அ.பாக்கியம்
என் தாத்தாவின் தாத்தா பட்ட கடன்கள்
என் தந்தையின் தந்தையால் செலுத்த முடியவில்லை,
என் மகனின் மகனும்
வட்டியைக் கூட திருப்பிக் கொடுக்க முடியாது.
(திபெத்திய நாட்டுப்புறபாடல்)
திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தின் பெயர் காங்சாக் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் 200க்கும் மேற்பட்ட வரிவிதிப்புகள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. பண்ணைஅடிமைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் அவர்கள் உழைக்க வேண்டும். இந்த நிலத்திற்கான வாடகை,வரிகளை நிலப்பிரபுகளுக்கு செலுத்த வேண்டும். வரிகளை பொருட்களாக, கால்நடைகளாக, பணமாக செலுத்தலாம். இந்த வகையில் இவர்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள்தான் மேற்கண்ட 200க்கும் மேற்பட்ட வரிகள் ஆகும். இதற்கு மேல் வாரத்திற்கு மூன்று நாட்கள் அல்லது நிலப்பிரபு, மதத்தலைவர்கள் கட்டளையிடுகிற பொழுது அவர்களுக்காக இலவச உழைப்பை கட்டாயம் செய்ய வேண்டும். ஆவணங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பண்ணை அடிமையும் தன்னுடைய உழைப்பில் 50 சதவீதத்திற்கு மேல் நிலப்பிரபுக்காக இலவச உழைப்பை செய்தார்கள் என்றும், சில காலங்களில் இந்த இலவச உழைப்பு அதிகபட்சமாக 80சதவீதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றால் இதன் கொடுமைகளை நாம் வேறு எங்கும் கண்டிருக்க முடியாது. அடிமைகளை விட கொடுமையான முறையில்பண்ணைஅடிமைகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

உள்வரி-வெளிவரி-பிறப்புவரி
உலா பண்ணை அடிமைகள் என்ற சுரண்டல் முறைகளை கடைபிடித்து உள்ளார்கள்.இந்த முறைகளில் கரும்புச்சாறை பிழிந்து எடுப்பதை போல் இவர்களை பிழிந்து எடுத்துள்ளனர். இதன்படி ஒரு பண்ணை அடிமை தனது பண்ணையாருக்கு வரி கொடுக்க வேண்டும், இலவச உழைப்பையும் செய்ய வேண்டும். பிரபுக்கள் தங்கள் விருப்பப்படி இவர்கள் மீது இலவச உழைப்பையும் வரி சுமைகளையும் போடலாம். இதன் மூலம் வருடத்திற்கு மூன்று இரண்டு பங்கு, சில நேரங்களில் நான்கில் மூன்று பங்கு நேரத்தை இந்த இலவச உழைப்பு உறிஞ்சிவிடும். இதற்கு உள்வரி என்று பெயர். இதற்கான விவரங்களை வெளிப்படையாக தெரிவிப்பது இல்லை.
இதைத் தவிர திபெத்திய உள்ளூர் அரசாங்கத்திற்கு தனியாக வரிகளை செலுத்த வேண்டும். உள்ளூர் அரசாங்கம் உருவாக்கியுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இலவச உழைப்பை இந்த உலா பண்ணையடிமைகள் வழங்க வேண்டும். இவர்களை வேலை வாங்குவதற்காக உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து டோக்கன் வாங்கி இருக்க கூடிய அதிகாரிகள், துறவிகள், வணிகர்கள் இந்த அடிமைகளை அழைத்துச் சென்று வேலை வாங்குவார்கள். உலாபண்ணை அடிமைகள் மட்டுமல்ல பல நேரங்களில் இவர்களின் கால்நடைகளையும் எடுத்துச் சென்று வேலை செய்ய வேண்டும். உள்ளூர் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிற பார்லி, வெண்ணெய், மெத்தைகள் போன்ற பொருட்களையும், வெள்ளியிலான பணங்களையும் செலுத்த வேண்டும். இதற்கு வெளிவரி என்று பெயரிட்டு இருந்தார்கள்.
வெவ்வேறு அடிமை உடைமையாளர்களிடம் இருக்கக்கூடிய பண்ணை அடிமைகள்ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் இருவரும் தங்கள் பண்ணையாருக்கு மீட்பு கட்டணங்களை செலுத்த வேண்டும். அடிமைகளுக்கு குழந்தை பிறந்தால் இவர்களுக்கு பிறப்புவரி செலுத்த வேண்டும். குழந்தை பெற்றெடுத்த பெற்றோர் தங்களின் அடிமை எஜமானிடம் அவற்றை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் உரிமையாளருக்கு வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருப்பார்கள் என்று அர்த்தமாகும். அடிமைகள் வேறு இடங்களுக்குச் சென்று வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்கள் வரி செலுத்த வேண்டும்.
ஒரு இடத்திலிருந்து வேறு வழியில்லாமல் மற்றொரு அடிமை உடமையாளரிடமோ சென்றால் வரி செலுத்தியதற்கான ரசீதை காட்ட வேண்டும். அவ்வாறு வரி செலுத்திய ரசீது இல்லை என்றால் அவர்கள் தப்பிஓடியவராக கருதப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். “திபெத்தில் ஒரு எஜமானர் இல்லாமல் நீங்கள் வாழ முடியாது. உங்களுக்கு சட்டபூர்வ உரிமையாளர் இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் உங்களை ஒரு சட்டவிரோதியாக கைது செய்யலாம் என்ற நிலைமை தான் அங்கு இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த வரிகள் தான் உச்சம் என்று நினைத்துவிடாதீர்கள். இதற்கு மேல் மனிதனை சுரண்ட முடியாது என்ற அளவிற்கு மடாலயம் இருந்துள்ளது. லாசாவிலிருந்து மேற்கே சில மைல்கள் தொலைவில் ஷிகாட்ஸே செல்லும் நெடுஞ்சாலையில் டிரெபங் (ஜைபங்) மடம்இருந்தது . இது திபெத்தின் மிகப்பெரிய மடாலயம். மிகப்பெரிய அடிமை உரிமையாளராகஇருந்தது.டிரெபங் சுமார் 25,000 அடிமை மக்கள்தொகை கொண்ட 185 இடங்களில்நிலங்களும், 16,000 கால்நடைமேய்ப்பர்களைக் கொண்ட 300 மேய்ச்சல் நிலங்களையும் வைத்திருந்தது.திபெத்தில் நில பிரபுத்துவ அரசு இருந்தது. டிரெபங் ஒரு நிலப்பிரபுத்துவ அரசுக்குள் ஒரு நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தது.

“பெரிய மூன்று மடங்கள்” – டிரெபங், செரா மற்றும் காண்டன் – பல நூற்றாண்டுகளாக திபெத்தின் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்திய பிற்போக்குத்தனமான அரசியல் இயந்திரத்தின் முதுகெலும்பாக இருந்தன. மிகப்பெரிய மடாலயமான டிரெபங், திபெத்தின் அரசாங்கத்தில் பல உயர் மதகுரு அதிகாரிகளை நியமிப்பதில் சிறப்பு சலுகைகளைப் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் நடைபெறும் பெரிய பிரார்த்தனை விழாவின் மூன்று வாரங்களுக்கு, டிரெபங்கின் மடத்தைச் சேர்ந்த”இரும்புப் பட்டை லாமாக்கள்” லாசா நகராட்சியின் முழு நிர்வாகத்தையும் எடுத்துக் கொள்வார்கள். விருப்பப்படி வரிகளையும், அபராதங்களையும் விதித்து, இதன் மூலம் தங்களையும் மடத்தையும் வளப்படுத்திக் கொண்டனர்.
டிரெபங் மடாலயத்தின் அரசியல் அதிகாரத்திற்கு பயந்து, பலசீனப் பேரரசர்கள், இம்மடத்தின் துறவிகள் 7,700 க்கு மேல் இருக்ககூடாது என்று கட்டுப்படுத்தினர். ஆனால் சில சமயங்களில் இவை ஒன்பது அல்லது பத்தாயிரமாக எண்ணிக்கை வளர்ந்தன. மத்திய மடாலயத்தைத் தவிர, டிரெபங் திபெத்திய பகுதிகளில் எழுநூறுக்கும் மேற்பட்ட துணை மடங்கள் இருந்தன.
மடத்தின் நிலத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டாய உழைப்பு, தானியக் கொடுப்புகளை தவிர ,எண்ணற்ற வகையான வரிகள் போடப்பட்டது. நாய் வரி, பூனை வரி, கோழி வரி, கழுதை வரி, ஒரு விலங்கு அணியும் மணிக்கான வரி, ஒரு பூச்செடியை வைத்திருப்பதற்கான வரி, தேர்தல் வரி, பிறப்பு வரி, இறந்தவரின் காதணிகள் மற்றும் ஆபரணங்கள் டிரெபங் மடத்திற்கு கொடுப்பதற்கான சிறப்பு வரி என பட்டியல் நீண்டது. ட்ரெபங்கின் மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு வட்டியிலிருந்து வந்தது. கடன்களுக்கான வட்டி இருபது சதவிகிதமாக இருக்க வேண்டும், ஆனால் உண்மையில் பல நிபந்தனைகள் மூலம் மிக அதிகமாக சென்றது.
ஒரு பண்ணை அடிமையை ரத்தம் சொட்ட சொட்ட சுரண்டுவது என்று சொன்னால் அதற்கு தலாய் லாமாவின் அடிமை ராஜ்ஜியம் உதாரணமாக அமைந்து விடும்.
பெயரற்ற வாழ்வும் மதிப்பற்ற உயிரும்
திபெத்தியஅடிமைகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பெயர்கள்வைக்ககூடாது. அடிமை உடைமையாளரின் பெயரை சொல்லியும் உடலின் சில அடையாளங்களை வைத்துமே அழைப்பார்கள். பெயர் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் சட்டம்.சீனப் புரட்சிக்குப் பிறகு 1959 ஆம் ஆண்டு காலகட்டத்தில்தான், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் வைக்க வேண்டும் என்ற மாசேதுங்கின் உத்தரவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
பண்ணை அடிமைகளுக்கான உயிர் மதிப்பை உள்ளுர் அரசாங்கம் நிச்சயித்து இருந்தது. மக்கள் வெவ்வேறு பிரிவுகளாக இருப்பதால் ஒரு உயிரின் மதிப்பு அதற்கு ஏற்ப மாறுபடுகிறது என்று விதிகளுக்கான காரணங்களை கற்பித்தார்கள். உயர் குடியைச் சேர்ந்தவர்கள் அல்லது வாழும் புத்தர் போன்ற பட்டங்களை பெற்றவர்கள், பதவியில் உள்ளவர்களின் உயிரின் மதிப்பு என்பது இறந்த உடலின் அதே அளவு தங்கத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது.
பெண்கள், கசாப்பு, கடைக்காரர்கள், வேட்டைக்காரர்கள், கைவினைஞர்கள் போன்ற கீழ் வகுப்பைச் சேர்ந்த மக்களின் உயிர் ஒரு வைக்கோல் கயிற்றின் அளவுதான் என்று மதிப்பிடப்படுகிறது. அடிமைகளுக்கு உயிரின் மதிப்பே கிடையாது என்பது நாம் அறிந்த விஷயம். பெரும்பாலான பண்ணை அடிமைகளும் இவ்வாறு தான் நடத்தப்பட்டார்கள். இதுபோன்ற சமத்துவமின்மை அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் கடைபிடிக்கப்பட்டது. இவை தண்டனைகளை அளவிடுவதற்கும் ஒரு அளவுகோலாக இருந்தது.
அடிமைகள் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது குறுகிய காலங்கள் தனது எஜமானை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் எஜமானரின் அனுமதியை பெற வேண்டும். தன்னிடம் இருக்கக்கூடிய அடிமையை மற்றொரு அடிமை உடமையாளருக்கு எஜமானர் மாற்றலாம், அவ்வாறு மாற்றிய பொழுது கணவன் மனைவியை பிரிந்து விட வேண்டும். இதனால் திருமண முறிவுகள் இயல்பாக இருந்தது. பல நேரங்களில் நில உரிமைகள் கொண்ட பண்ணை அடிமைகளை தண்டனை என்ற பெயரில் அடிமைகளாக மாற்றப்பட்டனர்.
இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் அது அமலாகவில்லை. சில நேரங்களில் சிறப்பான அடிமைகளுக்கு மேற்பார்வையாளராக அந்தஸ்தை அடிமை உடமையாளர் வழங்குவார். ஆனால் சில அடிமைகள் கால்நடைகளை வளர்ப்பது மூலமாகவோ, பிச்சை எடுப்பதன் மூலமாகவோ செழிப்படைந்தால் அவற்றை எஜமானர் கைப்பற்றிக் கொள்வார். ஒரு அடிமை செழிப்பாக மாறுவது அடிமை சமுதாயத்தில் பாதுகாப்பானதாக இருக்கவில்லை.
பண்ணை அடிமைகள் தங்கள் தனிப்பட்ட சொத்தாக நிலபிரபுக்களிடம் இருந்ததால், நிலபிரபுக்கள் அடிமைகளை வர்த்தகம் செய்து மாற்றலாம், பரிசுகளாக வழங்கலாம், கடனுக்காக அடமானம் வைத்து பரிமாறிக் கொள்ளலாம். வரலாற்று பதிவுகளின்படி, 1943 ஆம்ஆண்டில், பிரபுசெங்மோயிம் நோர்பு வாங்க்யாய், ஜிகுங் பகுதியில் உள்ள கார்ஷோல்கம்சாவில் ஒரு துறவி அதிகாரிக்கு ஒரு பண்ணை அடிமைக்கு 60 தைல் திபெத்திய வெள்ளி (சுமார் நான்கு வெள்ளி டாலர்கள்) விலையில் 100 பண்ணை அடிமைகளை விற்றார். மேலும், 3,000 பின் திபெத்திய வெள்ளி (சுமார் 10,000 வெள்ளி டாலர்கள்) கடனுக்காக 400 பண்ணை அடிமைகளை குண்டலிங் மடாலயத்திற்கு அடமானமாக அனுப்பினார்.
கொல்லாமையும் கொள்கையும் கொலைபாதக செயலும்
வீட்டில் இருந்த ஒவ்வொரு மேனர் வீடுகளும் மடாலயங்களும் தனக்கென தனித்தனியாக சிறைச்சாலைகளையும், தண்டனை கொடுக்கக் கூடிய இடங்களையும், தண்டனை கொடுக்கக் கூடிய கருவிகளையும் வைத்திருந்தார்கள். அந்த சிறைச்சாலை, வெளிச்சமும் காற்றும் இல்லாத கழிப்பறை வசதிகள் இல்லாத ஒரு பாதாள அறையில் கரடு முரடான கற்களால் அமைக்கப்பட்ட சிறைச்சாலை ஆகும்.
எஜமானருக்கு கீழ்ப்படியாத பண்ணையடிமைகள் அல்லது ஓடிப்போன அடிமையின் கைகள், கால்களை வெட்டுவது, கண்களை பிடுங்குவது அடிமை உடமையாளரின் உரிமையாக இருந்தது. இந்த தண்டனைகளை தொடை நாண் கட்டுதல், குதிகால் வெட்டுதல் அல்லது ஒரு அடிமையை ஊனமாக்குதல் போன்ற விதிகளின்படி அமலாக்கினார்கள்.
ஒரு அடிமை தனது எஜமானனை பற்றி உள்ளூர் அரசாங்கத்திடம் முறையிடக்கூடாது. அவ்வாறு முறையிடுவது தண்டனைக்குரிய குற்றம். அடிமைகள் மற்ற அடிமைகளிடம் தங்கள் குறைகளை வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது. நிலப்பிரபுத்துவமேனர்களில் அடிமைகள் தங்கள் குறைகளை எழுப்புவதும், மற்றவர்களை இழிவு படுத்தக்கூடிய முறையில் நடந்து கொள்பவர்களும் கைது செய்யப்பட்டு சவுக்கடி கொடுக்கப்பட்டது. ஒரு எஜமானரின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் எவரும் கைது செய்யப்பட வேண்டும். முக்கியமான விஷயங்களை உளவு பார்த்தால் கைது செய்யப்பட வேண்டும். ஒரு அதிகாரியை புண்படுத்தும் ஒரு சாதாரண மனிதர் கைது செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டது.
ஒரு எஜமானனை காயப்படுத்திய ஒரு வேலைக்காரன் கைகள் அல்லது கால்களை வெட்ட வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டுஇருந்தது. அதே நேரத்தில் ஒரு வேலைக்காரனை காயப்படுத்தி எஜமானன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் உதவி செய்தால் போதும் என்ற விதியும் இருந்தது. வாழும் புத்தரை அதாவது உயர் அடுக்கு நபரை காயப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அவரது கண்கள் பிடுங்கப்பட வேண்டும். கால்கள் கைகள் வெட்டப்பட வேண்டும் அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். கை கால்களை வெட்டுவது, நாக்குகளை அறுப்பது, கண்களை பிடுங்குவது, உடம்பு தோலை உரிப்பது, தண்ணீரில் தள்ளி விடுவது, மலைகளிலிருந்து கீழே தள்ளுவது போன்ற தண்டனைகளை அமல்படுத்தினார்கள்.
1934ஆம் ஆண்டில் திபெத்தின் உள்ளூர் அரசாங்கத்தில் உயர்மட்ட அதிகாரியாக ட்சேபோன் லுங்ஷார் அதிகாரியாக செயல்பட்டார். இவர் 1920 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் கல்வி கற்றவர். பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால் அவற்றை நடைபெறவிடாமல் நிலப்பிரபுக்களும், மதகுருமார்களும் தடுத்து அவரை தோற்கடித்தார்கள். அரசியல் போராட்டக் களத்தில் தோற்கடிக்கப்பட்ட அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. அவரது கண்களை குருடாக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட விதம் மிகக் கொடூரமானது.

கைதியின் முகத்தில் தோல் போன்ற இறுக்கமான துணிகளை கட்டிவிட்டு கண்கள் மட்டும் தெரியக்கூடிய வகையில் பின்புறத்தில் இருந்து தாக்கி இமைகள் வெளியே வரும் வரை தலையில் அடிப்பது நடந்தது. அவ்வாறு இருந்தும் ஒரு கண்கள் மட்டுமே வெளியே வந்தது. மற்றொரு கண்ணையும் வெளியே கொண்டு வர ராக்யபா என்ற தீண்டத்தகாதவர்களை அழைத்து கண்ணை தோண்டி எடுத்தார்கள். பிறகு கண்களின் குழிகளில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டது. இது கொடுமையான முறையில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பு போதைப் பொருட்களைக் கொண்டு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக தண்டனை பெறுபவருக்கு அவை முழுமையான பலன் அளிக்காததால் தண்டனை மிகக் கொடூரமான முறையில் இருந்தது என்று வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க புலனாய்வு துறையுடன் தொடர்பு
1949 ஆம் ஆண்டு திபெத்திய 14வது தலாய்லாமா அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார். அவர்கள் திபெத்திற்கு ரகசியமாக வந்து சென்றார்கள். டர்க்லஸ் மெக்யர்ன் அவ்வாறு வந்த பொழுது அடையாளம் தெரியாத காரணத்தினால் திபெத்திய எல்லை காவலர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த ஆறு காவலர்களுக்கும் உறுப்புகளை சிதைக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த ஆறு பேரில் தலைமை காவலருக்கு மூக்கும் இரண்டு காதுகளும் வெட்டப்பட வேண்டும். முதலில் சுட்ட நபருக்கு இரண்டு காதுகளை அறுக்க வேண்டும். மூன்றாவது நபருக்கு ஒரு காதை அறுக்க வேண்டும். மற்ற மூன்று பேருக்கும் தலா 50 கசையடிகள் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. மற்றொரு சி ஐ ஏ முகவர் பிராங்க் பேசக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தண்டனைகள் கசையடிகளாக குறைக்கப்பட்டது.
1942 ஆம் ஆண்டில் தலாய்லாமாவின் நடனக் குழுவில் நடன கலைஞராக இருந்த ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாமல் போனதால், அவருடைய 13 வது வயதிலேயே மிகக் கடுமையான முறையில் உடம்பு தோல்கள் உறிந்து போகிற அளவிற்கு சவுக்கடி கொடுக்கப்பட்டதாக பதிவு செய்துள்ளார். 1950 ஆம் ஆண்டுகளில் திபெத் தன்னாட்சி பகுதி ஆவணக்காப்பகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தலாய்லாமாவின் பிறந்தநாளை கொண்டாட அனைத்து மக்களும் தலாய்லாமாவின் புகழ் பாடுகின்ற வரியை உச்சரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த சடங்குகளை நடத்துவதற்காக மனிதனின் தோல்,இரண்டு மண்டை ஓடுகள், சில கால்நடைகளின் ரத்தம், இன்னும் பல உறுப்புகளை கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட சம்பவம் இந்த கடிதத்தின் மூலம் தெரிய வந்தது.

1959 ஆம் ஆண்டு ஜனநாயக சீர்திருத்தத்திற்கு முன்பு நீண்ட காலமாக லாமாக்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அடிமைத்தன சமூகமாக இருந்தது. இது இடைக்கால ஐரோப்பிய அடிமைத்தனத்தை விட இருண்டதாகவும் கொடூரமானதாகவும் இருந்தது என்று பல வரலாற்று தரவுகள் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
திபெத் என்ற பகுதி சீன புரட்சிக்கு முன்பு எந்த அளவு பின்தங்கி இருந்தது என்பது மட்டுமல்ல மிகக் கொடூரமான பண்ணை அடிமை முறைகளை அனுபவித்தது என்பதையும் அறிய முடியும். திபெத்தியபௌத்தம் நிலப்பிரபுத்துவ ஆட்சியின் தலைமை பாத்திரம் வகித்து மக்களை சுரண்டி உள்ளது. மக்களை மதத்தின் பெயரால் மயக்கி வைத்திருப்பது மட்டுமல்ல, மாற்றங்கள் விரும்புவோரை அடக்கி வைப்பதையும் செய்துள்ளனர். மாற்றங்களை எதிர்பார்த்த அவர்களுக்கு சீனப் புரட்சி ஒரு விடியலை கொடுத்தது.
1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சி நடந்தாலும் 1959 ஆம் ஆண்டு தான் திபெத்தில் சீர்திருத்தத்தை ஆரம்பித்தார்கள். இடைப்பட்ட காலத்தில் சீனா படையெடுத்தது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையா? சீனா திபெத்தில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம்.
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக