Pages

வியாழன், டிசம்பர் 18, 2025

தேசிய இனங்கள் : ஒரு நாடு 56 கலாச்சாரங்கள்

 

அ.பாக்கியம்

சீனாவில் இன சிறுபான்மையினரை பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப் பதிலும் ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வை உருவாக்குவதிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சோசலிச சித்தாந்தத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு சீனாவில் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் சீன மக்கள் தொகை 141.5 கோடியாகும் இவற்றில் ஹான் இன மக்கள் தொகை 128.6 கோடி. இது மற்ற மக்கள் தொகையில் 91. 11% ஆகும். இவை தவிர மற்ற சிறுபான்மை இன மக்களின் தொகை 12.6 கோடி உள்ளது. மொத்த மக்கள் தொகையில் சிறுபான்மை மக்களின் பங்கு 8.89 சதவீதமாகும். ஹான் இனக்குழுவை தவிர சீனாவில் 55 இன சிறுபான்மை குழு மக்கள் வாழ்கிறார்கள்.

இந்த 55 சிறுபான்மை இனக்குழுவில் அதிக மக்கள் தொகை கொண்ட பல இன குழுக்கள் உள்ளது. சீனாவில் உள்ள முக்கிய இன சிறுபான்மையினர் ஜுவாங் ( 19.6 மில்லியன்), ஹுய் (11.4 மில்லியன்), உய்குர்கள் (11 மில்லியன்), மியாவோ (11 மில்லியன்), மஞ்சுகள் (10.4 மில்லியன்), யி (9.8 மில்லியன்), துஜியா (9.6 மில்லியன்), திபெத்தியர்கள் (7 மில்லியன்), மங்கோலியர்கள் (6.3 மில்லியன்), புயெய் (3.5 மில்லியன்), டோங் (3.5 மில்லியன்), யாவோ (3.3 மில்லியன்), பாய் (2 மில்லியன்), கொரியர்கள் (1.7 மில்லியன்), ஹானி (1.7 மில்லியன்), லி (1.6 மில்லியன்) , கசாக் (1.5 மில்லியன்)  டாய் (1.2 மில்லியன்) என்று உள்ளனர். இந்த 18 இனக் குழுக்கள் தவிர மற்ற சிறிய இனக்குழுக்களில் 7,30,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட பல இன குழுக்கள் உள்ளன.

சீன மக்கள் குடியரசு 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உடனேயே 1954 ஆம் ஆண்டு முதல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி அப்போது 39 இனக்குழுக்கள் அங்கீகரிக்கப்பட்டன. 1964 ஆம் ஆண்டு இரண்டாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் மேலும் சிறிய இனக்குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு 54 ஆக உயர்த்தப்பட்டது. 1965 ஆம் ஆண்டு திபெத்திலிருந்து லோபா மக்கள் மற்றொரு இனக் குழுவாக சேர்க்கப்பட்டனர். கடைசியாக 1979 ஆம் ஆண்டு ஜீனோ மக்கள் இனக்குழுவாக அங்கீகரிக்கப்பட்டனர். தற்பொழுது சீனாவில் மொத்த இனக்குழுக்கள் ஹான் இனக்குழுவையும் சேர்த்து 56 ஆகும்.

சுயாட்சி பிராந்தியம் முதல் இன நகரங்கள் வரை

சீனாவில் அரசியல் நிர்வாகத்தின் அடிப்படையில் மத்திய அரசிற்கு கீழ் 33 மாகாணங்கள் செயல்படுகிறது. இந்த 33 மாகாணங்களிலும் சில வேறுபட்ட நிர்வாக முறைகள் கடைபிடிக்கப் படுகிறது. மாகாணம் என்ற அடிப்படையில் 22 மாகாணங்கள் உள்ளன. தேசிய இனங்களுக்கான ஐந்து தன்னாட்சி பிரதேசங்கள் இருக்கிறது. நான்கு பெரு நகரங்கள் மற்றும் இரண்டு சிறப்பு நிர்வாக அமைப்புகள் என மொத்தம் 33 அமைப்புகள் செயல்படுகிறது.55 சிறுபான்மை இன குழுக்கள் இருந்தாலும் அவர்கள் வாழக்கூடிய இடம் என்பது சீனாவின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. இன சிறுபான்மையினர் குவியலாக வாழக்கூடிய இடங்களில் அதற்குரிய தன்னாட்சி அமைப்புகளை சீன அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சீனாவில் 155 இன தன்னாட்சி பகுதிகளும்   5 பெரிய தன்னாட்சி பிரதேசங்களும் உள்ளன.  அவை முறையே குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பிரதேசம், நிங்சியா ஹுய் தன்னாட்சிப் பிரதேசம், ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம், திபெத் தன்னாட்சிப் பிரதேசம், உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசங்களாகும்.

இவை தவிர முப்பது தன்னாட்சி பகுதிகளும், 120 தன்னாட்சி மாவட்டங்களும் இருக்கிறது. தன்னாட்சிப் பகுதிகள், தன்னாட்சி மாவட்டங்கள் என்பது குறிப்பிட்ட தன்னாட்சி பிரதேசங்களில் இன சிறுபான்மை மக்கள் குவியலாக குடியிருந்தால் அவர்களுக்கான தன்னாட்சி பகுதியாகவோ அல்லது தன்னாட்சி மாவட்டமாகவோ அது உருவாக்கப்படும். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் இவற்றை உருவாக்கி உள்ளார்கள்.

உதாரணமாக ஜின்ஜியாங் உயிகூர் தன்னாட்சி பிரதேசத்தில் ஹூய் இன மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவியலாக வாழ்ந்தால் மக்கள் தொகைக்கு ஏற்ப அதை ஒரு தன்னாட்சிப் பகுதியாகவோ அல்லது மாவட்டமாகவோ உருவாக்கியுள்ளார்கள். இந்த நிர்வாக அமைப்பு முறைகள் ஐந்து தன்னாட்சி பிரதேசங்களுக்கு மட்டுமல்ல, சீனாவில் உள்ள இதரப் பகுதிகளில் குவியலாக வாழ்ந்தாலும் சிறுபான்மை மக்களுக்கான தன்னாட்சி பகுதியாக அவை மாற்றப்பட்டு உள்ளன.

 

இவை தவிர சீனாவில் 1,173 இன நகரங்கள் உள்ளன. இந்த இன நகரங்கள் என்பது மிகச் சிறிய அளவிலான இன மக்கள் வாழக்கூடிய பகுதியை கிராமங்கள் அல்லது நகரங்களை தன்னாட்சி இன நகரங்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பிராந்திய சுயாட்சி சட்டத்தின் அடிப்படையிலான சலுகைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. சீனாவில் இருக்கிற 55 இன சிறுபான்மையினருக்கு 44 தன்னாட்சி பகுதிகளை நிறுவி இருக்கிறார்கள். இங்கு பிராந்திய சுயாட்சி முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. சீனாவில் உள்ள மொத்த சிறுபான்மை மக்களில் பிராந்திய சுயாட்சி நிர்வாகத்தின் கீழ் 71% மக்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலான சிறுபான்மை மக்கள் சுயாட்சி அரசு நிர்வாகத்திற்கு கீழ் வருவது வேறு எங்கும் இல்லாத ஒரு முன்னுதாரணமாகும். சீனாவில் இருக்கக்கூடிய இன சுயாட்சி பிரதேசங்கள் ஒட்டுமொத்த சீனாவின் நிலப்பரப்பில் 64% தன்னகத்தை கொண்டிருக்கிறது என்பது மற்றொரு மாறுபட்ட சூழலாகும்.

பிராந்திய சுயாட்சி குறித்து சீன மக்கள் குடியரசு தனது அரசியல் சட்டத்தில் கீழ்கண்டவாறு இறுதி செய்துள்ளது. சீனாவில் இன சிறுபான்மை மக்களுக்கான பிராந்திய சுயாட்சி என்பது அரசின் ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் இன சிறுபான்மையினர் சமூகங்களாக வாழும் பகுதிகளில் பிராந்திய  சுயாட்சி முறைகளை கடைபிடிப்பது என்பது ஆகும். அதாவது அரசின் ஒருங்கிணைந்த தலைமை என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள இன தேசம் அல்லது இன சுயநிர்ணய உரிமை போன்ற கருத்துக்களில் இருந்து சீன அரசியல் சட்டத்தின் வரையறை என்பது நுணுக்கமான முறையில் வரையறுக்கப் பட்டுள்ளது. இது ஒற்றை ஆட்சி அமைப்பின் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைந்த உள்ளூர் சுயாட்சி வடிவத்தை செயல்படுத்துவதாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சிறுபான்மை இன வளர்ச்சி கொள்கை.

எந்த ஒரு சமூகத்தின் அடிப்படை நோக்கமும் வளர்ச்சி பெறுவதாகதான் இருக்க முடியும். ஒவ்வொரு நாளும் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விதமான வேறுபட்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் கடைபிடிக்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் அல்லது முதலாளித்துவ கொள்கைகளை கடைபிடிக்க கூடியவர்கள் இன சிறுபான்மையினர் வளர்ச்சிக்கும் பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கும் இரண்டு விதமான பாதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒன்று தாராளமயம் (liberalism) மற்றொன்று பொதுவுடமை வாதம் (Communitarianism) என்பதாகும். (இந்த வார்த்தையை சோசலிச சித்தாந்தத்துடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது)

மேற்கண்ட கொள்கையின் அடிப்படையில் தாராளமய அரசு சிறுபான்மை மக்களின் இன கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளில் நடுநிலைமையை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். மதிப்பதும் நடுநிலை வகிப்பதும் என்றால் அரசின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் வளர்ச்சியில் அரசின் பங்கு நேரடியாக இருக்காது என்று அர்த்தம். சந்தை தான் சிறுபான்மை மக்களின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்று அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். சந்தையின் சுதந்திரப் போட்டி அடிப்படையில் சிறுபான்மை மக்கள் முன்னேறிக் கொள்ளலாம் என்பதுதான் இதன் அர்த்தம்.

சந்தை சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தியது அடையாள அரசியலை நோக்கி தள்ளியது. மற்றொன்று சந்தை வாதத்தை புறக்கணித்து, ஒரு குழுவிற்குள் உள்ள தனி நபர்களின் உரிமைகளை விட குழு உரிமைகள் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறது. இதன் மூலம் பழங்குடி மக்களின் வளர்ச்சியை பாதுகாக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள். இந்தக் கொள்கை அமலாக்கத்தினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பழங்குடி மக்கள் தங்கள் பகுதியின் வளங்களை இழந்தார்கள். அவர்கள் வாழ்வாதார ரீதியாக கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப் பட்டார்கள். குழுக்களுக்கான செழிப்பு என்பது வளரவில்லை.

சீன மக்கள் குடியரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு மாறான முறையில் சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்கு சோசலிச சித்தாந்தத்தின் வழிகாட்டுதல் அடிப்படையிலும், சீன சூழலுக்கு ஏற்ற வகையிலும் தங்களது இனக் கொள்கைகளை உருவாக்கினார்கள். 1949 ஆம் ஆண்டு சீன மக்கள குடியரசு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கொள்கைகளை உருவாக்கியது மட்டுமல்ல, தொடர்ச்சியாக காலத்துக்கு ஏற்ப மாற்றங்களையும் செய்து கொண்டே வருகிறார்கள். 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு இன சமத்துவம், இன ஒற்றுமை மற்றும் பிராந்திய இன சுயாட்சி என்ற கொள்கையை நிறுவியது.

 

இதன் முதல் கட்டமாக சிறுபான்மை இனங்களிடையே உள்ள செல்வாதார பங்கீடு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். வாழ்வாதாரம், கல்வி, வேலை, மருத்துவம், சுகாதாரம், வறுமை போன்றவைகள் அறிந்து கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் சீனாவின் கொள்கை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியது

1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சீனாவின் அரசியல் சட்ட அமைப்பில் சீன மக்கள் காங்கிரஸில் அதாவது பாராளுமன்றத்தில் அனைத்து இன சிறுபான்மையினரும் பொருத்தமான எண்ணிக் கையில் பிரதிநிதிகளை கொண்டிருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது. இந்த ஏற்பாடு அனைத்து இன சிறுபான்மையி னருக்கும் சிறிய மக்கள் தொகை கொண்ட சிறுபான்மையினராக இருந்தாலும் அரசின் நிர்வாகத்தில் பங்கேற்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தியது. இந்தப் பின்னணியில்தான் 1954 ஆம் ஆண்டு திபெத்திலிருந்து  தலாய்லாமா துணை பிரதமராகவும், பஞ்சன்லாமா மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

1954 முதல் 59 வரை சீனாவில் இயங்கிய தேசிய மக்கள் காங்கிரஸில்(பாராளுமன்றம்) 1226 பிரதிகள் இருந்தார்கள். இதற்கு ஏற்ற வகையில்தான் சிறுபான்மையினரின் பங்களிப்பும் இருந்தது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 14 வது தேசிய மக்கள் காங்கிரஸில் இன சிறுபான்மை பிரதிநிதிகள் சுமார் 12 சதவீதம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அது மட்டுமல்ல மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட இன சிறுபான்மை குழுக்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதியாவது இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டு முடிவுகளை அமலாக்கினார்கள்.

மற்றொரு முக்கிய அம்சம் இன பாகுபாட்டிருக்கு தடை விதித்தது மட்டுமல்ல, புரட்சிக்கு முன்பு இன பாகுபாட்டின் ஒரு வடிவமாக இருந்த அதாவது இனத்தை இழிவாக குறிப்பிட்ட பெயர்கள் அனைத்தையும் மாற்றி அமைத்தார்கள். உதாரணமாக ஜுவாங் சிறுபான்மை இன மக்களை டொங் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இவை நாயுடன் இணைத்து இழிவுபடுத்தப்பட்ட வார்த்தையாகும். இவற்றை மாற்றி ஜுவாங் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இதுபோன்ற இழிவான பெயர்களை நீக்கியது மட்டுமல்ல இனம் தொடர்பான வரலாற்று ரீதியான குழப்பங்களையும் சரி செய்தார்கள். இதற்காக நீண்ட ஆய்வுகள் நடத்தி அதன் மூலம் இந்த குறைகள் நீக்கப்பட்டது. புரட்சிக்கு முந்தைய இன சிறுபான்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், இழி செயல்களும் படிப்படியாக ஒழிக்கப்பட்டன.

மத்திய அரசாங்கத்திற்கும், இன சிறுபான்மை பகுதிகளுக்கும் இடையிலான நேரடி உறவுகள் பலப்படுத்தப்பட்டது. மத்திய அரசு இன சிறுபான்மை பகுதிகளுக்கு, நிலைமைகளை ஆய்வு செய்யவும், உறவுகளை மேம்படுத்துவதற்கும் தனது பிரதிநிதிகளை அனுப்பியது. சீனாவில் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் இன சிறுபான்மை மக்களை பொருளாதார ரீதியாக முன்னேறிய சீனாவின் இதரப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது. இதன் மூலம் இன சிறுபான்மையின் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டது.

இன சிறுபான்மையினரின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் ஜனநாயக சீர்திருத்தங்களை சோசலிச ரீதியான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள் சிறிய மக்கள் தொகை கொண்டவர்களை சோசலிச பாதையை நோக்கி செல்வதற்கு வழி வகுத்தது. 1949 இல் சீனா நிறுவப்பட்ட போது, சில இனக் குழுக்கள் பழமையான வாழ்க்கையிலேயே பின்தங்கி இருந்தார்கள். இவர்கள் நிலபிரபுத்துவ, முதலாளித்துவ உற்பத்தி முறையை சந்திக்காமலேயே கடந்து சோசலிக சமூக அமைப்புக்குள் நுழைந்தனர்.

முக்கியமாக யுன்னான் மாகாணத்தில் உள்ள ஜிங்போ, லிசு, டெருங், நு, பிளாங், வா, ஜினோ மற்றும் தி’யாங் இக்குழுக்களும், உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதி மற்றும் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் ஓரோகென், எவென்கே மக்கள், ஹைனான் தீவில் உள்ள லி இனத்தைச் சேர்ந்த சில சமூகங்கள் ஆகியவை நிலபிரபுத்துவ, முதலாளித்துவ சமுக அமைப்பை முறையை சந்திக்காமலேயே கடந்து சென்றது. இது சமூக வளர்ச்சியில் ஒரு மாறுபட்டு முன்னேற்றம்.

இந்த காலகட்டத்தில் சீனா ஏராளமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. ஒரு சோசலிச நாட்டை கட்டி எழுப்புவதற்கு பங்களிக்க அரசாங்கம் இன சிறுபான்மையினரை திரட்டியது. பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில்,  இன சிபான்மை மக்களை சீன விரோத சக்திகள் சீன ஒற்றுமைக்கு எதிராக தூண்டி விட்டார்கள். அவற்றை எதிர்கொண்டு சீன சிறுபான்மை இன மக்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியது. அரசியல் அதிகாரத்தில், பொருளாதாரத்தில், கலாச்சார கல்வித் துறையில் என அனைத்திலும் சிறுபான்மை மக்கள் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சீன மக்கள் குடியரசின் கொள்கையின் விளைவாக 2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரை 91% உள்ள ஹான் மக்கள் தொகையைவிட, சிறுபான்மை இன மக்கள் தொகை வேகமாக வளர்ந்தது. 2010 முதல் 2020 வரை ஹான் இன மக்கள் தொகை வளர்ச்சி 4.93% இருந்தது. மொத்த சிறுபான்மை இன மக்கள் தொகை வளர்ச்சி இதே காலத்தில் 10.26 சதவீதமாக அதிகரித்தது. சீன அரசின் சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்கான ஆதரவு கொள்கை இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும்.

 

-அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தேசிய இனங்கள் : ஒரு நாடு 56 கலாச்சாரங்கள்

  அ.பாக்கியம் சீனாவில் இன சிறுபான்மையினரை பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப் பதிலும் ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வை உருவாக்குவதிலும் சீன கம்யூனிஸ்...