Pages

வியாழன், மார்ச் 05, 2026

தோழர்.தயா உங்கள் வாழ்வும் மரணமும் ஒரு படிப்பினை தான்

 


,----------------------

35 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்த இயக்கப் பயணம், கனிவான நட்பு, உறவுகளைக் கடந்த குடும்ப இணைப்புகள் என அத்தனையும் ஒரு நொடியில் அறுந்து போனது. எங்களை எல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்து மறைந்து போனாயே

தோழர் அய்யலு அவர்களின் இளைய புதல்வன் விஜயசாரதியின் மரண அதிர்வலைகள் எங்கள் நெஞ்சங்களில் இருந்து நீங்கும் முன்பாக இடியாய் இறங்கி மீளா துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டாயே...

மரண ராஜ்ஜியவாசிகளுடன் உரையாடுவது பகுத்தறிவுக்கு பொருத்தமற்றதுதான். ஆனால் உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அது ஒரு வடிவம் என்பதால் உன்னோடு உரையாட விரும்புகிறேன்...

ஜனவரி 17ஆம் தேதி நாம் சந்திப்பதினால் நான் எழுதி வெளிவர இருந்த சீன சோசலிசத்தில் மதங்களும் மத வழிபாடுகளும் என்ற புத்தகத்தை எடுத்துவரச் சொன்னீர்கள். நானும் எடுத்து வந்தேன். கலந்துரையாடிவிட்டு மாலை கடந்து சென்றாய் ....

18 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி, அதன் பிறகு அறுவை சிகிச்சை சென்னையில் செய்ய வேண்டும் என்ற செய்தியும் கவலை அளிப்பதாக இருந்தாலும், அறுவை சிகிச்சையின் மூலம் அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நகர்ந்தேன்...

உங்களின் குடும்பமும் உறவினர்களின் விருப்பப்படி சென்னையில் உள்ள எம் ஜி எம் மலர் மருத்துவமனையில் 22 ஆம் தேதி பரிசோதனை முடித்து, 27 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 28ஆம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, பிப்ரவரி 3ஆம் தேதி வீட்டிற்குச் சென்று பிப்ரவரி 10ஆம் தேதி செக்கப் வருகை புரிந்து மிக விரைவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்களும் நமது தோழர்களும் மகிழ்ச்சியாக அறிந்து கொண்டு சென்றார்கள்.

எம்ஜிஎம் மலர் மருத்துவமனை தோழர்கள் தென் சென்னை மாவட்ட குழு உறுப்பினர், மயிலாப்பூர் பகுதி செயலாளர் மலர் மருத்துவமனை சங்கத்தின் தலைவர் ரவி அவர்களும், தற்போதைய செயலாளர் இன்பரசி மற்றும் விஜியா, இமானுவேல் போன்ற தோழர்களும், தோழமையும் பாசமும் நிறைந்த முறையிலே உங்களை கவனித்துக் கொண்டதை நீங்கள் உணர்வு பூர்வமாக தெரிவித்தீர்கள்.....

 அறுவை சிகிச்சை முடித்த பிறகும் நமது தோழர் விஜயா பணியாற்றக்கூடிய ஏழாவது தளத்திலேயே உங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு 24 மணி நேரமும் தோழர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

மலர் தோழர்கள் குறிப்பாக ரவி உட்பட பணத்திற்கு என்ன செய்வார்கள், இருவரும் முழுநேர ஊழியர்கள் என்று பலரும் உங்களிடம் கேட்காத ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.

 அறுவை சிகிச்சை நடந்தால் தோழர் சங்கரி அவர்களும் சுகி அவர்களும் எங்கு தங்குவார்கள், அருகாமையிலே தங்க வேண்டும் என்ற தேவையுடன் அங்கு இருக்கக்கூடிய லாட்ஜை அணுகிய பொழுது பணம் அதிகமாக இருப்பதால் தோழர் ரவி அவருடைய இல்லத்தில் தோழர் சுகி அவர்களையும், மருத்துவமனையின் அருகாமையில் இருந்த தோழர் இமானுவேல் இல்லம் சிறியதாக இருந்தாலும் அங்கு தோழர் சங்கரியையும் தங்க வைத்து கவனித்துக் கொண்டார்கள்.

 காலையும் மாலையும் தோழர் ரவி அவர்கள் உடன் இருந்தார். இது போன்ற தோழர்களின் ஆதரவு பலருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்று என்னிடம் தெரிவித்தாயே தோழா....

தோழர் ராஜப்பா பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட்டு கடினமான சூழலில் அங்கு அனுமதிக்கப்பட்ட குணமடைந்தார்.தோழர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 20க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு அங்கே இந்த அறுவை சிகிச்சை நடத்தி அதற்கான உதவிகளையும் இந்த தோழர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

அவர்களின் பாசமும் தோழமையும் நிறைந்த அந்த உணர்வு எல்லையற்றது....

அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிகமான தோழர்களை அனுமதிக்க கூடாது என்பதில் நானும் உறுதியாக இருந்தது மட்டுமல்ல தோழர் ரவி அங்கிருந்து முடிந்தவரை அதை அமலாக்கினார். தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எஸ் குமார் மற்றும் பத்திரிகையாளர் பெருமாள் போன்றவர்கள் அடிக்கடி வந்த பொழுதும் அவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை.

மாநில குழு உறுப்பினர் தோழர் வனஜா அவர்கள் பல தோழர்களுடன் வந்த பொழுதும் அவர்களை எல்லாம் நிறுத்திவிட்டு வனஜா அவர்களை மட்டும் அனுமதித்தார்.... நீங்கள் அறையில் இருந்த பொழுது உங்களை பாதுகாப்பதில் மருத்துவமனை தோழர்கள் கண்ணும், கருத்துமாக இருந்தார்கள்....

பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 12 மணிக்கு நான் மரண செய்தியை கேட்டவுடன் ரவி அவர்களுக்கு தெரிவித்தேன். அவரும் எழுந்து அதிகாலையில் என்னுடன் வந்து விட்டார். அதன் பிறகு மருத்துவமனை தோழர்கள் மரணத்தை அறிந்து கொண்டு பார்த்து பார்த்து சிகிச்சை அளித்தோமே, பாதுகாப்பாக பார்த்துக் கொண்டோமே இப்படி ஆகிவிட்டது என்று  உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

சிறந்த முறையில் அறுவை சிகிச்சை, தோழர்களின் கவனிப்பும் உங்களை அதிவேகமாக குணமடைய செய்தது. அதுவே உங்களுக்கு உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக நம்பிக்கை அளித்து உங்கள் உயிரைப் பறித்து விட்டது. அதீத நடை பயிற்சியும் விரைவில் பணிகளில் இறங்க வேண்டும் என்று உங்கள் ஆர்வமும் எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டது? உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உங்கள் இணையர் தோழர். சங்கரி அவர்களுக்கும் அந்த நம்பிக்கை வந்தது மட்டும் அல்ல, மற்ற சிலருக்கும் அப்படிப்பட்ட நம்பிக்கை வந்திருப்பதை நான் அறிந்தேன். விரைவான குணமடைதல், அதன் மீது ஏற்பட்ட அதே நம்பிக்கையும் உங்களை எங்களிடமிருந்து பிரித்து விட்டது...

நீங்கள் எந்த அளவு களப்பணியாற்றும் தோழர்களின் உணர்வுகளில் கலந்து இருக்கிறீர்கள் என்பதை உங்களின் இறுதி நிகழ்ச்சி சாட்சியமாக அமைந்தது. பல தோழர்களின் அழு குரல்களை கேட்க முடிந்தது மாவட்ட அளவிலான தோழர்கள் தங்கள் துக்கத்தை அடக்க முடியாமல் வெளிப்படுத்திய வண்ணமே இருந்ததை பார்த்தேன்....

நீங்கள் தோழர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதும், அவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதும், அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதும், எண்ணற்ற தோழர்களை உங்களை நோக்கி ஈர்த்துள்ளது... கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கான அடையாளமாக உங்ளது பணியை இருந்துள்ளது.இதை நீங்கள் அறியாமல் நாங்கள் அறிய முடிந்தது.

நான் மட்டுமல்ல இன்னும் பல தோழர்கள் நெருக்கடிகளை சந்தித்த பொழுது நியாயத்தின் பக்கம் நின்று எடுத்த நிலைப்பாடுகள் பலரைப் மனபலத்தை பாதுகாத்து உள்ளது...

மைசூரில் குடியிருக்கும் குடியாத்தம் ரமேஷ் குடும்ப மங்களுர் சென்று இருந்த தால்வர முடியவில்லை என்று என்னிடம் கதறி அழுது விட்டார்கள்....

 திருவண்ணாமலை மாவட்டம் தோழர் குமரேசனின் தங்கை மகள் பிருந்தா காலதாமதமாக செய்தி கிடைத்தாலும் பெங்களூரில் இருந்து ஓடி வந்து விட்டார்...

 1990 ஆம் ஆண்டுகள் மத்தியில் சென்னையில் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்தை ஒட்டி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு இரவு லாரி விபத்தில் சிக்கி தனது மனைவியையும், மகளையும் கண்ணெதிரே பறிகொடுத்தது மட்டுமல்ல தனது இரண்டு கால்களையும் இழந்த தோழர் ஜெயக்குமார், அவர்களின் குடும்பத்தை சந்தித்தேன். தற்போது பக்கவாதத்தால் படுத்து கொண்டிருப்பவர். கட்டிலோடு என்னை தூக்கிச் செல்லுங்கள் என்று கதறி அழுவதை தெரிவித்த பொழுது நான் கலங்கி விட்டேன்.

சேலத்தில் இருந்து தோழர் தங்கவேல் அவர்களும், குழந்தைவேலு சண்முகராஜா செய்தி கேட்டு தொலைபேசியிலேயே கதறி அழுதுவிட்டார்கள்.

இது போன்று எத்தனை குடும்பங்களோடு நீங்கள் கலந்து இருக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாமலே போய்விட்டது.....

பல நேரங்களில் நாம் அஞ்சலி கூட்டங்களில் கலந்து கொள்கிற பொழுது நமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தது உங்களது அஞ்சலி நிகழ்வில் நினைவுக்கு வந்து தொலைந்தது..... ஆனால் அஞ்சலி செலுத்த வந்தவர்களின் உணர்ச்சி பிழம்புகள் உணர்வுகளை வாட்டி எடுத்தது......

நூறு முறைக்கு மேல் ரத்த தானம் செய்து குருதி கொடை வள்ளலாக வாழ்ந்தீர்கள், வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர், இடைக்கமட்டி நிர்வாகி, மாவட்ட செயலாளர,மாநில துணை நிர்வாகி, இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவராக, வாலிபர் சங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட உடன் வேலூர் மாவட்டத்தில் முதல் ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர், அதன் பிறகு கட்டுமான சங்கம் அமைக்கப்பட்டு அதன் மாவட்டச் செயலாளர்,விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளராக, மாநில நிர்வாகியாக, கட்சியின் மாவட்ட குழு, மாவட்ட செயற்குழு, மாவட்ட செயலாளர் என்று பல்வேறு களப்பணிகளான அனுபவங்களோடு உங்களது இயக்க பயணம் தொடர்ந்தது... இந்த அனுபவம் அரிதாக கிடைக்கப்படக்கூடியதாகும்..... .

பல தோழர்களும் நீங்கள் கட்சியின் மாநில குழுவில் இல்லையே என்று ஆதங்கப்பட்ட பொழுது அவையெல்லாம் இயக்கத்திற்கான அளவுகோல்கள் அல்ல களப்பணிகள் மட்டும்தான் உயர்ந்த அளவுகோல் என்று புறம் தள்ளிவிட்டு களம் கண்ட காட்சிகள் எல்லாம் கண்முன்னே வந்து செல்கிறது தோழா....

நான் உட்பட பல தோழர்கள் மாவட்டங்களுக்கு இயக்கப் பணிகளுக்காக வருகின்ற பொழுது உங்கள் வீட்டிலே தான் தங்க வைக்கப்பட்டோம். ஆரம்பத்தில் போதுமான வசதி இல்லாத காலத்தில் இது நடந்தது தோழர் சங்கரி அவர்களின் உபசரிப்பும் உங்களது சகோதரர் சுகி எண் பணிகளும் வந்த தோழர்களை பெரும் மகிழ்வாக அமைந்திருக்கும்....

கணவன் மனைவி இருவரும் முழுநேர ஊழியராக எந்தப் பின்னணியும் இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் பயணிப்பது எளிதான விஷயம் அல்ல..... பொருளாதார ரீதியாக எந்தப் பின்புலமும் இல்லாமல் ஒரு (இன் செக்யூரிட்டி) பாதுகாப்பற்ற உணர்வுகளிலேயே அனைத்தையும் எதிர்கொள்வது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவித்தவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதையும் விவாதித்து இருக்கிறோம்..

 பிழைப்பு வாதமோ சந்தர்ப்பவாதமோ யாரிடம் வந்தாலும் உங்களிடம் வந்து விடக்கூடாது என்பதற்கான போராட்டத்தை வலுவாக கடைசி வரை நடத்தினீர்கள்.....

மூன்று முறை மாவட்ட செயலாளர் ஆக இருந்து நான் மேலே சொன்ன அத்தனை அமைப்புகளையும் பொறுப்பு வகித்து அனுபவத்தின் தொகுப்பாக இருந்து செயல்பட்டீர்கள். உங்களுக்குப் பிறகு தோழர் சங்கரி அவர்களும் மாவட்டச் செயலாளரான பிறகு உரிய முறையில் உங்களது பணியை தொடர்ந்தீர்கள்

குணமடைந்த பிறகு உங்களுடைய பூர்வீக கிராமமான கோனே பால்ஸ் அருகில் உள்ள ஸ்ரீராமபுரம் செல்ல வேண்டும் என்ற உனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளாமலே சென்று விட்டீர்களே...

ஊத்துக்கோட்டை வட்டம் வள்ளியூரில் பத்தாவது படிக்கிற பொழுது முதல் மாணவனாக வந்ததினால் இன்றுவரை அந்தப் பள்ளியின் பெயர் பலகையில் உங்களது பெயரையும் தாங்கி நிற்கிறது என்பதை ஒரு முறை கூட பெருமையாக எங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் சென்று விட்டாயே.....

நானும் ரவீந்திரனும் அதற்கு முன்பு அகத்தியலிங்கமும் உங்கள் மாவட்டத்தில் இயக்கப் பணிகளுக்காக வந்திருக்கிறோம். மாவட்ட பொறுப்பு என்ற முறையில் மிகக் கூடுதலான முறையில் இயக்கம் கட்டக்கூடிய பணியில் உங்களோடு இணைந்து பயணித்திருக்கிறேன்....

1987 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட ஆற்காடு மாவட்ட மாநாடு நடைபெற்ற பொழுது வழக்கறிஞர் தோழர் சம்பத்குமார் மாவட்ட தலைமை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மறைந்த தோழர் ரங்கராஜன் தலைவராகவும் நீங்கள் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள்.  இவரைச் செயலாளராக மாற்றி விட்டால் யாரு சுவரெழுத்துக்களை எழுதுவது என்று ஒரு தலைவர் கேட்ட பொழுது இரண்டையும் செய்வார் என்று நான் பதிலளித்தேன். நீங்கள் பக்கத்தில் நின்று கொண்டு சிரித்துக்கொண்டிருந்தீர்கள்.

அவர் கேட்டதற்கு காரணம் உண்டு. உங்களின் சுவரெழுத்துக்கள் மக்கள் மனதில் பதியப்பட்டவை. உங்களது தூரிகைகள் மூலம் இடதுசாரி சிந்தனைகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் நடந்த அகில இந்திய மாநாடு மட்டுமல்ல, அடுத்தடுத்து நடைபெற்ற அரசியல் மாநாடுகளும், தேர்தலிலும் உங்களுடைய தூரிகை இல்லாமல் இருந்ததில்லை. ஓவியக் கலைஞனாகவும் வளம் வந்தீர்கள்.

உங்களின் வருகைக்குப் பிறகு நகர்ப்புறங்களில் குறிப்பாக வேலூரைச் சுற்றி பல கிளைகளை உருவாக்க முயற்சி எடுத்தீர்கள். அந்த முயற்சியின் ஒருவனாக நானும் பங்கு பெற்றேன். அப்பொழுது பிள்ளையார் கோவில் தெருவில் இடதுசாரி இயக்கத்தின் அலுவலகம் இருந்தது . 1

988 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட மாநாட்டில், ஆரணியின் சேவூரிலிருந்து வறுமையின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருந்த தோழர் வீரபத்திரன் இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு வட ஆற்காடு மாவட்டத்தின் தலைவராகவும், நீங்கள் செயலாளராகவும் பொறுப்பை ஏற்றுக் கொண்டீர்கள்.

 அதன் பிறகு நீங்கள் இருவரும் வாலிபர் சங்கத்தின் அந்த மாவட்டத்தின் பெரும் அடையாளமாக மாறிவிட்டீர்கள்.

மாவட்டம் பிரிக்கப்பட்ட பொழுது மறைந்த சக்திவேல் தலைவராகவும் நீங்கள் செயலாளராகவும் பணியாற்றினீர்கள்.

மாநில நிர்வாகிகள் யாராக இருந்தாலும் கிளை அளவில் உறுப்பினர் சேர்ப்பதும், கிளைகளை உருவாக்குவதும், சென்ற ஊர்களில் கிடைக்கும் இடங்களில் தங்கி விட்டு வாய்ப்பிருந்தவற்றை சாப்பிட்டுவிட்டு இயக்கம் கட்டிய காலம். களத்திற்கு செல்வது மட்டுமே மிகப்பெரும் இயக்கப் பணி கலாச்சாரமாக அன்றைய தினம் இருந்தது.

அதன் தொடர்ச்சியாக உங்களின் மூலமாக மாவட்டத்தின் முழுவதும் களத்தில் இறங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்த இடங்களும் முன்னணி தோழர்களும் பெயர்களும் மறக்காமல் இருக்கிறது என்று சொன்னால் நடைமுறை கற்றுத் தந்த பாடமாகும். இதோ சில உதாரணங்கள்......

வேலூரில் சத்துவாச்சாரி உடற்பயிற்சி கூடத்தின் மூலமாக உருவான வாலிபர் சங்க கிளைகள், சைதாப்பேட்டை விருப்பாச்சிபுரம், காட்பாடி, பெருமுகை போன்ற பகுதிகளிலும், மேல்மோணவூர் பகுதிகளில் தோழர் பரசுராமன் மூலமாக அமைக்கப்பட்ட கிளைகள் நடைபெற்ற இயக்கங்கள்...

அரக்கோணம் ரயில்வே காலனியில் செம்மலர் சீனிவாசன், தாமோதரன், சிவக்குமார் போன்றவர்களும் ஏற்கனவே இயக்கம் இருந்த மங்கம்மாள் பேட்டையில் தோழர்கள் வேணு, நகரத்தில் சிட்டிபாபு, தற்போது சிட்கோவில் குடியிருக்க கூடிய அன்பழகனின் சகோதரரும் அன்பழகனும் செய்த பணிகள் அவர்களோடு நீங்கள் என்னை இணைத்த இயக்கங்கள்...

ஆற்காட்டில் வாலிபர் சங்கத்தின் அடையாளமாக பணியாற்றிய தோழர் சந்திரன், ஆடழரசு, வாலாஜாவின் கோவர்தனன், மணி அனைவரும் மாற்றுத்திறனாளியாக இருந்து தீக்கதிரை விநியோகித்து வந்த தோழர் கிட்டப்பாவின் கடைகளில் இருந்து இயக்கப் பணிகளை தொடங்கிய நிகழ்வுகள்....

காவேரிப்பாக்கத்தில் தோழர் வடிவேலு அவர்களின் மகள் உமா மற்றும் அவர் குடும்பத்தினரும் அருகாமையில் இருந்த பணப்பாக்கம் போன்ற கிராமங்களில் வாலிபர் சங்கம் நடத்திய போராட்டங்களின் மூலமாக நமக்கு கிடைத்த தொடர்புகள்..

குடியாத்தம் நகரத்தில் வலுவான கிளைகள் இருந்த பொழுதும் கிராமங்களில் கிளைகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தோழர் சம்பத்குமார், உடற்பயிற்சி கூடம் நடத்திய தோழர் முருகானந்தம், நந்தகுமார், குணசேகரன், குழந்தைவேலு, ஆனந்தன், சாமிநாதன், காத்தவராயன்... இன்னும் ஒரு சில தோழர்கள் உதவியோடு கிராமக் கிளைகளை அமைப்பதற்கு அன்றைய சொகுசுப் பயணமான சைக்கிளில் டபுள்ஸ் சென்ற நினைவுகள் முட்டி மோதுகிறது...

 நாம் இருவரும் சென்றது மட்டுமல்ல முதுபெரும் தலைவர் தோழர் ஆர் பரமசிவம் அவர்கள் என்னை ஒரு சைக்கிளில் அமர வைத்தும், உங்களை வேறொரு தோழர் அமர வைத்தும் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார்களே அந்த அனுபவங்கள் எல்லாம் உங்களால் எனக்கு கிடைத்த பெரும் அனுபவமாகும்... வேறு யாருக்கு கிடைக்கும் என்று கேள்வியும் எழத்தான் செய்கிறது....

திருச்சி அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதிதாக வந்த வேலூர் நகரத்தில் இருந்த இளைஞர்கள் சென்றார்கள். காவிரி ஆற்றில் குளிக்கும் பொழுது வேலூர் நகரத்திலிருந்து ஒரு வாலிபர் சங்கத் தோழரும், தோழர் அருள் சீனிவாசன் அவர்களின்  தம்பியும் மரணமடைந்தார்கள். இந்த இரண்டு மரணமும் சங்கத்திற்கு பெரும் சவாலாக மாறியது. தோழர் அருள் சீனிவாசன் அத்தகைய துன்பங்களையும் கடந்து இயக்கத்தில் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் மூலமாக ஆம்பூரிலும், தோழர் சிவாஜி மூலமாக வாணியம்பாடியிலும், ஆலங்காயத்திலும் அமைப்புகள் உருவாகியது. ஆலங்காயத்திற்கு நாம் வேலூரில் இருந்து சென்று வந்த பெரும் பயண நினைவுகள்.....நீங்கதவை

தோழர் வீரபத்திரனுடன் இணைந்து ஆரணியில் வாலிபர் சங்கம் கட்டக்கூடிய பணிகளுக்காக இரண்டு நாட்கள் தங்கி செயலாற்றினோம். தோழர் தாஸ் வீட்டின் திண்ணையில் பல தோழர்கள் படுத்து உறங்கினோம். தாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உணவளித்தார்கள். திண்ணையில் உறங்குவதும், பம்பு செட்டில் குளிப்பதும், கூட்டங்களுக்கு செல்வதும் அன்றைய ஒரு சொகுசான வாழ்க்கையாகத்தான் தோன்றியது. காரணம் களத்தில் இளைஞர்களையும் மக்களையும் சந்திக்கிற பொழுது கிடைக்கிற அந்த உற்சாகம் வேறு எதிலும் கிடைப்பதில்லை...

போளூர் நமக்கு இயக்கம் இல்லை. ஆனால் கலசப்பாக்கத்தில் வெங்கடேசன் உட்பட சிலரின் முயற்சியால் வீரபத்திரனும் நீங்களும் நானும் மாவட்ட நிர்வாகிகளும் கலசப்பாக்கத்தில் தங்கி ஆற்றில் குளித்துவிட்டு இரு பக்கத்திலும் இருந்த கிளைகளுக்கும் இயக்கங்களுக்கும் சென்ற நினைவுகள்....

திருவண்ணாமலை நகரத்தில் அரங்கத் தோழர்கள் சிலர் முன் முயற்சி எடுத்தாலும் தோழர் பாலாஜி , கருப்பு கருணா இன்னும் பல தோழர்கள் அமைப்பில் உருவாக்கினார்கள். வீரபத்திரனின் விடாமுயற்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரும்பணியாக அமைந்தது.

செங்கம் தாலுகாவில் சமீபத்தில் மறைந்த புரட்சி நடராஜன் போன்றவர்கள் இடது சாரிய இயக்கத்தை உருவாக்கி வளர்த்திருந்தாலும், வாலிபர் சங்கம் என்பது மூங்கில்துறை பட்டு போகிற வழியில் இருக்கக்கூடிய ராதாபுரத்தில் தான் சிவலிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு செங்கம் நகரத்துக்குள் தோழர் குமரேசன், சிவக்குமார், ஷங்கர் இன்னும் சில தோழர்கள் துடிப்போடு வந்து செயலாற்றினார்கள். அங்கு நடைபெற்ற ஒவ்வொரு இயக்கத்திலும் நானும் கலந்து கொண்டு இருக்கிறேன்.

திருவண்ணாமலை முதல் மாவட்ட மாநாடு திருவண்ணாமலையிலும், இரண்டாவது மாவட்ட மாநாடு செங்கத்திலும் நடந்த பொழுது அதன் பணிகளில் முழுமையாக நானும் வீரபத்திரனும் ஈடுபட்டோம். முதல் மாநாட்டை உருவாக்கிக் கொடுப்பதில் உங்களுடைய பங்கு மகத்தானது. சேத்துப்பட்டு வந்தவாசி போன்ற இடங்களுக்கு நான் கூடுதலாக வரவில்லை. காலப்போக்கில் அங்கேயும் ஏற்கும் மலர்ந்தது.

இவ்வளவு பெரும் களப்பணியில் ஈடுபடுத்துவதற்கு எனக்கான வாய்ப்பு கிடைத்ததற்கு உங்கள அயராத களப்பணிகாரணமாகும். வேலூர் சம்பந்தமான உள்ளூர் வரலாறுகளை எண்ணற்ற கூட்டங்களில் பேசுவதற்கான ஒரு முயற்சி நான் எடுப்பதற்கு இந்த களப்பணிகள் உதவிகரமாக இருந்தது...

இன்னும் முடிவில்லாமல் எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் நீங்கள் முடித்துக் கொண்டு விட்டீர்கள் . உங்களின் பணிகளை இன்னும் விரிவாக எழுதி இயக்கத்திற்கு பயனுள்ள வகையில் கொண்டு வருவதற்கான முயற்சியில் உங்களால் உருவாக்கப்பட்ட தோழர்கள் மேற்கொள்வார்கள்...

 நானும்தான்.

இன்னும் எண்ணற்ற சம்பவங்கள் வந்து மோதினாலும் காலங்கள் இருக்கிறது. முடிந்த வரை பதிவு செய்வேன்...

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோழர்.தயா உங்கள் வாழ்வும் மரணமும் ஒரு படிப்பினை தான்

  ,---------------------- 35 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்த இயக்கப் பயணம் , கனிவான நட்பு , உறவுகளைக் கடந்த குடும்ப இணைப்புகள் என அத்தனையும் ...