Pages

வியாழன், மார்ச் 05, 2026

62 ஆக்கிரமிப்பு எதிர்ப்பில், இனக் கல்வியின் இருத்தல்-

 

அ.பாக்கியம்

சீனாவின் இனச் சிறுபான்மை கல்வியில் திபெத் பகுதி தனித்தன்மை வாய்ந்தது போன்றோ, ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்த இஸ்லாமிய மதத்தை கடைபிடித்த உய்கூர், கசாக், கிர்கிஸ், டாடர், உஸ்பெக், தாஜிக், டோங்சியாங், சலார் மற்றும் போனன் ஆகிய இனச் சிறுபான்மை பகுதியைப் போன்றோ, இதர இனக்குழுக்கள் இல்லை.

குறிப்பிட்ட அளவு மாறுபட்ட தன்மையுடன் இதர இனக்குழுக்கள் இருந்தன. ஒரு சில இனக்குழுக்கள் தவிர மற்றவை முன்னோர் வழிபாட்டிலும், இதரவை சடங்கு ரீதியிலான உள்ளூர் மதங்களை பின்பற்றினார்கள். இவர்களுக்கும் கல்வி முறை மத ரீதியிலாக இருந்தாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு ரீதியாக இல்லை. இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இரண்டு இன குழுக்கள் ஹுய் இனக்குழுவும், கொரிய(சாவோக்சியன்) இனக்குழுவும் ஆகும்.

வேத மண்டபக் கல்வி

ஹுய் இனச் சிறுபான்மையினர் சீனாவின் மூன்றாவது பெரிய இனச் சிற்பான்மையினராவர். சுமார் ஒரு கோடியே 13 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இவர்கள் சீனா முழுவதும் பரவி இருந்தாலும் சீனாவின் வடமேற்கு மாகாணங்களிலும், மத்திய மாகாணங்களிலும் குவியலாக வாழ்கின்றார்கள். சீன நாட்டைத் தவிர இந்த இனத்தவர்கள் கஜகஸ்தான், துர்க்கிஸ்தான், மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

இவர்கள் மத வழியில் இஸ்லாமியர்கள் என்றாலும் சீன மொழி பேசக் கூடியவர்கள். சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கூர் இன மக்கள் பேசக்கூடிய துருக்கிய இஸ்லாமியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டிக் கொள்வதற்காக ஹான்ஹுய் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கான நிங்சியா ஹுய் தன்னாட்சிப் பகுதி அமைக்கப் பட்டுள்ளது.

இவர்கள் இஸ்லாமிய வழிபாட்டுமுறைகளை கடைபிடித்தாலும் சீன மொழி பேசக்கூடியவர்கள் என்பதால் இவர்களுக்கான கல்வி கற்பித்தலில் இரண்டுக்குமான முரண்பாடு வெளிப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பல நூற்றாண்டுகளாக மத அடிப்படையிலான கல்வி முறைகளைதான் இவர்கள் கற்றுக் கொண்டார்கள். மிங் வம்ச காலத்திலும், கிங் வம்ச காலத்திலும் வேத மண்டபக் கல்வி என்று கல்வி முறைகள் பரவலாக்கப்பட்டன. வேத மண்டபக் கல்வி என்பது மசூதிகளுடன் இணைக்கப்பட்ட அரங்குகள் அல்லது பள்ளிகள் ஆகும்.

அரபு மற்றும் பாரசீக நூல்களை சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்து அதன் மூலமாக இஸ்லாமிய கருத்துக்களை கொண்டு சென்றனர். இந்த வேத மண்டபம் கல்வியில் அரபு இலக்கணம், குர்ஆன் பற்றிய விளக்கம், அவுத்தீஸ், தத்துவம், நீதித்துறை ஆகியவற்றைப் பற்றிய பாடத்திட்டமாகதான் இருந்தது. இஸ்லாமிய அறிவை பலப்படுத்துவதற்காக கன்பூசியஸ் சிந்தனைகளில் கல்வி பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் வேத மண்டபக் கல்வியை பிரபலப்படுத்தினார்கள்.

ஆனால் பெரும்பாலும் கல்வி நிலையங்கள் மசூதிகளை சார்ந்து இருந்ததால் மதகுருக்களால் மட்டுமே இந்த கல்வி போதிக்கப்பட்டது. மதம்சார்ந்த அடையாளத்தையே முன்னிலைப்படுத்தினார்கள். சீன மொழிகள் மூலமாக கற்பித்தல் என்று வருகிற பொழுது காலப்போக்கில் அரபு மொழிகள், ஹுய் மொழிகள் மறக்கப்பட்டதை மீண்டும் புதுப்பிக்கும் நோக்கத்தோடு மத குருக்கள் கல்வி போதனைகளை அரபு மற்றும் ஹுய் மொழிக்கு மாற்றினார்கள். இதற்கான பள்ளிகளையும் அமைக்க தொடங்கினார்கள். இஸ்லாமிய கோட்பாட்டை போதிப்பதன் மூலம் முஸ்லிம் ஆசிரியர்களையும் மதகுருமார்களையும் பயிற்றுவிப்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

1911 ஆம் ஆண்டு சன் யாட் சன் தலைமையில் நடைபெற்ற குடியரசு புரட்சி வெற்றி பெற்ற பிறகு கல்வியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. கிங் வம்ச ஆட்சியின் கடைசி காலத்தில் இருந்தே இவைகள் துவக்கப்பட்டன. மதக்கல்வியுடன் இணைத்து மதத்திற்கு அப்பாற்பட்ட சில பொது தலைப்புகளையும் கற்பிக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள். உதாரணமாக கணிதம், வரலாறு, சீன மொழி போன்றவற்றையும் சேர்த்தனர். இந்த முயற்சியின் தொடர்ச்சியாக அரசு ஆதரவு பெற்ற தனியார் பள்ளிகளை நவீன கல்வி அளிப்பதற்கான முறையில் உருவாக்கினார்கள்.ஆனால் இஸ்லாமிய மதகுருக்களிடம் இருந்து வெளிப்பட்ட பெரும் எதிர்ப்பு இவற்றை செயல்பட வைக்க முடியவில்லை.

 

1933 ஆம் ஆண்டில் குடியரசு ஆட்சியின் அரசு ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளியை அரசாங்க விதிமுறைகளின் படி அதாவது மத போதனைகளுக்கு அப்பாற்பட்ட பாடத்திட்டங்களுடன் அரசு நடத்தும் என்ற முடிவை அறிவித்தது. இதேபோன்று இதர தனியார் பள்ளிகளும் இவற்றை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் மசூதிகளில் நடைபெற்று வந்த வேத மண்டபக் கல்வி முறையில் நடைபெற்று வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்தார்கள்.

காரணம் கோமிங்டாங் கட்சி தலைவர் சியாங் கை-ஷேக் தனது ஆட்சியின் செல்வாக்கை மேற்கு சீனாவில் இருந்த ஜின்ஜியாங் மாகாணத்தின் முஸ்லிம்களின் செல்வாக்கை பெறுவதற்காக இந்த சந்தர்ப்பவாத நிலையை எடுத்தார். இதனால் மதத்தின் பிடியிலிருந்து மாற்ற வேண்டிய கல்வி முறைகள் மீண்டும் மத செல்வாக்கின் உள்ளே மாட்டிக் கொண்டது. கோமிங்டாங் கட்சி ஆளும் வர்க்கத்தை பாதுகாக்க கூடிய முறையிலேயே தங்களது கல்வி திட்டங்களை செயல்படுத்தினார்கள். எனவே ஹுய் இன மக்கள் மத்தியில் மதக் கல்வியின் பிடிகளை தளர்த்த முடியவில்லை.

ஆக்கிரமிப்பு எதிர்ப்பில் இனக் கல்வியின் இருத்தல்

சீனாவில் தற்போது இருக்கின்ற 55 இன சிறுபான்மையினர்களில் கொரிய இன சிறுபான்மையும் ஒன்றாகும். இவர்களை சீனாவில் சாவோக்ஸியன் என்று அழைக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் படி 17.2 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். சீனாவின் வடகிழக்கு பகுதியில் வடகொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இவர்கள் வாழக்கூடிய பகுதி இருக்கிறது. சீன மக்கள் குடியரசு கொரிய சிறுபான்மை மக்களை சிறுபான்மை இனமாக அங்கீகரித்து மாவட்ட அளவிலான தன்னாட்சி உரிமைகளை வழங்கி இருக்கிறது.

1880 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை கொரிய இன மக்கள் வாழ்ந்த பகுதிகளில் கல்விக்கான கட்டமைப்புகள் பெரிதாக இல்லை. 20-ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் கூட பாரம்பரியமான சில அறிஞர்களும் குறிப்பிட்ட சில பள்ளிக்கூடங்களும் தான் இருந்தன. காலப்போக்கில் கொரிய மொழியிலான சில ஆரம்ப நிலை அல்லது துவக்க பள்ளிகளை உருவாக்கினார்கள். கிறிஸ்துவ மதம் குறிப்பாக பிராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்க மதம் ஆரம்ப காலகட்டத்தில் கொரிய இன மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இம்மக்கள் நாத்திகம், கிருத்துவம், மகாயான பௌத்தம் ஆகிய மதங்களை பின்பற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதம் கொரிய இனத்திற்கான தனி தேவாலயங்களை நடத்தி வந்தனர்.

ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த பொழுது மிக நீண்ட காலத்திற்கு ஜப்பானின் ஆக்கிரமிப்பில் சீனாவில் இருந்த இந்த கொரிய இனம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இவர்கள் ஜப்பானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். 1927 ஆம் ஆண்டுகளில் 191 துவக்கப் பள்ளிகளை கொரிய மொழிகளில் நடத்தி வந்தார்கள். இந்தப் பள்ளிகள் அனைத்தும் தங்களின் நாட்டுப்பகுதியை ஜப்பான் பேரரசுடன் இணைப்பதற்கு நடைபெற்ற முயற்சிகளுக்கு எதிராக பள்ளிக்கூடங்களின் வாயிலாகவே பெரும் எதிர்ப்புகளை உருவாக்கினார்கள்.இவர்களின் கல்வி முறை ஆக்கிரமிப்பை எதிர்த்த கல்வி முறையாக இருந்தது.

அதே நேரத்தில் இந்தப் பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த ஜப்பான் பள்ளிக்கூடங்களை ஜப்பானிய முறையிலேயே உருவாக்கினார்கள். இந்தப் பள்ளிக்கூடங்களில் ஜப்பானின் மேன்மையை உயர்த்தியும், கொரிய இனத்தை இழிவு படுத்தியும் போதனைகளை செய்தார்கள். ஜப்பானியர்கள் கொரியர்கள் நடத்திய பள்ளிக்கூடங்களை கைப்பற்றி ஜப்பானிய பள்ளிக்கூடங்களாக மாற்றினார்கள். இதற்காக சிறப்பு மானியங்களையும் கொடுத்தார்கள். அனைத்து பள்ளிகளிலும் ஜப்பானிய மொழி மட்டுமே போதிக்கக் கூடிய பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது மட்டுமல்ல, கொரிய மொழி பாட புத்தகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன.

ஜப்பானிய முறையில் ராணுவ பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜப்பானியர் ராணுவ தளபதிகள் இந்த பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அதைவிட கொடூரமானது கொரிய மாணவர்களின் பெயர்களை ஜப்பானிய பெயர்களாக மாற்றி பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அவ்வாறு பெயர்களை மாற்றிக் கொள்ளாதவர்கள் கல்விச்சாலைகளில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

இதே காலத்தில் சீனாவில் புரட்சியை நடத்தி வந்த மாசேதுங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி கொரிய இன மக்களின் சுயாட்சி போராட்டத்திற்கான முழுமையான ஆதரவை கொடுத்தது. ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிகளுக்கு பதிலாக கொரிய மொழிகளிலேயே தற்காலிகமாக பள்ளிக்கூடங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவியது.

கொரிய மொழியை பயிற்று மொழியாகவே அவற்றில் பயன்படுத்தினார்கள். கற்பித்தல் தொடர்பான பாடபுத்தகங்கள் உட்பட முக்கிய பொருட்கள் அனைத்தையும் தருவித்து கொடுத்தார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் ஜப்பானின் அழித்தொழிப்புகளுக்கு மத்தியில் கொரிய மொழியையும், அதன் கலாச்சாரத்தையும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளக்கூடிய செயல்களை புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செய்தது. இக்காலத்தில் ஜப்பானிய பள்ளிக்கூடத்தில் படித்த கொரிய மாணவர்கள் ஜப்பானின் அடக்குமுறைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஜப்பான் இருவிதமான முயற்சிகளை மேற்கொண்டது. ஒரு தேசிய இனத்தை இழிவு படுத்தி அழிக்க நினைத்தது. மறுபுறத்தில் ஜப்பானிய பேரரசின் பெருமையை திணிக்க முயன்றது. இந்த இரண்டு முயற்சிகளிலும் ஜப்பான் தோல்வி அடைந்தது. கொரிய இனக்குழுவின் கல்வி முறைகள் கொரிய தேசிய இனத்தை முன்பைவிட பல மடங்கு பலம் படுத்தியது.

சீன ஜப்பான் போரின் முடிவில் ஜப்பான் தோல்வி அடைந்தது. இக்காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் விடுதலை படை கொரிய இனக்குழு பகுதிகளை ஜப்பானிடம் இருந்து மீட்டது. உடனடியாக ஜப்பானிய பள்ளிகளை மாற்றி கொரிய மொழியை கற்பிக்கக் கூடிய பள்ளிகளையும், கொரிய கலாச்சாரங்களை கடைபிடிப்பதற்குமான கொள்கைகளை வகுத்துக் கொடுத்தது. எழுத்தறிவு, கணிதம், பொது அறிவை மேம்படுத்துவதற்கான முறைகளில் கொரிய இன மக்கள் வாழ்ந்த மாவட்டங்களில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தினார்கள். 1949 இல் சீன மக்கள் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட நேரத்தில் கொரிய இனக்குழு மக்கள் அதிகமாக வாழ்ந்த மாவட்டத்தில் 31 இடைநிலைப் பள்ளிகளும், 647 தொடக்கப் பள்ளிகளையும் செம்படை உருவாக்கி இருந்தது. இதனால் சீனாவில் இருந்த சிறுபான்மை மக்களிடையே கொரிய இன மக்களின் கல்வி வசதி மேம்பட்டதாக அறியப்படுகிறது.

குடியரசின் முயற்சிகளும் சவால்களும்

1911 ஆம் ஆண்டு டாக்டர் சன் யாட் சன் தலைமையில் ஆட்சிக்கு வந்த கோமிங்டாங் கட்சி கல்வித் துறையில் சில மாற்றங்களை உருவாக்க முயற்சித்தது. சன் யாட் சன் சீனாவை ஐந்து தேசிய இனங்களின் குடியரசு என்று அறிவித்தார். அதாவது ஹான், மஞ்சு, மங்கோலியா, திபெத்தியன், ஹுய்(அனைத்து முஸ்லிம்களையும் உள்ளடக்கிய) ஆகியவையே அந்த ஐந்து பெரிய தேசிய இனங்களாகும். இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே மங்கோலிய திபெத்திய கல்வி பிரிவை கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைத்தார். இந்தக் கொள்கையின் படி தேசிய இனங்களுக்கிடையே சமத்துவம் என்ற கொள்கைக்கு கீழ்ப்படிந்து மங்கோலியர் மற்றும் திபெத்திய மக்களின் மொழி மற்றும் ஒற்றுமை நோக்கத்திற்காக கல்வியை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்தார்கள்.

இந்த முறை தேசிய இனங்களின் அடையாளங்களை, அதன் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்து வளர்ப்பதற்கு மாற்றாக சீனாவின் அடையாளங்களை முன்னிறுத்துவதை பிரதானமாக வைத்திருந்தது. இந்த ஆலோசனைகளை தேசிய இனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்கண்ட திட்டத்தின்படி 1947 ஆம் ஆண்டு இறுதியில் கூட தேசிய அரசாங்கத்தின் தொடக்கப் பள்ளிகள் 16 மட்டுமே இருந்தன என்றால் இந்தத் திட்டத்தின் தோல்வியை புரிந்து கொள்ள முடியும். இந்தத் திட்டத்தினால் உருவாக்கப்பட்ட பள்ளிகளில் நில உரிமையாளர்கள், வணிகர்கள், ராணுவ தளபதிகள், அரசியல் தலைவர்களின் பிள்ளைகள், முதலாளிகளின் பிள்ளைகள் என 90% பேர் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் .

இதேபோன்று குடியரசு ஆட்சி காலத்தில் பெண்கள் கல்விக்கான முயற்சியில் சில கிறிஸ்துவர் மிஷனரிகள் ஈடுபட்டார்கள். ஆனாலும் பெண்களின் வருகை ஒரு சில இனக் குழுக்களில் மட்டும் அதுவும் பெயரளவிற்கு மட்டுமே இருந்தது. 1929 ஆம் ஆண்டு. கோமிங்டாங் கட்சியின் ஷாங்-கை-ஷேக் பெண்களுக்கான கல்விக் கொள்கையை அறிவித்து, அனைத்து தேசிய இனங்களிலும் பெண் கல்விக்கு சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்ற கருத்துக்கள் உருவாவதற்கு முன்பாகவே பிற்போக்கு தனத்தின் உள்ளடக்கத்தையும் அறிவித்தார்.

அதாவது பெண்களுக்கான பாடத்திட்டத்தில் தாய்மையும், குடும்பத்திற்கு சேவை செய்ய வேண்டிய குணங்களையும், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டியதையும் போதிக்க வேண்டும் என்றும், நல்ல மனைவிகளாகவும், நல்ல தாய்மார்களாகவும் இருப்பதற்கு கற்றுக் கொடுக்கும் அடிப்படையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டது.

 

1898 ஆம் ஆண்டு நடைபெற்ற நூறுநாள் சீர்திருத்தத்த இயக்கத்திற்கு பிறகு பிராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்க மிஷனரிகள் தங்கள் சொந்த பள்ளிகளை அமைத்தனர். அவை குறைந்த கல்வி கட்டணத்தின் அடிப்படையில் இருந்தது. பள்ளிகள் கிறிஸ்துவமிஷனரிகளின் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக அமைந்திருந்தது. பள்ளிகளின் தலைவர்கள் அனைவரும் வெளிநாட்டு மிஷனரிகளாக மட்டுமே இருந்தனர். அதே நேரத்தில் ஆசிரியர்களாக வரக்கூடிய எந்த சீனரும் முதலில் கிறிஸ்தவராக மாற வேண்டும் என்ற நிபந்தனைகளும் இருந்தது. கிறிஸ்துவ மிஷனரிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்களோ அதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டமும் மாறுபட்டு இருந்தது. குறிப்பாக பிரெஞ்சுக்காரர்கள் இலத்தீன் மொழியை அதிகம் சேர்த்தனர்.

ஐரோப்பிய மொழிகள், கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் இவற்றுடன் பைபிள் கல்வி ஆகியவையும் போதிக்கப்பட்டது. எனவே 1925 இல் கோமிங்டாங் கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க விதிகள் மிஷினரி பள்ளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. மாணவர்களை மத வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துவதும் தடை செய்யப்பட்டது.

1912 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனாவை ஆண்ட பல்வேறு அரசாங்கங்கள் கல்வித்துறையில் மேற்கொண்ட முயற்சிகள், தீர்க்க முடியாத பல சிக்கல்களை எதிர் கொண்டன. ஒவ்வொரு அரசும் அதன் ஆளும் வர்க்க நோக்கங்களுக்காக கல்வியை பயன்படுத்த முயன்றனர். ஆனால் எதுவும் அவர்கள் விரும்பிய அளவிற்கு வெற்றி பெறவில்லை. 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனத்தில் இனச் சிறுபான்மையினர் கல்வி என்பது மதத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. மதங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே மக்களை வைத்திருந்தார்கள். இஸ்லாமிய மதங்கள் தவிர இன்னும் பல இன குழுக்களில் மூதாதையர்களின் வழிபடக்கூடிய பூர்வீக மதங்களின் வழியாக கல்வி முறைகள் கற்பிக்கப்பட்டது. எந்த வகையிலும் சீனாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் இனச் சிறுபான்மையினர் வாழ்ந்த பகுதிகளில் ஏற்படவில்லை.

எனவே தான் புரட்சி நடைபெறுகிற காலம் வரை அதாவது 1950 ஆம் ஆண்டுகள் வரை ஒட்டுமொத்த இன சிறுபான்மையினர் கல்வி நிலைமை பின் தங்கிய நிலைமையாகவே இருந்தது. 1950 ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்தமான இன சிறுபான்மையினரில் 80 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற புதிய ஜனநாயக புரட்சி சீன மக்கள் குடியரசை நிறுவியது. அதன் பிறகு சிறுபான்மை மக்களுக்கான கல்வி வளர்ச்சியில் சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோழர்.தயா உங்கள் வாழ்வும் மரணமும் ஒரு படிப்பினை தான்

  ,---------------------- 35 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்த இயக்கப் பயணம் , கனிவான நட்பு , உறவுகளைக் கடந்த குடும்ப இணைப்புகள் என அத்தனையும் ...