இந்துத்துவா-
சியோனிஸ்டுகள் இணையும் புள்ளி
இந்தியாவில் பாஜகவின் கொள்கைகளை
விமர்சிப்பவர்கள் ஆர்எஸ்எஸ் இன் நவபாசிச கூறுகளை அம்பலப்படுத்த கூடியவர்களை இந்து
விரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல, வேட்டையாடுவதும் நடக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெய்வங்களை கையில் எடுத்துக் கொண்டு அந்தந்த
ஊரில் இருக்கக்கூடிய மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை இந்து விரோதிகள் என்று
சித்தரித்து, தங்களது இந்துத்துவா கொள்கைகளை நிலை நிறுத்திக்
கொள்கிறார்கள். இதேபோன்றுதான் இஸ்ரேலின் சியோனிஸ்டுகள்
தங்களது சியோனிச கொள்கைகளை பாதுகாக்க அவர்களை
விமர்சிப்பவர்களை யூதவிரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.
மிகக் கொடுமையான விஷயம் ஒன்று
அரங்கேறி இருந்தது. மே மாதம் 2024 இல். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு
மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டிற்கு கைது
வாரண்ட்களை பிறப்பித்தது. அவ்வாறு பிறப்பித்த நீதிபதியை முன்னாள் சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்த ஒருவர் நவீன காலத்தில்
மிகப்பெரிய யூத எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்று அந்த நீதிபதியை வசைபாடினார். உலகம் முழுவதும் பொங்கி எழும் யூதவிரோத நெருப்பில் இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றுகிறார் என்றும் யூதர்களுக்கு எதிரான நாஜிகளின் இனச் சட்டங்களை அங்கீகரித்த
ஜெர்மன் நீதிபதிகளுடன் அவரை ஒப்பிட்டு அவதூறு செய்தார். இஸ்ரேலின் பிரதமர் நெதயான்கு
இஸ்ரேலிய கொள்கைகளை எந்த மேற்கத்திய தலைவர் விமர்சித்தாலும் அவர்களை
யூத விரோதிகள் என்றும் இழிவானவர்கள் என்றும் சாடினார்.
காசா மக்களை இனப்படுகொலை செய்த
பொழுது நெதயான்கு இனப்படுகொலையாளர் என்று விமர்சித்தவர்களுக்கு நாங்கள் யூதர்களாக இருக்கிறோம் என்ற எளிய
உண்மையின் காரணமாக எங்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டு என்றுநெதயான்கு திசைதிருப்பினார். இஸ்ரேலுக்கு எதிரான ஒவ்வொரு விமர்சனமும் யூத எதிர்ப்பு அல்ல, நீங்கள் அதை யூத எதிர்ப்பு வெறுப்பு என்று சொல்லும் தருணம் விமர்சனத்தின்
நியாயத்தன்மைகளை நீக்கிவிட்டு மற்றவர்களை நசுக்குவதற்காக முயற்சிக்கிறீர்கள் என்று
இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் டாம் செகவ் குற்றம் சாட்டுகிறார். அது மட்டும் அல்ல நெதயான்கு நீண்ட காலமாக யூத
நெருக்கடிகளை தனது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தி வருகிறார் என்று
விமர்சிக்கிறார்.
புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ஜெர்மி
போவன் , பிரிட்டிஷ்
நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லார்ட் சம்பசன் கூறியதை விளக்கியுள்ளார்.
இஸ்ரேலிய அதிபர் நெதயான்கு மற்றும் அவரது அமைச்சரவை
பாலஸ்தீனத்தில் இருந்து அரபுமக்களை கொலை செய்வது மூலமாகவும்,
பட்டினி போடுவது மூலமாகவும் 100 சதவீதம் அப்புறப்படுத்துவது.
மேலும் ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியை இடித்து விட்டு
யூதர்களின் மூன்றாவது புனித கோவிலை கட்டுவது என்ற திட்டமும் வைத்திருக்கிறார்கள்
என கூறுகிறார். யூதர்களின் புனித கோவில் பொஆமு 10 மற்றும் 6ம் நூற்றாண்டு களுக்கு இடையில் சாலமன் கோயில் என்ற
பெயரில் இருந்ததாக எபிரேய மொழியிலான பைபிளில் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதற்கு
ஆதாரம் இல்லை. இரண்டாவதாக பொஆமு 516-ல்
கோயில் கட்டப்பட்டது. இது யூதர்களின் இரண்டாவது கோயில் என்று
அழைக்கப்படுகிறது. பின்னர் ஏரோது மன்னனால்
மேம்படுத்தப்பட்டது. பொஆ 70களில் போரினால்
இந்த கோயில் சிதளம் அடைந்தது. தற்போது அல் அக்சா என்ற மசூதி
இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலம். 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அவற்றை இடித்துவிட்டு மூன்றாவது யூத கோயிலை கட்ட
வேண்டும் என்ற திட்டம் தொடர்ந்து மேற்காசிய நாடுகளை பதட்டத்திலேயே வைத்துக் கொள்ள
வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மசூதி இடிப்பு இந்துத்துவா வாதிகளுக்கும் சியோனிஸ்டிகளுக்கும் ஒத்த நிலைப்பா டாக
இருக்கிறது.
ஐரோப்பிய உலகம்தான் ஹிட்லர் காலத்திலும், அதற்கு முன்பும்- பின்பும் யூதர்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தது.
எந்த விதத்திலும் பாலஸ்தீனர்களும்,
அரேபியர்களும் அதை செய்யவில்லை. ஆனால் இஸ்ரேலிய தேசம் அமைக்க
வேண்டும் என்ற கோரிக்கை வந்த பொழுது ஐரோப்பாவில் ஒரு அங்குல
இடத்தை கூட பரிந்துரைக்க மறுத்தது ஐரோப்பிய வலதுசாரி தலைமை.
மக்களின்
எதிர்ப்பும் மகுடங்களின் தள்ளாட்டமும்
ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும்
இஸ்ரேலை எதிர்த்து பிரம்மாண்டமான மக்கள் இயக்கங்கள் உருவாகி வருகிறது. நடந்து
கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் 18க்கு
மேற்பட்ட தலைநகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இத்தாலியில் நவபாசிச மெலோனிஅரசாங்கத்தின் இஸ்ரேல்
சார்பு நிலைப்பாட்டை எதிர்த்து மூன்று லட்சம் மக்கள் ஜூன் மாதம் ரோம் நகரில்
ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மெலோனி அரசு இஸ்ரேல் காசாவில் தன்னுடைய ராணுவ நடவடிக்கை நிறுத்தி பொதுமக்களை
பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனாலும் மக்கள் இந்த நடிப்பை
ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையான எதிர்ப்புக்கு வரவேண்டும்
என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசின் லண்டன் மாநகரில் பல
போராட்டங்களை காண முடிகிறது. பிரிட்டிஷ் அரசின் வெளியுறவு
அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காசாவின் மோதலில் அரசாங்கத்தின் அணுகுமுறையை கடுமையாக எதிர்த்து
வருகிறார்கள். சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் புறக்கணித்து வருவதை
அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், உலகளாவிய
விதிமுறைகளை இஸ்ரேல் குழி தோண்டி புதைத்து வருகிறது என்றும்
கூறுகிறார்கள். சின்னஞ்சிறிய நெதர்லாந்து நாட்டின் தலைநகரங்களில் மனித தலைகளால் மூடுகிற
அளவிற்கு மக்கள் திரண்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதை வாபஸ் வாங்க வேண்டும்
என்று போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில்
ஆட்டம் காண செய்துள்ளது
மே மாதம் 19 ஆம் தேதி மக்கள்
எழுச்சியின் காரணமாக பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய மூன்று நாடுகளும் இஸ்ரேலின் மிக மோசமான செயல்களை கண்டித்து ஒரு
கூட்டு அறிக்கையை வெளியிட்டார்கள். இஸ்ரேலின் இந்த
நடவடிக்கையை சகிக்க முடியாது என்று அவர்கள் விவரித்தார்கள்.
இது நீடித்தால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று வீராவேசத்துடன் மக்களுக்கு பயந்து அறிக்கை விட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத்
தலைவரும் காசாவில் இஸ்ரேல் செய்வது பேரழிவு என்றும் தங்கள் ஒப்பந்தத்தை ரத்துசெய்வது
பற்றி பரிசீலனை செய்து
வருவதாகவும் அறிக்கை விட்டார். ஒப்பந்தங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை
இஸ்ரேலின் ஆராய்ச்சி துறை, தொடர்பாகவும் கல்வித்துறை
தொடர்பாகவும் இருக்கக்கூடிய ஒப்பந்தங்கள் ரத்து செய்வோம் என்றார்கள். மக்களின்
எழுச்சியால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஸ்பெயின், அயர்லாந்து
பாலஸ்தீன அரசு அங்கீகரித்தன. ஏற்கனவே நார்வே பாலஸ்தீனத்தை அங்கீகரித்து உள்ளது. வேறு வழி இல்லாமல் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக்
மெர்ஸ் பொது தொலைக்காட்சியில் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் குறிக்கோள்
என்னவென்று எனக்குப் புரியவில்லை என்ளும் ஹமாஸ் பயங்கரவாதத்திற்கு
எதிரான போராட்டம் என்று இதை நியாயப்படுத்த முடியாது என அறிக்கை விட்டார்.
உள்நாட்டில் மக்களின் எழுச்சி அலைகளை அதிகரித்து வந்ததால் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மூன்று நாடுகளும் ஜூன் 10ம் தேதி இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர்கள் இடாமர் பென்-க்விர் மற்றும்
பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் பாலஸ்தீனுக்கு எதிரான வன்முறை, பாலஸ்தீன
உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல், குடியேறிகளின் வன்முறையை தூண்டுதல், யூத
குடியேற்றங்களை விரிவுபடுத்தல் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் செய்ததால் அவர்கள்
மீது தடை விதித்ததாக அறிவித்தன.
நிறைவாக.....
போரைப் போல் பெரிய லாபகரமான
தொழில் மற்றொன்று மில்லை. அதன் கிளர்ச்சிகளை பரப்பும் ஊடகங்களுக்கு அமைதி கவர்ச்சியாக தெரிவதில்லை. அமைதி என்று எழுந்து
நிற்கும் என்ற ஏக்கம் உலகத்தின் ஏக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.
போரின் லாபகரமான தொழிலுக்கு புனித
இடங்கள் எல்லாம் ரத்தக் களரியாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் சரி வேறு
சில இடங்களிலும் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜ்யத்தை துறந்து
காட்டுக்குச் சென்ற ராமனுக்கு இடம் வேண்டுமென்று ஒரு பெரும் போரையும், லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும்,
ரத்தங்களையும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெருசலேம்
என்றால் அமைதியான நகரம் என்று பொருள். இந்த நகரம் 1000
ஆண்டுகளாக அமைதியை கண்டதே இல்லை. 1096 ஆண்டு அப்போதைய போப் இரண்டாம் அர்பன் புனித போருக்கு அழைப்பு
விடுத்தார். போரில் என்ன புனிதம் இருக்கிறது என்று கேட்காதீர்கள். கிறிஸ்துவின் புனித நகரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அவற்றை மீட்க வேண்டும் என்று சிலுவைபடையினருக்கு அறைகூவல் விடுத்தார். ஜெருசலேமை நோக்கி குருசேடர்கள்(சிலுவைபடை) புறப்பட்டார்கள்.
ஜெருசலேமில் இருந்த யூதர்களையும், இஸ்லாமியர்களையும் ரத்த
வெள்ளத்தில் போப் அனுப்பி வைத்த குருசேடர்கள் (சிலுவைபடை)
மூழ்கடித்தார்கள். இங்கிருந்த யூதர்களையும்
முஸ்லிம்களையும் ஒழித்துக் கட்டினார்கள்.
ஜெருசலேமில் இருக்கும் மலையின் மீது
முஸ்லிம்களுக்கு எல் குட்ஸ் என்ற புனித இடம்,
யூதர்களுக்கு அவர்களின் அரசன் தாவீது காலத்திலிருந்து இந்தமலை தலைநகரம். கிறிஸ்தவர்களுக்கு இயேசுபிரான் சிலுவை
ஏறிய மலை இது. இவற்றை யாருக்கென்று பகிர்ந்து கொடுப்பது. பகிர்ந்து கொள்வதற்காக ஆயிரம் ஆண்டுகளாக எருசலேம் கண்ணீராலும்
இரத்தத்தாலும் மிதந்து கொண்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கான நவீனரக ஆயுதம் தாங்கிய
வீரர்களுக்கு மத்தியில் அமைதியை போதிக்க வந்தவர்கள் உயிரும் உடலும் அற்றவர்களாக சிறைபட்டுக் கிடக்கிறார்கள்.
மோதிக் கொண்டிருப்பவர்கள் யார்? ஒரே பகுதியை சேர்ந்த
மக்கள். யூதர்களின் புனித நூல் டோராவின் கதையும், பைபிளின்
கதையும், குர்ஆனின் கதையும் ஒன்றாகத்தான் பயணித்திருக்கிறது.
மூன்றும் மோசஸ் ஆபிரகாம் கதைகளை தான் சொல்கிறது. மோசஸ் மூசாவாகவும், டேவிட் தாவுத்தாகவும், சாலமன்
சுலைமானாகவும், ஐசக் இஷாகாகவும் ஜேக்கப் யாக்கூப்பாகவும் மாறி இருக்கிறார்கள்.
விரிந்து பறந்த பாலஸ்தீனப் பகுதியில் ஒரு மக்களிடம் இருந்து தோன்றிய இந்த மதங்கள்
நவீன உலகத்தில் நரவேட்டை ஆடக்கூடிய ஏகாதிபத்திய கொள்கைகளின் இரத்தம்
படிந்த கைக்ளில் சிக்கிகொண்டுள்ளது.
யூதர்கள் நாஜிகளால்
கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது உலகறிந்த வரலாறு. கொடுமைக்கு பலியான இனம் எழுந்து வலுவாக
நிற்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த எழுச்சி மீண்டும்
அப்படி ஒரு கொடுமையை எந்த இனத்திற்கும் ஏற்படக் கூடாது
என்பதற்கான எழுச்சியாக இருந்தால் அது மனித சமூகத்திற்கும் அவர்களது மதம் போதிக்கும்
சமாதானத்திற்கு உதவி செய்வதாக இருக்கும். இனப்பகையின்
நெருப்பில் வெந்துமடிந்த யூத மக்கள் மற்றொரு இனத்தை அதே
வடிவத்தில் அழித்தொழிப்பது எழுச்சியின் அடையாளமாகாது அழிவுக்கு போடக்கூடிய அடித்தள
மாகும்.
பாலஸ்தீன மண் என்றாவது ஒரு நாள்
மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும்.
அ. பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக