Pages

வியாழன், ஜூலை 10, 2025

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 4

 


வதை முகாமிலிருந்து மரண முகாமிற்கு

பாலஸ்தீனத்தின் காசாமீது இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு வருடம் எட்டு மாதங்கள் முடிந்து விட்டது. சுமார் 55,000பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சமன்படுத்தப்பட்டு விட்டது. மோதல் துவங்கி முதல் ஐந்து மாதத்தில் 12,300 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இது உலகில் எந்தப் போர்களிலும் குறுகிய காலத்தில் இவ்வளவு குழந்தைகள் சாகடிக்கப்பட்டது இல்லை. 2025 ஜனவரி மாதம் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14,500 மேலும் 17000 குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டார்கள். குறைவான மக்கள் தொகை இருந்தாலும் உலகிலேயே அதிக மாற்றுத்திறனாளிகள் உள்ள பகுதியாக தற்போது காசா பகுதி மாறியுள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டு இருந்தது. தரைவழி, வான்வழி, கடல்வழி அனைத்தும் அடைக்கப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலையாக காசாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் துவங்கிய யுத்தத்தின் மூலமாக காசா ஒரு மரண முகமாக மாறி உள்ளது.

இவ்வளவு சிறிய முற்றுகையிடப்பட்ட பகுதியில் இவ்வளவு நீண்ட காலமாக ( காசாவில்) சிக்கித் தவிக்கும் மக்களை நான் பார்த்ததில்லை. கண்முடித்தனமான குண்டு வெடிப்புகளும், அவர்களுக்கு மறுக்கப்படுகிற சுகாதாரமும், பத்திரிகைகளை நடத்த விடாமல் தடுக்கக்கூடிய முறைகளும் மிகக் கொடூரமானது என்று மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜான் எக்லான்ட் குறிப்பிட்டுள்ளார். காசாவின் உள்கட்டமைப்பு, சுகாதார அமைப்பு, நகராட்சி அமைப்புகள், கல்வி நிலைய வலை அமைப்புகள், மசூதிகள், தேவாலயங்கள், சுருக்கமாக மனித வாழ்க்கையை ஒழுங்கமைத்த ஒவ்வொரு கட்டமைப்பையும் அழிப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளது என்று அரசியல் ஆர்வலர், பத்திரிக்கையாளர் அபெத் அபு சாதே குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் ஓர் இயந்திரம் காசாவையும் அதன் மக்களையும் தூசியாக அரைத்து அழித்து வருகிறது. உலகம் பார்வையாளராகவே காட்சி தருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை நிலை

2025 ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பொழுது, ஹமாசை முற்றிலும் அகற்றுவதுடன் இணைத்து அறைகூவல் விடுத்தது. இதன் மூலம் இஸ்ரேல் அந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை ஆதரித்தது. ஜெர்மனியும், நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் இல்லாத இங்கிலாந்தும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்த பொழுது, அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறியதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான மிகப்பெரும் பொருளாதார தடைகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா பற்றிய எந்த செய்தியையும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடுகளில் ஒளிபரப்ப கூடாது என்று தடைவிதித்தும், மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளனாக சித்தரித்தார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று ஈரானின் ஆதரவுடன் ஹமாஸ் இஸ்ரேலை அழிக்கத் துடிப்பது போல் ரஷ்யா உக்ரைனை வரைபடத்தில் இருந்து அழிக்க விரும்புவதாக பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

ஐரோப்பிய தலைவர்கள் ஹிட்லரின் ஹாலோகாஸ்ட் கொடுமைகளை புறம் தள்ளிவிட்டு அரேபியர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் ஒரு வெறுப்புணர்வை உருவாக்கக்கூடிய பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஹிட்லரின் ஹாலோகாஸ்டின்போது ஐரோப்பிய நாடு முழுவதும் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். குறிப்பாக ஜெர்மனியில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உலகம் மறக்க முடியாது, ஆனால் இன்று அந்த யூத மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு சியோனிஸ்டுகள் நடத்தக்கூடிய புவிசார் அரசியலுக்கு ஜெர்மனி அப்பட்டமான ஆதரவை தெரிவித்து வருகிறது. ஆயுதங்களை வழங்கி வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கிறது என்று முன்னாள் ஜெர்மனியினுடைய சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் கருத்து இதை வெளிப்படுத்தியது.  சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா உட்பட இஸ்ரேல் மீது வழக்கு தொடுத்த பொழுது ஜெர்மனி இஸ்ரேலை ஆதரித்தது

எனவே ஐரோப்பா ஒன்றியநாடுகள் யூதர்களுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதலை நடத்தியவர்கள். தற்பொழுது பாலஸ்தீனர்களை அழிப்பதற்கு, தங்களால் அழிக்கப்பட்டயூதர்களை  உயிர்த்தெழ வைக்கிறார்கள். பாலஸ்தீனமும் தீவிரவாதிகளை உருவாக்குகிறது என்று உரக்க கத்துகிறார்கள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள். தீவிரவாதிகளை தாலிபான் முதல் காலிஸ்தான் வரை மூளை முடுக்கெல்லாம் உற்பத்திசெய்தவர்கள் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும். 1930 ஆம் ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் சியோனிஸ்டுகள் தீவிரவாதிகளாக அழைக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதற்கு எதிராக போராடிய யூதர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமரான  பெகின் 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தீவிரவாதி என்று அறிவித்தது. பாலஸ்தீனத்தில் இருந்து கொண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இஸ்ரேலில் ஆரம்பிக்கப்பட்ட படையின் கமாண்டராக போராடினார். 1946 ஆம் ஆண்டு ஜெருசலேமில் ஆங்கிலேய ராணுவ முகாமை அதன் பிரதான அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்தார். அவரை சிறை பிடிப்பதற்கு உதவினால் 50 ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது. அதே பெகின் பிரிட்டிஸ் அரசின் நண்பர் ஆனது மட்டுமல்ல, அமைதிக்கான நோபல் பரிசையும் மேற்கத்திய நாடுகள் அவருக்கு வழங்கியது. இப்போது பாலஸ்தீன இயக்கத்தை தீவிரவாதிகள் என்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எதிர்ப்பு அச்சை அழிப்பது

இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு அச்சை அழிப்பது முக்கிய குறிக்கோளாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் கொண்டுள்ளன. ராணுவ சக்தியாக விளங்கும் ஈரானை அழித்து விடுவதும், ஆசிய கண்டத்திலிருந்து பாலஸ்தீனம் என்ற கடைசி மனிதனையும் துடைத்தெறிந்து எறிவது என்றும் இஸ்ரேலின் மெதன்யாகுவும், அமெரிக்காவின் ட்ரம்பும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள். இதற்கு யூதமக்களை தன்பக்கம் நிறுத்துவதற்கான முயற்சிகளில் சியோனிஸ்டுகள் ஈடுபட்டிருக் கிறார்கள். இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்களில், இஸ்ரேல் ரத்த வெள்ளத்தில் காசா மக்களை மூழ்கடிக்கும் எந்த செய்தியும், படங்களும் வெளியிடுவது இல்லை. அதற்கு மாறாக இஸ்ரேலியர்களுக்கு ஹமாஸ் அமைப்பு செய்கிற அட்டூழியங்கள் என்ற பெயரில் படங்களையும் மற்ற கதைகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் இருக்கக்கூடிய யூதர்களுக்கு தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஆழமான உணர்வை உருவாக்குகிறது. இதனால் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டின் அந்தஸ்து அதிகரித்து வருவதையும் அதன் நடத்தை குறித்த விமர்சனங்களை தவிர்த்து பெருமை கொள்கின்றனர். இஸ்ரேலின் சியோனிஸ்டுகள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 5

  இந்துத்துவா - சியோனிஸ்டுகள் இணையும் புள்ளி இந்தியாவில் பாஜகவின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் ஆர்எஸ்எஸ் இன் நவபாசிச கூறுகளை அம்பலப்படுத்த க...