பீட்டர் துரைராஜ்
[எழுத்தாளர் தொழிற்சங்க தலைவர் கள செயல்பாட்டாளர் தோழர் பீட்டர் துரைராஜ் அவர்கள் வாசகசாலை இணையதளத்தில் எழுதிய புத்தக மதிப்புரை வாசகர்களுக்கு பகிரப்படுகிறது.]
அ. பாக்கியம் எழுதிய ‘நானே மகத்தானவன்’ – பாக்ஸர் முகமது அலியின் போராட்டம் : நூல் வாசிப்பனுபவம் –
பீட்டர் துரைராஜ்
கட்டுரை | வாசகசாலை வாசகசாலைSeptember 19, 2025
அ.பாக்கியம் என்ற பெயரை சுவரெழுத்துகளில்தான், முதலில் கண்டேன். அது ஒரு பெண்பெயர் என நினைத்திருந்தேன். ஆனால், ஆடவர் என்பது தெரியவந்தபோது, இயல்பாகவே, ஆர்வம் வந்தது.
‘நானே மகத்தானவன்’ என்று அறைகூவல் விடுத்த குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வரலாற்றை, இனவெறிக்கு எதிரான அவரது அரசியல் போராட்டதை அ.பாக்கியம் இந்த நூலில் சொல்லுகிறார். மத்திய வயதைக் கடந்தவர்களுக்கு, முகமது அலியைத் தெரிந்திருக்கக் கூடும்.
1980- இல் அவர் இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது, இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரை சந்தித்து இருக்கிறார். இந்தியா கடைபிடித்து வந்த, பாராட்டத்தக்க வெளியுறவுக்கொள்கைகளின் தொடர்ச்சியாக, வெகு மக்கள் அவரை எழுச்சியோடு வரவேற்றிருக்கின்றனர்.
கறுப்பினத்தைச் சார்ந்த காசியஸ் மார்செல்லஸ் கிளே என்ற இயற்பெயரைக் கொண்டவர் முகமது அலி. அடிமை வியாபாரத்தை கிறிஸ்தவம் பாதுகாத்து வந்தது. தமது உடமையாளர்களின் பெயரை, விடுதலை பெற்ற பின்பும் அடிமைகள் வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில் தனது இயற்பெயரை துறந்து, மதம் மாறிய முகமது அலியின் வரலாறு இது. ஒலிம்பிக்கில் கிடைத்த பதக்கத்தை இரண்டு நாட்களாக கழற்றாத முகமது அலி, உணவுவிடுதியில் தனக்கு இடம் மறுக்கப்பட்டதை எதிர்த்து, பதக்கத்தை ஆற்றில் வீசிவிட்டார்.
ஆணவப் படுகொலைகளும், அதற்கு எதிரான போராட்டங்களும் மூர்க்கமாக நடைபெற்று வரும் இந்தச் சூழலில், ஒரு மார்க்சியவாதியான அ.பாக்கியம் இந்த நூலை எழுதியிருக்கிறார்.
புலவர் பா.வீரமணி
இதற்கு அணிந்துரை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழாவின் போது, ‘முகமது அலி பற்றி ஒரு நூல்தான் வந்துள்ளது, அதுவும்
அவரது விளையாட்டுத்திறன் பற்றி வந்துள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா வந்த முகமது அலியின் விரலைத் தொட்டு பரவசம் அடைந்ததை அந்த விழாவில் பா.வீரமணி குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும், முகமது அலியைப்பற்றி பேசும்போது அவர் காட்டிய பரவசம், முகமது அலி எத்தகையதொரு தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை உணர்த்தியது.
முகமது அலி இறந்த போது (2016) அவரைப்பற்றி, அமெரிக்காவின் ஜேகோபின் என்ற இடதுசாரி இதழில் வந்த கட்டுரையைப் படித்தபிறகு, அ.பாக்கியம் முகமது அலி பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார்.
அப்படி எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். எனவே, ஒருசில இடங்களில் கூறியது கூறல் வருகிறது. எனினும் இந்த நூல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. முகமது அலியின் (1942 – 2016) குத்துச்சண்டை வாழ்வு 39 ஆண்டுகள் என்றால், அதிலிருந்து ஓய்வுபெற்று 35 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் இருந்திருக்கிறார்.
புகழின் உச்சியில் இருந்த காலத்தில் வியத்நாம் நாட்டை எதிர்த்து போராட மறுத்து இருக்கிறார். இதனால் அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டு, விளையாட்டு உரிமம் பறிக்கப்பட்டு, சிறைத்தண்டனை வந்த போது கூட உறுதியான நிலை எடுத்துப் பேசி இருக்கிறார். இவரது உரைகள், மார்டின் லூதர் கிங் போன்ற போராளிகளுக்கு உந்துசக்தியாக இருந்துள்ளன.அமெரிக்க மக்களின் மனசாட்சியை அசைத்துள்ளன.
ஹிட்லர், முசோலினி போன்றவர்களும் நிறவெறியில் குத்துச்சண்டையை எப்படி பயன்படுத்தினார்கள் என்ற, முகமது அலி காலத்திற்கு முந்தைய வரலாறும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. கறுப்பின மக்களின் இன்னல்கள், அவர்கள் நடத்திய பலவகையான போராட்டங்களை ஆசிரியர் இந்த நூலில் எழுதியுள்ளார்.
‘நிறவெறி எதிர்ப்புப் போரில் கம்யூனிஸ்டுகள்’ என்ற கடைசி அத்தியாயம் மிக நன்றாக கோர்வையாக வந்துள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகையில் 13.6% உள்ள கறுப்பின மக்கள், பேருந்துகளை புறக்கணித்து 381 நாட்கள் நடத்திய மாண்ட்கோமெரி போராட்டம், கறுப்பின இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட பாலியல் ‘ஸ்காட்ஸ்போரா பாய்ஸ்’ வழக்கு, மால்கம் எக்ஸ் போன்றவர்கள் முதல் சமீபத்தில் நடைபெற்ற ஜார்ஜ் ஃப்ளாயிட் படுகொலை உட்பட பல சம்பவங்கள் இந்த 230 பக்க நூலில் (விலை ரூ.300) சொல்லப்பட்டுள்ளன.
அந்த காலக் கட்டங்களில் குத்துச்சண்டைகளை எப்படி மக்கள் பார்த்தனர். அவைகளை தமது விடுதலைக் கூறாக கறுப்பின மக்கள் எப்படி மாற்றினர், அதன் தோற்றம், வரக்க உள்ளடக்கம் என பலவற்றையும் வரலாற்று அடிப்படையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். சமையற்காரனையும், தோட்டக்காரனையும் குத்துச்சண்டையில் வெள்ளையின மக்கள் மோதவிட்டதுதான் குத்துச்சண்டையின் ஆரம்ப வரலாறு.
அமெரிக்கா புலனாய்வு அமைப்பு சிவப்பு பயத்தில் எப்படி நடந்து கொண்டது. கொரியா மீதான அமெரிக்க யுத்தத்தை விமர்சித்த பால் ராப்சன் என்ற நடிகர் எப்படி கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார்.
மெக்கார்த்தியிசத்தின் நீட்சியான உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் எப்படி வேட்டை நாயாகப் பயன்படுத்தப்பட்டது போன்றவை நன்கு எழுதப்பட்டுள்ளது.
யுனிசெப், கியூபாவிற்கு பெரும் தொகையை அலி நன்கொடையாகக் கொடுத்துள்ளார். கியூபா நாட்டின் மீது பொருளாதாரத் தடை இருந்த காலத்தில், முகமது அலி அந்த நாட்டிற்குச் சென்று பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தது என்பது எப்படிப்பட்ட அரசியல் கலகம் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இதனால் உள்நாட்டில் எப்படிப்பட்ட சலசலப்பு ஏற்பட்டிருக்கும்! அது போன்ற சமயங்களில் அவர் பேசியவை, பத்திரிகைகளில் வெளிவந்தவைகளையும் நூலின் ஊடாகத் தருகிறார் ஆசிரியர். மிகுந்த உழைப்பில் இந்த நூல் உருவாகி உள்ளது.
அ.பாக்கியம் ஏற்கெனவே எழுதியுள்ள ‘வேலை நாள் ஒரு வரலாற்றுப் பார்வை’ நூலை வெளியிட்ட தூவல் பதிப்பகம், இந்த நூலையும் வெளியிட்டுள்ளது.
இதுவரை யாரும் பேசாத பொருள்
பொருள் பற்றி பேசியிருக்கிறார் அ.பாக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக