Pages

செவ்வாய், மார்ச் 04, 2025

பாசிசம் அன்றும் – இன்றும் (மீள் பதிவு)

 

அ.பாக்கியம்

          ஏகாதிபத்திய நிதி மூலதனம் பெற்றெடுத்த மற்றொரு அரக்கன் பாசிசம். முதலாளித்துவத்தின் இருத்தலுக்கும், சுரண்டலுக்கும் ஆபத்து வந்தபோது, ஜனநாயகம், தாராளவாதம், தனிமனித சுதந்திரம் என்ற தனது மேலாடைகளை கலைந்து எறிந்துவிட்டு சுயரூபத்தை வெளிக்காட்டிய வடிவம்தான் பாசிசம். அணிதிரட்டப்பட்ட தொழிலாளர், விவசாய வர்க்கத்திடம் தனது மேலாண்மையை இழந்துவிடுவோம் என்ற அச்சுறுத்தல் வந்தபோது பாசிசம் என்ற கொடூர அடக்குமுறை வடிவத்தை கையிலெடுத்தது முதலாளித்துவம்.   

           பாசிசம் இருநாடுகள், இரு தலைவர்கள் தொடர்புடைய வரலாற்றின் பக்கங்கள் என்று விவரிப்பது அர்த்தமற்றது மட்டுமல்ல வரலாற்றின் புரட்டாகும். முதலாளித்துவ சமூக அமைப்பு உருவாகிய பிறகு, உழைக்கும் மக்களை இரத்த வெள்ளத்தில் முழ்கடித்த பேரழிவு நிகழ்வாகும் பாசிசம். குடுவையின் பூதத்தை வெளியே விட்டு கட்டுக் குள் கொணர முடியாமல் தினறிய மந்திரவாதி போல் அதன் தலைமை திகைத்த போது, சோவியத் யூனியன் தலைமையிலான உழைப்பாளி வர்க்கம் எழுச்சியுற்று பாசிசத்தை தோற்கடித்தது. பாசிசம் தலைதூக்கியதையும், தலைவிரித்தாடியதையும் படித்தால் மீண்டும் அதன் முகங்கள் வெளிவருவது தெரியும். வேறு தலைவர்களால், வேறு வார்த்தைகளில், வேறு வடிவத்தில் வலம்வருகிறது.

பெயரும் - பிறப்பும்

           ஃபாசஸ் (faces) என்ற தொன்மையான வார்த்தை யிலிருந்துதான் பாசிசம் என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. இணைத்து கட்டப்பட்டிருக்கும் இரும்புத்தடிகளின் கழுத்தில் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் கோடாரி காம்பை குறிக்கும் சொல் இந்த ஃபாசஸ். பண்டைய ரோமர்களின் ஒற்றுமை மற்றும் அதிகாரத்தை குறிக்கும் சொல் ஆகும். பண்டைய ரோம சாம்ராஜியத்துடன் இணைப்பதற்கும், பழம்பெருமைகளில் புதிய சுரண்டலை நடத்திடவே, தொன்மையான வார்த்தைகளை தோண்டி எடுத்தார் முசோலினி.   

          அன்றைய உழைக்கும் மக்களாகிய அடிமைகளின் தலைவனான ஸ்பார்ட்டகசையும், லட்சக்கணக்கான அடிமைகளையும் “ரத்தக்கடலில் மூழ்கடித்தரோம சாம்ராஜியத்தையே தனது முன்மாதிரியாக அறிவித்தார் முசோலினி. அச்சுறுத்தும் அடையாளத்துடன், ஒற்றுமை அதிகாரம் என்ற கோஷத்துடன் தனது அரசியல் களத்தை துவக்கினார்.

          1921 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 -ம் தேதி தேசிய பாசிஸ்ட் கட்சியை, பெனிட்டோ முசோலினி இத்தாலியில் துவக்கினார். 1922 -ம் ஆண்டு இத்தாலியின் நாடாளுமன்றத்திற்கு  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஆட்சி அமைத்த லிபரல் கட்சிக்கு எதிராக செயல்பட்டு, ரோமாபுரியை நோக்கி “கருஞ்சட்டை வீரர்களின் அச்சுறுத்தும் பேரணியை நடத்தி குழப்பம் விளைவித்தார்.

          அதே ஆண்டு மன்னரால் கூட்டணி அரசுக்கு பிரதமராக நியமிக்கப்பட்டார். 400 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 35 உறுப்பினர் உள்ள தேசிய பாசிஸ்ட் கட்சி பிரதமர் பதவியை பிடித்து 1924 -ம் ஆண்டு முசோலினி நாட்டின் அனைத்து அதிகாரமிக்க தலைவரானார்1920 -ம் ஆண்டு தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி அன்டன் டக்ஸ்லர் என்பவரால் துவக்கப்பட்டு 1921 -ம் ஆண்டு அடால்ப் ஹிட்லர் இதன் தலைவரானார். இதுவே நாஜி கட்சி என்று அழைக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி, தனது பழுப்புநிற சீருடை (brown shirts) வீரர்களால் அச்சுறுத்தலை நிகழ்த்தி 1933 -ம் ஆண்டு ஜனவரி 30 அன்று மன்னரால் ஜெர்மன் அதிபராக நியமிக்கப்பட்டார்.

 ஸ்பெயின் நாட்டில் 1936 -ம் ஆண்டு ஜெனரல் பிராங்கோ தலைமையில் பாசிச கட்சி ஆட்சியை பிடித்தது. போர்ச்சுகல், அர்ஜெண்டைனா, ஜப்பான் நாடுகளிலும் பாசிச கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தன. முசோலினி தனது அரசை மூன்றாம் ரோம சாம்ராஜ்யம் என்றும், இது இத்தாலிய கலாச்சாரத்தின் அடையாளம் என்றும் அறிவித்தார். ஹிட்லர் தனது அரசை மூன்றாம் ரீச் (நாடாளுமன்றம்) என்றும், அதையே இனத்தூய்மையின் சின்னம், மூன்றாம் பேரரசு என்றும் அறிவித்தார்.

பாசிசத்தின் தத்துவம் - அரசியல் கொள்கை

            பாசிசத்தின் தத்துவம் பற்றி அறிஞர்கள் விரிவான முறையிலும், குறுகிய அளவிலும் எண்ணற்ற விளக்கங்களை அளித்துள்ளனர். அவற்றை சுருக்கி பொதுவாக அதன் அடிப்படை தத்துவம், இனவாதம், தேசியவெறி, வெளிப்படை சர்வாதிகாரம் என்று  வரையறுத்துள்ளனர்.

     ஜனநாயகம்,கம்யூனிசம், தாராளவாதம் ஆகியவை பாசிசத்தின் எதிர்ப்பாக இருந்தது. வசீகரமான, திறமைமிக்க, செயல்படும் ஒரே தலைவர். அவரின் கீழ் இராணுவம், அரசு, மக்கள், சமூகம் செயல்பட வேண்டும் என்பதுதான் பாசிசத்தின் அடிப்படை கொள்கை. அந்த தலைவரின் பேச்சை, எழுத்தை அனைவரும் கேட்க வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்பது வேதமந்திரம்.

          மதிப்புமிக்க ஜெர்மானிய ஒழுங்கும், கட்டுப்பாடும், தூய்மையையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று ஹிட்லர் கர்ஜித்தார். எனவே, “ ஒரே தலைவர்,  ஒரே பேரரசு,  ஒரே மக்கள் ”என்று கோஷத்தை முன்வைத்தார்.

கலாச்சார அடையாளத்தை நிலைநாட்ட, சாம்ராஜ்ய மேலாண்மை பாதுகாக்க நம்பு, கீழ்படி, சண்டையிடு (BELIVE,OBEY,FIGHT ) என்றும் என்னை பின்தொடர், நான் துரோகம் செய்தால் கொன்றுவிடு, நான் கொல்லப்பட்டால் எனக்காக பழிவாங்கு என தனது வீரர்களுக்கு உத்திரவிட்டார் முசோலினி. தாராளவாதம் முதலாளித்துவத்திற்கும், வர்க்க மோதலுக்கும் இடையிலான தீர்வாக பாசிசம் முன்வைக்கப்பட்டது. வீணான போட்டி, லாபவெறி, புரட்சிகர மார்க்சியத்திற்கு மாற்று பாசிசம் என்று போதிக்கப்பட்டது.

அன்றைய இத்தாலி, ஜெர்மனியில் ஆளும் வர்க்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமான ஜனநாயகம், சோசலிசத்திற்கு எதிராகவும், சோவியத்யூனியனுக்கு எதிராகவும் சிந்தாந்த தாக்குதலை இரு நாட்டு தலைவர்களும் துவக்கினர்.

 “ஜனநாயகம் பேசுவதற்கு அழகாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு தவறானதுஎன்று முசோலினி பேசினார். “நாம் சோசலிசத்தை எதிர்க்கின்றோம். காரணம் சோசலிசம் பிடிக்காது என்பதற்கு அல்ல அது தேசியத்தை எதிர்க்கிறது என்பதற்காகத்தான் என்று முசோலினி கூறினார். ஹிட்லர் சோசலிசம் தொழிலாளர் கட்சி என்று பெயர் வைத்துக் கொண்டு, இனவெறி, தேசியவெறி, சர்வாதிகாரம்தான் சோசலிசம் என்று புதுவிளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.சோவியத் யூனியனும், யூதர்களும் இணைந்து பாசிசத்திற்கு எதிராக சதி செய்கின்றனர் என்று பேசினார். சோவியத் யூனியன் யூதர்கள் தலைமையில் செயல்படக்கூடிய “செல்வந்தர் ஆட்சிஎன்று புளுகுமூட்டை பிரச்சாரத்தை, தவறாக கட்டமைக்கப்பட்ட புள்ளி விபரத்துடன் பிரச்சாரம் செய்தனர்

கார்ப்பரேட்டிசம் :

           முதலாளித்தும் தனது நெருக்கடியிலிருந்து மீள, தனது மேலாண்மையை தக்கவைத்துக் கொள்ள அது புதிய புதிய அவதாரங்களை எடுத்துக் கொண்டே இருக்கும். அது கலப்பு பொருளாதாரம், கூட்டுப் பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம் என கவர்ச்சி உடைகளை தரித்துவிடும்.  முசோலினியும், ஹிட்லரும், தொழில் நிறுவனங் களின்    கார்ப்பரேட்டிசத்தை அதாவது அப்பட்டமான முதலாளி ஆதரவு பொருளாதாரத்தை சோசலிச, முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு மாற்று என்றனர்.

இதன்படி, தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமாக்கப்பட்டது. வேலை நிறுத்தம் கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டது. இத்தாலியில் “கருஞ்சட்டை படைகளும்ஜெர்மனியில் “பழுப்பு நிறசட்டை படைகளும்தொழிலாளர் பகுதியில் புகுந்து கலவரத்தை உருவாக்கி தொழிற்சங்கத்தை கலைத்தனர். கைப்பற்றிக் கொண்டனர். தொழில்நிறுவனங்களின் சுரண்டலுக்கு தங்குதடையற்ற பாதையை அமைத்தனர்.

பெண்கள் போற்றி ! போற்றி !

          பெண்களை பாசிசம் தெய்வமாக, மிக உயரத்தில் வைத்திருக்கிறது என்று முசோலினி, ஹிட்லர் பேசினர். இதை மைய்யமாக வைத்தே மக்கள் தொகை கொள்கைகளை அறிவித்தனர். வேலையின்மை பிரச்சினைகளை தீர்க்க, பெண்களை தொழிற்சாலைகளி லிருந்து வீட்டிற்கு அனுப்பினர். “ஆண்களுக்கு யுத்தகளம், பெண்களுக்கு பிரசவ அறைஎன்று முசோலினி அறிவித்தார். “பெண்களே தேசத்தின் மறு உற்பத்தியாளர்கள்(Reproduction of Nation) என்று போற்றினார். 1933 -ம் ஆண்டு முசோலினி 93 பெண்களை நேரடியாக சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தார்.காரணம் அவர்கள் 1300 ஆரிய குழந்தைகளை பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தார்.

ஹிட்லர் ஜெர்மனியில் பெண்கள் தங்களது வயிற்றில் ஆரிய குழந்தைகளை சுமக்க வேண்டும் என உத்தரவிட்டார். மிகச்சிறந்த ஜெர்மன் சமூகத்தை ((Ideal German Community)  அமைக்க வேண்டும் என்று பேசினார். 1935 -ம் ஆண்டு தூயஆரிய இனவிருத்தி மையத்தை (LEBONSBORN)) மையத்தை உருவாக்கினார் ஹிட்லர். இதில் ஆரிய இன பெண்கள், ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தனது பாதுகாப்பு தொண்டர்கள் (SS) கட்டாயம் 4 குழந்தைகள் பெற வேண்டும் என உத்தரவிட்டார். ஆரிய தாய்மார்களின் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டது. அப்படி செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது.

           ஆரியர், ஆரியர் அல்லாதார் திருமணம் தடை செய்யப்பட்டது. நாஜிக்கட்சியின் பெண்கள் பிரிவு, மனைவி மற்றும் தாயாக இருப்பதன் பெருமைகளை, முக்கியத்துவத்தை பிரச்சாரம் செய்தது. பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகளுக்கு, அடக்கமான மனைவி, சிறந்த தாய் பற்றி போதிக்கப்பட்டது. முதலாளித்துவ தாராளவாதம் பெண்கள் உரிமை சமத்துவம் பற்றி சட்டப்படி அதிகம் பேசும். ஆனால் பாசிசம் இதை பகிரங்கமாக மறுத்து, பெண்களை “பிள்ளைபெறும்இயந்திரமாக மட்டுமே மாற்றியது.

இனவெறியே - ஆட்சி நெறி

     முசோலினி தனது சாம்ராஜ்யத்தை “கலாச்சாரத்தின் அடையாளம்என்று பிரகடனப்படுத்தினார். இதன் பிறப்பிடம் டால்மேசியா பிரதேசம் என்றும், குரோசியா, அல்பேனியா, ஸ்லோவேனியா, இஸ்டிரியா ஆகிய பிரதேசங்கள் இத்தாலி கலாச்சாரத்தின் வேர்கள் உள்ள பகுதி என்றும் அவை இத்தாலியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பேசினார். அகண்ட இத்தாலி வடஆப்பிரிக்கா முதல் இந்திய பெருங்கடல் வரை உள்ளது என்றார். “பாசிசம் பிறந்தது. ஆம் இத்தாலிய ஆரிய இனத்தை எல்லையற்ற வகையில் நீண்டகாலம் வாழவைக்க பாசிசம் பிறந்தது என்று பெருமிதத்துடன் முசோலினி முழங்கினார்.

          இத்தாலிய எல்லைக்குள் வாழும் ஜெர்மானிய, ஸ்லாவ் இன மக்களை இத்தாலிய மயமாக்கிட உத்தரவிட்டார். ஸ்லாவ் மற்றும் ஜெர்மானிய மொழிகள் தடை செய்யப்பட்டது. இம்மொழி பத்திரிகைகள் இழுத்து மூடப்பட்டன. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. இம்மொழிகளை தாங்கிய ஊர், பிரதேச, குடும்ப பெயர்களை இத்தாலிய மொழியில் மாற்றி அமைக்க உத்தரவிட்டார். ஆரியர்கள், வெள்ளை நிறத்தவர்கள்- கருப்பர்களையும், மஞ்சள் இனத்தவர்களையும் கட்டுப்படுத்த, அடக்கிட உரிமை படைத்தவர்கள் என்று முசோலினி இனவெறியூட்டினார்.

          ஜெர்மனியின் ஹிட்லர் ஜெர்மானிய ஆரிய இனம் உயர்ந்த தூய்மையான வெள்ளைநிற இனம் என்றார். இந்த இனம் வடக்கு ஜெர்மனி சமவெளியில் தோன்றியது என்று வரையற செய்தார். ஜெர்மானிய மக்களை ஹிட்லர் ஐந்து வகையாக பிரித்தார்.

1)       தூய்மையான வெள்ளைநிற ஆரியர்கள்

2)       செம்பட்டை முடி உடையவர்கள் 

3)       நீலநிற கண்கள் உடையவர்கள்

4)       மற்ற ஐரோப்பியர்கள்

5)       அடிமைகள், ஆசிய ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்

என வகைப்படுத்தி, மக்களை துண்டாடினர்.

பிணம் தின்னும் சட்டங்கள்

இனவெறிக்கு எதிரியை கண்ணுக்கு முன்னே காட்ட வேண்டும். அப்போதுதான் மக்களை துண்டாட முடியும், வெறித்தனத்தை தட்டியெழுப்ப முடியும் எனக் கருதி ஐரோப்பிய நாடுகளில் பரவி இருந்த யூதர்களை எதிரிகளாக்கினர். ஆரிய இனத்தூய்மையை யூதர்கள் தங்களது கலப்பால் கெடுத்துவிடுகின்றனர் என்ற கருத்தை கட்டமைத்தனர். இதன் வெளிப்பாடாக இருநாடுகளிலும் இனப்பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினர். பேரரசு குடியுரிமைச் சட்டம் மற்றும் ஜெர்மானிய ரத்தம், கௌரவ பாதுகாப்புச்சட்டம் ஆகிய இரண்டு சட்டங்கள் ஜெர்மனியில் இயற்றப்பட்டது. இவை இரண்டும் நியுரம்பர்க் என்ற இடத்தில் இயற்றப்பட்டதால் நியுரம்பர்க் சட்டம் என அழைக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, யூதர்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது; பொது இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது; வேலைகள் பறிக்கப்பட்டன. யூதர்களின் கடைகளை மூடவேண்டும் என உத்தரவிட்டனர்.

          ஜெர்மன் பூமி, தூய ஜெர்மன் இன பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டது. எந்த ஜெர்மானியர்களும் யூதர்களை திருமணம் செய்யக்கூடாது. இந்த சட்டத்திற்கு முன் திருமணம் செய்திருந்தாலும் பிரிந்து விட வேண்டும். 45 வயதுக்கு உட்பட்ட ஜெர்மானிய பெண்கள் உள்ள வீட்டில் யூதர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என சட்டம் வரையறுத்தது. இதற்கான காரணத்தை சட்டத்தில் சொல்லத் தயங்கவில்லை. பிள்ளைபெறும் வாய்ப்பு 45 வயது வரை உள்ளதால் தவறான உறவால் இனத்தூய்மை கெட வாய்ப்புள்ளது என்று அறிவித்தனர். யூதர்கள் ஜெர்மானிய கொடியை பயன்படுத்த கூடாது என தடைவிதிக்கப்பட்டது.

          1942 -ம் ஆண்டு ஜூன் மாதம் 20 -ம் தேதி நாஜிக் கட்சி தலைவர்கள் வான்சி என்ற இடத்தில்  மாநாடு (Wansee Conference) நடத்தி இனத்தூய்மை பாதுகாக்க யூதர்களை கொன்றுவிடுவது என முடிவெடுத்தனர். அதற்கென ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதற்காக பல நகரங்களில் வதை முகாம், உழைப்பு முகாம் நிறுவப்பட்டது.

             வாழத்தகுதி அற்ற யூதர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மூளை வளர்ச்சி அற்றவர்கள், ஜிப்சிகள், ஓரின சேர்க்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். யூதர்களை மிகப்பெரிய கட்டிடத்தில் அடைத்து விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டனர். கூட்டமாக கொல்லப்பட்டவர்களை எரிக்க மிகப்பெரும் நெருப்புக்குழி உருவாக்கப்பட்டு அதில் லாரிகள் மூலம் பிணங்களை கொட்டினர்.

               1942 -ல் வார்சாவில் 10,000 பேர் இருக்க இடமுள்ள வதை முகாமில் 5  லட்சம் பேர்களை அடைத்தனர். 1943 -ல் இவர்களில் 73,000 பேர் மட்டுமே உயிரோடு இருந்தனர். 1942 ஜூன் மாதம் ஜெனரல் டிராப் தலைமையில் ஒரு படை பிரிவு போலந்தின் வார்சா நகரில் நுழைந்தது. “யூதர்களற்ற ஐரோப்பாஎன்ற நமது தலைவரின் கனவை நிறைவேற்ற, யூத தலைகளை வீழ்த்துங்கள் என்று கொக்கரித்தார். அந்த வீரர்கள் ஒரே நாளில் 1200 பெண்கள், குழந்தைகளை கொன்று குவித்தனர். இரத்தத்திற்கும், தண்ணீருக்கும் வேறுபாடு தெரியாத, குழந்தைகள், பெண்கள் என்ற மனித உருவம் அறியாத இனவெறி காட்டுமிராண்டிகளை உற்பத்தி செய்தனர் பாசிஸ்ட்டுகள்.

          ஜெர்மனியில் ஹிட்லரின் இனவெறி செயலுக்கு இணையாக இத்தாலியில் முசோலினி செயல்பட்டார். 1938 -ம் ஆண்டு இனப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றினார். 1919 -ல் யூதர்களுக்கு இத்தாலியில் அளிக்கப்பட்ட குடியிரிமையை ரத்து செய்தார். நகரங்களில் 20,000 லியருக்கு (நாணயம்) மேல் வருமானம் கூடாது. கிராமப்புறத்தில் உள்ள யூதர்கள் 5000 லியருக்கு மேல் வருமானம் தரும் நிலத்தை வைத்திருக்கக் கூடாது. 100 பேருக்கு மேல் உள்ள தொழிலகங்களை யூதர்களை நடத்தக்கூடாது. இராணுவத்தில் சேர, அரசுப்பணி, யூதரல்லாத இத்தாலியரை திருமணம் செய்திட என எல்லாவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட யூதர்கள், இத்தாலியரை திருமணம் செய்த யூதர்கள் தவிர மற்ற அனைவரும் இத்தாலியை விட்டு நான்கு மாதத்தில் வெளியேற இச்சட்டத்தின் வாயிலாக உத்தரவிட்டார் முசோலினி.

          பாசிசத்தின் முதல் விளைவு உள்நாட்டில் அவை ஏற்படுத்திய மனிதப்படுகொலை. மற்றொரு விளைவு உலகை ஆள நினைத்து உருவாக்கிய இரண்டாவது உலகப்போர். உள்நாட்டில் யூதர்களை வேட்டையாடியது ஒரு அடையாளம். யூதர்களை எதிரிகளாக சித்தரித்து ஒட்டுமொத்தமான ஜனநாயக உரிமை, அரசியல் பொருளாதார, தனிமனித உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் என அனைத்தையும் முதலாளித்துவம் தனது சுரண்டலுக்காக அபகரித்துக் கொண்டது. பாசிசத்தின் இரண்டாவது விளைவான உலகப்போரில் ஜெர்மனி, ஐரோப்பா முழுவதும் குறிப்பாக பிரான்ஸ் முதல் டென்மார்க் வரை கைப்பற்றியது. இத்தாலி அண்டை நாடுகளைக் கைப்பற்றி, வட ஆப்பிரிக்காவிற்குள் நுழைந்தது. ஸ்பெயின் இழந்த லத்தீன் அமெரிக்காவை மீட்பதற்காக யுத்தத்தில் இறங்கியது. அன்றைய ஐரோப்பாவில் பின்தங்கிய நாடாக கருதப்பட்ட போர்ச்சுகல் பல பகுதிகளை கைப்பற்றியது.

ஹிட்லர் பல நாடுகளை வீழ்த்தி பிரான்சையும் தனது காலடிக்கு கீழ் கொண்டுவந்த பிறகு சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். அங்குதான் பாசிசத்தின் பின்னடைவு துவங்கியது. அதன் தொடர்ச்சியாக  பாசிசம் முகம் தரித்த முதலாளித்துவம் தோல்வியை சந்தித்தது. இதற்காக சோவியத் யூனியன் மனித குலம் சந்தித்திராக இழப்புகளை சந்தித்தது. 2 கோடியே 66 லட்சம் பேர் மரணமடைந்தனர். பல லட்சம் பேருக்கு அங்கஹீனம் ஏற்பட்டது. 1710 நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. 32,000 தொழிற்சாலைகள் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டன. 98,000 விவசாய கூட்டுப்பண்ணைகள் அழிக்கப்பட்டன. எனவே, மனிதகுலம் சந்தித்திராத பேரழிப்பு மட்டுமல்ல அதுவரை மனிதகுலம் எதிர்பாராத மறு கட்டமைப்பையும் சோவியத் யூனியன் உழைக்கும் மக்கள் உதவியால் சாதித்து காட்டியது.

பாசிசம் எழுச்சி பெறக் காரணம் என்ன?

          பாசிசம் முதலாளித்துவத்தின் மற்றொரு அடக்குமுறை வடிவமாக இருந்தாலும், இவை எழுச்சிபெற மூன்று முக்கிய காரணங்கள இருந்தன. ஒன்று, அன்றைய ஐரோப்பாவில் நிலவிய பொருhளாதார நெருக்கடிகள். முதலாம் உலக யுத்தத்தில் ஐரோப்பா கடும் இழப்புகளை சந்தித்து இருந்தது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில் 1919 -ம் ஆண்டு ஜூன் மாதம் 20 -ம் தேதி பிரான்சின் தலைநகர் அருகில் வெர்செயில்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி ஜெர்மனி எல்லை சுருக்கப்பட்டது. ஜெர்மனியின் இராணுவம் கட்டுப்படுத்தப்பட்டது. இராணுவ நிலையங்கள், பள்ளிகள், பயிற்சிகள் தடைசெய்யப்பட்டன.

யுத்த இழப்புகள் அனைத்தும் ஜெர்மனி மீது திணிக்கப்பட்டது. இதன் விளைவாக, பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்தது. “வண்டி நிறைய பணத்தை எடுத்துச் சென்று பைகளில் காய்கறி வாங்கி வரும் அளவிற்குபாய்ச்சல் வேக பணவீக்கம் இருந்தது. மதிப்பிழந்த காகித பணத்தை பெண்கள் அடுப்பு பற்ற வைக்கக்கூட பயன்படுத்தினர்.

          எனவே, கடும் நெருக்கடியில் இருந்த மக்களிடம் நாஜிக்கட்சியின் பிரச்சாரம் எடுபட்டது. ஆட்சியில் இருந்த வெய்மர் அரசு இராஜ துரோக செயல்களில் ஈடுபட்டு வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை அமலாக்க முயற்சிக்கிறது. இழந்த இராணுவத்தை மீண்டும் உருவாக்க, ஜெர்மனி இழந்த பகுதியை மீட்டு ஒன்றுபட்ட ஜெர்மனியை அமைத்திட, ஜெர்மனியின் நெருக்கடிக்கு காரணமான வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்திட வேண்டும் என்று ஹிட்லர் பிரச்சாரத்தை துவக்கினார்.

          இதே போன்று முதல் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சி நடைபெற்று போல்ஷ்விக் கட்சி லெனின் தலைமையில் ஆட்சியை பிடித்தது. அத்தகைய சூழல் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் இருந்தது. ஜெர்மனியில் தொழிலாளி வர்க்கம், கம்யூனிஸ்ட் கட்சியும் பலமாக இருந்தது. இத்தாலியிலும் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம் சக்தியான அமைப்பாக திகழ்ந்தது. 1918 முதல் 1922 வரை மேற்கண்ட மூன்று நாடுகளிலும் தொழிலாளர், விவசாய எழுச்சிகளும் நடைபெற்றது. சில நேரத்தில் புரட்சிகரமான நடவடிக்கைகளும் இருந்தன. எந்த நேரத்திலும் தொழிலாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றி விடும் என்ற அபாயத்தை முதலாளித்துவம் எதிர்கொண்டு நின்றது.

இந்த பின்னணியில் 1928 -ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் ஹிட்லரின் நாஜி கட்சி 3 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. எனவே, அன்றைக்கு இருந்த முதலாளித்துவ வர்க்கம் தனது சுரண்டிலின் மேலாண்மையை பாதுகாக்க, ஜனநாயகம், தாராளவாதம், தனிமனித சுதந்திரம் என்ற வேஷத்தை கலைத்து; பாசிசத்தை தழுவிட முடிவெடுத்தது. எனவே, ஹிட்லருக்கும் முசோலினிக்கும் முதலாளிகள், நடுத்தர முதலாளிகள், தாராளமான வகையில் நிதி உதவி செய்தனர்.

ஹிட்லர், மார்க்சிய புரட்சியை தடுத்திட, அதற்கு எதிராக முதலாளிகள், நடுத்தர வர்க்கம் முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். முதலாளித்து அறிவுஜீவிகளை தன்னைச் சுற்றி இருக்க வைத்தார். வெகுமக்களை கவருவதற்கு “சோசலிச புரட்சிபாசிசத்திற்கு எதிரான யூதர்களின் சதி என்று முசோலினி பிரச்சாரம் செய்தார். எனவே, நெருக்கடியிலும், ஒற்றுமையின்றியும், வர்க்கப் புரட்சியின் அபாயத்தை எதிர்நோக்கிய தொழில் நிறுவனங்கள் ஹிட்லர், முசோலினி பின்னால் அணி திரண்டனர்.

          இரண்டாவதாக, பாசிசம் ஆட்சிக்கு வந்த நாடுகளில் இருந்த அரசியல் கட்சிகள் குறிப்பாக நடுநிலைக் கட்சிகளாக (ஊநவேநசளைவ யீயசவநைள)*** ஆங்கிலம்

தங்களை அறிவித்துக் கொண்டவர்களின் சந்தர்ப்பவாத நிலைபாடுகள், பாசிச கட்சிகளுடனான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதால், ஹிட்லர், முசோலினி தங்களது செல்வாக்கை பெருக்கி கொண்டனர்.

          மூன்றவதாக, சோவியத் யூனியன் போல், இத்தாலியிலும், ஜெர்மனியிலும் புரட்சி நடைபெறுமோ என பிரிட்டன், அமெரிக்கா அஞ்சி நடுங்கியது. எனவே, பிரிட்டன் அரசு முசோலினிக்கு பொருளாதார உதவி உட்பட அனைத்து உதவிகளையும் யுத்தம் ஆரம்பிக்கும் வரை செய்து வந்தது. அமெரிக்கா ஜெர்மனியில் நாஜிக்கட்சியுடன் உறவுகளை வைத்தது. அந்நாட்டு நாஜி கட்சி முதலாளிகளுடன் தொழில் உறவு, இராணுவ தளவாட வர்த்தகம் உட்பட அனைத்தையும் செய்து வந்தது. பாசிசத்தின் எழுச்சிக்கு இவை அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.

பாசிசம் : வர்க்க பாசத்தின் குறை மதிப்பீடு

          இன்றைய முதலாளித்துவ தாராளவாத அறிஞர்கள் பலர் பாசிசத்தை வரலாற்றில் இரு நாடுகளில் நடந்த தற்காலிக நிகழ்வாக பார்க்கின்றனர். அதையே உண்மை என நிரூபிக்க முயலுகின்றனர். பாசிசம் அன்றே உலகம் தழுவிய நிகழ்வாகத்தான் இருந்தது. ஐரோப்பாவின் நான்கு நாடுகளை கடந்து ஜப்பான், அர்ஜெண்டைனா நாடுகளிலும் ஆட்சியைப் பிடித்தது.

          உலகில் பல பாசிச கருத்துக்களை கொண்ட இயக்கங்கள் ஆசியா, ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாவதற்கு காரணமாக இருந்தன. லெபனானில் பலேங்கி இயக்கம், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபா, எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புகளின் உருவாக்கத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது. ஐரோப்பாவின் பிரான்ஸ் முதல் டென்மார்க் வரை அனைத்து நாடுகளிலும் பல அமைப்புகளுடன் விரிவான உறவை பாசிஸ்ட்கள் வைத்திருந்தனர்.

          யூதர்களையும் இதர பகுதி மக்களையும் இனப்படுகொலை செய்தது முசோலினி, ஹிட்லர் என்று மட்டும் கூறுவது தவறு. அன்று பின்தங்கிய நாடுகளான போலந்தில் இருந்த ஆட்சியாளர்களுடன் மட்டுமல்ல, வளர்ந்த நாடான பிரான்ஸ், டென்மார்க்குகளில் உள்ள பல அமைப்புகளுடனும், ஆட்சியாளர்களின் உதவியுடனும் இந்த படுகொலைகளை பாசிஸ்ட்கள் அரங்கேற்றினர். இதுபோன்ற படுகொலைகளுக்கு துவக்கமும், முடிவும் ஹிட்லரும், முசோலினியும்தான் என்று போதிக்கப்படுகிறது.

      இதற்குமுன் அமெரிக்கா தனது எல்லை விரிவாக்கத்தை செவ்விந்திய பூர்வகுடி மக்களின் இரத்த வெள்ளத்தில்தான் அரங்கேற்றியது. ஆஸ்திரேலிய பூர்வகுடி பூமியில் இன அழிப்பின் வாடை இன்றும் வீசுகிறது. அமெரிக்காவின் புதிய உலகம் ஆப்பிரிக்க கருப்பின மக்களின் அடிமை வியாபாரம், வியட்நாம் அழிப்பின் மீது கட்டமைக்கப்பட்டது. இன்றும் அது ஈராக், பாலஸ்தீன படுகொலைகளின் மீதுதான் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.

          சர்வாதிகாரிகளின் பட்டியலில் ஹிட்லர், முசோலினியுடன் ஸ்டாலினையும், சோசலிசத்தையும் இணைத்து பிரச்சாரம் செய்வது அபாண்டமானது. சோவியத் நாடு, ஸ்டாலின் தலைமையில் பாசிசத்தை மட்டும் தோற்கடிக்கவில்லை, இன்றைய ஐரோப்பாவில் ஜனநாயகம், தாராளவாதம் (டுiநெசயடளைஅ)*** ஆங்கிலம்

 இருப்பதற்கு காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது. 60 லட்சம் யூதர்களின் படுகொலைகளை பற்றி அயராது பேசும் ஏகாதிபத்தியவாதிகள் சோவியத் யூனியனின் 2.66 கோடி மக்களின் இழப்பு பற்றி பேச மறுக்கின்றனர்.

       இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் ஒரு சில கப்பல்களை ஜெர்மனிக்கு அனுப்பி யூதர்களை ஏற்றி வந்ததை பேசும் ஏகாதிபத்தியவாதிகள், யூதர்களுக்காக மட்டுமல்ல, பாசிச பிடியிலிருந்து சாதாரண மக்களும் தப்பிக்க தனது எல்லையை திறந்துவிட்ட சோவியத் பற்றி பேச மறுக்கின்றனர்.

 இரண்டாவது உலக யுத்த முடிவில், ஸ்பெயின், போர்ச்சுகல் நாட்டில் உள்ள பாசிச ஆட்சியை நீக்கிவிடலாம் என்று ஸ்டாலின் முன்வைத்த ஆலோசனையை பிரிட்டன், அமெரிக்கா மறுத்துவிட்டன. பிறகு ஸ்பெயின் நாட்டு பாசிச ஆட்சியுடன் உறவு கொண்டு அவர்களை நேட்டோ ராணுவ அமைப்பில் இணைத்தனர். 1975 -ம் ஆண்டு வரை ஜெனரல் பிராங்கோவின் இராணுவ ஆட்சியை அமெரிக்கா, பிரிட்டன் ஆதரித்தன.

75 ஆண்டுகளுக்கு பிறகு...?  பாசிசம்   முடிந்துவிட்ட  ஒன்றல்ல...

 பாசிசத்தின் ஆட்சி அகற்றப்பட்டு 75 ஆண்டுகளுக்கு பிறகும் அவை புதிய வடிவில் தலைதூக்கிடும் நிகழ்வுகள் நடக்கிறது. அதற்கான சமூக பொருளாதார நெருக்கடிகளும் வளமாக இருக்கிறது. அன்று “இனம்முக்கிய கருவியாக பயன்பட்டது. இன்று “மதம்பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகள் இன்று பல நாடுகளில் பாசிச சக்திகளை நீரூற்றி அல்ல “நிதியூற்றி‘‘, ஆயுதம் கொடுத்து வளர்க்கப்படுகின்றது.

           ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுயசார்பு அடிப்படையில் உருவாகிற நாடுகளை அழிக்க பாசிச சக்திகளை பயன்படுத்துகின்றனர். சிலியில் ஹலேண்டே படுகொலை துவங்கி சிரியா வரை விரிவுபடுத்துகின்றனர்.

          அரபு உலகில் முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஆட்சியை அகற்றிடவும், அவர்களை அழித்திடவும் மத பழமைவாதிகளை பயன்படுத்துகின்றனர். எகிப்து உட்பட பல நாடுகளில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பையும். பாகிஸ்தானில் ஜமைத்-இ-இஸ்லாம், சவுதி அரேபியாவில் வஹாப்பிசம், ஆப்கனில் தாலிபான், தற்போது சிரியாவிற்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என பாசிச குணங்கொண்டவர்களை வளர்த்தெடுக்கின்றனர். இதன் வெளிப்பாடு இன்று அரபு உலகில் மதரீதியான பிரிவுகளில் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

          பாசிசத்தின் நேரடி அழிவுக்கு இரையான ஐரோப்பாவில், பாசிசம் தலைதூக்குகிறது. பிரிட்டனின் டோரிக் கட்சிக்குள்ளும், பிரான்சில் சர்கோஸியின் கட்சியிலும் அமெரிக்காவில் குடியரசு கட்சிக்குள்ளும் பாசிச சக்திகள் தலைதூக்குகின்றன.

           எனவே, பாசிசம் முடிந்துவிட்ட ஒன்றல்ல. முதலாளித்துவத்துடன் இணைந்தே நடைபோடும் ஒரு வடிவம். முதலாளித்துவம் மேலாண்மையை இழக்கும் நெருக்கடி ஏற்படுகிறபோது பாசிசம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு அழிவுகளை ஏற்படுத்தும்.

இந்தியாவில் பாசிசம் : வேர்களும்- வளரும் விழுதுகளும்

          இந்தியாவில் பாசிசம் வளர்வதற்கான சூழல் வேகமாக ஏற்படுகின்றது. இதற்கான வேர்களும்,அமைப்புகளும் இந்திய சமூகத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இத்தாலி, ஜெர்மனியில் யூத இனத்திற்கு எதிராக இது கட்டமைக்கப்பட்டது. இந்தியாவில் மதத்தை பயன்படுத்தி பாசிசம் கட்டமைக்கப்படுகிறது.

1857 -ம் ஆண்டு முதல் சுதந்திரப் போர் நடைபெற்ற போது, பிரிட்டிஷார் ஆட்டம் கண்டனர். இந்தியாவில் இப்படி ஒரு ஒற்றுமை அவர்களுக்கு எதிராக உருவாகும் என எதிர்பார்க்கவில்லை. “அந்த எழுச்சியில்  சிசுக்கொலை புரியும் இராசபுத்திரரும், குருட்டு பிடிவாத பிராமணர்களும், பிற்போக்கான முஸ்லிம்களும் ஒன்றாக போராடினர். பசுவை வழிபடுவோர்களும், பசுவை உண்பவர்களும், பன்றியை வெறுப்பவர்களும், பன்றியை சமைப்பவர்களும் வாளேந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக களம் கண்டனர்.” இந்த ஒற்றுமை அவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய உதவாது எனக் கருதி மதரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டனர். இதற்கு இஸ்லாம் மற்றும் இந்து மதத்தில் இருக்கக் கூடிய பிற்போக்கான சக்திகள், வகுப்புவாதிகள் உதவி செய்தனர்.

          ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே, இந்துராஷ்டிரம் என்ற பேச்சுகளும், கருத்துக்களும் இருந்தன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகி, அச்சுறுத்தும் வடிவத்துடன் இதே கருத்துக்களை முன்வைத்தது. எனினும் 1939 -ல் அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசியம் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

     அந்நியர்கள் இந்துக் கலாச்சாரத்துடன் கலந்து விட வேண்டும். அல்லது வெளியேற வேண்டும். இந்துஸ்தானத்தில்தான் இந்து தேசம் வாழ்கிறது, வாழ வேண்டும். இந்து இனம், மதம், கலாச்சாரம், மொழி இல்லாதவர்கள் ஒதுங்கிட வேண்டும் என்று இப்புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்தார். காலங்காலமாக உருவாகி வந்த இனரீதியிலான வேறுபாட்டில் கலப்பு, ஒற்றுமை ஏற்படுத்த முடியாது என்று ஹிட்லர் நிலைநாட்டினார். இனத்தூய்மையை பாதுகாத்தார். ஜெர்மனியின் இந்த பாடத்தை இந்துஸ்தானில் உள்ள நாமும் கற்றுக் கொண்டு பயன்பெற வேண்டும் என அந்த புத்தகத்தில் எழுதினார். அன்று முதல் இந்த சிறு புத்தகம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வேத நூலாக, வழிகாட்டி நூலாக  அமைந்துவிட்டது.

       இந்த புத்தகம் வந்துவிட்ட பிறகு இரு ஆண்டுகள் கழித்து 1941 ஆகஸ்ட் 26ல் மௌலானா அபுல் அலா மௌதுதி  ஜமைத்-இ-இஸ்லாம் அமைப்பை உருவாக்கி இஸ்லாம் நாடு, இஸ்லாம் அரசு பற்றி பேச ஆரம்பித்தார்.   இந்துராஷ்ரம் பற்றி கருத்துக்கள் உருவாகி அதையே காங்கிரஸ் கட்சியில் தீர்மானமாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும், 1931 -ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற இந்தியா என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் எதிரொலியாகத்தான் காந்தியின் படுகொலை நடைபெற்றது.

கருப்பு - பழுப்பு - காக்கி - காவி

       மேற்கண்ட நான்கும் வண்ணங்கள்தான். ஆனால் வரலாற்றில் இந்த நான்கு வண்ணங்களும், இனவெறி, வகுப்புவெறி என்ற ஒரே எ(வ)ண்ணத்தை பிரதிபலித்தது. முசோலினியின் கருஞ்சட்டை கலவரம், ஹிட்லரின் பழுப்புநிற சீருடையின் அடாவடிகள், காக்கி கால் சட்டைகளின் கலாச்சார அணிவகுப்பு, காவிக் கொடியின் வகுப்புக் கலவரங்கள் என்று ஒற்றைத் தளத்தில் இவை செயல்படுபவை.

       எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு பிறகு, 1964 -ல் விஷ்வ இந்து பரிஷத் ஆரம்பிக்கப்பட்டு, இந்து மதத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்றது. அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற 1951 -ல் சியாமா பிரசாத் முகர்ஜி தலைமையில் பாரதீய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பிறகு பாரதிய ஜனதா கட்சியாக பரிணமித்தது. இதற்கு நான்கு பெரும் தலைவர்கள் தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி, எஸ்.எஸ்.பண்டாரி அனுப்பப்பட்டனர். நூற்றுக்கணக்கான கலாச்சார கல்வி அமைப்புகளை உருவாக்கினர். எனவே, பாசிச சக்திகளை போல் மக்களிடையே ஊடுருவ பல அமைப்புகளை பயன்படுத்தினர். குஜராத்தில் ஆரம்பித்து உத்தரபிரதேசம் வரை தொடர் சங்கிலியாக கலவரங்களை உருவாக்கி தங்களது அமைப்பையும், அமைப்பின் கருத்துக்களையும் வலுவாக்கிக் கொண்டனர். இதன் வெளிப்பாடாகவே இன்று இந்த அமைப்புகளிடம் இந்தியாவின் ஆட்சி சென்றிருக்கிறது.

       பாரதிய ஜனதா கட்சி 1977 - 80 ம் ஆண்டுகளில் ஜனதா கட்சி அரசிலும், 1998 -ம் ஆண்டு சில நாட்களும்,  1999- 2004 ம் ஆண்டுகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றது. தாராளவாத முதலாளித்துவவாத ஜனநாயகத்தில் செயல்பட்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இதே சூழலில் தான் முசோலினியும், ஹிட்லரும் தாராளவாத முதலாளித்துவ ஜனநாயகத்தை பயன்படுத்தி கொண்டனர். தற்போது 2014 -ம் ஆண்டு உருவாகியிருக்கிற பாரதியஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மையான அரசு மாறுபட்ட சூழலில் ஆட்சி அமைத்துள்ளது.

     முதன்முறையாக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை அதிகமாக கொண்ட ஓர் அரசாக இது அமைந்தள்ளது. இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகள் முழுமையான அதிகாரத்தை பெற முடியவில்லை. எனவே, மோடியை அவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்வு செய்தனர். மோடியின் வகுப்புவாத வரலாற்றைவிட முடிவெடுக்கும் திறன், திட்டமிட்ட செயல், ஆட்சி நடத்தும் முறை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அவருக்கு பின்னால் அணிதிரண்டனர். ஒரு கலவரத்தை திட்டமிட்ட முறையில் செய்வதையே கார்ப்பரேட் கம்பெனிகள் ஆட்சி நடத்துவதற்கு திறமையானவர் என்று மதிப்பீடு செய்தனர்.  ஹிட்லரின் பின்னாலும், முசோலினியின் பின்னாலும் கார்பரேட் முதலாளிகளும், நிலப்பிரபுக்களும், சொத்துடைமை உள்ள உயர் நடுத்தர வர்க்கங்களும் அணிதிரண்டதை போன்று இங்கேயும் அப்படிப்பட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் பாரம்பரியத்தையும், நவீனத்தையும் பயன்படுத்துவதுதான் பாசிசம் என்று முசோலினி அறிவித்தார். இதற்கான அறிவுஜீவுகளின் வட்டத்தை உருவாக்கினார்கள். இதுவே இன்றைய இந்திய அரசு அமைப்பில் நடைபெற்றுக்கொண்டிக்கிறது.

     கார்ப்பரேட் பொருளாதாரத்தையே பாசிச பொருளாதார கொள்கையாக முசோலினி அறிவித்தார். தொழிற்சங்கங்கள் சட்டவிரோதம், வேலைநிறுத்தம் கிரிமினல் குற்றம் என்று  அறிவித்தார்கள். இந்தியாவிலும் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு பெரும்பாலான தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். வேலை அளிப்பவர் இல்லை என்றால் வேலை செய்பவர் இல்லை. அதாவது முதலாளி இருந்தால்தான் தொழிலாளி என்று கூறி கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கான சட்டத்தை இயற்றுகிறார்கள்.

      ஒரே தலைவர், ஒரே பேரரசு, ஒரே மக்கள் என்ற நாஜிகளின் கோஷம் ஜெர்மனி மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இங்கேயும் நாடாளுமன்றத்திற்கு மேலே பிரதமர் என்ற கருத்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. அவரது திறமைகள் மட்டும் அனைத்தையும் வழிநடத்தும் என்பதும், அவரது பேச்சுக்களை கட்டாயம் குழந்தைகள் வரை கேட்க வேண்டுமென்ற உத்தரவுகளும், திட்டக்கமிஷன் கலைப்பு போன்ற நடவடிக்கைகள் இதற்கு உதாரணமாகும். ஒரு தலைவர், அதன் கீழ் நாடாளுமன்றம், அதன் கீழ் மக்கள் என்ற பாசிச படிநிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

      பாசிச சக்திகள் பயன்படுத்திய இத்தாலி தூய ஆரியர்களுக்கும், ஜெர்மனி வெள்ளை நிற ஆரியர்களுக்கும் சொந்தமானது; மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் அல்லது நெருப்பு ஜூவாலைகளிலும் வதைமுகாம்களிலும் கொல்லப்பட்டார்கள். இங்கேயும் இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது என்ற பேச்சுக்களும், செயல்களும் அதிகார மையத்திலிருந்து புதிய வேகத்துடன் புறப்பட ஆரம்பித்துள்ளது.

    பெண்களை இந்தியாவில் தெய்வமாகவும், உயர்வாகவும் மதிப்பதாக கூறிக்கொள்ளும் சங் பரிவாரங்கள் அவர்களை நல்ல மனைவியாகவும், தாயாக மட்டும் இருக்க வேண்டும் என்று போதித்து வருகிறது. பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றி சங் பரிவார தலைவர்களும், சன்னியாசிகளும் வெளிப்படுத்துகிற கருத்துக்கள் இதை நிரூபிக்கிறது.

      இத்தாலியில் ஸ்லாவ் மற்றும் இதர மொழிகளில் பள்ளிக்கூடம் நடத்துவது மற்றும் பத்திரிகைகள் நடத்துவது  தடைசெய்யப்பட்டது. இங்கே சமஸ்கிருத வாரம் என்ற அறிவிப்புகளும் இந்தியை அதிகமாக பயன்படுத்துங்கள் என்ற அறிவுரைகளும் ஒலிக்கத் துவங்கிவிட்டன. இதர பகுதி மக்களின் கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழித்தது போல் ஆசிரியர்கள் தினம் உட்பட பல தினங்களின் பெயர்கள் மாற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

      முசோலினி முதலாம் ரோம சாம்ராஜியத்தின் பெருமைகளை பேசியதை போல் இங்கே புராண காலப் புரட்டு ஆட்சிகளையும், சாணக்கிய தந்திரங்களையும் போற்றிப் புகழ்வதும், புஷ்பக விமானம்தான் விமான தொழில்நுட்பத்தின் தோற்றம் என்றும் இன்றைய கணிதங்களுக்கெல்லாம் வேத கணிதம்தான் அடிப்படை என்றும் பழம்பெருமைகள் மீது மக்களை மயங்கச் செய்கின்றனர்.

       எனவே, 1930 களில் இருந்த பாசிச வடிவம் அதே முறையில் மீண்டும் வெளிப்படாது. ஆனால் வேறு வடிவத்தில் வேறு முகங்களுடன் வேறுபட்ட கோஷங்களுடன் தலைதூக்கும். இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட வகுப்புவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இதுவரையிலான ஆளும் வர்க்கம் கடைபிடித்த கொள்கைகளே அடிப்படையான காரணங்களாகும். எனவே, அதிருப்தி அடைந்த மக்களை தனது வகுப்புவாத கொள்கைகள் மூலம் முதலாளி வர்க்கம் பிரித்தாளுகிறது. உடனடியாக உழைப்பாளி மக்களிடமிருந்து ஆளும் பெரும்முதலாளிகள் தூக்கி எறியப்படுவார்கள் என்ற சூழல் இல்லாவிட்டாலும் அரசின் கொள்கைகள் அப்படிப்பட்ட சூழலை உருவாக்கும்.

        காரணம் இந்தியாவில் பெரும்முதலாளிகளின் எண்ணிக்கையும், சொத்துக்களும் உயர்ந்து கொண்டே போகிறது. பெரும்பகுதி மக்கள் வறுமை, சம்பளமின்மை, வேலையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்கும் இடைவெளி அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதன் மூலம் வெடிக்கும் மோதலை அடக்குவதற்காக அல்லது வெகுஜன எழுச்சி ஏற்படாமல் இருப்பதற்காக பாசிசம் புதிய முறையில் கட்டமைக்கப்படுகிறது.

     எனவே, உழைப்பாளி மக்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க ஒன்றுபடுவது மட்டுமல்ல அரசியல் விழிப்புணர்வுடன், மாற்று கொள்கையுடன், அமைப்பு ரீதியாக அணிவகுப்பது மட்டுமே எதிர்கால இந்தியா உழைப்பாளிகளுக்கான இந்தியாவாக இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

14. மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் என்ன?

சீன வரலாற்றில் மாற்றங்களின் மகுடமாக 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த புதிய ஜனநாயக புரட்சி அமைந்தது. புரட்சி, வெறும் வ...