்களின் மீது தனது கவனத்தை செலுத்தி வந்தது. மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட அரசியலின் நிலையற்ற தன்மை, பொருளாதார நெருக்கடிகள், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் எண்ணெய் வளங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் விளைவாகவே பாலஸ்தீன பகுதி யூதநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...