அ.பாக்கியம்
சீன
கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பிறகு ஆழமான
ஆய்வுகள் அடிப்படையில் இனச் சிறுபான்மையினருக்கான கல்வி தங்கு தடையின்றி
வளர்ச்சியில் தடம் பதித்து வந்தது. ஆனால் சீன அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் சீன
சமூகத்தில் புதிய சிக்கல்களை உருவாக்கியதால் இனச் சிறுபான்மை கல்வியும் சில
பாதகமான நிலைமைகளை எதிர்கொண்டன.
1957-58 ஆம் ஆண்டுகளில் சீனாவில் வலதுசாரி எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமாக
மாசேதுங் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1958-60 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் அதிவேக முன்னேற்றம் தேவை என்ற
திட்டத்தின் அடிப்படையில் பெரும் பாய்ச்சல் இயக்கம் துவக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை கலாச்சார
புரட்சி தீவிரப்படுத்தப்பட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று
இயக்கங்களும் சீன சமூகத்தில் எதார்த்தமான நிலைமைகளிலிருந்து செயல்படக்கூடிய
முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் விளைவாக சில பாதகமான அம்சங்கள்
தலைதூக்கியது. இனக் கல்விக்கான திட்டங்கள் சிதைந்ததும் அவ்வாறு ஏற்பட்ட பாதகமான
அம்சங்களில் ஒன்றாகும்.
சித்தாந்தமே அனைத்தையும்
சீர்படுத்தும்
இக்காலகட்டங்களில்
மாவோ வின் சித்தாந்தங்களை போதிப்பது தான் தேசத்தின் முன்னுரிமை பணியாக
மாற்றப்பட்டது. வெவ்வேறு இனக்குழுக்களின் பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும்
உள்வாங்கிக் கொண்டு வர்க்க போராட்டத்துடன் இணைப்பது என்ற நிலையை கைவிட்டு வர்க்க
போராட்டம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இனக்குழுக்களின் கலாச்சார மாண்புகள், மதங்கள், பழக்கவழக்கங்கள் போன்ற தனித்துவமான தன்மைகள் இணக்கமான முறையில் அணுகப்பட்ட
நிலைமைகள் மாறி, பொதுவுடமை சித்தாந்தத்திற்கு எதிரானவையாக
கருதும் போக்கு முன்னுக்கு வந்தது.
இதன்
விளைவாக இனச் சிறுபான்மையினரின் கலாச்சார பண்புகள் பாரம்பரியங்கள் அனைத்தும்
நிலப்பிரபுத்துவ குணாம்சங்களைக் கொண்டவையாகவும், பிற்போக்கு தன்மை வாய்ந்தவை என்றும்,
அவைகள் பயனற்றவை என்றும் ஒதுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக
இனக்குழுக்களின் கலாச்சாரங்களை பற்றி ஏற்கனவே பாடத்திட்டங்களில் சொல்லப்பட்டிருந்த
விளக்கம் மாற்றப்பட்டு மறு விளக்கம் செய்யப்பட்டது. கல்வியைப் பெறுவதில் இனச்
சிறுபான்மை மக்களுக்கு பிரத்தியேகமான சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
பாடபுத்தகங்களில் மாவோயிச சிந்தனைகளும் சோசலிச சித்தாந்தமும் முன்னிலைப்படுத்தி
மற்ற அனைத்தும் தவிர்க்கப்பட்டன.
இதன்
விளைவாக ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் அணுகு முறையில் பல இனச் சிறுபான்மை மாணவர்கள் படிப்பதும்,
வாசிப்பதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பின் விளைவாக
இனச் சிறுபான்மை மாணவர்களின் கல்வித் திறன் குறைய ஆரம்பித்தன. கலாச்சாரப்
புரட்சியின் தாக்கம் சீன சமூகத்தில் பரவலான விளைவுகளை ஏற்படுத்தினாலும் இனச்
சிறுபான்மை மக்களின் கல்வியில் பாதிப்புகள் ஏற்படுத்தியது கண்கூடாக தெரிந்தது.
1976 ஆம் ஆண்டு தோழர் மாசேதுங் மறைந்த பிறகு கலாச்சார புரட்சி மற்றும் அதனால்
ஏற்பட்ட தவறுகள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டன. அந்தப் பரிசீலணையின்
அடிப்படையில் அனைத்து துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கினார்கள். இதேபோன்று இனச்
சிறுபான்மை மக்களின் கல்வியில் ஏற்பட்ட மிகப்பெரும் சேதாரத்தையும் சரி செய்ய
வேண்டும் என்ற மிகப்பிரமாண்டமான பணியினை சீன கம்யூனிஸ்ட் கட்சி புதிய தலைமை
முடிவெடுத்து மாற்றங்களை நோக்கி பயணித்தது.
சீர்திருத்தமும் இனக்
கல்வியின் மீட்சியும்
கலாச்சாரப்
புரட்சிக்கு பிறகு அனைத்து தவறுகளையும் சரி செய்வது என்று முடிவெடுத்த பொழுது, சீனா கம்யூனிஸ்ட்
கட்சிக்கு மிகப்பெரும் பணியாக மாறியது பெரும்பாதிப்புக்கு உள்ளான பொருளாதாரத்தை
மேம்படுத்துவதாகும். அதுவரை அரசியல் சித்தாந்த போதனைகளை மட்டுமே பிரதான
திட்டங்களாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் பொருளாதாரத்தில் வெளிப்படையாக
தெரிந்தது. மற்ற அனைத்தையும் விட அவசரப் பணியாக பொருளாதார மேம்பாடு
முன்வைக்கப்பட்டது. அதுவரை இருந்த உற்பத்தி முறைகளில் கடைபிடிக்கப்பட்ட உத்திகள்
மாற்றப்பட்டு புதிய உத்திகள்
புகுத்தப்பட்டன.
திறன்
நிறைந்த மனித வளங்களால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றும், இதற்காக திறன்மிக்க
நிபுணர்களை உருவாக்குவதும் உற்பத்தி திறன் வாய்ந்த உழைப்பாளர்களை பெருமளவு
உருவாக்குவதும் அடிப்படை தேவையாக அமைந்தது. இந்த இரண்டையும் நிறைவேற்றுவதற்கு
முன்தேவையாக மட்டுமல்ல அடிப்படைத் தேவையாகவும் கவனம் செலுத்த வேண்டியது கல்வித்
துறையாக அமைந்தது. இவற்றை அறிந்து கொண்டு கல்வித் துறைக்கான முக்கியத்துவத்தை சீன
மக்கள் குடியரசு சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அமல்படுத்த ஆரம்பித்தனர். புதிய ஜனநாயக
புரட்சிக்கு பிறகு கல்வி நோக்கங்கள் குறித்து பல்வேறு அம்சங்களை முன்னிறுத்தி
செயல்பட்டார்கள். ஆனால் தற்பொழுது சீர்திருத்த காலத்தில் கல்வி நோக்கம் என்பது
பொருளாதார நோக்குடையதாகவும், நாட்டின் உற்பத்தி திறனை
வளர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
கல்வியின்
நோக்கம் பொருளாதார நோக்குடையதாகவும்,
திறன்மிகு மனித வளங்களை உருவாக்குவதற்கும் என்று மாறுகிற பொழுது
சீனாவில் இருக்கின்ற இனச் சிறுபான்மை மக்களின் பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட
கல்விக்கான சிறப்புத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்பதை அறிந்தனர். இந்த
பாதிப்புகளால் பொதுவான தேர்வுப் போட்டிகளில் இனச் சிறுபான்மையினர் பங்கேற்க இயலாத
நிலமை உருவாகும். இதுபோன்ற இன்னும் பல இடர்பாடுகளை ஆய்வு செய்து 1981 ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மையுருக்கான தேசிய கல்வி மாநாட்டை மீண்டும்
விரிவான முறையில் நடத்தினார்கள். இந்த மாநாட்டின் முடிவுகளின் படி சில
குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
இனச்
சிறுபான்மை பகுதிகளில் அடிப்படை கல்வியை விரிவாக்கம் செய்தனர். இந்த மாணவர்களிடம்
போட்டித் தேர்வு எதிர்கொள்வதற்கான பாடத்திட்டங்களையும், அதற்கான சிறப்பு
ஏற்பாடுகளையும் செய்தார்கள். தொழில்நுட்ப திறனை வளர்ப்பதற்காக புதிய பள்ளிகளை
நிறுவினார்கள். தொழிலாளர்களின் திறன்களை அதிகப்படுத்துவதற்காக இனச்
சிறுபான்மையினர் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும்
சேர்வதற்காக முன்னுரிமை முறைகளை அமல்படுத்தினார்கள். அதாவது இனச் சிறுபான்மை
மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி, அதன் மூலம்
கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வாய்ப்பை
உருவாக்கினார்கள்.
சீர்திருத்த
காலத்தில் எடுத்த மிக முக்கியமான திட்டம் என்பது உறைவிட பள்ளியாகும். இனச்
சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியில் இந்த திட்டம் பெரும் மாற்றங்களை
உருவாக்கியது என்றால் மிகையாகாது. இனச் சிறுபான்மை மக்கள் எல்லையோரங்களிலும், மலைப்பகுதிகளிலும்,
பரந்த மேய்ச்சல் நிலங்களிலும் வாழ்ந்தார்கள். இவர்களது பிள்ளைகள்
பள்ளிக்கு வந்து செல்வது, அதற்கான பொருளாதாரங்களை
எதிர்கொள்வது போன்றவை கடினமாக இருந்தது. எனவே அரசு உறைவிட பள்ளி ஆரம்பித்தது. இந்த
உறைவிட பள்ளிகள் முதல் முதலாக ஆரம்பிக்கிற பொழுது தொடக்கக் கல்விக்கு மட்டுமே
அமலாக்கினார்கள். 1984 ஆம் ஆண்டு திபெத்திய பகுதியில்
மாணவர்கள் உயர்தர கல்வியை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மேல்நிலைப்
பள்ளிகளிலும் உறைவிட பள்ளியை ஆரம்பித்தார்கள். இந்த உறைவிட பள்ளிகளில் அனைத்தும்
அரசு செலவில் இலவசமாக வழங்கப்பட்டது.
இரு சட்டங்களும் இன
அடையாளங்களும்
சீர்திருத்தத்தின்
தொடர்ச்சியாக 1984 ஆம் ஆண்டு இரண்டு முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டன. ஒன்று தேசிய சட்டம்
மற்றொரு சட்டம் பிராந்திய சுயாட்சி சட்டம். இந்த இரண்டு சட்டங்களும் இனச்
சிறுபான்மை மக்களின் கலாச்சாரத்தின் தனித்தன்மை வாய்ந்த உரிமைகளை பாதுகாப்பதை
நோக்கமாகக் கொண்டிருந்தது. இனச் சிறுபான்மையினரின் தனித்துவமான மாண்புகள், கலாச்சார புரட்சி காலத்தில் அழிக்கப்பட்ட அடையாளங்கள், தற்போது இந்தச் சட்டத்தின் மூலமாக மேம்பட ஆரம்பித்தது. குறிப்பாக பன்முக
கலாச்சார உறவுகளை மேம்படுத்தக்கூடிய முறையில் ஜின்ஜியாங் மாகாணத்தில் இச்சட்டம்
பெரும் வரவேற்பை பெற்றது. இங்குள்ள இனச் சிறுபான்மையினரின் தேவைகளை பூர்த்தி
செய்யக்கூடிய முறையில் உள்ளூர் அளவிலான பாடத்திட்டங்கள் தொகுக்கப்பட்டன.
உதாரணமாக, கலாச்சார புரட்சி காலத்தில் பின்தங்கிய
கலாச்சாரங்கள், நிலப்பரப்புத்துவ கலாச்சாரங்கள் என்று
முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டவை தற்போது சீர்திருத்த நடவடிக்கை மூலமாக பொருத்தமான
கலாச்சார மாண்புகள் அனைத்தும் சிறுபான்மை
யினரின் கலாச்சார இலக்கியமாக அறிமுகப்படுத் தப்பட்டு கற்பிக்கப்பட்டது.
இனச் சிறுபான்மை மக்களின் மொழியை பயன்படுத்துவதில் இருந்த அனைத்து தடைகளும்
அகற்றப்பட்டு சிறுபான்மை இன மக்களின் கல்வி முறைகளில் தங்கள் மொழியை
பயன்படுத்துவதற்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டன. சிறுபான்மை மக்களின் தாய்
மொழியில் இருக்கக்கூடிய பாடங்கள் அனைத்தையும் மேம்படுத்தி முறைப்படுத்தி தொகுத்து
வெளியிட்டார்கள்.
சீர்திருத்த
காலத்திற்குப் பிறகு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள்
பல்கலைக்கழகங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ சேருகின்ற வரை அனைத்தையும் தங்களுடைய தாய்
மொழி வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலைமையில் உருவாக்கினார்கள்.
இக்காலங்களில் கடைபிடிக்கப் பட்ட இரு மொழிக் கொள்கை என்பது சிறுபான்மை மக்களால்
பெரிதும் வரவேற்கப்பட்டது. இனச் சிறுபான்மை மாணவர்கள் தங்களின் தேசியத்தை அறிந்து
கொள்வதற்கும், சீன மொழியின் மூலமாக இதர கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கும், அவற்றில் சிறந்து விளங்குவதற்குமான வாய்ப்புகளை இந்த இரு மொழிக் கொள்கை
உதவி செய்தது. மேற்கண்ட கல்வி முறை ஒரு மாணவர் தான் விரும்பிய வகையில்
உருவாவதற்கான சூழலை அமைத்துக் கொடுத்தது. இதனால்தான் இந்த மக்கள் கல்விக் கொள்கையை
வரவேற்றனர்.
மோதல்களும் சீன ஒற்றுமையும்
சமூகத்தின்
பிரச்சினைகளை கல்விக் கொள்கையுடன் இணைத்து பார்ப்பதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி
சிறப்பு தகுதி பெற்றிருந்தது. சீர்திருத்த காலத்திற்குப் பிறகு இனச் சிறுபான்மை
யினருக்கான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதன் விளைவாக இன அடையாளங்கள் மேலோங்கி மற்ற இனங்களுக்கு எதிரான உணர்வுகள் உருவாகி
வேற்றுமைகளும் விரோதங்களும் வளர்ந்து விடாமல் இருப்பதற்கான முறைகளில் கல்விக்
கொள்கை அமைய வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார்கள். இவ்வாறு சிந்திப்பதற்கு
அங்கு நடைபெற்ற பல சம்பவங்கள் காரணமாகவும் அமைந்திருந்தது.
1987 மற்றும் 88 ஆம் ஆண்டுகளில் திபெத்தில் பெரும்
கலவரம் நடைபெற்றது. இந்தக் கலவரத்தை தலாய்லாமாவின் ஆதரவாளர்களுடன் அமெரிக்க
தூண்டுதலில் நடைபெற்றது. 1988 ஆம் ஆண்டு ஜின்ஜியாம்
மாகாணத்தில் உய்குர் இனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் பெரும் கலவரம்
நடத்தப்பட்டது. 1989ஆம் ஆண்டு தியானன்மென் சதுக்கத்தில்
நடைபெற்ற கலவரங்கள். மேற்கண்ட கலவரங்களுக்கு அந்நிய சக்திகளின் நேரடி காரணங்கள்
இருந்தாலும் அவற்றுக்கு மாணவர்கள் ஏன் ஆட்படுகிறார்கள் என்பதையும் அதற்கான
பின்னணிகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படை நோக்கம் என்பது கல்வி
முறைகளில் ஏதாவது பாதகமான அம்சங்கள் இருக்கிறதா என்பதையும் கணக்கில் எடுத்தனர்.
இந்த ஆய்வு தரவுகளின் அடிப்படையில் 1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை சீன கம்யூனிஸ்ட் கட்சி இன சிறுபான்மை மக்கள் மத்தியில்
ஒற்றுமையை பாதுகாக்க கூடிய முறையிலும் ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வை உருவாக்கக்கூடிய
வகையிலும் பிரச்சாரத்தை அடிமட்டம் வரை கொண்டு சென்றார்கள்.
கல்வி
முறைகளில் இனம் சார்ந்த கலாச்சாரங்கள் பாரம்பரிய பழக்க வழக்கங்கள்
மதிக்கப்பட்டாலும் ஒன்றுபட்ட சீனம் என்ற உணர்வை மேம்படுத்தக்கூடிய வகையில் கல்வி
முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். இந்த முயற்சியின் விளைவாக ஒன்றுபட்ட
சீனா என்ற உணர்வு உள்ளார்ந்த மதிப்புகளில் ஒன்றாக மாறியது. சீனா வரலாற்றில் நீண்ட
காலம் ஒன்றுபட்டு இருந்தது என்பதையும்,
பல செழிப்பான வரலாறுகளை உள்ளடக்கி உள்ளது என்பதையும், புகழ்பெற்ற பாரம்பரிய கலாச்சாரங்களும் இருந்தன என்பதை கல்வி முறையில்
கொண்டு வந்தனர். கலாச்சாரப் புரட்சி காலத்தில் கன்பியூசிய சிந்தனைகள் முற்றிலுமாக
புறக்கணிக்கப் பட்டதிலிருந்து காலத்துக்கேற்ற கூறுகளை உள்வாங்கிக் கொண்டனர். இதன்
விளைவாக சீன மக்கள் மேற்கத்திய சீரழிவுகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பதற்கான
உணர்வுகள் பரவலாக மேலும் இது. இந்த ஒன்றுபட்ட சீனம் என்ற உணர்வுடன் சீனப்
பண்புகளுடன் கூடிய சோசலிசம் என்ற கருத்தாக்கத்தையும் இணைத்தே முன்னிலைப் படுத்தினார்கள்.
மற்றொரு
முக்கியமான அம்சம் கடந்த காலங்களில் நடைபெற்ற இனங்களுக்கு இடையிலான மோதல்கள், கலவரங்கள் போன்ற
வரலாற்றில் பழி தீர்க்கும் கருத்துக்கள் பாடதிட்டங்களில் இருந்து
அப்புறப்படுத்தப்பட்டது. ஒற்றுமைக்கான அம்சங்களை முன்னிலைப் படுத்தி பாடத்திட்டங்கள்
உருவாக்கப்பட்டது. புரட்சிக்கு முந்தைய காலத்தில் பெரும்பான்மை இனமான ஹான் சீனர்களுக்கும்
இன சிறுபான்மையினருக்கும் திருமணங்கள் நடைபெற்றது. இன்று திருமணங்களை இரு பகுதியிலும்
ஒரு அவமானமக கருதினார்கள். சீர்திருத்தக் காலத்தில் இனங்களுக்கு இடையிலான ரத்த உறவு
முறைகளை மேம்படுத்தக்கூடிய முயற்சிகள் எடுக்கப்பட்டது. இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை
மேலோங்கிய பிறகு திருமணங்கள் மதிப்பு மிக்கவைகளாக மாறிவிட்டது. இந்த மாற்றங்களில் கல்வி
முறையில் எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது.
சீர்த்திருத்தக்
காலத்தில் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பு கல்வி முறைகளில் கொண்டுவரப்பட்ட
மாற்றமாகம். 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீன மக்கள் குடியரசு கட்டாய கல்வித் சட்டத்தை
நிறைவேற்றி அதே ஆண்டு ஜூலை மாதம் அமுலாக்கத்திற்கு கொண்டு வந்தது. இந்த சட்டம் சீன
மக்களின் கல்வி வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சட்டம் இன
சிறுபான்மை யினருக்கும், அனைத்து பாலினத்தவர்களுக்கும்
பொருந்தும் என்று அறிவிக்கப் பட்டது. ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் 9 ஆண்டுகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று இந்த சட்டம் உத்தரவிட்டது.
முதல் ஆறு ஆண்டுகள் தொடக்கநிலை கல்வியும் அடுத்த மூன்று ஆண்டுகள் நடுநிலை
பள்ளியின் கல்வியையும் கற்க வேண்டும். இந்த கட்டாய கல்வி முறைக்கு வரக்கூடிய
அனைவரும் அரசின் செலவில் இலவசமாக படிக்கவைக்கப்பட்டனர்.
இந்த
சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் நெகிழ்வுத் தன்மையுடன் அமுலாக்கி
வெற்றி கண்டது. கல்வி அறிவின்மையை போக்குவதற்கும், பொருளாதாரத்தில் நவீன மயமாக்களை
அதிகரிப்பதற்கும், கல்விக் கொள்கை என்பது சட்ட அடிப்படையிலான
அமைப்பாக மாற்றுவதற்கும், இந்த சட்டம் மற்ற அனைத்து
சட்டங்களைவிட மிகஅதிகமான முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. இந்தக் கட்டாய
கல்விச்சட்டத்தின் மூலம் மக்களிடம் அறிவியல் வளர்ச்சியையும் தேசிய கல்வியின்
நிலைமைகளையும் மேம்படுத்தியது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் எவரும்
இடையில் நிற்கக்கூடாது என்பதற்காக சிறப்பு நிதி உதவி திட்டத்தையும்
அறிமுகப்படுத்தினார்கள். 2010 ஆம் ஆண்டுகளில் ஒன்றும்
குறையாது என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதாவது ஒருவரும் சீனாவில் கல்வி பெறாமல்
இருக்கக்கூடாது என்பதற்கான திருத்தங்களை கொண்டு வந்து அமலாக்கினார்கள்.
சீனாவில்
இனச் சிறுபான்மையினரின் கல்வி முறை என்பது 1965 ஆம் ஆண்டு வரை மிகப் பெரும் வளர்ச்சியாகவும் அதற்கு அடுத்து பத்தாண்டுகள்
கேட்க நிலையும் மீண்டும் 1976 ஆம் ஆண்டு முதல் எடுத்த
முயற்சிகள் குறிப்பாக முன்னுரிமை திட்டங்கள், உறைவிட
பள்ளிகள், கட்டாய கல்வி சட்டம் போன்றவைகள் பெரும் பங்காற்றி
உள்ளது.
அ. பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக