திபெத் பீடபூமி.
உலகின் கூரை என்பது உலகறிந்த விஷயம். புவியியல் ஆய்வாளர்களுக்கு இமயலையைப்போன்றே
இது ஒரு ஆய்வுப் பொருள். மானிடவியல்
அறிஞர்களுக்கு உயிரின பரிணாம வளர்ச்சியின் படிமங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிற இடம். மலையேறிகளுக்கு தங்களது சாகசங்களை வெளிப்படுத்துவதற்கான சாகசபூமி. பறந்து
விரிந்து உயர்ந்து கிடக்கும் இதன் அழகு காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும். திபெத் என்றால் இந்திய
மக்களுக்கு தலாய்லாமாவின் பிரதேசம் என்ற கற்பிதம் கவனத்திற்கு வரும். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த பீடபூமி சீனாவை சிதறடிப்பதற்கான ஒரு அரசியல் கருவி.
சீனாவிற்கோ
சீன வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதியாகவும், இனக்குழு ஒற்றுமையின் சின்னமாகவும், புவிசார் அரசியலின் பிரத்யேக பிரதேசமாகவும் இருக்கக்கூடியது
திபெத்பீடபூமி ஆகும். திபெத் என்றால் சீன் மொழியில் மேலே
என்றும், திபெத்திய மொழியில் கீழே என்றும் பொருள்படும். 4,70,000 சதுரமைல் பரப்பளவு கொண்டது. இந்த பீடபூமி 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு மங்கோலியர்கள் மொன்பா, தமாங், கியாங், ஷேரபா, லோபா, ஹான் சீனர்கள், ஹுய்
சீனர்கள் மற்றும் பிற இன குழுக்கள் வசிக்கிறார்கள்.
இந்த
ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் தேதி 14ஆவது தலாய் லாமாவின் 90 வது
பிறந்தநாள். ஒரு வாரம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாளின்
செய்தியாக தலாய்லாமா தனது மறுபிறவி வாரிசை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார். எனது மறுபிறவி வாரிசு சுதந்திரப் பிரதேசத்தில் நடக்கும் என்றார். சீன அரசாங்கம் இதை உடனடியாக கண்டித்தது. அமெரிக்க
அரசாங்கம் சீனா இதில் தலையிடக்கூடாது என்று அறிவித்தது. இந்தியாவின் நாடாளுமன்ற
விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜு தனது மறுபிறவி வாரிசை தேர்ந்தெடுப்பதற்கான முழு
உரிமையும் தலாய்லாமாவிற்கு மட்டுமே உள்ளது என்று அறிவித்தார். சீனா இதற்கும் கண்டனம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை இந்தியா மத
சுதந்திரத்தை மதிக்கும் என்று அறிக்கை விட்டு முடித்தது.
தற்பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலாய் லாமாவிற்கு
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார், தலாய்லாமாவின்
பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜு
ராஜூ, ரஞ்சன் சிங், அருணாச்சல பிரதேச
முதல்வர் பெமா காண்டு, சிக்கிம் அமைச்சர் சோனம் லாமா
போன்றவர்கள் கலந்து கொண்டதும் நடந்துள்ளது.
மேற்கண்ட
இரண்டு நிகழ்வுகளையும் சீனாவின் வெளியுறவுத்துறை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. திபெத்திய மத தலைவர்
தலாய்லாமா மதத்தின் பெயரால் சீனாவில் இருந்து ஜி சாங்கை அதாவது திபேத்தை பிரிக்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தலாய்லாமா சீன எதிர்ப்பு
பிரிவினைவாத நபர் என்றும் குற்றம் சாட்டி உள்ளது. பிரிவினை சக்திகளுக்கு இந்தியா
துணை போகக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். பிறந்தநாளை கடந்தும்
மறுபிறவி வாரிசு என்பது முக்கிய விவாதப் பொருளாக மாறி
இருக்கிறது. இது வாரிசை நியமிப்பது மட்டுமல்ல, சீனாவில்
இருந்து திபெத் சுதந்திரம் அடைய வேண்டும், தனி நாடாக வேண்டுமென்ற கோரிக்கை சார்ந்த அம்சங்களும் இருக்கிறது . இதன்
பிரச்சனைகளை அறிந்து கொள்ள வரலாற்று ரீதியான தரவுகளை அணுக வேண்டும். அதன் மூலம் திபெத்திய பிரச்சனை புரிந்து கொள்ள முடியும்.
தொன்மத்தின் தொடர்ச்சிகள்..
சுமார்
40 முதல்
50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியா மற்றும் யுரேசிய
தட்டுகளின் மோதலால் திபெத் பீடபூமி மேல் எழுந்து வந்துள்ளதாக புவியியல் விஞ்ஞானம்
மதிப்பீடு செய்துள்ளது. பழைய கற்காலத்தில் அதாவது முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
புதிய கற்காலங்களில் விவசாயம், மண்பாண்டம் போன்றவற்றை
இப்பகுதியில் இருந்த மக்கள் பயன்படுத்திய தற்கான தரவுகள்
கிடைத்து இருக்கின்றன. இதற்கு மேலும் திபெத் பகுதியில்
தோண்டி எடுக்கப்பட்ட நுண்கற்கள் வடக்கு சீன கருவியின் கலாச்சாரம் திபெத்திய
கற்காலம் ஆகியவற்றின் இணைப்பை வெளிப்படுத்துகின்றன. ஹோலோசீன் காலத்தின்
நடுப்பகுதியில் வடக்கு சீனாவில் இருந்து வந்தவர்களும் திபெத்திய பிரதேசங்களில்
குடியிருந்தவர்களும் இரண்டற கலந்து விட்டனர். ஹோலோசீன் காலம் என்பது புவியியல் அட்டவைணைப்படி பனியுகத்தின் முடிவில் அதாவது சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சகாப்தம் ஆகும். இக்காலகட்டம் மனித
நாகரீகம் விவசாயம் போன்ற முக்கிய நிகழ்வுகளை பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டமாகும்.
வரலாற்று
வளர்ச்சி விதிகளின்படி துண்டு துண்டான சிற்றரசுகள் தான் பண்டைய காலத்தில்
அதிகாரத்தில் இருந்தார்கள். உலகம் முழுவதும் நிலப்பிரபுத்துவம் விரிவடைந்த பொழுது தன்னுடைய
பொருளாதாரத் தேவைகளுக்காக பேரரசுகளை உருவாகியது. இக்காலகட்டத்தில் எண்ணற்ற சிற்றரசுகள் அழிக்கப்பட்டு பேரரசுகளின் ஆட்சியின் கீழ் வந்தன. திபெத்தியப் பகுதியும்
இதற்கு விதிவிலக்கு அல்ல. வரலாற்றின் பல காலங்களில் இன்றைய திபெத் என்று சொல்லக்கூடிய பகுதிகள் தனித்தனியான சிற்றரசுகளாகவும், பல நேரங்களில் சீனாவின் பேரரசின் கீழும் இருந்து வந்துள்ளது.
சீனாவின்
பிரிக்க முடியாத பகுதி
சீனா திபெத்தியர் உட்பட 56 இனக்குழுக்களைக் கொண்ட ஒரு
ஒருங்கிணைந்த நாடு. டாங் வம்ச காலத்தில் (618-907), திபெத் மற்றும்
டாங் வம்சம், அரச
குடும்பங்களுக்கு இடையிலான திருமண உறவுகள்
ஏற்பட்டது. இதன் மூலம் அரசியல்
மற்றும் கலாச்சார ,
பொருளாதார உருவானது. 1271
ஆம் ஆண்டில், யுவான்
வம்சம் (1271-1368) நிறுவப்பட்டபோது, திபெத் அதிகாரப்பூர்வமாக மத்திய
அரசாங்கத்தின் நேரடி அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு நிர்வாகப் பகுதியாக மாறியது.
அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், சீனா
மிங் வம்சம் (1368-1644), கிங்
வம்சம் (1644-1911) மற்றும்
சீனக் குடியரசு (1912-1949) ஆகிணு காலங்களில் திபெத் மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது
7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், டாங் வம்சம் (618-907) மத்திய சமவெளியில் நிறுவப்பட்டது. இது ஒரு சக்திவாய்ந்த
மற்றும் அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட ஆட்சியாகும். இது மத்திய சமவெளிகளில் 300
ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய குழப்பமான,நிலையற்ற சூழ்நிலைகளை
மாற்றி ஒழுங்கை நிலைநாட்டியது. அதே
நேரத்தில், டுபோ இனத்தின் தலைவர் சாங்ட்சன் காம்போ திபெத் பீடபூமியில்
பழங்குடியினரை ஒன்றிணைத்து, திபெத்
என்று அறியப்பட்ட பெரும் பகுதியை உள்ளடக்கிய டுபோ இராச்சியத்தை நிறுவினார்.
640 ஆம்
ஆண்டில், டூபோ
மன்னர் சாங்ட்சன் காம்போ தனது "பிரதம மந்திரி" கார் டோங்ட்சனை டாங்
வம்சத்தின் தலைநகரான சாங்'ஆனில்
உள்ள டாங் அரண்மனைக்கு அனுப்பி, பேரரசின் குடும்பத்தைச்
சேர்ந்த ஒருவரை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும்
இதறகாக டோங்ட்சன் 5,000
தங்கத் காசுகள், நூற்றுக் கணக்கான நகைகள், பிற விலையுயர்ந்த ஆபரண
கற்களை டாங் பேரரசருக்கு பரிசாகக் கொடுத்தார். பேரரசர்
தைசோங்கின் குடும் பத்தைச் சேர்ந்த இளவரசி வென்செங், டூபோவிற்கு அனுப்பப் பட்டார். அவர் டூபோவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக
வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில், டாங் வம்சத்தின் சிறந்த கலாச்சாரம், மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம்
டூபோவிற்கு கொண்டு வரப்பட்டது, இது
டூபோவின் பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு பெரும்
உதவி செய்தது.
இளவரசி வென்செங், டூபோவிற்கு எழுத்து மொழியின் முக்கியத்துவத்தை சாங்ட்சன்
காம்போவிடம் கூறியபோது, டூபோ
மன்னர் 30
திபெத்திய எழுத்துக்களை உருவாக்கவும், வாக்கியங்களை உருவாக்குவதற்கான இலக்கணங்களை உருவாக்கவும்
உரிய ஏற்பாடுகளை செய்து எழுத்தை உருவாக்கி, டூபோவிற்கு எழுத்து மொழி இல்லாத வரலாற்றுக்கு
முற்றுப்புள்ளி வைத்தார்.
இளவரசி வென்செங் டூபோவிற்கு கொண்டு வந்த ஹான் சீன படைப்புகள் திபெத்திய மொழியில்
மொழிபெயர்க்கப்பட்ட. அவற்றில்
கவிதைகள், விவசாயம், வரலாறு, மருத்துவம், நாட்காட்டி மற்றும் பௌத்தம் ஆகியவை அடங்கும். டூபோ
மக்கள் படிப்படியாக மத்திய சமவெளிகளின் மேம்பட்ட தொழில்நுட்பமான தானியங்களை
அரைத்தல், பருத்தி
நூற்பு மற்றும் நெசவு, மட்பாண்டங்கள்
தயாரித்தல், காகிதம்
தயாரித்தல் மற்றும் ஒயின் தயாரித்தல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றனர். இளவரசி
வென்செங் புத்த மதத்தை வணங்கியதால், சாங்ட்சன் காம்போ டூபோவில் பௌத்தம் பரவுவதை ஆதரித்தார், மேலும் இந்த நோக்கத்திற்காக ஜோகாங்
மடாலயத்தை கட்டினார். இது திபெத்தியர்களின் ஆன்மீக வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியது.
மிக முக்கிய பங்காற்றியதால் இளவரசி வென்செங், சாங்ட்சன் காம்போவின் சிலைகள் இன்னும் பொட்டாலா
அரண்மனையில் வழிபடப்படுகின்றன. அவர்களின்
மணமகள் அறை இன்னும் பார்வையிடப்படுகிறது. திபெத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார
வளர்ச்சிக்கு இளவரசி வென்செங் ஆற்றிய பங்கைப் பாராட்ட திபெத்தியர்கள் பாடல்களையும்
பாடுகிறார்கள்
பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் திபெத்
1271 ஆம்
ஆண்டில், மங்கோலியர்களின்
குப்லாய் கான் தனது வம்சத்தின் பெயராக யுவானையும், டுபஸ்-க்ட்சாங் (இன்றைய மத்திய மற்றும் மேற்கு திபெத்
மற்றும் அதன் மேற்குப் பகுதி) மற்றும் எம்டோ-காம்ஸை யுவான் வம்சத்தின் ஒரு
பகுதியாகவும் அமைத்தார். திபெத் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின்
கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டது.
யுவான் சீனா முழுவதையும் ஒன்றிணைத்தபோது, யுவான் வம்சம் திபெத்தை திறம்பட நிர்வகிப்பதற்கான தொடர்ச்சியான
நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை..
1288 ஆம் ஆண்டில் சுவான்செங் கவுன்சில் என மறுபெயரிடப்பட்ட
சோங்சி கவுன்சில், சீனாவில்
யுவான் வம்சத்தின் போது நிறுவப்பட்ட ஒரு மத்திய அரசு அமைப்பாகும். இது ஆரம்பத்தில்
மத மற்றும் நிர்வாக விஷயங்கள் உட்பட புத்த விவகாரங்கள் மற்றும் திபெத்திய விவகாரங்களை
நிர்வகிப்பதற்கு பொறுப்பாக இருந்தது.
திபெத்தில் வீட்டு கணக்கெடுப்புகளை நடத்துதல், தபால் நிலையங்களை அமைத்தல், வரி வசூலித்தல், துருப்புக்களை நிறுத்துதல், அதிகாரிகளை நியமித்தல் மற்றும்
யுவான் குற்றவியல் சட்டம் மற்றும் காலண்டரை வழங்குதல்.
பிராந்திய அளவிலும்,மத்திய மட்டங்களில் திபெத்திய துறவிகள், சாதாரண உயர் அதிகாரிகளை நியமித்தல், மத்திய அரசின் உத்தரவின் பேரில்
அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
யுவான் வம்ச அரசு திபெத்தில் நிர்வாகப் பிரிவை
உருவாக்கி மூன்று தனித்தனி அமைதி ஆணையர்களை
அமைத்தது, அவர்கள்
நேரடியாக சுவான்செங் கவுன்சிலின் கீழ் செயல்பட்டனர். மேலும் திபெத்தில் உள்ள இந்த நிர்வாகப் பிரிவு
திபெத்தில் கீழ்மட்ட நிர்வாக பிரிவை அமைக்க
வழிவகுத்தது
யுவான் வம்சத்தை வீழ்த்தி
ஆட்சிபீடமேறிய மிங் வம்சம் (1368-1644) திபெத்தை ஆட்சி
செய்வதில் அடிப்படையில் யுவான்வம்ச
முறைகளை
பின்பற்றியது. லாசா,
சிகேஸ் பகுதிகள், காம்டோ,நகாரி பகுதிகளின் இராணுவ மற்றும்
நிர்வாக விவகாரங்களைப் பொறுப்பேற்பதற்கான
அமைப்புகளை உருவாக்கியது. மாவட்ட நீதிபதிகள்
உட்பட (சோங்போயின்) உயர் மட்டங்களில் உள்ள அதிகாரிகள் அனைவரும் மிங் அரசால் நியமிக்கப்பட்டனர்.
1644 ஆம்
ஆண்டில், கிங்
(1644-1911) நீதிமன்றம், சீனா முழுவதையும் ஒன்றிணைப்பதற்காக
அதன் தலைநகரை பெய்ஜிங்கிற்கு மாற்ற முடிவு செய்தது. வரலாற்று முன்னுதாரணத்தைத்
தொடர்ந்து, கிங்
நீதிமன்றம் திபெத்தின் மீது அதிகார வரம்பைப் பயன்படுத்தியது
திபெத்தை ஆட்சி செய்த யுவான் வம்சம் மிங் வம்சங்களைத் தொடர்ந்து கிங் வம்சம் பல
மாற்றங்களை திபெத்பகுதியில் செய்தது.
எல்லை பாதுகாப்பு, மாநில எல்லையை
வரையறுத்தல், வெளிவிவகாரம், திபெத் பகுதிக்கு அதிகாரிகளை நியமிப்பது, தலாய்லாமா, பஞ்சன் லாமா
இருவருக்கும் இருக்கக்கூடிய மத அதிகாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றை பீகிங்கிலிருந்து
கிங் அரசாங்கம் முடிவு செய்வது.
1911
ஆம் ஆண்டு சீனாவில் சன் யாட் சன் தலைமையில் புரட்சி ஏற்பட்டு, கிங் வம்சத்தின் ஆட்சியைத் தூக்கியெறிந்தது. 1912 ஆம் ஆண்டு சீனக் குடியரசு (1912-1949) நிறுவப்பட்டபோது, அது அதன் முதல் அரசியலமைப்பை -
தற்காலிக அரசியலமைப்பை – வெளியிட்டது. இதன்படி திபெத் சீனக்குடியரசின்
22 மாகாணங்களில் ஒன்று என்பதை தெளிவாகக் குறிப்பிட்டது.
அதன் பின்னர் வெளியிடப்பட்ட அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்கள் அனைத்தும் திபெத்
சீனக் குடியரசின் ஒரு பகுதியாகும் என்பதைக் குறிப்பிட்டன.
ஜூலை 1912
இல், சீனக் குடியரசு திபெத்திய உள்ளூர் விவகாரங்களைப் பொறுப்பேற்க மங்கோலிய
மற்றும் திபெத்திய விவகார பணியகத்தை (மே 1914
இல் மங்கோலிய மற்றும் திபெத்திய கவுன்சில் என
மறுபெயரிடப்பட்டது) அமைத்தது. கிங் வம்சத்தின் போது கிங் உயர் ஆணையர்கள் செய்ததைப்
போலவே மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதன் அதிகாரிகள் பிரதமரின் நேரடிக் கீழ்
பணியாற்றினர். 1929 ஆம்
ஆண்டில், மங்கோலிய
மற்றும் திபெத்திய கவுன்சில் மங்கோலிய மற்றும் திபெத்திய விவகாரங்களுக்கான ஆணையமாக
மாறியது, இது
ஏப்ரல் 1940 இல்
திபெத் தலைநகரம் லாசாவில் அதன்
அலுவலகத்தை அமைத்தது. 14 வது தலாய் லாமாவே சீனக் குடியரசின்
மத்திய அரசின் ஒப்புதலுடன் பதவியேற்றார்.
சீனக் குடியரசின் காலத்திலிருந்து 14 வது தலாய்லாமா,10வது பஞ்சன்லாமா குடியரசின் உச்ச அதிகார
அமைப்பான தேசிய காங்கிரசிலும்(பாராளுமன்றம்), மற்றும் பல அதிகாரிகள் தேசிய அரசு
நிறுவனங்களிலும் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தனர். வரலாறு இவ்வாறு இருக்கையில்
ஏகாதிபத்திய அரசுகளும் மேற்கத்திய அரசுகளும் 1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி
சுதந்திர திபெத்தை கைப்பற்றி விட்டார்கள் என்ற பொய்
பிரச்சாரத்தை கிளப்பி வருகிறார்கள். அதனால் சீனாவிடமிருந்து திபெத்தை விடுவிக்க வேண்டும் என்ற விஷயத்தை பிரகடனம் செய்கிறார்கள்.
திபெத்திய பௌத்தம் இந்தியவழி பௌத்தம்
அல்ல.
ஜாங்சுங்
வம்சம் ஆட்சி செய்த காலத்தில் திபெத்தில் போன் என்ற பூர்வீகமதம் இருந்தது. இந்த மதம் ஏழாம் நூற்றாண்டில் பௌத்தம் வருவதற்கு முன்பு
ஒழுங்கமைக்கப்பட்ட, செல்வாக்கு மிக்க உள்ளூர் மதமாக
இருந்தது. ஏழாம் நூற்றாண்டில் சாங்ட்சென் காம்போ
மன்னர் காலத்தில் திபெத்திற்குள் பௌத்தம் நுழைந்தது.
எட்டாம் நூற்றாண்டில் அரசர் இட்ரிசங் தட்சன் காலத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது..பௌத்தத்திற்கும் போன் மதத்திற்கும் கடுமையான போட்டி இருந்தது. பௌத்த மதத்தால்
போன் மதத்தை மாற்றியமைக்க முடியவில்லை.அதற்கு மாறாக பௌத்தம் ஒரு ஆழமான
சமய கலப்பிற்கு உட்படுத்திக் கொண்டது.
போன்
மதம், மேற்கு
திபெத்தில் ஜாங்ஜூங் எந்த இடத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த மதத்தை ஞானி டொன்பா
ஷென்ரப் மிவோச்சே என்பவர் உருவாக்கியதாகவும் இம்மக்கள் நம்புகிறார்கள். இம்மதத்தின்
நம்பிக்கைப்படி அண்டவியலில் தெய்வங்கள் மட்டுமல்ல ஆவிகளும் இருக்கிறது. மலைகளும், வானமும்,
மூதாதையர்களுடன் தொடர்புடையது. இயற்கை வளங்கள் வாழ்க்கை செழிப்புக்கு உதவுகிறது. அதே நேரத்தில் கோபம்நிறைந்தது. தெய்வங்களும்
ஆவிகளும் கோபங்கள் வந்தால் பலி கொடுக்கும் வழக்கம் இவர்களிடையே காணப்பட்டது. சில நேரங்களில் மனிதர்களையும் பலி கொடுத்தார்கள்.
சடங்குகள்
நடத்துவது, அன்றாட நடவடிக்கையாகவும் எதிர்காலத்தை கணிப்பதற்காக குறி சொல்லுதலும்
இவர்களின் வழக்கத்தில் இருந்தது. எண்ணற்ற மூடநம்பிக்கைகள்,
சடங்கு நிறைந்து காணப்பட்டாலும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்தது. இந்த
சடங்குகளை நடத்துவதற்கு நிபுணர்கள், மற்றும் மருத்துவர்கள், ஆவிகளை ஓட்டக் கூடியவர்களும் இருந்திருக் கிறார்கள்.
தற்பொழுதும்
திபெத்தில்
பரவிய பௌத்தம் இந்த மதத்தின் சடங்குகளை தழுவிக் கொண்டது, திபெத்திய
பௌத்த மதத்தில் இருக்கக்கூடிய மலைகளையும்,
நீர் மற்றும் இயற்கை வழிபாட்டு முறைகள் இதனைச் சார்ந்தது. சடங்குகள், மைய ஆன்மீக நம்பிக்கை, குறி சொல்லுதல், பாதுகாப்பு சடங்குகள், உள்ளூர் தெய்வங்களுக்கான
மரியாதை போன்றவை அனைத்தும் இதிலிருந்து திபெத்திய பௌத்தம்
உள்வாங்கிக் கொண்டது.
அதே
நேரத்தில் போன் மதமும் சில மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு துறவற கட்டமைப்புகளையும், தத்துவ
கட்டமைப்புகளையும் பௌத்தத்திலிருந்து ஏற்றுக்கொண்டு இன்று வாழும்
ஒழுங்கமைக்கப்பட்ட யுங்ட்ருங்போன் மதமாக உருவெடுத்தது. தலாய்லாமா திபெத்திய பௌத்தத்தின் ஐந்தாவது பள்ளியாக போன் மதத்தை அங்கீகரித்தார். நியிங்மா, காக்யு, சாக்யா, கெலுக் என்பவை
திபெத்திய பௌத்தத்தின் நான்கு முக்கிய பள்ளிகளாகும்(மரபு). ஐந் தாவது பள்ளியில் சில
பிரிவுகள் உள்ளன. அவற்றில் போன் மற்றும் ஜோனாங் ஆகும். எனினும் போன் மதம் தங்களை தனித்துவமாகவும்
கருதுகிறார்கள்.
திபெத்திய
பௌத்தம் என்பது போன் மதத்தின் ஆழமான வேர்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட அதிநவீன
கலவையாகும். இதன் காரணமாகத்தான் திபெத்திய பௌத்தம் சீனாவின் இதர பௌத்தத்திலிருந்து
மாறுபட்டு இருக்கிறது. திபெத்திய மதம் சீனத்தில் உருவானது. அதற்கும் மற்ற இடங்களில் உருவான
மதத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மறுபிறவி
வாரிசை தேர்ந்தெடுக்கிற பொழுது இதர நாடுகளின் தலையீடு கூடாது என்ற கருத்தை
சீனாவின் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ பேச்சாளர் திபெத்திய மதம் சீனாவில் உருவானது என்பதை
ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார்.
திபெத்தில் நிலப்பிரப்புத்தும் வளர்ந்த பொழுது அதன்
பிரதிநிதிகளாக நிலப்பிரபுக்களும் அவர்களின் மதத் தலைவர்களாக, ஆட்சியாளர்களாக லாமாக்கள் மாறினார்கள். லாமாக்களுக்கும், நிலப்பிரபுகளுக்கும்
மக்களை அடிமைப்படுத்தி சுரண்டுவதற்கு ஏற்ற வகையில் திபெத்திய பௌத்தம் மாற்றி
அமைக்கப்பட்டது. எனவே அந்த மத நம்பிக்கையை பயன்படுத்தி மக்களை
அடிமையாக வைத்திருந்தனர். புரட்சிக்குபிறகு இவை அனைத்தும் மாற்றப்பட்டது.
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக