அ.பாக்கியம்
திபெத்திய தலாய்லாமா பௌத்த மத துறவி என்பதை
உலகமே அறியும். ஆனாலும் அவரது வரலாறு அவரின் துறவித்தன்மையை மீறிய முறையில்
அமைந்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனித வேட்டைகளுக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக துணை நிற்கிறார் என்பதை முந்தைய பகுதிகளில்
பார்த்தோம். அதற்கு மேலாக அவரைப் பற்றிய மற்றொரு வரலாற்று பதிவு அதிர்ச்சி
தரக்கூடியது. உலகமே வெறுக்கும் ஹிட்லரின் நாஜிக்களுடன் அவர் நண்பராக இருந்தார்.
இது அவரின் துறவித்தன்மையை அடியோடு கேள்விக்கு உள்ளாகிறது.
அவர்களோடு இவர் நண்பர்களாக இருந்த காலத்தில்
அந்த நண்பர்கள் நாஜிகள் என்று அறியாமல் கூட இருந்திருக்கலாம். அதே நேரத்தில்
இவர்கள் நாஜிகள் என்று பிற்காலத்தில் அறிந்த பிறகும் கூட அந்த நட்பை துண்டிக்காதது
மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கவும்,
சீனாவுக்கு எதிராக பயன்படுத்தவும், நாஜிகளைப்
பற்றிய பெருமிதம் கொள்ளக்கூடிய முறையிலும் நடந்து கொண்டதுதான் தலாய்லாமா என்ற
துறவியை ஏகாதிபத்தியத்தின் அரசியல் துறவியாக நிலை நிறுத்துகிறது. தலாய்லாமாவுடன்
நண்பர்களாக இருந்த மூன்று பேர்களைப் பற்றி இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
நாஜிக்களும் ஆரிய இன ஆய்வும்
ஜெர்மனியில் நாஜி கட்சியின் முன்னணி
தலைவரும் லட்சக்கணக்கான மக்களை கொத்துக்கொத்தாக படுகொலை செய்த ஹோலோகாஸ்ட் என்று
அறியப்படுகிற கொலைக்களத்தை உருவாக்கியவராக இருந்தவர்,
ஹிட்லருக்கு நெருக்கமான ஹென்ரிச் ஹிம்லர் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திபெத்திற்கு 5 பேர் கொண்ட ஒரு குழுவை
அனுப்பி வைத்தார். இந்த குழுவின் பணி ஆரிய இனத்தின் தோற்றத்தை கண்டுபிடிக்க
வேண்டும் என்பதுதான். இந்த குழுவினர் இந்தியா வழியாக திபெத்தை சென்றடைந்தனர்.
இவர்கள் ஆரிய இனத்தின் தோற்றத்தின் மூலத்தை கண்டறியும் பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆரிய நோர்டிக் இன மக்கள் பழங்காலத்தில்
வடக்கிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், ஆரியர்கள்
உள்ளூர் மக்களுடன் கலந்து தூய்மை கெட்டு விட்டதாகவும், இதன்
மூலம் ஆரியர்கள் இனரீதியான உயர்ந்தவர்கள் என்ற பண்பை இழந்து விட்டதாகவும் அடால்ஃப்
ஹிட்லர் முழுமையாக நம்பினார். இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிய மக்கள் தங்களது
இனக்கலப்பால் தூய்மை இழந்தவர்கள் என்று ஹிட்லர் கருதினார். எனவே, ஹிட்லர் தனது பேச்சுக்கள், எழுத்துக்கள், விவாதங்களின் மூலமாக, இந்திய மக்கள் மீதும்
இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் மீதும் வெறுப்பை உமிழ்ந்தார்.
ஹிட்லர் இந்திய சுதந்திரப் போராட்டத்தை இனக்கலப்பு மனிதர்கள் நடத்தனார்கள் என்ற
காரணத்தினால் வெறுத்தார். அதேபோன்றுதான் சங் பரிவாரத்தினர் அவர்களின் குருநாதர்
ஹிட்லர் வழியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வெறுத்தனர்.
வரலாறாக மாற்றப்படும்
கட்டுக்கதைகள்
அதே நேரத்தில் ஹிட்லரின் எஸ் எஸ் படையின்
தளபதியும், காவல்துறை தலைவருமான ஹென்ரிச் ஹிம்லர்
அட்லாண்டிக் பெருங்கடலில் இங்கிலாந்திற்கும் போர்ச்சுகல் நாட்டிற்கும் இடையில்
அமைந்திருந்ததாக நம்பப்படும் ஒரு தீவில் (புராணத் தீவு) தூய்மையான ஆரியர்கள்
வாழ்ந்தனர் என நம்பப்படுகிறது. அந்த தீவை தெய்வீக இடி தாக்கியதில் மூழ்கியதாவும்.
பெரும் இயற்கை சீற்றத்தால் வெள்ளம் ஏற்பட்ட பொழுது இந்த ஆரிய இனம் தப்பி பிழைத்து
இமயமலை பகுதிக்கு அதாவது திபெத்திற்கு குடி பெயர்ந்திருக்கலாம் என்றும் நம்பினார்.
இவை அனைத்தும் புராணக் கதைகள் தான். ஆரிய புராணத்தில் நம்பிக்கை கொண்ட ஹிட்லரும்,
அவரின் தளபதி ஹிம்லரும் இந்தப் புராணக் கதைகளை தங்களின் இனவெறி
அரசியலுக்காக பயன்படுத்தினார்கள்.
இன வெறியின் பெயரால் அரசியல்
நடத்தக்கூடியவர்கள் அனைவரும் வரலாற்றுப் பொய்களை கட்டமைப்பது அவர்களின் சுயத்
தேவையாகும். எனவே புராணங்களையும், கட்டுக்கதைகளையும்
வரலாறாக மாற்றுவதற்கான முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டார்கள். இன்று
இந்தியாவில் சங் பரிவாரத்தினர் இதை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு செய்வதற்கு ஹென்றிச் ஹிம்லர்
நாஜிகளின் எஸ் எஸ் படைப்பிரிவுக்குள் மூதாதையர் பாரம்பரிய பணியகம் என்ற ஒரு பிரிவை
உருவாக்கினார். அந்த பிரிவு ஆரிய இனம் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க ஆய்வுகளை
மேற்கொண்டது. இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக தான் ஐந்து ஜெர்மனியர்களை திபெத்திற்கு
அனுப்பி வைத்தார். இந்தக் குழுவினர் முதலில் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
இந்தியாவிற்கு வந்த ஆரியர்களை இந்து மதத்தின் கலப்பால் பலவீனப்படுத்தியது போல்
திபெத்திற்கு வந்த ஆரியர்களையும் திபெத்திய மதம் பலவீனப்படுத்தியது என்று
நம்பினார்கள். எனவே தூய்மையான ஆரிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளில்
ஈடுபட்டார்கள். இதை திபெத்திய மக்கள் அறிந்து கொள்ளவில்லை. விலங்கியல் மற்றும்
மானிடவியல் ஆய்வுகள் என்ற போர்வையில் தங்களின் இனத்தூய்மைக்கான ஆய்வுகளை
மேற்கொண்டார்கள்.
கொடூர கொலைகாரன் புருனோ
மேற்கண்ட 5
பேர்களில் குறிப்பிடத்தக்கவர் புருனோ பெகர் என்பவர். மானிடவியல் ஆய்வாளராக இருந்த
இவர் ஹிட்லரின் எஸ் எஸ் படை அதிகாரியாக இருந்தார். 1938-39
ஆம் ஆண்டுகளில் திபெத்தில் இருந்த புருனோ பெகர் இக்காலத்தில் 376 திபெத்தியர்களின் மண்டை ஓடுகளையும், 17 பேரின்
தலைகள், முகங்கள், கைகள், மற்றும் காதுகளின் வார்ப்புகளை உருவாக்கி முடித்தார். இரண்டாயிரத்துக்கும்
மேற்பட்ட புகைப்படங்களை தயார் செய்தார். 350 பேரின் விரல்,
கை ரேகைகளை சேகரித்தார். இத்துடன் கூடவே திபெத்தில் 2000 க்கும் மேற்பட்ட இனவியல் கலைப் பொருட்களை சேகரித்துக் கொண்டார். 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தீவிரமடைந்ததால் மேற்கண்ட 5 பேர்களும் கல்கத்தாவில் இருந்து திரும்புவதற்கான ஏற்பாடுகளை ஹென்றிச்
ஹிம்லர் செய்தார். அது மட்டுமல்ல இந்த ஐந்து பேர்களும் மூனிச் வந்து சேர்ந்த
பொழுது அவர்களை வரவேற்க அந்தப் படை தளபதி அங்கு வந்தார்.
திபெத் பண்டைய ஆரிய மூதாதையர்களின்
பிறப்பிடமாக இருக்கலாம் என்றும், அங்கிருந்துதான்
ஜெர்மனியர்கள் வந்திருக்கிறார்கள் என்ற கருத்தை புருனோ பெகர் நிரூபிக்க முயற்சி
செய்தார். இவருடைய இந்த முயற்சிக்கு எஸ்.எஸ். படையில் அமைக்கப்பட்ட மூதாதையர்
பாரம்பரிய பணியகமும் முழு ஆர்வத்துடன் ஒத்துழைத்தது. எனவே திபெத்தில் சேகரித்து
வந்த மண்டை ஓடுகள் எலும்புகள் அனைத்தையும் ஒப்பீடு செய்வதற்காக மிகக் கொடூரமான
அடுத்த செயலில் இந்த விஞ்ஞானி ஈடுபட்டார். யூத இனத்தை சேர்ந்த 89 ஆண் பெண் யூதர்களையும், 26 சோவியத் நாட்டைச்
சேர்ந்த போர் கைதிகளையும் தேர்வு செய்து பிரான்சில் உள்ள நட்ஸ்வைலர்-ஸ்ட்ரூதோஃப் (Natzweiler-Struthof)
என்ற ஹோட்டல் முகாமுக்கு கொண்டு சென்றனர். இந்த 115 பெரும் புருனோ பெகர் தலைமையில் விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டு, அவர்களின் சதைகளை உடலிலிருந்து நீக்கினார்கள். அவர்களின் எலும்பு கூடுகளை
மட்டும் எடுத்து புருனோ பெகரின் இனத்தூய்மை ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படைத்தனர்.
இது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள்
ஹிட்லர் காலத்தில் நடந்திருந்தாலும் அந்த சம்பவங்களைப் போன்று இதுவும் கொடூரமான
சம்பவம் ஆகும். இதற்காக நியூரம்பர்க் விசாரணை நீண்ட காலம் இழுத்தடித்து 1976 ஆம் ஆண்டு 86 கொலைகள் செய்ததாக குற்றச்சாட்டு
நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. 86 கொலைக்கு மரண
தண்டனையோ, ஆயுள் தண்டனையோ அல்ல. சொற்பமான மூன்று ஆண்டு
சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தப் பின்னணியை முன்வைக்க காரணம் இப்படிப்பட்டவர்
தான் தலாய்லாமாவின் நண்பராக இருந்தார் என்பதுதான்.
கொலைகாரனுடன் தலாய்லாமா
சந்திப்பு
1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு
அறிக்கையின் படி 1983 ஆம் ஆண்டு முதல் தலாய்லாமாவை
புருனோபெகர் மூன்று முறை சந்தித்ததாக எழுதியுள்ளார். முதல் சந்திப்பு 1983 செப்டம்பர் மாதம் ஜெர்மனியில் உள்ள பேட் சோடன் ஆம் டானஸ் கலாச்சார
மையத்தின் மண்டபத்தில் நடந்தது. இஸ்லாத்திற்கும் நாத்திக சித்தாந்தங்களுக்கும்
இடையில் ஏற்படும் பதற்றத்தில் பௌத்தத்தின் சக்தி பற்றிய தலைப்பில் தலாய்லாமா
சொற்பொழிவு நிகழ்த்தினார். இதன் பிறகு இந்த சந்திப்பு நடந்ததை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது 1939 ஆம் ஆண்டு தான் லாசாவில் இருந்ததை
மிகவும் பெருமையாக தலாய்லாமாவிடம் பரிமாறிக் கொண்டதை நினைவு கூறுகிறார். 1984 ஜூலை மாதம் தொழில் அதிபர் ஃபிரைட் ஹெல்ம் ப்ரூக்னர் நடத்திய வரவேற்பு
நிகழ்வில் தலாய்லாமாவுடன் தனது இரண்டாவது சந்திப்பு நடந்ததை குறிப்பிடுகிறார்.
தனது மூன்றாவது சந்திப்பு 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம்
ஃப்ராங்ஃபர்ட் விமான நிலையத்தில் உள்ள சாட்டில் ஹோட்டலில் நடந்துள்ளது. தலாய்லாமா
டெல்லியில் இருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள ரிகோனுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது இந்த சந்திப்பு நடந்துள்ளது.
நாஜியிடம் கல்வி
தலாய்லாமாவின் மற்றொரு நாஜி நண்பர் ஹென்ரிச்
ஹரார் ஆவார். இவர் ஒரு விளையாட்டு வீரர். மலையேற்ற வீரர். தனது மலையேற்றத்தின்
மூலம் பிரபலம் அடைந்தவர். 1933 ஆம் ஆண்டு ஜெர்மனியில்
ஹிட்லர் ஆட்சியைப் பிடித்த உடன் அந்த கட்சியில் இணைந்து ஹிட்லரின் சிறப்புப்படையான
எஸ்எஸ் படையில் உறுப்பினராக சேர்ந்தார். ஹிட்லருக்கு மிகவும் நெருக்கமானவர்.
மலையேற்றத்திற்கு முன்பும் பின்பும் ஹிட்லரை சந்தித்து வாழ்த்து பெறக் கூடியவர்.
இவரது மலையேற்றத்தை ஹிட்லர் பாராட்டியது மட்டுமல்ல ஆரியதிறன் என்றென்றும்
மேன்மையின் சின்னம் என்று அந்த திறனை இனவாதபிரச்சாரமாக செய்தார். இவர் மலை
ஏற்றத்திற்காக 1939 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பொழுது
அப்போதைய பிரிட்டிஷ் அரசால் ஜெர்மன் உளவாளி என்று கைது செய்யப்பட்டு டேராடூனில்
உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
பல்வேறு பெயர்களில் உளவாளிகளை அனுப்புவது
உளவு அமைப்புகளின் நடைமுறைகளில் ஒன்றாகும். எனவே இவர் மலையேற்றத்திற்கு வந்தாரா?
உளவு பார்க்க வந்தாரா? என்பது விடை காண
முடியாத கேள்வியாகும். இவர் மிகவும் சிரமங்களுக்கிடையில் டேராடூன் சிறையில்
இருந்து தப்பித்து திபெத்திற்குச் சென்றுவிட்டார். 1944 ஆம்
ஆண்டு முதல் திபெத்தில் இருந்தார். ஒரு சில ஆண்டுகளில் திபெத்தில் அரசு பணியில்
அமர்ந்தார். அப்போது சிறுவனாக இருந்த தலாய் லாமாவிற்கு மேற்கத்திய உலகை
அறிமுகப்படுத்தும் ஆசிரியராக பணியில் நியமிக்கப்பட்டார். அவர் புவியியல், கல்வி, அறிவியல் ஆகியவற்றை தலாய்லாமாவிற்கு
போதித்தார். தலாய்லாமா மிக விரைவாக இவற்றை உள்வாங்கிக் கொண்டார் என்றும் தனது
புத்தகத்தில் எழுதி உள்ளார்.
நாஜி ஆசிரியருடன் தொடர்ந்த
நட்பு
1952 ஆம் ஆண்டு ஹென்ரிச் ஹரார்
ஆஸ்திரியாவிற்கு திரும்பிச் சென்றார். 1959 ஆம் ஆண்டு
தலாய்லாமா இந்தியாவிற்கு வந்த பிறகு ஹரார் அவரை தர்மசாலாவில் சந்தித்து பேசி
உள்ளார். அதற்கு மேலும் 1991 ஆம் ஆண்டு வாஷிங்டன் டிசியில்
தலாய்லாமா விஜயம் செய்த போது ஹென்ரிச் ஹராரும் அவரது மனைவியும் தலாய்லாமாவை
சந்தித்து பேசி உள்ளனர். 1992 ஆம் ஆண்டு தலாய்லாமா
ஆஸ்திரியாவுக்கு சென்று திபெத் பற்றிய ஹென்றிச் ஹராரின் அருங்காட்சியகத்தை திறந்து
வைத்தார். 2002 ஆம் ஆண்டு திபெத்துக்காக பிரச்சாரம்
செய்ததற்கு இந்த நாஜிக் கட்சியின் முன்னாள் அதிகாரிக்கு லைட் ஆப் ட்ரூத் பட்டம்
தலாய்லாமாவால் வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஹரார்
மரணமடைந்த பொழுது தலாய்லாமா நாஜி கட்சி நண்பனுக்கு மிகப்பெரிய அளவில் அஞ்சலியை
செலுத்தினார்.
மூன்றாவதாக குறிப்பிடத்தக்க நபர் மிகுவெல்
செரானோ மிகவும் செல்வாக்கு மிக்கவர். ஜெர்மனியின் சார்பில் சிலி நாட்டு தூதராக
இருந்தார். இவர் ஒரு ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். இவர் தான் ஹிட்லரை
கடவுள் என்ற ஸ்தானத்திற்கு உயர்த்தியவர். இதற்கு மறைபொருள் ஹிட்லரியம் என்று பெயர்
சூட்டினார். இவரின் கூற்றுப்படி அடால்ஃப் ஹிட்லர் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல,
ஒரு அவதாரம் ஹைபர்போரியன் உலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட தெய்வ
மனிதர் என்றார். நாஜி ஆட்சி என்பது நவீன புறப்பொருள் உலகத்தை எதிர்ப்பதற்காக ஒரு
ஆன்மீக சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்காக நிறுவப்பட்ட ஆட்சியாகும் என்று பேசினார்.
1978 ஆம் ஆண்டு தனது கருத்துக்களை
விளக்கும் புத்தகங்களை இவர் வெளியிட்டார். இவரும் தலாய்லாமாவுடன் தனிப்பட்ட நட்பை
நெருங்கிய முறையில் கடைபிடித்து வந்தார். 1984 ஆம் ஆண்டு 1992 ஆம் ஆண்டும் அவருடன் தனிப்பட்ட சந்திப்புகளை தலாய்லாமா நடத்தி உள்ளார்.
நாஜி பாசம்
மேற்கண்ட மூன்று நபர்களின் நட்புகளை
கவனத்தில் எடுத்தால் ஆரம்பத்திலேயே தலாய்லாமாவிற்கு அவர்கள் நாஜிகள் என்று
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு தெரிந்த பிறகும் அவர்களுடன் நட்பை
நீடித்திருப்பது என்பதுதான் தலாய்லாமாவின் நாஜி பாசத்தை வெளிப்படுத்துகிறது. புருனோபெகர்
விஷவாயு செலுத்தி மனிதர்களைக் கொன்று தண்டனை பெற்ற குற்றவாளி. ஒரு இனப்படுகொலை
ஆட்சியின் படை அதிகாரியாக இருந்து, விஞ்ஞான
நெறிமுறைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து, அடிப்படை மனித
தன்மையற்ற ஒன்றை தனது வாழ்நாளில் அரங்கேற்றியவருடன் தலாய்லாமா தொடர்பை வைத்திருக்கிறார்.
பொதுவாக
தலாய்லாமாவிற்கு நாஜிகள் மீதும், போரின் மீதும் ஈர்ப்பு
இருந்தது என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் அம்பலப்படுத்துகின்றன. திபெத்திய
பௌத்தத்தின் ஒரு பிரிவான டோர்ஜோ ஷீக்டன் பிரிவு தலாய்லாமாவின் போர் ஆர்வம்
குறித்தும், நாஜிகளின் மீது உள்ள ஈர்ப்புகளைக் குறித்தும்
விரிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச ஷீக்ட்டன் சமூகம் என்ற அமைப்பை
நடத்தி வருகிறது அந்த அமைப்பின் மூலம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொலை செய்யலாம்
அகிம்சை வீரராக தன்னை பிரபலப்படுத்திக்
கொள்ளும் தலாய்லாமா 1993 ஆம் ஆண்டு நியூயார்க்
டைம்ஸ் என்ற பத்திரிக் கைக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்த
கருத்துக்கள் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை
ராணுவம் இல்லாமல் முடிந்தவரை மக்களை கொல்வது போன்ற ஓர் போர் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது
என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள். அப்படி என்றால் போரை நீங்கள்
ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு ஆம் ஒப்பீட்டு அளவில்
மேலே கூறிய கருத்தின் படி சரியானது என்று குறிப்பிட்டார். இதிலிருந்தே போர் இந்த
அகிம்சாவதியால் வெறுக்கப்படவில்லை என்பதை அறிய முடியும்.
நீங்கள் ஓய்வு நேரங்களில் என்ன
செய்கிறீர்கள் என்ற அடுத்த கேள்விக்கு தலாய்லாமாவின் பதில்கள் ஆச்சரியம் அளிப்பதாக
இருந்துள்ளது “இரண்டாம் உலகப்போரில் படங்களுடன் கூடிய புத்தகங்களை பார்ப்பதும்,
படிப்பதும் எனக்கு பிடிக்கும் என்றார். டைம் லைஃப் தயாரித்த சில
புத்தகங்களை நான் வைத்திருக்கிறேன். மேலும் ஒரு புதிய தொகுப்பை இப்பொழுது ஆர்டர்
செய்துள்ளேன். 30க்கு மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளேன்.
வன்முறை இயந்திரங்கள், பலவற்றை நான் மிகவும்
கவர்ச்சிகரமானதாக காண்கிறேன். விமானங்கள், போர்க்கப்பல்கள்,
குறிப்பாக விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் ஜெர்மன் யூ படகுகள்,
நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றை பார்ப்பதிலும், படிப்பதிலும் விருப்பம் என “ஓய்வு நேர பணிகள்” (பக்கம் 323) தனது ஓய்வு நேர செயல்பாடுகள் என்று வெளிப்படுத்தி உள்ளார். ஒரு துறவியின்
ஓய்வு நேரமானது ஆன்மீகம், அமைதி தொடர்பான வாசிப்புகளை விட
போர் குறித்த வாசிப்பில், படங்களின் மீது ஆர்வம் உடையவராக
இருந்திருக்கிறார் என்பதை குறிப்பாக கவனிக்க வேண்டி உள்ளது.
2006 மற்றும் 2007
ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரியாவின் ஜோர்க் ஹீடருக்கு திபெத்திய முறைப்படி வெள்ளை தாவணி
(கட்டக்) என்று அழைக்க கூடிய பாராட்டு பொருளை வழங்கி தனது ஆசீர்வாதங்களை
பகிரங்கமாக தெரிவித்தார். ஹைடர் தீவிர வலதுசாரி. ஆஸ்திரிய சுதந்திர கட்சியின்
தலைவராகவும் இருந்தார். ஜெர்மனியின் கொள்கைகளை பாராட்டி பேசியதற்காக ஆஸ்திரியாவில்
புகழ்பெற்றிருந்தார். அவரது கட்சி கூட்டணி அரசாங்கத்தை ஆஸ்திரியாவில் அமைத்தது.
இது ஒரு நாஜி ஆதரவு கட்சி என்ற முறையில் ஐரோப்பிய ஒன்றியம் ஆஸ்திரியா மீது
ராஜதந்திர புறக்கணிப்பை செய்தது. ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கும் ஒரு நாஜி
ஆட்சியை தலாய்லாமா பாராட்டுகிறார். அதுவும் 2006 ஆம்
ஆண்டுகளில் இதை செய்திருக்கிறார். நாஜிகளின் நண்பர் என்ற அவரது செயல் அறிந்தே
தொடர்கிறது.
அகிம்சையை
விட அழிவுகளில் அதிக ஆர்வம்
2008 ஆம் ஆண்டு நியூரம்பர்க் நகரில் ஒரு
அரங்க கூட்டத்தில் தலாய்லாமா கலந்து கொண்டு பேசினார். இந்த நியூரம்பர்க் நகரம் 1930 ஆம் ஆண்டுகளில் நாஜிக் கட்சிகள் பெரும் பேரணிகளை நடத்திய இடம். இங்கு
கலந்து கொண்டு பேசிய பொழுது நான் குழந்தையாக இருந்தபோது நியூரம்பர்க்கை
புகைப்படங்களில் பார்த்ததை பெருமிதமாக நினைவு கூர்ந்தார். “ஜெனரல்கள் மற்றும்
ஆயுதங்கள்” மற்றும் ” ஹிட்லர், ஹெர்மன் கோரிங்” ஆகியோருடன்
நடைபெற்ற நிகழ்வுகள் “மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
அரங்கத்தில் இருந்த கூட்ட பங்கேற்பாளர்கள் இதை அதிர்ச்சி கலந்த வெட்கத்துடன்
பார்த்தனர். நியூரம்பெர்க்கின் தலைமை மேயர் உல்ரிச் மாலி இது ஒரு அதிர்ச்சியின்
தருணம் என்று அழைத்தார் (பக்கம் 330)
அவர் சிறு குழந்தையாக இருந்த பொழுது
நாஜிகளின் பேரணியின் மீது அவர் ஈர்ப்புடன் இருந்ததை அதே இடத்தில் பெருமிதமாக
குறிப்பிடக்கூடிய அளவிற்கு அவரின் நாசிசத்தின் மீதான பாசம் இருந்திருக்கிறது. இவை
அனைத்தும் ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ஸ்டெர்ன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இறுதியாக அந்த பத்திரிக்கை வெளியிட்ட கடைசி வரி இன்று வரை அந்தப் புனிதர்
நாஜிகளுடன் இருந்த இழிவான உறவுகளில் இருந்து தன்னை ஒருபோதும் விலகிக் கொள்ளவில்லை
(பக்கம் 331)
என்று எழுதி முடித்தது.
தலாய்லாமா நாஜிகள் என்று அறியாத காலத்தில்
உறவு வைத்தது என்பது வேறு. அவர்கள் நாஜிகள் என அறிந்து கொண்ட பிறகு அவர்களுடன்
நட்பை பேணுவதும், நாஜிகளை பாராட்டுவது என
தற்கால அரசியல் அடிப்படையிலிருந்து முடிவுகளை எடுக்கிறார். அமெரிக்கா ஏராளமான
நாஜிகளின் படைத்தளபதிகளை, விஞ்ஞானிகளை, மனித படுகொலை செய்த ராணுவ நிபுணர்களை தனது நாட்டிற்குள் வரவழைத்துக்
கொண்டது. எனவே அமெரிக்காவில் செயல் தலாய்லாமாவிற்கும் உடன்பாடு உடையதாக, சீன எதிர்ப்பிலிருந்து நாஜிகளின் நண்பனாக தன்னை வெளிப்படுத்திக்
கொள்ளக்கூடிய நபராக இந்தத் துறவி இருக்கிறார். இவர் ஒட்டுமொத்த திபெத்திய மக்களின்
விடுதலைக்காக தனது செயல்பாட்டை அமைத்துக் கொள்ளவில்லை என்பது புலப்படுகிறது.
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக