அ.பாக்கியம்
“மதம்” எவ்வாறு ஒரு மனிதனின் மனப்பான்மைகளையும் மன வடிவங்களையும்
உருவாக்குகின்றதோ அதேபோன்று தான் ”கல்வியும்” மனிதனின் மனப்பான்மைகளையும் மன
வடிவங்களையும் உருவாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. மதங்களின் பிடியில் இருந்த
காலங்களில் கல்வி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள தயங்கினாலும், மதம்
மாற்றங்களை ஏற்றுக் கொள்வதைவிட கல்வி மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய பயணத்தில்
ஒரு படி முன்னே தான் இருந்தது.
சீனாவில்
19 ஆம்
நூற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை
சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வி என்பது மத பிற்போக்குவாதிகளிடம் மாட்டிக்
கொண்டிருந்தது. அனேகமாக மடாலயங்கள்தான் கல்வியை கட்டுப்படுத்தினார்கள்.
இக்காலத்தில் இருந்த கல்வி முறைகள் எவ்வாறு இருந்தன. அவற்றின் மீது மாற்றத்தை
கோரிய தலையீடுகளும், அதை எதிர்த்த பிற்போக்குவாதிகளின்
செயல்பாடுகளையும் அறிந்து கொண்டால்தான், 1949 ஆம் ஆண்டு சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமையப்பெற்ற சீன மக்கள குடியரசு எவ்வாறு கல்வியை
ஒரு மதசார்பற்ற கல்வியாகயும், சிறுபான்மை மக்கள் மத்தியில்
எவ்வாறு நிலை நிறுத்தியது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
இனச்
சிறுபான்மையினர் மத்தியில் பாரம்பரியமான கல்வி அறிவு என்பது ஒவ்வொரு தேசிய
இனங்களுக்கு இடையிலும்,
வேறுபாடுகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தேசிய
சிறுபான்மை இனத்திற்கு இடையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து இனச் சிறுபான்மை
பிரிவிடமும் ஒரு பொதுவான தன்மைகளும் காணப்பட்டது. அங்கு மடாலயங்கள்தான்
கல்விச்சாலைகளாக செயல்பட்டன. மத குருக்கள் தான் கல்வி கற்பிக்கக் கூடியவர்களாக
இருந்தார்கள். பாடத்திட்டங்கள் பிரதானமாக மத போதனைகளாகத்தான்
வடிவமைக்கப்பட்டிருந்தது. மற்றொரு முக்கியமான பொது அம்சம் என்னவென்றால் கல்வி
முறைகள் எப்படி இருந்தாலும், அது பணக்காரர்களுக்கு மட்டுமே
கிடைத்தது. இனச் சிறுபான்மையினர் அனைவருக்கும் கல்வி பெறுவது
தடுக்கப்பட்டிருந்தது.
1911 ஆம் ஆண்டு ”சன்
யாட் சன்” தலைமையில் நடைபெற்ற குடியரசு புரட்சிக்கு முன்பு மிங் வம்சமும் அதைத்
தொடர்ந்து ஆட்சிக்கு வந்த குயிங் வம்சமும் தங்களது வர்க்க நலன்களுக்கு ஏற்ற
வகையில் கல்வி முறைகளை மாற்றி அமைத்தார்கள். குறிப்பாக மஞ்சு வம்சத்தினர் தாங்கள்
அன்னியர் என்பதால் பெரும்பான்மையாக இருந்த ஹான் சீனர்களின் எதிர்ப்பை
எதிர்கொள்வதற்காக இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியின் மூலம் செல்வாக்கு
செலுத்த முயற்சி செய்தார்கள்.
1911 ஆம் ஆண்டு குடியரசு ஆட்சி அமைந்த பிறகு ஷாங்-கய்-ஷேக் தேசிய
அரசாங்கத்தின் மூலமாக சில பொதுவான முயற்சிகளை கல்வித்துறையில் மேற்கொண்டனர். இவை
முழுமையாக வெற்றி பெறவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஆட்சியாளர்கள்
சீனாவை காலனிபடுத்திய பிறகு கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடு அதிகரித்தது.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்துவ மிஷனரிகள் குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த
அமைப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சிறுபான்மை மக்களை மதமாற்ற முயற்சி
செய்தனர்.
ஆனால்
இவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. சீனாவின் பெரும்பான்மை இனமாக இருந்த ஹான்
மக்களிடம் கிறிஸ்துவம் பரவிய அளவிற்கு சிறுபான்மை மக்களிடம் பரவவில்லை.
இதற்கு மாறாக ஏற்கனவே சிறுபான்மை மக்களிடம் வளர்ந்திருந்த திபெத்திய பௌத்தமும், இஸ்லாமியமும்
கிறிஸ்துவத்தின் செல்வாக்கை மிக வலுவான முறையில் எதிர்த்து பின்னுக்கு தள்ளியது.
இந்தப் பின்னணியில் தான் சிறுபான்மை மக்களிடம் மடாலய மதக் கல்விகள் ஆதிக்கம்
செலுத்த ஆரம்பித்தது.
இதனைப்
பற்றி தெரிந்துக்கொள்ளா அனைத்து சிறுபான்மை இனங்களின் கடந்த கால வளர்ச்சிப்
போக்குகளை அறிவதைவிட சிறுபான்மை மக்கள் மத்தியில் வெகுவாக செல்வாக்கு
செலுத்தக்கூடிய இனச் சிறுபான்மையாக இருக்கும் திபெத், ஜின்ஜியாங், ஹுய் மற்றும் கொரிய இனங்களுடைய உதாரணங்களை அறிந்து கொண்டாலே போதுமானதாக
இருக்கும்.
”மதமே கல்வி” “கல்வியே
மதம்”
திபெத்தில்
மதத்தின் ஆதிக்கம் பல்வேறு துறைகளில் இருந்தது போல் கல்வியின் மீதும் அதன் ஆணிவேர் வரை இருந்தது.
மடாலயங்களே பள்ளிகளாக இருந்ததும்,
மதம் கல்வி இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாத அன்றைய அசாதாரண
சூழலில் திபெத்திய கல்வியின் மீது லாமாயிச மதத்தின் ஆதிக்கம் இருந்தது. திபெத்திய
பௌத்த துறவிகள் மட்டுமே அறிவு ஜீவிகளாக கட்டமைக்கப்பட்டனர். கல்வியில்
மடாலயங்களின் செயல்பாட்டை மட்டுமே இந்த துறவிகள் வலியுறுத்தினார்கள்.
மடாலயங்களுக்கு வெளியே இருக்கக்கூடிய மக்களைப் பற்றியோ, அவர்களுக்கான
கல்வியைப் பற்றியோ கவலைப்படவில்லை.
திபெத்தில்
இருந்த பீக் மற்றும் எக்லேசியாஸ்டிகள் ஆகிய இரண்டு கல்வி நிலையங்கள்
குறிப்பிடத்தக்கவை. இந்த இரண்டு பள்ளிகளும் அரசாங்கத்தில் பணிபுரியக்கூடிய
துறவிகளுக்கான பயிற்சி அளிக்க கூடியதாகவே இருந்தன. அரசின் பணிகள் அனைத்தையுமே
துறவிகள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.
என்பதை இந்தக் கல்வி முறைகளில் இருந்து அறிய முடியும். இந்தப் பள்ளிகளில்
முன்னாள் பட்டதாரிகளின் வாரிசுகளும் பரம்பரையாக நிலப்பிரப்புக்களாக இருப்பவர்களின்
மகன்களும் மட்டுமே படிப்பை மேற்கொள்ள முடியும். 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்புவரை
திபெத்திய கல்விமுறையின் பாடத்திட்டம் என்பது மத போதனைகளை மையமாக வைத்ததுடன்,
அரசு அலுவலகங்களில் பணி புரிவதற்கான சில பாடத்திட்டங்களும், மருத்துவத்தை கற்றுக் கொள்வதற்கான பாடத்திட்டம் மட்டுமே இருந்தது.இவற்றை
ஐந்து பிரிவுகளாக பிரித்து வைத்திருந்தனர்.
முதல்
பிரிவு: மத
அமைப்புகளின் செயல்பாடுகள் அது சார்ந்த நிர்வாக முறைகளுக்காக லாசா அரண்மனையிலேயே
பள்ளிக்கூடம் இயங்கியது.
இரண்டாவதுவகை: ஆவணங்களை பராமரிப்பதற்கும்
கையெழுத்து பயிற்சியை கொடுத்து அதிகாரப்பூர்வமான ஆவணங்களை எழுதுவதற்கும் இதில்
சொல்லிக் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது:
இப்பிரிவு
கணிதம், எண்
கணிதம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தது. அதாவது அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு
வரவு செலவுகளை கவனிக்க கூடிய நபர்களை உருவக்கும் கல்வியாக இருந்தது.
நான்காவது: இது மதங்கள் தொடர்பான
சிறப்பு பாடங்களையும் அதற்கான நூல்களையும் படிக்க வைப்பது.
ஐந்தாவது:
இக்கல்வி
பாரம்பரிய திபெத்திய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க கூடியது.
மற்ற
இனச் சிறுபான்மையிடம் இல்லாத ஒன்று திபெத்திய இனத்தில் இருந்தது. இவர்களின் கல்வி
முறைகள் மடாலயங்களில் சொல்லிக் கொடுத்தாலும் திபெத்திய மொழி, மருத்துவம், வானியல், நாட்காட்டி, கணக்கீடு,
ஓவியம் போன்ற சிலவற்றையும் சேர்த்தே சொல்லிக் கொடுத்தார்கள்.
திபெத்திய மொழி தொடர்பான அச்சு பிரிவுகளும் மடங்களில் இருந்தது.
அதாவது
இந்த திபெத்திய மடாலயங்களில் நடத்தப்பட்ட பாடத்திட்ட முறைகளும், பள்ளிகளும் அரசை
நடத்துவதற்கும், மதத்தை கடத்துவதற்குமான கல்வி முறையாக
மட்டுமே இருந்தது. இது இரண்டையும் பெறக்கூடியவர்களாகவும் செய்யக்கூடியவர்களாகவும்
சமூகத்தில் வசதி படைத்த வர்க்கம் மட்டுமே இருந்தது.
நவீன
மதசார்பற்ற கல்வியையும்,
ஆங்கில பாணி பள்ளிகளையும் அறிமுகப்படுத்திய போது இந்த பள்ளிகள்
அனைத்தும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். திபெத் பிராந்தியத்தில் இருந்த
பள்ளிகளில் பெரும்பாலும் தனியார் பள்ளிகளே இருந்தன. திபெத்தில் மதத்தலைவரே,
அரசுத் தலைவராகவும் இருந்ததால் சீன நாட்டின் மத்திய அரசிலிருந்து
அரசுக்கான ஒரு துணைத் தலைவரை அனுப்பி வைப்பது வழக்கம். அப்படி அனுப்பி
வைக்கப்படுபவர் அங்கிருக்கும் ஆட்சி முறைகளை மத்திய அரசின் சார்பில் மேற்கொள்வார்.
1906 ஆம் ஆண்டு திபெத்திற்கு சீன மத்திய அரசிலிருந்து அனுப்பப்பட்ட ஜாங் யின்
டாங் திபெத்திய கல்விமுறையில் சீர்திருத்தங்களை செய்வதற்கான முயற்சிகளை
மேற்கொண்டார். அவரின் முயற்சிகளில் ஒன்று மடங்களை கடந்து மதச்சார்பற்ற கல்விகளை
கொடுப்பதாகும். ஆனால் அவருடைய சீர்திருத்தத்தை நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல்
திபெத்திய துறவிகளும் நிலப்பரப்புகளும் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
இவ்வாறு
மேற்கொள்ளப்படும் நவீன கல்வி,
ஆங்கில வழிக் கல்வி, மதச்சார்பற்ற கல்வி என
அனைத்து விதமான புதிய முயற்சிகளும்
தங்களின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது என மடாலய துறவிகள் அதை எதிர்த்தார்கள். தலாய்லாமா திபெத்தின்
சிகரமாகவும், துறவிகளின் எஜமானராகவும், மதஆதிக்க நிலப்பிரப்புத்துவ அரசின் உயிராகவும் இருந்தார். திபெத்திய ஆளும்
வர்க்கம் குறிப்பாக துறவிகளும், நிலப்பிரபுக்களும் நவீன
கல்வி முறையை போதிக்க கூடிய பள்ளிகளுக்கு தங்களுடைய குழந்தைகளை அனுப்ப வேண்டிய
கட்டாயம் ஏற்படும் என்பதால் புதிய முறையை
எதிர்த்தார்கள்.
இதைவிட
மிக மோசமான ஒரு சிந்தனை போக்கு தலாய்லாமாவிடமும், துறவிகளிடமும் காணப்பட்டது. நவீன,
முறையான கல்வி பயனற்றது. நேரத்தை வீணடிக்க கூடியது. அதனை
கற்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று பேசியது மட்டுமல்ல அக்கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார்கள். அது
மட்டுமல்ல கல்வி என்பது முடிந்தால் தவிர்க்கப்படவும் வேண்டிய ஒரு கடமை என்று இந்த
மத குருக்களால் கருதப்பட்டது.
நவீன
கல்வி முறையில் சில பள்ளிகள் உருவானபோது
தங்களது குழந்தைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட நிலையில் வசதி
படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றாக ஏழைக் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து
அனுப்பி வைக்கக்கூடிய செயலையும் செய்தார்கள் என்று வரலாற்றுப் பதிவுகள்
தெரிவிக்கிறது. இந்த கல்வி முறைகளைப் பற்றி அறிஞர்கள் பதிவு செய்யும் பொழுது
மடாலயங்கள் என்பவை கலாச்சாரத்தையும் மதத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்ற
துறவிகள் மற்றும் நிறுவனங்களின் தொகுப்பாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவில் வேதங்கள் புனிதமானது மற்றவர்கள் படிக்க கூடாது என்று வர்ணாசிரம
சித்தாந்தத்தை போதித்து கல்வியை தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். இதேபோன்று
திபெத்திய லாமாக்கலும் புரட்சி நடைபெறுகிற வரை அதிகாரத்தைக் கொண்டு மக்களை கல்வி
அறிவற்றவர்களாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.
மதக்கல்வி-பொதுக்கல்வி
முரண்களின் களம்
சோவியத்
யூனியனுடன் அதிக எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்ட சீனாவின் ஜின்ஜியாங்க்
பிராந்தியம் இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் அதிகம் வாழக்கூடிய தன்னாட்சி
பிரதேசமாகும். இங்கு மட்டும் 13-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் ஒரே மாகாணத்தில் வாழ்கிறார்கள். இந்த
பிராந்தியத்தில் ஹுய், உய்குர், கசாக்,
கிர்கிஸ், டாடர், உஸ்பெக்,
தாஜிக், டோங்சியாங், சலார்
மற்றும் போனன் குழுக்களின் உறுப்பினர்கள் இஸ்லாமிய மத நம்பிக்கையைப்
பின்பற்றுபவர்கள்.
இங்கு
உய்குர் இனக் குழு அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் துருக்கிய மொழி பேசக்கூடிய
இஸ்லாமியர்கள். திபெத் பிராந்தியத்திலும், ஹுய் இனத்தவர்கள்
மத்தியில் அறிவு சார்ந்த துறைக்கு அவர்களின் வர்க்க நலன் கருதி அக்கறை எடுத்தது
போன்று ஜின்ஜியாங்க் பிராந்தியத்தில் இருந்த இஸ்லாமியர்கள் அவ்வாறு எடுக்கவில்லை
என்று இங்கு பிரிட்டிஷ் தூதராக இருந்த பி.டி கர்னல் குறிப்பிடுகின்றார். இந்த
மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு என்றும் அல்லது பிரிட்டிஷார் காலனி
படுத்தக்கூடிய நாடுகளைப் பற்றி தெரிவிக்கின்ற வழக்கமான கருத்துக்கள் என்றும் சில
அறிஞர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனாலும் இந்த பிராந்தியத்தில் இருந்த இனச் சிறுபான்மை
மக்களுக்கான புத்தகங்கள் கூட வெளியில் இருந்து தான் வந்தது என்ற தரவுகளும் உள்ளன.
இதனால் கல்விகற்பதற்கான முயற்சிகள்
உயர்வர்க்க மக்களிடம் கூட போதுமான அளவிற்கு இல்லை என்ற ஒரு நிலைமைதான் அங்கு
இருந்தது.
1930 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ஜின்ஜியாங்கில் ஒட்டுமொத்த கல்வியும் இஸ்லாமிய
மயமாகத்தான் இருந்தது. குர்ஆன், இஸ்லாமிய கோட்பாடுகள்,
இஸ்லாமிய மத நடைமுறைகள், மற்றும் அது தொடர்பான
வரலாற்று ஆவணங்கள் மட்டுமே பாடத்திட்டங்களாக இருந்தன. கல்வி கற்றுக்
கொடுக்கக்கூடிய இடமாக மசூதி மட்டுமே இருந்தது. முல்லாக்கள்தான் அனைத்து
பாடத்திட்டத்தையும் தீர்மானித்தார்கள். மசூதிக்கு வெளியே இயங்கிய சில பள்ளிகளும்
மதம் சார்ந்த போதனைகளாக இருந்தாலும் அவற்றிலும் கூட வசதி படைத்தவர்கள் மட்டுமே
படிக்க முடிந்தது. சிறுவர்கள் குர்ஆனை படிக்க எழுத மற்றும் ஓத கற்றுக் கொடுக்கும்
இடங்களாகத்தான் மசூதிகள் இருந்தன. இத்தகைய பழமையான பாடத்திட்டத்தையும், கல்வி முறையையும் எதிர்த்து மாற்றுக்கல்விக்கான ஆலோசனைகளை முன்வைத்தால் அவை அனைத்தும் கடுமையான
முறையில் நசுக்கப்பட்டன. அவ்வாறு எழும் குரல்கள் தங்கள் மதஆதிக்க ஏகபோகத்திற்கு
ஊறு விளைவிக்கும் என்று கருதினார்கள்.
முதலாம்
உலகப் போர் நடந்த காலத்தில் உலகின் மிகப்பெரிய பேரரசாக துருக்கிய ஓட்டோமான் பேரரசு
விளங்கியது. இவர்களின் உதவியுடன் ஜின்ஜியாங்கின் காக்ஸ்கார் நகரில் ஒரு பள்ளி
ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பள்ளியின் பாடத்திட்டம் துருக்கியப் பேரரசின் பாடத்திட்டத்தை
அடிப்படையாகக் கொண்டிருந்தது. இங்கு படித்த மாணவர்களை துருக்கிய சுல்தானை தங்களின்
ஆன்மீக தலைவராகவும், உலகத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
பாடதிட்டங்களும் அவ்வாறே அமைந்திருந்தது. இதனால் சீனத்தின் பகுதியில் துருக்கி
அடையாளத்தை வலிந்து திணிப்பது மட்டுமல்ல துருக்கி நாட்டிற்கு விசுவாசம்
உள்ளவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்று சீன அரசு அஞ்சியது. சீனாவை குறித்த
அடையாளங்களும் அழிக்கப்பட்டது. இது இன ரீதியிலான மோதல்களை ஊக்குவிப்பதாக சீன
அதிகாரிகள் கருதினார்கள். எனவே இந்தப் பகுதியில் நீண்ட காலம் ஆளுநராக இருந்த யான்
செங் அந்தக் குறிப்பிட்ட பள்ளியை மூடினார். அது மட்டுமல்ல பள்ளியின்
பொறுப்பாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். துருக்கி நாட்டிற்கு விசுவாசமான
முறையிலும், அடிபணியக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டு
இருந்த சின்னங்களை எல்லாம் அகற்றினார். பின் உள்ளூர் மொழி மற்றும் சீன மொழி,
சீன ராணுவ பயிற்சி ஆகியவற்றை கற்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்
அடிப்படையில் அந்தப் பள்ளியை மீண்டும் திறந்து செயல்பட வைத்தனர்.
முதல்
உலகப்போரின் முடிவில் துருக்கிய ஓட்டோமான் பேரரசு வீழ்ச்சி அடைந்ததால்
ஜின்ஜியாங்கில் அதன் பலம் குறைந்தது. ஜின்ஜியாங்கில் சில பகுதிகள் சோவியத்தில்
எல்லையில் இருந்ததால் சோவியத் செல்வாக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே
காலத்தில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய புரட்சிகரமான போராட்டங்கள் இந்தப்
பகுதிகளிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது. இக்காலத்தில் குறிப்பாக 1933 ஆம் ஆண்டு செங்
ஷிகாய் என்பவர் பொறுப்பேற்றார். இவர் கல்வியில் புதிய பல திட்டங்களை அமலாக்கினார்.
இந்த கல்வித் திட்டத்தில் சோவியத் புரட்சியின் தாக்கம் இருந்தது. இவர் ஆரம்பித்த
பள்ளிகளில் இடைநிலைப் பள்ளிகள், தொழில் முறை பள்ளிகள்,
பல்வேறு இனச் சிறுபான்மையர்கள் ஒன்றாக படிக்கும் வகையிலான பொது
தொடக்கப் பள்ளிகள், உள்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே
தனியான பள்ளிகள், மழலையர் பள்ளிகள் போன்ற பல பள்ளிகளை இவர்
ஆரம்பித்தார். பாடத்திட்டமும் சோவியத் செல்வாக்கை பிரதிபலித்தது. கல்விகள்
அனைத்தும் தாய்மொழி வழியாகவே கற்பிக்கப்பட்டாலும், ஆங்கிலம்
மற்றும் ரஷ்ய மொழிகளும் இவர் ஆரம்பித்த பள்ளிகளில் விருப்ப மொழியாக
அறிமுகப்படுத்தப்பட்டன.
இக்காலத்தில்
ஜின்ஜியாங் பொருளாதாரத்தை மேம்படுத் தக்கூடிய முறையில் கல்வி கற்பித்தலுக்கு
முக்கியத்துவம் கொடுத்தார். பல்வேறு வகையான தொழில்நுட்ப பயிற்சியாளருக்கு பயிற்சி
அளிப்பது பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய கருவியாக கருதப்பட்டது. இதற்காக அவர்
விவசாயம், மேய்ச்சல் நிலம், கால்நடை அறுவை சிகிச்சை, பொறியியல், கணக்குகள், நிதியியல்,
ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட பள்ளிகளும்
துவக்கப்பட்டன. 1936 முதல் 1942 வரை
செங் ஷிகாய் ஆட்சி காலத்தில் கல்வி வியத்தகு விரிவாக்கத்தை பெற்றது. குறிப்பாக 1935 இல் 425 மாணவர்களைக் கொண்ட சாதாரண நடுநிலைப்
பள்ளிகள் மட்டுமே இருந்தன. 1943 இல் 2590 மாணவர்களைக் கொண்ட ஏழு நடுநிலைப் பள்ளிகள் இருந்தது. 1937 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளிகள் 215 ஆக இருந்தது 1942 ஆம் ஆண்டில் 556 பொது தொடக்கப் பள்ளிகள் உருவானது.
இக்காலத்தில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2.66 லட்சமாக
உயர்ந்தது.
செங்
ஷிகாய் அடிப்படை கல்வி,
அறிவை எளிதில் அடையவும் அதன் மூலம் சமூகத்தில் தங்கள் சொந்த
செல்வாக்கை விரிவுபடுத்த முடியும் என்று நம்பி கல்வித்துறைக்கு முக்கியத்துவம்
கொடுத்தனர். இவர் இன, கலாச்சாரம், மொழிக்கும்
முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அங்கீகரித்தார். தங்களது செல்வாக்கை உயர்த்திக்
கொள்வதற்கான முயற்சிகளாக இருந்தாலும், இயற்கையாகவே அவை
முற்போக்கானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்தது. இனச் சிறுபான்மை மக்கள்
மத்தியில் கல்வியை விரிவு படுத்தியதற்காக செங் ஷிகாய் பாராட்டப்பட்டார். எனினும்
முல்லாக்கள் அனைவரும் இவரின் செல்வாக்கை அகற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும்
எடுத்தார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்று புதுக் கல்வியை மீண்டும் மதக்
கல்விக்கான அடித்தளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இன்றும் கூட
ஜின்ஜியாங்கில் உள்ள இஸ்லாமிய முல்லாக்கள் செங் ஷிகாய் ஆட்சியைப்பற்றி பாராட்டி
பேசுவது கிடையாது. தூற்றுவார்கள்.
எனவே
ஜின்ஜியாங் பகுதிகளில் மதக் கல்வியின் ஆதிக்கம், அதன் பாடத்திட்டம் தொடர்ந்தாலும் எல்லை
நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், உள்ளூரில் சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டின் தாக்கமும் கல்விக் கொள்கையில் ஏகபோகத்திற்கு
எதிரான குரலாக வெளிப்பட ஆரம்பித்தது.
அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக