அ.பாக்கியம்
யூத தேசிய நிதியும் குடியேற்றமும்
1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் முதல் சர்வதேச யூதர்கள் மாநாடு நடத்தப்பட்டது, இந்த மாநாட்டில் ஐரோப்பாவை சேர்ந்த 204 யூதர்கள் பங்கு பெற்றனர். இந்த மாநாட்டில் நான்கு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியதுடன், சில செயல்திட்டங்களையும் உருவாக்கினார்கள்.
யூதர்கள் பாலஸ்தீன பகுதியில் குடியேறுவதற்காக யூத தேசிய நிதியை 1901 ஆம் ஆண்டு துவக்கினார்கள், இந்த நிதிக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் முழுமையான உதவிகளை செய்தார்கள். 1901ஆம் ஆண்டு முதல் குடியேற்ற முயற்சியை துவங்குவது என்ற முடிவும் எடுக்கப்பட்டது. 1905 ஆம் ஆண்டு யூத தேசிய நிதியிலிருந்து முதன் முதலாக பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கப்பட்டது. குறிப்பாக கலீலேயா கடலுக்கு அருகிலும், பென் ஷேமேன் சென்ற இடத்திலும் யூத சமூகங்களை விவசாய குடியிருப்புகளை நிறுவுவதற்கான நிலங்கள் வாங்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டு 900 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலம் நன்கொடையாக பெற்றார்கள். நிலத்தை வாங்குவது மட்டுமல்ல நவீன யூத நகரத்தை உருவாக்குவதற்குமான திட்டங்களையும் மேற்கொண்டார்கள்.
சியோனிஸ்டுகள் வாங்கிய நிலத்தை யூதர்களின் பொது சொத்து என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலத்தை குத்தகைக்கு விடலாம். ஆனால் விற்கக் கூடாது. அதே நேரத்தில் இந்த நிலத்தில் அரேபிய விவசாயிகள் வேலை செய்யக்கூடாது. ஏற்கனவே அரேபிய விவசாயிகள் வேலை செய்தால் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இதன் பிறகு யூத தேசிய நிதியை உலகம் முழுவதும் திரட்டி பல்வேறு அமைப்புகளை ஆரம்பித்து குறிப்பாக ஏழுக்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் சுமார் 906.80 சதுர கிலோமீட்டர் நிலங்களை வாங்கி குவித்தது. மேலே ஆரம்பிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு நிலம் வாங்குகிற செயல்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிற பொழுது, 1914 ஆம் ஆண்டுகளில் முதல் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது. பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா நேச நாடுகளாகவும், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் அச்சு நாடுகளாகவும் யுத்த களத்தில் இறங்கினார்கள். துருக்கி நாட்டின் ஓடோமான் அரசு அச்சு நாடுகளை ஆதரித்தது. இக்காலத்தில் பாலஸ்தீன பகுதி முழுவதும் துருக்கியின் ஓட்டோமான் பேரரசிற்கு கீழே இருந்தது. பிரிட்டிஷார் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பாலஸ்தீனத்தில் இருந்த அரேபியர்களிடம் பிரிட்டிஷாருக்கு ஆதரவு கொடுத்தால் யுத்தம் முடிந்த பிறகு அரபு நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
இதேபோன்று யூதர்கள் மத்தியிலும் யுத்த ஆதரவுக்கான பணிகளை மேற்கொண்டது பிரிட்டிஷ் அரசு. ஏற்கனவே சியோனிச ஆதரவுடன் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆர்தர் பால்போர் என்பவர் மூலம் நவம்பர் 9ஆம் தேதி ஒரு ஒப்பந்தத்தை வெளியிட்டது. ஒட்டாமான் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான குடியிருப்பு நிறுவப்பட வேண்டும் என்று தனது ஆதரவை தெரிவித்தது. இதை நிறுவுவதற்காக ஆர்தர் பால் போர் யூத சமூகத்தின் தலைவரான லார்ட் ரோத்சைல்ட் இடையே ஒரு ஒப்பந்தம் செய்தார்கள். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பே இல்லாத ஒரு பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒரு நாட்டை அமைத்துக் கொடுப்பது என்று பிரிட்டனில் இருந்த யூத இனத்தைச் சேர்ந்த யூத முதலாளி ரோத்சைல்டும், பிரிட்டன் நாட்டு வெளியூர் அமைச்சரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது வேடிக்கையானது. இந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது அனைத்தும் யூத தேசத்தை அமைப்பதற்கான கருத்துக்கள். ஒரு யூத முதலாளியின் மூலமாக வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில்
கீழ்க்கண்டவாறு தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது:
பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான ஒரு தேசிய இடம் கொடுக்கப்படுவதை அரசாங்கம் ஆதரிக்கும். இந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சாதகமான செயல்களை அரசு செய்ய வேண்டும். இதனால் தற்போது பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்கள் அல்லாத பிற சமூகத்தினுடைய குடியுரிமைகளோ, மத சம்பந்தமான உரிமைகளோ பாதிக்கப்படாது. அதே போன்று பிற நாடுகளில் யூதர்கள் அனுபவித்து வரும் உரிமைகளும், அரசியல் அந்தஸ்தும் பாதிக்கப்படாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவது, இந்த அறிக்கை பாலஸ்தீனத்தில் யூதர்களின் உரிமையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது.
இரண்டாவதாக உலகின் பல பாகங்களிலிருந்த யூதர்கள், பிரிட்டிஷாரின் யூதநாட்டை ஆதரித்ததினால் முதலாம் உலக யுத்தத்தில் நேச கட்சியின் சார்பாக பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்தார்கள். துருக்கி மற்றும் பிரிட்ஷாருக்கும் நடைபெற்ற யுத்தத்தில் யூதர்கள் மட்டும் அடங்கிய ஒரு தனிப்படையை உருவாக்கி பிரிட்டிஷாருக்காக போர் புரிந்தார்கள். பிரிட்டிஷாரின் ஆதரவை இதனால் அதிகமாக்கி கொண்டார்கள்.
மூன்றாவதாக, பாலஸ்தீனத்தை தன்னுடைய செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதியாக வைத்திருக்க அதன் புவிசார் அமைப்பு காரணமாக இருந்தது. பாலஸ்தீனத்தின் பூகோள அமைப்பானது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களை இணைக்கும் இடத்தில் இருந்தது
முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் துரோக குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டன. சவுதி அரேபியாவிற்கும், ஏமன் நாட்டிற்கு மட்டும் விடுதலை அளிக்கப்பட்டது. லெபனான், மேற்கு சிரியா பகுதியை பிரான்ஸ் தனது கட்டுப்பாட்டிலும், பாலஸ்தீனத்தையும், இன்றைய இஸ்ரேல் உட்பட, ஈராக்கையும் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கட்டளை நாடுகள் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. இந்த முடிவிற்கு அன்றைய தினம் உருவாக்கப்பட்ட லீக் ஆஃப் நேஷன் நாடுகளின் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்தது.
முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு வெர்செய்ல்ஸ் உடன்படிக்கைபடி நேசநாடுகள் பல நாடுகளை பங்கு போட்டுக் கொண்டன. குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்ட நாடுகள் தவிர, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் கேமரூன், தாங்கா நிகா, பிரிட்டனுக்கும், தெற்கு கேமருன் கிழக்கு போகோலேண்ட் பிரான்சுக்கும், குவாந்தா பெல்ஜியத்திற்கும், தென்மேற்கு ஆப்பிரிக்காவை தென்னாப்பிரிக்காவும், மேற்கு ஸமோவா தீவை நியூசிலாந்தும், நவுரு தீவு ஆஸ்திரேலியாவும், நியூ கயானாவை ஆஸ்திரேலியாவும், மத்திய ரேகை வடக்கிலுள்ள தீவுகளை ஜப்பானும் பிடித்துக் கொண்டன.
1920 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி சான்றிமோ என்ற நகரத்தில் கூடிய சமாதான மாநாட்டில் சர்வதேச சங்கத்தின் மேற்படி 22 ஆவது சரத்தின் அடிப்படையில் பாலஸ்தீன நிர்வாகம் பிரிட்டன்வசம் ஒப்படைக்கப்பட்டதாக தீர்மானிக்கப்பட்டது. இதனை 24.7.1922 அன்று சர்வதேச சங்கம் அதாவது லீக் ஆஃப் நேஷன் உறுதி செய்தது. இந்த அதிகார பத்திரத்தில் 28 முக்கியமான ஷரத்துக்கள் இருக்கிறது. அவற்றில் உள்ள அம்சங்கள் பிரிட்டனின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை அமைப்பதற்கு ஏற்ற வகையில் கட்டளை அரசின் அரசியல் நிர்வாக, பொருளாதார நிலைமைகள் அமைக்கப்பட வேண்டும். யூதர்களின் இருப்பிடம் சம்பந்தமான விஷயங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறவும், அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவும் சியோனிச அமைப்பு யூதர்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் அமைப்பு என்று அங்கீகரிக்கப்படும். யூத நாட்டை உருவாக்குவதற்கு அனைத்து யூதர்களின் ஒப்புதலையும் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்.
யூதர்கள் குடியேறுவதற்கான வசதிகளை செய்து கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் யூதர்கள் ஒன்று சேர்ந்து வசிப்பதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பாலஸ்தீனத்திலேயே நிரந்தரமாக வசிக்க விரும்புகிற யூதர்களுக்கு பாலஸ்தீனத்து குடியுரிமை பெற வசதிகள் செய்துதர வேண்டும். கம்பெனிகளை, தொழிற்சாலைகளை, நிறுவனங்களை, ஆரம்பிப் பதற்கு தேசத்தின் இயற்கை பொருள்களை பயன்படுத்திக் கொள்வதற்கும், சியோனிச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பாலஸ்தீனத்தின் நிர்வாகத்தை பிரிட்டன் ஏற்றுக்கொள்கிற பொழுது யூதர்களுக்கு ஏன் இவ்வளவு விசேஷமான சலுகைகள் காட்டப்பட வேண்டும் என்று கேட்கக்கூடும்.
உலக யுத்தம் முடிந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் பிரிட்டனை கதிகலங்க வைத்தது. குறிப்பாக உலக யுத்தம் முடிவில் சோவியத் புரட்சி, லெனின் தலைமையில் வெற்றி பெற்று உலகில் போராடக்கூடிய மக்களின் எழுச்சிகளுக்கு உந்துதலாக அமைந்தது. யூதர்களுக்கான ஒரு தேசத்தை அமைப்பதற்கு பிரிட்டிஷாருக்கு மூன்று காரணங்கள் அடிப்படையாக இருந்தது.
ஒன்று, ரஷ்ய புரட்சியில் யூதர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. லெனின், ரஷ்யாவிலிருந்த கணிசமான யூதர்களை தொழிலாளி வர்க்கத்துடன் ஒன்றுபடுத்தி புரட்சியில் இணைப்பதில் மிக கவனமாக செயல்பட்டார். எனவே யூதர்கள் பொது உடமைக்கு ஆதரவாக சென்று விட்டால் அது மேற்காசிய நாடுகள் முழுவதும் பரவும் என்று பிரிட்டன் பீதியடைந்தது.
இரண்டாவதாக சூயஸ் கால்வாய் பொருளாதார வழிதடத்தின் அடிப்படையாக இருந்தது. அவற்றை பாதுகாப்பதற்கு தனக்கு சக்தி வாய்ந்த அதே நேரத்தில் நம்பிக்கையான ஒரு நாடு தேவைப்பட்டது. அது சியோனிச தேசமாகத் தான் இருக்கும் என்று பிரிட்டன் அரசு முடிவு செய்தது.
மூன்றாவதாக மேற்காசிய எண்ணெய் வளம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதற்கும் சியோனிச நாடு அவசியம் என்று சிந்தித்தனர். எனவே, யூதர்களுக்கான நாட்டை உருவாக்குவதில் தீவிரம் காட்டினார்கள்.
இதன் தொடர்ச்சியாக யூத செயலாண்மை அமைப்பு உருவாக்கப் பட்டது. 1920 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் குடியேற்ற அவசரச் சட்டத்தை பிறப்பித்து யூதர்களை பாலஸ்தீன பகுதியில் குடியேறுவதற்கான முழுமையான உதவிகளை செய்தார்கள்.
மூன்று வகை ஆக்கிரமிப்புகள்
மூன்றாவது வகையில், இந்த குடியேற்றங்களை நடத்துவது என்று சியோனிஸ்டுகளும், பிரிட்டிஷ் அரசும் முடிவு செய்வது. ஒன்று, பாலஸ்தீன பகுதிகளில் நிலங்களை வாங்குவது. இரண்டாவது கட்டாயமாக யூதர்களை குடியமர்த்துவது. மூன்றாவது, குடியேறிய பகுதிகளில் வன்முறை மூலமாக பாலஸ்தீனர்களை வெளியேற்றி தங்கள் பிரதேசத்தை விரிவுபடுத்திக் கொள்வது.
முதலாவதாக, நிலத்தை வாங்குவது மூலமாக 1926 ஆம் ஆண்டில் நாலு சதவீத நிலத்தையும் 1936 ஆம் ஆண்டில் ஐந்து சதவீத நிலத்தையும், 1945ஆம் ஆண்டில் 6 சதவீத நிலத்தையும் 1948ஆம் ஆண்டில் 8 புள்ளி 6 சதவீதம் நிலத்தையும் வாங்கி இருந்தார்கள். பாலஸ்தீனத்தில் வளமான பகுதிகளான விவசாயம் செய்யக்கூடிய பகுதி மற்றும் தோட்டங்கள் அமைக்கக்கூடிய பகுதிகளாகப் பார்த்து யூதர்கள் வாங்கி குவித்தார்கள். 1947ஆம் ஆண்டில் 4,31,500 ஏக்கர் நிலம் யூதர்கள் கைவசம் இருந்தது.
இரண்டாவதாக, குடியேற்றம் நடத்துவது என்று கட்டாயக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள். 1882 முதல் 1903 ஆம் ஆண்டு வரை பாலஸ்தீன பகுதியில் இருந்த யூத இன மக்களின் எண்ணிக்கை 24 ஆயிரம் மட்டுமே. கட்டாயக் குடியேற்றத்தின் மூலமாக 1904-1914 ஆம் ஆண்டுகளில் நாற்பதாயிரமாகவும், 1919-1923இல் 35,000 1924-28 ஆம் ஆண்டுகளில் 67,000, 1928-1939ஆம் ஆண்டுகளில் 2,50,000, 1940-1945 ஆம் ஆண்டுகளில் 6 லட்சம் யூதக்குடியேற்றங்கள் நடைபெற்றன.
ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்த குடியேற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இங்கு மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வை குறிப்பிட வேண்டும். ஹிட்லர், ஜெர்மனியில் மிகக் கொடூரமான முறையில் யூதர்களை வேட்டையாடினார். விஷவாயு செலுத்தியும், தெருக்களில் சுட்டுத் தள்ளியும் யூதர்கள் கொல்லப்பட்டனர். மேலும், யூதர்கள் பலரை கொடுஞ்சிறைக்கு அனுப்பி வைத்தனர். யூதர்களை ஒட்டுமொத்தமாக அழித்து விட வேண்டும் என்ற கொடூர நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.
அப்பொழுது யூத நாடு உருவாக வேண்டும் என்று களத்தில் இருந்த சியோனிஸ்டுகள் யாரும் இதை கண்டிக்கவில்லை. இதற்கு மாறாக. பாதிக்கக்கூடிய யூத மக்கள் தாங்கள் உருவாக்க உள்ள யூத நாட்டுக்கு வர வேண்டும் என்று விரும்பியதால் அவற்றுக்கு எதிராக அணி திரளவில்லை.
மூன்றாவதாக மிகப் பெரும் வன்முறைகளை நடத்தினார்கள். 1920 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் ஐந்து பேர் மரணம் அடைந்தார்கள். 1921 ஆம் ஆண்டு ஜாபா நகரத்தில் ஏற்பட்ட கலவரத்திலும், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டிலும் 95 பேர் கொல்லப்பட்டார்கள். 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். 1925 ஆம் ஆண்டு மிகப்பெரும் கலவரம், வன்முறைகள் நடைபெற்றன. 1929 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பயங்கர கலவரத்தில் நூற்றுக்கணக்கான அரேபியர்களும் யூதர்களும் இறந்தார்கள்.
எகிப்தில் இருந்து ராணுவத்தை வரவழைத்து பிரிட்டிஷ் அரசு, கலவரத்தை அடக்கியது. 1933 ஆம் ஆண்டு கடைசியில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து பெரும் கலகம் உருவானது. இதை அரேபியர்கள் நடத்தினார்கள். இக்காலத்தில் யூதர்கள் இஸ்ரேலில் குடியிருப்பது மிகப்பெரும் அளவில் நடந்ததனால் அச்சப்பட்ட அரேபியர்கள் இந்த கலவரத்தை தொடங்கினார்கள். கலவரங்கள் மற்றும் வன்முறை மூலமாக சியோனிஸ்ட்கள் தங்களுடைய பலத்தை அதிகப்படுத்தி கொண்டார்கள்.
இதே காலத்தில் சிரியாவிலும் லெபனானிலும் பிரான்சுக்கு எதிராக வலுவான போராட்டம் நடந்தது. ஒரு கட்டத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் பிரான்ஸ் நிர்வாகம் மேற்கண்ட இரு நாடுகளுக்கும் சுதந்திரம் அளிப்பதாக ஒப்புக்கொண்டது. 29.3.1937இல் சிரியா, லெபனான் பிரதேசங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 1939 ஆம் ஆண்டில், சிரியாவில் இருந்து பிரெஞ்சு நிர்வாகம் வெளியேறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக