அ.பாக்கியம்
பௌத்த துறவி தலாய்லாமா உலகளவில் செல்வாக்கு கொண்டவர் என்ற பிம்பம்
கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பிம்பத்தை அமெரிக்க அரசும், அதன்
ஊடகங்களும் கட்டமைத்ததாகும். உலகளாவிய பௌத்த செல்வாக்கு படைத்த தலாய்லாமாவை
முன்னிலைப்படுத்தி இந்தியா பௌத்த ராஜதந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற
ஆலோசனையும், அழுத்தமும் இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறது.
இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசும், சங் பரிவார
அமைப்புகளும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் சிக்கிம், லடாக், அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியில்
திபெத்திய பௌத்தம் அதிகமாக இருப்பதினால் இவற்றை உள்ளடக்கி சீனாவிற்கு எதிரான பௌத்த
ராஜதந்திர முறையில் செயல்படுவதுதான் இந்த கருத்தின் அடிப்படையாகும்.
உலகளவில் தலாய்லாமாவை
பின் தொடரக்கூடியவர்கள் மிக மிகக் குறைவு என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.
திபெத்திய பௌத்தம் அதிகமாக கடைபிடிக்கக் கூடிய மக்கள் வாழும் பூட்டான், நேபாளம்,
மங்கோலியா போன்ற நாடுகளில் கூட அம்மக்கள் தலாய்லாமாவை
ஏற்றுக்கொள்வதில்லை. இது குறித்து தலாய்லாமாவே ஆதங்கப்பட்டு பேசியுள்ளார் “உலகில்
உள்ள மற்ற அனைவரும் அதாவது கிறிஸ்தவர்கள் இந்துக்கள் முஸ்லிம்கள் உட்பட என்னை
நன்றாக நடத்துகிறார்கள் ஆனால் எனது சொந்த புத்த சகோதரத்துவம் என்னை நன்றாக
நடத்துவது இல்லை ” என்று (ஏப்ரல் 2,2015 ராய்டர்ஸ்)
தெரிவித்தார்.
இதற்கு வரலாறு, அரசியல், கலாச்சார ரீதியான
காரணங்கள் இருக்கின்றன. பௌத்தர்களிடையே பிறப்பு முதல் இறப்பு வரையிலான கலாச்சார
மற்றும் வழிபாட்டு முறைகளில் இருக்கிற வேறுபாடும் ஒரு காரணமாகும். அதைவிட
முக்கியமானது தலாய்லாமா குறைந்தபட்சம் நட்பின் அடிப்படையில் கூட
வரவேற்கப்படவில்லை. அதற்கு காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுக்கு மூட்டையை
அவர் சுமப்பது தான்.
நேபாளத்தில் கலக முயற்சி
திபெத்தின் அருகில் உள்ள நாடு நேபாளமாகும். இங்கு 81% மக்கள்
இந்து மதத்தில் இருந்தாலும், இதற்கு அடுத்தபடியாக 8.2
சதவீதம் பேர் பௌத்த மதத்தில் இருக்கிறார்கள். இந்த பௌத்த மதத்தில்
திபெத்திய பௌத்த மதத்தை கடைபிடிக்கக் கூடியவர்கள் தான் பெரும் பகுதி. அப்படி
இருந்தும் நேபாள திபெத்திய பௌத்தர்கள் தலாய்லாமாவை விரும்புவது இல்லை. 2019
ஆம் ஆண்டு தலாய் லாமாவின் 84 ஆம் ஆண்டு பிறந்த
நாளை கொண்டாடுவதற்கு நேபாள அரசு தடை விதித்தது. இங்கு ஆட்சியில் இருப்பது
கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும், நேபாளி காங்கிரஸ்
கட்சியாக இருந்தாலும் தலாய்லாமாவின் அரசியல் குறித்து மிகவும் எச்சரிக்கையாகவே
இருக்கிறார்கள். ஜி.பி கொய்ராலா நேபாளத்தில்
பிரதமராக இருந்த பொழுது சீனாவிற்கு எதிராக செயல்படக்கூடிய திபெத்திய
பிரிவினைவாதிகளை சீன அரசிடம் ஒப்படைத்தார். 2003 ஆம் ஆண்டு
மே 31 ஆம் தேதி மன்னர் ஞானேந்திரா ஆட்சியின் கீழ் நேபாளம்
இருந்த பொழுது சீன அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 திபெத்திய பிரிவினைவாதிகளை சீனாவிற்கு நாடு கடத்தினார்.
நேபாளத்தில் தற்போது 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட திபெத்திய அகதிகள்
வசிக்கிறார்கள். தொடர்ந்து சீன எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு பிரிவினர் ஈடுபடுவதை
நேபாள அரசு எதிர்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் நேபாளத்திற்குள் தொடர்ந்து ஊடுருவ
கூடிய அகதிகள் வருகையை 1989 ஆம் ஆண்டு முதல் நேபாளம் தடை
செய்து உள்ளது. நேபாளம் ஒரே சீனக் கொள்கையை ஆதரிக்க கூடிய நாடு. அதாவது தைவானும்,
திபெத்தும் சீன பிரதேசத்தின் பிரிக்க முடியாத பகுதி என்பதை ஏற்றுக்
கொள்கிறது. இதனால் நேபாளத்திற்குள் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை தடை செய்கிறது.
இந்தப் பின்னணியில் தலாய்லாமாவின் பிறந்த நாள் விழாவில் அணி சேர்க்கப்படும்
பிரார்த்தனைகளையும், அதன் பெயரால் திபெத் கொடியை ஏற்றக்கூடிய
செயல்களையும் தடை செய்து வருகிறது.
துறவி அரசின் கொலைத்திட்டங்கள்
பூட்டான் அவர்களது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி பௌத்த நாடாக
அங்கீகரிக்கப்பட்டது. இந்நாடும் புவியியல், அரசியல் ரீதியாக இந்தியாவிற்கு மிக அருகில்
உள்ளது. தலாய்லாமாவால் நடத்தப்படும் நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசு இயங்கும்
தர்மசாலாவிற்கு அருகில் உள்ள நாடு பூட்டான். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்
என்னவென்றால் பூட்டானில் இருக்கக்கூடிய பௌத்த மதத்தில் 75% வஜ்ராயன பௌத்த மத பிரிவை அதாவது திபெத்திய பௌத்த மத பிரிவை சேர்ந்தவர்கள்.
இத்தனை அணுகூலங்கள் இருந்த பொழுதும் பூட்டான் பல பத்தாண்டுகளாக
தலாய்லாமாவை ஏற்றுக் கொள்ளவும் இல்லை, அனுமதிக்கவும் இல்லை. பூட்டான் இந்தியாவை
பாதுகாவலராக கொண்ட ஒரு நாடாகும். பூட்டானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக்
கொள்கைகள் எப்பொழுதும் இந்தியாவின் வழிகாட்டுதல் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
பூட்டான் அரசு இதை ரத்து செய்ய விரும்பினாலும் இந்தியா பிரிட்டிஷாரிடம் இருந்து
பெற்ற இந்த நடைமுறையை விட்டுக் கொடுக்காமல் இன்று வரை பயன்படுத்தி வருகிறது.
திபெத்திய பௌத்தர்கள் அதிகம் வாழும் பூட்டானிற்கு செல்ல
முடியாததற்கு அரசியல் காரணங்கள் அடிப்படையாக இருக்கிறது. பூட்டான் அரசியலில்
தலாய்லாமாவின் நாடு கடத்தப்பட்ட அரசு நேரடியாக தலையிடுகிறது. தலாய்லாமாவின் மூத்த
சகோதரர் நாடு கடத்தப்பட்ட அரசின் தலைவர் கியாலோ தோண்டப் 1974 ஆம்
ஆண்டு பூட்டானின் இளம் மன்னரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்
சாட்டப்பட்டார். பூட்டான் அரண்மனையில் தலைமை பொறுப்பில் இருந்த திபத்திய பெண்ணுடன்
இணைந்து இந்த சதிகளை செய்தார் என்ற (இந்தியா டுடே 30 டிசம்பர்
2014) குற்றச்சாட்டுகள் வலுவாக உள்ளது. பூட்டானின் மீது
செல்வாக்கு செலுத்த தலாய்லாமாவின் ஏகாதிபத்திய சக்திகள் இந்த முயற்சிகளை
மேற்கொண்டார்கள்.
சீனாவிற்கு எதிரான சதி நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு பூட்டானில்
ஒரு வலுவான தளத்தை அமைக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தின் ஒரு நோக்கம்தான் இந்த
படுகொலை முயற்சி என்று நியூ யார்க் டைம்ஸ் (ஜூன் 2 1974) செய்தி
வெளியிட்டது. பூட்டான் அரசு படுகொலை முயற்சியில் ஈடுபட்ட 30 பேரை
கைது செய்தது. ஒரு விரிவான அறிக்கையும் வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்தியாவில்
டார்ஜ்லிங்கில் இருந்த கியாலோ தோண்டப் தலைமையில் பூட்டானின் அரசியல் தலைமையை
தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஒன்று தான் இந்த
கொலைச்சதிகளாகும் என்றது.
இதற்கு முன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூட்டானின் பிரதமராக
இருந்த ஜிக்மிடோர்ஜி படுகொலை செய்யப்பட்டார். அப்போதும் பூட்டானின் அரண்மனையில்
இருந்த திபெத்திய பெண்ணின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. சீனாவிற்கு எதிராக
சிஐஏவால் பயிற்சி அளிக்கப்பட்டு, நிதியும் வழங்கப்பட்டு
டார்ஜ்லிங்கில் செயல்பட்டு வந்த திபெத்திய தலைமையகம் தான் இந்தச் சதிதிட்டங்கள்
தீட்டப்பட்டு, பிரதமர் படுகொலை செய்யப்பட்டார் என்ற
சந்தேகத்தை வலுவாக முன்வைத்தனர். 1971 ஆம் ஆண்டு சீன
அமெரிக்க உறவுகளுக்குப் பிறகு டார்ஜ்லிங்கில் இருந்த தலைமையகம் மூடப்பட்டது.
எனினும் தலாய்லாமாவை ஆதரிக்கும் திபெத்தியர்கள் பூட்டானை கைப்பற்றும் நோக்கத்தோடு
தொடர்ந்து செயல்பட்டனர்.
பூட்டானில் செல்வாக்கை நிலை நிறுத்த திட்டம்
இந்த செயல்பாட்டிற்கு மற்றொரு புறச்சூழல் காரணமாக இருந்தது.
பூட்டான் மக்கள் தொகையில் பெரும் பகுதி திபத்திய வம்சாவளியை கொண்டவர்கள். எனவே
இதன் மூலம் பூட்டானில் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்தலாம் என்று தலாய்லாமா
நினைத்தார். இந்தியாவில் செயல்படும் நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசு, பூட்டானுக்கு
எதிராக அமைதியை சீர்குலைக்க கூடிய முறையில் செயல்படுவதாக பூட்டான் அதிகாரிகள்
குற்றச்சாட்டை தொடர்ந்து முன் வைக்கிறார்கள்.
பூட்டானில் இருக்கக்கூடிய திபெத்திய அகதிகள் பூட்டான் குடிமக்களாக
மறுக்கிறார்கள். பூட்டான் நாட்டின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர்.
இவர்கள் பூட்டான் நாட்டின் அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்கக்கூடிய
முறையில் பூட்டானின் குடியுரிமையை பெறவேண்டும் என்று பூட்டான் அரசு வலியுறுத்துவதை
திபெத்தியர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.
திபெத்தியர்கள் பூட்டானின் பிரதான வாழ்க்கை நீரோட்டத்தில் இணைந்து
விட்டார்கள். பூட்டானில் இருக்கக்கூடிய திபெத்திய அகதிகளுக்கு எதிர்கால தாயகம்
பூட்டான் தான் என்பதையும் அறிந்து உள்ளார்கள். ஆனால் தலாய்லாமாவும், அவரது நாடு கடத்தப்பட்ட அரசும் பூட்டானில் இருக்கக்கூடிய அகதிகள்
நாடற்றவர்களாக இருப்பதன் மூலம்தான் தலாய்லாமா என்ற துறவிக்கு விசுவாசமாக
இருப்பார்கள் என்று அவர்கள் குடியுரிமை பெறுவதை தடுத்து வருகின்றனர் என்று
பூட்டானின் அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மறுபுறத்தில் பூட்டானில் இருக்கக்கூடிய திபெத்திய அகதிகளைக் கொண்டு
பூட்டானில் அதிகாரத்தை கைப்பற்ற தலாய்லாமா ஆதரவாளர்கள் முயற்சிப்பதை தடுப்பதற்காக, பூட்டானில்
இருக்கக்கூடிய அகதிகளை சிறு சிறு குழுக்களாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில்
குடியமர்த்த முயற்சித்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பூட்டான் அரசியலில்
எதிர்காலத்தில் வரும் குழப்பத்தை, ஆபத்தை தடுக்க முடியும்
என்று நம்புகின்றனர்.
தலாய்லாமாவின் நாடு கடத்தப்பட்ட அரசு பூட்டானுடன் அரசியல் உறவு
வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தலாய்லாமாவுடன் மதரீதியான உறவுகளை பேணுவதற்கு
பூட்டான் எப்பொழுதும் தயாராக இருக்கிறது. ஆனால் தர்மசாலாவில் இருக்கிற நாடு
கடத்தப்பட்ட திபெத்திய அரசுடன் எந்த அரசியல் உறவும் வைத்துக்கொள்ள முடியாது என்பதை
பூட்டான் நிராகரித்துவிட்டது. மேற்கண்ட காரணங்களால் பூட்டானில் 75% திபெத்திய
பௌத்தத்தை கடைபிடிக்க கூடியவர்களும், திபெத்திய
வம்சாவளிகளும் வாழக்கூடிய நாட்டிற்குள் தலாய்லாமாவால் நுழைய முடியவில்லை. அந்த
மக்களும் தலாய்லாமாவின் இந்த அரசியலை விரும்பவில்லை. இந்த நிலையில் தான் திபெத்திய
அகதிகளை மட்டும் வைத்துக் கொண்டு தலாய்லாமா அரசியல் சித்து வேலைகளை செய்து
வருகிறார்.
கண்டுகொள்ளாத தாய்லாந்து
தாய்லாந்து 95% பௌத்த மக்களைக் கொண்ட நாடு. பௌத்தத்தின் பிரதான
பிரிவான தேரவாத பிரிவை கடைபிடிக்கக் கூடிய மக்கள் தான் இங்கு பெரும்பகுதி
உள்ளார்கள். மேலும் இந்நாட்டின் பெரும்பகுதி மக்கள் தலாய்லாமாவை அறிந்திருக்க
மாட்டார்கள். தலாய்லாமைவை அறிந்தால் தானே அவர் வழிபாட்டுக்கு உரியவரா? இல்லையா? என்பதை முடிவெடுக்க முடியும். ஆனால்
தலாய்லாமாவை ஓரளவுக்கு அறிந்த மக்கள் கூட ஒரு மதத்தின் தலைவராக இருக்கக்கூடிய
தலாய்லாமா ஏன் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்றும், ஏன்
தாய் நாட்டை பிரிப்பதில் இவ்வளவு விடாப்பிடியாக இருக்கிறார்கள் என்றும் கேள்வி
எழுப்புகிறார்கள்.
1993 ஆம் ஆண்டு மியான்மரில் ஆங்க்சான் சூகி கைது
செய்யப்பட்டதை எதிர்த்து தாய்லாந்தில் ஒரு எதிர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சியில் தலாய்லாமாவை கலந்து கொள்ள வைப்பதின் மூலம் தாய்லாந்தின் பௌத்த
மக்களை தன்பக்கம் ஈர்க்க அமெரிக்கா முயற்சி செய்தது. ஆனால் தாய்லாந்து அரசு
தலாய்லாமாவிற்கு விசா கொடுக்க மறுத்து விட்டது. அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தம்
கொடுத்ததின் விளைவாக தலாய்லாமாவிற்கு 24 மணி நேர விசா
மட்டும் வழங்கியது. அதே நேரத்தில் அவர் வேறு எங்கும் செல்லக்கூடாது, யாரையும் சந்திக்க கூடாது என்ற நிபந்தனைகளையும் விதித்தது.
வரவேற்காத இலங்கை
இலங்கை நாடும் இதேபோன்று தேரவாத பௌத்த பிரிவை சேர்ந்த நாடாகும்.
அங்கு எந்த ஆட்சி இருந்தாலும் அவர்கள் தலாய்லாமாவை ஏற்றுக் கொள்வது இல்லை. 2006 ஆம்
ஆண்டு புத்தரின் 2005 ஆம் ஆண்டு பிறந்த நாளில் கலந்து கொள்ள
வேண்டும் என்று தலாய்லாமா இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இலங்கை அரசு
அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இலங்கையில் புத்த மத வரலாற்று தொடர்பான மிக
முக்கியமான தலங்கள் இருக்கின்றன. குறிப்பாக புத்தரின் பல் மற்றும் மகா போதி
மரத்தின் வழித்தோன்றல்கள் என கூறப்படும் மரம் உள்ளது. இலங்கையில் உள்ள இந்த இரண்டு
இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்று தலாய்லாமா சிறு வயதிலிருந்தே ஆர்வத்துடன்
இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் இவர் ஒரு அரசியல் துறவி என்பதை கணக்கில் கொண்டு
இலங்கை அரசு விசா கொடுக்க மறுத்து விட்டது. இலங்கையில் இருக்கக்கூடிய பௌத்தர்களும்
தலாய்லாமாவை வரவேற்க தயாராக இல்லை.
அனுமதி மறுத்த மியான்மர்
அடுத்து பௌத்தம் மதத்தை அதிகம் பின்பற்றும் மக்கள் இருக்கக்கூடிய
நாடு மியான்மர் ஆகும். இங்கு தேரவாத பௌத்த பிரிவை சேர்ந்த மதம் அதிகாரப்பூர்வ
மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மதப்பிரிவில் ஒன்பது வழிபாட்டு முறைகள்
மியான்மரில் கடைபிடிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு தலாய்லாமா தான் ஒரு மதத் தலைவர் என்ற
அடிப்படையில் மியான்மருக்கு செல்வதற்கான வேண்டுகோளை விடுத்தார். மியான்மர் நாடு
அவரை அனுமதிக்கவில்லை. தலாய்லாமாவையோ அவரின் திபெத்திய பௌத்தத்தையோ மியான்மர்
மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மியான்மர் நாடு பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்தை பெற்ற பிறகு 1954 மற்றும்
1956 ஆம் ஆண்டுகளில் 8 பௌத்த நாடுகளைச்
சேர்ந்த தேரவாத பிரிவுகளை அழைத்து ஆய்வு மாநாடு நடத்தியது. மிக முக்கிய தேரவாத
நூல்களை சரிபார்த்து இறுதிப் படுத்தியது. அவ்வாறு இறுதிப் படுத்திய நூல்களின்
அடிப்படையில் பிற்காலங்களில் எழுதப்பட்ட இதர பிரிவுகளை இவர்கள் அங்கீகரிப்பது
இல்லை.அதேபோன்று திபெத்திய மதத் தலைவரின் மறுபிறவியை தேடும் பாரம்பரியம்
மியான்மரில் மட்டுமல்ல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எங்கும் இது காணப்படவில்லை.
எனவே பௌத்த வேறுபாடுகளின் அடிப்படையிலும் கூட மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 1984
ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் தலாய்லாமா கீழ்க்கண்ட விஷயத்தை முன்
வைத்தார்.
“திபெத்திலிருந்து 1959 ஆம்
ஆண்டு மார்ச் மாதம் வெளியேறுவதற்கு முன்பு அன்றைய பர்மாவிற்கு செல்வதற்கு
விரும்பியதாகவும், அன்றைய தினம் பர்மாவின் பிரிமியராக இருந்த
யூநு தலைமையிலான அரசு அவரை வரவேற்கத் தயாராக இல்லை என்று
அறிவித்து விட்டதாக கூறினார். இன்று வரை இதுதான் நீடிக்கிறது
இணையும் புள்ளியே ஏற்றுக்கொள்ளவில்லை
சீனாவை தனது முதல் எதிரியாக கருதும் அரசுதான் தைவானில் உள்ளது.
இந்த நாட்டில் பௌத்த துறவிகளை வரவேற்பது இயற்கையாக நடக்கும் என்று அனைவரும்
எதிர்பார்க்கலாம். குறிப்பாக சீன எதிர்ப்பில் தைவானும் தலாய்லாமாவும் ஒரே
புள்ளியில் இணைவதால் அவருக்கு அமோக வரவேற்பு இருக்கும் என்று நினைத்தால் அது
தவறானதாகும். இந்தியாவில் நாடு கடத்தப்பட்ட அரசை அமைத்து 40 ஆண்டுகள்
வரை தலாய்லாமாவை தைவான் நாடு அனுமதிக்கவில்லை.
1997 ஆம் ஆண்டு தான் அவர்
முதல் முறையாக தைவானுக்கு சென்றார். 2001 ஆம் ஆண்டு பௌத்த
மதத்தை மேம்படுத்துவதற்காக என்ற பெயரில் தைவானில் அனுமதிக்கப்பட்டார். 2009
ஆம் ஆண்டு தலாய்லாமாவின் கடைசி தைவான் பயணம் கடுமையான
எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்தது. அப்போது தைவான் நாட்டு அதிபராக இருந்த மாயிங்-ஜியோ அவரை
தைவானுக்கு வர அனுமதித்ததோடு நிறுத்திக் கொண்டார். கடைசி வரை தலாய்லாமா
முயற்சித்தும் அதிபர் அவரை சந்திக்கவில்லை. மறுத்துவிட்டார்.
2020 ஆம் ஆண்டு மாயிங்-ஜியோ
அதிபரின் வாரிசாக திருமதி சாய் இங்-வென் ஆட்சிப்
பொறுப்பை ஏற்றார். இவர் தேர்ந்தெடுத்ததை தலாய்லாமா வெகுவாக புகழ்ந்து, வாழ்த்து செய்திகளை அனுப்பினார். அப்படி இருந்தும் தைவானுக்குள்
தலாய்லாமாவை அனுமதிக்கவில்லை. இந்தியாவிற்கு வந்து அறுபது ஆண்டுகளில் தலாய்லாமா
தைவானுக்கு சென்றது மூன்று முறை மட்டுமே. அதுவும் அமெரிக்க நோக்கங்களை
நிறைவேற்றுவதற்கு அமெரிக்க நிர்ப்பந்தத்தால் கட்டுப்பாடுகளுடன் கூடிய விசா மட்டுமே
தைவானால் வழங்கப்பட்ட நிலையில் அவர் சென்று வந்தார்.
தலாய்லாமாவின் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைக்கப்பட்டு
விட்டது. ஆனாலும் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் இந்தியா உட்பட அந்த
பிம்பத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். திபெத்திலிருந்து வெளியேறிய
1.5 லட்சம் பேர் மட்டும் தான். இவர்களில் 75 சதவீதம்
வந்தனர். தற்போது 40 சதம் வெறியேறி விட்டனர். நாடு
கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் உலகம் முழுவதும் உள்ள வாக்காளர்களே 89
ஆயிரம் மட்டுமே. 2011 ஆம் ஆண்டு நாடு
கடத்தப்பட்ட திபெத்திய அரசின் தேர்தல் வழியாக இதை அறிய முடிகிறது. இவற்றில் 49,000
பேர் தான் வாக்களித்து உள்ளார்கள். பௌத்த மக்கள் அதிகமான கூடிய எந்த
ஒரு நாட்டிலும் தலாய்லாமாவிற்கு ஆதரவும், பின்
தொடர்பவர்களும் இல்லை என்பது தான் உண்மை.
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக