Pages

வாழககை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழககை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 17, 2025

கைத்தட்டி கொண்டே இருக்கிறேன் ........

 



அ. பாக்கியம்

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வெளியிட்ட ஒரு நினைவு மலரில் வாலிபர் சங்கத்தின்  முன்னத்தி ஏர்களிடம் வாழ்த்துச் செய்தி பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த வாழ்த்து செய்திகளில் நான் படித்தது என்றும் நினைவில் நின்றது மட்டுமல்ல சில இடங்களில் தொடர்ந்து பயன்படுத்திய வார்த்தைகளும் ஆகும். முன்னத்தி ஏரில் ஒருவர்  நான் மைதானத்தில் ஓடி முடித்து விட்டேன் தற்பொழுது அடுத்த தலைமுறை ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து கேலரியில் அமர்ந்து கொண்டு கைதட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தைகளில் அவரது வாழ்த்து செய்தி முடித்திருந்தார். தோழர் அகத்தியலிங்கம் பொறுப்பில் இருந்த பொழுது நான் உட்பட அவருடன் மையப் பணிகளில் இருந்த காலத்தில் இந்த நினைவு மலரை அவரின் முன்முயற்சியால் சிறப்பாக வெளியிடப்பட்டது. அந்த மலரில் பலரின் கருத்துக்களோடு மேற்கண்ட வரிகளை எழுதி இருந்தவர் கே வி எஸ் என்று அன்புடன் அழைக்கக்கூடிய கே வி எஸ் இந்துராஜ் ஆகும்.

திருச்சி மாவட்டத்தின் கட்சித் தலைவர்களின் ஒருவராக திகழ்ந்தவர் மட்டுமல்ல தொடர்ந்து சாத்தியமான அளவு இயங்கிக் கொண்டும் இருக்கிறார்.

 நேற்றைய தினம்(14.09.25)  திருச்சியின்  புறநகர் மாவட்ட பயிற்சி முகாமில் அவரை சந்தித்து பேசியது இதமான நிகழ்வாக அமைந்தது. நான் திருச்சிக்கு வாலிபர் சங்க வேலைகளுக்காக தொடர்ந்து வந்த பொழுதெல்லாம் மாவட்ட அலுவலகத்தில் கலகலப்பான ஒரு மனிதராக இருந்தவர் தோழர் கே வி எஸ் ஆவார்.

அவர் இல்லை என்றால் வெற்றிடத்துடன் திரும்புவதான ஒரு மெல்லிய உணர்வு ஏற்படும். அனைத்தையும் மிக சாதாரணமாக செய்வது மட்டுமல்ல அவருடைய பேச்சுக்களும் அவ்வாறே அமைந்திருக்கும். இளைஞர்கள் கட்சிக்குள் வந்த பொழுது அவர் திருச்சி மாநகர் கட்சியின் செயலாளராக இருந்தார். பல இளைஞர்களை எதிர்கொண்டார். இளைஞர்களின் கிண்டல் கேலிகளை புன்னகையுடன் கடந்து செல்வார். சில நேரங்களில் நான் அவரை சந்திக்கிற பொழுது பாக்கியம் இந்த பயலுகளை சொல்லிவை ரொம்பத்தான் பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று செல்லமாக கடிந்து கொள்வதும் பதிலுக்கு பல இளைஞர்கள் அவரை நகைச்சுவையுடன் பேசுவதும் நெருக்கத்தை உருவாக்குவதாக இருந்தது. இன்று 73 வயதை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். வாய்ப்புள்ள போது நிகழ்ச்சிகளில் அனைத்திலும் பங்கு பெறுகிறார். அந்த மாவட்ட குழுவும் அவரையும் இதர மூத்த தோழர்களையும் அரவணைப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரோடு சிறிது நேரம் உரையாடினேன்.

திருச்சி மாநகரில் 21 ஆண்டுகள் கட்சியின் இடைக்கமட்டி செயலாளராக பணியாற்றி இருக்கிறார். 1981ம் ஆண்டு முதல் கட்சியின் மாவட்ட குழுவிலும், 1985 முதல் 2022 ஆண்டு வரை மாவட்ட செயற்குழுவிலும் இருந்து பணியாற்றிருக்கிறார்.

தோழர் பி ஆர் சி என்று அன்புடன் அழைக்கக்கூடிய பி இராமச்சந்திரன் அவர்கள் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் செயலாளராக அதாவது புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் திருச்சி புறநகர் திருச்சி மாநகர் இவை அனைத்தும் ஒன்றாக இருந்த பொழுது அதன் செயலாளராக பணியாற்றிய காலத்தில் தோழர் கே வி எஸ் அவர்களை  இயக்கத்தில் ஈடுபடுத்தியதை  நினைவு கூர்ந்தார்.

திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே தோழர் பி ஆர் சி மாவட்ட அளவில் 1972 ஆம் ஆண்டுகளில் ஒன்பது பேர் கொண்ட ஒரு அமைப்புக்குழுவை உருவாக்கினார் அதில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டார்.

 தோழர் பி ஆர் சி வாலிபர் அமைப்பை கட்டுவதற்கு திருச்சியில்  விதை போட்டவர் என்பது மட்டுமல்ல அதை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றினார். என்னைப் போன்றவர்கள் வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநில பணிகளில் இயங்கத் துவங்கிய பொழுது அதன் பொறுப்பாளராக இருந்து வழிகாட்டியவர் தோழர். பி ஆர் சி.இதன் தொடர்ச்சியாக தான் 1974 ஆம் ஆண்டு தோழர் பிஆர்சி போன்றவர்களின் முன் முயற்சியால் முதல் ஜனநாயக வாலிபர் சங்கம் மாநாடு திருச்சி முனிசிபல் மண்டபத்தில் நடைபெற்றது என்றும் இந்த மாநாட்டில் தோழர்கள் ஆர். உமாநாத், தணிகைச் செல்வன், தஞ்சை மணியரசன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் முத்துக்கிருஷ்ணன் தலைவராகவும், தோழர் வி பரமேஸ்வரன் செயலாளராகவும், தோழர் கே வி எஸ்  துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதை நெகிழ்வோடு தெரிவித்தார்.

இந்த ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி #இளைஞர் முழக்கம் என்ற பத்திரிக்கை வெளியிடப்பட்டது.முதல் இதழை தோழர் பிஆர்சி பெற்றுக் கொண்டார். இந்த பத்திரிக்கையை வெளிமாநிலத்தில் இருந்த தமிழ் இளைஞர்கள் உட்பட வாங்கினார்கள்.  பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவாக தோழர் முத்துகிருஷ்ணன், பரமேஸ்வரன், ஜெகதீசன் மற்றும் நான் உட்பட ஆசிரியர் குழுவில் இருந்தேன் என்றும்,  எனக்கு பாசறை செய்திகள் என்று ஒரு பிரிவை ஒதுக்கி அது தொடர்பாக தொடர்ந்து எழுதி வந்தேன் என்பதையும் மன நிறைவோடு கே வி எஸ் அவர்கள் குறிப்பிடு கிறார்கள்.

தோழர்.ஜெகதீசன் தனது வருமானத்தை முழுவதும் கட்சிக்காகவும், வாலிபர் இயக்கத்திற்காகவும் செலவழித்தார் என்பதை நினைவு கூர்ந்தார் .சங்கம் ஆரம்பித்த காலத்தில் மிகப்பெரிய நெருக்கடியான அரசியல் சூழல் இருந்தது என்றும் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அதனைத் தொடர்ந்து,  அவசர கால நிலை பிரகடனம் என்று நீடித்தது. பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த இயலவில்லை என்பதையும் தெரிவித்தார்

1977 ஆம் ஆண்டு சோசலிச வாலிபர் முன்னணி கோவை மாவட்டம் இடிகரையில் அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக்குழு ஒன்பது பேர்களில் கே வி எஸ்  ஒருவராக இருந்துள்ளது மட்டுமல்ல அவசர நிலை காலத்தில் பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மாவட்டத்திற்கு வாலிபர் சங்கத்திற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றியதையும் தெரிவித்தார். அதன் பிறகு நடைபெற்ற மாநாட்டில் வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினராக பணியாற்றியதை கவனப்படுத்தினார்.

கட்சியில் உறுப்பினரான பிறகு திருச்சி வட்டாரக் குழு என்று அமைக்கப்பட்டு அதன் செயலாளராக தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் பணியாற்றி இருக்கிறார். இது எனக்கு புது செய்தியாக தான் இருந்தது. இவர்கள் எல்லாம் கட்சியின் அடிமட்டு அமைப்புகளில் பொறுப்புகளில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிகிற பொழுது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது.  இவ்வாறு அடித்தள அனுபவம் அற்ற முறையில் வளர்வது இயக்கத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதையும் எனது அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அதன் பிறகு கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப திருச்சி வட்டாரக்குழு இரண்டாக பிரிக்கப்பட்டு திருவரும்பூர் பகுதி,பெல் தொழிற்சாலை, பொன்மலை, ரயில்வே போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வட்டாரக் குழுவிற்கு தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் கிடைக்கும் செயலாளராக தொடர்ந்து செயல்பட்டு இருக்கிறார். திருச்சி மாநகரப் பகுதியை ஒட்டிய வட்டாரக் குழுவிற்கு தோழர்.கஸ்தூரி ரங்கன் அவர்கள் இடைக்கமிட்டி செயலாளர்களாக செயல்பட்டு உள்ளார். இந்த கமிட்டியிலும் தோழர் கே வி எஸ் அவர்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

83 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இடைக்கம்டி செயலாளராக பொறுப்பேற்று 21 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.

திருச்சி எரிசாராய தொழிற்சாலையில் 1966 ஆம் ஆண்டு ஒரு தொழிலாளியாக பணியில் சேர்ந்து பணியாற்றினார் என்றும் 1969 ஆம் ஆண்டு சங்கம் அமைத்து அதன் பிறகு சங்கத்தை பலப்படுத்திய பணிகளிலும் , 1973 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம் 28 நாட்கள் நடைபெற்று அன்றைக்கு இருந்த அரசு வேலை நிறுத்தத்தை உடைத்து பழி வாங்கியது. அதன் பிறகு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட வரலாற்று எடுத்துரைத்தார்.

1973 ஆம் ஆண்டு முதல் தோழர் பி ஆர் சி அவர்கள் கே வி எஸ் அவர்களை முழு நேர ஊழியராக கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து, அவசரநிலை காலம், ரயில்வே வேலை நிறுத்தங்கள், 77 ஆம் ஆண்டு தேர்தல், 80 ஆம் ஆண்டு தேர்தல  என்று தொடர் பணிகளின் காரணமாக  உடனடியாக முழு நேர ஊழியராக வர இயலவில்லை.

 தோழர் பி ஆர் சி 1980 ஆம் ஆண்டு அவரை ஒரு நேர ஊழியராக கொண்டு வந்ததை நெகிழுடன் குறிப்பிடுகிறார். அத்துடன் கம்பெனி வேலையும் விட்டுவிட்டார்.

தோழர் பி ஆர் சி யை தொடர்ந்து தோழர்.கே. வரதராஜன் தன்னை எவ்வாறு வழிநடத்தினார் என்பதையும் அரசியல் படுத்தினார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

திருச்சி சுமை பணி தொழிலாளர் சங்கப் போராட்டத்தில் ஆறு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்ததை குறிப்பிட்டார்.

தோழர்.கே வரதராஜன் பொறுப்புகளில் இருக்கிற பொழுது திருச்சியில் நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய அரசியல் தலைமை குழு உறுப்பினர்களில் தோழர் பிரமோத் தாஸ் குப்தா தவிர அனைத்து அரசியல் தலைமை குழு உறுப்பினர்களும் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்ததுடன் இந்த கூட்டங்கள் முழுவதும் கட்சி என்னை தலைமை ஏற்க வைத்தது என்பதை மிகப் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். குறிப்பாக அவசர நிலை காலத்தில் தோழர் பி ஆர் அவர்களின் பொதுக்கூட்டத்தை குறிப்பாக சுட்டிக்காட்டினார்.

தோழர் பிஆர்சி மீதும் தோழர் கே வி மீதம் அளவு கடந்த மரியாதையுடன் தனது ஆசானாகவும் நினைவு கூறுகிறார். தோழர் கே வரதராஜன் கொரோனா இல்லையென்றாலும்  கொரோனா காலத்தில் மரணம் அடைந்தார். மரணம் அடைந்து அவருடைய பூத உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொழுது அந்த பூத உடலுடன் அவரது மகன் மருமகள் பேரன் ஆகியோர் வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் தயங்கிய பொழுது உடல்நிலை சரியில்லை என்றாலும் கொரோனா அச்சம் இருந்த சூழ்நிலையிலும் அந்த வாகனத்தில் அனைத்தையும் மீறி ஏறிச் சென்று  பூத உடலை சிதையில் எரிக்கும் வரை இருந்து விட்டு வந்தேன் என்று அந்த தலைவரின் இறுதி நிகழ்வை குறிப்பிடுகிற பொழுது சற்றே உணர்ச்சி வசப்பட்டார்.

தோழர் கே வி எஸ் அவர்கள் தேர்தல் காலத்திலும் கே ஜி எஃப் உட்பட பல இடங்களுக்கு சென்று சென்று பணியாற்றியிருக்கிறார். மாநாடுகளில் சமையல் பொறுப்பில் ஆரம்பித்து பல பொறுப்புக்களை நிறைவேற்றி இருக்கிறார்.

என்னை போன்றவர்கள் அலுவலகத்திற்கு வருகிற பொழுது அவரின் நெருக்கமான, உரிமையான, அரவணைப்பு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருந்தது. நேற்று நான் அவரை சந்தித்து பொழுது அதே உணர்வு என்னை ஆட்கொண்டது.

இந்த உணர்வை வெளிப்படுத்துவதற்காக தான் இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன். இதமான சந்திப்பும் உரையாடலில் புதிய உணர்வுகளுடன் அங்கிருந்து புறப்பட்டேன்

அ. பாக்கியம்

சனி, மார்ச் 01, 2025

பன்முக தன்மை வாய்ந்த அரசியல் ஊழியர் தோழர் ச.அசோகன்.

 

அ.பாக்கியம்

தோழர் செந்தில்குமார் அவர்கள் பேசுகிற பொழுது தோழர்.அசோகன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா என்பது பல ஜாம்பவான்களின் பணி நிறைவு பாராட்டு விழா போன்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என்று பேசினார். மிகப் பொருத்தமான வார்த்தைகள் இவை. அதே நேரத்தில் தோழர் செந்தில் குறிப்பிட்ட ஜாம்பவான்கள் அனைவரும் போக்குவரத்து சங்கத்தை உருவாக்கியவர்கள். அதன் பல பொறுப்புகளை வகித்தவர்கள். தோழர் அசோகன் சங்கத்தில் நிர்வாகியாக பொறுப்பு வகித்தவர் அல்ல. பல நிர்வாகிகளை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார். தொழிலாளர்களின் இதயங்களில், அவர்களின் குடும்ப வாழ்வில், தோழர்களின் அன்றாட நிகழ்வில் அவரின் செயல்பாடுகள் எண்ணற்ற தொழிலாளர்களை இயக்கத்தின் பக்கம் ஈர்த்தது. நமக்காக என்றும், எப்பொழுதும் இயங்கிட தோழர் அசோகன் இருக்கிறார் என்ற நம்பிக்கை தொழிலாளர்களின் உள்ளங்களில் குடியிருந்தது. எனவேதான் அவரின் பணி நிறைவு விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

தோரணக் கொடி ஒட்டுவது, கொடிகள் கட்டுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது, வாயிற் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், பாடல், நடிப்பு, இசைக்கருவி வாசிப்பு, பறையடித்தல், வகுப்பு எடுப்பது, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, மாற்றுக் கட்சி சங்க நிர்வாகிகளுடன் லாபகமாக  பழகுவது என்ற பன்முகத்தன்மையின் அடையாளமாக அவருடைய பணி அமைந்திருந்தது. இந்தப்பண்புகளை கொண்டவர்கள் அரிதாக இருப்பார்கள். இதுபோன்றவர்கள் இயக்கத்திற்கு கிடைப்பது பெரும் சொத்தாகும்.

1987ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சென்னைக்கு வந்து மாம்பலத்தில் இருந்த கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்து பிழைப்பை தேடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு சீமாத்தம்மன் நகரில் தோழர்.பாலசுந்தரம் அரவணைப்பில் அவருடைய ஆதரவுடன் அவரது வீட்டில் குடியிருந்து, அவரின் முன் பயிற்சியால் 1995ஆம் ஆண்டு மாநகர போக்குவரத்தில் ஓட்டுநராக இணைந்தார்.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூன்றாவது அகில இந்திய மாநாடு நடைபெற்ற பொழுது, அதன் பிரச்சாரத்திற்காக பல கலை குழுக்கள் உருவானது. அவற்றில் ஒன்றாக சப்தம் கலைக்குழு உருவானது. அந்தக் கலைக்குழு மூலம் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை பிரச்சாரம் செய்ததில் அசோகன் முக்கிய பங்காற்றினார். பாடினார், நடித்தார், இசைக்கருவிகளை வாசித்தார் என்று பல வேஷம் கட்டினார்.

1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14 வது அகில இந்திய காங்கிரஸ் வடபழனியில் விஜய் சேஷ மஹால் ராணி மகாலில் நடந்தது. இதற்கான கலைக்குழு பிரச்சாரத்தையும் மாதக்கணக்கில் விடுமுறை எடுத்து பிரச்சாரம் செய்தார்.

1995 ஆம் ஆண்டு போக்குவரத்தில் ஓட்டுநராக இணைந்த பிறகு 31 ஆண்டுகள் பணி செய்து 6க்கும் மேற்பட்ட முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏழு முறைக்கு மேற்பட்ட இடமாற்றம் செய்யப்பட்டார். ஒவ்வொரு இடம்மாற்றம் நடக்கிறபோது அவர் செல்லக்கூடிய இடத்தில் இயக்கம் இல்லையென்றால் உருவாகும்இ இருந்தால் வலுப்பெறும். போக்குவரத்து அரங்கப் போராட்டத்தின் போது சென்னை மத்திய சிறையில் 17 நாட்கள் தொழிலாளர்களுடன் அடைக்கப்பட்டார். சிறையில் தொழிலாளர் மத்தியில்   உற்சாகமாக இயங்கினார்.

போக்குவரத்து துறையில் சேர்ந்த பிறகு வி.பி,சிந்தன் பெயரில் கலைக்குழு ஆரம்பித்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகவும் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பிரச்சாரங்களை நடத்தினார். விடுமுறைகள் எடுத்து இந்தப் பணியினை செய்து கொண்டு இருந்தார்.

சென்னை வடபழனி பத்மராம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநில மாநாடு நடைபெற்ற பொழுது உணவுக் குழுவிற்கு பொறுப்பாக இருந்து விதவிதமான கிராமத்து உணவுகளை அறிமுகப்படுத்தினார். அசோகன், சைதேஜே இருவரும் இணைந்து பண ஓலையில் கூழ் குடிப்பது, கருவாடு தொக்கு வைத்துக் கொடுப்பது, மாட்டுக்கறி சமையல் என்று பல வகைகளில் இந்த மாநாடு மரபார்ந்த மக்கள் உணவை வழங்கியதில் இவர்களின் பங்கு முக்கியமானது. ஆனந்த் டெல்டும்படே அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பொழுது மகாராஷ்டிராவில் நாங்கள் பொது நிகழ்வில் மாட்டுக்கறி வழங்குவது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. தோழர் அசோகன் தமுஎகச வின் மாவட்ட நிர்வாகியாக இருந்து பல ஆண்டுகள் செயல்பட்டவர். இப்பொழுதும் இருக்கிறார்.

போக்குவரத்து அரங்கம், கலைக்குழு, தமுஎகச , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல தளங்களில் பணியாற்றினாலும் தனது சொந்த ஊரான கூழமந்தல் பகுதியில் நண்பர்கள் அனைவரும் இணைந்து திருவள்ளுவர் வளர் தமிழ் மன்றம் அமைத்து அந்தப் பகுதியில் மக்கள் மேம்பாட்டிற்கும் அறிவுத்துறை மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பணியாற்றுவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். வருடம் தோறும் நிகழ்வுகளை நடத்துவார்கள், 15,000 மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலகத்தை நடத்தி வருகிறார்கள். இந்த பணியில் அசோகனின் பங்கு முக்கியமானது மட்டுமல்ல இன்றும் தொடர்கிறது.

தோழர் அசோகன் அவரது இணையர் வழக்கறிஞர் காரல்மொழி, மகள் ஜானகி, மகன் மணிபாரதி அனைவருமே இயக்கத்திலும், போராட்ட களத்திலும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள். குடும்பத்தை ஜனநாயகரீதியில் நடத்துவதில் கவனம் செலுத்தக்கூடியவர்.

தோழர்.அசோகனிடம் இருக்கக்கூடிய முக்கிய பண்புகளில் ஒன்று இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் எது பொருந்தவில்லையோ அதை கேள்விக்குள்ளா க்குவதில் தயக்கம் இன்றி செய்வார். அதனால் எந்த இழப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்வார். 

அவரது ஓய்வு கால பணிகள் மேலும் உழைப்பாளி வர்க்கத்தின் உயர்வுக்காக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது. காரணம் களத்தையும் தோழர்களையும் என்றுமே துணையாக கொண்டு செயல்படுவதின் வெளிப்பாடு இதை உறுதிப்படுத்துகிறது.


 

 

செவ்வாய், டிசம்பர் 19, 2023

சீனாவின் மின்னணு (EV) கார்: அலறும் அமெரிக்கா.


உலகில்  நுகர்வோர் நடத்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் 2035 ஆம்


ஆண்டு புதிய கார் உற்பத்தியில் மின்னணு கார்கள் 50 சதவீதம் உற்பத்தி ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிய கார்களின் உற்பத்தியில் மின்னணு  கார்களின் உற்பத்தி 18 சதவீதமாகும். 


2023 தரவுகளின் படி, உலகில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஒன்பது முக்கிய கார் நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தது. டெஸ்லா மாடல் Y ,டெஸ்லா மாடல் 3 அமெரிக்காவை சேர்ந்த இரு நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளது. BYD Atto 3 / யுவான் பிளஸ்,

 BYD டால்பின், GAC Aion S , Wuling HongGuang Mini EV , GAC Aion Y , ஐயா ஆகிய சீனாவின் ஐந்து நிறுவனங்கள் அதற்கு அடுத்து உள்ளது. எட்டாவது இடத்தில் ஜெர்மனியின்VW ஐடி.4 நிறுவனமும்,மீண்டும் ஒன்பதாவது இடத்தில் சீனாவின் BYD சீகல் நிறுவனமும் உள்ளது.


 சீனாவின் வளர்ச்சி வேகத்தை கண்டு அமெரிக்கா தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட மற்ற நாடுகளை மிரட்டும் போக்கை கடைபிடிக்கிறது. 


மெக்சிகோ நாட்டில் சீனா தனது 3 மின்னணு கார் நிறுவனங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களை போட்டு சுமார் 200 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. சீனாவில் உற்பத்தி செய்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்வதை விட, மெக்சிகோ நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடிய முறையில், வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய வகையில் இந்த தொழிற்சாலையை அங்கு நிறுவுவதாக சீன நாடு தெரிவித்துள்ளது.


அமெரிக்கா தனது அண்டை நாடான மெக்ஸிகோவை இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற கூடாது என்றும், ரத்து செய்ய வேண்டும் என்றும் மிரட்டி வருகிறது. காரணம் தனது நாட்டு கார் கம்பெனிகளின் வீழ்ச்சியை கண்டு பயப்படுகிறது. 


சீனாவின் மின் கார்களின் தரம் உயர்ந்ததாகவும், புதிய செயல் திறன் கொண்டதாகவும், விலை குறைவாகவும் உள்ளது. சந்தை விதிகளின்படி போட்டிக்கு தயாராக இல்லாத அமெரிக்கா , படைபலம் மூலமாக மிரட்டி வருகிறது.சீனக் கார்கள் ஏற்கனவே ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 


சீனா மெக்சிகோவில் கால் ஊன்றுவதன் மூலம் மெக்சிகோ சந்தையை பிடிப்பது  மட்டுமல்ல , அமெரிக்க சந்தையிலும் நுழைந்து விடும் என்ற அச்சம் உருவாகி இருப்பதினால மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. 


இது மட்டுமல்ல உலக அளவில் மின்னணு கார்களுக்கான பேட்டரி தயாரிப்புகளில் சீனா செல்வாக்கு செலுத்துகிறது. முதல் இடத்தில் உள்ளது.


 உலகமயத்தை பேசிய அமெரிக்கா தற்போது  வணிக விதிகளை எல்லாம் மீறி  பாதுகாப்பு (Productionism) கொள்கையை தனது நாட்டிற்கு அமுலாக்குகிறது. மற்ற நாடுகள் இதை செய்த பொழுது அந்த நாடுகளை மிரட்டி உலக மயத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அமலாக்க வைத்தது.


அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரே நோக்கம் ஆயுத பலத்தையும், வணிகத்தையும் தனது சுரண்டலுக்கு பயன்படுத்துவது மட்டும்தான். மற்ற நாடுகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவது தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவது என்பதெல்லாம் போலியானது.

அ.பாக்கியம்.

செவ்வாய், அக்டோபர் 24, 2023

அமைதிக்கான பணிகள் விடுதலைக்கான ஆதரவு

 

தொடர் 27



முகமதுஅலி சமாதானத்தை விரும்பினார். யுத்தத்தால் யார் பாதிக்கப்பட்டாலும், பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டாலும் அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 1973ல் வியட்நாம் நாட்டிற்கு சென்றார். வியட்நாமில் யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம் திறக்கப்பட்டு, அதற்கு வூ சி காங் என்ற இயக்குனரும் நியமிக்கப் பட்டிருந்தார்.  அவரை முகமது அலி சந்தித்தார். அப்போது வூ சி காங்,  ‘‘வியட்நாம் மக்கள் உங்களை ஒரு குத்துச்சண்டை சாம்பியனாக மட்டுமல்ல… அமைதிக்கான போராளியாகவும் அறிந்திருக்கி றார்கள். அதன் அடிப்படையில் நான் உங்களை வரவேற்கிறேன்’’ என்று கூறினார்.

ஈராக் - அமெரிக்க யுத்தம் நடக்கக்கூடாது என்று அலி விரும்பினார். நெருக்கடியான சூழலில் ஈராக்கில் இருந்தும், லெபனானில் இருந்தும், பிணைக் கைதிகளை மீட்டு வந்தார். அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்ட இஸ்ரேலில் இருந்த லெபனான், பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க முயற்சி எடுத்தார். ஈரான் நாட்டில் சிறைப்பட்டிருந்த பத்திரிக்கையாளர்களை மீட்டு வர  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க பிரமுகர்களை கையெழுத்திட வைத்து வேண்டுகோளை அனுப்பி வைத்தார்.

1980-88 காலங்களில் ஈராக் - ஈரான் போரில் சிறையில் அடைக்கப்பட்ட 25ஆயிரத்துக்கும் அதிகமான போராளி கைதிகளை இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் அவர்களை விடுதலை செய்வதற்குமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு நாடுகளுக்கும் விஜயம் செய்தார்; பேச்சு வார்த்தை நடத்தினார். இது அவரது சொந்த நல்லெண்ண தூதுவர் முயற்சியாக இருந்தது. அமைதிக்கான குழந்தைகள் அமைப்பை நடத்தி 50க்கு மேற்பட்ட குழந்தைகளை உலக தலைவர்களை சந்தித்து அமைதிக்காக பாடுபடுமாறு வேண்டுகோள் விடுக்க உதவிசெய்தார். இது போன்ற எண்ணற்ற முயற்சிகளை அவர் தனக்கு இருந்த பார்க்கின்சன்ஸ் நோயையும் பொருட்படுத்தாமல் செய்து கொண்டிருந்தார்.

உதவி செய்யக் கூடியவர், சமாதானத்திற்காக போராடக் கூடியவர் என்பதுடன் விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவாளராகவும் இருந்தார். பாலஸ்தீனர்களுடைய போராட்டத்தை அடக்குவதில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு உதவியும் செய்கிறது. ஐநா சபையில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறாமல் தனது வீட்டோபவரை பயன்படுத்தி தடுக்கிறது. இந்த சூழலில் முகமது அலி லெபனானிலிருந்த பாலஸ்தீன அகதிகள் முகாம்களுக்கு நேரடியாக விஜயம் செய்கிறார். பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக அறிவித்தார். 1988ல் பாலஸ்தீனத்தில் முதல் இன்டிபடாவின் (INTIFADA)  எழுச்சியின்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற பேரணியில் முகமது அலி பங்கேற்றது பெரும் எழுச்சியை உருவாக்கியது.

அமெரிக்காவில் உள்ள பூர்வீக குடிமக்கள் ( செவ்விந்தியர்கள்) தங்களது உரிமைகளுக்காக அமெரிக்கன் இந்தியன் இயக்கம் என்ற பழங்குடி மக்கள் இயக்கத்தை உருவாக்கியிருந்தனர். நகர்ப்புறத்தில் குடியேறிய பழங்குடி வம்சாவழி மக்களின் பிரச்சினைகளை கையில் எடுத்து போராடினர். கருப்பின மக்களை எப்படி ஒதுக்கினார்களோ அதே போன்று செவ்விந்தியர்களையும் வெள்ளை நிறவெறி கொடும் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதை எதிர்த்து ‘தி லாங்கஸ்ட் வாக்’ என்ற போராட்ட அணிவகுப்பை நடத்தினார்கள். இந்த அணிவகுப்பில் முகமது அலியும், அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகரான மார்லன் பிராண்டோவும் கலந்து கொண்டனர். முகமது அலி, வியட்நாம் யுத்தத்தை எதிர்த்து அமெரிக்காவில் நடந்த போராட்டங்களிலும், சிவில் உரிமை போராட்டங்களிலும், கருப்பின மக்களுக்கான அடக்குமுறைகளை எதிர்த்த நடவடிக்கைகளிலும் நேரடியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

உதவிகள் செய்வது, சமாதான செயல்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களப்போராளி என்ற தளங்களில் முகமது அலி தன்னுடைய பணிகள் மூலமாக முத்திரை பதித்துள்ளார்.

முகமது அலிக்கு குத்துச்சண்டை பதக்கங்களை கடந்து, உலகம் தழுவிய அளவில் ஏராளமான விருதுகளை வழங்கி இருக்கிறார்கள். பங்களாதேஷ் உட்பட பல நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் அவரின் பெயரால் சாலைகள், மிகப்பெரிய நிறுவனங்களுக்கான பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதிகளின் விருது, ஐநா சபையின் தூதுவர் பட்டங்களையும் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். இப்படி நூற்றுக்கணக்கான விருதுகளை குறிப்பிட்டாலும் ஒரே ஒரு விருதை மட்டும் இந்த நேரத்தில் குறிப்பிடுவது அவசியமானது.

அமெரிக்காவில் இயங்கி வரக்கூடிய அரபு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பின் சார்பில் முகமது அலிக்கு உலக பெரும் கவிஞன் கலீல் ஜிப்ரான் பெயரால் ‘‘ஸ்பிரிட் ஆஃப் ஹியூமானிட்டி’’ (Sprit of Humanity) என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். தனது போர் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காகவும், வியட்நாம் போருக்கு எதிராக போராடியதற்காகவும், பாலஸ்தீன மனித உரிமைகள் பிரச்சாரத்தின் ஆலோசனை குழுவில் பணியாற்றியதற்காகவும், அமெரிக்காவால் சீர்குலைக்கப்பட்டு மரணப்படுக் கையில் பசியால் வாடிய ஈராக் மக்களுக்கு நிதி திரட்டி கொடுத்ததற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.

உலக மக்களால் நேசிக்கப்பட்டு, ஆப்பிரிக்க மக்களின் விடிவெள்ளி யாக பார்க்கப்பட்டு, அமெரிக்காவின் கருப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தார் முகமது அலி. அவர் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடைசி வரை செயல்பட்டுக் கொண்டிருந்தார்.  சிலரது மரணங்கள் மட்டும்தான் உலகப் பேரிழப்பாக மாறிவிடுகிறது. அலியின் மரணமும் அப்படித்தான். அரிசோனாவின் ஸ்காட்ஸ்டெல் மருத்துவமனையில் சுவாச நோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவந்த முகமது அலி, 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி அன்று  இறந்தார். அப்போது அவருக்கு வயது 74. அவரது விருப்பத்தின் அடிப்படையிலேயே மரணத்திற்குப் பிறகு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. ஜூன் 9ஆம் தேதி அவரது சொந்த மாநிலமான கெண்டகியில் உள்ள எக்ஸ்பொசிஷன் சென்டர் மைதானத்தில் முகமது அலியின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 10ஆம் தேதி முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ்வில்லியின் தெருக்களில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு கேவ் ஹில் என்ற கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

நிறவெறிக்கு எதிராக குத்துச்சண்டை வளையத்தின் உள்ளேயும், வெளியேயும் களமாடிய கருப்பின போராளிக்கு உலகத் தலைவர்கள்,  விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் தங்களது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கினர். 

இறக்கும் போது எவரும் எதையும் எடுத்துச் செல்வதில்லை. தங்கள் உடலைக்கூட நெருப்புக்கோ, மண்ணுக்கோக தாரைவார்த்து செல்கிறார்கள். ஆனால், போராளிகள் இறக்கும்போது தங்கள் லட்சியங்களை விட்டுச் செல்கிறார்கள். முகமது அலியும் அப்படித்தான். நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 2020ம் ஆண்டு மே 25ம் தேதி டெரிக் சாவின் என்கிற வெள்ளை போலீஸ் அதிகாரியால், கழுத்தில் கால்முட்டியால் அழுத்தப்பட்டு மூச்சுவிட முடியாமல் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாயிட் மரணம், அமெரிக்க நிறவெறியின் கொடூரத்தை இன்னமும் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளது.

 

சனி, அக்டோபர் 14, 2023

உதவி செய்வது உடன் பிறந்தது


 

தொடர் 26

அடிப்படையில் முகமது அலி ஒரு மனிதாபிமானி. அவருடைய பன்முகத்  தன்மை வாய்ந்த வாழ்க்கையில் அவர் செய்த உதவிகள் குறிப்பிடத்தக்கது. துன்பப்படுபவர்களை கண்டு அவர் மனம் கலங்கினார். அவரது வார்த்தைகளில் குறிப்பிட்டால் "ஒரு பிரச்சனை இருப்பதாக யாராவது என்னிடம் கூறினால், என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்" என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளார். ஏழைகளின் துன்பங்களுக்கு யார் காரணம் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்காவிட்டாலும் ஏழைகளைக் கண்டு மனம் இரங்கி நிறைய உதவிகளை செய்துள்ளார்.

முகமது அலியின் மகள் ஹானா பெல்லட்டர். அவர் ஒரு குத்துச்சண்டை வீரரை மணந்து கொண்டவர். தன் தந்தை முகமது அலியைப் பற்றி அவர் பதிவு செய்துள்ளார்.  "ஏழை எளிய மக்கள் மீதான அவரது அன்பு அசாதாரணமானது. வீடற்ற குடும்பங்கள் எங்கள் வீட்டு விருந்தினர் அறையில் தூங்குவதை நான் பள்ளியில் இருந்து வரும் பொழுதெல்லாம் காண்பேன். தெருவில் அவர்களைப் பார்த்தவுடன் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அள்ளிப்போட்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார். அவர்களுக்கு ஆடைகளை வாங்கித் தருவார். ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தருவார். அவர்கள் பல நாட்கள் உணவு அருந்துவதற்கான கட்டணத்தையும் ஓட்டலில் செலுத்தி விடுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முகமது அலி 1996 மற்றும் 98 ஆண்டுகளில் கியூபா நாட்டிற்கு பயணம் செய்தார். இரண்டு முறையும் கியூப மக்களுக்கான மருத்துவ உதவி உபகரணங்களை வழங்குவதற்காக அவர் சென்றார். 1996ம் ஆண்டு, ஹவானா மருத்துவமனைக்கு 20,000 கண் கண்ணாடிகளை வழங்கினார். பழுது நீங்கி தெளிவான பார்வை பெற்று மகிழ்ந்த மக்களுடன் முகமது அலியும் கலந்துரையாடி மகிழ்ந்தார். ஹவானா  மருத்துவமனைக்கு 1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை கொடுத்தார். அவர் மேற்கொண்ட 2 பயணங் களின்போதும் சுமார் 5 லட்சம்டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவிகளை கியூபாவுக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கியூப அரசின் உயர்நிலை அதிகாரி பாப் ஸ்வார்ட்ஸ் கூறுகையில், ‘‘முகமது அலி வழங்கிய மருத்துவ உதவி என்பது கியூபா மீதான அமெரிக்க பொருளாதார தடையை எதிர்ப்பதற்கும், அதன் பொருளாதார நெருக்கடியை தளர்த்துவதற்கும் ஒரு வழியாகும்" என்று கூறினார். இரண்டாவது பயணத்தின் போது முகமது அலி கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசினார். அமெரிக்கா கியூபாவை தனது ஜென்ம விரோதியாக கருதி பொருளாதாரத் தடைகளை விதித்து, கியூபாவுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று உலக நாடுகளை அச்சுறுத்தும் நிலைமை இருந்த போதும் முகமது அலி கியூபாவுக்கு மருத்துவ உதவிகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1963டிசம்பர்6ம் தேதி பென்சில்வேனியா ரோபெனா நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன்வாயு கசிவுஏற்பட்டு 84 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 37 தொழிலாளர்கள் இறந்து விட்டனர். முகமது அலி அப்போது சார்லி பாவெல் என்பவருடன் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கிடைத்த தொகையில் ஒரு பகுதியை இறந்த 37 தொழிலாளர் களின் குடும்பங்களுக்கும் கொடுத்தார்.   

முகமது அலி ஆரம்ப காலத்தில் இளைஞர்களுக்கான கல்வியில் கவனம் செலுத்தினார். கருப்பின கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசியிருக்கிறார். கருப்பின மாணவர்களுக்காக உதவி செய்வதற்கு என்று ஒருங்கிணைந்த நீக்ரோ கல்லூரி நிதி என்ற அமைப்பு உள்ளது. அந்த அமைப்பிற்கு 1967ஆம் ஆண்டு 10,000 டாலர் நன்கொடையாக கொடுத்தார். அதுவரை அளிக்கப்பட்ட தனிநபர் நன்கொடையில் இதுவே மிக அதிகமாக இருந்தது. இதுபோன்று யுனிசெப்க்கு பல நிதி உதவிகளை செய்திருக்கிறார். இந்த நன்கொடைகள் பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்று அவர் நிபந்தனையும் விதித்துள்ளார்.

1975 மார்ச் 24 மேற்கு ஆப்பிரிக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சஹெல் பகுதிக்கு ஒரு குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த மொத்த தொகையும் வழங்கினார். 1975 டிசம்பர் 2 நியூயார்க் நகரில் ஹில் சைட் ஏஜ்டு சென்டர் என்ற முதியோர் இல்லம் பணம் இல்லாமல் இருந்த பொழுது அதைக் கேள்விப்பட்ட முகமது அலி உடனடியாக நேராக சென்று ஒரு லட்சம் டாலர் நன்கொடை கொடுத்து அங்கிருந்து முதியவர்களுக்கு நம்பிக்கையூட்டி பேசினார்.

இதை அறிந்த பத்திரிகையாளர்கள் அங்கு கூடி விட்டார்கள். முகமது அலியை மொய்த்துக் கொண்டார்கள். அவர்களிடம் ஒரு விஷயத்தை மட்டும் கூறிவிட்டு முகமது அலி விடைபெற்றுக் கொண்டார். ‘‘இது போன்ற விஷயங்களை நீங்கள் வெளியிட வேண்டாம். இவை விளம்பரத்திற்காக அல்ல. மற்றவர்களுக்கு சேவை செய்வது என்பது இந்த பூமியில் நான் வாழ்வதற்காக கொடுக்கப்படும் வாடகை என்று வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார். இயலாதவர்களுக்கு உதவி செய்வதை அவர் தன் கடமையாக கருதினார்.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் வடகிழக்கு இங்கிலாந்துக்குச் சென்று சிறுவர்களுக்கான குத்துச்சண்டை பள்ளிகளுக்கு  நிதி  திரட்டினார். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயணிப்பதற்கான பேருந்துகளை வழங்கினார். கென்யாவிற்கு சென்ற பொழுது அங்குள்ள ஏழை குழந்தைகள், அனாதை குழந்தைகள், வீடற்ற சிறுவர்களுக்கான பள்ளிகளை நடத்துவதற்கு ஒரு கண்காட்சி குத்துச்சண்டை போட்டி நடத்தி ஏராளமான நிதி உதவிகளை செய்தார். 1988 ஆகஸ்ட்  மாதம் சூடான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம்,போர் ஆகியவற்றால் இடம்பெயர்ந்த அகதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முகாம்களுக்குச் சென்று நேரடியாக உதவிகளை செய்தார்; நிதி வழங்கினார். அன்றைய சூடான் பிரதமர் சாதிக் அல் மஹதி, முகமது அலியை நாட்டு மக்கள் சார்பாக மனதார வாழ்த்தினார்.

1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஆப்பிரிக்காவின் லைப்ரிய நாட்டில் அகதிகளுக்கு மருந்து, உடைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், ஊனமுற்றவர்களுக்கான கருவிகளை வழங்கினார். சகோதரி பெல்ட்ரான் மிஷனரி முகாமில் இருந்த 105 லைப்ரியா குழந்தைகளையும், அங்கு போதுமான நிதி உதவி இல்லாமல் தங்கி இருந்த 400 பேர்களையும் முகமது அலி பராமரித்துக் கொள்வதற்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். இந்த இடத்தில்தான் அவர், ‘‘ஒரு பிரச்சனை இருப்பதாக என்னிடம் கூறப்பட்டால் என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்’’ என்ற வாசகத்தை கூறினார்.

 

திங்கள், அக்டோபர் 09, 2023

சே: சித்தாந்தமும் செல்வாக்கும்.

 அக்டோபர் 9: சே நினவு தினம்

சேகுவேரா , வீர மரணம் அடைந்து இன்றுடன் 56 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள புரட்சியாளர்களுக்கும் போர் வீரர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கிறார் போராளிகளுக்கு மட்டுமல்ல அரசியல்,அர்ப்பணிப்பு,சித்தாந்தம், செயல்பாடு போன்றவற்றால் 21 ஆம் நூற்றாண்டு இளைஞர்களையும் ஈர்க்க கூடியவராக சேகுவேரா இருக்கிறார். முடிவுகளை எடுத்து அறிவிப்பதை விட நான் முன்னே செல்கிறேன் என்னை பின் தொடருங்கள் என்ற முறையில் களப்போராட்டங்களை அமைத்து வாழ்ந்து காட்டியவர்.

மார்க்சியம் , ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளித்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் கூறுகளை ஒன்றிணைத்து அவரது அரசியல் சித்தாந்தம் இருந்தது. அவர் பல்கலைக்கழக பாடங்களால் மட்டும் அரசியல் சித்தாந்தத்தை அமைத்துக் கொண்டவர் அல்ல. லத்தீன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில் அவரது சித்தாந்தம் வடிவமைக்கப்பட்டது. தனது பயணத்தின் போது அவர் கண்ட காட்சிகள் வறுமை, சமத்துவமின்மை, அடக்குமுறைகள் போன்ற எண்ணற்ற ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வரும் முதலாளித்துவ சமூகத்தை தூக்கி எறிந்து சோசலிச சமூகத்தை அமைப்பதன் மூலமாகத்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்பினார்.

சோவியத் சோசலிச பாணியில் அவர் முழுமையாக திருப்தி அடையவில்லை. தன்னலமற்ற தார்மீக மற்றும் புரட்சிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒரு புதிய சோசலிச மனிதனை உருவாக்குவது பற்றி சிந்தித்தார். புரட்சியாளர் அன்பின் சிறந்த உணர்வால் வழிநடத்தப்பட வேண்டும். இந்த குணம் இல்லாத ஒரு உண்மையான புரட்சியாளரை நினைத்துப் பார்க்க முடியாது. முன்னணி புரட்சியாளர்கள் மக்கள் மீதான தங்களது அன்பை இலட்சியப்படுத்த வேண்டும். புரட்சிக்கு வெளியே வாழ்க்கை இல்லை. புரட்சிகர தலைவர்கள் மனித நேயத்தின் ஒரு பெரிய அளவை, பெரிய அளவிலான நீதி மற்றும் உண்மை உணர்வுகளை கொண்டிருக்க வேண்டும் (கியூபாவில் சோசலிசமும் மனிதனும் 1965 சேகுவேரா)என்று வலியுறுத்தியதுடன் வாழ்ந்தும் காட்டினார்.

சேகுவேராவின் சோசலிஸ்ட் சித்தாந்தம் மற்றும் அவரது கெரில்லா ராணுவ நடவடிக்கை போன்றவற்றை கடைபிடிக்கக் கூடியவர்களை "குவேரிஸ்மோ" என்று அழைத்துக் கொள்கிறார்கள். சேகுவேராவின் புதிய சோசலிச மனிதன் என்ற தலைப்புகளில் விவாதங்களை முன்னெடுத்து லத்தின் அமெரிக்க நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 56 ஆண்டுகளுக்கு பிறகும் அவரது செல்வாக்கு நீடித்துக் கொண்டே இருக்கிறது. கேள்வி கேட்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்ற சேகுவேராவின் சிந்தனைகள் அவர் நடைமுறைப் படுத்திய திட்டங்கள் கியூபா உட்பட பல லத்தீன் நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

சிலி நாட்டில் சேகுவாராவின் சாதனைகளை பள்ளி பாட புத்தகங்களில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கியூப புரட்சியில போர் குற்றங்கள் என்ற பாடத்திட்டங்களை சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வலதுசாரிகளை கம்யூனிஸ்டுகளும் இடதுசாரிகளும் தோற்கடித்தார்கள்.

நிகரகுவா நாட்டில் புரட்சியில் வெற்றி பெற்ற டேனியல் ஓர்டெகா தலைமையிலான சாண்டினிஸ்டா அமைப்பில் சேகுவாராவின்( குவேரிஸ்மோ")தாக்கம் இருந்தது. இதே போன்று குவதிமாலா, எல் சால்வடார் நாடுகளில் நடைபெற்ற புரட்சிகளுக்கும் சேகுவாராவின் தாக்கம் இருந்தது

பொலிவியா நாட்டின் தலைவராக இருந்த இவோ மொரெல்ஸ் பொலிவியாவில் சேகுவாரா சுட்டு புதைக்கப்பட்ட வாலே கிராண்ட் சென்று "சே வாழ்கிறார்" என்று அறிவித்தார். மேலும் சேகு வேராவின் உருவப்படத்தை உள்ளூர் கோகோ இலைகள் மூலம் ஜனாதிபதி அறையில் நிறுவினார்.

2006 ஆம் ஆண்டு வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் சேகுவேரா ஓர் எல்லையற்ற புரட்சியாளர் என்று சேகுவேராவின் டீ சர்ட் அணிந்த லட்சக்கணக்கான கூட்டங்களுக்கு மத்தியில் அறிவித்தார். அவரும் காஸ்ட்ரோவும் அர்ஜென்டினாவில் உள்ள சேகுவேராவின் இளம் வயது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

கொலம்பியாவில் நடைபெறுகிற கொரில்லா இயக்கத்திற்கு, மெக்சிகோவில் சப்கமாண்டர் மார்க்கோஸ் தலைமையிலான ஜபடிஸ்டாஸ் இயக்கத்தின் எழுச்சியிலும் குவேரிஸ்மோ தாக்கம் இருந்தது.

சேகுவேரா ஜனநாயக வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடுகள், மக்களால் உருவாக்கப்படக்கூடிய நீதிமன்றங்கள் புரட்சிக்கான பாதுகாப்பு குழுக்கள் போன்ற முறைகளை வெனிசுலாவிலும் பொலிவியாவிலும் கடைபிடித்தனர்.

சேகுவேரா எழுதிய மோட்டார் சைக்கிள் டைரி கல்லூரி மாணவர்களிடையே, இளம் அறிவிஜீவிகள் மத்தியில் மிகப்பெரும் விருப்ப நூலாக ஏன் வழிபாட்டு நூலாகவே மாறி உள்ளது.

சேகுவேராவின் கருத்துக்கள் புரட்சியாளர்களின் தலைமுறையை ஊக்குவிக்க உதவியது. புதிய சோசலிச மனிதன் என்ற அவரது கருத்துக்கள் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது.

அவரது எழுத்துக்களும் புரட்சிகர நடவடிக்கைகளும் இன்றளவும் மக்களை திரட்டுவதற்கு தொடர்ந்து பயன்பட்டு வருகிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா சுரண்டுவதற்கு எதிராக அமெரிக்க நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள் இன்று மேலும் முன்னேறி உள்ளது. 12க்கும் மேற்பட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி தலைமை அமைந்து அமெரிக்க அடக்குமுறைகளுக்கு எதிராக அணி திரண்டு உள்ளன.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியிலும், மக்கள் எழுச்சியிலும், சேகுவேராவின் தாக்கமும் செல்வாக்கும் இருந்தது. அவர் அடக்குமுறைகளை எதிர்ப்பதில் சின்னமாகவே விளங்குகிறார். இன்றைய இளைய தலைமுறையினருக்கு சேகுவேரா உந்து சக்தியின் வற்றாத ஜீவ நதியாக இருந்து கொண்டிருக்கிறார்.

நாடக பாணியிலான அரசியல் நர்தனமாடுகிற இக்காலத்தில், அவரது போர் முறைகளுக்காக மட்டுமல்ல, அவரது அர்ப்பணிப்பு, என்றென்றும் மக்களுடன் இணைந்து உழைப்பது, அடக்குமுறைகளுக்கு எதிராக சமரசம் அற்ற களம் காண்பது,எளியவர்கள் மீது அவர் காட்டும் அன்பு என எண்ணற்ற காரணங்களுக்காக இன்றும் சே தேவைப்படுகிறார்.
அ.பாக்கியம்.



https://www.internationalmagz.com/articles/che-guevra-continuing-influence-in-latin-america?utm_source=pocket_saves

https://www.cheguevara.org/impact.jsp?utm_source=pocket_saves

ஞாயிறு, அக்டோபர் 08, 2023

இந்தியாவில் அலி பேசிய அரசியல்


 

தொடர்: 25

முகமது அலி 1980ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லி, சென்னையில் நடைபெற்ற கண்காட்சி போட்டிகளில் பங்கேற்றார். பம்பாய் (மும்பை) மற்றும் ஆக்ராவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பயணத்தின்போது அவர் பத்திரிகை யாளர்களையும் சந்தித்தார். மேலும், குத்துசண்டை வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். அப்போது பிரதமராக இருந்த  இந்திரா காந்தியுடனான முகமது அலியின் சந்திப்பு, கருத்துப் பரிமாற்றம் மற்றும் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டதாக இருந்தது. முகமது அலி பங்கேற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு இந்திய பத்திரிகைகள் ‘‘மகத்தானவர்களில் மகத்தானவர்’’ என்று ஒரு பொதுவான தலைப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தலைப்பே முகமது அலிக்கு மகுடம் சூட்டியது போல் இருந்தது.

இரட்டிப்பு மகிழ்ச்சி

முகமது அலி, தலைமுறைக்கான குத்துச்சண்டை வீரர் மட்டுமல்ல, வியட்நாமுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறி அமெரிக்காவை அதிர வைத்ததினால் அவர் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் என்று அவர் வருகை தந்தபோது இந்திய பத்திரிகைகள் பாராட்டுப் பத்திரம் வாசித்தன. பம்பாயில்  நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘நான் பம்பாயில் இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். நான் விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ‘‘முகமது அலி சாலையின்’’ வழியாக வந்தேன். ஏற்கனவே ஒரு சாலைக்கு நீங்கள் எனது பெயரை சூட்டி பெருமை படுத்தியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.  இங்கு மேலும் ஒரு சிறப்பான வரவேற்பு அளித்து எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்து விட்டீர்கள்’’ என்றார்.

டெல்லியில் ஜனவரி 22ம் தேதி, தேசிய ஹெவி வெயிட் சாம்பியன் கவுர் சிங்குடன் நடந்த கண்காட்சி போட்டியில் முகமது அலி பங்கேற்றார். 50 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு களித்த அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் சில மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்துள்ளன.

எம்ஜிஆர், கருணாநிதியுடன் சந்திப்பு

சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த கண்காட்சிப் போட்டியிலும் முகமது அலி பங்கேற்றார். இந்தப் போட்டியை 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தார்கள். அன்றைய முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன், சென்னை விமான நிலையத்தில்  முகமது அலியை வரவேற்றார். அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்து தன்னை வரவேற்றதைக் குறிப்பிட்டு முகமது அலி மகிழ்ச்சி தெரிவித்தார்.

நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதல் காட்சிப் போட்டியில் முகமது அலி அவருடன் வந்திருந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஜிம்மி எல்லிசுடன் மோதினார். அடுத்ததாக அன்றைய தினம் தமிழ்நாட்டின் குத்துச்சண்டை சாம்பியனாக இருந்த ராக்கி பிராஸ் என்பவரிடம் மோதினார். ராக்கி பிராஸ் எட்டாம் வகுப்பு கூட முடிக்காதவர். அவர், முகமது அலியுடன் காட்சிப் போட்டியில் பங்கேற்றதால், தெற்கு ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத் தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எம்ஜிஆர் பேசும்போது, எனக்கு மிகவும் பிடித்த குத்துச்சண்டை வீரர் முகமதுஅலி என்று குறிப்பிட்டு பாராட்டினார்.

இந்த காட்சிப் போட்டி முடிந்த பிறகு கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரேசா அறக்கட்டளைக்கு முகமது அலி நன்கொடை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியையும் முகமது அலி சந்தித்தார்.

மனோதிடம் முக்கியம்

இந்திய குத்துச்சண்டை வீரர்களுடனான சந்திப்பின்போது, அவர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முகமது அலி பதிலளித்தார். "களத்தில் விளையாடும்போது, சக்தி வாய்ந்த நேரான குத்துக்களை வீச வேண்டும். அப்போதுதான் அதிக புள்ளிகளைப் பெற முடியும்’’ என்று கூறிய அவர், குத்துச்சண்டை வளையத்தில் எதை செய்யக்கூடாது என்பதையும் விளக்கினார். புதிதாக வரும் வீரர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன என்று கேட்ட பொழுது "வீரர்கள் உடற்பயிற்சி கூடங்களில் மட்டும் உருவாக முடியாது. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு இருக்க வேண்டும்; ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்; அதீதமான விருப்பம் இருக்க வேண்டும். அதேபோல் அவர்களுக்கு திறமையும் முக்கியம்; மனோதிடமும் முக்கியம். இவற்றில் மனோதிடம் முதன்மையானது’’ என்று பதிலளித்தார்.

டீஸன்ட்சி பாக்ஸர்

முகமது அலியை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று இந்திய குத்துச்சண்டை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் அளித்த பதில்: முகமது அலி, ஃபவுல் பஞ்ச் எனப்படும் விதிமுறைகள் மீறிய குத்துக்களையோ, எதிராளிகளை ஏமாற்றி குத்துவது, களைப்பானது போல் நடித்து ‘மவுத் கார்டை’ (mouthguard - பற்கள் மற்றும் தாடைகள் பாதுகாப்புக்காக வாய்க்குள் பொருத்தப்படும் ரப்பர் தட்டை) கீழே துப்புவது போன்ற விரும்பத்தகாத செயல்களை, குத்துச்சண்டை வளையத்தில் எப்பொழுதுமே செய்யாத, விளையாட்டில் ஒழுக்கமும் நேர்மையையும் கடைபிடித்த "டீஸன்ட்சி பாக்ஸர்" (decency boxer) என்ற பெயர் முகமது அலிக்கு இருந்ததால் அவரை நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

எடக்கு மடக்கு கேள்வி புத்திசாலித்தனமான பதில்

இந்திய சுற்றுப்பயணத்திற்காக முகமது அலி, முதலில் மும்பையில் வந்திறங்கியபோது நடந்த  பத்திரிகையாளர் சந்திப்பில், ‘‘ஒரு மூத்த பத்திரி கையாளர் அலியிடம் கேட்டார். ‘‘எப்போதும் தாமதமாக பறக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று. அந்தக் கேள்வியை நாசூக்காக கையாண்ட  முகமது அலி, ‘‘இந்த சுற்றுப்பயணத் தின்போது, பத்திரிக்கையாளரின் முதல் கேள்வி இந்தியாவைப் பற்றி எதிர்மறையாக இருக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை’’ என புத்திசாலித்தனமாக பதில் அளித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரின் வாயை அடைத்தார்.  ‘‘குத்துச்சண்டை போன்ற உடல் பாதிப்பு அதிகம் இருக்கிற விளையாட்டுப் போட்டியில் ஒரு முஸ்லிமாக உங்களது ஆன்மீக  நிலைக்கும், அமைதிக்கான பணியை மேற்கொள்கிற போதும், நீங்கள் எவ்வாறு சமரசம் செய்து கொள்கிறீர்கள்’’ என்று கேட்ட பொழுது ‘‘இரண்டிலும் நான் எந்த முரண்பாட்டையும் காணவில்லை’’ என்று பதிலளித்தார்.

4 மனைவிகள் நரகம்தான்

ஆண்கள் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பது குறித்த கேள்விக்கு முகமது அளித்த பதில்: நான்கு என்பது வெறுமனே நரகம். 3 என்பது நரகத்தைப் போலவே மோசமானது. இரண்டு என்பது அதிக பிரச்சனை உள்ளது. ஒன்று மட்டுமே மகிழ்ச்சி என்று தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இந்த பதிலை கட்டம் கட்டி வெளியிட்டிருந்தது. முகமது அலியின் இந்த பதில், இஸ்லாம் பற்றிய காலத்துக்கு பொருந்தாத பிரச்சாரத்தை முறியடிப்பதாக இருந்தது.

அதிர்ந்தார் இந்திரா

பிரதமர் இந்திரா காந்தியுடனான முகமது அலியின் சந்திப்பு ஜனவரி 25ம் தேதி காலை நிகழ்ந்தது. சந்திப்பு அறைக்கு  பிரதமர் இந்திரா காந்தி வந்தவுடன் மேற்கத்திய கலாச்சாரப்படி முகமது அலி அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.  இதை சற்றும் எதிர்பாரததால், முதலில் அதிர்ச்சி அடைந்த பிரதமர் இந்திரா காந்தி பிறகு நிதானமாகி முகமது அலியுடன் சகஜமாக உரையாடலை தொடர்ந்தார். எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் இந்தியாவின் மீது அதிக ஆர்வம் உள்ளது. இந்திய ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன் என்று இந்திரா காந்தியிடம் முகமது அலி கூறினா்.  பாரம்பரியமும், வசீகரமும் நிறைந்த எங்கள் நாட்டுக்கு நீங்கள் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திரா காந்தி கூறினார்.

நான் இப்போது குத்துச்சண்டை விளையாடுவதை விட்டுவிட்டு, உலகில், அன்பையும் நட்பையும் மேம்படுத்துவதற்காக எனது பெரும்பகுதி நேரத்தை செலவிடுகிறேன் என்று கூறிய அலியிடம், இந்தியாவில் நாங்களும் அதைத்தான் செய்கிறோம் என்று இந்திரா காந்தி பதிலளித்தார்.

தோல்விக்குப் பிறகு வெற்றி பெறுவதில் நான்தான் பெரிய நிபுணன் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களைப் பார்த்தவுடன் அது தவறு என்று புரிந்து கொண்டேன். அமெரிக்க அதிபர் கார்ட்டர், சோவியத் அதிபர் பிரஷ்நேவ், சீன அதிபர் டெங் ஜியோ பிங் போன்ற தலைவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் உங்களின் மறுபிரவேசம் (இந்தியாவில் அவசரகால பிரகடனத்திற்கு பிறகு 1977-இல் இந்திரா காந்தி தோல்வியடைந்து ஜனதா கட்சி அரசாங்கம் அமைந்தது. அந்த ஆட்சி கவிழ்ந்த உடன் 1980 ஆம் ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய பிரதமராக பதவி ஏற்றார்)  மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. குத்துச்சண்டையில் என்னுடைய மறுபிரவேசத்தை விட உங்கள் துறையில் நீங்கள் சாதித்து இருப்பது முக்கியமானது. நீங்கள்தான் தி கிரேட்டஸ்ட் என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

முகமது அலியின் ரஷ்ய, சீன பயணங்களை போலவே இந்திய பயணமும் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. இந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை உருவாக்கியது.

 

செவ்வாய், செப்டம்பர் 26, 2023

போர்களின் பூமியில் முஹம்மது அலி

 

தொடர்: 24

அ.பாக்கியம்

அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது.

அரபு நாடுகளை தனது எண்ணெய்வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் சுரண்டலை எதிர்த்த நாடுகள் மீது அமெரிக்கா பொய் குற்றச்சாட்டுக்களை கூறி போர் தொடுத்தது. இந்தப் போரில் எண்ணற்ற அப்பாவி மக்கள் பலியானார்கள். இவர்கள் அமெரிக்க மற்றும் அரபு நாட்டைச் சேர்ந்த பொதுமக்களாக இருந்தன. இந்த நிலவியல், இயற்கை வளங்களை மேலாதிக்கம் செய்யும் யுத்தத்தில் முகமது அலி இடர்பாடுகளில் இருந்த மக்களை மீட்க கூடிய பணியை செய்தார். அவர் போரின் காரணங்களை ஆராயவில்லை; அதன் நியாயங்களுக்குள் செல்லவில்லை. போரில் அகப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கான முறையில் தனிநபராகவும் சில அமைப்புகளின்  ஆதரவுடனும் களத்தில் இறங்கினார்.

1990ம் ஆண்டு ஈராக் மற்றும் அமெரிக்கா இடையிலான நெருக்கடிகள் முற்றியது. ஈராக் தனது எண்ணெய் வளத்தை பாதுகாக்க அமெரிக்காவை எதிர்த்தது. அமெரிக்காவின் செயல்களுக்கு ஆதரவாக இருந்த குவைத்தின் மீது படையெடுத்தது. இதையடுத்து அமெரிக்கா ஈராக்கை தாக்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியது. அமெரிக்கர்கள் பலர் ஈராக்கில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சி எடுக்கவில்லை. யார் சென்றாலும் சதாம் உசேன் சிறை பிடித்து விடுவார் என்று அமெரிக்கா கருதியது. அந்த நேரத்தில் ஈராக்கில் சிக்கி கொண்ட 15 அமெரிக்கர்களை மீட்டுக் கொண்டு வர முகமது அலி தயாரானார். ஈராக் செல்ல ஆயத்தமானார். அவரது மீட்பு பணி தவறாக கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியும் இதை ஏற்கவில்லை. ஈராக்கின் பாக்தாத் நகரத்தில் அப்போதைய அமெரிக்க தூதராக அதிகாரியாக இருந்த ஜோசப் வில்சன், ‘‘ஈராக்கின் பிரச்சார விளையாட்டில் இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஈராக் செல்லக் கூடியவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள்’’ என்று முகமது அலியின் பெயரை குறிப்பிடாமல்  ஈராக்  பயணத்தை குறித்து கருத்து தெரிவித்தார்.

ஆனாலும், அதையெல்லாம் புறக்கணித்து அலி நல்லெண்ண பயணமாக ஈராக் சென்றார். அமெரிக்காவின் மிகவும் பிரபலமான முஸ்லிம் ஈராக்கின் பாக்தாத் நகரத்திற்கு 1990 நவம்பர் 23ம் தேதி சென்றார். போர் நெருக்கடி ஆரம்பித்த 113 வது நாளில் அங்கு சென்று இறங்கினார். உலகச் சாம்பியன், உலகப் புகழ்பெற்ற கதாநாயகன் முகமது அலி இப்போது பாக்தாத்தில் இருக்கிறார் என்ற செய்தி ஈராக் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அலியின் உதவிக்காக அமெரிக்க தூதரகத்திலிருந்த வெனான்  நோரேட் என்ற அதிகாரியும் சென்றார். முகமது அலி ஒரு வாரம் பாக்தாத்தில் தங்கியிருந்தார். அவரை சதாம் உசேன் சந்திப்பதற்கான நேரம் நிச்சயிக்கப்படவில்லை. ஈராக்கியர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார்கள்; அவருடன் நின்று பேசுவதற்கு விரும்பினார்கள். முகமது அலி யாரையும் நிராகரிக்காமல் அவர்களுடன் பாசமாக பழகினார்.

பிணைக் கைதிகளை மீட்பதற்காக அலி இங்கு வந்துள்ளார் என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. போர் நெருங்கி வருகிறது என்பதை மட்டும் அறிந்திருந்தார்கள். முகமது அலி தெருக்களில் நடந்தார். குழந்தைகளை சந்தித்தார். பள்ளிவாசலுக்கு சென்றார். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது "ஒரு யுத்தம் வராது என்று நாங்கள் நம்புகிறோம்; அதற்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று தெரிவித்தார். எனக்கு கிடைத்த புகழின் சிறிய அதிகாரத்துடன் நான் ஈராக்கின் நியாயமான நிலைமைகளை எடுத்துக் கூறுவேன்"என்றும் தெரிவித்தார். அவர் பாக்தாத்தில் இருந்தபொழுது அவரிடம் பார்க்கின்சன் நோய்க்கான மருந்து தீர்ந்து விட்டது. அதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுது உதவியாளர் ஐரிஷ் மருத்துவமனையில் மருந்துகளை கண்டுபிடித்து வாங்கி கொடுத்தார்.

அடுத்த நாள் சதாம் உசேன் அவரை சந்திக்க உள்ளார் என்று முகமது அலிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அமெரிக்காவிற்கும் சென்றது. பத்திரிகைகளிலும் வெளியானது. அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் இது ஈராக்கியர்களுக்கு சாதகமான பிரச்சாரம் என்று விமர்சனம் செய்தது. மற்ற அமெரிக்கர்கள், நோபல் பரிசுக்காக அலி, இதுபோன்று செயல்படுகிறார் என்று வதந்திகளை பரப்பினார்கள். 1990ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி சதாம் உசேனும் முகமதுஅலியும் சந்தித்தார்கள்.

பிணைக் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்தியதை சதாம் உசேன்   விவரித்தார். ஈராக் பற்றிய நேர்மையான விஷயங்களை அமெரிக்காவிடம் வலியுறுத்துவேன் என்று சதாம்உசேனுக்கு முகமதுஅலி உறுதி அளித்தார். ‘‘உங்களை அமெரிக்காவிற்கு திரும்ப அனுமதித்தால்தானே நீங்கள் அவ்வாறு கூற முடியும் என்று சதாம் உசேன் கூற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே சதாம், ‘‘முகமது அலி மீட்க வந்த 15 அமெரிக்கர்கள் இல்லாமல் அவரை மட்டும் தனியாக அனுப்ப அனுமதிக்க மாட்டேன்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். அலி உட்பட அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அமெரிக்கர்கள் 15 பேரும் விடுவிக்கப்பட்டு முகமது அலி தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்தார்கள். முகமது அலியின் முயற்சிக்கு அவர்கள் கடமைப்பட்டு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் என்று தொடங்கி அவரை புகழ்ந்து தள்ளினர். 1990ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, முகமது அலியும் 15 பணயக் கைதிகளும் ஈராக்கில் இருந்த இதர அமெரிக்கர் களும் விமானம் மூலமாக ஜே.எஃப்.கே விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். 1991 ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்கா, ஈராக் மீது குண்டு வீசத் தொடங்கியது. முகமது அலி அதிர்ச்சியை தெரிவித்தார். இது நேர்மையானது இல்லை என்று கண்டனம் தெரிவித்தார்.

முகமது அலி இதை விளம்பரத்திற்காகவும், தன்னை உயர்த்திக் கொள்வதற்காகவும் செய்கிறார் என்று அவர் மீது அவதூறு பரப்பப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு முகமது அலி கர்ஜித்தார். எனக்கு விளம்பரம் தேவை. எனது புத்தகத்திற்கும் எனது சண்டைக்கும் எனது திரைப்படத் திற்கும்தான் கண்டிப்பாக விளம்பரம் தேவை. ஆனால் மக்களுக்கு நன்மை செய்வதற்காக, மக்களுக்கு உதவுவதற்காக என்றைக்குமே விளம்பரத்தை விரும்பாதவன் நான் என்று கோபத்துடன் கூறினார். நேர்மையற்ற விமர்சனங்கள் என்று அவற்றை புறம் தள்ளினார்.

இதேபோன்று உயிருக்கு ஆபத்தான சூழலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சிக்கி இருந்த அமெரிக்கர்களை மீட்கும் பணியை  அவர்1985ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செய்தார். மேற்கு பெய்ரூட்டில் அதிகாலை 2 மணி அளவில் முகமது அலியும் அவருடன் வந்தவர்களும் சம்மர்லேண்ட் ஓட்டலுக்கு சென்று காத்துக் கொண்டிருந்தனர். அந்த இடம் போரினால் சிதைந்த இடமாக இருந்தது. அந்த ஓட்டல்களின் கண்ணாடி ஜன்னல்கள் தோட்டாக்களால் சேதம் அடைந்திருந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முகமது அலியும் அவரது குழுவினரும் வெகுதொலைவு இரவு நேரத்திலேயே சென்றனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பிரமுகர் இப்ராஹிம் அல்-அமீன் முகமது அலி தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். லெபனானில் உள்ள எல்லா அமெரிக்கர்களையும் அவர்களின் கூட்டாளி களையும் வெளியேற்றுவது, எங்கள் நிலத்தில் எந்தஒரு காலனித்துவ நிறுவனத்திற்கும் இடமில்லை என்று எடுத்த கொள்கை முடிவை அல்-அமீன் முகமது அலியிடம் விளக்கினார். லெபனானில் உள்ள பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என முகமதுஅலி வலியுறுத்தினார்.

அவரிடம், இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூறு பாலஸ்தீனர்களை நீங்கள் விடுவிக்க செய்தால் நாங்கள் இவர்களை விடுவிக்கிறோம் என்று அல்-அமீன் உறுதி அளித்தார். இஸ்ரேல் சிறையில் இருப்பவர்களின் பட்டியலையும் முகமது அலியிடம் அல்-அமீன் கொடுத்தார். இவை அனைத்தும் உலகில் மிகவும் ஆபத்தான நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை  பூர்த்தி செய்திட பெய்ரூட்டில் தினமும் மதியம் வரை போர் நிறுத்தம் இருக்கும். அதன்பிறகு போர் துவங்கிவிடும். நடைபெற்றுக் கொண்டிருந்த போர்களுக்கிடையில் இந்த பேச்சுவார்த்தையில் முகமது அலி ஈடுபட்டார்.

முகமது அலி அமெரிக்கர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல… பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான நிலையில் இருந்தும் அடுத்த நகர்வுக்கு சென்றார்.  இஸ்ரேல் தெற்கு லெபனானை ஆக்கிரமித்து இருந்தது. ஏராளமான லெபனானியர்களையும் பாலஸ்தீனர்களையும் சிறை வைத்திருந்தது. ஜூன் 28, 1985ம் ஆண்டில் சிறை வைக்கப்பட்ட 700க்கும் மேற்பட்ட லெபனான் மற்றும் பாலஸ்தீனியர்களை விடுவிக்க செய்வதற்காக முகமது அலி இஸ்ரேல் சென்றார். அவர்களை விடுவிப்பதற்காக நாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கூறினார். ஒரு குத்துச் சண்டை சாம்பியன் என்ற முறையில்-தனிப்பட்ட முறையில் உங்களை வரவேற்கிறோம். ஆனால் குத்துச்சண்டை வீரருடன் கைதிகளை விடுவிப்பது பற்றிய பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று முகமது அலியிடம் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முகமது அலி இருந்தார் என்பதற் காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒருவர், அமெரிக்கா எதிர்க்கும் பாலஸ்தீனத்தை ஆதரித்தார். அமெரிக்கா ஆதரிக்கும்  இஸ்ரேலின் ஜியோனிசத்தை எதிர்த்தார். 1974 ம் ஆண்டு பெய்ரூட்டில் இருந்த பாலஸ்தீனிய அகதிகள் முகாமுக்கு அவர் விஜயம் செய்தபோது "என் பெயரிலும் அமெரிக்காவில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் பெயரிலும் பாலஸ்தீனியர்களின் தாயகத்தை விடுவிப்பதற்கும், ஜியோனிச படையெ டுப்பாளர்களை வெளியேற்றுவதற்கும் நடைபெறும் பாலஸ்தீன போராட் டத்தை நான் முழு மனதோடு ஆதரிக்கிறேன் என்று அறிவித்தார். முகமது அலிக்கு பல யூத நண்பர்கள், ஆதரவாளர்கள், கூட்டாளிகள் இருந்தனர். ஆனால் அது அவரை ஜியோனிசத்திற்கு எதிராக பேசுவதை தடுக்கவில்லை.

"முழு அதிகார அமைப்பு ஜியோனிஸ்ட் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் அமெரிக்காவை கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் உலகத்தை கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் உண்மையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக உள்ளார்கள். ஒரு முஸ்லிம் தவறு செய்யும் பொழுதெல்லாம் அவர்கள் இஸ்லாம் மதத்தின் மீது பழி சுமத்துகிறார்கள் என்று  ஜியோனிசம் பற்றி காத்திரமான முறையில் அலி, கருத்து தெரிவித்தார். முகமது அலியின் பாலஸ்தீன ஆதரவு பேச்சுக்களை அமெரிக்க ஊடகங்கள் மூடி மறைத்தன. முக்கியமான ஊடகங்கள், ஜியோனிசம் குறித்து அலி தவறாகம் பேசுகிறார் என்று கண்டனக் கணைகளை தொடுத்தனர். முகமது அலியின் போராட்ட வரலாறு, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இடையில் கூட்டுப் போராட்டம்,பரஸ்பர ஒற்றுமை ஆகியவற்றை இணைக்கும் பாலமாக இருந்தது.

 

வியாழன், செப்டம்பர் 21, 2023

தோல்வியடைந்த ராஜதந்திர பயணம்

 


தொடர்: 23


அ.பாக்கியம்

முகமது அலி, 1980 பிப்ரவரி 3 முதல் 10  வரை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் சிறப்பு தூதராக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் 10க்கும் அதிகமான வெள்ளை மாளிகை அதிகாரிகள் உடன் சென்றனர்.

1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோடைகால ஒலிம்பிக் போட்டி சோவியத் யூனியன் தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. இந்தப் போட்டியை அமெரிக்கா தலைமையில் 60 அமெரிக்க சார்பு நாடுகள் புறக்கணித்தன. 1979-ல் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தலையீட்டை இந்த புறக்கணிப்புக்கு காரணமாக கூறினார்கள். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளை, மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிப்பதில் பங்குபெற  வைக்க வேண்டும் என்பதற்காக முகமது அலியை சிறப்பு தூதராக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அனுப்பினார். ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அரசாங்க தலைவர்களுடன் முகமது அலியை பேச வைத்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் முகமது அலியின் பிரபலத்தை பயன்படுத்தியது மட்டுமல்ல… அவருக்கு கருப்பின மக்களிடமிருந்த செல்வாக்கையும், ஆப்பிரிக்க நாட்டில் அவருக்கு இருந்த வரவேற்பையும், இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்ற மத சாயத்தையும் தனது அரசியல் கொள்கைகளுக்காக பயன்படுத்தியது.

1974ம் ஆண்டு முகமது அலி ஜயர் நாட்டில் ஜார்ஜ் போர்மனை தோற்கடிப்பது வரை அமெரிக்காவில் இருந்த அரசும் வெள்ளை இன வெறியர்களும் முகமது அலிக்கு இடையூறாகவே இருந்தனர். இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதை வெள்ளை மாளிகை கண்டுகொள்ளவில்லை.1974 ஆம் ஆண்டு அவர் வெற்றி பெற்று வந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த குடியரசு கட்சியின் தலைவர் ஜெரால்டு ஃபோர்டு முகமது அலியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கவுரவித்தார். ஏகாதிபத்திய அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு முகமதுஅலி தேவை என்ற அரசியல் பின்னணியுடன் அமெரிக்க அரசு இதை அரங்கேற்றியது.

இந்நிலையில் 1978 ல் முகமது அலி, மாஸ்கோ சென்று வந்த பிறகு அவருடைய கருத்துக்கள், பொதுவெளியில் சோவியத் யூனியன் மதிப்பை உயர்த்துவதாக இருந்தது. இது அமெரிக்க தலைமைக்கு நெருக்கடிகளை உருவாக்கியது என்பது தனிக்கதை.

முகமதுஅலி, தனித்தன்மையும் ஆளுமையும் கொண்ட நபர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். அவற்றில் பெரும்பகுதி தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தி பயணித்துள்ளார். சில நேரங்களில் அமெரிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிக்கச் செய்வதற்காக, அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக அவர் மேற்கொண்ட ஆப்பிரிக்கப் பயணம் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது.

முகமது அலி ஆப்பிரிக்காவில் முதலில் தான்சானியா,  பிறகு நைஜீரியா, கென்யா, லைப்ரியா, செனகல் ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டார். அந்த நாடுகளில் இருந்த  கடுமையான எதிர்ப்பாலும் தனது பயணம் வெற்றி பெறாது என்று உணர்ந்ததாலும் அத்துடன் திரும்பி விட்டார்.

முகமது அலி முதலில் சென்ற தான்சானியா  நாட்டிற்கு. அந்த நாட்டின் ஜனாதிபதி ஆப்பிரிக்க மக்களின் புகழ் பெற்ற தலைவரன ஜூலியஸ் நைரேரே. அவர், முகமது அலியை சந்திக்க மறுத்து விட்டார். நைஜீரியாவிலும் முகமது அலி எதிர்ப்பை சந்தித்தார். இந்த பயணத்தினால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதை முகமது அலியே உணர்ந்து கொண்டார். பாக்ஸிங்கை விட ராஜதந்திர நடவடிக்கை மிகவும் கஷ்டமானது என்பதையும் அவர் புரிந்து கொண்டார். ஆப்பிரிக்க நாட்டின் தலைவர்களும், பத்திரிக்கை யாளர்களும், பொதுமக்களும் அவரிடம் கேட்ட கேள்விகள், அவரது பயணத்தையே கேள்விக்குள்ளாக்கியது. 

அமெரிக்காவுக்கு ஆதரவாக முகமது அலி பயணம் செய்த நாடுகளில் "முகமது அலி உங்களை வரவேற்கிறோம்; தயவுசெய்து திரும்பி போய் விடுங்கள்" என்ற கோஷம் எல்லா இடங்களிலும் காணப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு முகமது அலி பதில் சொல்ல முடியாமல் திணறினார். ‘‘குத்துச்சண்டை விளையாட்டு ஓரளவு என் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த ராஜதந்திர பயணம் என்னால் கட்டுப்படுத்த முடியாத விளையாட்டாக உள்ளது’’ என்று முகமது அலியே கூறினார்.   அமெரிக்காவின் மாஸ்கோ ஒலிம்பிக் புறக்கணிப்புக்கு கருப்பின ஆப்பிரிக்க மக்களிடையே ஆதரவு இல்லை என்று முகமது அலி உணர்ந்து கொண்டார்.

மேலும் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இடங்களில் எல்லாம் "மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிக்க சொல்லும் அமெரிக்கா,1976 கனடாவின்  மாண்ட்ரீலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை 28 ஆப்பிரிக்க நாடுகள் - அனேகமாக ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் புறக்கணித்த பொழுது அமெரிக்கா ஏன் புறக்கணிப்பிற்கு ஆதரவு தரவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. முகமது அலியால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

1976இல் தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சி நடைபெற்றது. நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தார். கருப்பின மக்கள் கொடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம், தென் ஆப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசை ஆதரித்தது. தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசை உலகம் முழுவதும் பல நாடுகள் எதிர்த்தன.  குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் தென்ஆப்பிரிக்காவை புறக்கணித்தன.

இதன் ஒரு பகுதியாக 1976 ஆம் ஆண்டு கனடா ஒலிம்பிக் போட்டியை ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று தான்சானியா நாட்டின் தலைமையில் அணி திரண்டனர். காரணம் இந்த ஒலிம்பிக் போட்டியில் தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுடன் விளையாட்டு தொடர்புகளை வைத்திருந்த நியூசிலாந்து அணி பங்கேற்பதை ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. 28 ஆப்பிரிக்க நாடுகள் பங்கு பெறவில்லை. இந்த புறக்கணிப்பால் டிக்கெட் கட்டணமாக 10 லட்சம் டாலரை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. குறிப்பாக தடகளப் போட்டிகள் பாதிக்கப்பட்டன. தடகளத்தில் கென்யா, தான்சானியா நாடுகள் அதிகமான பதக்கத்தை பெறக்கூடிய நாடுகள். இந்தப் புறக்கணிப்பை அமெரிக்க ஆதரிக்காததால், கருப்பின மக்களுக்கு எதிரான - தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவானது அமெரிக்கா என்ற வலுவான கருத்து ஆப்பிரிக்க மக்களிடம் ஏற்பட்டு இருந்தது. அதன் எதிரொலி முகமது அலியின் பயணத்தின் போது வெளிப்பட்டது.

ஆப்பிரிக்க பயணத்தின்போது கேள்விகளால் துளைக்கப்பட்ட முகமது அலி, ஒரு கட்டத்தில், நிலைமைகளை புரிந்து கொண்டு சுயமான முடிவுக்கு வந்தார். ‘‘தென் ஆப்பிரிக்கா மீதான கருப்பின ஆப்பிரிக்காவின் உணர்வுகளை அமெரிக்க அரசாங்கம் உணரவில்லை என்று நான் நினைக்கிறேன்’’ என பத்திரிக்கையாளரிடம் கூறினார். ‘‘1976 இல் அமெரிக்கா எங்களோடு (ஆப்பிரிக்க நாடுகளோடு) ஒத்துழைக்காத போது, தற்போது நாங்கள் ஏன் அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என்ற அவர்களின் கேள்வி நியாயமானதுதான் என்று அலி கூறினார். தென் ஆப்பிரிக்கா விவகாரத்தை இதர ஆப்பிரிக்க நாடுகள் எப்படி பார்க்கின்றன என்று எனக்குத் தெரியாமல் போனது. அது என் பயணத்தை பாதிக்கும் என்பதை நான் கருத்தில் கொள்ளவில்லை என்றும் முகமது அலி கூறினார்.

இஸ்லாமிய ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் கைப்பற்றியதில் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளான நான் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் ஜிம்மி கார்ட்டரின் பிரதிநிதியாக ஆப்பிரிக்காவிற்கு வந்தேன். ஆனால் நான் அமெரிக்காவின் கருத்துக்களை என் மக்கள் மீது திணிக்கும் கிளிப்பிள்ளை போல் இங்கு இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். தான்சானியாவில் நிருபர்களை சந்தித்த பொழுது" ஒருவேளை நான் தவறான ஒன்றை செய்ய பயன்படுத்தபட்டு இருக்கலாம். நீங்கள் என்னை வித்தியாசமாக பார்க்க வைக்கிறீர்கள். நான் சொல்வது தவறு என்று எனக்குத் தெரிந்தால் நான் அமெரிக்காவுக்கு சென்றுவிடுகிறேன். முழு பயணத்தையும் ரத்து செய்கிறேன் என்று கூறினார். முகமது அலி அமெரிக்காவுக்கு திரும்பி ஜிம்மி கார்ட்டரிடம் நடந்தவைகளை தெரிவித்து அந்த விவகாரத்தை அத்துடன் முடித்துக் கொண்டார்.

முகமது அலி அமெரிக்க அரசுக்கு ஆதரவான தனது ஆப்பிரிக்க பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை சந்தித்ததற்கு காரணங்கள் இருக்கின்றன. தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசை சோவியத் யூனியன் எதிர்த்ததுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்ற பல மக்கள் எழுச்சிகளையும், புரட்சிகரமான நடவடிக்கைகளையும், விடுதலை போராட்டங்களையும் ஆதரித்தது. சோவியத் யூனியனின் இது போன்ற நடவடிக்கைகள் ஆப்பிரிக்க மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.  இதை பயணத்திற்கு முன்பு முகமது அலி அறிந்திருக்கவில்லை. அதே நேரத்தில் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் சோவியத் நாட்டின் கூட்டாளிகள் அல்ல. ஆனால், அமெரிக்காவின் நோக்கங்கள், நடவடிக்கைகள் ஆப்பிரிக்க நலன்களுக்கு எதிராக இருந்தது என்பதை அந்த நாடுகளின் மக்கள் உணர்ந்து இருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி, ஒரு அரசியல் செயல்பாட்டாளராக தன்னை களம் இறக்கியது தனது மதிப்பை குறைக்கும் என்பதை உணர அலி தவறிவிட்டார். ஜயர்  நாட்டின் மொபுடு, பிலிப்பைன்ஸ் மார்கோஸ் போன்ற சர்வாதிகாரிகள் குத்துச்சண்டைப் போட்டிக்கு அழைத்த பொழுது அதில் முகமது அலி கலந்து கொண்டது பற்றி ஏற்கனவே அவர் மீது விமர்சனம் இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி அரசு இருந்தவரை அந்த  நாட்டிற்கு அவர் செல்லவில்லை. தென் ஆப்பிரிக்கா வெள்ளை நிறவெறி ஆட்சியை வெளியேற்றிய பிறகு, 27 ஆண்டுகள் சிறைப்பட்ட நெல்சன் மண்டேலா விடுதலையான பிறகு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவிற்கு சென்று  மண்டேலாவை முகமது அலி சந்தித்தார்.

அந்தப் பயணத்தைப் பற்றி அலி குறிப்பிடும் பொழுது,  தீயில் எரிந்த  நாட்டிற்கு நான் வருவது ஒரு அமைதிக்கான பணி என்று தெரிவித்தார். ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளரான கிரீஸ் ஹானி தனது வீட்டிற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டிருந்ததால் தென் ஆப்பிரிக்கா கொந்தளித்துக் கொண்டிருந்தது. உள்நாட்டு போர் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அந்தப் பதட்டமான சூழலில் சோவெட்டோவில் நடைபெற்ற கிரீஸ் ஹானியின் இறுதி நிகழ்வில் முகமது அலி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். வெளிப்படையான ஆபத்துக்கள் இருந்த போதும் முகமது அலி அனைத்திற்கும் துணிந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பிய இடத்தில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முகமது அலி கருப்பின தேசியவாத கருத்துக்களில் மிகத் தீவிரமான நிலையிலிருந்தும், கருப்பின மேலாதிக்கம் என்ற நிலையிருந்தும், இனசமத்துவம் என்ற நிலைபாட்டிற்கு மாறிஇருந்தார், அதே நேரத்தில் கருப்பின சுயநிர்ணயத்தை நோக்கிய கருத்துக்களிலும் செயல்பாட்டிலும், காலனிய எதிர்ப்பு நிலையிலும் தொடர்ந்து களமாடி வந்தார். அவரது தோல்வியுற்ற மாஸ்கோ ஒலிம்பிக் எதிர்ப்பு பிரச்சாரம் அவர் மேற்கொண்ட கடைசி ராஜதந்திர பணி அல்ல. 90 ஆம் ஆண்டு மேலும் ஒரு சில பணிகளை அவர் மேற்கொண்டார்.

அ.பாக்கியம்

 


89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...