அவர் எங்களை அம்மத்தா என்ற வார்த்தையை தவிர வேற வார்த்தையை சொன்னது இல்லடா ,
அம்மத்தானா என்னனு தெரியுமாடா,
அவர அம்மாவை பெத்த அம்மா என்று கூப்பிடுவாரு
அப்படி என்னைய மட்டும் இல்ல,
இங்க உள்ள எல்லா பொம்பளங்களையும் மதிக்கிறவர் டா,
போடா வீட்டுக்குள்ள... வராத டா என்று சொல்லி கதறி அழுதார் பார்வதி.....
அந்தத் தெருவில் உள்ள மக்கள் சீயானோடு சேர்ந்து வீட்டு வாசலில் உணவு உண்பது தொடர்ந்து கொண்டிருந்தது,
நம்மைப் பார்த்து கண் சிமிட்டும்
நட்சத்திரக் கூட்டம்,
நிலவு ஒளி,
இதமாய் வீசும் காற்று
எல்லாத்துக்கும் மேலாக சீயான் கைங்கரியத்தால் கிடைத்த 10 வீட்டு சுவை உணவு
மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது ....
சாணியால் பூசி மெழுகிய தரைகள் அழகிய புசு புசு குழந்தைகளின் கண்ணம் போல் பளபளக்கும், சுவர்களில் பல இடங்களில் ஓட்டைகள் அடைக்கப்பட்டு ஒன்றிய அரசின் பட்ஜெட் போல் வெளிப்பார்வைக்கு பளபளப்பாகவும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற நிலையோடு நிலைத்து நிற்கும்.......
இந்தப் புத்தகத்தில் ஏழு சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளது. முதல் கதையில் வீடுகள் ஆரம்பித்து, வீட்டு அமைப்பும், ஏழ்மையின் வெளிப்பாடும், தெருவின் உறவுகளும், பசியின் நேரத்தில் பரிமாறிக்கொள்ளும் உணவுகளும், உயிரோட்டமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. கதை ஆசிரியர் வாழ்ந்து காட்டி இருக்கிறார்
இரண்டாவது கதையில் நடக்க முடியாத கிழவன் எழுதுவதற்கு ஆசைப்பட்டு எழுத வேண்டும் என்றால் வாசிக்க வேண்டும் என்ற அவசியத்தை தன் பேரக் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்.
ஆதலினால் காதல் செய்வீர் என்று சிறுகதையில் காதலுக்கான எதிர்ப்பும், காதலுக்கு பிறகு காதலர்கள் சந்திக்கும் கஷ்டங்களும் , மரணமும், மறுமணமும், சமூகத்தின் பார்வைகளும் என்ற தடத்தில் கதை நகர்ந்து செல்கிறது. காதல் போயின் மீண்டும் காதல் என்ற வரிகளுக்குள் கதாபாத்திரங்கள் வாழ்கிறார்கள்.
ஆத்தா, பிதா, வீடு என்ற கதையில் , மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை சுழற்சியை, ஏற்ற இறக்கத்தை, தலைகீழ் மாற்றத்தை 17 பக்கத்தில் வாழ்ந்து காட்டி விடுகிறார்கள். படித்த பொழுது 75 ஆண்டுகள் கடந்து விட்டதாக உணர முடிகிறது.
பஞ்சாலை பரதேசிகள் என்று கதை ஹார்விமில் பஞ்சாலையின் தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும், பஞ்சாலை விரிவாக்கம், பஞ்சாலைகளின் சுரண்டல் , ஆட்குறைப்பு 22,000 தொழிலாளர்கள் 700 தொழிலாளர்களாக மாறிய கதைகள், வேலை நிறுத்தம், தொழிற்சங்கப் போராட்டம் அதில் ஏற்பட்ட இழப்புகள் என்று அனைத்தும் மதுரை மாநகரத்தின் மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது.
பஞ்சாலை பரதேசிகள் என்ற கதையைத் தவிர மற்ற அனைத்தும் குடும்பங்களின் உறவுகளை வாழ்க்கை முறைகளை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது.
கதை ஆசிரியர் 1980 ஆம் ஆண்டுகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து இவற்றை படைத்திருக்கிறார்.
தோழர் சா பன்னீர்செல்வம் மதுரை மாநகர் மாவட்டத்தில் வாலிபர் சங்கத்தின் செயலாளராகவும் மாநில துணைச் செயலாளராகவும் நானும் ரவீந்திரனும் நிர்வாகிகளாக இருந்த பொழுது எங்களுடன் இணைந்து பணியாற்றியவர். சிறந்த அமைப்பாளர்.மேடைப் பேச்சாளர்.போராட்டக்காரர் என பல திறமைகளை உள்ளடக்கியவர். குடும்ப சூழ்நிலை காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தார். கடுமையான உடல் நிலை பாதிப்பும் ஏற்பட்டது. கால்களில் ஏற்பட்ட பாதிப்பால் நடக்க முடியாமல் இருந்தார். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார்.
நான் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஞாபகங்கள் தீ மூட்டும் என்ற புத்தகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போராட்ட அனுபவங்களில் பலரின் பெயர்களோடு தோழர் பன்னீர்செல்வம் அவர்களின் பங்களிப்பையும் எழுதி இருந்தேன். அதை அறிந்து அவர் என்னிடம் தொடர்பு கொண்டு உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கிற நேரத்தில் என்னுடன் தொடர்பு கொள்ளுவார். நானும் அவரிடம் பேசுவேன். பொதுவாக ஏதோ ஒரு காரணத்தில் பாதிக்கப்பட்டோர், சூழலின் காரணமாகவோ இயக்கத்தில் இருந்து ஒதுங்கி இருக்கக்கூடிய தோழர்களை நான் சந்திப்பது, பேசுவது வழக்கம். அவ்வாறு தோழர் பன்னீர்செல்வத்துடன் அவ்வப்போது பேச முடிந்தது. எங்களுக்குள நடைபெற்ற உரையாடல் பயனுள்ளதாக அமைந்தது. இதன் பிறகு அங்கிருந்த பல தோழர்களின் முயற்சிகளாலும் அவர் மீண்டும் நடக்க முடியவில்லை என்றாலும் தனது எண்ணங்களை எழுத்தாக வடித்திருக்கிறார்.இந்த புத்தகத்தின் ஒரு கிழவன் எழுதுகிறார் இல்லை இல்லை வாசிக்கிறார் என்பதுதான் இந்த புத்தக உருவாக்கத்தின் கதை.
இந்த புத்தகத்தை நாளை 15.03.25 தோழர் பாரதி கிருஷ்ணகுமார் வெளியிடுகிறார். எனக்கு முன் கூட்டி அனுப்பி விட்டதனால் 13-ஆம் தேதி நான் தோழர் ரத்தினசாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டத்திற்காக இடுவாய் சென்ற பொழுது ரயிலில் படித்து முடித்தேன்.
தோழர் பன்னீர்செல்வம் எழுதுகிறேன் என்று சொல்லிய பொழுது ஏதோ கட்டுரைகள் எழுதுவார் என்று நினைத்தேன். ஆனால் அதைவிட ஜனரஞ்சகமான முறையில் மக்கள் வாழ்க்கையை படம் பிடித்து காட்டி இருக்கிறார்.
ஒரு புத்தகத்தின் வடிவமைப்பு மிக முக்கியமானது. வாசிக்கும் வேகத்தை எளிமைப்படுத்தும். அவற்றில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைத் தவிர அனைத்திலும் சிறந்த படைப்பாக முதல் படைப்பு அமைந்துள்ளது வாழ்த்துக்கள். அனைவரும் வாசிக்க வேண்டும்
113 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை மலர்மனை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. விலை ரூபாய் 120.
அ.பாக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக