Pages

ஞாயிறு, மார்ச் 30, 2025

லுங்கியும் வியாசர்பாடி இன்ஸ்பெக்டரும்

 




1980 ஆம் ஆண்டுகளில் சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புயல் வேகத்தில் செயல்பட்ட காலம்.  சென்னை வியாசர்பாடி சாஸ்திரிநகர், பக்தவச்சலம் காலனி ஆகிய பகுதிகளில் வாலிபர் சங்கம் மிக வலுவாக செயல்பட்டது. தெருவாரியாக அறிவிப்பு பலகை வைத்து அன்றாட செய்திகளை, அரசியல் பிரச்சனைகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை எழுதிப் போட்டு சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலம்.  வாலிபர் சங்க அறிவிப்பு பலகையில் எழுதி உள்ளதை நின்று படித்துச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருந்தது.   சாஸ்திரிநகர் அண்ணா தெரு பிரதான தெருவாகவும், அதன் இரு புறத்திலும் மற்ற தெருக்கள் வரிசையாக பிரிந்து செல்லும். ஒவ்வொரு தெருமுனையிலும் அறிவிப்பு பலகை இருக்கும். இதேபோன்று பக்தவச்சலம் காலனியிலும் அமைந்திருக்கும்.  ஒவ்வொரு தெருமுனையிலும் மாலை நேரங்களில் இளைஞர்கள் அந்த அறிவிப்பு பலகை இருக்கும் இடத்தில் கூடுவார்கள். அப்பொழுது லுங்கி (கைலி) கட்டுவதுதான் பேஷன். கேரளாவில் இஎம்எஸ் உள்ளிட்ட பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் லுங்கி கட்டிக் கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம் அந்த இளைஞர்களுக்கு தெரியாது. அவர்கள்  ஓய்வு நேரத்தில் மட்டும் லுங்கி கட்ட மாட்டார்கள். விழாக்களுக்கு செல்வது, சினிமாவுக்கு போவது, உள்ளூரில் நடைபெறும் எந்த விழாவாக இருந்தாலும் லுங்கி கட்டிக் கொண்டுதான் செல்வார்கள். இதற்காகவே விதவிதமான லுங்கிகள் வாங்கி வைத்திருப்பார்கள். அது ஒரு கலாச்சாரமாகவே இருந்தது.

அந்த சூழ்நிலையில்தான் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு புதிதாக ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார். போலீஸ் அதிகாரி என்றால் சிவ சிவா என்றா இருப்பார். அப்பாவி மக்களை மிரட்டுவது, அயோக்கியர்களுடன் கைகோர்த்து செயல்படுவது என அத்தனை கல்யாண குணங்களும் அந்த இன்ஸ்பெக்டருக்கு உண்டு. ஊரை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் இரவில் மப்ட்டியில் நகர்வலம் போல் ஊர்-வலம் வருவார். கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டை முகத்தில் அடித்து போவோர் வருவோரை எல்லாம் டார்ச்சர் செய்வார்.

அவர் ஜீப்பில் சாஸ்திரி நகர் பக்தவச்சலம் காலனிக்கு வந்தால் மன்னருக்கு கட்டியம் கூறுவதுபோல் ஜீப்புக்கு முன்னால் சில போலீஸ்காரர்கள் ஓட்டமும் நடையுமாகச் சென்று கையில் இருக்கும் இரும்புபூண் போட்ட லட்டியால் ரோட்டில் தட்டி சத்தம் எழுப்புவார்கள். மின்கம்பத்தில் டமால் டமால் என்று ஓங்கி அடிப்பார்கள். டெர்ரர் இன்ஸ்பெக்டரை பார்த்தாலே எல்லோரும் பயப்பட வேண்டுமாம். தெருக்களில் நிற்கக்கூடிய பலரும் இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன் பவ்யமாக செல்வதும், சிலர் ‘எதையோ’ பார்த்து ஒதுங்குவது போல் ஒதுங்குவதும், துஷ்டனைக் கண்டால் தூர விலகுவது நல்லதுதானே என சிலர் விலகிச் செல்வதும் அன்றாட காட்சிகளாக நடந்து கொண்டிருந்தது. எவனாவது லுங்கி கட்டி இருந்தால் அவனை உடனே தட்டி தூக்குவது என்ற முறையில் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். லுங்கி கட்டிக் கொண்டு கோயிலுக்கு வரக்கூடாது என்ற அறிவிப்பு இருப்பது போல், லுங்கி கட்டிக் கொண்டு ஊருக்குள் தெருக்களில் நடக்க கூடாது என்று அவர் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தார். என்னையும் சேர்த்து நாங்கள் அனைவரும் லுங்கி தான் கட்டிக் கொண்டிருப்போம். காரணம் எங்களிடம் லுங்கி ஆடை தான் இருந்தது. சொல்லப்போனால் இன்று வரை எனக்கு வேட்டிக் கட்டத் தெரியாது. ஓட்டிக்கோ, கட்டிக்கோ வேட்டியெல்லாம் அப்போது கிடையாது.

இன்ஸ்பெக்டரை பார்த்தவுடன் வாலிபர் சங்கத் தோழர்கள் யாரும் நடையைக் கட்ட மாட்டார்கள். பம்மவும் மாட்டார்கள். இதுவே அந்த இன்ஸ்பெக்டருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஊர் மக்களிடம் உண்டாக்கி இருந்த பய பிம்பத்தை இந்த இளவட்டங்கள் ‘உடை’த்து விடுகிறார்களே என்று அவர் ஆத்திரப்பட்டார். வாலிபர் சங்கத் தோழர்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் ஜீப்பை மோதுவது போல் கொண்டு வந்து நிறுத்துவார். அப்படியாவது சிதறி ஓடுவார்களா என்று பார்ப்பார். ஆனால், யாரும் அவரை சட்டை செய்யமாட்டார்கள். தேவை இல்லாமல் ஆக்ஸிலேட்டரை ரைஸ் பண்ணுவார். வாயுக்கோளாறு உள்ளவனைப் போல ஜீப்பும் டர்ரு.. புர்ரு என்று உறுமிக் கொண்டு இருக்கும்.  லுங்கி கட்டக் கூடாது என்ற அந்த சங்கியின் டார்ச்சர் தாங்க முடியாத வாலிபர் சங்கத் தோழர்கள் இதை கண்டித்து கையெழுத்து போஸ்டர் ஒட்டினார்கள். லுங்கி கட்டியவனை விடு; குற்றவாளியைப் பிடி என்று இன்ஸ்பெக்டரை வறுத்தெடுத்தார்கள்.

வாலிபர் சங்கத்தின் சார்பில் சாஸ்திரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள்.  அப்போது மாநிலத் தலைவராக இருந்த தோழர் அகத்தியலிங்கம் பங்கேற்றுப் பேசினார். லுங்கி என்பது சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்களின் உடை சில நாடுகளில் அது தேசிய உடையாகவும் உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் லுங்கி என்பது அவர்களின் ஆடை கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத பகுதி. இந்தப் பகுதி மக்களும் அப்படித்தான். நாங்கள் லுங்கி கட்டக் கூடாது என்று சொல்வதற்கு இவர் யார்? இன்ஸ்பெக்டர் வேண்டுமானால் லுங்கி கட்டிக் கொள்ளட்டும் என்று அகத்தியலிங்கம் தனக்கே உரிய பாணியில் சங்கி இன்ஸ்பெக்டரை வார்த்தைகளால் வெளுத்துக் கட்டினார். அதுவரை லுங்கி கட்டியவர்களை பிடித்து கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரை கூட்டத்தில் லுங்கியின் மகிமை பற்றி பேசி கிழி கிழி என்று கிழித்ததில் இன்ஸ்பெக்டர் தனது வாய்க்கு தையல் போட்டுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை காப்பதும், குற்றங்களை தடுப்பதும் ஒரு காவல்துறை அதிகாரியின் வேலைலுங்கி கட்டியதை குற்றமாகப் பார்த்த அந்த இன்ஸ்பெக்டர் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

லுங்கி தெற்காசிய நாடுகளில் பரவலாக பயன்படுத்தக்கூடிய ஒரு ஆடை கலாச்சாரமாக. ஆண்களும் பெண்களும் லுங்கி அணிந்து கொள்வார்கள். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் லுங்கி அணிவது அவர்களது ஆடை கலாச்சாரமாகும். சீனாவில் இருந்து பைஜாமா அறிமுகமானது போல்  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து லுங்கியும் அறிமுகமானது.

லுங்கி இந்துக்களுக்கான ஆடை அல்ல என்று தமிழகத்தில் இருந்த பெரியவாள் சொன்னது நினைவுக்கு வருகிறது. இதற்கான அர்த்தம் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன். அன்றைய ஜாவா தீவுகளில்  (இந்தோனேசியா மலேசியா)   நடைபெற்ற போராட்டங்களை அடக்குவதற்கு காலனி நாடுகளில் இருந்து அழைத்துச் சென்ற படைகளிடம்  பிரிட்டிஷார் லுங்கி கட்டியவர்களை சுடுங்கள் என்று அடையாளப்படுத்தினார்கள் காரணம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற துவேஷத்தை உருவாக்குவதற்காக. லுங்கியில் இப்படிப்பட்ட அரசியலும் இருக்கிறது. நான் பெரும் தலைவர்கள் கூட்டங்களில் லுங்கி அணிந்து அமர்ந்திருக்கும் படத்தையும் பார்த்திருக்கிறேன். நேரிலும் பார்த்து இருக்கிறேன்.

வேஷ்டி சாதாரண மக்களுக்கு செலவு நிறைந்தது. பலருக்கு அதை கட்டவும் கடினமானது. அவ்வாறு கட்ட தெரியாதவர்கள் வேஷ்டி கட்டி பொது இடத்தில் உட்காரும் பொழுது அது விலகிக் கொள்ளும் . எதிரில் இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனை. சில நேரங்களில் மானம் காக்கவும் லுங்கி பயன்பட்டு இருக்கிறது. இன்று பல மாற்று உடைகள் வந்துவிட்டதால் வங்கிக்கான மவுசும் குறைந்து வருகிறது.லுங்கியை கேவலமாகவும் யாராவது பார்த்தால், அது அவர்களுடைய பார்வைக் கோளாறு.

அ.பாக்கியம்

2. நேர்பட பேசு எதிர்மறை எதிர்கொள்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

14. மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் என்ன?

சீன வரலாற்றில் மாற்றங்களின் மகுடமாக 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த புதிய ஜனநாயக புரட்சி அமைந்தது. புரட்சி, வெறும் வ...