Pages

வெள்ளி, ஜூன் 05, 2026

75 சமூகத் திட்டங்களின் சீரான வளர்ச்சி-

 

அ.பாக்கியம்

இனச் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஒரு மாகாணத்தில் பொருளாதார முன்னேற்றங்கள் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்த ஒன்று மட்டுமல்ல அந்த மாகாணத்தின் இயற்கை வளங்களை சார்ந்தும் இருக்கிறது. பொதுவாக இயற்கை இடர்பாடுகள் நிறைந்த பகுதிகளில் இயற்கை வளங்களை பயன்படுத்துகிற அளவிற்கு வளர்ச்சித் திட்டங்களை பல நாடுகள் அமலாக்குவதில்லை. ஆனால் சீனா ஜின்ஜியாங் மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தியது மட்டுமல்ல சமூகத் திட்டங்களை சீரான முறையில் அமலாக்கி மக்களின் வாழ்க்கை தரத்தையே உயர்த்தி நிரந்தரத் தன்மையுடன் பாதுகாப்பானதாக மாற்றி உள்ளது.

குறிப்பாக கல்வி, அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப பயிற்சி, சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகள், வேலை வாய்ப்புகள், ஓய்வூதியம், வேலையின்மை காலத்தில் காப்பீடு போன்ற பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இனச் சிறுபான்மை மக்களுக்கு இவற்றை எந்த பாகுபாடின்றி நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு கல்லூரியும், ஒன்பது மேல்நிலைப் பள்ளிகளும், 1355 தொடக்கப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. கல்விச்சாலைக்கு செல்கின்ற வயதுடைய குழந்தைகளில் 19.8% மட்டுமே தொடக்கப்பள்ளியில் பயின்றனர். இந்த மாகாணத்தின் ஒட்டுமொத்தமான எழுத்தறிவின்மை 90 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தது.

1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பிறகுதான் இந்த மாகாணத்தில் கல்வியில் முன்னெப்பொழுதும் இல்லாத மாற்றங்கள் துரித கதியில் நடந்தேறியது. இந்த மாகாணத்தில் கல்வி அறிவின்மை போக்குவதற்காக ஒன்பது ஆண்டு கட்டாய கல்வியை அனைவருக்கும் வழங்கியதுடன் இளம் மற்றும் நடுத்தர வயதுடைய மக்களிடையே இருந்த எழுத்தறிவின்மையும் ஒழிக்கப்பட்டுள்ளது. வயது வந்தோருக்கான கல்வியும், தொழிற்கல்வியும் மிகப்பெரும் முன்னேற்றங்களை அடைந்தது. 2006 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற கல்விக்கான நிதி உதவிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் ஜின்ஜியாங் மாகாணத்தில் தொடக்க கல்வியும் மேல்நிலைப் கல்வியும் அனைவரும் இலவசமாக பெறுகின்றனர். 2007ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் இடைநிலை மற்றும் உயர் தொழில் மாணவர்களின் கல்விக்காக அரசு இந்த மாகாணத்தில் மட்டும் ஆண்டுதோறும் 129 மில்லியன் யுவான்களை ஒதுக்கீடு செய்தனர். இவ்வாறு ஒதுக்கிய நிதி அமைப்பிலிருந்து பயனடைந்தவர்களில் 70% இனச் சிறுபான்மை மாணவர்கள் ஆவார்கள். பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளின் சேர்க்கை விகிதம் இந்த மாகாணத்தில் 99.6 சதவீதமாக இருந்தது.

இனச் சிறுபான்மை மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்பதில் சீன மக்கள் குடியரசு உறுதியாக இருந்ததினால் 9 வருட கட்டாய கல்வியின் அமுலாக்க விகிதம் இந்த மாகாணத்தில் 99 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். சில குறிப்பிட்ட பகுதிகளில் தேவையை கருதி அதாவது அக்சு, கஷ்கர் அவர்களில் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 15 ஆண்டுகளும் இலவச கல்வி முழுமையாக வழங்கப்படுகிறது.

உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2012ல் 39 இருந்தது. 2024 ல் 63 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து பிராந்தியங்களிலும் இளங்கலை பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. 2024 ஆம் ஆண்டில் தொழில் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 5. 75 லட்சமாக இருந்தது இது 2012 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகிற பொழுது 60% உயர்வாகும்.

இரு மொழிக் கொள்கை உறவின் பாலமாகியது.

ஜின்சியாங் உள்ள 10 மில்லியன் இனச் சிறுபான்மையினரின் 70% பேர் எழுத்து வடிவத்தில் உள்ள ஹான் சீன மொழியை புரிந்து கொள்வதில் சிரமப்பட்டனர் இதனால் சிறுபான்மை மக்களுக்கும் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு சீன மக்கள் குடியரசு தன்னாட்சி பிராந்திய அரசாங்கம் 2004இல் சிறுபான்மை மாணவர்களிடையே இரு மொழி கல்வியை ஊக்குவிக்க முடிவு செய்தது. இவற்றை அமலாக்குவதற்கு ஆசிரியர்கள் தங்களின் தாய் மொழியிலும் ஹான் சீன மொழியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி வரம்பை வைத்தனர். இன்று இரு மொழி கல்வி முயற்சிகள் வெவ்வேறு இனக் குழுக்கள் இடையே சிறந்த புரிதல் மற்றும் தகவல் தொடர்பு, சமத்துவம், ஒற்றுமை, பரஸ்பரஉதவி மற்றும் நல்லிணக்கத்தை கொண்ட உறவுகளை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் சாதகமான நிலைமையாக மாற்றி உள்ளது. இனச் சிறுபான்மை மக்கள் தங்கு தடையின்றி அனைத்து மக்களுடனும் கருத்து பரிமாற்றங்களையும் வர்த்தகத்தையும் செய்வதற்கு அதன் மூலம் செழிப்பை ஏற்படுத்துவதற்கும் இது ஒரு கருவியாக அமைந்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் உள்ள சிறுபான்மை மாணவர்களுக்கு சிறந்த அடிப்படைக் கல்வியை வழங்குவதற்காக, 2000 ஆம் ஆண்டு முதல், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உட்பட, நன்கு வளர்ச்சியடைந்த 12 மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 13 உயர்நிலைப் பள்ளிகளில் சின்ஜியாங் மாணவர்களுக்காக அரசு சிறப்பு வகுப்புகளைத் திறந்தது. 2008 ஆம் ஆண்டுக்குள், 12 மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 28 நகரங்களில் மொத்தம் 5,000 மாணவர்களுக்காக 50 சிறப்பு வகுப்புகள் இருந்தன, இது ஆரம்ப மாணவர் சேர்க்கையை ஐந்து மடங்காக உயர்த்தியது. இவர்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்புப் பகுதிகள், குறிப்பாக வறுமைப் பிடித்த அல்லது எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த தொடக்கப் பள்ளிப் பட்டதாரிகளாவர். இவர்களில் 80%க்கும் அதிகமானோர் சிறுபான்மை விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆவர்.

அறிவியல் வளர்ச்சியின் அடிப்படைகள்

1949 இல் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பின்னர் தான் ஜிஞ்சியங் மாகாணத்தில் அறிவியல் முயற்சிகள் துவக்கப்பட்டன. கடந்த 60 ஆண்டுகளில் நன்கு கட்டமைக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் ஜின்ஜியாங் மாகாணத்தில் மட்டும் 19,72,000 தொழில் வல்லுநர்கள் பணி புரிந்தார்கள். இந்த மாகாணத்தில் மட்டும் 2008 ஆம் ஆண்டு 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட முக்கிய அறிவியல் சாதனைகளை படைத்து 200க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றது மட்டுமல்ல ஒரே மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இனச் சிறுபான்மை மக்களின் அபாரமான முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. இது உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறது.

எல்லையோர இன சிறுபான்மை மக்களின் கலாச்சாரங்களை பாதுகாப்பது மட்டுமல்ல அதை பலப்படுத்துவதும் சோசலிச அரசின் புறக்கணிக்க முடியாத கடமையாகும். தொழில் முறை கலைக் குழுக்களோ கலைகளுக்கான கல்வி சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களோ புரட்சிக்கு முன் இந்த மாகாணத்தில் இருந்தது இல்லை. சீன மக்கள் குடியரசு விரிவான முறையில் கலாச்சார, கலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. வளமான வண்ணமயமான கலாச்சார செயல்பாடுகள் இங்கு வளத்தெடுக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தரவுகளின் படி இந்த மாகாணத்தில் 119 கலை மற்றும் நிகழ்த்து கலை குழுக்கள், இரண்டுக்கும் மேற்பட்ட இலக்கிய மற்றும் கலை ஆராய்ச்சியின் பெரும் நிறுவனங்கள், இரண்டு கலைப்படைப்பு மையங்கள், 15க்கு மேற்பட்ட வெகுஜன கலைக்கூடங்கள், 94க்கு மேற்பட்ட கலாச்சார மையங்கள், 1134 கிராமம் மற்றும் நகர கலாச்சார நிலையங்கள் செயல்பட்டன. சாதாரண கலைஞர்கள் தவிர 4355 நிபுணத்துவம் பெற்ற நிகழ்த்து கலை வல்லுனர்கள் உருவானார்கள்.

ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது ஏற்படுத்துவதற்கு இது மட்டும் போதாது. இந்த மாகாணத்தில் 93 க்கு மேற்பட்ட பெரிய பொது நூலகங்களும், 47 க்கு மேற்பட்ட மிகப்பெரிய அருங்காட்சியங்களும், தன்னாட்சி பிராந்திய அளவில் ஆறுக்கு மேற்பட்ட வானொலி நிலையங்களும், எட்டுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன. இவை தவிர கிராமங்கள் தோறும் வானொலி மற்றும் தொலைக்காட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு தரவுகளின்படி மாகாணத்தில் உள்ள மக்களில் 93.5% பேர் வானொலி மற்றும் தொலைக்காட்சி வசதிகளை பெற்றுள்ளனர். இதே அளவிற்கான வகையில் கேபிள் டிவி சேவைகளும், டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு பிராந்திய வளர்ச்சி என்ற ஒரு உத்தியை சீன மக்கள் குடியரசு அமலாக்கிய பொழுது கலாச்சார வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டும் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன. மக்கள் பொருளாதார பிராணிகள் மட்டும் அல்ல அவர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கான கலாச்சார அம்சங்களுக்கும் அதைவிட அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து மாகாணத்தில் செயல்படுத்தி உள்ளது மிகச்சிறந்த முன்னுதாரண மாகும்

சமூக வளர்ச்சி திட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் ஆகும். 1949க்கு முன்பு இந்தப் பகுதியில் அடிக்கடி பரவலான நோய்கள் ஏற்பட்டன. ஒட்டு மொத்த இறப்பு விகிதம் 1000 பேருக்கு 20.82 என்ற அளவில் இருந்தது. சிசு மரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 420 முதல் 600 வரை அதிர்ச்சியூட்டும் அளவிலிருந்து. சராசரி ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கும் குறைவாகவே நெடுங்காலம் இருந்துள்ளது. 1949க்கு முன்பு ஜின்ஜியாங் மாகாணத்தில் சில நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 54 மருத்துவ மையங்கள் மட்டுமே இருந்தன. அவற்றில் 696 படுக்குகள் இருந்துள்ளது. ஒவ்வொரு பத்தாயிரம் நபர்களுக்கும் 1.6 படுகைகளையும், 0,19 மருத்துவர் களையும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. 2008 ஆம் ஆண்டு தரவுகளின்படி ஜின்ஜியாங்கில் மொத்தம் 7238 மருத்துவ சேவை மையங்களும், 1629 மருத்துவமனைகளும், சுமார் 93,600 படுக்கைகளும் 43,800 மருத்துவர்கள் இருந்தார்கள். அதாவது ஒவ்வொரு 10,000 மக்களுக்கும் 36 மருத்துவமனை படுக்கைகளும், 21 மருத்துவர்களும் இருந்தனர். உள்ளூர் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு திறன்கள் பெரிது மேம்பட்டு உள்ளது. பெரியம்மை போன்ற சில உள்ளூர் நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

1970 ஆம் ஆண்டுகளில் நடுப்பகுதிகளில் இருந்து ஜின்ஜியாங் மாகாணம் ஒரு திட்டமிடப்பட்ட நோய் தடுப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக தடுப்பூசி விகிதம் சீராக அதிகரித்து வருவது மட்டுமல்ல சுகாதார சேவைகளின் மேம்பாடும் மக்களின் சுகாதார நிலைமைகளையும் வாழ்க்கை தரத்தையும் மிகப்பெரும் அளவு மேம்படுத்தி உள்ளது. 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு 1,000 நபர்களுக்கும் பொது இறப்பு விகிதம் 4.88 ஆகவும், 1,000 பிறப்புகளுக்கு சிசு இறப்பு விகிதம் 29.76 ஆகவும் இருந்தது. மக்கள்தொகையின் சராசரி ஆயுட்காலம் 72 ஆண்டுகளை எட்டியுள்ளது. விவசாய மற்றும் மேய்ச்சல் பகுதிகளில் சுகாதார சேவைகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளன. மேலும் மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் மும்முனை நோய்த்தடுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வலையமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், சின்ஜியாங்கில் வேலைவாய்ப்பை விரிவுபடுத்துவதற்கு தொழிலாளர் சேவைகளை ஏற்றுமதி செய்வது ஒரு புதிய வழியாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக, தெற்கு சின்ஜியாங்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்தனர். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பெரும்பாலும் லாபமற்ற விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பையே நம்பியிருந்தனர். 2006 ஆம் ஆண்டு முதல், சின்ஜியாங் அரசாங்கம் முதலில் தெற்கு சின்ஜியாங்கின் ஜியாஷி மாவட்டத்திலும், பின்னர் முழு தன்னாட்சிப் பகுதியிலும் ஒரு தொழிலாளர் ஏற்றுமதித் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம், உள்ளூர் கிராமப்புற மக்கள் பதிவுசெய்து, தங்களுக்குத் தேவையான தகுதிகளை வழங்கும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட பிறகு, உள்நாட்டு நிறுவனங்களில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் முலம் பயன்பெற்றனர்.

ஓய்வூதியக் காப்பீடு, வேலையின்மைக் காப்பீடு

1978ஆம் ஆண்டின் இறுதியில் சீர்திருத்தம் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார உத்தரவாதங்களை வழங்கும் வகையில் ஜின்ஜியாங்கின் சமூகப் பாதுகாப்பு அமைப்பு படிப்படியாக வடிவம் பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, ஜின்ஜியாங்கில் நகர்ப்புறங்களில் 799 சமூக சேவை மையங்கள் உள்ளன. அடிப்படை ஓய்வூதியக் காப்பீடு, வேலையின்மைக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, தொழில் காயக் காப்பீடு மற்றும் மகப்பேறுக் காப்பீடு ஆகிய ஐந்து முக்கிய காப்பீட்டுத் திட்டங்களில் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு முதல், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் நிலநடுக்கத்தைத் தாங்கும் வீட்டு வசதித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான வீடுகளை வழங்குவதற்கான ஒரு ஆறாண்டுத் திட்டமாகும். 2008 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அரசு இந்தத் திட்டங்களில் 41.2 பில்லியன் யுவானை முதலீடு செய்து. 1,895,000 வீடுகளைக் கட்டி வலுப்படுத்தியது. அதன் பின்னர், தெற்கு சின்ஜியாங்கில் 742,300 ஏழ்மையான விவசாயக் குடும்பங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வீடுகளில் குடியேறியுள்ளனர்

எனவே பொருளாதார வளர்ச்சி அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் சமூக நலத்திட்டங்கள் விரிவான முறையில் ஆழமான முறையிலும் அமலாக்கப்பட வேண்டும். இவற்றை ஜின்ஜியாங் மாகாணத்தில் அந்த அரசு செய்து முடித்ததன் விளைவாக ஒட்டுமொத்த சீனத்தின் வளர்ச்சியும் வலிமையும் அதிகமாகி உள்ளது.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

75 சமூகத் திட்டங்களின் சீரான வளர்ச்சி-

  அ.பாக்கியம் இனச் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஒரு மாகாணத்தில் பொருளாதார முன்னேற்றங்கள் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச...