Pages

வியாழன், அக்டோபர் 16, 2025

42 திபெத்∶கனிம வளங்களை வட்டமடிக்கும் வல்லூறுகள்

 

அ.பாக்கியம்

பசுமையால் போர்த்தப்பட்ட வானுயர்ந்த மலைகளும், மலைமுகடுகளில் பொங்கி வரும் ஆறுகளும், மடிப்புகள் நிறைந்த பசுமையான பள்ளத்தாக்குகளும், பல்லாயிரக்கணக்கான ஏரிகளும், கண்ணுக்கு எட்டிய தூரங்களைக் கடந்து காணப்படும் மேச்சல் நிலங்களும், கணக்கில் அடங்கா வெள்ளிப் பனி மலைகளும் நிறைந்து,உலகின் கூரையாக பூமிக்குமேலே காட்சிதரும் திபெத் பூமிக்கு அடியிலே கணக்கிலடங்கா பொக்கிஷங்களைக் கொண்டிருக்கிறது.

நிலம், மலை, மழை, கனிமங்கள் என வளங்கள் நிறைந்து காணப்படும் திபெத்,கிங்காய், கன்சூ, யுன்னான் என திபெத்தை சுற்றியுள்ள மாநிலங்களை சூறையாடுவதற்கு ஏகாதிபத்திய வல்லூறுகள் வட்டமடித்து வருகின்றன.

வறண்ட பகுதிகளை வளமாக்குவதற்கு என்றுமே ஏகாதிபத்தியம் நினைத்தது கிடையாது. ஆப்பிரிக்கா தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள் வரை மண்ணுக்கு அடியில் உள்ள தாதுப் பொருட்களையும், எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்களையும் கொள்ளையடித்தே பழக்கப்பட்ட ஏகாதிபத்தியம்,திபெத்  என்ற பொக்கிஷ பூமியை சும்மா விட்டு விடுமா?

ஆகவேதான் சிறிய துரும்பு கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு திபெத்தை உலக சர்ச்சையாக மாற்றி வருகிறது. ஆனாலும் அமெரிக்காஎடுக்கும்  ஒவ்வொரு முயற்சிகளும் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தோல்வியில் முடிந்துள்ளன.

சீனாவைப் பொறுத்தவரை திபெத் என்பது அந்த நாட்டின் எல்லை பாதுகாப்பு அரணாகும். உலகத்தின் கூரை என்ற மிக உயரமான பகுதியை அந்நிய சக்திகளிடம் விட்டுவிடுவது ஒட்டுமொத்த சீனாவையே அழித்துக் கொள்வதற்கு சமமாகும் என்பதை சீன அரசு புரிந்து கொண்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு எல்லைகள் குறிப்பாக இந்தியாவுடன் நீண்ட அளவு உள்ளது. அதே நேரத்தில் பல சர்ச்சைக்குரிய பகுதிகளும் இதில் உள்ளடக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் திபெத் என்பது சீனாவிற்கு புவிசார் அரசியலின் முக்கிய மையமாக மாறிவிடுகிறது.

 

அது மட்டுமல்ல திபெத்பீடபூமி இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்தை இணைப்பதற்கான ஒரு நுழைவாயிலாக இருக்கிறது. இந்திய பெருங்கடலை அணுகக் கூடிய பாதையாகவும் அமைந்துள்ளது. அண்டை நாடான நேபாளமும் பூட்டானும் மலையக தனி நாடுகளாக இருக்கிற பொழுது திபெத் சீனாவின் பாதுகாப்பிற்கு மிக முக்கிய இடமாக மாறிவிடுகிறது. எனவே திபெத் என்பது தலாய்லாமாவின் சுதந்திரம் என்ற போலி வார்த்தைகளுக்கு பின்னால் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் உள்ளடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

பொக்கிஷங்களின் பூமி

ஜிசாங் திபெத் தன்னாட்சி பிரதேசம்  என்று திபெத்தை உள்ளடக்கிய மாநிலத்திற்கு சீனா பெயரிட்டுள்ளது. இதற்கு மேற்கின் பொக்கிஷம் என்று அர்த்தமாகும். திபெத் பீட பூமியில் குரோமியம், லித்தியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், போராக்ஸ், ஈயம், வெள்ளி மற்றும் அரிதான மண் தாதுக்கள் என 126 க்கும்  மேற்பட்ட தாதுப்பொருட்கள் உள்ளன.

குறிப்பாக நாகரிசிகாட்ஷே பகுதிகளில் கணிசமான தாமிர தாது பொருட்கள் உள்ளது. உலகின் மிகப்பெரிய தாமிர உற்பத்தியாளராக சீனா திகழ்கிறது. சீனாவின் தாமிர இருப்புகளில் சுமார் ஆறில் ஒரு பங்கு திபெத்தில் உள்ளது. நாகரிசிகாட்ஷே தன்னாட்சி பகுதிகளில் சமீபத்தில் மிகப்பெரிய அளவிலான செப்பு இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக திபெத் தாமிரத்திற்கான மையமாக மாறி உள்ளது. இது இந்த பிராந்தியத்தின் தாமிர இருப்புகளில் 150 மில்லியன் டன்கள் வரை சேர்க்க வாய்ப்புள்ள உலகின் மிகப்பெரிய தாமிரவளம் நிறைந்த பகுதியாகும்.

இங்கு நான்கு முக்கியமான தாமிரவளத் தளங்கள் உருவாகியுள்ளன. இந்த தாதுப்பொள் சீனாவின்  உற்பத்தி மற்றும் பசுமை ஆற்றல் போன்ற தொழில்களுக்கான முக்கிய மூலப்பொருளாக உள்ளது.இது சீனாவின் உள்நாட்டு விநியோகத்தை கணிசமான அளவுக்கு அதிகரிக்கின்றது. இந்த தாமிர அல்லது செப்பு கண்டுபிடிப்புகள் திபெத்தை வளங்கள் நிறைந்த பகுதியாக மாற்றி உள்ளன.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 மில்லியன் டன் புதிய தாமிர கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகள் திபெத்தை உலகளாவிய செப்பு ஆய்வுக்கான ஒரு முக்கியமான மையமாக நிலைநிறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சீனாவில் முக்கியமான பொருளாதாரத் தாக்கங்களையும் ஏற்படுத்தி உள்ளது. உலகில் உள்ள செப்பு சந்தையில் சீனாவை முன்னிலைப்படுத்தி இருக்கிறது.

தொழில்நுட்ப சகாப்தத்தின் கனிமம்

மற்றொரு முக்கியமான கனிமம் லித்தியம் ஆகும். உலக அளவில் ஆற்றல் மாற்றத்திற்கு லித்தியம் மிகவும் இன்றியமையாத கனிமம். மின்சார வாகனங்கள், எரிசக்தி சேமிப்பு அமைப்புகள், மொபைல் தகவல் தொடர்பு, மருத்துவ சிகிச்சைகள், அணு உலை எரிபொருள்கள்,குறை கடத்திகள் என பல்வேறு வளர்ந்து வரும் தொழிலுக்கு லித்தியம் மிக முக்கியமான அங்கம் ஆகும். சீன மக்கள் குடியரசில் லித்தியத்தின் இருப்பு உலக அளவில் 6 சதவீதத்திலிருந்து தற்பொழுது 16.5% ஆக அதிகரித்து உள்ளது. இது லித்தியம் இருப்பில் சீனாவை உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது. ஜின்ஜியாங் என்ற மத்திய ஆசியா மாநிலத்தில் துவங்கி 2,800 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியில் படர்ந்து திபெத்திய குடியிருப்புகள் வரையிலான இடங்களில் இந்த லித்தியம் காணப்படுகிறது.

திபெத்தியே பீடபூமியில் உள்ள உப்பு ஏரிகளில் லித்திய வளங்களும் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய உப்பு ஏரி திபெத்தில் உள்ளது. இது லித்தியத்தின் வளமயை வெளிப்படுத்துகிறது. உப்பு ஏரியிலிருந்து லித்தியத்தை பிரித்து எடுப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்ததாகும்.அதே நேரத்தில் உப்பு ஏரியிலிருந்து லித்தியத்தை பிரித்தெடுப்பது குறைந்த செலவு கொண்டதாகும். இது சீனாவிற்கு மிகப் பெரும் லித்திய வளத்தை கொடுக்கிறது. சீனாவின் உள்நாட்டின் பயனுக்காகவும், ஆய்வு செய்வதற்கும் அதிக லித்தியம் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் வெளிநாட்டின் இறக்குமதியை நம்பி இருந்தனர். தற்போது லித்தியத்தை தங்களது நாட்டிலேயே கண்டுபிடித்து இருப்பதால் சீனா லித்தியத்தை உலக சந்தைக்கு அனுப்பக்கூடிய அளவிற்கு தன்னிறைவை அடைந்து வருகிறது.

காடுகளும் புல்வெளிகளும் மேச்சல் நிலங்களும் மலைகளின் மீது பார்லி விவசாயமும் மிகப் பெரும் செழிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பீடபூமிக்குள் 64.8 மில்லியன் ஹெக்டேர் மலைத்தொடர் நிலங்கள் உள்ளன. அவற்றில் 59.5 மில்லியன் ஹெக்டேர் பயன்படுத்தக்கூடிய மேய்ச்சல் நிலங்களாகும். கால்நடை பராமரிப்பு திபெத்தில் ஒரு அடிப்படைத் தொழிலாகும.இது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தின் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. குறிப்பாக யாக்ஸ், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை வளர்ப்பதன் மூலம். இந்தக் காடுகளும் புல்வெளிகளும் இந்த பிராந்தியத்தின் பல்லுயிர் தன்மைகளையும், சுற்றுச்சூழல்களையும், சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்று கிறது. இந்த பீடபூமி பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாக உள்ளது, இதில் திபெத்திய மான் மற்றும் கருப்பு கழுத்து கொக்கு போன்ற பாதுகாக்கப்பட்ட இனங்களும் அடங்கும்.

திபெத்தின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க சொத்துக்களில் ஒன்று சூரிய சக்தி.  பசுமையும் பள்ளத்தாக்கும் பரந்து கிடந்தாலும் சூரியகதிர்களின் உக்கிரமும் இங்கு இருக்கத்தான் செய்கிறது.இந்தப் பகுதி ஆண்டுக்கு 5,852 முதல் 8,400 MJ/m² வரையிலான சூரிய கதிர்வீச்சைப் பெறுகிறது.இந்த வெப்பத்தின் அளவின் அடிப்படையில்  மேற்கு திபெத்தை உயர்மட்ட (வகுப்பு I) சூரியவள வகையிலும், தென்கிழக்கு திபெத்தை  இரண்டாம் வகுப்பிலும் வைக்கிறது.சுவாரஸ்யமாக, உலகளவில் மிகவும் வெயில் மிகுந்த பகுதிகளில் திபெத்தும் ஒன்றாகும்.  பல மேற்குப் பகுதிகளில் ஆண்டுக்கு 3,000 மணிநேரத்திற்கும் அதிகமான சூரிய ஒளியும் இருக்கும்.லாசாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 8,160 MJ/m² சூரிய ஒளி உள்ளது.

கனிம வளம் மட்டுமல்ல திபெத்தின் தனித்துவமான நிலப்பரப்பு அமைப்பும், கலாச்சாரமும் சுற்றுலா பயணிகளை லட்சக்கணக்கில் ஈர்க்கிறது இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக அமைந்துள்ளது.2023ல் 55.17 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான அதிகரிப்பாகும்.இதில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் 20000 பேர்களும் அடங்கும.

ஆசியாவின் நீர் கோபுரம்

திபெத் மற்றும் கிங்காய் பகுதிகளை ஆசியாவின் நீர் கோபுரம் என்று அழைப்பார்கள். திபெத்திய பீடபூமி ஆசியா முழுவதும் பகிர்ந்து கொள்ளப்படும் இன்றியமையாத நன்னீர் வளங்களின் வளமான களஞ்சியமாகும்.ஆசிய கண்டத்தில் உள்ள 100 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு நீர் ஆதாரத்தை வழங்குகிறது. இவற்றின் பணிப்பாறைகளும், இங்கே உருவாகிற ஆறுகளும் கீழ்நிலை நாடுகளுக்கு நீர் வளத்தை வழங்குகிறது. இந்த பிராந்தியத்தின் நீர் பாதுகாப்பிற்கு மிகவும் இன்றியமையாத பகுதியாக திபெத்தும் கிங்காயும் உள்ளது. திபெத் நீர் வளம் மிக மிக முக்கியமானது. பிரம்மபுத்திரா, திபெத்திய மொழியில் யார்லுங் சாங்போ என்று அழைக்கப்படும். பிரம்மபுத்திரா, திபெத், இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு முக்கிய சர்வதேச நதியாகும்.

இது மேற்கிலிருந்து கிழக்கு வரை மொத்தம் 1,800 மைல்கள் (2,900 கிமீ) நீளத்திற்கு நீண்டுசெல்கிறது.இந்த பிரமபுத்திரா நதி திபெத்திய பீடபூமியில் அதன் மூலமான புனித கைலாஷ் மலைக்கு அருகிலுள்ள செமாயுங்டங் பனிப்பாறைகளிலிருந்து தொடங்குகிறது. கங்கை, மீகாங், யாங்சே உள்ளிட்ட ஆசியாவின் மிகப்பெரிய ஆறுகளின் பிறப்பிடமாக திபெத் உள்ளது. திபெத் மற்றும் கிங்காய் பகுதி  நதிகளிலிருந்து வெளியேறும் 90 சதவீதமான நீரானது சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான் ஆகிய  நாடுகளுக்கு செல்கிறது.

இவை உணவு உற்பத்திக்கும், நன்னீர் பயன்பாட்டிற்கும், ஆற்றல் விநியோகத்திற்கும், மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. திபெத் கிங்காய் பகுதிகள் ஆசியாவின் முக்கிய நன்னீர் களஞ்சியம். அதே நேரத்தில் மிகப்பெரும் அளவு மழை உற்பத்தியாளராகவும் விளங்குகிறது. இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஆசியாவின் கிழக்குப் பகுதி முழுவதும் உள்ள நீர் பாதுகாப்பு திபெத்தின் ஆறுகளையே சார்ந்து உள்ளது.

உலகில் உள்ள அரிசி உற்பத்தியில் சரிபாதி இந்தியா மற்றும் சீனாவால் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்படுகிறது. அதே நேரத்தில் மியான்மர், பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், மற்றும் இந்தோனேசியாவிலும் அரிசி பிரதான உணவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 2 பில்லியன் அதிகரிக்கும். தற்போது 7.7. பில்லியனிலிருந்து 2050 இல்  9.7. பில்லியனாக இருக்கும். அரிசி உலகின் குறிப்பாக ஆசியாவின் மிகவும் பரவலாக நுகரப்படும் தானியமாக இருப்பதால் 2050 ஆம் ஆண்டு அரிசி அதிகமாக தேவைப்படும். அரிசி உற்பத்திக்கு நீர் அதிகமாக தேவைப்படும். இதற்கு திபெத்தின் நீர் ஆதாரம் மிகவும் முக்கிய தேவை.

திபெத்தின் பரந்த பணி வளங்கள் ஆர்டிக், அண்டார்டிகாவிற்கு அடுத்து வெளியே உள்ள மூன்றாம் துருவ பகுதி ஆகும்.திபெத் சில நேரங்களில் மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுகிறது,ஏனெனில் அதன் பனி வயல்களில் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு வெளியே மிகப்பெரிய நன்னீர் இருப்பு உள்ளது.

 

2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் திபெத்தின் ஏரிகள் பற்றி விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக திபெத்திய பீடபூமியை மையமாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கை அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டில் பீடபூமியில் மொத்தம் 4,385 ஏரிகள் இருந்தது. இவை 0.1 சதுர கிலோமீட்டரை விட பெரியதாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளத.அவற்றில் 4.2 சதவீதம் 10 முதல் 50 சதுர கிலோமீட்ட ருக்கும் இடைப்பட்ட இடங்களில் அமைந்துள்ளது.அவற்றில் 2.9 சதவீதம் ஏரிகள் 50 சதுர கிலோமீட்டரை விட பெரியதாக இருக்கிறது. இந்த ஏரிகள் கூட்டாக 37,471 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக் கியது.இதுவடஅமெரிக்காவில்உள்ளஐந்துபெரியஏரிகளில்நான்காவதுபெரியஏரியாக உள்ள எரி ஏரியை விட பெரியது. 2023 ஆம் ஆண்டு களில் பீடபூமியின் 53,267 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய 6,159 க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர்.இது இது அமெரிக்காவில் அமைந்துள்ள மிச்சிகன் நன்னீர் ஏரியைப் போன்ற பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது.

திபெத்திய நதிகள் சீனாவின் பிரதேசத்துக்குள் இருப்பதை ஏகாதிபத்திய சக்திகள் விரும்பவில்லை இது சீனா தனது பிராந்திய மற்றும் சர்வதேச செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் என்று அச்சப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல அதிக நதிகள் மலைப்பிரதேசங்களில் இருந்து கீழ்நோக்கி பாய்கிற பொழுது நீர் மின்சக்தியை சீனாவால் அதிகமாக உற்பத்தி செய்ய முடிகிறது. இதன் மூலம் நீர் மின்சக்தியில் உலகில் முதன்மையான இடத்தை சீனா நிலை நிறுத்திக்கொள்கிறது. சீனாவை பொறுத்த வரை நீர் மின்சக்தி கொள்கை அதன் தொழில் துறைக்கு மிக மிக அவசியமானது என்பதால் அதன் மீது கவனம் செலுத்துகிறது.

திபெத்து சீனாவின் தேசிய பாதுகாப்பு மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது என்பதையும் கடந்து தெற்காசியாவிற்கான வர்த்தக பாவிகளை உருவாக்குவதற்கு திபெத் முக்கிய பங்காற்றுகிறது. belt and road போன்ற மிகப்பெரும் கட்டமைப்புகளின் கீழ் திபத்தின் பொருளாதாரம் சீனாவின் பொருளாதாரமும் உயர்கின்றது. இதனால் இதனால் ஏகாதிபத்திய சக்திகள் அச்சப்படுகின்றனர்.

திபெத் மற்றும் கிங்காய் மாகாணங்களின் வளங்களை கணக்கில் கொண்டு தான் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் இவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பது போல், திபெத் பகுதிகள் கிங்காய் பகுதிகளுக்கு கீழே உள்ள கனிம வளங்களை  கொள்ளையடிக்கவும், திபெத்தின் மேலே உள்ள நீர் வளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பலநாடுகளை நீருக்கு தடை விதித்து கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதுகின்றனர். இவ்வளவு இயற்கை வளங்களை அரிய வகைத் தாதுப் பொருட்களை சீனா கொண்டிருப்பதன் மூலம் அது சர்வதேசச் சந்தைகளிலும் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் மிகப்பெரும் பலத்தை அடையும்.

அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வானியல் போன்ற துறைகளிலும் சீனா வியக்கத் தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதை இந்த ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் மேலாதிக்க கொள்கைக்கு பெரும் அச்சுறுத்தல் என்று கருதுகிறார்கள். எனவே தான் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தை சீனாவில் இருந்து துண்டாட ஏகாதிபத்திய சக்திகள் கடும் முயற்சியை மேற்கொள்கின்றனர்.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

44 திபெத்:உழவும் தொழிலும் உயர்ந்த விதம்

  அ.பாக்கியம் உலகின் கூரை என்று அழைக்கப்பட்ட திபெத்தில் மக்களை அடிமை நுகத்தடியில் அழுத்தி வைத்திருந்தார்கள். இன்றோ திபெத் மக்களை சீன கம்யூ...