மார்க்சிய தத்துவம் அறிவியலை
அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம். எந்த ஒரு மத சித்தாந்தங்களையும் மார்க்சியம் அறிவியல் பூர்வமானது என்று
ஏற்றுக் கொள்வது இல்லை. மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட்
கட்சி சீனாவில் புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி புரட்சிகரமான சமூக அமைப்பை
நிறுவியது. மார்க்சிய சித்தாந்தத்திற்கு எதிர்மறையாக இருக்கக்கூடிய மதத்தை
ஏற்றுக்கொண்டு எப்படி ஒரு சோஷலிச சமூகத்தை உருவாக்க முடியும்
என்று பலரும் கேள்விகளை எழுப்பினார்கள். மறுபுறத்தில் சீனப் புரட்சி வெற்றி பெறும்
தருவாயில் அமெரிக்கா இரண்டாவது சிகப்பு பயம் (Red scare) என்ற பிரச்சாரத்தை உலகம்
முழுவதும் செய்தது. சீனத்திலிருந்து ஆளும் வர்க்கமும் இந்த பிரச்சாரத்தை வலுவாக
செய்தார்கள். கம்யூனிஸ்டுகள் ஆட்சியை பிடித்து விட்டால்
மதத்தை அழித்து விடுவார்கள், வழிபாட்டு நிலையங்களை இடித்து
விடுவார்கள் என்று பூதாகரமான பிரச்சாரத்தை புரட்சிக்கு எதிராக முன்னெடுத்தார்கள்.
பொறுத்திருந்து
பாருங்கள்
சீன நாட்டிலிருந்து பல மதத்
தலைவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சீனாவின் புகழ்பெற்ற மதத்துறவி மாஸ்டர்
யுவான் யிங் வெளிநாடு செல்வதற்கான தயார் நிலையில் இருந்தார்.
அதே நேரத்தில் தேசப்பற்றும் அவரை ஆட்கொண்டது. எனவே நான் என்
நாட்டை நேசிக்கிறேன். புரட்சி முடியட்டும். கம்யூனிஸ்டுகள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு
முடிவெடுக்கிறேன் என்று தங்கிவிட்டார். இப்படி பலரும் முடிவு
எடுத்தார்கள். புரட்சியில் ஈடுபட்டிருந்த மாசே துங்
தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி ‘‘பொறுத்திருந்து பாருங்கள்; எங்களுடைய
நிலைப்பாட்டை புரிந்து கொள்வீர்கள்; பிறகு ஆதரிப்பீர்கள்’’ என்று மக்களிடம் புரிய
வைத்தார்கள்.
1949ஆம் ஆண்டு புரட்சி
முடிந்த பிறகு மேற்கண்ட வாக்குறுதியின் அடிப்படையில் மார்க்சிய சித்தாந்தத்தின்
வழிகாட்டுதல் மூலமாகவும் சீனாவில் மதத்தின் மீதான அணுகுமுறை இருந்தது. நிலைமைகள்
அவ்வளவு எளிதாக இல்லை. ஒருபுறத்தில் புரட்சிக்கு எதிரானவர்களின் தாக்குதல்
கணக்கெடுத்து சரியான முறையில் மத நம்பிக்கையாளர்களை அணுக வேண்டிய கட்டாயம்.
பொதுவாக புதிய சீனா
நிறுவப்பட்ட பிறகும் கலாச்சார புரட்சிவரை 17 ஆண்டுகளாக சில இடர்பாடுகள் இருந்த போதும் மதம் தொடர்பாக கட்சி மத்திய
குழு எடுத்த சரியான வழிகாட்டுதல் அடிப்படையில் சிறந்த முடிவுகளை அமலாக்கி வெற்றி
கண்டது. தேவாலயங்களுக்குள் ஏகாதிபத்திய சக்திகளை ஒழித்து மூன்று சுய இயக்கம் என்ற
அடிப்படையில் தேவாலயங்களை இயங்க வைத்தது. கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட்
தேவாலயங்கள் ஏகாதிபத்தியத்தின் தளங்களாக இருப்பதை மாற்றி
சுதந்திர தன்னாட்சி நிறுவனங்களாக மாற்றியது. மதத்தின் போர்வையில் ஒளிந்திருக்கும்
பிற்போக்குவாதிகள், கெட்டகூறுகளை கொண்ட பகுதியை
அம்பலப்படுத்தி ஒழித்துக் கட்டியது. பௌத்தம், தாவோயிசம், முஸ்லிம் மத நம்பிக்கையாளர்களை பிற்போக்கு
வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு எடுத்தது. மதத் தலைவர்களை
சோசலிசத்திற்கு ஆதரவாக கொண்டு வருவது, அவர்களுடன்
ஒன்றுபடுவது, கல்வியை கற்பிப்பது போன்றவை வெற்றிகரமாக
செயல்படுத்தப்பட்டது. மதங்களின் சர்வதேச நட்பை தேடுவது,
அவற்றை ஆதரித்த செயல்களும் நல்ல பலனை கொடுத்தது. புரட்சிக்குப் பிந்திய முதல் 17 ஆண்டுகள் கடந்த பிறகு 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற
கலாச்சார புரட்சி மிகப் பெரும் பாதிப்புகளை உருவாக்கியது. 1957 ஆம் ஆண்டு ஆரம்பித்த இடதுசாரி தவறுகள் படிப்படியாக வளர்ந்து 1966 இல் கலாச்சாரப் புரட்சியாக வெடித்தது.
அதிதீவிரஇடதுசாரி
தவறுகளின்
விளைவுகள்
இதற்கு முன்பு சீனாவில் மதம் தொடர்பான பணிகளில்
ஈடுபடுகிற பொழுது ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைத்து முன்னேறினார்கள். குறிப்பாக
1952 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. கடந்த சில
ஆண்டுகளில் மத சிறுபான்மையினர் மத்தியில் பணி செய்யக்கூடிய கட்சியின் தோழர்கள் மதம் தொடர்பான தன்மையை புரிந்து கொள்ள தவறி இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை
சுட்டிக்காட்டியது. மதங்களுக்கு நீண்டகால வரலாறு உண்டு. அதே
போன்று இனம் தொடர்பாகவும் அப்படி ஒரு வரலாறு இருக்கிறது.
இவற்றை ஆழமாக புரிந்து கொள்ளாமல் உடனடியாக அந்த மக்கள்,
அதாவது மத சிறுபான்மையினர் தங்கள் மதத்தையும் இனத்தையும்
கைவிட வேண்டும் என்ற முறைகளில் வலியுறுத்த ஆரம்பித்தனர். இது
எதிர்வினைகளை உருவாக்கி உள்ளது என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதுகுறித்து 1957 ஆம் ஆண்டு தேசிய மக்கள் காங்கிரஸில் பேசிய
அன்றைய பிரதமர் சௌ என் லாய் மதம் என்பது நீண்ட காலம் நீடிக்கக் கூடியது. நாம்
இப்பொழுது கவலைப்பட வேண்டியது மதம் தொடர்ந்து இருக்குமா இருக்காதா என்பது பற்றி
அல்ல. அதற்கு மாறாக, நமது மத இன
சிறுபான்மை மக்கள் வாழ்க்கையை செழிப்பாக மாற்றுவதற்கு என்ன
செய்ய வேண்டும் என்றுதான் கவலைப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நடைமுறையில் இருந்து மதம் தொடர்பான விஷயங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி பாடமாக எடுத்துக் கொண்டது.
இடதுசாரி அதிதீவிர வாதங்களை முன்வைத்தவர்களில்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் சிலரும் அடங்குவார்கள். இந்த
கலாச்சார புரட்சி நால்வர் கும்பல் என்பவர்களால் நடத்தப்பட்டது. துணை பிரதமராக இருந்த லின் பியாவோ ஆதரவுடன், ஜியாங்
கிங் (மாசே தூங்கின் மனைவி) ஜாங் சுன்கி
யாவோ, யாவ் வேன் யூ வான், வாங்
ஹாங்வென் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கையில் இருக்கக்கூடிய வார்த்தைகளை அப்படியே சமூகத்திற்கு நெகிழ்வுத்தன்மையற்ற
முறையில் பொருத்த ஆரம்பித்தார்கள். கம்யூனிஸ்ட் புரட்சி என்பது பாரம்பரிய
உறவுகளில் இருந்து மிகவும் தீவிரமான முறிவு ஏற்படுத்தக் கூடியது. அதன் வளர்ச்சி
பாரம்பரிய கருத்துக்களில் இருந்து மிகவும் தீவிரமான முறையில் துண்டித்துக்
கொள்ளக்கூடியது என்று இருப்பதை அதிதீவிரத்துடன் தங்களுடைய
நிலைபாட்டிற்கு ஆதரவாக எடுத்துக் கொண்டனர். இதற்குப் பின்னால் சில நோக்கங்கள்
இருந்தது என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்தது.
கலாச்சாரப் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் அனைத்து மதங்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பிரச்சாரங்களை தீவிரப்படுத்தினர். இதுவே கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு இயக்கமாக மாற்றப்பட்டது. கலாச்சாரப்
புரட்சியின் தலைவர்கள் மார்க்சியம்,லெனினியம் மற்றும்
மாசேதுங்கின் சிந்தனைகள் மதம் தொடர்பாக வெளிப்படுத்திய அறிவியல் கோட்பாட்டை
வேண்டுமென்றே மறைத்தார்கள். சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட நாளிலிருந்து மதம்
குறித்து கட்சி எடுத்த சரியான கொள்கைகளை நிராகரித்தார்கள். 1965ஆம் ஆண்டுகள்வரை கட்சியும், சீன மக்கள் குடியரசும் மதம் தொடர்பாக
செய்த மிகச் சிறந்த பணிகளை கைவிட்டார்கள். மதநம்பிக்கை உள்ள மக்கள் சாதாரண
மதநடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவை சர்வாதிகாரத்திற்கான இலக்குகள் என்று கூறி தடை செய்தனர்.
மதகுருமார்கள் மீதும் மதப் பிரமுகர்கள் மீதும் அவதூறுகளை
அள்ளி வீசி அவர்களை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கினார்கள். மதச்
சிறுபான்மையினர் மற்றும் இனக்குழுக்கள் கடைபிடிக்கக் கூடிய சில
பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் மூட நம்பிக்கைகள் என்று தவறாக புரிந்து கொண்டு
அவற்றை நடத்தக் கூடாது என்று தடை செய்தார்கள். மதத்துக்கு எதிராக வன்முறை
நடவடிக்கைகளை எடுத்ததின் விளைவாக பல மத இயக்கங்கள் ரகசிய
அமைப்புகளாக மாறின. இதை பயன்படுத்திக் கொண்டு எதிர் புரட்சியாளர்களும், தீய சக்திகளும் சட்டவிரோத செயல்களிலும், குற்றச்
செயல்களிலும் ஈடுபட்டனர்.
சரியான
வழிகாட்டும் கொள்கையை நோக்கி…
இந்தப் பின்னணியில் தான் 1975 ஆம்
ஆண்டுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியும்
சீன மக்கள் குடியரசும் நால்வர் கும்பலின் செயல்களை தோற்கடித்து அரசு முடிவுகளை அமலாக்கிட
முயற்சித்தது. 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சீனக்
கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது காங்கிரஸில் மதப் பிரச்சினைகள்
குறித்தும் அதை அணுகுவது குறித்தும் சரியான வழிகாட்டும் கொள்கை உருவாக்கப்பட்டது.
இந்த முடிவின்படி கலாச்சாரப் புரட்சி காலத்தில் இடதுசாரி குழப்பவாதிகளால்
சேதப்படுத்தப்பட்ட பௌத்த, தாவோயிச ஆலயங்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்கள்
புதுப்பிக்கப்பட்டன. மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்
திறக்கப்பட்டன. மதங்களை அழிப்பது என்ற அபத்தமான
முன்னெடுப்புகளில் இருந்து மீண்டு மார்க்சிய சித்தாந்தத்தின் அணுகுமுறைகளுக்கு மாறும்
சூழல் உருவானது. இந்த முயற்சிகள் சீன சமூகத்தில் அடுத்தடுத்த மாற்றங்களை
உருவாக்கியது.
தொடர்ந்து மதம் தொடர்பாக இடதுசாரி
குழப்பங்கள் வரக்கூடாது என்பதற்காக 1982 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி மிக விரிவான ஒரு தீர்மானத்தை
நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தின்படி இப்போதைய முக்கிய பணி இடதுசாரி தவறான
போக்குகளை எதிர்த்து உறுதியுடன் போராடுவதாகும். அதே
நேரத்தில் தவறான போக்குகளை தடுத்து நிறுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், அனைத்து மட்டத்தில் உள்ள கட்சிக் குழுக்களும்,
குறிப்பாக மதப் பணிகளுக்கு பொறுப்பானவர்கள் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட
காலத்திலிருந்து மதப் பணிகளில் கட்சியின் வரலாற்றை, அதன்
அனுபவத்தை, கற்றுக் கொண்ட பாடத்தை,
பலம் பலவீன அடிப்படையில் தொகுத்து இன்றைய நிலைமைக்கு தேவையான
வழியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்தியது. அது
மட்டுமல்ல மதத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி ஆகியவற்றை
புரிந்து கொள்வதுடன் மதத்தின் அழிவு எப்பொழுது ஏற்படும் என்பதை புரிந்து
கொள்வதிலும் தேர்ச்சி அடைய வேண்டும். இதில் வரக்கூடிய ஒவ்வொரு கஷ்டங்களையும்
கடந்து மார்க்சிசம் லெனினிசம் மாசேதுங்
சிந்தனையால் வகுக்கப்பட்ட அறிவியல் போக்கில் கட்சியின் மதக் கொள்கையை உறுதியாக
கடைபிடிக்க வேண்டும். இவற்றை புரிந்து கொள்வதற்கு மதம்
தொடர்பான ஒரு முன்னுரையை இந்த தீர்மானத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்
வைத்துள்ளது.
மதம் ஒரு வரலாற்று நிகழ்வு
மதம் என்பது மனித சமூகத்தின் வளர்ச்சியில், ஒரு
குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வு. சூனியத்திலிருந்து
உருவாகவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மதமும் தோற்றம், வளர்ச்சி, அழிவு ஆகிய சுழற்சியை கொண்டுள்ளது என்பதை
கவனத்தில் எடுக்க வேண்டும். மத நம்பிக்கை மத உணர்வு இவற்றுடன் தொடர்புடைய மத
விழாக்கள் மற்றும் மத அமைப்புகள் அனைத்தும் சமூக வரலாற்றின் விளைபொருட்களாகும். மனிதகுல வரலாற்றின் ஆரம்பகாலத்தில் குறைந்த அளவிலான
உற்பத்திதான் இருந்தது. அன்றைய மனிதர்கள் இயற்கை நிகழ்வுகளை கண்டு பிரமித்து போனார்கள். இவர்களின் ஆரம்ப கால
மனநிலையின் தோற்றம்தான் மதத்திற்கான அடிப்படை. வர்க்க சமுதாயம் உருவான பிறகு, ஆதிக்கம் செலுத்தக்கூடிய வர்க்கம் மக்களை அந்நியப்படுத்தி கட்டுப்படுத்த
ஆரம்பித்தன. இந்த ஒடுக்குமுறை அமைப்பால் உருவாக்கப்பட்ட மிகப் பெரும் துயரத்தை
எதிர்கொள்வதில் உழைப்பாளிகளுக்கு பயம்,விரக்தி, உதவியற்ற தன்மை இருந்தது.
ஒடுக்குமுறை செய்யும்
வர்க்கங்கள் மதத்தை ஒரு போதைப் பொருளாகவும் மக்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய
வழிமுறையாகவும் பயன்படுத்தியது. சீன
சோஷலிச சமூகத்தில் ஒடுக்குமுறை அமைப்பு அல்லது
ஒடுக்குமுறை வர்க்கம் ஒழிக்கப்பட்டதனால் வர்க்கத்தின் வேர் அல்லது மதத்தின்
இருப்பு கிட்டத்தட்ட இழக்கப்பட்டது. இருந்த போதிலும் மக்களின் உணர்வு சமூக
யதார்த்தங்களுக்கு பின்னால் பின்தங்கி உள்ளது. இதனால் பழைய சிந்தனை மற்றும் பழக்க
வழக்கங்களை குறுகிய காலத்தில் முழுமையாக அழித்துவிடமுடியாது
என்பதை உணர வேண்டும். உற்பத்தி சக்திகளை அதிகரிக்க, பொருள்
செல்வத்தின் அளவைப் பெருக்கிட, சோசலிச ஜனநாயகத்தின் உயர்மட்டத்தை அடைந்திட, கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர் மட்டத்தை
அடைவதற்கு நீண்டகால போராட்ட செயல்முறை தேவைப்படுகிறது.
வர்க்க போராட்டமும் ஒரு குறிப்பிட்ட வரம்புகளுக்குள் சோசலிச சமூகத்தில் தொடர்ந்து இருப்பதும், அதே நேரத்தில் சிக்கலான சர்வதேச சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு ஒரு
சோசலிச சமூகத்தில் ஒரு பகுதி மக்களிடையே மதத்தின் நீண்ட கால செல்வாக்கு இருப்பதை
உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மதம் இறுதியில் மனித வரலாற்றிலிருந்து
மறைந்துவிடும். அது எப்போது நடக்கும்?
சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தின் நீண்ட கால வளர்ச்சியின் மூலம் மக்களின் அனைத்து புறநிலை தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் போது மட்டுமே
மத உணர்வுகள் மறைந்துவிடும். மதம் தொடர்பான வரலாற்று ரீதியான புரிதலுடன் சீன
கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்து அமலாக்க ஆரம்பித்தது. சோசலிச அமைப்பு
நிறுவப்பட்ட பிறகும் மதத்தின் நீடித்த
தன்னை இருக்கும் என்பதை அனைத்து கட்சி உறுப்பினர்களும் நிதானமான மனதுடன் அங்கீகரிக்க
வேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்தியது. சோசலிச அமைப்பு நிறுவப்பட்டதும், ஒரு குறிப்பிட்ட
அளவிலான பொருளாதார கலாச்சாரம் முன்னேற்றம் ஏற்பட்டதும் மதம் குறுகிய காலத்தில்
அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் யதார்த்தத்தை புரிந்து
கொள்ளாதவர்கள். மதசிந்தனை அதன் நடைமுறைகளை நிர்வாக ஆணைகள் மூலமாக அல்லது பிற
கட்டாய நடவடிக்கைகள் மூலமோ அழித்துவிடலாம் என்று
நினைப்பவர்கள் மார்க்சிய கண்ணோட்டத்தில் இருந்து மிகத்
தொலைவில் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். அவை
முற்றிலும் தவறானது மட்டுமல்ல, தீங்கு விளைவிக்க கூடியதுமாகும்.
மேற்கண்ட முடிவுகளின்
அடிப்படையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் இருக்கக்கூடிய மத
நம்பிக்கையாளர்களின் மத அமைப்புகளையும் இடதுசாரி குழப்பங்களுக்கு இடம்தராமல் கையாள
ஆரம்பித்தது. 1993ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி பணிக்கான தேசிய மாநாட்டில்
ஜனாதிபதி ஜியாங் ஜெமீன் உரையாற்றிய பொழுது, "
நாட்டின் மத அமைப்பில் நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் அதாவது கத்தோலிக்க
மற்றும் புராட்டஸ்டண்ட் தேவாலயங்களில் ஏகாதிபத்திய கட்டுப்பாட்டை நீக்கியது, தேவாலயங்களை சுயாதீன நிர்வாகத்தின் கீழ்
கொண்டு வந்ததும், பௌத்த மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களில் நிலப்பிரபுத்துவ
ஒடுக்குமுறை, சுரண்டலை நீக்கியதும் மிக
முக்கியமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கைகள் சீனாவின்
மதங்கள் சோசலிச சமூகத்தை முன்னெடுப்பதற்கு ஒரு படியாக விளங்கியது" என்று கூறினார்.
1998 ஆம்
ஆண்டில் மத விவகாரங்களுக்கான தலைமை அதிகாரிகளின் தேசிய
மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அறிக்கை கீழ்கண்டவாறு வரையறை
செய்கிறது. ‘‘சோசலிசத்தின் ஆரம்ப கட்டத்தில் மதம் தொடர்ந்து இருக்கும் என்பது
மட்டுமல்லாமல் அது ஓரளவு சில அம்சங்களில் வளரக்கூடும்" என்று தெரிவித்தது. சீன சமூகத்தில் மதங்களின் நிலைமைகளை ஆய்வு செய்தால் இந்தக் கருத்தின்
உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
2000ம் ஆண்டு
டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய முன்னணி பணியக மாநாட்டில் ஜனாதிபதி ஜியாங் ஜெமீன் மதம் தொடர்பாக
மேலும் அதன் நீடித்த தன்மையை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். "ஒரு சமூக
நிகழ்வாக மதம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதே
நேரத்தில் சோசலிசத்தின் கீழ், நீண்ட
காலம் அது நீடிக்கும். மதத்தின் இறுதி முடிவு நிச்சயமாக ஒரு நீண்ட வரலாற்று செயல்
முறையாக இருக்கும். ஒருவேளை வர்க்கம் மற்றும் அரசின் அழிவைவிட நீண்டதாக கூட மதம்
இருக்கலாம்"
என்று சுட்டிக்காட்டினார். மதம்
தொடர்பான விஷயங்களை சோசலிச சமூகத்தை கட்டி
அமைக்கக்கூடிய சூழலில் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ள எதிர்கொள்ள கூடிய சூழலில்
இதைவிட தெளிவான ஒரு விளக்கத்தை கூற முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக