அ .பாக்கியம்
(தமிழகத்தில் வாலிபர் சங்கம் வேர் வைக்க நீர் வார்த்த ஏராளமான தோழர்களைப் பற்றி… வாலிபர் சங்கத்தின் ஸ்தல, அரசியல் போராட்டங்களைப் பற்றி… ரத்த தான முகாம், விளையாட்டுக் கழகம் நடத்தியதைப் பற்றி வாலிபர் சங்கத்தின் பன்முக கலாச்சார நடவடிக்கைகளைப் பற்றி ‘‘ஞாபகங்கள் தீ மூட்டும்’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருந்தேன். 2022ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வாலிபர் சங்கத்தின் 17வது மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டு அக்டோபர் 12,13,14 தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட்டத் ஓசூரில் நடைபெறும் வாலிபர் சங்கத்தின் 12வது மாநாட்டையொட்டி இந்த பதிவு. ஞாபகங்களும் தீ மூட்டும் இரண்டாம்பதிப்பிற்காக எழுதப்பட்டது)
டிசம்பர்
15 1987. சென்னை திரிசூலம் மலையின் எதிரே இருக்கும் பழைய மீனம்பாக்கம் சர்வதேச
விமான நிலையத்தில் ஒரு விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் ஒரு இளைஞர் வந்திறங்கினார். சென்னை
வடபழநியில் உள்ள விஜய சேஷ மஹாலில் (குர்ணாம் சிங் உப்பல் நினைவரங்கம்) நடைபெற்ற
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) 3வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று
வாழ்த்துரை வழங்குவதற்காக அந்த இளைஞர் வந்திருந்தார். உலக இளைஞர் ஜனநாயக அமைப்பின்
பொதுச்செயலாளரான அவர் அவர் அன்றைய செக்கோஸ்லோவேகியா நாட்டின் பிராக் நகரில்
இருந்து வந்திருந்தார். இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கம் உலக ஜனநாயக இளைஞர் அமைப்பின் உறுப்பினராகும். மாநாட்டு அரங்கில் வாழ்த்துரை வழங்கிய அவர், ‘‘நான் விமானத்தில் பறக்கிற
பொழுதே டி ஒய் எஃப் ஐ என்ற நான்கு எழுத்து விளம்பரத்தை பார்த்து விட்டேன்.
திரிசூலம் மலையில் DYFI என்ற நான்கு எழுத்தை வானத்தில் இருந்தே தரிசித்தேன்’’
என்றார். கர ஒலிகளாலும், குரல் ஒலிகளாலும்
மாநாட்டு அரங்கம் சில நிமிடங்கள் அதிர்ந்தது.
டிஒய்எப்ஐ
அகில இந்திய மாநாடு நடந்த சில மாதங்களுக்குப் பிறகு அதாவது1988ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் இருந்து ஒரு விமானம் மீனம்பாக்கம்
உள்நாட்டு முனையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த ஒரு காங்கிரஸ்
பிரமுகரின் கண்ணிலும் திரிசூலம் மலையில் இருந்த DYFI என்ற 4 எழுத்து கண்ணில்
பளிச்செனப்பட்டது. அவருடன் பயணித்த மற்ற விமானப் பயணிகளும் அந்த நான்கு எழுத்தை
பார்த்தனர்; மலை உச்சியில் இவ்வாறு எழுதியிருக்கிறார்களே என்று வியந்தனர்; ரசித்தனர்.
ஆனால், அந்த காங்கிரஸ் பிரமுகரின் கண்களுக்கு மட்டும் அந்த DYFI என்ற 4 எழுத்து
உறுத்தலாக இருந்தது. உச்சகட்ட எரிச்சல் அடைந்தார். அந்த பிரமுகர் வேறு யாருமில்லை.
ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தான் அவர்.
1988 ஆம்
ஆண்டு மே 15ஆம் தேதி சென்னைக்கு அருகில் காங்கிரஸ் மகாசபை
கூட்டம் நடந்தது. இந்தக் கூட்ட ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ப.சிதம்பரம் டெல்லியில்
இருந்து வந்த போதுதான், திரிசூலம் மலையில் எழுதப்பட்டிருந்த DYFI என்ற நான்கு
எழுத்து கண்ணில் பட்டுள்ளது. அதனால் மிகுந்த எரிச்சலடைந்தார். காரணம் DYFI என்ற
அந்த நான்கு எழுத்து இந்தியா முழுவதும் அறிமுகமாகி இருந்தது. மக்கள் விரோத செயலில்
ஈடுபடும் மத்திய, மாநில அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. அன்றைய ஆட்சியாளர் களை
அச்சப்பட வைத்த போராட்ட களத்தின் பொன் எழுத்துக்களாக DYFI என்ற நான்கெழுத்து
இருந்தது. ராஜீவே ராஜினாமா செய் என்ற கோஷம் மாநாட்டு பேரணிகளில் எதிரொலித்தது.
இந்திய
ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) 3வது அகில இந்திய மாநாடு முடிந்தவுடன் அதன் முக்கிய
தீர்மானங்களில் ஒன்றான 18 வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் இயக்கங்களை நடத்தியது. காஷ்மீர் முதல்
கன்னியாகுமரி வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இந்தப் போராட்ட அலை வீசியது. 18
வயதானோருக்கு வாக்குரிமை என்ற கோரிக்கையை வைத்தபோது, அன்று தமிழகத்தில் இருந்த
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 18 வயது
இளைஞனுக்கு என்ன பக்குவம் இருக்கும் என்று கேள்வி எழுப்பினர்; கேலி பேசினர்;
கிண்டல் செய்தனர். இது வயதால் முதிர்ச்சி அடைந்து, அறிவால்
முதிர்ச்சியடையாதவர்களின் அலப்பறையாகும். ஆனால், வாலிபர் சங்கத்தின் போராட்ட அலை
கேலி பேசியவர்களின் வாயை அடைத்தது; கோரிக்கை வென்றெடுக்கப்பட்டது.
இது
நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து
சென்னக்கு வரும் போது, திரிசூலம் மலையில் இருந்து DYFI என்ற நான்கு எழுத்தைப்
பார்த்து எரிச்சல்பட்டார். காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி உள்பட டெல்லிவாலாக்கள்
விமானத்தில் சென்னைக்கு வருகிற பொழுது அவர்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலொழிய
DYFI என்ற இந்த நான்கு எழுத்துக்களை தரிசிக்காமல் இருக்கமுடியாது என்பதை சிதம்பரம்
அறிந்து கொண்டார். விமானத்தில் இருந்து பார்த்தால் தெரியும் அளவிற்கு DYFI
விளம்பரமா? என்று கடுப்பானார். எனவே அந்த
எழுத்துக்களை அழிப்பதற்கு சிதம்பரம் உத்தரவிட்டார். வாலிபர் சங்கத் தோழர்களின்
விலை மதிப்பில்லாத உழைப்பால், சுமார் ரூ.2000 செலவு செய்து எழுதிய DYFIயின் இரண்டு விளம்பரங்களில் ஒன்றை அழிப்பதற்கு
மட்டும் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு
செய்திருக்கிறார்கள். சிதம்பரம் அந்த
எழுத்துக்களை அழித்தது மட்டுமல்ல... திரிசூலம் மலையை சுற்றி ராணுவ பாதுகாப்புக்கு
உட்பட்ட பகுதி என்று வேலியை அமைக்க உத்தரவு பெற்று வேலியும் போடப்பட்டது.
திரிசூலம்
மலையின் மேலே இருந்த ஒரு விளம்பரத்தை - DYFI என்ற எழுத்துக்களை அவர்களால் அழிக்க முடிந்ததே தவிர பக்கவாட்டில் எழுதிய
பிரம்மாண்டமான DYFI மாநாடு என்று எழுதப்பட்டிருந்த விளம்பரத்தை அவர்களால் அழிக்க முடியவில்லை.
அது விமானத்தில் பறப்பவர்களின் கண்களில் படாது என்பதால் விட்டுவிட்டார்கள் போலும்.
ஆனால், அதுதான் மிக முக்கியமான
விளம்பரமாகும். ரயிலிலும் சாலைகளிலும் போவோர் வருவோர் கண்களில் எல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்த பிரம்மாண்டமான விளம்பரம் கண்ணில் பட்டுக்கொண்டே தான் இருந்தது. திரிசூலம் மலையின் பக்கவாட்டில்
செதுக்கப்பட்டிருந்த மிக உயரமான இடத்தில் இந்த எழுத்துக்கள் அமைந்து இருந்தது.
DYFI மூன்றாவது அகில இந்திய
மாநாட்டின் வீச்சு சென்னையிலும், தமிழகத்திலும், நாடு முழுவதும் பரவலாக இருந்தது.
ஒன்றிய காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்ட அறைகூவல் நாடு முழுவதும் எதிரொலித்தது.
இதையொட்டி ராஜீவ் காந்தி சென்னைக்கு வருகிற பொழுது வாலிபர் சங்கத்தின் சார்பில்
போராட்டங்கள் நடைபெறலாம் என்று ஊகம் செய்து வாலிபர் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள்
பலர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அத்துடன், மயிலாப்பூரில் இருந்த வாலிபர் சங்க
மாவட்ட நிர்வாகியான தோழர் மாதவ் மத்திய ரிசர்வ் போலீசால் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பெரிய
மேட்டில் மறைந்த வாலிபர் சங்கத் தோழர் ராமமூர்த்தியை கைது செய்ய போலீஸ் கும்பலாக வந்த
பொழுது , அங்கு கூடிய மக்கள் கூட்டம், போலீசாரை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தினர்.
இதனால் தோழர் ராமமூர்த்தியை கைது செய்ய முடியாமல் போலீசார் வெறும் விலங்குடன்
சென்றனர்.
சென்னை
வியாசர்பாடி சாஸ்திரி நகரில் என் வீடு இருக்கும் பகுதியில் இரண்டு தெருக்கைளயும்
போலீசார் முற்றுகையிட்டனர். என் குடிசைவீட்டுக்குள்ளும் நுழைந்து வலைவீசி தேடினர். வீட்டில் இரவு கட்டியிருந்த கொசுவலைகளை
அறுத்துப்போட்டனர். அப்போது மதுரை கம்பத்தில் நடைபெற்ற
மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஒருநாள் காலதாமதமாக சென்னைக்கு வந்தேன். அதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினேன். ஜனநாயக ரீதியாக போராடக்கூடிய ஒரு
இயக்கத்தை ஒடுக்குவது என்பது அன்றைய கால
கட்டங்களில் இருந்து இன்றைய கால கட்டத்திலும் ஒடுக்குவது என்பது ஒன்றிய, மாநில அரசு இயந்திரங்களுக்கு புதிதல்ல. அதை தொடர்ந்து சந்தித்து
வரும் வாலிபர் சங்கத்திற்கும் இந்த அடக்குமுறை புதிது அல்ல.
ராஜீவ்
காந்தி சென்னைக்கு வந்தார்; மாநாட்டில் பங்கேற்றார். அவரும் திரிசூல மலையை
கடந்துதான் வந்திருக்க வேண்டும். மீண்டும்
டெல்லிக்குச் சென்றார். ஆனால், வாலிபர் சங்கத்தின் 18 வயது வந்தோருக்கு வாக்குரிமை
கோரிக்கை அவரை ஏதோ ஒரு வகையில் பாதித்து இருந்தது. காரணம், DYFI 3வது அகில இந்திய
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அந்த கோரிக்கை
முழக்கம், வாலிபர் சங்கத்தின் குரலாக மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின்
குரலாக இருந்தது. எனவே அவரால் அந்த கோரிக்கையை புறந்தள்ள முடியவில்லை. எனவே, 18 வயது வந்தோருக்கு வாக்குரிமை என்பதற்கான 61வது அரசியல் சட்ட திருத்த
மசோதாவை டிசம்பர் 13, 1988 ஆம்
ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். டிசம்பர் 15ஆம் தேதி இந்த மசோதா
மக்களவையிலும், டிசம்பர் 20ஆம் தேதி ராஜ்ய சபாவிலும்
நிறைவேற்றப்பட்டு 1989 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை கொண்டு வந்தது என்னவோ
ராஜீவ்காந்தியாக இருக்கலாம். 18 வயதானோருக்கு வாக்குரிமை என்பதை இந்திய
இளைஞர்களின் கோரிக்கையாக மாற்றி அதை வெற்றி பெறச் செய்தது இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கம் (DYFI) என்பதை யாரும் மறுக்க முடியாது.
DYFI சிகரம் தொட்டது எப்படி
அரசியல்
ஆர்வமும், மாற்றங்களை நோக்கிப் பயணமும், எத்தகைய கடின வேலைகளையும் செய்து முடிக்க
முடியும் என்ற நிலையிலிருந்து இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். 1987 டிசம்பர் 15 முதல் 19 வரை
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மூன்றாவது அகில இந்திய மாநாடு சென்னையில்
நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மிகப் பெரும் அளவு பிரதிநிதிகள் மாநாடும்,
பேரணியும் நடத்துவதற்கான திட்டமிடலில் முதல் வேலையாக மண்டபத்தை நிச்சயிக்கக்கூடிய
பணி முடிந்தது. வடபழனியில் உள்ள விஜய சேஷ மகால், அதனுடன் இணைந்த ராணி மகால் இரண்டு
மண்டபங்களும் மாநாடு நடத்துவதற்காக நிச்சயிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட்
கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி, தோழர்கள் மீனாட்சி சுந்தரம்,
சு.பொ.அகத்தியலிங்கம், பா.கருணாநிதி மற்றும் நான் (பாக்கியம்) ஆகிய நால்வரும் விஜய
சேஷ மகாலை மாநாடு நடத்த புக்கிங் செய்வதற்காக சென்றோம். துவக்கமே உணர்ச்சிப்
பெருக்காக தான் இருந்தது. தோழர் பி. ஆரைப் பார்த்த மண்டபத்தின் உரிமையாளர் நாகி
ரெட்டி கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இளமைக் கால ஒன்றிணைந்த
போராட்டங்களை இருவரும் நினைவு கூர்ந்து கொண்டார்கள். அதன் பிறகு பி.ஆர். காசோலை மூலமாக மாநாடு நடத்துவதற்காக மண்டபத்தை
நிச்சயித்தார். பி.ஆர். மற்றும் நாகி
ரெட்டி ஆகியோரின் தழுவலில் இருந்த முந்தைய வரலாறுகளை பின்னர் நான் அறிந்து கொண்டேன்.
அதன்
பிறகு மாநாட்டுக்கான வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழு தலைவராக மார்க்சிஸ்ட்
கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி. ஆர்.,
பொதுச் செயலாளராக தோழர் சு.பொ.அகத்தியலிங்கம், பொருளாளராக தோழர் நம்பிராஜன்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடன் வாலிபர் சங்க மாநில நிர்வாகிகள், சென்னை
மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய
பிரமுகர்கள் பலரும் வரவேற்பு குழுவில் இடம் பெற்றனர். அத்துடன் மாநாட்டுப்
பணிகளுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.
DYFI சென்னை
மாவட்ட நிர்வாகிகளாக இருந்த பா. கருணாநிதி, நான் (பாக்கியம்), க.மாதவ், ராமச்சந்திரன், வீர அருண், புஷ்பராஜ், ராமையன், , பொன்னுச்சாமி, ராயபுரம் முத்து, சிவக்குமார், தேவபிரகாஷ் இவர்களுடன் DYFI மாநில பொருளாளர் மறைந்த தோழர் சின்னையா, மறைந்த அம்பத்தூர் வேலாயுதம், பாலச்சந்தர் உட்பட
இன்னும் பலருக்கு (பெயர் குறிப்பிடாதவர்கள் மன்னிக்கவும்) மாநாட்டு பணி
குழுக்களுக்கான பொறுப்பு கொடுக்கப்பட்டது.
எனக்கு
விளம்பரக் குழு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அன்று
நமக்கு குறைவான செலவில் விளம்பரப் படுத்தக்கூடிய இரண்டு வகைப் பிரசாரங்கள் மட்டுமே
இருந்தன. ஒன்று சுவரெழுத்து. இன்னொன்று ‘டயர்’ தட்டிகள் வைப்பது. (டயர் தட்டிகள்
மூலம் செய்யும் விளம்பரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நாம்தான் என்றே கூறலாம்.)
மாநாடு நெருக்கத்தில் டயர் தட்டிகள் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டு
முதலில் சுவரெழுத்து எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஓவியர்களுக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆங்காங்கே சுவர் எழுத்துக்கள் எழுதப்பட்டாலும்,
இதை பிரம்மாண்டமாக மாற்றுவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டது. சுவர் எழுத்துக்களில் ஓவியர் திருவொற்றியூர்
சோலையின் பங்கு மிக மிக முக்கியமானது. அவர்தான், DYFI என்று எங்கெல்லாம் பெரிய
அளவில் எழுதலாம் என்று முதலில் சுற்றிப் பார்ப்போம் என்று ஆலோசனை கூறினார்.
அதன்படியே அவரும், நானும் எங்கெங்கெல்லாம் பெரும் எழுத்துக்களை எழுதலாம் என்று பல
இடங்களை சுற்றிப் பார்த்தோம். அவற்றில் ஒன்றுதான் சென்னை மின்சார ரயில் போக்குவரத்தின்
பாதைகளின் இரு பக்கமும் எழுதலாம் என்று முடிவு செய்தாம்.
சென்னை
கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை வாசற்படியில் நின்று கொண்டே பக்கவாட்டு
சுவர்களை பார்த்துக் கொண்டு பயணித்தோம். திரிசூலம் மலையை கடக்கிற பொழுது
பக்கவாட்டில் இருக்கக்கூடிய மலை, குவாரிக்காக உடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் உயரமான பகுதியில் எழுதலாம் என்று
ஆலோசனை சொன்னார். நான் இது சாத்தியமா என்று கேட்ட பொழுது சாத்தியம்தான் என்றார். ‘‘அதிக
செலவாகுமா’’ என்று நான் கேட்டபோது, அவரோ, ‘‘இல்லை குறைந்த செலவில் முடிப்போம்.
சுண்ணாம்பில் மிக நேர்த்தியான பசையை கலந்து அதன் மூலம் எழுதலாம்’’ என்றார். அவர்
கூறியபடியே அந்த மாபெரும் ‘மலை’ எழுத்துப்பணி சாத்தியமானது. அவர் உள்ளிட்ட
தோழர்களின் மகத்தான உழைப்பால் அது சாத்தியமானது.
சென்னை முழுவதும் நடந்து கொண்டிருந்த சுவரெழுத்து பணியின் ஒரு பகுதியாக
திரிசூலத்தில் ‘மலைஎழுத்து’பணி துவக்கப்பட்டது.
அந்த மலை
அடியில் உள்ளடங்கியும் மேலே வர வர வெளித்தள்ளியும் இருந்தது. அதில் சாரம் கட்டுவதே
மிகப்பெரிய சவாலான விஷயமாக மாறியது. ஆனாலும், 70 அடி
உயரத்திற்கு சாரம் கட்டப்பட்டது. இந்தப் பணிகளில் கிண்டி-தாம்பரம்
பகுதியில இருந்த தோழர்கள், பகுதி நிர்வாகிகளாக இருந்தவர்கள் என 75 பேர் ஈடுபட்டார்கள். 70 அடி சாரத்தை கட்டுகிற பொழுது மலையில் இருந்த விஷப் பூச்சிகளால் கடிக்கப்பட்டு
பலரும் பாதிக்கப்பட்டனர். சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தொழில்
முறையில் சாரம் கட்டக் கூடியவர்கள் அல்லர். சாதித்துக் காட்ட வேண்டும் என்பதற்கான
சாரம் கட்டியவர்கள்; சாதித்தும் காட்டியவர்கள். 70 அடி சாரம்
கட்டிய பிறகு 35 அடிக்கு மேலே 40 அடி
உயரத்திற்கு 40 அடி அகலத்திற்கு ஒரு எழுத்து என்ற முறையில்
பிரம்மாண்டமான DYFI என்ற எழுத்துக்களும் அதன் கீழே மாநாடு என்ற வார்த்தையும்
அமைக்கப்பட்டது. சாரம் கட்டுவதில் துவங்கி ஒரு எழுத்து உருவாக சில நாட்கள் ஆகும்.
தினசரி, மின்சார ரயிலில் செல்லக்கூடியவர்கள், இதை வியப்பாகவும், வேடிக்கையாகவும்
பார்த்து சென்றனர். இது என்ன என்று கேள்வி
அவர்களின் மனதில் தொக்கி நிற்கும். DYFI மாநாட்டு விளம்பரம் எழுதி முடித்த
பிறகுதான் ரயிலில் பயணித்தவர்களுக்கு முழுமையான அர்த்தம் புரிந்தது. ஆனால்,
என்னதான் எழுதுகிறார்கள் என்று பார்க்கும் ஆர்வம் ஒவ்வொரு நாளும், அவர்கள் மனதில்
இருந்தது. பின்னாட்களில் வணிக உலகில் சஸ்பென்ஸ் வைத்து விளம்பரம் வெளியிடும்
உத்திக்கு டிஒய்எப்ஐ மலை விளம்பரமே முன்னோடியாக இருந்தது என்று கூறலாம்.
இந்தப்
பணி நடந்து கொண்டிருக்கும்போதே தோழர் சோலை இன்னொரு கருத்தையும் முன் வைத்தார்.
திரிசூலம் மலையின் மேல் பகுதி மிகவும் பசுமையாக உள்ளடங்கி இருக்கிறது. அங்கு DYFI
என்று எழுதினால், பரங்கிமலையை தாண்டியவுடன் ரயிலில் வரும் அனைவருக்கும் அது
தெரியும் என்று கூறினார். அதற்கான எளிய வழி முறையையும் அவர் கண்டுபிடித்தார். அங்கிருந்த பெரிய பாறைகளையும்
சிறிய கற்களையும் இணைத்து DYFI என்ற
முறையில் அடுக்கினார்கள். அவ்வாறு அடுக்கிய பிறகு சுண்ணாம்பு, பசை இரண்டையும்
கலந்து கரைத்து பக்கெட், பக்கெட்டாக ஆக ஊற்றி விட்டார்கள். அப்போது பெரிய அளவிலான
கட்டிடங்கள் இல்லாத காலம் என்பதால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதாவது
பரங்கிமலை ரயில் நிலையத்தை தாண்டியவுடன், டிஒய்எப்ஐ மாநாடு என்று திரிசூலம்
மலையில் எழுதி இருப்பது தெரியும். பக்கவாட்டிலும் பளிச்சென்று தெரிவதற்கு அலுமினிய
பெயின்டை வாங்கி பயன்படுத்தி இருந்தனர். அதனால் ‘‘டிஒய்எப்ஐ மாநாடு’’ விளம்பரம்,
சுதை சிற்பமாகவும், புடைப்பு சிற்பமாகவும் அவரவர் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது.
தோழர் சோலை என்கிற மகத்தான கலைஞன் மற்ற தோழர்களுடன் இணைந்து படைத்த பிரம்மாண்டமான,
இதுவரை யாரும் செய்யாத, செய்ய முடியாத விளம்பரம் அது.
சென்னையில்
நடைபெற்ற DYFI 3வது அகில இந்திய மாநாட்டின்
சுவரெழுத்து பிரச்சாரத்தின்
துவக்கமே மிகப் பிரம்மாண்டமாக அமைந்தது. அனுமன்
‘வால்’ போல் நீண்ட சுவர்களில் நீண்ட அளவில் சுவரெழுத்தை எழுதி அறிமுகப்படுத்தியது
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும். அது மட்டுமல்ல... சென்னையில் இருக்கக்கூடிய
முக்கிய பாலங்கள் உட்பட எங்கெல்லாம் நான்கு அங்குலத்துக்கு மேல் சுவர் கிடைத்ததோ
அங்கெல்லாம் டி ஒய் எப் ஐ மாநாடு என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான தோழர்கள் கையில் ஒரு பெயின்ட் டப்பாவுடனும் ஒரு தூரிகையுடனும்
கிடைத்த இடத்தில் எல்லாம் மாநாட்டை விளம்பரப்படுத்தினார்கள். சென்னையின் இண்டு,
இடுக்குகளில், சந்து, பொந்துகளில் எல்லாம் வாலிபர் சங்கத்தை
அறிமுகப்படுத்தினார்கள். இந்த மாநாடுதான்
நூற்றுக்கணக்கான ஓவியர்களை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது.
வாலிபர்
சங்க அகில இந்திய மாநாட்டையொட்டி இன்னும் பல விளம்பர உத்திகள் கடைபிடிக்கப்பட்டன.
மின்சார ரயிலுக்குள் போஸ்டர்கள் ஒட்டுவது கடினமான விஷயமாக இருந்தது. காவல்துறை
அவ்வப்போது கெடுபிடி செய்தது. எனவே மாவட்ட நிர்வாகி (ராமச்சந்திரன்) ஒருவரின்
ஆலோசனையின் படி பயணிகளின் இருக்கையின் வெளிப்புற ஓரத்தில் ஆறு அங்குலம் அளவிற்கு இடம் இருந்தது. அந்த
இடத்தில் டிஒய்எப்ஐ மாநாடு என்று பெரிய அளவில் ரப்பர் ஸ்டாம்ப் செய்யப்பட்டு
வெள்ளை மையினால் ரயில் இருக்கைகளில் அச்சிடப்பட்டு பரபரப்பாக்கப்பட்டது.
சென்னையில்
முதல்முறையாக ஒரு இயக்கத்தின் மாநாட்டு விளம்பரம் திரையரங்குகளில் ஸ்லைட் ஷோவாக
காட்டப்பட்டது. வாலிபர் சங்க மாநாடு விளம்பரம் போடுவதா என்று திரையரங்க
உரிமையாளர்கள் தயங்கிய காலகட்டம் அது. இந்த சூழ்நிலையில், சென்னை சூளையில் இருந்த
தோழர் ‘ஹால்டா’ குமார் என்பவர் மூலமாக திரு.கிரி என்பவர் அறிமுகமானார். அன்று அவர்
பிரபலமான சில திரைக்கலைஞர்களுக்கு மேலாளராக இருந்தார். அவரின் உதவியால்
மிகக்குறைந்த கட்டணத்தில் திரையரங்குகளில் சினிமா இடைவேளையின் போது டிஒய்எப்ஐ அகில
இந்திய மாநாட்டு விளம்பர ஸ்லைட் ஷோ காட்டப்பட்டது.
சென்னையில்
மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான மிகப்பெரும் சுவர் எழுத்துக்களும், 10,000க்கும் அதிகமான சுவரொட்டிகளும், தெருவெல்லாம் டயர் தட்டிகளும், 100க்கும்
அதிகமான இடங்களில் பெரிய தட்டிகளும் வைக்கப்பட்டன. 150 தெருமுனை கூட்டங்களும் 108 பொதுக்கூட்டங்களும்
நடத்தப்பட்டன.
மாநாட்டை
விளம்பரப்படுத்த கலை குழுக்களின் பிரசாரங்கள், வீதி நாடகங்கள், இசைக்குழுக்களின்
மாலை நேர நிகழ்வுகள் என்று நூற்றுக்கணக்கில் நடைபெற்றது. சென்னையில் கட்சித்
தோழர்களிடம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்த சென்னை கலைக்குழு தவிர ஒவ்வொரு பகுதியிலும்
கலைக்குழுவும், இசைக்குழுக்களும் உருவானது. விபிசி கலைக்குழு, புதுயுக கலைக்குழு, என பத்துக்கும் மேற்பட்ட கலை குழுக்கள் உருவாகின. இவை தவிர
இசைக்குழுக்களும் உருவாயின. இவை தவிர, பல மாவட்டங்களில் இருந்த கலை குழுக்களும்,
ஆந்திராவின் பிரஜா நாட்டிய மண்டலி கலைக்குழுவும் மாநாடு
விளம்பர பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
மாநாட்டின்
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் நிதி வசூல் பிரச்சாரம் ஆகும். ஆயிரம்தான்
இருந்தாலும் நிதி இல்லையென்றால் எதற்குமே கதி இல்லை, இல்லையா? நிதி வசூலிலும்
நூற்றுக்கணக்கான தோழர்கள் ஈடுபட்டு மாபெரும் சாதனை புரிந்தார்கள். சுவர்
எழுத்துக்கள் ஓவியர்களை உருவாக்கியது; கலை குழுக்கள் நூற்றுக்கணக்கான இளைஞர்களை
கலைஞர்களாக மாற்றியது; அதேபோன்று நிதி வசூல், ஊழியர்களையும் தலைவர்களையும்
உருவாக்கியது.
சென்னையில்
அப்பொழுது 10,094 உறுப்பினர்களும், 140 கிளைகளும், ஏழு இடைக்கமிட்டிகளும் இருந்தன. திருவொற்றியூர் – மணலி, ஆவடி –
அம்பத்தூர், கிண்டி – தாம்பரம், வடசென்னை,
மத்திய சென்னை, மேற்கு சென்னை, தென் சென்னை என்ற ஏழு பகுதி குழுக்கள் செயல்பட்டன.
மாநாட்டிற்காக வீடு வீடாக வசூல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு சென்னையில் 100
வசூல் குழுக்கள் பல்வேறு தலைவர்களின் பெயரில் உருவாக்கப்பட்டது.
வாலிபர் சங்கத்தில் சேர்ந்த பல இளைஞர்கள், முதல் முறையாக மக்களை சந்திக்க
செல்கிறார்கள் என்பதால், மக்களிடம் செல்வது தொடர்பாக, வீடுகளில் இருக்கக்கூடிய
பெரியவர்கள், பெண்களிடம் அணுகுவது தொடர்பாக, என்ன பேச வேண்டும் என்பதற்கான
கூட்டங்கள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. வணக்கம் சொல்வதில் ஆரம்பித்து, நன்கொடை
கொடுக்கவில்லை என்றாலும் கூட மாநாட்டிற்கு அவர்களை இன்முகத்தோடு அழைக்க வேண்டும்
என்ற அணுகுமுறை வரை சொல்லித் தரப்பட்டது.
தோழர்களும்
தீவிர வசூலில் இறங்கினார்கள். 78 நாட்கள் வசூல்
நடைபெற்றது. மூன்று நாட்கள் முழு நாள் வசூல்; ஐந்து நாட்கள் அரைநாள் வசூல் என்று
பல்வேறு வகைகளாக இந்த 78 நாட்களும் வசூல் நடந்தது.
சென்னையில் 1.40 லட்சம் குடும்பங்களை இந்த குழுக்கள்
சந்தித்து விதவிதமான அனுபவங்களோடு திரும்பினார்கள். அனுபவப் பகிர்வு என்ற முறையில்
நடைபெற்ற கூட்டங்கள் மேலும் உற்சாகத்தை அளித்தது. வசூல் தொகை என்பது பத்து பைசாவில்
ஆரம்பித்து ஐந்து ரூபாய் வரை இருந்தது. ஐந்து ரூபாய் என்பது மிக அதிகபட்ச
நன்கொடையாக இருந்தது. சராசரியாக 98 சதவீதம் 2 ரூபாய் வசூல் ஆகத்தான் இருந்தது. ஒரு சிலர் நூறு ரூபாய் கொடுத்தது
மாவட்டத்தின் பேசு பொருளாக மாறியது. சென்னை மாவட்டத்தில் வீடுகள் வசூல் மூலம்
ரூ.3,89,000 கிடைத்தது. மாநிலம் முழுவதும் ரூ.8.5 லட்சம்
வசூலிக்கப்பட்டது.
சென்னை
தவிர தமிழகம் முழுவதும் பிரசாரமும் விளம்பரமும் அதுவரை இல்லாத அளவிற்கு நடைபெற்றது.
4 லட்சம் குடும்பங்களை 1100 குழுக்கள் சந்தித்தன. மாநிலம் முழுவதும் 13 லட்சம்
துண்டு பிரசுரங்கள், 20,000 சுவரொட்டிகள், 8000 இடங்களில் பெரிய சுவர் எழுத்துக்கள் திரும்பிய பக்கம் எல்லாம் டயர்
தட்டிகள், 270க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் என்று
எண்ணிலடங்கா மாநாட்டு விளம்பர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மாநாட்டின் முத்தாய்ப்பாக
பேரணியும் பொதுக்கூட்டமும் சென்னை மெரினா சீரணி அரங்கத்தில் நடைபெற்றது. இந்தப்
பேரணியில் தமிழகத்தில் இருந்து 38 ஆயிரம் இளைஞர்களும்
சென்னையிலிருந்து மட்டும் ஏழாயிரம் இளைஞர்களும் கலந்து கொண்டனர். இவை தவிர
ஆந்திராவிலிருந்து பத்தாயிரம் பேரும் கர்நாடகாவில் இருந்து ஐந்தாயிரம் பேரும், மகாராஷ்டிராவில் இருந்து ஆயிரம் பேரும்
கலந்து கொண்டனர். மொத்தமாக 70 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்ட
இளைஞர்களின் எழுச்சிமிகு பேரணி 2.30 மணி நேரம்
கட்டுப்பாடுடன் மெரினாவில் நடைபெற்றது. தூறல் மழை பெய்து அவர்களுக்கு வரவேற்பு
கொடுத்தது.
மார்க்சிஸ்ட்
கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி.ஆர்., மாநாட்டிற்கு முதல் நாள் இறந்ததால்,
மாநாட்டுப் பேரணி ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அதனால் பேரணிக்கு வரவிருந்த
பலரும், வாகனங்களை கேன்சல் செய்துவிட்டனர். அதன் பிறகு மீண்டும் பேரணி நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் வாகனங்களை
ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று என்பதால் மீண்டும் வாகனங்களை
ஏற்பாடு செய்து பல மாவட்டங்களில் இருந்து தோழர்கள் வர முடியாமல் போனது. பேரணியில்
கலந்து கொள்ள முடியாமல் போனது. குறிப்பாக
கேரளாவில் இருந்து இளைஞர்கள் வாகனங்களை
ஏற்பாடு செய்து வர இயலாமல் போனது. இதனால் மேலும், பல ஆயிரம் இளைஞர்கள் பேரணியில்
பங்கு கொள்ள இயலவில்லை. ஆனால், பத்திரிகைகள் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற
கட்டுக்கோப்பான பேரணி என்று தலைப்பு செய்திகளாக வெளியிட்டனர். 21.12.87 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை பதிப்பில்
"வெடவெடக்கும் குளிரிலும் அவர்களை உந்தி தள்ளியது டி ஒய் எப் ஐ யின் இலட்சிய முழக்கங்கள்
என்றும், அரைத்த மாவையே அறைக்காத புதியவர்கள் என்றெல்லாம்
பாராட்டி எழுதியது ஊர்வலம் முடிந்த மறுநாள் ஆங்கில இந்து பத்திரிக்கை தினமணி இந்தியன்
எக்ஸ்பிரஸ் மற்றும் அனைத்து மாலை பத்திரிகைகளும், ஆனந்த விகடனும்
கொட்டை எழுத்தில் படத்துடன் செய்திகளை வெளியிட்டது மட்டுமல்ல இளைஞர்கள் ஊர்வலம் மிகவும்
கட்டுப்பாடாக சில மணி நேரங்கள் நடைபெற்றதையும் மக்கள் கடந்து செல்வதற்கான வழிகளை உருவாக்கி
கொடுத்ததையும் பாராட்டி எழுதினார்கள். வழக்கம்போல் துக்ளக் என்ற பத்திரிக்கை குதர்க்கமாக
எழுதி இருந்தது. குதர்க்கமாக எழுதுவதற்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி இருந்தது.
வரவேற்பு
குழு அமைக்கப்பட வேண்டிய காலத்தில் தொழிற்சங்க பிதாமகன், அருமை தோழர் வி. பி
சிந்தன் ரஷ்யாவில் காலமானார். மாநாடு நடைபெற்ற அந்த காலகட்டத்தில் பல
மாவட்டங்களில் சாதிய மோதல்கள் நடந்ததால், ஊரடங்கு உத்தரவுகளும் போடப்பட்டது. அப்போது இடதுசாரி
கட்சிகளின் வெகுஜன அமைப்புகளின் பிரசாரப் பயணமும், அகில இந்திய அளவில் விவசாயிகளுடைய
மறியலும் நடந்த காலம் அது. மேலும், மாநாட்டை மழைக்காலமான டிசம்பர் மாதம் நடத்த
வேண்டிய சூழலும் உருவானது. தோழர் வி.பி.சிந்தன் மறைந்த துயரம், மழைக்காலம் என்ற
இயற்கை இடர்பாடு ஆகியவற்றை எதிர்கொண்டுதான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடியும்
என்ற நம்பிக்கையோடுதான் வாலிபர் சங்கம் களம் இறங்கியது. மாநாடு துவங்கிய முதல்
நாள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவரும், வரவேற்புக்குழு தலைவருமான தோழர்
பி ஆரின் மரணம் தலையில் இடியாய் இறங்கியது. மாநாட்டு மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து
பிள்ளையார் சுழி போட்ட தோழர் பி.ஆரின் மரணம் மிகப்பெரிய சோகத்தை கொடுத்தது.
இந்த
சோகத்துக்குப் பிறகும் பிரதிநிதி மாநாடும் பேரணி, பொதுக்கூட்டமும் சிறப்பாக நடந்து
முடிந்தது. மாநாடு முடிந்த பிரதிநிதிகள் ஊர் திரும்புவதற்குள் அன்றைய முதலமைச்சர்
எம். ஜி.ஆரின் மறைவு ஏற்பட்டதால், பலர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி ஊர்
திரும்ப முடியவில்லை. அதையும் சந்தித்து, உரிய முறையில் பிரதிநிதிகள் அவரவர்
ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில்
நடந்த டிஒய்எப்ஐயின் அகில இந்திய மாநாடு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியது. இயக்கத்திலும் அது எதிரொலித்தது. மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்ட 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட தோழர்கள், முன்னணி ஊழியர்களாகவும், தலைவர்களாகவும்
மாறினார்கள். இந்த மாநாடு ஓவியர்களை உருவாக்கியது; கலைஞர்களை உருவாக்கியது;
பேச்சாளர்களையும், தலைவர்களையும் உருவாக்கியது. இவை அனைத்தும் சீனத்தை
சிவப்பாக்கி, 21ஆம் நூற்றாண்டிலும் அமெரிக்காவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிற
நாடாக மாற்றிய மாவோ சொன்னபடி நடந்தது. மக்களிடம் செல்லுங்கள்; மக்களிடம்
கற்றுக் கொள்ளுங்கள் என்றார் மாவோ. அவருடைய வார்த்தைகளின் படியே மக்களிடம்
சென்றோம்; கற்றுக் கொண்டோம். மாநாட்டினை வெற்றிகரமாக்கினோம்.
டிஒய்எப்ஐ
அகில இந்திய மாநாட்டின் விளைவாக சென்னையில் வாலிபர் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 109
சதவீதம் அதிகமானது. அதாவது சென்னையில் 10,100 இல்
இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 21 ஆயிரத்து நூறாக உயர்ந்தது. தமிழகம் முழுவதும் 39 ஆயிரம்
உறுப்பினர்கள் அதிகரித்தனர். இதே போல் கிளைகள் சென்னையில் 218 ஆகவும் தமிழகத்தில் 2600 இல் இருந்து 3500 ஆகவும் அதிகரித்தது.
சென்னையில்
நடைபெற்ற இந்த மாநாடு, ஸ்தாபன ரீதியாக, அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. இவையெல்லாம் மெல்லக் கனவாய், பழங்கதையாய்
போய்விடவில்லை. இன்றும் வாலிபர் சங்கம் மக்கள் பிரச்னைகளில் வீறுகொண்டு போராட்டக்
களத்தில் நிற்கிறது.
-அ .பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக