Pages

புதன், அக்டோபர் 29, 2025

44 திபெத்:உழவும் தொழிலும் உயர்ந்த விதம்

 



அ.பாக்கியம்

உலகின் கூரை என்று அழைக்கப்பட்ட திபெத்தில் மக்களை அடிமை நுகத்தடியில் அழுத்தி வைத்திருந்தார்கள். இன்றோ திபெத் மக்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகின் கூரைக்கு மேலே உயர்த்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. “தத்துவமும், அரசியலும் போதனைகளாக மட்டும் இருக்க முடியாது. அது போதனைகளாக இருக்கிற வரை வெற்றி பெறாது, அது மட்டுமல்ல வரலாற்றால் புறக்கணிக்கவும் பட்டுவிடும்”. தத்துவமும், அரசியலும் நடைமுறைக்கானது. அந்த நடைமுறை மக்களின் வாழ்வாதாரத்தை, அவர்களின் அறிவுத்திறனை, புதிய கண்டுபிடிப்புகளை உயர்த்துவதாக அமைய வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிசம் லெனினிசத்தை சீனத் தன்மைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தியதை அறிய முடியும். அதையும் கடந்த சீனாவின் சில பிரதேச சூழ்நிலைகளையும், வரலாற்று அம்சங்களையும் கணக்கில் கொண்டு மார்க்சியத்தை கையாண்டார்கள்.

திபெத் சீனாவின் ஒரு மாறுபட்ட பகுதியாகும். மதமும் இயற்கை சூழலும் பூகோள அமைப்பும் மக்களின் வரலாற்று வழி வளர்ச்சியும் வேறுபட்டது என்பதால் அங்கு மார்க்சியத்தை மிகவும் நெளிவுசுளிவுடன் அமலாக்கி வெற்றி பெற்றனர். இந்த முறையில் தான் 4000 மீட்டருக்கு மேல் உயர்ந்த ஒரு பகுதியில் சீனாவின் சமவெளி பிரதேசத்தில் என்ன வெற்றியை பெற்றார்களோ அதே அளவு பொருளாதார வசதிகளையும் வெற்றியையும் இந்தப் பகுதியிலும் அடைய முடிந்தது.

உள்நாட்டு உற்பத்தியும் செலவழிப்பு வருமானமும்

 

1951 ஆம் ஆண்டு திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 129 மில்லியன் ஆர்எம்பி. அதாவது 12 கோடியே 90 லட்சம் ரூபாயாகும். (RMB – Renmibi சீன நாணயத்தின் பெயர். ஒரு ஆர்எம்பி இன்றைய தேதியில் 12.40 ரூபாய்க்கு சமம்). 2020 ஆம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 190 பில்லியன் RMB யை தாண்டியது. அதாவது 19,000 கோடியை தாண்டிச் சென்றது. 2018 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படுத்திய அதிநவீன மாற்றங்கள் மேலும் வளர்ச்சியை துரிதப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டு திபெத் மொத்த உள்நாட்டு உற்பத்தி 213.26 பில்லியன் RMB யை எட்டியது. இது 2012 இல் இருந்ததை விட 2.8 மடங்கு அதிகமாகும். மலைப் பிரதேசத்தில் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.6 சதவீதமாகும். இதன் பொருளாதார வளர்ச்சி விகிதம் சீனாவில் மிக உயர்ந்த ஒன்றாக இருந்தது மட்டுமல்ல பொதுவான ஒரு செழிப்பை திபெத்தில் உருவாக்கியது.

இந்த வளர்ச்சி மக்களின் நுகர்விலும் வெளிப்பட்டது. 2020 ஆம் ஆண்டு திபெத் பிரதந்தியத்தின் நுகர்வோர் பொருட்களின் சில்லறை விற்பனை 74.6 பில்லியன் RMB யை தாண்டியது. இது 1959 ஆம் ஆண்டு இருந்த நிலைமையை விட 2000 மடங்கு அதிகமாகும். மறுபுறத்தில் பொருளாதார கட்டமைப்பிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. 1994 முதல் 2000 வரை அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (எஸ் ஓ இ) 6,330 திட்டங்களை திபெத் பிராந்தியத்தில் நிறைவேற்றினார்கள். இந்தத் திட்டங்களின் மூலம் திபெத் 52.7 பில்லியன் RMB யை பெற்றது. இந்த பிராந்தியத்தில் திட்டங்களை அமுலாக்கி வெற்றி பெறச் செய்வதற்காக சுமார் 9,682 சிறந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள்.

திபெத் மக்களிடம் வருமானம் வேகமாக உயர்ந்தது. 2022 ஆம் ஆண்டு நகர்புறத்தில் வசிக்கக்கூடிய தனி நபர்களின் செலவழிப்பு வருமானம் 48,753 ஆயிரம் ஆரஎம்பியாக உயர்ந்தது. இது 2012 ஆம் ஆண்டில் 18,363 ஆயிரமாக இருந்தது. மறுபுறம் கிராமப்புறத்தில் வசித்தவர்களின் தனிநபர் செலவழிப்பு வருமானம் 2012 இல் 5,698 ஆயிரம் RMB இலிருந்து 2022 ஆம் ஆண்டு 18,209 ஆயிரம் RMB ஆக மூன்று மடங்கிற்கு மேலாக அதிகரித்தது. அதே நேரத்தில் கிராமப்புறத்திற்கும் நகர்ப்புறத்திற்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை குறைக்கக்கூடிய முயற்சியும் வெற்றி பெற்றது. கிராமப்புறம் நகர்ப்புறம் இடையிலான வருமான விகிதம் 2012 இல் 3.2 சதமாக இருந்தது.

இதுவே 2022 ஆம் ஆண்டு 2.67 சதவீதமாக இடைவெளி குறைந்தது. நகர்ப்புறம் கிராமப்புறம் இரண்டையும் இணைத்து ஒட்டுமொத்த குடியிருப்பாளர்களின் தனிநபர் செலவழிப்பு வருமானம் மதிப்பீடு செய்தால் 2012 இல் 8,568 ஆயிரம் RMB யிலிருந்து 2022 இல் 26,675 ஆயிரம் RMB யாக உயர்ந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நாட்டின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை திபெத் பிராந்தியம் ஏற்படுத்தி உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் திபெத்தின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2012 முதல் 2020 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தி 110% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஒரு பகுதியில் சந்தைகளின் விரிவாக்கம் வளர்ந்துள்ளது. மக்கள் கூடி வாங்குகின்ற சந்தைகள் ஒரு பக்கம் அதிகமாகி கொண்டுள்ளது. நுகர்வோர் சந்தை சில்லறை விற்பனை 2012 ஆம் ஆண்டு 31.84 பில்லியன் RMB யிலிருந்து 2022 ஆம் ஆண்டு 72.65 பில்லியனாக அதாவது 2.3 மடங்கு அதிகரித்து உள்ளது. உற்பத்தி செய்யக்கூடிய மையத்திற்கும் நுகர்வு மையங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுவாக இக்காலத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள். அதைவிட குறிப்பிட வேண்டிய முன்னேற்றம் சமநிலை அற்ற பிரதேசத்தில் அஞ்சல் சேவைகள் பல மடங்கு உயர்ந்துள்ளது அஞ்சல் சேவையின் நேரடி வருமானம் 744 மில்லியன் RMB யும் 2022 இல் கூரியர் வருமானம் 178.83 மில்லியன் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 19 பெரிய தேசிய மின் வணிக நிலையமும் எக்ஸ்பிரஸ் டெலிவரி வணிக அமைப்புகளும் உருவாகியுள்ளது.

மேலும் பொருட்களை சேமித்து வைப்பதற்காக 1,13,000 சதுர மீட்டர் குளிர்சாதன வசதிகள் கொண்ட கிடங்குகளை உருவாக்கி இருக்கிறார்கள். திபெத் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு சந்தை நிறுவனங்களின் எண்ணிக்கை 2012ல் 1,24,400 லிருந்து 2022 ஆம் ஆண்டு 4,37,600 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தின் கூடுதல் மதிப்பு 10 சதவீதத்தை விட அதிகமாக உயர்ந்துள்ளது. நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும், டவுன்ஷிப்களிலும் மின்வணிக சேவைகளை கிடைக்க செய்திருக்கிறார்கள். ஆன்லைன் சில்லறை விற்பனையும் 9.14 பில்லியன்களை 2022 ஆம் ஆண்டு தாண்டி இருக்கிறது. பொருள் உற்பத்தி சில நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததை உடைத்து அனைத்து மக்களின் வாய்ப்பாக மாற்றிவிட்டார்கள்.

தொழில்துறையும் அரசின் நிதிக்கொள்கையும்

 

தொழில்துறை கணிசமான அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது. உள்ளூர் பண்புடன் கூடிய நவீன தொழில் துறையும் கணிசமான அளவுக்கு நிறுவப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் தொழில் துறையின் கூடுதல் மதிப்பு 2.77 மடங்கு அதிகரித்து உள்ளது. தொழில்துறைகளின் சங்கிலிகள் நீண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பல தொழில்துறை நிறுவனங்கள் ஆண்டுக்கு 20 மில்லியனுக்கு அதிகமான RMB வருவாய் கொண்ட நிறுவனங்களாக உள்ளது.
உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 15 அதிகரித்துள்ளது. திபெத் பிராந்தியத்தில் அரசின் மூலதனத்தை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் விசேஷ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2022 ஆம் ஆண்டு திபெத் பிராந்தியத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மொத்த சொத்துக்கள் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது 14 .05 மடங்கு அதிகரித்து உள்ளது.

திபெத் பிராந்தியத்தில் விசேஷமான திட்டமிடல் மூலம் மத்திய அரசு நிதி மானியங்களை அதிகப்படுத்தி உள்ளது. நிலையான சொத்துக்களில் அரசு முதலீடு செய்து 2012-2022 ஆம் ஆண்டுக்கு இடையில் 3.33 அடங்கு அதிகரித்துள்ளது. நீண்டகால வளர்ச்சியுடன் தொடர்புடைய ஏராளமான பெரிய பொறியியல் திட்டங்கள் அமைக்கப்பட்டதன் விளைவாக மக்களின் வேலைவாய்ப்பு பெருகியது. வாழ்க்கை நிலையும் மிகப்பெரும் அளவுக்கு மேம்பட்டு உள்ளது. மொத்தமாக இக்காலத்தில் 465 பில்லியன் RMB க்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றால் அதன் சமூக தாக்கத்தை அறிந்து கொள்ள முடியும். அரசு முதலீடுகள் செய்யக்கூடிய இதே காலத்தில் தனியார் முதலீடுகளையும் திபெத் பிராந்தியத்தில் அதிகரித்து உள்ளார்கள். நிதி நிறுவன அமைப்புகளை உருவாக்கி மேம்படுத்தி வருவது, வங்கி, பத்திரங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், பல செயல்பாட்டு நிதி அமைப்புகள், என பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி உள்ளார்கள். பொருளாதார வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியும் மேம்படுத்துவதில் இந்த நிதியின் உதவியும், மானியமும் முக்கியமான பங்கு வகித்து உள்ளது.

உலகளாவிய வணிகத் தொடர்பு

 

தலாய்லாமா நாடு கடத்தப்பட்ட சில ஆயிரம் திபெத்தியர்களை பகடைக்காயாக வைத்து அமெரிக்க ஏகாதிபத்திய உதவியுடன் உலக நாடுகளில் தொடர்பு ஏற்படுத்தி திபெத் பிராந்தியத்தியத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார். ஆனால் சீன மக்கள் குடியரசு சீன கம்யூனிஸ்ட் கட்சியும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் மக்களின் மேம்பாட்டின் மூலம் சீனாவின் இதர பகுதிகளுடன், பல நாடுகளுடன் வலுவான உறவை இக்காலத்தில் ஏற்படுத்தி உள்ளது.

அண்டை மாநிலங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தக்கூடிய முறையில் செங்டு-சோங்கிங் பொருளாதார வட்டம், பெரிய ஷாங்க்ரி-லா பொருளாதார வட்டம், ஷான்சி-கான்சு-நிங்சியா-கிங்காய் பொருளாதார வட்டம் மற்றும் யாங்சே நதி பொருளாதார பெல்ட் உள்ளிட்ட பிராந்திய பொருளாதார வட்டங்களில் திபெத் பிராந்தியம் தன்னை தீவிரமாக ஒருங்கிணைத்துள்ளது. தெற்காசியாவில் பொருளாதார உறவுகளுக்கான ஒரு முக்கிய பகுதியாக திபெத் உருவாகி உள்ளது.

தெற்காசிய தரப்படுத்தல் (லாசா) ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. மாநில கவுன்சிலின் ஒப்புதலுடன் கைரோங் எல்லை தாண்டிய பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் அமைக்கப்பட்டது. திபெத் பிராந்தியத்தில் அதன் வர்த்தக பங்காளிகளாக அதாவது ஏற்றுமதி இறக்குமதி முறைகளில் 95 நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டில் திபெத் பிராந்தியத்தில் வெளிநாட்டு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 4.6 பில்லியன் RMB யாக உயர்ந்துள்ளது. இவை தவிர தெற்காசிய தரப்படுத்தல் (லாசா) ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது.
மாநில கவுன்சிலின் ஒப்புதலுடன் கைரோங் எல்லை தாண்டிய பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் அமைக்கப்பட்டது. திபெத் பிராந்தியத்தில் வளர்ச்சிக்கான மன்றம், ஜிசாங் சிந்தனைக் குழுவின் சர்வதேச கருத்தரங்கு, சீன ஜிசாங் சுற்றுலா மற்றும் கலாச்சார கண்காட்சி மற்றும் டிரான்ஸ்-இமயமலை சர்வதேச தீவிர சைக்கிள் ஓட்டுதல் பந்தயம் போன்ற நிகழ்வுகள் ஜிசாங்கிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையே பரிமாற்றங்கள், பரஸ்பர கற்றல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கியமான தளங்களாக மாறியுள்ளன.

 

திபெத் என்ற திபெத்தில் சீனாவின் இதர பகுதி மாநிலங்கள் மிகப்பெரும் உதவியை செய்து முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார்கள். இந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள் நிபுணர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தியது மட்டுமல்ல அவர்களை பத்துக்கு மேற்பட்ட குழுக்களாக பிரித்து களம் இறக்கினார்கள். 2016-2020 காலகட்டத்தில் 13 ஆவது ஐந்தாண்டு திட்டம் போடப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி திபெத்தில் சீனாவில் உள்ள 17 மாகாணங்கள் 1,260 திட்டங்களை உருவாக்கி நடத்தினார்கள். இந்த மாநிலங்களில் இருந்து முதலீடு செய்யப்பட்ட தொகை மட்டும் 20 பில்லியன் RMB ஆகும். 1951 ஆம் ஆண்டில் திபெத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 114 யுவானாக இருந்தது. 2023 ஆம் ஆண்டிற்கான திபெத் தன்னாட்சிப் பகுதிக்கான தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 75,237 ஆயிரம் சீன நாணயமாகும்.

காணாமல் போன கலப்பைகள்- கால் நடைப்பொருளாதாரமும்

 

திபெத்தில் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த கால் நடைகளையும் மேம்படுத்துவதில் சீனப் புரட்சிகர அரசு சிறப்பு கவனம் செலுத்தியது. விவசாயத்தை சமதளத்தில் எளிதாக கையாளலாம். நவீனங்களை பயன்படுத்த முடியும். மகசூலை மலை என குவிக்கலாம். ஆனால் ஒரு பீடபூமி பகுதியில் அவ்வளவு எளிதாக அது சாத்தியமில்லை. எனினும் மக்களின் உதவியோடு மகத்தான மாற்றங்களை திபெத் பிராந்தியத்தில் கண்டுள்ளது. 1974 ஆம் ஆண்டில் திபெத் பிராந்தியத்தின் வரலாற்றில் முதல் முறையாக தனது மாநிலத்துக்கு போதுமான தானியங்களை பயிரிட்டுக் கொண்டது என்றால் அது மிகையாகாது. 1975 ஆம் ஆண்டு 8% தானியத்தின் அறுவடைகள் அதிகமாகியது. 1958 ஆம் ஆண்டைவிட இது 2.7 மடங்கு அதிகமாகும். இதுவரை கலப்பை மட்டுமே திபெத்திய விவசாயிகள் கண்டிருந்தார்கள். தற்போது அது வரலாற்றுக் கருவியாக மாறிவிட்டது. டிராக்டர்களையும், கதிரடிக்கும் இயந்திரங்களையும் எல்லா இடங்களிலும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

திபெத் பிராந்தியத்தில் பல பத்தாண்டுகளாக ஹைலேண்ட் பார்லி மட்டுமே வளர்க்க முடியும். அதை நம்பி மட்டுமே அந்த விவசாயிகள் பணி செய்தார்கள். சீன மக்கள் குடியரசு பார்லியின் மகசூலை அதிகரித்தது உண்மைதான். ஆனால் புதிய ரகமான விவசாயத்தை கொண்டு வந்தது. குளிர்காலம் அதிகமாக இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் குளிர்கால கோதுமையை பயிரிட ஆரம்பித்தார்கள். இது பெரும் வெற்றியையும் மாற்றத்தையும் கொடுத்தது ஒரு சில இடங்களில் ஒரு ஹெக்டருக்கு 10.5 டன் குளிர்கால கோதுமை அறுவடை செய்யப்பட்டது என்றால் புதிய பயிரின் மகசூலை புரிந்து கொள்ள முடியும். பயிரிடப்படும் முக்கிய பயிர்களாக பார்லி, கோதுமை, பக்வீட், கம்பு, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், ராப்சீட்ஸ், பருத்தி மற்றும் வகைப்படுத்தப்பட்ட பழங்கள் காய்கறிகள் இருந்தன.

திபெத்தில் நிலங்கள் மக்களுக்கு சொந்தமாக இருப்பதும் அதில் உழைப்பின் பயனை அடைய முடியும் என்ற சூழ்நிலை சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிக் கொடுத்தது. எனவே திபெத் பிராந்தியத்தில் மக்கள் இயற்கையின் தயவில் வாழ்ந்த காலம் மலை ஏறி மறைந்து போனது. உயர்தர உயர்நில பார்லி சாகுபடி, சமையல் எண்ணெய் உற்பத்தி, மாசு இல்லாத காய்கறி பயிரிடுவது, தரப்படுத்தப்பட்ட பால் தயாரிப்பது, போன்றவற்றில் நவீன முறைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

காட்டு எருது மற்றும் திபெத்திய செம்மறி ஆடுகளை வளர்ப்பதன் மூலமாகவும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ற விவசாயத்தையும் செய்து வந்தார்கள். இந்த முறை விவசாயத்திற்கு உதவி செய்வதற்காக ஏராளமான தொழில்துறை தளங்கள் கட்டப்பட்டு இந்த விவசாய முறைகளுக்கு உதவினார்கள். இதன் விளைவாக 2015 ஆம் ஆண்டில் தானிய மகசூல் ஒரு மில்லியன் டன்களுக்கு மேல் அறுவடை செய்யப்பட்டது. உயர்தர உயர்நில பார்லியின் மகசூல் 7,95,000 டன்களை தாண்டியது. விவசாயத் துறையில் என்ன முடியுமோ அந்த அளவுக்கு சாதனையை நோக்கி திபெத் பிராந்தியத்தியம் முன்னேறிக்கொண்டு இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்பு நடவடிகையாக விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் நிலச் சான்றிதழ் வழங்கி சாதனை படைத்தனர்.

மேலும் நில ஒப்பந்தங்களின் மேலாண்மை அமைப்புகள், கிராமப்புற நிலப் பயன்பாட்டு உரிமைகளை மாற்றுவதும், உரிமைப் பதிவு செய்வதும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியது. இவை தவிர கிராமப்புற சீர்திருத்தத்தில் குடும்ப பண்ணைகள், தொழில் முறை கூட்டுறவுகளின் செயல்பாடுகள் முன்னணி பங்கு வைக்கிறது.

விவசாயத்திற்கு அடிப்படை தேவையாக இருக்கிற நீர்வள மேம்பாட்டில் நிலையான முயற்சிகளை மேற்கொண்டார்கள். 13 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அதாவது 2016-2020 இல் நீர்வள பாதுகாப்பிற்கான முதலீட்டில் 52% அதிகப்படுத்தி உள்ளார்கள். பல முக்கிய நீர் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சீனாவில் முதல் 10 நீர் பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக லால் ஹோ திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. திபெத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சாரத்தை பயன்படுத்துவதற்கும் மறுபுறத்தில் நீர்ப்பாசனத்திற்கு விரிவான முறையில் விநியோகிப்பதற்குமான இன்னும் இதுபோன்ற சில திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இவை தவிர மேலும் பல கட்டுமான திட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. நீர் பாதுகாப்பால் அதிகமான உள்ளூர் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வெள்ள கட்டுப்பாடு, பேரிடர் இழப்புகளும் மிகப்பெரிய அளவிற்கு தடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளின் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. விவசாயம் மற்றும் நீர் பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள் இவற்றை உயர்த்தி உள்ளது.

திபெத் வரலாற்றிலும் வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத அங்கமாக மேய்ச்சல் நிலங்களும் கால்நடைகளும் இருக்கின்றன. கால் நடைவளர்ப்பு முக்கியமாக திபெத்திய பீடபூமியில் முதன்மையான தொழிலாகும். அவற்றில் செம்மறி ஆடுகள், கால்நடைகள், ஆடுகள், ஒட்டகங்கள், யாக்ஸ், கழுதைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை அடங்கும். தலாய்லாமா ஆட்சி காலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையும் மக்கள் தொகை எண்ணிக்கையும் குறைந்து வந்திருந்தது.

 

1958 ஆம் ஆண்டை விட 1975 ஆம் ஆண்டில் கால்நடைகளின் எண்ணிக்கை அதாவது வளர்ச்சி 2.3 மடங்காக உயர்ந்துள்ளது. 1965 ஆம் ஆண்டில் திபெத்தில் விவசாயம், வனவியல், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் ஆகியவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பு 264 மில்லியன் RMB-யாக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் இது 23.4 பில்லியன் RMB-யாக உயர்ந்தது.

திபெத் 1959 ஆம் ஆண்டு வரை மிகவும் பின்தங்கிய ஒரு பிராந்தியமாக இருந்தது. உற்பத்தி சக்திகளை நிலப்பிரபுக்களும் மதத்துறவிகளும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். தங்களின் சுரண்டலுக்கு மட்டுமே அதனை பயன்படுத்தினார்கள். சீன மக்கள் குடியரசு அமைந்த உடன் உற்பத்தி சக்திகளை கட்டுடைத்தது. ஒட்டுமொத்த மக்களையும் சீன சோசலிசத்தின் பயனை அடையக்கூடிய முறையில் வளர்ச்சியில் ஈடுபடுத்தினார்கள். இதன் விளைவாக பொருளாதாரம் உயர்ந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் மிகப்பெரும் மாற்றங்களை கண்டு முன்னேறியது..

அ.பாக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

44 திபெத்:உழவும் தொழிலும் உயர்ந்த விதம்

  அ.பாக்கியம் உலகின் கூரை என்று அழைக்கப்பட்ட திபெத்தில் மக்களை அடிமை நுகத்தடியில் அழுத்தி வைத்திருந்தார்கள். இன்றோ திபெத் மக்களை சீன கம்யூ...