முதல் பிரிவினைக்கான ஆலோசனைகள் :
தொடர்ச்சியாக ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லார்ட் ஃபீல் என்பவர் தலைமையில் ராயல் கமிஷன், பாலஸ்தீனத்தில், கலவரத்திற்கான காரணங்கள் குறித்து விசாரித்தது. ராயல் கமிஷன் முன்பு சாட்சியங்கள் சொல்வதற்கு அரேபியர்கள் வராதது மட்டுமல்ல, அந்தக் கமிஷனை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினர். சுமார் 7 மாதம் வரை இந்த கமிஷன் பாலஸ்தீனத்தில் விசாரணை நடத்தியது.1937 ஆம் ஆண்டு ஜூலை மாதம் லார்ட் பீல் கமிஷன் அறிக்கையை வெளியிட்டது. கீழ்க்காணும் வகையில் அந்த அறிக்கையின் ஆலோசனைகள் அமைந்திருந்தன.
யூதர்களும், அரேபியர்களும் சமரசமாக போக முடியாதது தான் பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்கு முக்கிய காரணம் ஆகும். இரண்டு தேசிய சக்திகள் இருக்கின்றன. இரண்டு சக்திகளும் தேசத்தை ஆள வேண்டும் என்று முயற்சிக்கின்றன. ஒவ்வொருவரும் தாங்களே தேசத்தை ஆள சரியானவர் என்று நினைக்கிறார்கள்.
இந்த இரண்டு சக்திகளையும் ஒன்றுபடுத்தி வைக்க கட்டளை அரசாங்கம் எடுத்த முயற்சிகள் பயன் அடையவில்லை.
எனவே பாலஸ்தீனத்தை மூன்று கூறுகளாக பிரிக்க வேண்டும் என்று லார்ட் ஃபீல் அறிக்கை கொடுத்தார்.
மத்திய தரை கடலோரத்தில் சமதள பிரதேசம் யூதர்களின் நாடாக்கப்பட வேண்டும்.
குன்றுகள், வனாந்தரங்கள், இவற்றுடன் துறைமுகம், சிறிது வெளிப்பிரதேசம் அரேபியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
ஜெருசலேம், பெத்தலஹேம் போன்ற புனித இடங்களை காப்பாற்றப்பட வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பிரிட்டன் அரசிடம் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவை தவிர முக்கிய துறைமுகங்கள் பிரிட்டன் வசத்தில் இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
யூதப் பகுதி என்று பிரித்ததில் சுமார் 2.25 லட்சம் அரேபியர்கள் இருந்தார்கள். அரேபிய பகுதி என்று அறிவிக்கப்பட்டதில் யூதர்கள் மிக மிக குறைவாக இருந்தனர்.
இந்த அறிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த சிபாரிசுகளை கவனத்தில் எடுத்து எல்லைகளை நிர்ணயிக்கிற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை யூதர்களுக்கு நிலங்களை விற்பது கட்டுப்படுத்தப்படும் என்றும் வருடத்தில் 8000 யூதர்கள்தான் பாலஸ்தீனத்தில் குடியேற வேண்டுமென்றும் பிரிட்டன் அரசு அறிக்கை வெளியிட்டது.
அரேபியர்கள் இந்த அறிக்கையை முழுமையாக நிராகரித்தனர்.
யூதர்களுக்கோ இந்த அறிக்கை மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. யூதர்களின் பல்வேறு பிரிவினர் இந்த அறிக்கையை பற்றி தனித்தனி கருத்துக்களை வைத்திருந்தனர்.
யூதர்களுக்கு மத்தியில் செயல்பட்ட தொழிற் கட்சியினர் பாலஸ்தீனம் முழுவதும் யூதர்களுக்கு சொந்தமாக வேண்டும்; யூதர்களின் குடிபுகும் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்றனர். சியோனிச அமைப்பில் ஒரு பிரிவினர் நாட்டை பிரிக்க கூடாது. கட்டளை ஆட்சியின் கீழ் நாடு இருக்க வேண்டும் என்றனர்.
மற்றொரு பிரிவினர் பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷார் ஆதரவு எங்களுக்கு(யூதர்களுக்கு) இருக்கும் என்று உத்தரவாதம் கொடுத்தால் இந்த பிரிவினையை ஏற்பதாக அறிவித்தனர். இப்படி விதவிதமான கருத்துக்கள் வந்தாலும் 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தில் சூரியன் நகரத்தில் அகில உலக ஜியோனிச மாநாட்டை கூட்டி இந்த பிரிவினை சம்பந்தமாக முடிவெடுக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரிவினையை அப்படியே நிராகரிக்க விரும்பவில்லை.
யூதர்களுக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்ட பிரதேசத்தை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்றும் இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிர்வாக சபைக்கு அதிகாரம் கொடுத்து இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யூதர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட பகுதியில் அரேபியர்களுக்கு ஏராளமான ஆரஞ்சு பழத்தோட்டங்கள் இருக்கிறது. அவற்றை எல்லாம் யூதர்கள் பறித்துக் கொள்வார்கள். யூதர்களுக்கு மிக செழுமையான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் யூதர்கள் தங்களை விரிவுபடுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்று அரேபியர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், தங்களுக்கு கடல் தொடர்பு இல்லாமல் போய்விடும் என்றும் அரேபியர்கள் கருதினர். பாலஸ்தீனத்தின் புனித தலங்களை பாதுகாப்பதாக பிரிட்டிஷார் சில பிரதேசங்களை எடுத்துக் கொள்வதையும் அரேபியர்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.
1937 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் சிரியாவில் உள்ள கிளவுடான் என்ற ஊரில் அரேபியர்களின் காங்கிரஸ் (மாநாடு) கூடியது. பாலஸ்தீனத்தில் யூத குடியேற்றத்தை எதிர்த்தும், லார்ட் ஃபீல் கமிஷன் அறிக்கையை நிராகரித்தும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த இந்த மாநாட்டில் பல ரகசிய திட்டங்கள் தீட்டப்பட்டன.
இதையடுத்து, அரேபியர்களால் உருவாக்கப்பட்டிருந்த பெரிய கமிட்டி என்ற அமைப்பை பிரிட்டிஷ் அரசு உடனடியாக கலைத்தது. அதன் தலைவர்களையும், முன்னணி உறுப்பினர்களையும் கைது செய்தது. கைதான அரேபியர்களை இந்து மகா சமுத்திரத்தில் உள்ள தீவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஜெருசலேமில் இருந்த முஸ்லிம் மதத்தலைவரை பதவியிலிருந்து நீக்கி, அவரிடம் இருந்த அனைத்து நிர்வாகத்தையும் பறித்துக் கொண்டு அவரை, லெபனானுக்கு நாடு கடத்தினார்கள். அரேபியர்கள் மீது பலவிதமான அடக்குமுறைகளை அரசு அதிகாரிகள் ஏவிவிட்டனர்.
குறிப்பாக இக்காலத்தில் இந்தியாவில், கொல்கத்தாவில், போலீஸ் கமிஷனராக இருந்து வங்காளத்தில் இருந்த தீவிரவாத இயக்கங்களை அடக்கி ஒடுக்கியதாகப் பெயர் பெற்ற சர் சார்லஸ் டெகார்டு சிறப்பு அதிகாரியாக பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்டார். அவர், சிரியாவிலிருந்து பாலஸ்தீன அரேபியர்களுக்கு ஆயுதம் கிடைக்கிறது என்றும் இதை தடுப்பதற்காக பாலஸ்தீனத்தின் வடக்கு எல்லையில் முள்வேலிகளை போடவேண்டும் என்று ஆலோசனை கொடுத்தார். அவருடைய ஆலோசனையின்படி வேலி போடப்பட்டது.
இதற்கு ‘டெகார்டு சுவர்’ என்று பெயரிடப்பட்டது. மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டெகார்டு சுவரை உருவாக்கும் கான்ட்ராக்ட் யூதர்களின் சியோனிச தொழிலாளர் அமைப்புக்கு கொடுக்கப்பட்டது.
தொழிலாளர் அமைப்பு தனது வருவாய்க்காக இதை எடுத்து செய்தது. இது போன்ற நூற்றுக்கணக்கான கான்ட்ராக்ட்களை, கட்டளை அரசாங்கம் யூத ஸ்தாபனங்களுக்கு கொடுத்தது. அப்படி என்றால் யூதர்களுக்கு எந்த அளவுக்கு அரசு உதவி செய்ததை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆனால், பிரிவினை விஷயத்தில் பிரிட்டிஷ் அரசு பின்வாங்கவில்லை. மேலும் ஒரு கமிஷனை நியமித்தது. 1938 ஆம் ஆண்டு வுட் ஹெட் இந்த கமிஷனுக்கு தலைமை தாங்கினார். அவரும் அறிக்கைகளை கொடுத்தார். பொதுவாக பாலஸ்தீன விஷயத்தில் அரேபியர்களின் எதிர்ப்பை சமாளிப்பதுதான் பிரதான அம்சமாக இருந்தது. பாலஸ்தீனத்தில் அரேபிய தலைவராக இருந்த மப்டி நாடு கடத்தப்பட்டதால் கட்சியின் செல்வாக்கு குறைந்து விடும் என்றும், அரேபிய மிதவாத கட்சியினரை தங்கள் பக்கம் கொண்டு வந்து விடலாம் என்றும் பிரிட்டிஷார் நம்பினார்கள்.
இதற்காக அரபுக்களிடமிருந்த பல்வேறு கட்சிகளை ஒன்றுடன் ஒன்றை மோத விட்டது மட்டுமல்ல... அவர்கள் மத்தியில் குழப்பத்தினையும் ஏற்படுத்தினார்கள். எண்ணற்ற அரேபியர்கள் பிரிட்டிஷாரின் இந்த போக்கை எதிர்த்ததனால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஒட்டுமொத்தமாக அரேபியர்களின் ஒரு சிறு பகுதி கூட பிரிட்டனின் இந்த பிரிவினையை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்தப் பின்னணியில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமைந்த ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீனத்துக்கு உள்ளே இஸ்ரேலை உருவாக்குவது என்ற முறையில் ஒரு கமிஷனை அமைத்தார்கள்.
1947 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டிஷ் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழுவில் ஆஸ்திரேலியா, கனடா, செக்கோஸ்லோவேகியா, கௌதிமாலா, இந்தியா, ஈரான், நெதர்லாந்து, பெரு, ஸ்வீடன், உருகுவே, யுகோஸ்லோவேகியா ஆகிய 11 உறுப்பு நாடுகள் இருந்தன. இந்தக் குழுவில் இருந்த 7 உறுப்பினர்கள் இரு நாடாக பிரிப்பதற்கான ஆலோசனைகளை கொடுத்தனர். இந்தியா, ஈரான், யுகோஸ்லோவேகியா ஆகிய மூன்று நாடுகள் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தின. ஆஸ்திரேலியா நடுநிலை வகித்தது.
இந்தக் குழுவின் பரிந்துரைப்படி 1947ம் ஆண்டு நவம்பர் 29 அன்று ஐ.நா. பொது சபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டு மொத்தம் இருந்த 58 நாடுகளில் 37 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. 9 நாடுகள் நடுநிலை வகித்தன.
1948 மே 14 அன்று சியோனிச அமைப்பு அதன் முக்கிய தலைவர் டேவிட் பென் குரியன், இஸ்ரேல் இன்று முதல் தனி நாடு என்று அறிவித்தார். அவர் அறிவித்த அன்றே அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ்.ட்ரூமன் இஸ்ரேல் அரசை அங்கீகரித்தார். 1949 மே 11 அன்று தான் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை அங்கீகரித்தது.
ஐ.நா.சபையின் ஆலோசனைப்படி 43 சதவீதம் நிலம் அரபுகளுக் கும், 56 சதவீதம் நிலம் இஸ்ரேலுக்கும் ஒதுக்கப்பட்டது. ஒரு சதவீத நிலமான ஜெருசலேம் ஐ.நா. சபையின் கட்டுப்பாட்டில் 10 ஆண்டுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அரேபியர்கள் (பாலஸ்தீனர்கள்) இதை ஏற்க மறுத்தனர். இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட 56 சதவீத நிலப்பகுதியில் ஐந்தரை லட்சம் அரபுக்களும் நான்கு லட்சம் யூதர்களும் இருந்தார்கள். பாலஸ்தீனத்திற்கு ஒதுக்கப்பட்ட 43 சதவீத நிலப்பரப்பில் ஏழரை லட்சம் அரபுக்களும் ஒரு லட்சம் யூதர்களும் இருந்தார்கள்.
1948 மே 14ல் இஸ்ரேல் தனி நாடு என்று அறிவிக்கப்பட்ட உடனேயே இஸ்ரேல் தன் படைகள் மூலமாக பாலஸ்தீனர்கள் வாழும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள மக்களை வெளியேற்றினர். பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். இந்த காலகட்டத்தில் மட்டும் ஏழு லட்சம் அரேபியர்கள் தங்கள் நிலத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் வசிப்பிடங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. சரிபாதியாக இருந்த நிலப்பகுதியை இஸ்ரேல் படிப்படியாக ஆக்கிரமித்து இன்று 20,770 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. பாலஸ்தீனம் மேற்கு கரை மற்றும் காசா பகுதி என சுருக்கப்பட்டு 6020 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக மாறிவிட்டது. இந்த குறைவான நிலப்பகுதியில் பெரும்பாலான இடங்களை இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமித்து உள்ளன.
அரபு நாடுகள் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்கவில்லை. 1948,1953,1967,1973 ஆகிய வருடங்களில் இஸ்ரேல்-அரபு யுத்தம் நடைபெற்றது. இஸ்ரேல், அமெரிக்க பிரிட்டிஷ் ஆதரவுடன் அரபு நாடுகளை வெற்றி கொண்டு பாலஸ்தீனத்தை மேலும் ஆக்கிரமித்தது.
பாலஸ்தீன விடுதலை அமைப்பு
இதற்கிடையில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக 1957 ஆம் ஆண்டு யாசர் அராபத் அல்-ஃபதா என்ற கட்சி ஆரம்பித்தார். அதன் பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கம் - பி எல் ஓ (Palestine Liberation Organization -PLO) என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்கு தனியாக இராணுவ பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. 1973-74 இல் கூட்டப்பட்ட அனைத்து அரபு நாடுகள் பங்கேற்ற அரபு உச்சிமாநாட்டில், பாலஸ்தீன மக்களின் ஒரே சட்ட பூர்வமான பிரதிநிதியாக பி எல் ஓ அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது .
இதையடுத்து பி எல் ஓ அமைப்பு ஐ.நா. சபைக்கு பார்வையாளராக அழைக்கப்பட்டது. பி எல் ஓ வில் 13 க்கும் அதிகமான அமைப்புகள் உள்ளன. ஹமாஸ் இதன் உறுப்பினராக இல்லை.
1987 ஆம் ஆண்டு யாசர் அராபத் தலைமையில் பி எல் ஓ அமைப்பு ‘‘இன்டிஃபாடா’’ என்ற இயக்கத்தை தொடங்கி 7 ஆண்டுகள் வரை இடைவிடாத கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதனால், எண்ணற்ற அழிவுகளும் உயிர் சேதங்களும் ஏற்பட்டாலும் போராட் டங்கள் ஓயவில்லை.
1988 ஆம் ஆண்டு யாசர் அராபத் பாலஸ்தீனத்தை தனி நாடு என்று அறிவித்தார். இதனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கடும் கோபம் கொண்டு யாசர் அராபத்தை மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளராக கலந்து கொள்ளக்கூடிய யாசர் அராபத்துக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. இதனால் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தை ஜெனிவாவில் நடத்தி யாசர் அராபத்தை கலந்து கொள்ள வைத்தனர்.
1993 ஆம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள ஒஸ்லோ என்ற இடத்தில் இஸ்ரேல் பிரதமர் இட்சாக் மற்றும் பி எல் ஓ தலைவர்களில் ஒருவரான முகமது அப்பாஸ் இடையே பேச்சு வார்த்தை துவங்கி நடைபெற்று. கடைசியாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது ஓஸ்லோ ஒப்பந்தம் என்று அழைக்கப் படுகிறது. இதன்படி இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் பிரதிநிதியாக பி எல் ஓ வை ஏற்றுக் கொண்டது. இந்த ஒப்பந்தம் பாலஸ்தீனிய சுய அரசாங்கத்தை மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் படிப்படியாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பாலஸ்தீன அதிகார சபை பாலஸ்தீன பகுதியில் நிறுவப்பட்டது. மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் பி எல் ஓ பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு, பி எல் ஓ, இஸ்ரேல் அரசை முதன்முறையாக அங்கீகரித்தது. ஆனாலும் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மீறியது. பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது.
ஓஸ்லோ ஒப்பந்தத்தை பாலஸ்தீன மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. குறிப்பாக ஹமாஸ் அமைப்பு இதை எதிர்த்ததோடு, தேர்தலில் வெற்றி பெற்று காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இஸ்ரேல் இந்த வெற்றியை ஏற்கவில்லை. இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கும் பி எல் ஓ விற்கும் மோதலை உருவாக்கி குளிர்காய நினைத்தது. ஆனால் அதன் எண்ணம் பலிக்கவில்லை.
ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய முறையில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில் தான் ஹமாஸ் அமைப்பை அழித்தே தீர வேண்டும் என்ற கொலை வெறியுடன் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி காசா பகுதியை ‘சுடு’காடாக்கி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கு இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை. அரபு நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இஸ்ரேல் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகக் கொடூரமான அடியாளை தயார் செய்து ஏவிக் கொண்டிருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக