அ.பாக்கியம்
Bytamilmarxorg
PublishedSeptember 30, 2026
செம்படையின்
நெடும் பயணத்தின் போது மியோ மற்றும் யாவோ மக்கள் வாழ்ந்த பகுதிகளை கடந்து செல்ல
வேண்டி இருந்தது. இதனால் 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று
செம்படையின் பொது அரசியல் துறை, மியோ மற்றும் யாவோ
மக்களிடையே பணியாற்றுவதற்கான கோட்பாடுகளை வெளியிட்டது. நெடும் பயணத்தின் போது
கடைப்பிடிக்க வேண்டிய இனப் பணிகள் குறித்து வெளியிடப்பட்ட முதல் வழிகாட்டும் ஆவணம்
இதுவே ஆகும். இந்த ஆவணம் வரலாற்றின் முக்கிய மைல் கல்லாக விளங்கியது. இந்த ஆவணம்
அடிப்படை கோட்பாடுகளையும் உறுதியான நடவடிக்கைகளையும் வரையறுத்தது. இந்த வழிகாட்டுதலின்
காரணமாக வடக்கு குவாங்சியின் சிறுபான்மை மக்கள் வாழ்ந்த பகுதியில் செம்படையின்
அணிவகுப்பு சுமூகமான முறையில் நடைபெற்றது. இதற்கான அடிப்படையும் தத்துவார்த்த
வழிகாட்டுதல்களையும் மேற்கண்ட முடிவுகள் வழங்கியது.
வடக்கு
குரான்சியின் மலைப்பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குறைவான கல்வியறிவை
பெற்றிருந்தனர். அரசியல் கோட்பாட்டை புரிந்து கொள்வது அவர்களுக்கு கடினமாக
இருந்தது. இதன் காரணமாக செம்படையின் அரசியல் துறை தங்களது கொள்கைகளை எளிய முறையில்
அணுகக் கூடிய வகையில் இனச் சிறுபான்மை மக்களின் மொழியை பயன்படுத்தினார்கள். மியோ
மற்றும் யாவோ மக்கள் தொடர்பான முழக்கங்கள் என்ற தலைப்பில் தங்களது கருத்துக்களை
செம்படையின் அரசியல் துறை விளம்பரப்படுத்தியது. இந்த அணுகுமுறை மக்களிடம் ஏற்கத்
தக்கதாக அமைந்தது எளிமையாகவும் இருந்தது. இந்த ஆவணங்களில் மியோ மற்றும் யாவோ
மக்கள் அனுபவிக்கும் சுரண்டலையும் ஒடுக்கு முறையின் அரசியல் தன்மையை விளக்கியது.
ஹான் இனத்தவர்கள் மீது சிறுபான்மை மக்கள் ஏன் விரோதத்தை கடைபிடிக்கிறார்கள் என்பதை
அடையாளம் கண்டனர். இன சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் அடிப்படைக் கொள்கைகளை
பிரச்சாரம் செய்தனர். சிறுபான்மை இன மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை நிவர்த்தி
செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இனச்
சிறுபான்மை மக்களின் சுய நிர்ணய உரிமைகள் குறித்து விளக்கினார்கள்.
சிறுபான்மையினரின் பழக்க வழக்கங்களை முழுமையாக மதித்தார்கள். இத்துடன் நிற்கவில்லை, மிக முக்கியமானது
சிறுபான்மை மக்களில் உயர் அடுக்கினராக உள்ளவர்களுடன் அரசியல் மற்றும் ராணுவ
கூட்டணிகளை முன்மொழிந்து அமலாக்கினார்கள். இதுதான் முதன் முதலில் மார்க்சிய இனக்
கோட்பாட்டின் சீன மயமாக்கல் கண்ணோட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி முதன் முதலில்
சிறுபான்மை இன பகுதிக்குள் நுழைந்த பொழுது கடைபிடித்தவையாகும். கொள்கை
உருவாக்கத்திலும் உள்ளூர் எதார்த்தங்களை கருத்தில் கொள்வதின் அவசியத்தையும்
கவனத்தில் கொண்டனர். அதாவது எதார்த்தங்களில் இருந்து உண்மையை தேடுதல் என்பதை ஒரு
முக்கிய கொள்கையாக அங்கீகரித்து செயல்பட்டனர். இது மார்க்சிய இன கோட்பாட்டின்
சீனமயமாக்களின் ஆரம்ப ஆய்வையும் நடைமுறை பயன்பாட்டையும் வெளிப்படுத்தியது.
1935 ஆம் ஆண்டு மே மாதத்தின் நடுப்பகுதியில், மத்திய
செம்படை ஜின்ஷா ஆற்றைக் கடந்து, யி இனத்தவர் வசிக்கும்
லியாங்ஷான் பகுதிக்கு வந்தடைந்தது. மே 20 அன்று, மத்திய புரட்சிகர இராணுவ ஆணையம் “டாடு (Dadu) ஆற்றைக்
கட்டாயமாகக் கடப்பது தொடர்பான இராணுவப் படைகள் மற்றும் அணிகளுக்கான உத்தரவு” ஒன்றை
வெளியிட்டது. இதில், இச்சூழ்நிலையில் ‘யி’ (Yi) மக்களுடனான உறவுகள் மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த விவகாரங்களைக்
கையாளுதல் ஆகியவை “தீர்க்கமான முக்கியத்துவம்” வாய்ந்தவை என்று
வலியுறுத்தப்பட்டது. அதே காலகட்டத்தில், ‘யி’ மக்களின்
ஆதரவைப் பெறுவதை “மிகவும் முக்கியமானது” எனக் கருதி, செம்படையின்
பொது அரசியல் துறை “யி மக்களின் ஆதரவைப் பெறுவதில் கவனம் செலுத்துதல்” என்ற
தலைப்பிலான வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது ‘யி’ மக்கள் வசிக்கும் பகுதிகளை அடைந்த
பிறகு, இனக்குழுக்கள் சார்ந்த பணிகளின் ஆழமான
முக்கியத்துவத்தை “தீர்க்கமான முக்கியத்துவம்” மற்றும் “மிக உயர்ந்த
முக்கியத்துவம்” போன்ற சொற்கள் மூலம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வகையிலான பல
ஆவணங்களை அக்கட்சி வெளியிட்டது. இந்த வலியுறுத்தலானது,
அக்காலத்தில் செம்படை
எதிர்கொண்ட இக்கட்டான மூலோபாயச் சூழலுடனும்,
ஆற்றைக் கடப்பதற்காக ‘யி’ பகுதி வழியாக விரைவாகச் செல்ல வேண்டிய
அவசரமான மூலோபாயத் தேவையுடனும் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டிருந்தது.
செம்படைத் தளபதி ஜு தே, யி பகுதியில் “சீனத் தொழிலாளர்கள்
மற்றும் விவசாயிகளின் சார்பில் செம்படையின் பிரகடனத்தை” வெளியிட்டார். அதில்,
“அனைத்து யி மற்றும் ஹான் சாமானியர்களும் சகோதரர்களும் உறவினர்களும்
ஆவர்” என்று அறிவித்தார். “பிறரால் கொடுமைப்படுத்தப்படுவதோ அல்லது
அவமானப்படுத்தப்படுவதோ இல்லாத உண்மையான சமத்துவத்தையும் சுதந்திரத்தையும்”
உருவாக்குவோம் என்று உறுதியளித்தார். அந்தப் பிரகடனம் எளிய, எளிதில்
புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதன் பேச்சுவழக்கு, கவிதை போன்ற பாணியானது, இன சமத்துவம் மற்றும்
ஒற்றுமை போன்ற கொள்கைக் கோட்பாடுகளை யீ மக்களின் மனதில் ஆழமாகப் பதியவைத்து.
அவர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றது.
வடமேற்கு
சிச்சுவானில் திபெத்தியர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்தபோது, இப்பகுதி “மிகவும்
சிக்கலான இனக் கலவை” கொண்டதாக இருப்பதை மத்திய செம்படை உணர்ந்துகொண்டது. ஜூலை 10,
1935 அன்று, பொது அரசியல் துறை ரெட் ஸ்டார் (Red
Star) செய்தித்தாளில் இனக்குழுக்கள் சார்ந்த பணிகளின் அவசியத்தையும்
முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலான தலையங்கம் ஒன்றை
வெளியிட்டது. இனச் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதே அக்கட்டத்தில் முதன்மையான
முன்னுரிமை என்று அது அடையாளம் காட்டியதுடன், செம்படையின்
அனைத்துத் தளபதிகளும் வீரர்களும் இம்முயற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும்
வலியுறுத்தியது. அத்தலையங்கம் பின்வரும் முழக்கத்தையும் முன்வைத்தது. “கம்யூனிஸ்ட்
கட்சியின் இனக் கொள்கையைப் புரிந்துகொள்ளாதவர்கள் அக்கட்சியின் உறுப்பினர்களாக
இருக்கத் தகுதியற்றவர்கள். இனச் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதன்
முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளாதவர்களும் இப்பணியில் பங்கேற்காதவர்களும் சிறந்த
செம்படை வீரர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்” 1930-களில்
பொது அரசியல் துறையின் முதன்மை அதிகாரப்பூர்வ வெளியீடாகத் திகழ்ந்த ரெட் ஸ்டார்,
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஊடகமாகச் செயல்பட்டது. இது
அக்காலத்தில் இனக்குழுக்கள் சார்ந்த பணிகளுக்கு அக்கட்சி அளித்திருந்த உயர்
முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
ஆகஸ்ட் 4, 1935 அன்று,
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ‘ஷாவோ’ (Shawo) மாநாட்டைக் கூட்டியது; அதில் ஏழு முக்கிய நிகழ்ச்சி
நிரல் உருப்படிகளில் ஒன்றாக இனக்குழுக்கள் சார்ந்த விவகாரங்கள் பட்டியலிடப்பட்டன.
மேலும் ‘நீண்ட அணிவகுப்பு’ தொடங்கிய திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இனக்குழுக்கள்
சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது
குறிப்பிட்ட
கொள்கை விவரங்களில் தகுந்த மாற்றங்களையும் மேற்கொண்டது:
முதலாவதாக, சீன ப் புரட்சியின்
வெற்றி தோல்வியை நிர்மாணிப்பதில் இனங்கள் சார்ந்த பணிகள் முக்கிய பங்காற்ற கூடியது
என முடிவுக்கு வந்தது.
இரண்டாவதாக, பல்வேறு
இனக்குழுக்களின் வர்க்க கட்டமைப்பின் அடிப்படையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்
என்பதை கட்டாயம் ஆக்கியது. பொதுவான வர்க்க கட்டமைப்பு என்று அனைத்து இனக்
குழுக்களையும் அணுக கூடாது என்பதில் தெளிவான முடிவை எடுத்திருந்தனர். அதாவது
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற முறையை அனைவருக்கும்
ஒரே மாதிரியாக பயன்படுத்தாமல் இனக்குழுக்களின் வர்க்க சூழ்நிலைக்கு ஏற்ப
பயன்படுத்த வேண்டும் என்று முடிவாக்கினர். இதற்கு ஏற்ற வகையில் இனக்குழுக்கள்
சார்ந்த உள்ளூர் அரசு அதிகார அமைப்பின் வடிவத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மூன்றாவதாக ஒரு தேசிய ஐக்கிய முன்னணியை
உருவாக்குவதன் அவசியத்தையும் சாத்தியக்கூறுகளையும் தெளிவாக விளக்கிட வேண்டும்.
நான்காவது
இனச்
சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளிலிருந்து ஊழியர்களை உருவாக்குவதற்கு தேசிய
மற்றும் வர்க்க கண்ணோட்டங்கள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட கல்வியை வழங்க
வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக இனப் பிரச்சனைகள் தொடர்பான
மார்க்சிய கோட்பாடுகளை பயில்வதற்கு இந்தத் தீர்மானம் முன்னெப்பொழுதும் இல்லாத
முக்கியத்துவத்தை காலத்தின் தேவை கருதி முன்னிலைப்படுத்தியது. இத்துறையில்
மார்க்ஸ் லெனின் ஸ்டாலின் ஆகியோரின் கோட்பாடுகளையும் செயல்பாட்டு முறைகளையும்
பயில்வதை கட்சியின் மிக முக்கியமான அவசரப் பணியாக கருத வேண்டும் என்று
வலியுறுத்தியது. இனச் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளை கையாளுவதில் இதுவே
கட்சிக்கு மிகவும் நம்பகமான ஆயுதம் என்பதை அழுத்தம் திருத்தமாக
எடுத்துரைத்தார்கள். நீண்ட அணி வகுப்பு துவங்கிய காலகட்டத்தில் இருந்து
உருவாக்கப்பட்ட தீர்மானங்களில் இது முக்கியமானதாக கருதப்பட்டது அதே நேரத்தில்
அதுவரை கடைபிடிக்கப்பட்ட அனுபவங்களையும் வெற்றிகளையும் தொகுத்து இந்த தீர்மானம்
வழங்கியது. எதிர்காலத்தில் செயல்படுவதற்கான திசை வழிகளையும் காட்டியது.
இனச்
சிறுபான்மையினர் குறித்து செம்படையின் ‘நான்காவது முன்னணிப் படை’ (Fourth Front Army) வெளியிட்ட
முக்கியமான ஆவணங்களில் பெரும்பாலானவை, திபெத்தியர்கள்
வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய இன விவகாரப் பணிகளில் கவனம்
செலுத்தின. 1935-ஆம் ஆண்டு மே மாத மத்தியில், நான்காவது முன்னணிப் படையானது சாங்பான் (Songpan), மாவோ
கவுண்டி (Mao County) மற்றும் லிஃபான் (Lifan) போன்ற திபெத்திய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்தது. இங்கு
செம்படை ’இனச் சிறுபான்மையினர் பணிக்கான வழிகாட்டுதல்கள்’ (Guidelines
for Ethnic Minority Work) என்ற ஆவணத்தை வெளியிட்டது. உள்ளூர் இனச்
சிறுபான்மையினரின் பண்புகள் பற்றியம், அவர்களிடையே நிலவும்
வர்க்க வளர்ச்சியின் நிலை ஆகியவற்றை குறித்தும் இந்த ஆவணம் விவரித்தது. இன மொழிகள்
மற்றும் கலாச்சாரங்களின் வளர்ச்சி, இனச்
சிறுபான்மையினரிடமிருந்து நிர்வாகிகளை உருவாக்குதல் ஆகியவற்றை “இனச்
சிறுபான்மையினர் பணிக்கான முக்கிய அம்சங்கள்” என்று இந்த ஆவணம் வரையறுத்தது.
அத்துடன், இனச் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளைத்
தீவிரமாகப் பயிலவும், தங்கள் படைவீரர்களைக் கொண்டு அவை
குறித்து விவாதிக்கவும் அனைத்துச் செம்படை நிர்வாகிகளையும் இது அறிவுறுத்தியது.
1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செம்படையின் நான்காவது படைப்பிரிவு அரசியல் துறை
இன சிறுபான்மையினர் பணிக்கான கட்டளை (directive on ethnic minority work) என்ற ஆவணத்தை வெளியிட்டது. வடமேற்கு பகுதியில் ஜப்பானின் தாக்குதலை
எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு தளத்தை செம்படை அமைக்க வேண்டிய தேவை இருந்தது. இந்தச்
சூழலில் இன விவகாரப் பணிகள் இதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை
இந்த கட்டளை வெளிப்படுத்தியது. இந்த காலகட்டத்தில் நான்காவது படையணி சந்தித்த இனச்
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்கது வர்க்கப் போராட்டம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரச்சாரம் மத விவகாரங்கள் அரசு அதிகார அமைப்பு மற்றும்
நிலம் தொடர்பான பல சிக்கல்கள் அடங்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டது.
புரட்சிகரமான
கோட்பாடுகளை இனச் சமூகங்களின் நடைமுறை தேவைகளுடன் அன்றாட தேவைகளுடனும்
இணைப்பதற்கான வழிமுறைகளை கையாண்டனர். செம்படையின் பொருட்கள் தேவை மற்றும்
விநியோகத்திற்கும் உள்ளூர் மக்களின் நலன்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் உருவாகி
விடாமல் செயல்பட்டார்கள் இனச் சிறுபான்மை மக்களிடம் உயர் பிரிவினராக இருக்கக்கூடிய
“துஷி’ என்ற உள்ளூர் தலைவர்கள் “தொங்சி” என்ற மொழிபெயர்ப்பாளர்களாக செயல்படக்கூடிய
இடைத்தரகர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்குமாறு
செம்படையை இந்தக் கட்டளை வலியுறுத்தியது. தெற்கு நோக்கி நகர்கிற பொழுது செம்படை
தொடர் பின்னடைவுகளை சந்தித்த ஒரு கடினமான காலகட்டத்தில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டு
இக்கட்டான சூழலிலும் இனப்பணிகளுக்கான முதன்மையான பணியை வலியுறுத்தியது.
இந்த
செயல்பாடுகள் இனச் சிறுபான்மை சமூகங்களுக்கும் செம்படைக்கும் இடையிலான பிணைப்பை
வலுப்படுத்தியது. அத்துடன்,
வடக்கு ‘காங்’ (Kang) பகுதியின் திபெத்தியப்
பகுதிகள் வழியாக ‘செம்படை நான்காவது முன்னணி ராணுவம்’ (Red Fourth Front
Army) வெற்றிகரமாகக் கடந்து செல்வதற்கும், வடமேற்குப்
பகுதிக்கு மறுசீரமைப்புப் பணிக்காகச் செல்லும் அதன் மூலோபாய இலக்கை அடைவதற்கும்
சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மே
29, 1936
அன்று, செம்படையின் நான்காவது முன்னணி ராணுவத்தின் அரசியல்
பிரிவு, “ஃபான் (Fan) மக்கள் தொடர்பான
இனக் கொள்கைக்கான வரைவுத் திட்டம் என்ற ஆவணத்தை வெளியிட்டது. கட்சிப் பிரிவுகளின்
விவாதத்திற்காகவும், ஓரளவுக்கு உயர் கல்வி பெற்ற கட்சித்
தொண்டர்களைக் கருத்தில் கொண்டும் உருவாக்கப்பட்ட இவ்வாவணம், இனப்
பணிகள் குறித்த கோட்பாட்டு ரீதியான விளக்கங்களை வழங்கியது. இதன் உள்ளடக்கங்கள்
கீழ்கண்ட அடிப்படையில் அமைந்திருந்தன. இனப் பணிகளின் கோட்பாட்டு முக்கியத்துவத்தை
மீண்டும் வலியுறுத்தியது. திபெத்தியப் பகுதிகளின் பண்புகள் மற்றும் சமூக வளர்ச்சி
நிலைகளை ஆய்வு செய்து, அவற்றை கட்சியின் இனக் கொள்கைகளுக்கான
அடிப்படை ஆதாரமாக முன்னிலைப்படுத்தல். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் குவோமின்டாங் (Kuomintang)
போர்வீரர்களால் (warlords) பின்பற்றப்பட்ட
இனப் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை கொள்கைகளை அம்பலப்படுத்துவது. இனச்
சிறுபான்மைப் பகுதியில் உன்ன மேல்தட்டுப் பிரிவினருடன் கூட்டு முன்னணியாகச்
செயல்படுவதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துதல். (எ.கா., பரந்த
இனச் சிறுபான்மை மக்களுடன் தொடர்புகொள்வதற்கான பாலங்களாக துசி மற்றும் லாமாக்களைப்
பயன்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது).
மக்களின்
வாழ்வாதாரம் குறித்து, நிலப் பகிர்வு, தானியம், கால்நடைத்
தீவனம் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கான நடைமுறை மாதிரிகளையும், கட்டாய உழைப்பு முறையை ஒழித்தல், கைவினைஞர்களின்
நலன்களைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளையும் இவ்வாவணம் ஆக்கப்பூர்வமாக
முன்மொழிந்தது. குறிப்பிடத்தக்க வகையில், இப்பகுதிகளில் உள்ள
“பிற இனச் சிறுபான்மையினர்” பற்றி முதன்முறையாக இவ்வாவணம் குறிப்பிட்டது; ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட குழுக்களுக்குத் தன்னாட்சி
மாவட்டங்கள் மற்றும் குழுக்களை அமைப்பதை இது ஆதரித்தது. மேலும், பரவலாக வசிக்கும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகள், அவர்களின்
மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உள்ளூர் போபா (Boba) நிர்வாகங்களில் இணையத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தது.
இது
நடைமுறையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இனக் கொள்கைகளுக்குள் ‘பிராந்திய இனத்
தன்னாட்சி’ (regional ethnic autonomy) என்ற
கருத்தாக்கத்தின் ஆரம்பகால வடிவமாக அமைந்தது. அந்த “வரைவுத் திட்டத்தில்” (Outline)
விவரிக்கப்பட்ட இனக் கொள்கை ஒப்பீட்டளவில் விரிவானதாக இருந்தது.
திபெத்தியப் பகுதிகளில் ‘செம்படை நான்காம் முன்னணி இராணுவம்’ (Red Fourth
Front Army) ஓராண்டுக்கும் மேலாகச் செயல்பட்ட பிறகுதான், உள்ளூர் யதார்த்தங்கள் மற்றும் இன விவகாரங்கள் சார்ந்த நடைமுறை
அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட பாடங்களின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்புப் போரின் சூழலில் ஏற்பட்ட
மாற்றங்களுக்கு ஏற்ப இது சரியான நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டது. இன விவகாரங்களை
முன்னெடுத்துச் செல்வதிலும், இரண்டு இராணுவங்களையும்
ஒன்றிணைத்து வடக்கே அணிவகுத்துச் செல்லும் மூலோபாய இலக்கை அடைவதிலும் சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் பிற்கால முயற்சிகளில் இந்தக் கொள்கை முக்கிய பங்காற்றியது.
அ.பாக்கியம்


.jpg)
