அ.பாக்கியம்
சீனாவின்
இனச் சிறுபான்மையினர் வாழக்கூடிய மேற்குப் பகுதிகளில் துரித வளர்ச்சிகளை மேற்கொள்வதற்காக
மேற்கு வளர்ச்சி இயக்கம் என்ற ஒரு திட்டத்தை 2000 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு ஆரம்பித்தது.
1978 ஆம் ஆண்டு சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தமும்,
திறப்பு கொள்கையும் ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏற்படுத்திய வளர்ச்சியை மேலும்
விரைவுப்படுத்துவதற்காக இத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் ஜின்ஜியாங் மாகாணம்
மாற்றங்களின் மகுடங்களை தரித்துக்கொண்டது. வறுமை ஒழிப்பு, கல்வியின்
வளர்ப்பு, வாழ்க்கைத் தர உயர்வு, கலாச்சார
பண்பாட்டின் பரவலும் ஒருங்கிணைந்து ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியது என்றால் மிகையாகாது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகவும் அத்தியாவசியமானது,
அதிலும் குறிப்பாக மலைப்பிரதேசங்களிலும், பள்ளத்தாக்குகள்
நிறைந்த பகுதிகளிலும் உள்கட்டமைப்பை உருவாக்குவது சம்பந்தப்பட்ட அரசிற்கு மிகப்பெரிய
சவாலான விஷயமாகும். ஜின்ஜியாங்கில் இந்த சவால்களை சந்தித்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும்,
வளர்ச்சியை ஏற்படுத்துதற்கும் சீன மக்கள் குடியரசால் உருவாக்கப்பட்ட
உற்பத்தி மற்றும் கட்டுமான படை முக்கிய பங்காற்றியது.
1949 முதல் 1978 வரையிலான வளர்ச்சியை இதற்கு முந்தைய பாகத்தில்
விளக்கி இருக்கிறேன். தற்போது அதற்குப் பிறகு ஏற்பட்ட வளர்ச்சியின் அம்சங்கள் இங்கே
பார்க்கலாம்.
திட்டமிட்ட வளர்ச்சி
“ஒரு நாடு வளர வேண்டும் என்றால் சாலைகள் அமைக்க வேண்டும்” என்பது சீன பழமொழி. சவால் நிறைந்த
இயற்கை அமைப்புகளில் 2008 ஆம் ஆண்டின் இறுதியில் மட்டும் எட்டு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதன.
இது தேசத்தின் இதரப் பகுதியோடு எளிதில் வளர்ச்சியை இணைக்க முடிந்தது. மாகாணங்களுக்கு
இடையே 66 நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல 600க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான சாலைகளை உருவாக்கி பொருள் போக்குவரத்திற்கும்,
உழைப்பு சக்தியின் நகர்வுகளுக்கும் அடித்தளத்தை உருவாக்கினார்கள். இக்காலத்தில்
உருவாக்கப்பட்ட சாலைகளின் மொத்த நீளம் 1,47,000 ஆகும். 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த மாகாணத்தில் மட்டும் உயர்கை முதன்மை சாலைகள் என்று
அழைக்க கூடிய அதிவேக விரைவுச் சாலைகள் 7,640 கிலோமீட்டர்,
கிராமப்புற சாலைகள் 1,74,400 கிலோமீட்டர் என்ற
அளவில் உயர்ந்தது. பரந்த அளவிலான போக்குவரத்து வாகனங்கள் கிடைப்பதால், பயணம் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் ஆகியுள்ளது. 1980-களில் சீர்திருத்தம் மற்றும் திறந்த கொள்கையின் ஆரம்ப நாட்களில், உரும்கியிலிருந்து பெய்ஜிங்கிற்கு ரயிலில் பயணிக்க கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆனது.
ஆனால் இப்போது விமானத்தில் மூன்று மணி நேரத்தில் பயணிக்க முடிகிறது. 10,000 நகர்ப்புறவாசிகளுக்கு தார் சாலையின் நீளம் 1978-ல் 1.6 கி.மீ., 2000-ல் 4.5 கி.மீ.,
மற்றும் 2008-ல் 15.7 கி.மீ.
வரை உயர்ந்தது.
சமவெளி
பிரதேசங்கள் குறைவாக இருக்கக்கூடிய பகுதிகளில் ரயில் பாதைகள் அமைப்பதன் கடினத்தை உணர
முடியும். இருந்தும் வளர்ச்சியின் அவசியம் கருதி இந்த மாகாணத்தில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
2008 ஆம்
ஆண்டில் ஜின்ஜியாங்கில் ரயில் பாதைகளின் மொத்த நீளம் 3000 கிலோமீட்டர்.
தற்போது 9,557 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின்
மக்கள் தொகை 2.5 கோடி தான். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையிலும்,
தேவையான உள்பகுதியிலும் மாகாணத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு தரவுகளின் படி 7.78 கோடி மக்கள் தொகை இருந்த
தமிழ்நாட்டில் மொத்த ரயில் பாதையின் நீளம் 4036 கிலோ மீட்டர்
மட்டுமே. இந்தியாவில் ஜின்ஜியாங் மாகாணத்தை போன்ற புவிபரப்பு அமைந்துள்ள வடகிழக்கு
மாநிலங்களில் செயல்படக்கூடிய வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே வாரியத்தின் தரவுகளின்படி
3633.85 கிலோமீட்டர் மட்டுமே இயங்குகிறது. வடகிழக்கு மாகாணங்களில்
மக்கள் தொகை சுமார் 5 கோடி அளவில் உள்ளது. (வளர்ச்சியின் வேகத்தை
சுட்டிக் காட்டுவதற்காகவே இந்த ஒப்பீடுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. )
எல்லையோர பகுதிகளில் மேம்பாடு
பொதுவாக
எல்லைப்புற மாகாணங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இயற்கை அமைப்புகள் கரடு,முரடாக இருப்பதினாலும்,
முதலீடுகளை செய்வதற்கு தயங்குவார்கள். சீனாவில் அரசின் முழு முன் முயற்சியால்
மேற்கண்ட இரண்டு அம்சங்களும் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக
முதலீடுகளை செய்தார்கள். அங்கு இருக்கக்கூடிய இயற்கை வளங்களை பாதுகாப்பதும்,
நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும் இதற்கு அடிப்படை காரணமாகும். எனவே
அடிப்படை கட்டமைப்புகளில் சாலை வசதி, ரயில் போக்குவரத்தை கடந்து
விமான போக்குவரத்துக் களையும் விரிவான முறையில் வளர்த்தெடுத்தார்கள். உரும்கியிலிருந்து
தொடங்கி, ஜின்ஜியாங்கில் உள்ள சுமார் 70 சீன மற்றும் வெளிநாட்டு நகரங்களையும், 12 மாகாணங்களையும்
இணைக்கும் 114 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான வழித்தடங்களைக்
கொண்ட ஒரு வலையமைப்பு உருவாகியுள்ளது. இதன் மொத்த விமான வழித்தடங்களின் நீளம் 160,000 கி.மீ.-க்கும் அதிகமாகும். தற்போது, சீனாவின் அனைத்து
மாகாணங்கள் மற்றும் தன்னாட்சிப் பிராந்தியங்களில் ஜின்ஜியாங் அதிக எண்ணிக்கையிலான விமான
நிலையங்களையும் மிக நீண்ட விமான வழித்தடங்களையும் கொண்டுள்ளது.
10 பில்லியன் யுவானுக்கும் அதிகமான முதலீட்டில், 2008-ல்
தாரிம் நதி மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்ததன் மூலம், அதன் கீழ்
பகுதிகளில் சுமார் 300 கி.மீ தூரத்திற்கு 30 ஆண்டுகளாக வறண்டு போன நதியின் வரலாறு முடிவுக்கு வந்தது. வடக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு சீனாவில் பாதுகாப்பு மர வரிசைகளை உருவாக்குதல்,
சமவெளிப் பகுதிகளைப் பசுமையாக்குதல், விவசாய நிலங்களை
மீண்டும் காடுகளாகவும், மேய்ச்சல் நிலங்களை மீண்டும் புல்வெளிகளாகவும்
மாற்றுதல் போன்ற முயற்சிகளும் விவசாய நிலைமைகளை மேம்படுத்தியுள்ளன. தற்போது சுமார்
800,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு சொட்டு மற்றும் தெளிப்புப்
பாசனம் கிடைக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் கன மீட்டர் நீர் சேமிக்கப்படுகிறது.
2008-ஆம் ஆண்டில், வேளாண்மையின் கூடுதல்
மதிப்பு 69.1 பில்லியன் யுவானை எட்டியது. இது 2000-ஆம் ஆண்டை விட 1.4 மடங்கு அதிகமாகும்; மேலும், தானியங்களின் மொத்த உற்பத்தி 10.2285 மில்லியன் டன்களாக இருந்தது, இது உள்ளூர் தேவையைப் பூர்த்தி
செய்த பிறகு ஒரு சிறிய உபரியை விட்டுச் சென்றது. சீனாவின் முக்கிய வர்த்தகப் பருத்தித்
தளங்களில் ஒன்றாக, ஜின்ஜியாங் 2008-ஆம்
ஆண்டில் 3.0155 மில்லியன் டன் பருத்தியை உற்பத்தி செய்தது. மொத்த
உற்பத்தி, அலகு உற்பத்தி மற்றும் தனிநபர் உற்பத்தி ஆகியவற்றின்
அடிப்படையில் சீனாவில் முதலிடம் பிடித்தது
விவசாய உற்பத்தி கால்நடை வளர்ப்பு
மேம்பாடு
கால்நடை
வளர்ப்பு விவசாயத் துறையில் மிக முக்கிய பங்கு வைக்கிறது. உள்ளூர் விவசாய உற்பத்தியில்
கால்நடை வளர்ப்பு 27 சதவீதமாக உள்ளது, 2008 ஆம் ஆண்டில் இறைச்சி உற்பத்தி
10 லட்சம் டன்களாக இருந்தது. 2000ம் ஆண்டு
விட 95 சதவீதம் அதிகமாகும். பழங்கள் உற்பத்தி செய்வதிலும் இயற்கை
பாதுகாப்பதிலும் இணைத்து பயன்படுத்துகின்றனர். 2008இல் பழம் உற்பத்தி
செய்யும் மரங்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஹெக்டரை கடந்து இருந்தது.
ஆறு பில்லியன் யுவான் அளவிற்கு பழங்கள் உற்பத்தியின் மதிப்பு ஏற்பட்டது.
விவசாய
உற்பத்தி பொருட்களை பாதுகாப்பதற்கான பதப்படுத்தப்படும் அமைப்புகள் மிகவும் அவசியம்.
உலகின் பல்வேறு நாடுகளில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பாதுகாப்பதற்கான உத்திரவாதமான
ஏற்பாடுகள் இல்லை. இந்த மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு 1059 பதப்படுத்தப்படும் நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
சீனாவிலேயே மிகப்பெரிய தக்காளி பதப்படுத்தப்படும் நிறுவனம் இந்த மாகாணத்தில்தான் உள்ளது.
இதே போன்று பால் பதப்படுத்தப்படும் நிறுவனங்களையும் உருவாக்கினார்கள். ஆண்டுக்கு 6 லட்சம் டன்கள் உற்பத்தியுடன் சீனாவின் மிகப்பெரிய பீட்சர்க்கரை (பீட்சர்க்கரை
என்பது சர்க்கரைவள்ளிக் கிழங்கில் (Sugar beet) இருந்து பிரிக்கப்படும்
சுக்ரோஸ் ஆகும். இது கரும்பு சர்க்கரையைப் போலவே சுவை, அமைப்பு
மற்றும் செயல்பாட்டைக் கொண்டது ) உற்பத்தி தளமாகவும் இந்த மாகாணம் விளங்குகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தி துறைமுக
வளர்ச்சி
ஜின்ஜியாங்
மாகாணம் எண்ணெய்வளம் நிறைந்த ஒரு பகுதியாக காணப்படுகிறது. சீனா மேற்காசிய நாடுகளுடன்
ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த மாகாணத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு
தொடர்பான வளர்ச்சி அதி வேகமாக ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டில் இந்த மாகாணத்தில் 27.22 மில்லியன் டன் கச்சா
எண்ணெய்யை உற்பத்தி செய்தனர். 24 பில்லியன் கன மீட்டர் இயற்கை
எரிவாயுவை உற்பத்தி செய்தனர். சீனாவிலேயே அதிக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யக்கூடிய
மாகாணமாக ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் எரிவாயு குழாய்களின் கட்டுமான
பணிகள் மிகப்பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. 4000 கிலோ மீட்டருக்கு
அதிகமான அளவில் குழாய்கள் வளையமைப்பை கொண்டிருக்கிறார்கள். இது இந்த பிராந்தியத்தின்
பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வேலை வாய்ப்பு உருவாக்கு
வதற்கும் நகர்மயமாவதற்கும் உதவி செய்துள்ளது.
மற்றொரு
பொருளாதார நடவடிக்கையின் களமாக இருப்பது துறைமுகங்களாகும். இந்த மாகாணத்தில் மட்டும்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் தர துறைமுகங்கள் 17 செயல்படுகின்றது. தன்னாட்சி பிராந்தியத்தால்
அங்கீகரிக்கப்பட்ட இரண்டாம் தர துறைமுகங்கள் 12 செயல்படுகிறது.
இவை இரண்டும் மாகாணத்தை ஒட்டி இருக்கக்கூடிய 12க்கு மேற்பட்ட
நாடுகளுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஒரு மாகாணம் 167 நாடுகளுடனும் பிராந்தியங்களுடனும் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மற்றும்
அறிவியல் தொழில்நுட்ப கலாச்சார பரிமாற்றங்களின் மேற்கொண்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.
இதன்
விளைவாக 2008 ஆம் ஆண்டில் ஜின்ஜியாங் வெளிநாட்டு வர்த்தக அளவு 22.217 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. நிதி சாரா நேரடி முதலீட்டில் 164 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், வெளிநாட்டு ஒப்பந்தங்கள்
மூலமாக 795 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் ஈட்டியது. பல வெளிநாடுகளுக்கு
பிராந்தியத்திலிருந்து பணி செய்வதற்காக திறன் தொழிலாளர்களை அனுப்பி வைக்கின்றனர். இந்த
மாகாணத்தில் 500 க்கும் மேற்பட்ட சுற்றுலா மண்டலங்கள் அமைக்கப்பட்டு
வருடத்திற்கு இரண்டு கோடி பேர்களுக்கு மேல் சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக
மாறி உள்ளது.
ஒரு
நபருக்கான சராசரி தானிய அளவு 1949-ல் 195.62 கிலோவிலிருந்து 1978-ல் 300.09 கிலோவாகவும், 2008-ல்
மேலும் 426.60 கிலோவாகவும் உயர்ந்தது; ஒரு
நபருக்கான சராசரி பருத்தி அளவு 1949-ல் 1.18 கிலோவிலிருந்து 1978-ல் 4.46 கிலோவாக
உயர்ந்து, 2008-ல் 141.52 கிலோவை எட்டியது;
மேலும், ஒரு நபருக்கான சராசரி இறைச்சி அளவு 1949-ல் 11.68 கிலோவாகவும், 1978-ல்
7.83 கிலோவாகவும் இருந்து, 2008-ல் 53.85 கிலோவாக அதிகரித்தது.
வீட்டு
வசதி நிலைகளும் பெருமளவில் மேம்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தனிநபர் தரைப்பரப்பு 1983-ல் 10.2 சதுர மீட்டராகவும், 2000-ல் 17.25 சதுர மீட்டராகவும், 2008-ல் 22.79 சதுர மீட்டராகவும் இருந்தது; அதே சமயம், நகரங்களில் தனிநபர் தரைப்பரப்பு 1983-ல் 11.9 சதுர மீட்டராகவும், 2000-ல் 20.06 சதுர மீட்டராகவும் இருந்து, 2008-ல் 27.3 சதுர மீட்டராக அதிகரித்தது.
1950 முதல் 2008 வரை, மத்திய அரசு சின்ஜியாங்கில் 386.23 பில்லியன் யுவானை முதலீடு செய்தது, இது அப்பகுதியின்
மொத்த முதலீட்டில் 25.7% ஆகும். 1955 (சின்ஜியாங்
உய்குர் தன்னாட்சிப் பகுதி நிறுவப்பட்டபோது) முதல் 2008 வரை,
சின்ஜியாங் மத்திய பட்ஜெட்டிலிருந்து மொத்தமாக 375.202 பில்லியன் யுவான் மானியங்களைப் பெற்றது. 2000-ஆம் ஆண்டில்
மேற்குப் பிராந்திய மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டதோடு, மானியங்களின் அளவு ஆண்டுக்குச் சராசரியாக 24.4% அதிகரித்து,
2008-ல் 68.56 பில்லியன் யுவானை எட்டியது. மத்திய
அரசு, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து
கடன்களைப் பயன்படுத்தி, அப்பகுதிக்கான மூலதன உள்ளீட்டையும் ஆதரவையும்
அதிகரித்துள்ளது.
சமீபத்திய
ஆண்டுகளில், மத்திய அரசின் வேண்டுகோளின்படி, தெற்கு சின்ஜியாங்கில்
உள்ள 33 மாவட்டங்களுக்கு (அல்லது நகரங்களுக்கு) பொருளாதாரம்,
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் கலாச்சார
உதவிகளை வழங்குவதற்காக, பெய்ஜிங், தியான்ஜின்,
ஷாங்காய், ஜெஜியாங், ஷான்டாங்,
லியாவோனிங், ஜியாங்சி மற்றும் ஹெநான் ஆகிய நகரங்களும்,
15 அரசுக்குச் சொந்தமான பெரிய நிறுவனங்களும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
வறுமையை
ஒழித்து, அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்ததன் மூலம், ஜின்ஜியாங்கில் உள்ள அனைத்து இனக்குழு மக்களும் தற்போது தங்கள் வாழ்க்கைத்தரத்தில்
ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன், மேலும் செழிப்பான
வாழ்க்கையை நோக்கியுள்ளனர்.
அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக