அ.பாக்கியம்
திபெத் உலகத்தின் கூரையாக மட்டுமல்ல,
இக்காலமாற்றத்தின் மகுடமாகவும், வளர்ச்சியின்
உச்சமாகவும் உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அடிமை நுகத்தடியில் அழுந்தி
கிடந்த சமுதாயம் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசித்தது மட்டுமல்ல, சமூக பொருளாதார வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை அனுபவித்துக்
கொண்டிருக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள்
குடியரசும் அந்த அடிமை நுகத்தடிகளை அறுத்தெறிந்ததுடன்,
மக்களையே திபெத்தின் எஜமானர்களாக மாற்றி இருக்கிறார்கள். ஆட்சி
முறையில் துவங்கி அனைத்து துறைகளிலும் அடிமட்டம் வரை இம்மாற்றத்தின் பலன்கள்
சென்றடைந்துள்ளன.
இந்த இரண்டு கைகளும்
என்னுடையதாக இருந்தால்
நான் வானத்திலிருந்து
சந்திரனை பறிக்க முடியும்,
 இந்த இரண்டு கைகளும்
தங்கள் சங்கிலிகளை
அசைத்து விட்டால்,
திபெத்தை பூமியின்
சொர்க்கமாக மாற்ற முடியும்
என்று
அன்றைய நிலைமையில் அடிமை சமுதாய காலக்கட்டத்தில் அடிமைகளால் பாடப்பட்ட பாடல்
இன்றைய நிதர்சன உண்மையாக மாறிவிட்டது. திபெத்தின் வளர்ச்சியும் சமூக மாற்றமும்
மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
1949 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை திபெத்தில், சீனாவில் இதர பகுதியில்
துவங்கிய ஜனநாயக சீர்திருத்தம் துவங்கவில்லை. காரணம் திபெத்தில் இருந்தது சாதாரண
அடிமை முறை அல்ல. மதத்தின் பெயரால், தேவராஜியத்தின்
உத்தரவால் மக்களை மயக்கி வைத்திருந்த அடிமை முறையாகும்.இந்த வரலாற்றுச் சூழலை
கவனத்தில் எடுத்து அவர்களை அரசியல் ரீதியாக வென்றெடுக்கக்கூடிய இடைப்பட்ட காலமாக
இந்த பத்தாண்டுகள் இருந்தது. மாசேதுங் திபெத்தை விடுதலை செய்வது மட்டும் நம்முடைய
நோக்கம் அல்ல, திபெத்திய மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுக்க
வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள
உள்ளூர் மக்களின் ஆதரவை திரட்ட கூடிய பணிகளை செய்தார்கள். இவற்றை சீர்குலைக்க
வேண்டுமென்ற நோக்கத்தோடு தலாய்லாமா அமெரிக்க ஏகாதிபத்திய சிஐஏ உதவியுடன்
செயல்பட்டார். 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா நாட்டை விட்டு ஓடிய
பிறகு ஜனநாயக சீர்திருத்தம் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டுகள் வரை சீர்திருத்தத்துக்கான அடித்தளங்கள் வலுவாக
உருவாக்கப்பட்டன. 1978 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை டெங் சியோ பிங் காலத்தில் சீன நாட்டின் நவீன
மயமாக்களும் திறந்தவெளி (பொருளாதரத்தை திறத்து விடுதல்) கொள்கையும் வளர்ச்சியை
மேலும் முன்னெடுத்தது. கலாச்சாரப் புரட்சியின் காயங்கள் ஆற்றப்பட்டன. 2012 க்குப் பிறகு தற்காலம் வரை சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் என்ற
திட்டத்தின் அடிப்படையில் மக்கள் பங்கேற்க கூடிய வளர்ச்சியை இவ்விடத்தில்
உருவாக்கினார்கள்.
சீன தேசத்தைப் புத்துயிர் பெறச்
செய்வதற்கும், நாட்டின் பிறப்பகுதிகளுடன் சேர்ந்து
ஜிசாங் தன்னாட்சிப் பகுதி மிதமான செழிப்பையும், நவீன
மயமாக்கலையும் அடைவதை உறுதி செய்வதற்கும் ஒரு மூலோபாய தொலை நோக்குப் பார்வையுடன்,
CPC மத்தியக்குழு ஜிசாங்கின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம்
அளித்து, பிராந்தியத்தில் உள்ள மக்கள் மீது தனது கவனத்தை
செலுத்தியுள்ளது.  இந்த மூன்று
காலகட்டத்தையும் உள்ளடக்கி தான் திபெத்தின் வளர்ச்சியை காண வேண்டும்.
மக்களிடமிருந்து
துவங்கிய சீர்திருத்தம்  
சீர்திருத்தத்தின் முதல்படி அடிமைத்தனத்தை
எதிர்த்து மக்கள் நடத்திய கிளர்ச்சிகள் ஆகும். புதிய அரசியல் மாற்றத்தை அறிந்த
உடன் மக்கள் திபெத்திலிருந்த மிகக் கொடுமையான இலவச உழைப்புக்கு எதிராகவும்,
கடன்கள் என்ற பெயரால் சாமானிய மக்களை அடிமைகளாக்கிய அடிமைத்தனத்தை
எதிர்த்தும், கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என்று
மக்களிடமிருந்து கிளர்ச்சிகள் வெடித்து கிளம்பியது. மக்களே மாற்றத்திற்கான முதல்
அடித்தளத்தை துவக்கினார்கள். இதன் விளைவாக கிராமப்புறங்களில் கிளர்ச்சியில்
ஈடுபட்ட விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நிலத்தில் அறுவடை செய்த பயிர்களை
நிலப்பிரபுக்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தங்களுக்கு சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
சில பகுதிகளில் மக்கள் கிளர்ச்சிகளில்
ஈடுபடவில்லை. நிலப்பிரபுக்களின் அச்சுறுத்தலில் அடங்கிக் கிடந்தனர். அந்த
இடங்களில் நில உடமையாளர்கள் அறுவடை தானியங்களில் 80
சதவீதத்தை விவசாயிகளிடமும் 20% நில உடமையாளர்களும் எடுத்துக்
கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. திபெத்தில் கால்நடை மேச்சலில்
கணிசமான மக்கள் ஈடுபட்டிருந்தார்கள் அதுவே அவர்களுக்கான வாழ்வாதாரம். கால்நடைகள்
வளர்ப்பில் ஈடுபட்ட மக்கள் அந்த கால்நடைகள் மூலம் வருகின்ற வருமானத்தை தாங்களே
சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது அரசு. வீட்டு வேலைகளுக்காக
இலவசமாக வைக்கப்பட்டிருந்த அடிமை முறையை ஒழித்து உத்தரவிட்டனர். அவர்கள் அனைவரும்
விடுதலை செய்யப்பட்டது மட்டுமல்ல அவர்களுக்கான வாழ்வாதாரமும் வழங்கப்பட்டது. முதல்
படியாக திபெத் வளர்ச்சியில் அடிமை முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
1959 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி சீன பிரதமர் சௌ என் லாய் திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தை கலைத்து
உத்தரவிட்டார். அதே நேரத்தில் திபெத்தை வழி நடத்துவதற்காக திபெத் தன்னாட்சி
பகுதிக்கான தற்காலிக தயாரிப்பு குழு என்ற ஒரு குழுவை அறிவித்தார். இந்தக்
குழுவிற்கு பஞ்சன்லாமா செயல் தலைவராக இருப்பார் என்றும் சீன அரசு அறிவித்தது.
சுமார் பத்து லட்சம் திபெத்திய மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
பண்ணை அடிமைத்தனத்திலிருந்து விடிவித்தது மட்டுமல்ல, தேவராஜ்ஜியம்
என்ற பெயரில் படிநிலை அடிப்படையிலான சமூக அமைப்பையும் ஒழித்துக் கட்டும் அறிவிப்பை
சீன அரசாங்கம் வெளியிட்டது. அடிமை ஒழிப்பை அறிவித்த மார்ச் 28 திபெத்தில் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.
தேர்தலும்
தன்னாட்சி உரிமையும் 
ஜனநாயக சீர்திருத்தத்தின் இரண்டாவது படியாக
சீர்திருத்தத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபட்ட நிலப்பிரபுக்களின்
நிலம் உட்பட அணைத்து வகை  உற்பத்தி
சாதனங்களையும் அரசு பறிமுதல் செய்து வறுமையில் வாழக்கூடிய விவசாயிகளுக்கும்
கால்நடை மேற்பவர்களுக்கும் கொடுத்தது. சீர்திருத்தத்திற்கு எதிராக கிளர்ச்சியில்
ஈடுபடாத நிலப்பரப்புகளின் நிலத்தில் பணி செய்த விவசாயிகளுக்கு விடுதலையை
அளித்ததுடன் அவர்கள் நிலத்தில் வேலை செய்வதற்கான நவீன கருவிகளையும் அரசு கொடுத்து
உதவி செய்தது. இதன் விளைவாக திபெத்திலிருந்த ஏழை மக்களும்,
அடிமையாய் இருந்தவர்களும் மிகப் பெரும் பலன் அடைந்தார்கள்.
சீர்திருத்தத்தை மனம் குளிர வரவேற்றார்கள். திபெத்தில் இருந்த சில உயர் வர்க்க
பிரிவினரும் இந்த சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டனர். திபெத் வரலாற்றில்
முதன்முதலாக அடிமைகள் நிலம் மற்றும் உற்பத்தி சாதனங்களையும் சொந்தமாக பெற்றதுடன்
சுதந்திரத்தையும் பெற்றார்கள்.
சீர்திருத்தத்தின் மற்றொரு இன்ப அதிர்ச்சி
திபெத்திய மக்களுக்கு காத்திருந்தது. தேர்தல் என்பதை பற்றி அறியாத,
கேள்விப்பட்டிராத மக்களிடம் முதல் முறையாக திபெத்தின் அனைத்து
மட்டத்திற்கும் 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. சீன
மக்கள் குடியரசின் அரசியல் அமைப்பு அடிப்படையில் தேர்தலில் அனைவருக்கும்
வாக்களிக்கும் உரிமையும் போட்டியிடக்கூடிய உரிமைகளும் வழங்கப்பட்டது. எண்ணற்ற
விடுதலை பெற்ற அடிமைகள் ஒரே நேரத்தில் வாக்காளர்களாகவும், வேட்பாளர்கள்
ஆகவும் களமிறங்கினார்கள். அவர்கள் வெற்றி பெற்று உள்ளூர் அரசாங்கத்தின்
பொறுப்புகளில் அமர்ந்தனர். உள்ளூர் அரசின் முடிவுகளையும், தேசிய
அரசின் முடிவுகளையும் நிறைவேற்றினார்கள். அதைவிட அரிதான ஒரு சம்பவம் திபெத்திய
வரலாற்றில் முதல் முறையாக அடிமைப்படுத்திய நிலப்பிரபுவும், அடிமையாக
இருந்த விவசாயிகளும் சமமான முறையில் சட்டசபையில் அமர்ந்தார்கள் என்றால் இதைவிட
அவர்களுக்கு மகிழ்வான தருணம் எதுவாக இருக்க முடியும்.
அடிமைச் சங்கிலிகள் அறுத்தறியப்பட்ட பிறகு 10 ஆண்டுகளில் பின் தங்கிய  ஒரு
சமூகத்தில் ஒரு செழிப்பான சமூகத்தை உருவாக்க முடிந்தது. 1965
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி தன்னாட்சி பகுதி
அமைப்பதற்கான சட்டத்தை சீன மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றியது. தலாய்லாமா இருந்த
காலத்தில் ஒரு தீப்பெட்டியை வாங்குவதற்கு ஒரு விவசாயி ஒரு ஆட்டுக்குட்டியை கொடுக்க
வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் 10 ஆண்டுகளில் தீப்பெட்டி
தொழிற்சாலைகளையே சொந்தமாக ஆரம்பித்தது மட்டுமல்ல 250 க்கும்
மேற்பட்ட தொழிற்சாலைகளையும் உருவாக்கினார்கள்.
சட்டத்தின்
ஆட்சியில் பிராந்திய அரசியல் வளர்ச்சி 
சீன நாட்டில் இருக்கிற ஐந்து தன்னாட்சி
பிரதேசங்களில் திபெத்தும் ஒன்றாகும். இதற்கு ஜிசாங் தன்னாட்சி பிராந்தியம் என்று
பெயர் மாற்றப்பட்டது. ஜிசாங் என்றால் மேற்கின் புதையல் என்று அர்த்தம். பண்டைய
காலத்தில் அப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. ஜிசாங் தன்னாட்சி பிரதேசம்,
அதற்கு உட்பட்ட 7 மாகாணங்கள், 74 மாவட்டங்கள், 692 நகராட்சி நிர்வாகங்கள்,
11,948 கிராம நிர்வாகங்களையும் அமைத்துள்ளது. மேற்கண்ட நான்கு
நிலைகளில் ஒவ்வொரு அமைப்பிற்கும் மக்களால், மக்கள் காங்கிரஸ்
பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஐந்து ஆண்டும் பிராந்திய
மக்கள் காங்கிரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அனைத்து மட்டத்திலும் நடைபெறுகிறது.
இவ்வாறு நடைபெறும் தேர்தல்களில் 90% க்கு அதிகமான
வாக்காளர்கள் சில இடங்களில் 100% வாக்காளர்கள்
வாக்களிக்கிறார்கள்.
ஜிசாங் என்ற தன்னாட்சி பிராந்திய மக்கள்
காங்கிரசிற்கு 428 பிரதிநிதிகள்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களில் 280 பேர் அதாவது 65.42 சதவிகிதம் திபெத்திய மற்றும் இதர சிறுபான்மையினராகும். மேற்கண்ட
தன்னாட்சி பிராந்தியத்தில் நான்கு நிர்வாக அமைப்புகளிலும் மக்கள் காங்கிரஸ்
பிரதிநிதிகள் மொத்தம் 42,153       உள்ளனர். இவர்களில் 89.2 சதவீதத்தினர் திபெத்திய இன சிறுபான்மையினர் மற்றும் இதர சிறுபான்மையினர்
ஆவார்கள். மேற்கண்ட மக்கள் காங்கிரஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது நாட்டுப்
பாராளுமன்றம் போன்று மேலிருந்து கீழ் வரை செயல்படக்கூடிய நாட்டின் உயர்ந்த
அதிகாரம் படைத்த அமைப்பாகும்.
சீன
ஜனநாயகத்தின் மற்றொரு அமைப்பு சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு ( CPPCC)
என்பதாகும். சமூகத்தின் பல்வேறு வட்டாரங்கள் சேர்ந்தவர்கள், பல சமூக குழுக்களை சேர்ந்தவர்கள், பல்துறை
நிபுணர்கள், இனக்குழு சார்ந்த பிரதிநிதிகள் என பரந்து பட்ட
மக்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பு பொருளாதாரத் திட்டங்கள்,
சமூக மேம்பாடு தொடர்பான திட்டங்கள், அதை
அமலாக்குகிற பொழுது வரக்கூடிய பிரச்சினைகள், அவற்றை
தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும், சட்ட ரீதியான
முறையில் நடவடிக்கை எடுப்பதற்கும், அதிகாரம் படைத்த ஆலோசனை
அமைப்பாகும்.
இவற்றில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்
அதிகமாக இருக்க மாட்டார்கள். ஜீசாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் இந்த ஆலோசனை
குழுவில் 440 உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்களில் 59.3 உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லாதவர்கள்.
பிராந்தியத்தில் உள்ள 74 மாவட்டங்களிலும் இந்த அமைப்பு
நிறுவப்பட்டுள்ளது. இவற்றில் 8,000 க்கு மேற்பட்ட
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள்உள்ளார்கள். இவர்களில் 85.7
சதவீதம் பேர் இன சிறுபான்மையை சேர்ந்தவர்கள்.
இந்த அமைப்பின் மூலம் 4356 திட்டங்கள் இக்காலங்களில் உருவாக்கப்பட்டு பிராந்திய மக்கள்
காங்கிரசால்அமலாக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸில் இந்த
மாநிலத்தில் இருந்து 24 பிரதிநிதிகள் அதாவது எம்.பி.க்களை
போல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களில் 66 சதவீதம் இன
சிறுபான்மையினர் ஆவார்கள். சீன மக்கள் ஆலோசனை காங்கிரஸில் ஜிசாங்
மாநிலத்திலிருந்து 29 தேர்வு செய்யப்படுகிற உறுப்பினர்களில் 93.1 உறுப்பினர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்
ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தில் 790 இடங்களில் மக்கள் காங்கிரஸ் கூடும் சட்டமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் நகராட்சி பிரதிநிதிகளில் 70 சதவீதம் பேர்
அடிமட்ட மக்களிலிருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சீன ஜனநாயகத்தை
அடித்தள ஜனநாயகம் என்ற முறையில் அமுலாக்குவது என்ற கொள்கையின் விளைவாக இது
நடைபெறுகிறது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி ஜிசாங் தன்னாட்சி
பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் நிலைக்குழு 160 உள்ளூர் விதிமுறைகளையும், சட்டபூர்வமான
சட்டங்களையும் ஒழுங்குமுறை விதிகளையும் உருவாக்கி செயல்படுத்தி உள்ளது.
ஜிசாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில்
தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தரவுகளின்படி இந்த முழுபிராந்தியத்திலும் 8,821 தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இவற்றில் 6,07,000
சங்க உறுப்பினர்கள் உள்ளார்கள். நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள
ஊழியர்களும், தொழிலாளர்களும் மாநாடுகளை நடத்துவது அதன் மூலம்
ஜனநாயக மேலாண்மையை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தங்களது உடனடி நலன்கள் தொடர்பான
அதாவது கோரிக்கைகளை உருவாக்குவது இயக்கங்கள் நடத்துவது வேலைநிறுத்தங்கள் உட்பட
முக்கிய விஷயங்களில் முடிவெடுக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை
முழுமையாகப் பயன்படுத்தவும் முடிகிறது
சட்டம்
சார்ந்த சமூகம் உருவாக்கப்பட்டது 
திபெத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய
முன்னேற்றங்களில் மக்களை சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதும்,
மக்கள் சட்டத்தை மதித்து நடக்கக்கூடிய ஒரு முறைகளை உருவாக்குவதிலும்
வெற்றி பெற்றுள்ளார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொது
அலுவலகமும், மாநில கவுன்சிலின் அதாவது மாநில அமைச்சரவை
இணைந்து பொதுசட்ட சேவையை அதற்கான அமைப்பை உருவாக்கியது. மாவட்ட அளவிலும் அனைத்து
நீதித்துறை நிர்வாக அலுவலர்களிலும் பொது சட்ட சேவை நிறுவனத் தலங்களை தொடங்கி
படிப்படியாக அவற்றை செயல்படுத்த ஆரம்பித்தது.
2021 ஆம் ஆண்டில் மட்டும் 27,300 க்கும் மேற்பட்ட சட்ட ஆலோசனைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளது.
மக்களிடம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது சட்டத்தின் ஆட்சி குறித்த கல்வியை
போதிப்பது மேலும் அரசியல் அமைப்பை மையமாகக் கொண்ட சில சோசலிச சட்ட அமைப்பு
குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரம் செய்வது போன்ற அம்சங்கள்
மேற்கொள்ளப்பட்டன. ஜிசாங் மாநிலம் முழுவதும் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை
செலுத்தும் கலாச்சாரத்தை உருவாக்க கிராமப்புறங்களில் பள்ளிகள் மற்றும் மத
வசதிகளில் சட்டத்தின் ஆட்சி குறித்து பயனுள்ள பொதுக் கல்விகள் நடத்தப்பட்டு மக்களை
மேம்படுத்தினார்கள்.
இதில் சட்டங்களை விளக்கவும்,
நிஜ வாழ்க்கை வழக்குகளில் பயன்படுத்தவும், ஜனநாயகம்
மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தேசிய முன்னோடி கிராமங்கள் மற்றும் சமூக
நிறுவனங்களையும் உருவாக்கினார்கள். இந்த நடவடிக்கைகள் மக்கள் அனைவரும்
சட்டபூர்வமான ஆட்சியில் நேரடியான பங்கேற்பதற்கான பெரும் உந்துதலை உருவாக்கியது.
இந்த செயல்முறைகள் அடுத்தடுத்த பொருளாதார வளர்ச்சியும் வெளிப்பட்டது.
சீனாவில் ஜனநாயகம் இல்லை என்று தொடர்ந்து
பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் தலாய்லாமாவின் காலத்தில் தான்
ஜனநாயகம் இல்லை என்பதையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி
திபெத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயக அமைப்புகளை தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல, சீனாவில் பங்கேற்பு ஜனநாயக முறைகளை விரிவான முறையில் ஆழமான முறையில்
நடத்தி வருகிறது. இதன் விளைவாகத்தான் திபெத்அனைத்தும் மக்களின் பங்கேற்புடன்
செழிப்பான ஒரு மாநிலமாக உருவெடுத்து வருகிறது

 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக